Advertisement

நட்சத்திர விழிகள் – 23 (2)

“மகி, நீ நந்தினிக்கிட்ட பேசு, இவ்வளோ பிடிவாதம் நல்லதில்லை அவளுக்கு…” என கூற அதை ஏற்றுக்கொண்டு தான் பார்த்துகொள்வதாக உறுதியளித்தாள்.

அதன் படி நந்தினியிடம் மீண்டும் ஒருமுறை படிப்பை பற்றி பேசவேண்டுமென்று எண்ணிக்கொண்டாள்.

அன்று முழுவதும் வீட்டினுள்ளே அடைபட்டிருந்த ஏழுமலை மறுநாள் வெளியே சென்றுவிட்டு வரலாமென கிளம்பி போனவர் சிறிது நேரத்திலேயே ஓய்ந்து போய் வந்தார்.

அவரது வாடிய முகத்தை பார்த்த சந்திரா, “என்னாச்சுங்க, ஏன் வாட்டமா இருக்கீங்க?…” என கேட்க,

“ஊருக்குள்ள ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி பேசறான் சந்திரா. சில பேர் முதுகுக்கு பின்னால பேசறான். நேர வந்து ஆறுதல் சொல்றேன்ற பேர்ல குத்தி பேசறான். என்னால தாங்க முடியலை. வெளில போகவே மனசில்லை…” என்று தோளில் கிடந்த துண்டை எடுத்து எறிந்துவிட்டு உள்ளே போய்விட்டார்.

இனிமேல் ஒவ்வொருத்தரும் இதையே காரணமாக வைத்து முன்னிறுத்தி பேசத்தான் செய்வார்கள் என தெரிந்ததுதானே? ஆனாலும் வலிக்காமல் இருக்குமா? பொறுத்துதானே போகவேண்டும் என பெருமூச்சை இழுத்துவிட்டார்.

நாட்கள் சடுதியில் வேகமாக நகர ஆரம்பிக்க மகிமா மறுபடியும் வழக்கம் போல உறவாட ஆரம்பித்தாள். யாரிடமும் பழையதை கிளறாமல் அவள் பேசிய விதம் அவள் மேல் உண்டான மதிப்பை அதிகப்படுத்தியது நந்தினி குடும்பத்தாருக்கு.

கோசலை தன்னால் முடிந்த அளவிற்கு நந்தினியின் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். அவரின் எண்ணத்திற்கு ஏற்றவாறு அடுத்து வந்த இரண்டு வரன்களும் ஊர்க்காரர்களின் புண்ணியத்தால் தட்டிபோனது.

அதிலிருந்தே இன்னும் ஒருவருடம் ஆகட்டும் என்று ஏழுமலை அந்த பேச்சை அதோடு நிறுத்திவிட்டார். தரகரே ஏதாவது சொன்னாலும் மறுக்க ஆரம்பித்தார். அதற்கு காரணமும் இருந்தது.

நந்தினியும் கொஞ்சம் கொஞ்சமாக ஏழுமலையுடன் பேச ஆரம்பித்தாள். கேட்கும் கேள்விகளுக்கு முகம் கோணாமல் பதில் பேசுவதால் அதை இப்போதைக்கு கெடுத்துவிட வேண்டாமென்றும், அவளிடம் தன்மையாக பேசி பேசியே முழுமனதாக கல்யாணம் செய்ய சம்மதிக்க வைத்துவிடலாம் என்றும் தான் கல்யாணத்தை பத்தி பேச்செடுக்காமலேயே இருந்தார்.

அதனாலே மகிமாவோடு பார்லருக்கு செல்லவும் அனுமதித்தார். நந்தினி உணராமல் அவளை பாதுகாக்கவும், கண்காணிக்கவும்  தவறவில்லை ஏழுமலை.

எத்தனை போராடியும் படிக்கவே மாட்டேன் என்பதில் உடும்புபிடியாக இருந்த நந்தினியின் பிடிவாதத்தை மகிமா உதயாவிடம் கூற வேறு வழியில்லை என்று ப்யூட்டீஷியன் கோர்ஸ் படிக்க வைக்குமாறும், அதையும் அவள் அறியாமலேயே சொல்லித்தரவேண்டும் என்றும் யோசனை கூறினான்.

ஏதாவது ஒன்றாவது அவள் தெரிந்திருக்க வேண்டும். அவளின் மனம் கொஞ்சம் மாற்றம் பெறவேண்டும் என்பதற்காக தான் இந்த யோசனையை மகிமாவிடம் கூறினான்.

அதன் வழியே மகிமாவும் தான் படித்த படிப்பையும், ஓவியம் வரைதல், எம்ப்ராய்டரிங் போன்ற மேலும் தனக்கு தெரிந்த கலைகளையும் நந்தினிக்கு அவள் அறியாமலேயே கற்றுத்தந்தாள்.

தன்னை வேலை வாங்குகிறார்களோ என முதலில் அசுவாரஸ்யமாக  பின் இது ஒன்றும் படிப்பில்லையே என எண்ணிக்கொண்டு மகிமாவிடம் தானே கேட்டு பழக ஆரம்பித்தாள்.

இப்படியாக வருடங்கள் கடந்தன. மகிமா கர்ப்பமாக இருப்பதை அறிந்து ஏழுமலை குடும்பம் அவளை தாங்கியது. தங்களின் பெண்போல அவளை கவனமாக பார்த்துக்கொண்டனர்.

மகிமாவின் பிள்ளை உண்டான நேரம் அவளது பெற்றோர்கள் மனம் இளகி ரவியிடம் மன்னிப்பை கேட்டு அவளை தங்களோடு வந்து சிறிது காலம் தங்குமாறு அழைத்தனர்.

மகிமா தயங்க ரவி தான் இதை உதயாவிடம் கூறினான். மகியை கடிந்துகொண்டு அவளின் பெற்றோரோடு போய் இருக்குமாறு அறிவுரை கூறிய பின் தான் மகிமாவும் கிளம்பினாள்.

அப்போதும் விடாமல் நந்தினியை யார் பார்த்துகொள்வது என்ற கேள்வியை உதயாவிடம் எழுப்ப ரவி தான் இங்குதானே வேலை பார்க்கிறேன். எதுவானாலும் தானே பார்த்துகொள்வதாக கூறவும் தான் மகிமாவிற்கு நிம்மதியானது.

மகிமாவின் தாய் வீட்டிற்கு தான் வந்து பார்க்கிறேன் என்று உதயாவும் கூறி அனுப்பி வைத்தான். ரவி மட்டும் அவ்வப்போது சென்று மனைவியை கண்டுவருவான்.

இதற்கிடையில் இவர்கள் அறியாமல் பிரசாத் எப்படியெல்லாமோ அலைந்து திரிந்து நந்தினியின் முகவரியை கண்டுகொண்டாலும் அவளை நெருங்கும் வாய்ப்பானது அவனுக்கு கிட்டவே இல்லை.

சிறிது நாள் போகட்டும் என காத்திருந்தவனுக்கு குணாவை பற்றிய தகவல் கிடைக்க அவனை தயார் செய்து தரகர் மூலமாக ஏழுமலையின் முன்னால் நிறுத்த ஆவன செய்துவிட்டான்.

ரவிக்கு ஐந்து நாள் சேர்ந்தது போல விடுமுறை கிடைக்க மனைவியை பார்க்க ஊருக்கு சென்றவன் போய்விட்டு திரும்பும் போது நந்தினியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் இன்னும் இரண்டொரு நாளில் வரப்போவதாக ஏழுமலை கூறினார்.

அதை உதயாவிடம் தெரிவிக்கத்தான் ரவியால் முடியாமல் போனது. முதன் முதலாக வெளிநாட்டு ஏற்றுமதி விஷயமாக விஷ்ணுவோடு செல்வதாக கூறியவன் பதினைந்து நாளில் திரும்பி விடுவதாகவும் சொல்லிவிட்டு தான் சென்றான்.

அங்கே உள்ள போன் நம்பருக்கு முயன்று முடியாமல் போக அந்நேரம் மகிமாவிற்கும் உடல்நிலை சரியில்லை என்று ஊரிலிருந்து அழைப்புவர போட்டது போட்டபடி மீண்டும் லீவ் எடுத்துகொண்டு ஊருக்கு சென்றுவிட்டான்.

ரவியிடமிருந்து எந்த ஒரு தகவலும் வராததால் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று நினைத்துகொண்டான் உதயா.

சமயம் பார்த்து தரகரோடு மாப்பிள்ளை குணாவும், அவனது சொந்தபந்தங்களும் வந்துவிட மீண்டும் தன்னை கூட்டுக்குள் சுருட்ட ஆரம்பித்தாள் நந்தினி.

சம்மதிக்கவே மாட்டேன் என்ற நந்தினியை, “இப்போதைக்கு தயாராகி வந்து நின்னா போது. அவங்க போனதும் பேசிக்கலாம்…” என்று கெஞ்சி அழுது கரைத்து பெரிய போராட்டத்தின் பின் தான் அவர்களின் முன்னால் வந்து நின்றாள். அவளை பார்த்ததுமே அனைவருக்குமே பிடித்துவிட,

“தரகர் எல்லாம் சொன்னாருங்க. உங்க ஊர்லையுமே சொல்லத்தான் செஞ்சாங்க, தோஷம் அது இதுன்னு…” என்று பேசிய பெண்மணியை பார்த்து ஏழுமலையின் முகம் கருத்தது.

“எங்களுக்கு ஜாதகத்துல நம்பிக்கை இல்லைங்க. பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க எந்தவிதமான சீரும் செய்யவேண்டாம். கட்டின புடவையோட அனுப்புங்க. நாங்க கண்ணுக்குள்ள வச்சு நல்லவிதமா பார்த்துப்போம்…” என்று வாயெல்லாம் பல்லாக பேசிய குணாவின் அம்மா பேச்சில் உண்டான சந்தோஷத்தில் ஏழுமலை ஒரேடியாக சாய்ந்துவிட்டார்.

அவரை என்ன ஏதென்று யோசிக்க கூட விடாமல் மடமடவென திருமண பேச்சை ஆரம்பித்து பதினைந்து நாட்களுக்குள் ஏழுமலையே முஹூர்த்தத்தை உறுதி செய்ய வைக்கும் படி இருந்தது அவர்களது பேச்சும் செயல்பாடுகளும்.

அவசரப்படவேண்டாம் என்ற நேசமணி, கோசலையின் பேச்சிற்கு காதுகொடுக்காமல் உடனே திருமணத்திற்கு முஹூர்த்தத்தை பார்க்க தரகர் இன்னும் பதினைந்து நாளில் நல்ல சுபதினம் இருப்பதாக சொல்லவும் அன்றைக்கே புடவை, நெக்லஸ் கொடுத்து நிச்சயமும் செய்துவிட்டு தான் புறப்பட்டனர்.

அவர்கள் உறுதி செய்துவிட்டு செல்லவும் தான் ஏழுமலைக்கு நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. அவர்களது அதிகமான புகழ்ச்சியும், குளிரவைக்கும் பேச்சுக்களும் என அனைத்தும் ஏழுமலையை திக்குமுக்காட செய்தது. அவசரக்கோலத்தில் முடித்த இந்த பேச்சுவார்த்தை மற்றவர்களுக்கு நிறைவை தரவில்லை.

“நீங்க ரொம்ப அவசரப்படறீங்கன்னு தோணுது மாப்பிள்ளை. இது நம்ம பொண்ணோட வாழ்க்கை. எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்க முடியாது. நாங்க சொல்ல சொல்ல கேட்காம நீங்க தட்டு மாத்தினது தப்பு. அடுத்தவங்க முன்னால எதுவும் பிரச்சனை வேண்டாம்னு தான் அமைதியா பொறுத்திட்டு இருந்தோம்…” என நேசமணி தன் விருப்பமின்மையை தெரிவிக்க,

“இங்க பாருங்க மச்சான், உங்களுக்கு மட்டும் இல்லை. எல்லோருக்குமே நான் சொல்லிக்கிறேன். மாப்பிள்ளை வீட்டை பத்தி என்கிட்ட தரகர் போனவாரமே சொல்லிட்டாரு. நானும் போய் விசாரிச்சுட்டேன். எனக்கு திருப்தியா இருக்கு…” என்ற ஏழுமலையிடம்,

“போனவாரமே இந்த விஷயம் தெரிஞ்சிருக்கு. ஆனா எங்க யார்க்கிட்டயும் சொல்லனும்னு தோணலை. உனக்கு மட்டும் திருப்தியா இருந்தா போதுமா? இவ உன் பொண்ணுதானே? இவளுக்கும் மனசு இருக்காதா? ஒரு வார்த்தையாவது அவக்கிட்ட கேட்டியா நீ? இவ என்ன பொம்மையா நீ சாவி குடுத்து உன் இஷ்டத்துக்கு ஆட்டிவைக்க?…” என தன் ஆதங்கத்தை கொட்டினார் கோசலை.

“நீங்க வேற மதினி, ஊர்ல இல்லாத மாப்பிள்ளை கிடச்சதாட்டம் அவங்க சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டு பதினஞ்சு நாள்ல கல்யாணத்தை வைக்கவும் சம்மதிச்சு நிச்சயமே பண்ணிட்டாரே? நம்மகிட்ட பொண்ணு பார்க்க மட்டும் தானே வராங்கன்னு சொன்னாரு?…” என்று எடுத்துகொடுத்த நேசமணியை முறைத்த ஏழுமலை,

“எனக்கே தெரியாது, அவங்க நிச்சயமும் உடனே பண்ண ஏற்பாட்டோட வருவாங்கன்னு நான் என்ன கண்டேனா?… ஆனா பாருங்க அவங்களுக்கு என் பொண்ணுமேல எவ்வளோ அன்பு?…” என சில்லாகிக்க,

“மாமா, எனக்கு அந்த மாப்பிள்ளையை பிடிக்கவே இல்லை. அவரோட பார்வையும் பேச்சும் சரியில்லைன்னு எனக்கு படுது. நம்ம மித்ராவோட வாழ்க்கை மாமா, இப்போ நீங்க கொஞ்சம் நிதானமா இல்லைனா பின்னால வருத்தப்பட்டு பிரயோஜனமே இல்லை. இப்போவும் ஒண்ணும் நடந்திடலை மாமா, கொஞ்சம் யோசியுங்களேன்…” என கோவமாக ஆரம்பித்தவன் கெஞ்சலாக முடித்தான்.

“விஜி, போதும் வாயை மூடு. உன் வயசுக்கு தகுந்தது போல பேசு. இதெல்லாம் பெரியவங்க பேசற விஷயம். புரியுதா?…”என்று மிக கண்டிப்பான குரலில் அவனையும் அதட்டினார்.

“இந்த கல்யாணம் நடந்துதான் தீரும். நான் முடிவு பண்ணிட்டேன், அவருதான் இந்த வீட்டு மருமகன்னு. உங்க யார்க்கிட்டையுமே நான் அபிப்ராயமும், விருப்பமும் கேட்கலை. இந்த கல்யாணத்துல விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்க வந்து கலந்துதான் ஆகனும். குறிச்ச தேதில ஒன்னு கல்யாணம் நடக்கணும். இல்லைனா…” என்று நிறுத்த அவர் சொல்ல வந்ததை உணர்ந்தவர்கள் ஆடிப்போய் நின்றனர்.

“இப்படி உன் உயிரை ஆயுதமா வைத்துக்கொண்டு மிரட்டி மிரட்டி உன் காரியத்தை சாதிக்க நினைக்கிறியே? உன் மிரட்டல்ல என் பொண்ணோட வாழ்க்கையை பலி கொடுக்க பார்க்கற. உன்னோட வறட்டுப்பிடிவாதத்தால உன்னால எதையுமே சாதிக்க முடியாதுடா…” என சாபம் விடாத குறையாக கதறினார் கோசலை.

“அக்கா இப்படி பேசி பேசித்தான் அவளோட மனசை நீ கலைச்சுட்ட. நான் சொல்றதை கேட்டுட்டு பேசாம இருக்கிறதா இருந்தா இரு. இல்லைனா வீட்டை விட்டு வெளில போய்டு…” என்ற பேச்சில் நொறுங்கிப்போய்விட்டார் கோசலை.

அவரது கண்ணீரை காண சகிக்காமல், தன் தந்தை பேசியது பொறுக்காமல், “அத்தை நீங்க அழாதீங்க. இந்த கல்யாணம் நடக்காது…” என்று திட்டவட்டமாக கூறியது நந்தினியே.

“என்ன இன்னும் அவனோட நினைப்புல நீ இருக்கிறியா? கொன்னு புதைச்சிடுவேன் ஜாக்கிரதை. இத்தனை வருஷமா தேடி வராதவன் இந்த பதினைஞ்சு நாள்ல வந்திடுவானா?…” என ஆவேசமாக கேட்ட ஏழுமலையை பார்த்தவள்,

“ஆமாம்னு சொன்னா என்ன பண்ணுவீங்க? நீங்க பேசறதுக்கு அர்த்தம் நான் அவங்களை காதலிக்கிறது தானே? அப்படி நான் காதலிக்கிறதா சந்தேகபடுறீங்களா? அப்படி நீங்க நினச்சா அது உங்க வளர்ப்பு மேலையே உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம். நீங்க என்னை சரியா வளர்க்கலையா?…”என்றவள்,

“ஏன்ப்பா, உங்களுக்கு அவ்வளோ வெறுப்பு அவங்க மேல? என்னை காப்பாத்தினத்தை தவிர வேற என்ன பண்ணினாங்க அவங்க. என் மேல துளியளவு நம்பிக்கை கூட உங்களுக்கு வர விடாம அவங்க மேல் உள்ள கோவமும் துவேசமும் உங்க கண்ணை கட்டி வச்சிருக்குல?…”

“அதுதான் அந்த கோவமும் ஆத்திரமும் தான் இன்னும் என்னை கொஞ்சம் கொஞ்சமா உயிரோட சாகடிச்சிட்டு இருக்கு. எனக்கு நம்பிக்கைதான். எப்படியாவது அவங்க என்னை தேடி வந்திருவாங்கன்னு. அவங்களை நான் எதிர்பார்க்கிறது எதுக்குன்னு தெரியுமா?…”

“எனக்கு அருவியூர்ல நடந்த கல்யாணம் என்னோட விருப்பமா, இல்லையான்னு விவாதம் பண்ண தயாரா இல்லை. அந்த கல்யாணத்தை என் மனசு ஏத்துக்கிச்சு. அதனால்தான் இன்னமும் அதையே நினச்சு மனசு அடிச்சுக்குது. என்னால இன்னொரு கல்யாணத்தை நினைக்கவே முடியலை. அருவருப்பா இருக்கு. இதையும் மீறி நீங்க நடத்தனும்னு நினச்சீங்கன்னா?…” என சற்று நிறுத்தி,

“நீங்க பார்த்திருக்கும் மாப்பிள்ளையோட விதி, ஒரு ஜடத்தோட குடும்பம் நடத்தனும்னு இருந்தா அதை யாரால மாத்த முடியும்? உங்க விருப்பபடி நான் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் என்னோட வாழ்க்கைல இனிமே சந்தோஷம் அப்டின்னு ஒன்னு இந்த ஜென்மத்துல இருக்காது….”என இறுகிய குரலில் ஏழுமலையை நேருக்கு நேர் பார்த்து கூறிய நந்தினியின் முகத்தில் இருந்த தீர்க்கத்தில் அனைவருமே ஸ்தம்பித்து நின்றனர்.

“நான் நடைபிணமா வாழறதை பார்த்து பார்த்து கண்ணீர் வடிக்கத்தான் உங்களுக்கு விருப்பம் போல? நீங்க வருத்தப்படுவீங்களா? இல்லை சந்தோஷப்படுவீங்களா எனக்கு தெரியாது. உங்ககிட்ட இவ்வளோ பேசற எனக்கு சாக தைரியம் இல்லாம போச்சு. அப்படியே நான் ஒரு முடிவெடுத்தாலும் அதுக்கு நீங்க அவங்களைத்தானே குற்றம் சொல்லுவீங்க?…” என்றவளை விழியே தெறித்துவிடும் அளவிற்கு அதிர்ந்துபோய் பார்த்தார்.

“உயிரோட இருக்கமாட்டேன் அப்டின்னு மிரட்டி பணிய வைக்க பார்க்கறீங்களே? இதே வார்த்தையை நான் சொல்ல எவ்வளோ நேரம் ஆகும்? நீங்க உங்க மேல அன்பு வச்சிருக்கிறவங்க மனசை இப்படி வார்த்தையால குத்தி கிழிக்கிறீங்க. அதனால உண்டாகிற வலி எப்படி இருக்கும்னு தெரியுமா? அதை உங்களுக்கு கொடுக்க என்னால முடியாதுப்பா. அந்த அளவுக்கு உங்கமேல பாசமும் மரியாதையும் வச்சிருக்கேன்…” என கூறும் போதே பீறிட்டு வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு,

“உங்க வீண் பிடிவாதத்தால என்னோட நிம்மதியும் போய், என்னால நீங்க பார்த்திருக்கிற மாப்பிள்ளை அவரோட எதிர்பார்ப்புகளையும்,  கனவுகளையும் தொலைச்சிட்டு நிக்கபோறாங்க. இதுதான் நடக்க போகுது. இதனால நீங்க எதை சாதிக்க முடியும்?…”

“உங்க இஷ்டப்படி கல்யாணத்தை ஏற்பாடு செய்ங்க. பார்க்கலாம். என்னோட நம்பிக்கை ஜெயிக்குதா? உங்க வறட்டு பிடிவாதம் ஜெயிக்குதான்னு. நான் தோத்துட்டா அந்த நிமிஷமே உணர்ச்சியில்லாத ஜடமாகிடுவேன். எனக்கு அதுல ஒரு கஷ்டமும் இல்லை. ஏனா இதுவரைக்கும் நீங்க பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் நான் என்னோட வட்டத்தை சுருக்கிட்டே தான் இருக்கேன்…”

“ஆனா நான் ஜெயிச்சுட்டா அது எங்கப்பாவுக்கு கிடைக்கிற வெற்றியாதான் அதை நினைப்பேன். நான் வாழப்போற சந்தோஷமான வாழ்க்கை தான் என் அப்பாவுக்கான வெற்றி. அது கிடைக்கும்னு நம்பறேன்…” என தன் உள்ளக்கிடங்கை எல்லாம் கொட்டி முடித்தவள் ஆயாசமாக அங்கேயே அமர்ந்துவிட்டாள்.

நந்தினியின் போராட்டத்தையும் பேச்சுக்களையும் நெஞ்சம் வலிக்க பார்த்த கோசலை,

“இங்க பாருடா. என்னை வீட்டை வீடு போக சொல்லிட்ட. கண்டிப்பா போறேன். நான் வேண்டுற சாமி என்னை கைவிடாது. நீ குறிச்ச தேதில என் மருமவளுக்கு பிடிக்காத அந்த கல்யாணம் நடக்கவே நடக்காது. நான் சொல்றது சத்தியம். நீ நினச்சது மட்டும் நடந்துட்டா உன் அக்கா இந்த வீட்டுக்கு இனி திரும்பி வரவேமாட்டா…” என கூறிவிட்டு தனக்கு தேவையான துணிகளை சிறி பேக்கில் எடுத்துவைத்தார்.

“அம்மாடி மித்துக்கண்ணு. தைரியத்தை விட்டுடாதடா. அதுக்காக ஜடம் அது இதுன்னு பெரியவார்த்தை எல்லாம் பேசாதம்மா. குலையே நடுங்குது. அத்தை கண்டிப்பா வருவேண்டா. உன் நம்பிக்கைக்கு தெய்வம் பக்கபலமா இருக்கனும்னுதான் கோவில் கோவிலா போக முடிவெடுத்திருக்கேன். போய்ட்டு வரேண்டா…” என்று நந்தினியிடம் கூறியவர் விஜியை நெருங்கி.

“விஜி, இந்த வீட்ல இந்த புள்ளைய பாடா படுத்துறாங்கடா. உன்னை நம்பித்தான் அவளை விட்டுட்டு போறேன். நீதான் அவளுக்கு எல்லாமா இருக்கணும். பார்த்துக்க ராசா…” என அவனை அணைத்துக்கொண்டு கூறியவர் வேறு எவரிடமும் சொல்லாமல் துக்கம் தொண்டை அடைக்க வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

யாரும் அவரை தடுக்க கூட எண்ணவில்லை. நேசமணியும் பூரணியும் கோசலையின் எண்ணம் நிறைவேறவேண்டும் என்று மனதின் ஓரத்தில் வேண்டிக்கொண்டனர்.

நேசமணி, விஜியின் ஆதங்கம், தன் சகோதரியின் கோவம், மகளின் ஆக்ரோஷமான பேச்சு என்று அவரை அசைத்துப் பார்த்ததென்னவோ ஒரு நொடிதான். பின்னர் பழைய ஏழுமலையாக பிடிவாதத்தின் மொத்த உருவமாக ஒருவரும் தன்னை அசைக்கமுடியாத படி மனதை இறுக்கிக்கொண்டார்.

————————————————–

வெளிநாட்டுக்கு சென்ற விஷ்ணுவும் உதயாவும் போன வேலை தாமதமாகும் என்று தெரியவும், திட்டமிட்ட நாளுக்கு இரண்டுநாட்கள் முன்னமே வந்துவிட்டனர்.

விஷ்ணு தன் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வெளியூர் செல்வதால் உதயா மட்டுமே குறிஞ்சியூர் வந்தடைந்தான்.

வந்த மறுநாள் இரவே தனம் உதயாவை போனில் அழைத்தார். முக்கியமான வேலை இருந்ததால் அழைப்பை எடுக்காமல் உதயா துண்டிக்க, தனம் மீண்டும் மீண்டும் அழைப்பதை பார்த்தவன் யோசனைக்குள்ளானான்.

எதுவும் பிரச்சனையோ என்று எண்ணியவன் மொபைலை எடுத்து காதிற்கு கொடுத்தான்.

“பிரபா, சித்தி பேசறேன். ஏன் போனை கட் பண்ணிக்கிட்டே இருந்த? முக்கியமான விஷயம் உன்கிட்ட பேசணும்…” என்று பதட்டமாக பேசினார் தனம்.

“சொல்லுங்க சித்தி. கொஞ்சம் வேலையா இருந்தேன். முடிச்சிட்டு கூப்பிடலாமேன்னுதான் கட் பண்ணினேன். என்ன பதட்டமா இருக்கு உங்க குரல்?…” எனவும்,

“பிரபா உனக்கு மீனாட்சிபுரத்தில நந்தினின்னு யாரையாவது தெரியுமா? இல்லை உனக்கு வேண்டியவங்க யாராவது அங்க இருக்காங்களா?…” என்றவரின் நேரடி கேள்வியில் உதயாவிற்கு தூக்கிவாரிபோட்டது.

“ஏன் சித்தி? என்ன விஷயம்?…” என்று உள்ளூர உண்டான படபடப்பை குரலில் காட்டிகொள்ளாமல் கேட்டான்.

“பிரசாத் யார்க்கிட்டையோ மீனாட்சிபுரத்துக்கு நாளைக்கு சீக்கிரமே போகனும், பிரபாக்கு எதுவுமே இதுவரைக்கும் தெரியாது. மாப்பிள்ளைக்கு நீதான் பாதுகாப்பா இருக்கனும். கல்யாணம் முடிஞ்சதுமே கிளம்பிடுங்கன்னு யார்க்கிட்டையோ போன்ல சொல்லிட்டு இருந்தான். எனக்கு ஒண்ணுமே புரியலை…” என கூறவும் உதயாவிற்கு உச்சந்தலையில் சுரீர் என்று யாரோ ஓங்கி அடித்தது போல வலி உண்டானது.

பிரசாத்திற்கு நந்தினி இருக்கிற இடம் தெரிஞ்சிடுச்சா? ஐயோ நந்தினி? என மனம் ஓலமிட்டது.

“சித்தி உங்களுக்கு எப்படி தெரியும்?…” என்றவனிடம்,

“அவனுக்கு பால் வேணுமான்னு கேட்க ரூம்க்கு போனேன். அப்போதான் போன்ல ரகசியமா பேசிட்டு இருந்தான். பிரபா என்னப்பா நடக்குது?…” என தவித்தவரை சமாதானம் செய்து போனை துண்டித்தவன் உடனடியாக மதியை அழைத்து காரை எடுக்கச்சொல்லி மீனாட்சிபுரம் நோக்கி சென்றான் கொதிக்கும் உள்ளத்தோடு.

Advertisement