Advertisement

நட்சத்திர விழிகள் – 24 (2)

ஏழுமலையை பார்த்து, “அப்பா நான் என்ன செய்யனும்?” என்று வினவ உதயா கோவமாக பார்த்தான் நந்தினியை.

ஏழுமலைக்கு துக்கமும் சந்தோஷம் சேர்ந்து வாட்டியது. இத்தனை நாள் வெறுமையான பார்வையோடு தன்னை எட்டவே நிறுத்தியிருந்த தன் மகள் இன்றைக்கு அத்தனை அன்பையும் கண்களில் தேக்கி கேட்கும் போது தன்னால் அவளை போகாதே என தடுக்கவா முடியும்?

நந்தினியின் கண்களில் இருந்த வெறுமையை விரட்டி அந்த இடத்தில்  கலக்கம் குடியமர்ந்தது.

ஏனோ இப்போது ஏழுமலையால் நந்தினியை தடுக்க முடியவில்லை. அப்படி ஒரு எண்ணம் தோன்றவும் இல்லை. அவளை கிளம்ப சொல்லிவிட்டு அங்கே நிற்கமுடியாமல் உள்ளே சென்றுவிட்டார்.

சந்திராவிடம் நந்தினி பேசிகொண்டிருந்த சில நிமிடங்களில் விஜியை அழைத்து அவனது மொபைல் நம்பரை வாங்கிகொண்டு தன் நம்பரையும் கொடுத்துவிட்டு பிறகு தொடர்புகொள்வதாக கூறி நேரத்தை கடத்தாமல் அவனிடம் சொல்லிக்கொண்டு திரும்பினான்..

சந்திராவிடமும் சொல்லிகொண்டு கிளம்ப நந்தினியின் விழிகளில் இரண்டரை வருடங்களாக அடைபட்டிருந்த கண்ணீர் உடைப்பெடுத்தது.அத்தனை நாட்களுக்கும் சேர்த்து அன்று வழியெல்லாம் அழுது தீர்த்து உதயாவின் பெரும் கண்டனத்திற்கு ஆளானாள். குறிஞ்சியூருக்கு மருமகாளாகவும் ஆனாள்.

இவ்வாறாக சுழன்றடித்த தங்களின் பழைய நினைவுகளில் இருந்து மீண்டவர்கள் இன்னும் தங்கள் மனதில் அந்நினைவுகளின் தாக்கம் சான்றும் குறையாமல் பாரமாக அழுத்தியது.

“நந்தும்மா, எவ்வளோ நேரம் பழசையே நினச்சிட்டு இருப்ப? நடுஜாமம் ஆகிடுச்சு, தூங்கு பேசாம…” என தன்மையாக கூறியவனை தீயாக பார்த்தவள்,

“ஏன் நீ கூடதான் தூங்காம முழிச்சிட்டு இருக்க, நான் கேட்டேனா?…” என்றவளை பார்த்து பேந்த பேந்த விழித்தான்.

அவனின் பரிதாபமான பார்வையில் என்ன உணர்ந்தாளோ, “எனக்கு தூக்கம் வருது. நீ சொன்னதனால ஒண்ணும் இல்லை. குட் நைட்…” என்று கூறியவள் அவனுக்கு முதுகாட்டி திரும்பி படுத்துகொண்டாள்.

“ஸ்யப்பா என்னனுதான் இவளை அந்த ஹிட்லர் இத்தனை வருஷம் வளர்த்தாரோ?. நமக்கு இப்போவே கண்ணை கட்டுதே?…” என பெருமூச்சோடு நினைத்தவன் தானும் கண்களை மூடிகொண்டான். மனதில் அமைதியில்லாததால் தூக்கம் மட்டும் வருவேனா என்று ஆட்டம் காட்டியது இருவருக்கும்.

சிறிது நேரத்தில் உறக்கம் விழிகளை தழுவ நந்தனி தன்னை நித்திரையில் ஆழ்த்திக்கொண்டாள். ஆனால் உதயாவிற்கு தான் தூங்க முடியவில்லை.

உருண்டு பிரண்டு படுத்தும் தூக்கம் வராமல் போக நல்ல உறக்கத்தில் இருந்தவளை தன் கைவளைவிற்குள் கொண்டுவந்து அவளை அணைத்தவாறு படுத்த பின்புதான் அவனின் மனம் ஒருநிலையாக அமைதியானது. உறக்கமும் தழுவியது.

எப்போதும் போல அடுத்த இரண்டு நாட்களும் வழக்கம் போல இயல்பாகவே நடந்தது. உதயாவிற்கும் சாதாரணமாக தான் வாழ்க்கை போவதாக தெரிந்தது தனத்திடமிருந்து அழைப்பு வரும் வரை.

“பிரசாத் எங்க இருக்கான்? நீ அவனை பார்த்தியா வேலு…” என்று அங்கே தேங்காய்களை உரித்துகொண்டிருந்த பணியாளரிடம் கேட்டார் தனம்.

“தேங்காய்களை உரிச்சு எண்ணிவைக்க சொல்லிட்டு இதோ வந்திடறேன்னு மாடிக்கு போனாருங்கம்மா. இன்னும் வரலை…” என மரியாதையாக கூறியவரை பார்த்து,

“இன்னும் சாப்பிடாம இருக்கியாமே? போ போய் சாப்பிடு. வந்து வேலையை கவனிக்கலாம்…”என்று புன்னகையோடு கூறியவர் வேலு சென்றதும் பிரசாத்தை சாப்பிட அழைக்க மாடியேறினார்.

“அவளை அவ்வளோ சீக்கிரம் நான் விட்டுடுவேனா? புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து என்னை அவமானபடுத்திட்டாங்கள்ள. அனுபவிப்பாங்க. எங்கியாச்சும் தனியா சிக்காமலா போய்டுவா அந்த குள்ளக்கத்தரிக்கா. அவளை தூக்கிட்டு அந்த பிரபாவுக்கும், அவன் குடும்பத்துக்கும் ஆட்டம் காட்டுறேன். என்னை பகைச்சதுக்கு சரியான பாடத்தை கத்துக்கொடுக்கறேன்…” என ஆக்ரோஷமாக பேசிக்கொண்டிருந்தான்.

அவன் பேச ஆரம்பித்ததுமே உள்ளே வந்த தனத்தை அப்போதுதான் பார்த்தவன், “டேய் நான் அப்பறமா கால் பண்ணறேன். இப்போ வை…” என அவசரமாக பேசி போனை வைத்தான். அவனை பார்த்து வேகமாக வந்தவர்,

“உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதாடா? என் வயித்துல நீ எப்படிடா அவனது பொறந்த? உன்னை பெத்த வயிறு எரியுதேடா? இப்படி மேலும் மேலும் அந்த தீயில கொள்ளிக்கட்டையை வச்சுட்டே இருக்கறியே?…” என அழுதவர்,

“இங்க பாருடா கண்ணா, அம்மா சொல்றதை கேளு. அவங்க நல்லா இருந்துட்டு போகட்டும். இங்க இருந்தாதானே உனக்கு அவங்களை பார்க்கும் போதெல்லாம் கோவம் வரும்? நாம இங்க இருந்து கண்காணாத இடத்துக்கு போய்டலாம். அம்மா பேச்சை கேளுப்பா…” என கதறியவரை பார்த்த பிரசாத்,

“இப்போ கூட அவங்களுக்காகதானே இங்க இருந்து போகனும்னு சொல்றீங்க?.. முதல்ல நாம நம்ம வீட்டையும் ஊரையும் விட்டு இப்படி தோப்புக்கு நடுவுல எந்தவிதமான சந்தோஷத்திலையும் கலந்துக்காம ஒதுங்கி இருக்க காரணமும் அவங்க தான்…”

“இப்போ கண்காணாத இடத்துக்கு போயிடலாம்னு முடிவெடுத்ததுக்கு காரணமும் அவங்கதான். இப்படி நம்மளை விடாம துரத்துரவங்களை நான் எப்படிம்மா சும்மா விடமுடியும்?…”

“ஐயோ நான் நமக்காகதாண்டா சொன்னேன்…” என தனம் பேச அதை கண்டுகொள்ளாமல் பேசினான் பிரசாத்.

“அவளையும், அவளுக்கு ஆதரவா நின்னு என்னை அவமானபடுத்தி உங்க கையால அடிவாங்க வச்ச அவனையும் நிம்மதியா இருக்க விடமாட்டேன். அவளுக்காகத்தானே இத்தனை தூரம் என்னை எதிர்த்தான். அவனை நான் எவ்வளவு கஷ்டபடுத்தினாலும் அமைதியா கண்டுக்காம இருந்தான்ல…”

“பிரசாத் வேண்டாம்ப்பா…” என கெஞ்சியவரின் பேச்சு அங்கே எடுபடவில்லை.

“என்ன வேண்டாம்?.. இனி அவனை ஒண்ணும் செய்யமாட்டேன். அவளை என்ன செய்யறேன்னு பாருங்க. அவ தானே அவனோட உசுரு. அவளை வச்சு உங்க தத்துப்பிள்ளையை துடிக்க வைக்கிறேன். இதை நான் நடத்தியே காட்டுவேன். இந்த விஷயத்துல உங்க பேச்சை கேட்க என்னால முடியாது…” என கூறிவிட்டு கீழே இறங்கிவிட்டான்.

பிரசாத்தின் பேச்சை கேட்ட தனம் பிரம்மை பிடித்ததை போல சிலையாக அமர்ந்துவிட்டார். தான் இவனின் மனதை மாற்ற எங்கையாவது போய்விடலாம் என்று சொன்னால் அதற்கும் அவர்களையே காரணமாக்கி மேலும் அவர்கள் மீது துவேஷத்தை வளர்த்துக்கொண்டானே என மனம் கலங்கினார்.

அன்றைக்கு கார்மெண்ட்ஸ் குடவுனில் உள்ள துணிகளை சரிபார்த்து கொண்டிருந்த உதயாவின் கவனத்தை அவனது செல்போன் ஒலி திசை திருப்பியது. தனம் தான் அழைத்திருந்தார்.

“சொல்லுங்க சித்தி, என்ன விஷயம்?…” என துணிகளை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே தான் கேட்டான்.

“பிரபா, நந்தினி எப்டி இருக்கா?…”

“ம்ம் அவளுக்கென்ன சித்தி ரொம்ப நல்லா இருக்கா. நீங்க சௌக்கியமா?…” என தானும் அவரை விசாரித்தான்.

“ம்ம் இருக்கேன் பிரபா. ஒரு முக்கியமான விஷயம் அதுக்குதான் போன் பண்ணினேன்…”

“சொல்லுங்க சித்தி, அடுத்து எனக்கிட்ட என்ன பிரச்சனை செய்றதா இருக்காரு உங்க சீமந்த புத்திரர்?…” என சிரித்துக்கொண்டே கேட்க,

“உனக்கு எப்படித்தான் இவ்வளவு பொறுமையோ போ. நானே பதறிப்போய் இருக்கேன். நீ என்னடான்னா கிண்டலா பேசறியே?…” என்று கவலையோடு பேசியவரின் குரலில் மௌனமானான்.

“பிரபா நீ நந்தினியை பத்திரமா பார்த்துக்கோ. உன் கூடவே வச்சுக்கோ. அவளை எங்கயுமே தனியாக அனுப்பாதே. உன் பக்கத்துல உன் கண்பார்வையில நீ அவளை வச்சுக்கறதுதான் உனக்கும், அவளுக்கும்  நல்லது…” என்று பீடிகையாக பேசவும் வெலவெலத்துப்போனான் உதயா.

“சித்தி என்ன விஷயம் தெளிவா சொல்லுங்களேன்?…” என பதறிய குரலில் கேட்க நடந்த விஷயத்தை கூறவும் உதயா ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றான்.

“அவன் அடங்கவே மாட்டானா சித்தி…” என்றவனின் குரலில் இருந்த ஆவேசமே தனத்தை பதறவைத்தது.

உதயாவின் குரலில் இருந்த வேகத்தில், “பிரசாத் நினைத்தது போல தன்னிடம் கூறியது போல இந்த விஷயத்தை சொன்னதுக்கே இப்படி கோவப்படறானே?…” என அதற்கு மேலே யோசித்து பார்க்கவே தனம் பயந்தார்.

“கோவப்படாத பிரபா, அவன் எதிர்பார்க்கிறதும் அதைத்தான். நான் சொல்றதை நீயாவது கேளேன்…” என இறைஞ்சும் குரலில் கேட்டதற்காக தன் கோவத்தை அடக்கிக்கொண்டவன்,

“சொல்லுங்க சித்தி, என்ன செய்யனும்? அவன் என் மனைவியை தூக்குவேன்னு சொல்றான். நான் வேடிக்கை பார்க்கனுமா?…” என தன்னை மீறி வெடித்தான்.

இதுவரை உதயா தனத்திடம் இவ்வாறு பேசியதில்லை. இப்போது இதை கேட்டதுமே தனம் உடைந்துவிட்டார். எல்லாம் தன் மகனால் தானே வந்தது என தன்னை நொந்துகொண்டார்.

அவரது அமைதியும் மெல்லிய விசும்பலும் உதயாவை சங்கடப்படுத்த, “சித்தி ப்ளீஸ். சாரி சித்தி, அழாதீங்க. ஏதோ வேகத்தில அப்படி பேசிட்டேன்…” என கெஞ்சினான்.

“இல்லைப்பா, இப்படி ஒரு பிள்ளையை பெத்ததுக்கு நான் அழுதுதானே ஆகணும். அதை விடு. நீ நான் சொல்றதை கவனமா கேளு. நந்தினி உன் பொறுப்பு. அவளை உன் கைக்குள்ளயே வச்சுக்கோ…”

“எத்தனை நாளைக்கு சித்தி?…” என்றவனின் கேள்வியில் பதில் சொல்ல முடியாமல் திகைத்தார் தனம்.

“நான் பார்த்துக்கறேன் சித்தி. இதுக்கு சீக்கிரமா ஒரு முடிவை கொண்டுவருவோம்…” என சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் தொடர்பை துண்டித்துவிட்டான்.

அடுத்து வேலையில் கவனத்தை செலுத்தமுடியாமல் விஷ்ணுவை அழைத்து பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டிற்கு வந்ததிலிருந்து யோசனையில் இருந்தவனை பார்த்த நந்தினி, “என்ன யோசனை பலமா இருக்கு. என்கிட்ட சொல்லனும்னா சொல்லலாம். நான் சும்மா தான் வெட்டி ஆபிசரா இருக்கேன்…” என்று கிண்டலாக கூறவும் உதயாவின் முகம் பளீரிட்டது.

“நந்தும்மா உன் கிட்ட ஒண்ணு சொல்லணும். ஆனா எப்படி சொல்ல?…” என தவித்தபடி உதயா கேட்க,

“எல்லோரும் எனக்கிட்ட எப்படி ஒண்ணு சொல்லுவாங்களோ அதே போலதான் நீயும் என்கிட்டே சொல்லணும். உங்க ஊர்ல பொண்டாட்டிக்கிட்ட ஒண்ணு சொல்றதுக்கெல்லாம் வாடைகைக்கா ஆள் பிடிச்சிட்டு வருவாங்க…” என ஒண்ணு என்ற வார்த்தையை அழுத்திக்கூறியவள் கேலியாக உச்சுக்கொட்டினாள்.

“ஐயோ!!!,,, காமெடி சிரிச்சுட்டேன் போதுமா? நான் சொல்லவரதை முழுசா கேட்டுட்டு பேசு…” என தானும் அவளை கேலியாக அடக்கியவன்,

“என்கூட நீ இனிமே தினமும் கார்மெண்ட்ஸ் வரனும். எனக்கு துணையா…” என கூறிவிட்டு இரண்டாவதாக தான் சொன்னதை உணர்ந்து நாக்கை கடித்துகொண்டான்.

அவன் நினைத்தது போல விழுந்து விழுந்து சிரித்தாள் நந்தினி. “அடப்பாவி, அவ்வளோ தைரியசாலியா நீ? இந்த மேட்டர் உங்க வீட்டுக்கு தெரியுமா?…” என்றவளது நக்கலில் தன்னையே திட்டிகொண்டவன்,

“எந்த மேட்டர்?…” என கேட்டு மீண்டும் சிக்கினான்.

“அதான்ய்யா, நீ துணைக்கு ஆள் தேடுற மேட்டர். அப்போ இதுவரைக்கும் நீ தனியா எங்கயுமே போகமாட்டியா?…” என கூறிவிட்டு மீண்டும் சிரிக்க ஆரம்பிக்க அவளின் காதை பிடித்து திருகியவன்,

“எவ்வளோ தைரியம் உனக்கு, என்னையே வாய்யா, போய்யான்னு சொல்லுவா?…”

“எனக்கு எவ்வளோ தைரியம்னு அளவு கணக்கெல்லாம் எனக்கு தெரியாது. என் புருஷனை நான் சொல்ல யார்க்கிட்ட பர்மிஷன் கேட்கணும்?…” என தன் உயரத்துக்கு எகிறியவளை பார்த்து ஒரு நொடி தடுமாறியவன் அவளை இழுத்து அணைக்க அவளோ அவனை போல எந்தவிதமான தடுமாற்றமும் இல்லாமல் இலகுவாகவே அவனை உதறி ஒரே தள்ளாக தள்ளினாள்.

“என்ன மரமண்டை ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கற?.. ஓவர் சேதாரம் ஆகிடுவ. ஜாக்கிரதை. நான் தான் சொல்லிருக்கேனே, என் மனசு தானாவே உன்னை தேடணும்னு. புரியுதா?…” என முகம் மாறாமல் கூறினாலும் அவளின் விழிகளில் நிறைந்திருந்த வலி நந்தினியின் இதயத்தை காட்டிக்கொடுத்தது.

அவனும் தன்னை கண்டுகொண்டான் என உணர்ந்தாலும் நந்தினி உதயாவின் தொடுகையை வெறுக்கவில்லை. ஆனால் அவன் மீதான அவளின் ஆதங்கம், மனத்தாங்கல் சிறு கோவம் என அனைத்தும் சேர்ந்து அவனோடு ஒன்றமுடியாமல் தடுத்தது.

அவனுக்காக அவனது காதல் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நொடியில் அவனோடு கலந்துவிடலாம்தான். ஆனால் அந்த இடத்தில் தன் மீதான தனக்குள்ள மரியாதை மரித்துவிடும்.

அது அவனின் மனைவியான தனக்கு தானே செய்யும் பாதகம் என்றும், அப்பாதகத்தை அவனுக்கே செய்வது போல என எண்ணி அவனை விலக்கி வைத்தாள். இல்லை இல்லை அவனுக்காக தானே விலகி நின்றாள்.

அவனும் அவளும் வேறு வேறல்ல என்பது அவளது ஆணித்தரமான நம்பிக்கை. அதை அசைத்துப்பார்க்கும் எந்த ஒரு செயலையும் அவள் செய்ய விரும்பவில்லை. தங்களுக்குள் உள்ள இந்த பனித்திரை விரைவில் விலகும் என்ற நம்பிக்கையோடு தன்னவனை பார்த்தாள்.

“பார்வைக்கொன்றும் குறைச்சலில்லை. ஆளை விடு தாயே. தெரியாம உணர்ச்சிவசப்பட்டுட்டேன். இனிமே இது போல நடக்காது. நல்லவேளை கட்டில்ல தள்ளின, கீழே விழுந்திருந்தா கண்டிப்பா சேதாரம் தான்…” என புரிந்துகொண்டு தானுமே அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டான்.

“சரி விடுங்க. என்னால கார்மெண்ட்ஸ் வரமுடியாது. எனக்கு அதுல இஷ்டம் இல்லை. வீட்லனா பாட்டி, லக்ஷ்மிம்மா, கெளரி எல்லோருமே இருப்பாங்க. போதாததுக்கு வள்ளி. ஆனா கார்மெண்ட்ஸ்ல என்ன இருக்கும்? ம்ஹூம் நான் மாட்டேன்ப்பா…” என்று அவனை அடுத்து பேசவிடாமல் அந்த இடத்தை விட்டு நழுவிவிட்டாள்.

நந்தினி சென்றதுமே தலையில் கைவைத்து அமர்ந்தவன் எப்படி அவளை தன் பாதுகாப்பு வட்டத்திற்குள் கொண்டுவரப்போகிறோம் என ஆயாசமானான்.

மறுநாளும் அவள் பின்னாலேயே அலைந்துகொண்டிருந்தான் உதயா. வீட்டிலிருந்தவர்களின் கேலிப்பார்வைக்கு ஆளானாலும் அதை அவன் பொருட்படுத்தாமல் நந்தினியை கரைப்பதிலேயே குறியாக இருந்தான்.

அவனின் குறும்புகளும், அலும்புகளும் பொறுக்காமல், “ஏன் என் பின்னாலையே அலையறீங்க? எல்லோருமே சிரிக்காங்க. நீங்க இன்னைக்கு ஆபிஸ் கிளம்பலையா?…” என அறையில் வாகாக சிக்கியவனிடம் கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.

“சிரிச்சா சிரிக்கட்டுமே? சோ வாட் குட்டிம்மா. நான் சொல்றதை நீ கேட்கிற வரைக்கும் உன்னையும் விடமாட்டேன். நானும் ஆபிஸ் போகமாட்டேன்…” என கால்மேல் கால் போட்டுகொண்டு தெனாவெட்டாக கூறியவனின் கழுத்தை பிடிக்க போனாள் நந்தினி. அதற்கும் அசராமல் சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தான்.

“இப்போ நான் எதுக்கு உன் கூட கார்மெண்ட்ஸ் வரனும்? உன் மனசுல என்னதான் நினச்சிட்டு இருக்க? நான் தான் நேத்தே சொல்லிட்டேன்ல. திரும்ப இதையே பேசி என்னை சும்மா சும்மா தொந்தரவு பண்ணாத. எனக்கு அங்க என்ன தெரியும்னு நீ என்னை கூட்டிட்டு போகணும்னு பார்க்க?. ஒருநாள் சுத்திப்பார்க்க அப்டினா கூட பரவாயில்லை. ஆனா நீ ஏன் தினமும் வர சொல்ற?…” என்று படபடவென பொரிந்த நந்தினியை அவஸ்தையோடு பார்த்தான் உதயா.

“இவக்கிட்ட பிரசாத் பேசினதை சொன்னா அதுக்கும் சேர்த்து ஆடி என்னை படுத்திவைப்பா. ம்ஹூம் எப்படியாவது நீதான் உதயா நந்தினியை கூட்டிட்டு போகணும். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி அளவுக்கு இல்லைனாலும் அட்லீஸ்ட் ஒரு அண்டா சைஸ்க்காவது வெற்றி பெறட்டுமே…” என தனக்குள் பேசிக்கொண்டிருக்க நந்தினி அவனது முகபாவங்களை பார்த்துவிட்டு தலையில் அடித்துகொண்டு அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.

அடுத்த இரண்டுநாட்களும் இதே தொடர்ச்சியாக உதயா நந்தினியை மட்டும் இல்லாமல் வீட்டில் உள்ளவர்களையும் படுத்திவைக்க பொருத்தது போதும் என்று நாச்சியும், மூர்த்தியும் தான் நந்தினியிடம் பேசி கார்மெண்ட்ஸ் செல்ல சம்மதிக்க வைத்தனர்.

ஒருவழியாக நந்தினி உதயாவிடம் தான் அவனோடு தினமும் வருவதாக வாக்களிக்கவும் உதயாவின் முகத்தில் மின்னிய வெற்றியையும் மீறி விழிகளில் தெரிந்த தீவிரம் நந்தினியை பெரும் யோசனைக்குள்ளாக்கியது.

இதையனைத்தையும் கண்டும் காணாமல் பார்த்துக்கொண்டிருந்த வள்ளி தான் எதிர்பார்த்த நேரம் கிடைத்தவுடன் பிரசாத்திற்கு அழைத்து நந்தினி கார்மெண்ட்ஸ் போகபோகும் விஷயத்தை கூறவும் சரி என்று மட்டும் சொல்லிவிட்டான்.

பிரசாத் எதிர்பார்த்ததுதானே. எப்படியும் தன் தாய்தான் அவனிடத்தில் கூறியிருப்பார். அதனால் உண்டான மாற்றம் தான் இது. எவ்வளவு தூரம் அவனால் அவளை காப்பாற்ற முடியும் என்று பார்க்கலாம் என ஏளனமாக கறுவிக்கொண்டான்.

உதயா தனக்காக பயந்து நந்தினியை பாதுகாக்க நினைக்கிறான் என்ற எண்ணமே பிரசாத்திற்கு உற்சாகத்தை கொடுத்தது. அடுத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டான்.

மறுநாளில் இருந்து நந்தினியும் தினமும் காலையில் உதயாவோடு கார்மெண்ட்ஸ் செல்பவள் அவன் எங்கு சென்றாலும் கூடவே செல்லும் நிர்பந்தத்திற்கு ஆளானாள்.

தோப்பிற்கு சென்றாலும், பருத்திக்காட்டிற்கு சென்றாலும், கௌரியின் திருமண வேலையாக சென்றாலும், வேறு வெளியிடங்களுக்கு சென்றாலும் என போகும் இடமெல்லாம் அவளையும் இழுத்தடித்தான்.

அவளது மறுப்புகளுக்கு அவள் கணவன் மதிப்பளிக்கவில்லை. உதயாவை சீண்டி விட்டு இங்கிருந்து தன்னை அவனே கிளப்பும் படி செய்ய எத்தனையோ முயற்சி செய்ய அனைத்தையும் அனாயசமாக முறியடித்தான் அவளவன்.

நந்தினி அவனோடு குறிஞ்சியூருக்குள் அடியெடுத்து வைத்து ஒருமாதம் ஆகிவிட்டது. அன்றைக்கு தோப்பில் மாங்காய் லோட் அனுப்பிவிட்டு வீட்டுக்கு இருவருமாக திரும்புகையில் மெல்ல பேச ஆரம்பித்தாள் நந்தினி.

“நான் உனக்கு ரொம்ப தொந்தரவு குடுத்துட்டேன்ல. அதுக்குன்னு மன்னிப்பெல்லாம் கேட்கமாட்டேன். நீ காரணமில்லாமல் என்னை இப்படி உன்கூடவே  வச்சுக்கலைன்னு எனக்கு தெரியும். ஆனா என்ன காரணம்னு நீ எனக்கு சொல்லாததுதான் என் கோவம்…”

“அதுக்காகத்தான் நான் உனக்கு இடஞ்சல் கொடுத்தேன். எனக்கே அது  சலிச்சுப்போச்சு. நீ எப்படித்தான் பொறுத்துக்கிட்டையோ? சரியான பொறுமை பூஷணம் நீ…” என்று வரும் வழி முழுவதும் அவனை கலாய்த்தாலும் அவனிதழில் ரசனையான மெல்லிய புன்னகை மட்டுமே இருந்தது.

மறுநாள் ஏழுமலையும் சந்திராவும் வந்திருந்தனர். உதயாவையும் நந்தினியையும் கைய்யோடு மறுவீடு அழைத்துச்செல்ல வீட்டிற்கு வந்தவர்களுக்கு ஏகபோக கவனிப்பு.

பெற்றோரை பார்த்ததும் அப்பட்டமான மகிழ்ச்சியை வெளிப்படுத்திய  நந்தினிக்கு அவர்கள் வந்த விஷயம் அறிந்ததும் முகம் இருண்டுவிட்டது. அவளை பார்த்துக்கொண்டே இருந்தா உதயா ஏழுமலையிடம் ஔ முக்கியமான வேலை இருப்பதாகவும், இன்னும் இரண்டொரு நாளில் தாங்களே வருவதாக சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தான்.

அரைமனதோடு அனைவரிடமும் சொல்லிகொண்டு கிளம்பிய ஏழுமலை சந்திராவின் முகமே வாடிவிட்டது. ஆனாலும் சமாளித்துக்கொண்டனர்.

அவர்களை வழியனுப்ப வெளியே வந்த நந்தினியை பார்த்த சந்திரா, “அம்மாடி நீங்க வரப்போறதா அங்க எல்லோருமே எதிர்பார்த்திட்டு இருப்பாங்க. ரெண்டு நாள்ல வந்திருவீங்க தானே?…” என பரிதவிப்போடு கேட்டவரிடம் நந்தினி பதில் சொல்ல தயங்கினாள்.

உதயா தான் உறுதியாக தாங்கள் வருவோம் என்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து அனுப்பிவைத்தான். அவனது வார்த்தையில் நிம்மதியடைந்த இருவரும் ஊருக்கு கிளம்பிச்சென்றனர்.

இனி நந்தினியை சமாளிக்கனுமே என்ற ஆயாசத்தோடு திரும்பினால் அவள் அங்கு இல்லை. அவனுக்கு தெரியும் நிச்சயமாக நந்தினியை ஊருக்கு அழைத்து செல்வது கடினம் என்று.

அவளை தெரியாதவனா அவன்? அவள் மனம் புரியாதவனா? சமாளிக்கலாம் என நினைத்துக்கொண்டே உள்ளே சென்று தன் அறைக்குள் நுழையவுமே,

“என்னை கேட்காம உன்னை யாரு ஊருக்கு கண்டிப்பாக வருவோம்னு உறுதி கொடுக்க சொன்னது?…” சண்டைக்கோழியாக சிலிர்த்துக்கொண்டு நின்றாள்.

உதயா நினைத்தது நடக்குமா? நந்தினி சமரசம் ஆவாளா?

Advertisement