Advertisement

நட்சத்திர விழிகள் – 24 (1)

தனத்தின் தகவலில் நிலைகுலைந்து போயிருந்தான் உதயா. இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்க்காததால் அடுத்து தான் என்ன செய்யவேண்டும் என்று கூட யோசிக்கமுடியவில்லை.

மீண்டும் தனம் சொன்னதை நினைவுக்கு கொண்டுவந்தான். “பிரபா அந்த மாப்பிள்ளையை அவன்தான் பார்த்திருக்கான் போல. உனக்கு தெரியாம இதை செய்யனும்னு பார்க்கிறான். அது எதுக்காக?..” என கலவரமாக கேட்டவரது குரல் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

ஏனோ கைகள் எல்லாம் நடுங்குவதை போல இருந்தது. இரவில் அந்த குளிரிலும் வியர்த்தது. சீக்கிரமே போய் எப்படியாவது அந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற ஆவேசம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

பிரசாத் தனக்கு தெரியாமல் நந்தினிக்கு மாப்பிள்ளை ஏற்பாடு செய்து கல்யாணம் வரைக்கும் இதை கொண்டு வந்திருக்கிறான் என்றால் எந்த அளவிற்கு அவள் மீதான பகையில் இன்னும் ஆக்ரோஷமாக இருக்கிறான் என நினைக்கும் போதே உள்ளம் பதறியது.

மதிவாணனை வேகமாக காரை விரட்ட சொல்லி படுத்தி எடுத்தான் உதயா. மதிக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை.

எதற்காக இவ்வளவு வேகம்? வீட்டில் கூட சொல்லாமல் அந்த ஊருக்கு ஏன் செல்லவேண்டும் என்று குழம்பி போனான்.

மதிக்கு உதயாவிற்கு திருமணம் ஆகிவிட்ட விஷயம் வீட்டில் வேணியால் நடந்த களேபரத்தால் அரசல் புரசலாக தெரிந்ததுதான். ஆனாலும் யாரும் தெரிந்தது போலவே காட்டிக்கொள்ளவில்லை. கார் வேகமெடுத்து மீனாட்சிபுரம் நோக்கி சென்றது.

————————————————————————

திருமண ஏற்பாடுகள் ஜரூராக நடந்துகொண்டிருந்தது. ஏழுமலை நந்தினிக்கு தேவையான புடவைகள், நகைகள் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எடுத்திருந்தார்.

மாப்பிள்ளை வீட்டிலிருந்தும் முகூர்த்தப்புடவை எடுத்துவந்து காண்பித்து விட்டு நந்தினியின் நகைகளையும் பார்த்து ஆவென வாயை பிளந்துவிட்டுதான் சென்றனர். அவர்கள் வந்த காரணமும் அதுதான்.

நகைகள் எடுத்தாகிற்றா, எவ்வளவு எடுத்திருக்கின்றார்கள்? என்று நோட்டம் விடத்தான் முகூர்த்தப்புடவை காண்பிக்கும் சாக்கில் வந்து பார்த்துவிட்டு திருப்தியாக கிளம்பினார்கள்.

குணாவின் தொந்தரவும் அதிகமாக இருந்தது நந்தினிக்கு. எதற்கெடுத்தாலும் போன் செய்து  தொந்தரவு தந்து கொண்டே இருந்த அவன் மீது எரிச்சல் அதிகமாகிக்கொண்டே இருந்தது. சில நொடிகள் கூட அவனோடு பேச முடியாமல் அவன் பேச்சுக்களும் காதுகுடுத்து கேட்கமுடியாத அளவிற்கு நாராசமாக இருந்தது நந்தினிக்கு.

இரண்டுநாள் மட்டுமே பொறுத்தவள் அவனது பேச்சு எல்லை மீற பொங்கி விட்டாள் சந்திராவிடம். அவன் மொபைலில் அழைத்தான் என்று இன்னொரு முறை பேச சொன்னால் நடப்பதே வேறு என்று எச்சரிக்கவும் சந்திராவிற்கு தான் தர்மசங்கடம் ஆகிற்று.

ஒவ்வொரு முறையும் நந்தினியிடம் பேச அழைத்த போது சந்திரா ஏதேதோ காரணங்கள் சொல்லி தவிர்க்கவுமே குணாவிற்கு புரிந்துபோனது. கல்யாணம் முடியட்டும் பின்னால் பார்த்துகொள்ளலாம் என்று மனதில் கறுவிக்கொண்டான்.

நடப்பது அனைத்தையும் கண்டுகொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இலகுவாக இருந்தாள் நந்தினி. ஆனால் உண்மையாக தான் இலகுவாக இருப்பதை போல காட்டிக்கொண்டிருந்தாள்.

நகர்ந்த ஒவ்வொரு நிமிடங்களையும், நகரவிருக்கும் ஒவ்வொரு நொடிகளையும் அலைபாய்ந்து தவிக்கும் நெஞ்சத்தில் சிறு நம்பிக்கையை இருத்திக்கொண்டு எதிர்பார்ப்போடு தான் கழித்துக்கொண்டிருந்தாள்.

சொந்தபந்தங்கள் அனைத்துமே இரண்டுநாளைக்கு முன்பே வந்துவிட்டதால் வீடே விழாக்கோலம் பூண்டு அமர்க்களமாக ஜொலித்தது. ஏழுமலைக்கு தான் நினைத்ததை நடத்திக்காட்டி வென்றுவிட்ட கர்வம் முகத்தில் மிளிர்ந்தது.

திருமணத்திற்கு முதல்நாள் இரவு அனைவரும் உறங்கியதும் நந்தினியின் அறைக்குள் வந்தார் ஏழுமலை. அயர்ந்து உறங்கிகொண்டிருந்த மகளை கண்கள் பனிக்க பார்த்தவர் அவளருகில் அமர்ந்து அவளது தலையை எடுத்து தன் மடியின் மீது வைத்துகொண்டார்.

“எப்படிப்பட்ட வாரத்தைகளை பேசிட்டடா கண்ணு? நான் நொடிஞ்சு போய்ட்டேன். என்னை மன்னிச்சிடுடா மித்துக்குட்டி. அப்பா உன் நல்லதுக்குதான் செய்யறேன். இப்போ உனக்கு புரியாது. உன் வயசு அப்படி. ஆனா நீ போக போக என்னை புரிஞ்சு உன் புருஷன் கூட சந்தோஷமா ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்வ பாரு..” என்று உறங்கிக்கொண்டிருக்கும் நந்தினியின் கேசத்தை வருடியபடி கண்களை நிறைத்த கண்ணீரோடு தன் போக்கில் பேசிக்கொண்டிருந்தார் ஏழுமலை. 

“கொஞ்சம் நாள்லயே நீ மாப்பிள்ளையோட நல்லபடியா வாழ ஆரம்பிச்சிடுவ. அவங்க உன் மேல ரொம்ப பிரியமா இருக்காங்கடா. உன்னை தாங்குவாங்க பாரு. நீ கலங்குறது அப்பாக்கு தெரியாம இல்லை. என் உயிரே நீ தாண்டா. நீ நல்லா இருக்கணும்னு தான் இவ்வளோ பிடிவாதமா நான் இருக்கேன். எப்படி இருந்த நீ இப்போ உனக்குள்ளேயே ஒடுங்கிப்போய் இருக்கிறது தாண்டா என்னால தாங்கமுடியலை…”

“ஆனா உன்னை பேசிட்டு அப்பா மட்டும் நிம்மதியா இருந்தேன்னா நினைக்க இத்தனை வருஷத்துல நான் நிம்மதியா தூங்கி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா? வயிறார சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சுன்னும் தெரியுமா? உன் முகத்தில தொலைஞ்சுபோன அந்த சிரிப்பை பார்க்கமாட்டோமான்னு இன்னைக்கு வரைக்கும் ஏங்கிட்டு இருக்கேண்டா. இதுக்கெல்லாம் காரணம் அவன் தானே, அந்த பையன் தானே?…”

“அந்த பையன், அவன் எனக்கு மனசுக்கு ஒப்பவே இல்லைடா. நீ சின்னபிள்ளைடா, உனக்கு நடந்ததுக்கு பேரு கல்யாணமே இல்லை. என்னால அவனை உன்னோட புருஷனா ஏத்துக்க முடியலை. எனக்கு தெரியும் என் பொண்ணை பத்தி. என்னை விட உன்னை யாரும் புரிஞ்சிக்க முடியாதுடா. ஆனா இந்த விஷயத்துல உன் பிடிவாதம் சரியில்லையே. அப்பா சொன்னது போல நீ நடந்திருந்தா அப்படி பேசியிருக்கவே மாட்டேன் நான்…”

“ஆனா, நீ அதற்கு எதிர்ப்பா பேசவும் தான் என் கோவமும் வேகமும் அதிகமாச்சு. இப்போவும் என் மனசுல அன்னைக்கு நடந்தது அணைக்கமுடியாத தீயா எரிஞ்சிட்டு தான் இருக்கு. என்னை நீ மீறிட கூடாதுன்னு தான் எனக்கே பிடிக்காத வார்த்தைகளை சொல்லி உன்னை காயப்படுத்தினேன். உன்னை என் கைக்குள்ளயே வச்சுக்கனும்னு தான் இவ்வளவும் செஞ்சேன். உன் படிப்பை தடுத்தேன்…”

“ஒரு தகப்பனா உன் விஷயத்துல நான் செஞ்சது எதுவுமே தப்பில்லை. உன்னோட நல்லதுக்காகவும் எதிர்கால வாழ்க்கைக்காகவும் தான் இந்த முடிவெடுத்தேன். நல்லபடியா கல்யாணம் முடியட்டும். நாள் ஆக ஆக நீயே மாறிடுவ. அப்பாவை மன்னிச்சிடுடா குட்டிம்மா…” என்று புலம்பிக்கொண்டே அவளிடம் மன்னிப்பை யாசித்தவர் அமர்ந்தவாறே அப்படியே தூங்கிவிட்டார்.

ஏழுமலை அறைக்குள் நுழையவுமே தூக்கம் கலைந்த நந்தினி அவரது செய்கைகளில் விழி மலராமல் அசைவற்று இருந்தாள். அவள் விழித்துவிட்டதை அறியாமல் இன்றே அனைத்தையும் பேசிவிட வேண்டும் என தன் மனக்கிடங்கை கொட்டிக்கொண்டிருந்தார் ஏழுமலை.

அவர் பேச பேச கரையத்துடித்த மனதை தான் ஏற்கனவே திருமணமானவள் என இறுக்கிக்கட்டினதோடு கண்களில் வழியக்காத்திருந்த கண்ணீருக்கும் அணைபோட்டு தடுத்தாள். அப்பா பேசுவது நியாயமாக பட்டாலும், அவரின் எண்ணம் அறிந்தாலும் அதற்காக இந்த திருமணத்தை ஏற்றுகொள்ள அவளால் முடியாதே?

தனக்கு விருப்பமில்லாத, தன்னால் இயலாத ஒன்றிற்காக எதற்கு தன் தந்தை இப்படி போராட வேண்டும்? என ஆதங்கம் தான் உண்டாகியது.

ஏழுமலை அசந்து உறங்குவதை பார்த்தவளின் மனதில் அவருக்காக இரக்கம் சுரந்தது. அவராக எழுந்துகொள்ளட்டும் என்று விடியும் வரைக்கும் அசையாமல் அப்படியே படுத்திருந்தாள். ஆனால் அவள் கண்களில் துளி உறக்கத்தை கூட அண்டவிடவில்லை.

அதிகாலையிலேயே நேசமணியின் அழைப்பில் விழித்த ஏழுமலை எழுந்து சென்று தயாராக ஆரம்பித்தார்.

அவர் கிளம்பியதுமே நந்தினியின் இதயத்துடிப்பு தாறுமாறாக எகிற ஆரம்பித்தது. இன்னும் சிலமணிநேரத்தில் ஏதாவது மாற்றம் வந்து இந்த திருமணம் நின்றுவிடாதா என்று அவளின் மனம் பேராசை கொண்டது.

அனைவரையும் கிளப்பி மண்டபத்திற்கு அழைத்து வந்தவர் மற்ற வேலைகளை ஒவ்வொருவரிடமும் ஒப்படைத்துக்கொண்டிருக்க ஒரு சிறுவன் வந்து அவரை பார்க்க யாரோ வந்திருப்பதாக கூறவும் தான் வருவதாக சொல்லி அனுப்பினார்.

தன்னுடன் இருந்தவர்களோடு பேசிமுடித்தவர் யாராக இருக்கும் தன்னை தேடி வந்திருப்பது என்று வந்திருக்கும் கல்யாணக்கூட்டத்தை ஒருமுறை விழிகளால் துழாவினார். கொஞ்சம் தூரத்தில் அவர் பார்வை வட்டத்தில் விழுந்தவனை கண்களை சுருக்கிக்கொண்டு கூர்மையாக பார்த்தவர் இதயம் ஒருகணம் நின்று துடித்தது.

நந்தனி பார்ப்பதற்குள் அவனை இங்கிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும் என்ற முனைப்போடு வேகநடையில் உதயாவை நெருங்குவதற்குள் அவரை விட வேகமாக எங்கிருந்தோ வந்த நேசமணி அவனை இழுத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த அறைக்குள் தள்ளினார்.

தானும் நுழைய பின்னாலேயே ஏழுமலையும் நுழைந்தார். சந்திராவும் நேசமணியோடு உதயா செல்வதை மேடையிலிருந்து பார்த்தவர் பூரணியை அடுத்தவர்கள் கவனத்தை கவராமல் அழைத்துகொண்டு அந்த அறைக்குள் சென்றுவிட்டார்.

அவர்கள் அனைவரையும் ஒன்றாக பார்க்கவும் தான் உதயாவின் முகத்தில் நிம்மதியே வந்தது. எல்லோரும் இருக்கிறார்கள். தான் வந்த விஷயத்தை பேசிவிட்டு கிளம்பலாம் என நினைத்து வாயை திறந்தான்.

“எங்க வந்தீங்க? எங்க வீட்டு கல்யாணத்துல உங்களுக்கு என்ன வேலை?…” என்று முகத்திலடித்தது போன்ற கேள்வியில் உதயாவின் முகம் கருத்துவிட்டது.

அதை ஒருவிதமான திருப்தியோடு பார்த்தாலும் காரியத்தில் கண்ணாக இருந்தார் ஏழுமலை.

“பெருசா வாக்கெல்லாம் குடுத்தீங்க? இதுதான் உங்க லட்சணமா? குடுத்த வாக்கை காப்பாத்த தெரியலை. முதல்ல மரியாதையா இங்க இருந்து கிளம்பிடுங்க. என் பொண்ணுக்கு இன்னும் கொஞ்சம் நேரத்துல கல்யாணம். நீங்க இங்க இருந்தா நல்லா இருக்காது…” என அவனை கிளப்பிவிட பரபரத்தார்.

“தாராளமா போயிடறேன். நான் ஒண்ணும் வேலைவெட்டி இல்லாம இங்க வரலை. அதை புரிஞ்சுக்கோங்க. உங்க நல்லதுக்காகத்தான் வந்தேன்…” என்றவனை ஏளனமாக பார்த்தவர்,

“எங்க நல்லது கேட்டதை எங்களுக்கு பார்த்துக்க தெரியும். நீங்க சொல்லி தெரிஞ்சுக்கணும்னு அவசியமில்லை. கிளம்புங்க இங்க இருந்து…” என குதித்தார்.

“கண்டிப்பா போயிடறேன். அதுக்கு முன்னால இந்த கல்யாணத்தை நீங்க நிறுத்துங்க. அப்போதான் இந்த மண்டபத்தை விட்டு கிளம்புவேன்…” என சர்வசாதாரணமாக சொன்னவனை பார்த்து விக்கித்து நின்றனர்.

“உங்க பொண்ணோட நல்லதுக்குதான் சொல்றேன். வேற நல்ல பையனா பார்த்து வேணும்னாலும் கட்டிவையுங்க. அப்போ இது போல நான் தடுக்கமாட்டேன். இந்த மாப்பிள்ளை மட்டும் வேண்டாம். இவனும் இவன் கூட்டமும் சுத்த ப்ராடு…” என கூறயவன் தன்னை நம்பமறுக்கும் அவர்களது அறியாமையை எண்ணி கோவம் வந்தாலும் அதை காட்டவேண்டிய நேரம் இதுவல்ல என அடக்கிகொண்டான்.

“ப்ச்,,, அந்த பிரசாத் உங்க பொண்ணை பழிவாங்க ஏற்பாடு பண்ணின மாப்பிள்ளை தான் இவன். இவ்வளோ தூரம் சொல்லிட்டே இருக்கேன் நம்பாம உங்க பொண்ணை நீங்களே புதைகுழில தள்ள தயாரா இருக்கீங்களே?…” என்று அடக்கப்பட்ட கோவத்தோடு உதயா பொறுமையை விடாமல் ஏழுமலைக்கு புரியவைக்க முயன்றான்.

அவன் கூறியது புரியவே சில நிமிடங்கள் ஆனது. உலகமே தலைகீழாக சுற்றுவது போல் இருந்தது. அதற்குள் அறையின் வெளியே மணமேடையில் சடங்குகள் ஆரம்பித்ததன் அறிகுறியாக மேளங்கள் முழங்கியது. ஏழுமலை நேசமணியை மேடைக்கு கிளம்ப சொல்ல அவரோ மறுத்தார். இங்கே  யாரும் தேடி வருமுன்னே கிளம்புமாறு பரிதாபமாக கூறியதை மறுக்க இயலாமல் நேசமணியும் பூரணியும் மணமேடைக்கு சென்றனர்.

அவர்களை அனுப்பிய பின் உதயா சொன்னது முழுதாக உறைத்தது. பிரசாத் இன்னுமா தன் மகளின் மீது வஞ்சம் வைத்திருக்கிறான்? என்று நினைக்கவே நடுங்கியது. தாங்கள் தான் அவனை மறந்துவிட்டோமே. பின் ஏன்? என்ற கேள்வி உருவானதோடு உதயா மீதான சந்தேகமும் உருவானது.

அதனால் இன்னொரு மனம் உதயா சொல்வதை நம்பவேண்டாம் என்று தடுத்தது. பிரசாத் பேரை சொல்லிக்கொண்டு இந்த திருமணத்தை நிறுத்தி தன் பெண்ணை அழைத்துப்போக வந்திருக்கிறானோ என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. அப்படித்தான் இருக்குமென்று அடித்து கூறியது ஏழுமலையின் பிடிவாத குணம்.

“இங்க பாருங்க தம்பி, என் பொண்ணுக்கு எது நல்லது, எது கெட்டதுன்னு எனக்கு தெரியும். அன்னைக்கு நீங்க இக்கட்டான சூழ்நிலையில என் பொண்ணை காப்பாத்தினதாலதான் நான் சும்மா வந்தேன். வாக்கு குடுக்கிறது போல குடுத்திட்டு இத்தனை வருஷம் கழிச்சு இப்போ கல்யாண வீட்ல வந்து கலாட்டா பண்ணனும்னே திட்டம் போட்டு வந்திருக்கீங்க? பேசாம போய்டுங்க…” என்று வேட்டியை வரிந்துகட்டிக்கொண்டு உதயாவை பார்த்து எகிறினார்.

“ஏங்க நான் இவ்வளோ தூரம் சொல்றேன். அதை நம்பாம இப்படி சட்டு சட்டுன்னு பேசறீங்க? உங்க பொண்ணோட வாழ்க்கைக்காகத்தான் நான் இங்க வந்துபேசிட்டு இருக்கேன்…”

“நீங்க ஒண்ணும் எங்களுக்காகவும், எங்க பொண்ணுக்காகவும் எந்த நல்லது செய்ய வேண்டாம். என் பொண்ணுக்கு விதிப்படி என்ன நடக்கணுமோ அது நடக்கட்டும். உங்க வேலையை பார்த்துக்கிட்டு நீங்க போங்க…” என வெளியேற சொல்லவும் உதயா கொதித்துப்போனான்.

“அப்போ நான் சொல்றதை நம்பலைனா நானே இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டியதாக இருக்கும். உங்க பொண்ணை பார்த்து பேசவேண்டியதாக இருக்கும். எது நல்லதுன்னு நீங்களே யோசிச்சுக்கோங்க…” அதற்கு மேல் கெஞ்சிகொண்டிருந்தால் வேலையாகாது என்று நினைத்து கடுமையை கையிலெடுத்துக்கொண்டான்.

அவனின் மிரட்டல் கலந்த கோவத்தில் கொஞ்சம் மிரளத்தான் செய்தனர் ஏழுமலையும் சந்திராவும்.

“தயவு செய்து நான் சொல்றதை கேளுங்க தம்பி, இது என் கௌரவ பிரச்சனை. இந்த கல்யாணம் நின்னுபோனா ஊர்ல இருக்கிறவங்க வாய்க்கு வந்தபடி பேசுவாங்க. எங்க மானம் மரியாதையே போயிடும்…” என்று கெஞ்சுவதுபோல பேசியவரை பார்த்து இரக்கம் வருவதற்கு பதில் கோவம் தான் எழுந்தது.

“என்ன சார் பேசறீங்க? உங்க பொண்ணோட வாழ்க்கையை விட உங்க குடும்ப கௌரவமும், மரியாதையும் தான் முக்கியமா? அவளை பெத்தவங்க தானே நீங்க? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பேசறீங்க? ஊருக்கு பயந்து ஒரு தப்பானவன் கையில ஒப்படைக்க தயாராக இருக்கீங்க? நீங்கலாம் என்ன தகப்பனோ?…” என கோவத்தில் வார்த்தைகளை கொட்டினான்.

“எனக்கு நம்பிக்கை இருக்கு. அவர் தப்பானவராகவே இருந்தாலும் என் பொண்ணு அவரை மாத்திடுவா…”

“அடச்சீ, இப்படி பேசறதுக்கு நீங்க அசிங்கபடனும் சார். ஊர்ல உள்ள ஊதாரியையும், பொறுக்கியையும் திருத்தத்தான் பொண்ணு பெத்து வளர்த்திருக்கீங்களா? உங்ககிட்ட இனியும் பேசி பிரயோஜனம் இல்லை. எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்தனும்னு எனக்கு தெரியும். நான் பார்த்துக்கறேன்…” என கூறியவன் கதவை திறந்துவிட்டு வேகமாக மணமேடையை நோக்கி சென்றான்.

அங்கே மணமேடையில் முகூர்த்தப்புடவை வாங்குவதற்காக நந்தினி வரவழைக்கப்பட்டு சடங்குகள் நடந்துகொண்டிருந்தது. புடவை வைக்கப்பட்டிருந்த தாம்பாளத்தை கையில் ஏந்தியபடி மேடையில் அமைதியாக அமர்ந்திருந்தவளை பார்க்க பார்க்க ஏனென்று தெரியாமலேயே உள்ளம் கொதித்தது.

வேகமும் ஆவேசமும் எதற்கென உணராமல் நந்தினியை காப்பாற்றுவதில் தனக்கு ஏன் இப்படி ஒரு ஆக்ரோஷம் என்று தெரியாமல் அந்த கணம் ஒரு சூறாவளியாக மாறியிருந்தான். இனி நடப்பது நடக்கட்டும் என்று தன் மனதிற்கு தானே கூறிக்கொண்டான்.

“இந்த கல்யாணத்தை நிறுத்துங்க…” என கத்தியவனின் குரல் அங்கே இருந்த சலசலப்பில் கேட்காமல் போயிற்று. அங்கே உள்ள வரிசைத்தட்டில் மஞ்சள் பூசி அடுக்கபட்டிருந்த தேங்காய்களில் இரண்டை எடுத்தவன் ஓங்கி தரையில் போட்டு உடைத்தான்.

அனைவரும் உதயாவின் செயலில் திடுக்கிட்டு அமர்ந்திருந்தவர்கள் எழுந்துவிட்டனர். நேசமணி அதிர்ந்துபோய் பார்த்தார். விஜிக்கோ உதயாவை பார்த்ததுமே சந்தோஷம் தாளவில்லை.

உதயா சென்றதும் அவன் பின்னாலேயே ஓடிவந்த ஏழுமலை அவனின் இந்த செயலில் மீண்டும் முருங்கைமரம் ஏறினார். கோவத்தில் வார்த்தைகளை சிதறவிட்டார்.

“என் பொண்ணு கல்யாணத்தை நிறுத்த நீ யார்?…..” என்று கேட்டுவிட்டு அவசரப்பட்டு சீண்டிட்டோமே என்ன சொல்ல போறானோ? என்று அவனையே பார்த்தபடி பரிதவித்து நின்றார் ஏழுமலை.

இப்படியாக அவர்களது வாக்குவாதம் நீண்டுகொண்டிருக்க சத்தமே இல்லாமல் குணாவை சேர்ந்தோர்கள் பின்பக்க வழியாக வந்தவரை லாபம் என்று கிடைத்ததை சுருட்டிக்கொண்டு அவசர அவசரமாக வெளியேறினார்கள்.

அதுவும் பிரசாத்தின் ஏற்பாடுதான். அவனது நண்பனை குணாவின் துணையாக அனுப்பியவன் அங்கே நடப்பவற்றை அவ்வப்போது போனில் அழைத்து கேட்டுகொண்டிருந்தான். அப்படி தகவல்களை கூற மண்டபத்தின் வெளியே வந்து பிரசாத்துடன் பேசிகொண்டிருக்கையில் தான் உதயா மண்டபத்தில் நுழைவது தெரிந்தது.

பிரசாத்திடம் சொன்னதுமே மறுமுனையில் இருந்த பிரசாத் சொன்னதை கவனமாக கேட்டு கொண்டான். அதன்படியே உதயா மேடையேறி திருமணத்தை நிறுத்த சொன்னதுமே குணாவையும் அவனை சேர்ந்தவர்களையும் அப்புறப்படுத்த தேவையானதை செய்துவிட்டான் பிரசாத் நண்பன். அனைவரும் அரைமனதோடு வெளியேறியும் விட்டனர்.

உதயவோடு வந்த மதிவாணன் உதயாவை யாரோ வேகமாக இழுத்துக்கொண்டு உள்ளே செல்லவதை பார்த்தவன், “இந்த கல்யாணத்துக்குதான் இவ்வளோ அவசர அவசரமா வந்தாரா? சொல்லிருக்கலாமே…” என நினைத்துக்கொண்டே கடைசி வரிசையில் அமர்ந்திருந்தான்.

கல்யாண வீட்டிலிருந்த ஒருவர் வந்து அவனை சாப்பிடுமாறு சொல்லவுமே பசியை உணர்ந்தவன், “ஹ்ம் அவருக்கு தனியா தடபுடலா கவனிப்பாங்களா இருக்கும். வரதுக்குள்ள நாம போய் சாப்ட்டு வந்திடலாம்…” என்று டைனிங்ஹாலுக்கு சென்றவன் நன்றாக சாப்பிட்டு வெளியே வந்தால் சரியாக உதயா தேங்காயை போட்டு உடைத்தான்.

“இப்போ எதுக்கு தேங்காயை தூக்கிப்போட்டு உடைக்கிராரு? ரிப்பன் கட் பண்ணி ஆரம்பிக்கிறது போல இங்க இவர் தேங்காய் உடச்சு ஆரம்பிக்கிறாரோ?…” என நினைத்துக்கொண்டே முன்னால் வர ஏழுமலையின் கோவமான குரலில், உதயாவின் எதிர்ப்பேச்சில் அதிர்ந்துவிட்டான்.

“என்னாது கல்யாணத்தை நிறுத்த வந்திருக்காரா? இதுதான் அண்ணியா?…” என நினைத்தவன் உடனே தன் மொபைலை எடுத்து உதயாவின் வீட்டிற்க்கு அழைத்து விஷயத்தை சொன்னான். அடுத்தடுத்து நடந்த அனைத்தையும் சொல்லிக்கொண்டே இருந்தான். தன மொபைலில் நடந்ததை போட்டோ எடுத்து அனுப்பியும் வைத்தான்.

ஒருவழியாக திருமணமும் முடிந்தது. நந்தினிக்கு இதில் மகிழ்ச்சியே என்றாலும் தன் குடும்பத்திற்கு இது அவமரியாதைதானே என்று மருகினாள்.

அதுவரை அவளிடம் இருந்த திடம் எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரம் போல் ஆகிவிட்டது. இவனை பற்றி எதுவுமே தெரியாமல் எதை நம்பி நான் இவனை எதிர்பார்த்தேன்? இனி தன் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது? என்ற பயத்தில் இருந்தவளுக்கு உதயாவின் கிளம்புகிறோம் என்ற வார்த்தை மேலும் சஞ்சலத்தை கொடுத்தது.

Advertisement