Advertisement

நட்சத்திர விழிகள் – 23 (1)

தன்னை கோவமாக நோக்கிய கோசலையை துச்சமாக பார்த்தவர், “சந்திரா நாளைக்கு உன் அண்ணனை வர சொல்லணும், தாய்மாமா தானே வந்து நடத்திக்கொடுக்கணும்…” என்று இலகுவாக கூறினார் ஏழுமலை.

அவ்வளவுதான் கோசலைக்கு வந்ததே கோவம். “உனக்கு கொஞ்சமாவது கூறு இருக்கா? ஏற்கனவே கல்யாணம் ஆனா பொண்ணுக்கு திரும்பவும் கல்யாணம் செய்யனும்னு சொல்றியே? என்ன மனுஷன்டா நீ?…” என ஆத்திரத்தில் அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளி எறிய அனைவருமே ஒரு கணம் ஆடிபோய்விட்டனர்.

ஏற்கனவே நந்தினிக்கு கல்யாணமான விஷயத்தை மகிமாவை வைத்துக்கொண்டு இப்படி கோசலை போட்டு உடைப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

செய்வதறியாமல் ஏழுமலையும் சந்திராவும் மகிமாவை பார்க்க அவள் திகைப்பிலிருந்து விடுபட்டு அவஸ்தையாக பார்த்துக்கொண்டே அவ்விடம் விட்டு உடனடியாக வெளியேறிவிட்டாள்.

சிறிதுநேர அமைதிக்கு பின், “இது என் பொண்ணோட வாழ்க்கை. அவளை யாருக்கு கட்டித்தரனும், தரக்கூடாதுன்னு நான் தான் முடிவெடுப்பேன். நீ இதுவரைக்கும் செய்ததெல்லாம் போதும். உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு. இதுல நீ தலையிட்ட நடக்கிறதே வேற…” என கூறிவிட்டு,

“அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆச்சா? யாரு சொன்னா அதுக்கு பேரு கல்யாணம்னு. என்னை பொறுத்தவரைக்கும் அவளுக்கு தாலிகட்டி தோஷம் கழிச்சிருக்கு அவ்வளவேதான். அதுக்கு மேல பேச அந்த சம்பவத்தில் எதுவுமே இல்லை…” என்று சூடாக பேச,

“தோஷம் கழிச்சிருக்கா? இப்படி சொல்ல உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு? தெய்வ சந்நிதியில, அந்த ஊர் ஜனங்க சாட்சியா நடந்த கல்யாணம் உனக்கு தோஷம் கழிக்கிறது போலவா?, இதை அந்த ஊர்க்காரங்க கேட்டா என்ன நினைப்பாங்க?…” என்று ஏழுமலைக்கு சளைக்காமல் தானும் பதில் வாதம் புரிந்தார்.

சந்திராவோ யாரையும் சமாதானப்படுத்த முடியாமல் தன் மகளின் வாழ்க்கை தன் கணவனின் கைகளில் ஒரு விளையாட்டு பொம்மை போல ஆகிவிட்டதே என்று கண்ணீரில் கரைந்துகொண்டிருந்தார்.

“அவனுங்க யார் என் மகளோட வாழ்க்கையை முடிவு பண்ண? பெத்தவன் நான் தான் முடிவெடுப்பேன். அது போல இந்த கல்யாணத்தை நடத்தியும் காட்டுவேன்…” என்று சவாலாக பேசினார்.

ஏழுமலை திரும்ப திரும்ப தன் பிடியிலேயே பிடிவாதமாக நிற்க எப்படியாவது சமாதானம் செய்து இப்போதைக்கு இந்த திருமண ஏற்பாட்டை தவிர்க்க ஆகவேண்டியதை மட்டும் பேசலாம் என்று முடிவெடுத்தார் கோசலை.

“சரிப்பா, உன் பொண்ணுக்கு உன் விருப்பம் போல நீயே கல்யாணம் செய்து வை. ஆனா அதுக்கு இப்போ என்ன அவசரம்? இன்னும் நம்ம மித்ரா பழைய மித்ராவா மாறலையே? இன்னமும் அருவியூர்ல நடந்ததையே நினச்சு வருந்திட்டு இருக்காளே? இயல்பான அவ சுபாவம் அந்த கல்யாணத்திலேயே தொலஞ்சு போச்சு. கொஞ்ச நாள் ஆகட்டும். அப்பறமா கல்யாணம் பத்தி பேசலாமே?…” என்று கெஞ்ச,

“அவ மாறவே வேண்டாம். இப்படியே இருந்தா எனக்கொண்ணும் கஷ்டமில்லை. சொல்லபோனா இப்போதான் சந்தோஷமா இருக்கு. அமைதியா ஒரு இடத்துல அவ இருக்கிறதுது. எப்படி இருந்தாலும் இந்த கல்யாணம் நடக்கும். நாளைக்கு பொண்ணு பார்க்க வந்துதான் தீருவாங்க….” என்று கூறியவர் நந்தினியை முறைத்துக்கொண்டே,

“அப்படி வரவங்க முன்னால இவ வந்து நின்னுதான் ஆகணும். நான் சொல்றபடி இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சுதான் ஆகணும். போட்டோ, ஜாதகம் எல்லாம் எப்போவோ தரகர்க்கிட்ட கொடுத்துவிட்டுட்டேன். இந்த இடம் கண்டிப்பா உறுதியாகிடும்…” என்று பேசிக்கொண்டே போனார்.

அவருக்கு தான் இவ்வளவு பேசியும் நந்தினியின் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட சாதகமாகவோ, பாதகமாகவோ வரவில்லையே என்ற ஆதங்கம். அது கோவமாக மாறி அவளை சுட்டுவிட துடித்தது.

நந்தினியின் அருகில் வந்தவர், “என்ன பேசினதெல்லாம் கேட்ட தானே? எந்த நாளைக்கு தயாரா இருக்கணும். புரியுதா?…” என்று கேட்டும் அவள் பதில் கூறாமல் மௌனம் காக்க,

“கேட்கறதுக்கு பதில் சொல்லாம கல்லுமாதிரி இருக்கியே?… உன்னால பொண்ணு பார்க்க வரவங்ககிட்ட நான் அசிங்கப்பட்டு நிக்கனுமா?… இன்னும் எங்கெல்லாம் என்னை அவமானபடுத்தி என் உயிரை குடிக்கப்போற?…” என்று கடுமையான வார்த்தைகளை சிதறவிட்ட ஏழுமலையின் குரலுக்கு சிறிதும் அஞ்சாமல் அமைதியாக நின்றாள்.

எங்கே கோவத்தில் நந்தினியை இன்னமும் காயப்படுத்திவிடுவாரோ என்று பயந்த சந்திரா, “ஐயோ அவளை எதுவும் சொல்லாதீங்க. நான் பேசறேன். நீங்க போங்க. அடுத்து நடக்கவேண்டியதை பாருங்க…” என நந்தினியை அணைத்துக்கொண்டு கூறினார்.

“ம்ம் சொல்லிவை, என் அக்காக்கும் சேர்த்து. அப்பறம் இன்னொரு விஷயம். அந்த மகிமா பொண்ணு வந்து ஏதாவது கேட்டா பழைய விஷயம் எதையுமே எக்காரணம் கொண்டும் சொல்லக்கூடாது. என்ன சொல்லி சமாளிப்பீங்களோ? எனக்கு தெரியாது. ஆனா எதுவுமே அந்த பொண்ணுக்கு தெரியக்கூடாது…” என கடுமையாக கூறிவிட்டு வெளியேறிவிட்டார்.

அவர் சென்றதும், “ஏண்டா மித்ரா இப்படி பேசாம இருக்க? நான் சொல்றதை கொஞ்சம் கேளுமா, உன் அப்பாப்பத்தி உனக்கு தெரியாததா? அவர் இப்போ வெறி புடிச்சது போல இருக்காரு. இப்போ நாம சொல்றது எதையுமே கேட்கமாட்டாருடா. உனக்கு நான் எப்படி சொல்லன்னு எனக்கு தெரியலை. உன் மனசு புரியத்தான் செய்யுது…” என்று அழுத சந்திராவை விலக்கிவிட்டு தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துகொண்டாள். அறைக்குள் நுழைந்தவள் வழக்கம் போல மாங்கல்யத்தை எடுத்து வைத்து பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.

இப்போதெல்லாம் நந்தினி அதிகமாக தனிமையை நாடுகிறாள் என்று அனைவருக்குமே தெரிந்தாலும் அதிலிருந்து அவளை வெளியே கொண்டுவர யாராலுமே முடியவில்லை.

முன்பு அவளின் தனிமையை தடுக்க யாரும் முயற்சிக்கவில்லை. இப்போதெல்லாம் முயற்சித்தாலும் அவளின் தனிமை தேடலை தடுக்க முடியவில்லை. இது எங்கே போய் முடியுமோ என்று கவலைகொள்ள மட்டும் தான் முடிந்தது.

“என்ன சந்திரா, இவனுக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. என் மருமவ தனக்குள்ளேயே மெழுகா உருகிட்டு இருக்கா. அவளோட மனசுல எரியிற தீயை குளிரவைக்காம இப்படி மேலும் தூண்டிவிட்டு ஒரேடியா சாய்க்க பார்க்கானே?…” என கோசலை புலம்ப,

“அண்ணி நாம நினைக்கிறது இந்த வீட்ல என்னைக்கு நடந்திருக்கு? உங்க மனசுல இருக்கிற ஆசை புரியுதான். ஆனா அது நடக்கிற காரியமில்லை…”என சமாதானம் செய்தவர்,

“அதுவுமில்லாம அந்த புள்ளை தான் அன்னைக்கே உங்க தம்பி கேட்ட வாக்கை குடுத்துட்டு விலகிடுச்சே? இனி மித்ராக்கு என்ன நடக்கனும்னு விதிச்சிருக்கோ அது போல நடக்கட்டும். என் பொண்ணு கஷ்டமில்லாம வாழ்ந்தாலே எனக்கு போதும் அண்ணி…” என கூறியதும் தான் பேச இங்கே எதுவுமில்லை என நினைத்துகொண்டு நேசமணி வீட்டை நோக்கி நடையை கூட்டினார் கோசலை.

———————————————————————

உயிரின் ஆழம் வரை பரவிய வலியின் தாக்கத்தோடு, “என்னது நந்தினிக்கு அவங்கப்பா மாப்பிள்ளை பார்க்கிறாரா?… என்ன இப்படி திடீர்னு  சொல்ற மகி?…” என பரிதவிப்போடு கேட்ட உதயாவின் குரலில் கலக்கமான மகி,

“அண்ணா பொண்ணு பார்க்கத்தான் வராங்க. அதுவும் நாளைக்குதான். நீங்க கோவப்படாம இருங்க. நாம பொறுமையா யோசிச்சு ஏதாவது செய்யலாம்…” என அக்கறையாக சொன்ன மகியிடம் பதில் ஏதும் பேசாமல் அமைதிகாத்தான்.

வீட்டிற்கு வந்ததும் மகிமா செய்த முதல் வேலை உதயாவிற்கு போனில் அழைப்பு விடுத்தது தான். அவளால் நந்தினியின் திருமண தகவலை கேட்டதும் தாளமுடியவில்லை.

எப்படியாவது உதயாவிடம் கூறவேண்டும் என்ற உத்வேகத்தில் வந்து அவனிடம் திருமண தகவலை கூற அதை கேட்டு அதிர்ந்த அவன் குரலில் தொனித்த வேதனையை கண்டவள் மனமும் கவலைகொண்டது.

“அதுமட்டும் இல்லை அண்ணா, அங்க கோசலையம்மா இருக்காங்கல்ல. அவங்களுக்கு சரியான கோவம். அண்ணியோட அப்பாவை நல்லா திட்டிவிட்டுட்டாங்க. ஆனா என் முன்னாலையே உங்க கல்யாண விஷயத்தை பத்தி சொல்லவும் எல்லோருக்குமே ஷாக் ஆகிடுச்சு. நான் ஒண்ணும் பேசாம உடனே வீட்டுக்கு வந்துட்டேன்…” என்று கூற,

“சரிம்மா, நீ கவனமா இரு. இனிமே அவங்க கிட்ட எங்க கல்யாண விஷயம் பத்தி எதுவுமே கேட்கவோ பேசவோ செய்யவேண்டாம். புரியுதா? பத்திரம். நாளைக்கு என்ன நடந்ததுன்னு பார்த்துட்டு சொல்லு. வச்சிடறேன்…” என்று பேசி வைத்துவிட்டு திரும்பிய உதயாவை பார்த்து முறைத்த விஷ்ணு,

“ரொம்ப நல்லா இருக்குடா, உன் பொண்டாட்டிக்கு கல்யாணமா? நீ போய் சாப்ட்டுட்டு மொய் நிறைய எழுதிட்டுவாயேன். உன்னையெல்லாம்?????? அந்த ஹிட்லர் நல்லா காய் நகர்த்தரார். இப்போவாவது சொல்றதை கொஞ்சமாவது கேளு பிரபா…” என பேச ஆரம்பித்தவனை கையமர்த்தி தடுத்தான் உதயா.

“இங்க பாரு விஷ்ணு. இந்த கல்யாணம் சீக்கிரமா நடக்குதேன்னுதான் எனக்கு வருத்தம். அவளை படிக்க வைக்காம இப்படி சின்ன வயசுலையே கல்யாணம் செய்து வைக்க போறாங்கன்னு. வேற ஒண்ணுமில்லை…” எனவும் விஷ்ணுவின் முகத்தில் இருந்த சந்தேகத்தை படித்தவன்,

“இப்போ உனக்கென்னடா? நல்ல மாப்பிள்ளையா இருந்தா சந்தோஷம் தானே? நல்லபடியா கல்யாணம் நடக்கட்டும். இப்போ வேலை நிறைய இருக்கு சார். அதை பார்க்கலாம்…” என வலிக்கும் மனதை மறைத்து தன் கவனத்தை குவிந்துகிடந்த வேலையில் செலுத்த ஆரம்பித்தான்.

இப்படி விட்டேற்றியாக பேசும் உதயாவை ஒன்றும் செய்ய முடியாமல் கோவத்தில் அங்கிருந்த பைலை தூக்கி வீசிவிட்டு விடுவிடுவென போய்விட்டான் விஷ்ணு.

—————————————————————–

கோசலை கூறிய விஷயத்தை கேட்ட நேசமணி, “இங்க பாருங்க மதினி. உங்க தம்பி இப்போ யார் பேச்சையும் கேட்கிற நிலமையில இல்லை. ஏற்கனவே எங்களுக்குள்ள வருத்தம் உண்டாகிருக்கு. கொஞ்சம் யோசிங்க. இந்த மாப்பிள்ளை நல்லவரா இருந்து நம்ம மித்ராவை நல்லா பார்த்துக்கிட்டா அதைவிட சந்தோஷம் நமக்கு என்ன இருக்கு?…” என்றவரை ஏமாற்றமாக பார்த்துவிட்டு சிறிது நேரத்திலேயே அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

எல்லாம் தன் கைமீறி நடக்கிறது என்பதை உணர்ந்தவரால் தெய்வத்திடம் மட்டுமே முறையிட முடிந்தது.

மறுநாள் நேசமணி வீட்டினரும் வந்துவிட வீடே தடபுடலாக ஏற்பாடுகளை கவனித்துகொண்டிருந்தது. நிமிஷத்திற்கொருதரம் நந்தினி ரெடியா என அவஸ்தையோடு பார்த்துக்கொண்டே இருக்க,

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரதுக்கு கொஞ்சம் முன்னால ரெடி பண்ணிடுவோம். அப்போதான் முகம் களைப்பில்லாம இருக்கும்…” என சந்திரா கூறவும் தான் அமைதியானார்.

இன்னும் ஒருமணி நேரத்தில் அனைவரும் வந்துவிடும் நிலையிலும் நந்தினி தயாராகாமல் இருக்க ஆவேசத்தில் ஆடியேவிட்டார் ஏழுமலை.

“இப்போ அவ ரெடி ஆக போறாளா இல்லையா? முதல்ல இந்த பாவாடை சட்டை எல்லாத்தையும் தீ வச்சு கொளுத்துறேன். எப்போ பாரு ரெட்டை ஜடையும் பாவாடை சட்டையுமா இதையே போட்டுக்கிட்டு. வயசு பொண்ணா லட்சணமா புடவை கட்டி தலைநிறைய பூவச்சு தயாரா இருக்கணும் சொல்லிட்டேன்…” என உறுமிவிட்டு நாற்காலியில் அமர்ந்துகொண்டார்.

சந்திராவும் பூரணியும் எவ்வளவோ எடுத்து சொல்லி காலில் விழாத குறையாக கெஞ்சி அவளை தயார் செய்தனர். அதன் பின்னரே ஏழுமலை இயல்பானார்.

நேரம் நெருங்க நெருங்க படபடப்போடு வாசலுக்கும் வீதிக்குமாக நடைபயின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் தரகர் மட்டும் வரவும் அவரை வரவேற்று உள்ளே அழைத்துவந்தார்.

“வாங்க தரகரே, என்னாச்சு மாப்பிள்ளை வீட்ல வரதா சொன்னாங்களே? கிளம்பிட்டாங்களா?…” என ஆவலாக கேட்டவரை இயலாமையோடு பார்த்த தரகர்,

“அது வந்து ஏழுமலை, அவங்க வரலைன்னு சொல்லிட்டாங்க…” என்று தயங்கி தயங்கி சொல்லவும் ஏழுமலைக்கு குழப்பமாக இருந்தது.

நேசமணி முன்னால் வந்து, “வரலையா?. அப்போ என்னைக்கு வராங்க? அதை சொன்னாங்களா?…” என கேட்டார்.

“இல்லைங்க அவங்க இனிமே வரமாட்டாங்க. இந்த இடம் வேண்டாம்னு சொல்லி வேற பொண்ணை பார்க்க சொல்லிட்டாங்க…” என கூறியதுதான் தாமதம் என்ன செய்கிறோமென உணராமல் ஏழுமலை தரகரின் சட்டையை பிடித்துவிட்டார்.

“என்னது? என் பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்டாங்களா? என்னய்யா சொல்றீங்க?…” என்று தரகரை பிடித்து உலுக்க அந்த சத்தத்தில் உள்ளே இருந்த அனைவருமே ஜமுக்காளம் விரித்து அலங்கரிக்கபட்டிருந்த வரவேற்பறைக்கு வந்துவிட்டனர்.

“மாப்ள, கொஞ்சம் பொறுமையா இருங்க. என்னனு கேட்போம். முதல்ல அவரை விடுங்க..” என்று ஏழுமலையை இழுத்து தன்பக்கம் நிறுத்திக்கொண்ட நேசமணி,

“என்ன நடந்ததுன்னு சொல்லுங்க சார். எங்களுக்கு பதட்டமா  இருக்குதே?…” என கேட்கவும்,

“சொல்றதை கேட்டு கோவப்படவோ ஆத்திரப்படவோ வேண்டாம். பொறுமையா இருங்க. நீங்க குடுத்த ஜாதகத்தை அவங்க வேற ஒரு ஜோசியர்க்கிட்ட காண்பிச்சிருக்காங்க. நான் சொன்னது போலவே பொருத்தம் நல்லா பொருந்திருக்கு. ஆனா உங்க பொண்ணோட ஜாதகத்துல தோஷம் இருக்குதாம். அதனால வேண்டாம்னு சொல்லிட்டாங்க…”

“என்ன சொல்றீங்க? என்ன தோஷம் இருக்கு? ஏன் நீங்களும் தானே ஜாதகத்தை பார்த்தீங்க. அப்போ உங்களுக்கு அந்த தோஷம் பத்தி தெரியாதா?…” என்று கோவமாக கேட்டார் ஏழுமலை.

“தெரிஞ்சது, ஆனா பரிகாரம் பண்ணினா கழிய கூடியதுதான் அந்த தோஷம். அதையும் நான் சொல்லிட்டேன். ஆனா மாப்பிள்ளை வீட்ல பயப்படறாங்க…” என தரகர் கூறவும்,

“அப்படி அவங்க பயப்படற அளவுக்கு என்னய்யா தோஷம்?…” என்ற நேசமணியை பார்த்து,

“உங்க பொண்ணுக்கு இரு தாலி தோஷம். அவங்க கழுத்துல இரண்டுதடவை தாலி ஏறனும்னு விதி. உங்க பொண்ணை கல்யாணம் செய்தா அவங்க பையனுக்கு எதுவும் ஆபத்து வந்திடுமோன்னு அதனாலதான் அவங்க பயப்படறாங்க…” எனும் அனைவருமே திக்பிரம்மை பிடித்ததுபோல அசைவற்று நின்றுவிட்டனர்.

ஏழுமலைக்கு திருடனுக்கு தேள் கொட்டிய கதையாகிவிட்டது. தன் பெண்ணிற்கு ஏற்கனவே ஒருமுறை தாலி ஏறி இறங்கிவிட்டது என்று தரகரிடம் சொல்ல முடியுமா? இதற்கு என்னதான் வழி என்று திகைத்து நிற்க,

“என்னது மித்ராவுக்கு தாலி தோஷமா? அப்போ அவளுக்கு கல்யாணமே ஆகாதா?…” என்ற அலறலில் அனைவரும் திகைப்பிலிருந்து திரும்பி வாசலை பார்த்தால் அங்கே நிர்மலா நின்றுகொண்டிருந்தாள்.

காலையிலிருந்து ஏழுமலை வீட்டில் தெரிந்த பரபரப்பில் என்ன விஷயம் என அறிந்துகொள்ள முடியாமல் நிலையில்லாமல் தவித்த நிர்மலா ஏழுமலை ஒரு பெரியவரை அணைவாக அழைத்துக்கொண்டு வீட்டினுள் செல்ல என்ன விஷயம் என அறிய தானும் ஒரு கிண்ணத்தை எடுத்துகொண்டு சக்கரை வாங்கவென்று பேர் பண்ணிக்கொண்டு பின்னாலேயே சென்றாள்.

தரகர் பேச ஆரம்பித்ததுமே அனைவரும் வாசலில் கவனமில்லாமல் தரகர் பேச்சிலேயே கவனத்தை வைத்திருக்க அனைத்து விஷயமும் நிர்மலாவின் காதில் தேனாக பாய்த்து.

கேட்டதை அப்படியே விடாமல் வாசலில் வைத்து சத்தமாக கூற அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு வெளியே வந்து நின்று வேடிக்கை பார்த்தார்கள். ஒரு சிலர் நிர்மலாவிடம் நெருங்கி என்ன விஷயமென்று கேட்டு தெரிந்துகொண்டனர்.

“சக்கரை தீர்ந்துபோச்சேன்னு கொஞ்சம் நம்ம சந்திரக்காக்கிட்ட வாங்கலாம்னு போனேன்க்கா. நான் என்ன கனவா கண்டேன்? இப்படி நம்ம மித்ராவை பொண்ணு பார்க்க வரப்போறாங்கன்னு? நான் எதார்த்தமா தான் உள்ள போனேன். அப்போதான் அந்த தரகர் இந்த விஷயத்தை சொல்லிக்கிட்டு இருந்தாரு…” என்று பக்கத்து வீட்டு பெண்மணியிடம் நீட்டிமுழக்கிகொண்டிருந்தாள்.

தரகரிடம் பேசி அவரை அனுப்பி விட்டு நிர்மலாவிடம் வருவதற்குள் ஊரில் பாதிக்கும் மேலே விஷயம் தெரியும் படி செய்துவிட்டாள்.

ஏழுமலை தன்னைத்தான் தேடி கோவமாக வருகிறார் என்பதை தெரிந்து அவசர அவசரமாக வீட்டிற்குள் போய் கதவை தாழ் போட்டுகொண்டவள் வெளியேறவே இல்லை.

அக்கம்பக்கத்தவர்களின் பரிதாபமான பார்வையை எதிர்க்கொள்ளவே முடியாமல் உடைந்த மனதோடு வீட்டில் வந்து தொப்பென தரையில் அமர்ந்து தலையில் கை வைத்துக்கொண்டார்.

தான் நேற்று கோவத்தில் சொன்னது இன்று நிஜமாகிவிட்டதோ? என குமைந்துபோனார். அவர் எண்ணியதை போலவே,

“இப்போ உனக்கு சந்தோஷமா? வாய்க்கு வாய் தோஷம் கழிஞ்சது, தோஷம் கழிஞ்சதுன்னு சொன்னியே நேத்து. இன்னைக்கு அது போலவே ஆகிடுச்சு பார்த்தியா?…” என்று எரிந்து விழுந்தார் கோசலை.

“அக்கா இப்போ அதை விட முக்கியமான விஷயம் ஒன்னு இருக்கு. தரகர் சொல்லி நமக்கு தெரிஞ்ச நந்தினி தோஷம் பத்தின விஷயம் நமக்கு மட்டுமில்லாம இப்போ இந்த ஊர் மொத்தமும் பரப்பிட்டா அந்த புண்ணியவதி. நாளைக்கே வேற மாப்பிள்ளை ஏதும் வந்தாலும் ஊருக்குள்ள விசாரிக்காமலா இருப்பாங்க? நம்ம பொண்ணு வாழ்க்கைக்கு என்ன செய்யபோறோம் நாம?…” என்று பூரணி கேட்க சந்திரா வழக்கம் போல அழுதுக்கொண்டே புலம்பினார்.

ஏழுமலையை பார்க்கத்தான் பாவமாக இருந்தது அனைவருக்குமே. அவர் எப்படியெல்லாம் கனவு கண்டார். என்னென்ன சீர் கொடுக்க வேண்டும் என்பது வரைக்கும் நேற்று இரவு முழுவதும் தானாக பேசிகொண்டிருந்தாரே என எண்ணி கலங்கினர்.

“இங்க பாருய்யா ஏழுமலை, இப்போதைக்கு இந்த விஷயத்தை அப்படியே விடு. கல்யாணம் தானா கூடி வரணும். நாம நினச்சா அதை உடனே நடத்திர முடியாது. நீ வருத்தபடாத…” என ஆறுதலாக பேசியவரின் கையை பிடித்துகொண்டு கண்ணீர் வடித்தார்.

அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த நந்தினிக்கு வேறொரு எண்ணம் உதித்தது. தனக்கு இருதாலி தோஷம் அப்படினா அவங்களுக்கு ஏதும் ஆபத்து வருமா? என பயந்தாள்.

அவ்வளவு நேரம் இருந்த தைரியம் மொத்தமாக வடிந்துவிட்டது. தனக்கு மட்டும் தான் இவ்வளவு சோதனையோ? என்று எண்ணி மருகினாள்.

கோசலையின் ஆறுதலில் கொஞ்சம் தெளிந்தவர் இனி கல்யாண பேச்சை உடனே எடுக்க வேண்டாம் என்று அதை தள்ளி வைக்க முடிவெடுத்துக்கொண்டார்.

“அக்கா நீ சொல்றது போலவே நான் இப்போதைக்கு நம்ம மித்ரா கல்யாணம் பத்தி பேச்சை எடுக்க மாட்டேன்…” என வாக்களிக்க அனைவருக்குமே அது நிம்மதியை தந்தது.

நிர்மலாவின் கைங்கரியத்தால் ஊருக்கே தெரிந்த நந்தினியின் திருமண தோஷ விஷயம் மகிமாவின் காதுக்கும் போனது. அவளுக்கு இதில் பெரிய நிம்மதியே.

தன் அண்ணியை இனிமேல் பெண்பார்க்க யாரும் வரப்போவதில்லை என்று எண்ணிக்கொண்டே அந்த சந்தோஷத்தில் உதயாவிடம் அந்த தகவலை கூற அவனால் இதை நம்ப முடியவில்லை. மகியிடம் வேறென்ன சொல்ல. தனக்கு சந்தோஷம் என்று மட்டும் கூறினான்.

மகியும் அப்போதுதான் ஞாபகம் வந்து நந்தினி படிப்பு விஷயத்திலும் ஏழுமலை ஏதோ செய்திருக்கிறார் என்றும் அதனால் தான் நந்தினி படிக்க விருப்பமில்லாமல் இருப்பதாக கூறியதாகவும் சொன்னாள்.

Advertisement