Advertisement

நட்சத்திர விழிகள் – 18 (1)

 

நிலவின் பின்புறமாய் நீதான் இருந்தாயா…
குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா…
கடலின் அடியில் படிந்தா இருந்தாய்…
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்…
இந்த உலகின் அழகெங்கும் நீதானா வழிந்தோடினாய்…  எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது…
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது…
எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்…
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்…
இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்…
அடி எனக்காக நீயும் வந்தாய்…

அருவியூரை நெருங்கவும் எச்சரிக்கும் பார்வையொன்றை சடுதியில் நந்தினி, விஜியின் புறம் செலுத்தினார் ஏழுமலை. அதை கண்டு கடுப்பான விஜி,

“இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. இவர் வானரத்துக்கு சப்ஸ்டியூட்டா ஒரு பொண்ணை பெத்து வச்சிக்கிட்டு நானென்னமோ அதுக்கு காவல் காக்குற ட்ரில் மாஸ்டர் மாதிரி என்னை ஆட்டிவைக்கிறாரு. இது குடும்பமா இல்லை சர்க்கஸ் கம்பனியான்னே தெரியலையே?…”என முணங்கிக்கொண்டே நந்தினியை பார்த்தால் அவள் ஜன்னல் வழியே வெளியே தெரிந்த ஊரை ஆர்வமாக வேடிக்கை பார்த்துகொண்டிருந்தாள்.

“பிசாசு, இவ இப்டி மாட்டிவிடுவான்னு தெரிஞ்சுதானே வரமாட்டேன்னு சொன்னேன். செய்யிறதெல்லாம் செஞ்சுட்டு அதோட சொந்தக்காரங்க இருக்கான்னு மரத்துக்கு மரம் தேடிட்டு வருது பாரு…” என நொந்துகொண்டான்.

“சாமி, இன்னும் எவ்வளோ நேரம் ஆகும் ஊர் வந்திருச்சே?…”

“இன்னும் பத்து நிமிஷம் தான் ஏழுமலை. ஊருக்கு பக்கத்துல கொஞ்சம் தள்ளி ஆறு ஓடும். அங்க தான் திருவிழா நடக்கும். இப்போ போயிடலாம்…” என சொல்லிவிட்டு ட்ரைவரிடம் வழியை கூறினார் பூசாரி.

நேசமணியிடம் திரும்பிய ஏழுமலை, “மச்சான், அங்க போயிட்டு சாமி கும்பிட்டு கொஞ்ச நேரத்துலையே கிளம்பிடனும். அப்போதான் நம்ம ஊருக்கு நேரத்துல போக முடியும். புரிஞ்சதா?…” என்று அவரிடம் சொன்னவர் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தார். இது அனைவருக்குமான தகவல் என அறிவித்தது அவரது பார்வை.

“ஏன் அத்தை, நீங்க உங்க தம்பிக்கிட்ட கொஞ்சம் ரெக்கமன்ட் பண்ணுங்களேன்? நாம எல்லோரும் ஒண்ணா இனி எப்போ இங்க வரப்போறோம். இந்த ஊரே பார்க்க எவ்வளோ அழகா இருக்கு. அப்போ இதை விட அங்க விசேஷமும் நல்லா களைகட்டிருக்குமே?…” என்று ஆர்வம் கொப்பளிக்க பேசியவளை புன்னகையோடு பார்த்து கொண்டிருந்தார் கோசலை. ஏழுமலையின் அக்கா.

“திருவிழா எனக்கு பிடிச்சிருந்தா இன்னைக்கு நல்லா அங்க சுத்திட்டு, ஆறு வேற இருக்குன்னு சொல்லிருக்காங்க சாமி. அதனால அங்க தண்ணில விளையாடிட்டு தான் வருவேன். அதுக்கு நீங்கதான் ஹெல்ப் பண்ணனும். இப்போவே சொல்லிட்டேன் அத்தை. உங்க தம்பியை நீங்கதான் சமாளிக்கணும். உங்க பேச்சை தான் கேட்பார் உங்க பாச மலர்…” என்றவளின் கன்னம் கிள்ளி,

“ஏய் வாயாடி நீ அமைதியா இருந்தாலே போதும் மத்ததை நான் பார்த்துப்பேன். ஆனா அத்தையை மாட்டிவிட்டுடாதே உன் அப்பாக்கிட்ட. அப்புறம் ருத்ரமூர்த்தியா மாறிடுவான். எல்லோருக்குமே சேர்த்து திருவிழாவை அவன் கொண்டாடிடுவான்…” எனவும் இருவருமே அதில் கலகலத்து சிரித்தனர்.

அவர்களது நகைப்பொலியில் திரும்பி பார்த்த விஜி, “சிரிப்ப பாரு குட்டிச்சாத்தானுக்கு பாவாடை சட்டை போட்ட மாதிரியே இருக்கு. சின்ன பாப்பாவாட்டம் இவ கேட்டான்னு இவளுக்கு போய் இந்த ட்ரெஸ் எடுத்திட்டு வந்திருக்காங்க கோசலை பெரியம்மா. இன்னும் அங்க என்னென்ன கூத்து பண்ணிவைக்க காத்திருக்காளோ? ஆண்டவன் தான் காப்பாத்தனும்…” என பெருமூச்சு விட்டவன் ஏழுமலையை பார்த்து,

“அய்யனாராட்டம் விரைப்பா இருப்பாரு. நான் என்ன அவளுக்கு பாடிகார்டா? அவர் பொண்ணு செய்றதுக்கெல்லாம் எனக்கும் சேர்த்து மண்டகப்படி குடுக்கறதே இவர் பொழைப்பா பார்க்கறது. அம்பு எய்தவளை விட்டுட்டு அப்பாவியான என்னைத்தான் படுத்திவைப்பாரு…” என பொருமிக்கொண்டே வந்தான்.

வயதில் நந்தினியே மூத்திருந்தாலும் உருவத்தில் விஜிக்கு அருகில் இருந்தால் அவனது வயதுக்கு மீறிய வளர்ச்சியில் நந்தினி சின்னவளாகவே தெரிவாள். அதனால் எங்கே சென்றாலும் விஜியை காவலுக்கு வைத்துவிடுவார் ஏழுமலை.

திருவிழா இடத்தை நெருங்கியதுமே வேனை அதனிடத்தில் நிறுத்திவிட்டு அனைவரும் இறங்கிவிட ட்ரைவர் வண்டிக்கு காவலாக அதிலேயே தங்கிவிட்டார்.

ஊருக்கு சற்று பின்னால் ஆற்றங்கரையும் தோப்பையும் ஒட்டி இருந்தது அந்த கோவில். ஜனத்திரள் மிகுந்த அந்த கூட்டத்தை ஆவலோடு வேடிக்கை பார்த்தாள் நந்தினி. அவளின் ஆர்வத்தை தடை செய்தது பூசாரியின் குரல்.

“இந்த ஊர்ல நிறைய கட்டுப்பாடுங்கள் இருக்கு ஏழுமலை. சாமியை மட்டும் தான் நம்புவாங்க. அவ்வளவா முன்னேறாத கிராம் இது. இங்க படிப்புன்னு சொன்னாலே அது அனுபவம் தான். இப்போ இருக்கிற பிள்ளைங்க தான் படிக்கவே ஆரம்பிச்சிருக்காங்க. அதனால கொஞ்சம் கவனமாவே இருங்க. நீங்க கிளம்பறதுக்குள்ள பூஜை முடிஞ்சிட்டா நானும் உங்களோடவே வந்திடறேன்…” என்றார் பூசாரி.

“இல்லைங்க சாமி, நாங்க சாமி கும்பிட்டுட்டு கிளம்பிடறோம்…” என்றவரை பார்த்த பூசாரி,

“இங்க உச்சிக்கால் பூஜை மத்தியானம் நடக்கும். ரொம்ப விசேஷமானது. இருந்து அந்நேரம் பூஜையை பார்த்துட்டு தேங்காய் பழம் வாங்கி சாமி கும்பிட்டுட்டு கிளம்புங்க. நல்லது நடக்கும்…” என்றவரிடம் மறுத்து பேச முடியாமல் சரி என்று ஒப்புதல் தெரிவித்தார்.

“அதுவரைக்கும் பொழுது போகலைனா சுத்திப்பாருங்க. ஆனா சீக்கிரமா சுத்தி பார்த்துட்டு பூஜைக்கு கோவிலுக்குள்ள வந்திருங்க. மூணு மணிநேரத்துல பூஜை ஆரம்பிச்சிடுவோம். அந்நேரம் கூட்டம் அதிகமாகிடும். அப்புறம் உள்ளே வரமுடியாம போய்டும். எல்லாம் முடியவும் இங்கேயே சாப்பிட்டு எல்லோருமே ஒண்ணாவே கிளம்பிடலாம். இங்க மத்த வேலைகளை என் புள்ளையாண்டான் பார்த்துப்பான்…” என்று கூறிவிட்டு கோவிலை நோக்கி சென்றுவிட்டார்.

“கேட்டேங்கள்ள? இப்போவே கூட்டமா இருக்கு, இன்னும் நேரமாகிட்டா அதிகமாகிடும் பேசாம இப்போவே கோவிலுக்குள்ள போய்டலாம். கூட்டத்துக்குள்ள யாரும் தவறிட்டா என்னால அலைய முடியாது…” என முடிவாக சொல்லவும் நந்தினி அதிர்ந்தே விட்டாள். கோசலையின் கையை சுரண்டிவிட்டு அவரை கெஞ்சுதலான பார்வையொன்றை பார்த்தாள் நந்தினி.

அந்த பார்வைக்கு மயங்கிய கோசலை, “ஏன்ப்பா ஏழுமலை, வந்த இடத்துல கூட சுத்திப்பாக்காம கோவிலுக்குள்ள போய் மூணுமணி நேரமா சும்மாவே உட்கார்ந்திருக்கனுமா?…” என்றவரை ஏறிட்ட ஏழுமலை,

“அதுக்கு என்னக்கா செய்ய சொல்ற? என்னால எங்கயுமே வர முடியாது. உடம்பு ரொம்ப அசதியா இருக்கு. நீங்க எல்லோருமே ஆசைபட்டதால தான் இங்க வந்தேன். சாமி கும்பிடத்தானே வந்தோம், அந்த வேலையை மட்டும் பார்ப்போம்…” என்று கறாராக முடிக்கவும் நந்தினியின் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

அவளின் வாட்டத்தை பார்க்க முடியாமல், “ஏங்க சின்ன பிள்ளைங்க ஆசை படுத்துங்க. போய்ட்டுதான் வரட்டுமே, நாம வேணும்னா கோவிலுக்குள்ள இருப்போம். அவளும் விஜியும் போய்ட்டு வரட்டுமே?…” என்றார் சந்திரா.

“என்னது, வயசுப்புள்ளையை தனியா இவனோட அனுப்புறதா? அதெல்லாம் சரிப்படாது…” என நேசமணி பங்குக்கு அவர்களை எங்கும் செல்லவிடாமல் தடுத்தார்.

“நான் வேணும்னா கூட போறேன் மணி…” என கோசலை கூறவும் உடன் பூரணியும் சேர்ந்துகொண்டார்.

“ஆமாங்க நானும் கூட இருக்கேன். பத்திரமா போய்ட்டு வந்திடறோம். இங்க பக்கத்துல தானே. மித்ராவுக்கு ஏதாவது வாங்கி தரலாம். அவளுக்குத்தான் திருவிழால வாங்க பிடிக்குமே…” என ஏழுமலை, நேசமணியிடம் தைரியம் சொல்லவும் அவர்கள் சம்மதித்தனர்.

“சரி…” என்று ஏழுமலை தலையாட்டியதை பார்த்ததுமே துள்ளி குதித்த நந்தினியை கடுமையாக பார்த்த ஏழுமலை “மித்ரா…” என்றார்.

“அத்தையை விட்டு எங்கயும் போகமாட்டேன்ப்பா. அவங்களை விட்டுட்டு ஓடமாட்டேன். அவங்க கூடவே இருப்பேன். எதுவுமே கேட்க மாட்டேன். பிடிவாதம் பிடிக்க மாட்டேன். அவங்க கூப்பிடவும் கூடவே வந்திருவேன்…” என்று மிக பவ்யமாக பேசியவளை நம்பாத பார்வை பார்த்தவர்,

“அக்கா ஞாபகம் இருக்கட்டும். இப்போ பட்டியல் போட்ட எதையுமே இவ செய்ய மாட்டா. என் தலை மறையவுமே ஆட ஆரம்பிச்சிடுவா. கவனமா பார்த்துக்கோ. பூரணி உனக்கும் தான்மா. விஜிக்கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன்…” என்றதும் சந்திராவுக்கு ஏதோ ஒன்று மனதை போட்டு பிசைந்தது.

ஏழுமலை, நேசமணி, சந்திராவை தவிர மன்ற நால்வரும் கோவிலை விட்டு நகர்ந்து செல்வதை பார்த்துக்கொண்டே நின்றார் சந்திரா.

“என்னாச்சு சந்திரா, உள்ள வா போவோம்…” என அவரை அழைத்து கொண்டு கோவிலுக்குள் நுழைந்தார் ஏழுமலை.

முன்னால் நடந்துகொண்டிருந்த நந்தினி சற்று தூரம் சென்றதும் மெல்ல திரும்பி பார்த்தாள். கோவில் வாசலில் ஏழுமலை இல்லை என அறிந்ததுமே ஒரு குதி அங்கேயே குதித்துவிட்டாள்.

“அத்தை அங்க வாங்க அங்க குடை இராட்டினம் இருக்கு சுத்தலாம்…” என கோசலையையும் இழுத்துக்கொண்டு ஓடினாள்.

விதியும் அவளை இழுத்துக்கொண்டு ஓடியது பிரசாத்தை நோக்கி.

ஒரு கடையையும் விடாமல் அனைத்திலும் நுழைந்து கொண்டு அவர்களது பொறுமைக்கு சோதனை வைத்தாள்.

“மித்து, நடந்து வரப்போறியா இல்லையா?…” என்ற விஜியின் மிரட்டலுக்கு கூட செவி சாய்க்காமல்,

“பூரணியத்தை உங்க பையன் கிட்ட சொல்லுங்க. கொஞ்ச நேரம் மிஸ்டர் ஏழுமலையோட அவதாரத்தை கழட்டி கடாச சொல்லுங்க. சும்மா அவரை போல ஆடர் போட்டுட்டே இருக்கிறது எனக்கு…” என பூரணியிடம் புகார் படித்தவள் அங்குமிங்குமாக ஓட ஆரம்பித்தாள்.

கூண்டை விட்டு விடுதலை கிடைத்தது போன்ற ஒரு உணர்வு நந்தினிக்கு. எங்கு போனாலும் தந்தையோட சென்று அவரோடே வருவாள். அங்கே நிற்காதே, இங்கே போகாதே என்று சங்கிலியிட்டு அழைத்துச்செல்லாத குறையாய் நந்தினியை ஒரு கைதியை போல கூட்டி செல்லுவார்.

அவரது அதீத கண்டிப்பாலேயே இவள் நறுங்கி விடக்கூடாதென மற்றவர்கள் அதிகமான செல்லம் கொடுத்தனர். அதுவே இப்போது அவளுக்கு வினையாக நின்றது. ஏழுமலை நந்தினியின் சிறகை சுருக்க சுருக்க அவள் வீறுகொண்டு பறக்க துடித்தாள்.

எங்கே சென்றாலும் பெண்பிள்ளையை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் கண்பார்வையை விட்டு அகலவிடமாட்டார் ஏழுமலை. அதுபோல வெளியே செல்வதை அறவே வெறுப்பவள் ஏழுமலை இல்லாத தனிமை கிடைத்துவிட்டால் நந்தினிக்குள் உற்சாகம் ஆர்ப்பரிக்கும். அது போன்ற தருணங்களில் யாராலும் அவளை அடக்கமுடியாமலும் ஒரு கட்டுக்குள் அடைக்கமுடியாமலும் போய்விடும்.

இப்போது அது போன்ற ஒரு சுதந்திரம் கிடைத்ததும் நந்தினிக்கு தலைகால் புரியாமல் போய்விட்டது. இந்த அளவுக்கதிகமான சந்தோஷமே அவளை பேராபத்தில் தள்ள நேரம் பார்த்தது.

அவளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பூரணியும் கோசலையும் தான் விழிபிதுங்கி நின்றனர்.

சொன்னபேச்சு கேட்காமல் இருந்தால் திரும்ப கோவிலுக்கு அழைத்துசென்று விடுவேன் என்ற விஜியின் மிரட்டல் கூட நந்தினியின் கண்ணீர் என்ற வலிமையான ஆயுதத்தால் தகர்ந்தது. எப்போதும் போல அவளே இதில் வெற்றியும் பெற்றாள்.

“ஐயோ கோவிலை விட்டு ரொம்ப தூரம் வந்துவிட்டோமோ? கால் வலிக்குது மித்ரா. கொஞ்ச நேரம் இங்க உட்கார்ந்துட்டு போகலாம்…”  என்றார் பூரணி ஒரு மரத்தின் நிழலில் வந்தமர்ந்து.

கிராமத்து திருவிழா என்பதால் அதற்கே உரித்தான மண்மணம் மாறாமல் சிறு சிறு வளையல் கடைகளும், பஞ்சுமிட்டாய் கடைகளும் இன்னும் பலதரப்பட்ட கடைகள் நிறைய முளைத்திருந்தது. 

அத்தனையும் பார்க்கவேண்டுமென்பதுதான் நந்தினியின் எண்ணம். ஆனால் நடக்கக்கூடிய விஷயமா?

அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு சற்று தள்ளி இருந்த கரும்புச்சாறு கடை நந்தினியின் கண் பார்வைக்குள் சிக்கியது.

“அத்தை எனக்கு தாகமா இருக்கு. குடிக்க கரும்புச்சாறு வேணும். வாங்கித்தாங்க…” என்று கேட்டதும் கோசலைக்கு மூலையில் ஏழுமலையின் எச்சரிக்கை குரல் சத்தம் எழுப்பியது.

“அக்கா அவ கேட்டான்னு எதையாவது வாங்கி குடுக்காத. அப்பறம் உடம்புக்கு முடியாம படுத்துக்குவா. அதனால எதுவுமே வாங்கி தராத…” என்ற அவரது எச்சரிக்கையையும் மீறி நந்தினியின் கொஞ்சலில் வாங்கிக் கொடுக்கத்தான் ஆசைப்பட்டது அவர்களின் மனம்.

“சரி விஜி நீ அவளை கூட்டிட்டு போய் கேட்கிறதை வாங்கி கொடு…” என்று பணத்தை கொடுத்தார் பூரணி.

“அம்மா, அவ இங்கயே இருக்கட்டும் நான் போய் வாங்கிட்டு வரேன். அங்க வந்தா ஒரு இடத்துல நிக்க மாட்டா…” என நந்தினியை தடுக்க நினைக்க,

“ஏண்டா விஜி, என்னை வேணாம்னு சொல்ற? நீயும் எங்கப்பா போல செய்யறியே? இதுக்கு நான் அவர் கூடவே இருந்திருக்கலாம்…” என மூக்கை உறிஞ்சவும்,

“வந்து தொலை. ஆனா எங்கயாச்சும் என்னை விட்டு நகர்ந்த உன்னை தொலைச்சிடுவேன்…” என்று மிரட்டியே அழைத்துச்சென்றான்.

அவனோடு பேசிக்கொண்டே அவன் கைகோர்த்து நடந்தவள் கடையை நெருங்கியதும் தான் அதை பார்த்தாள். அங்கே சற்று தூரத்தில் ஆறு சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. பார்த்ததுமே போகவேண்டுமென்ற ஆவலில் விஜியை அழைக்கவும்,

“மித்து, அம்மாவையும் பெரியம்மாவையும் விட்டுட்டு போகவேண்டாம். இரு இதை குடிச்சுட்டு அவங்களுக்கும் வாங்கிட்டு அதுக்கு பின்னால கேட்டுட்டு போகலாம். அவசரபடாத…”

“போடா, சரியான ரூல்ஸ் ரங்கசாமி. எப்போபாரு என்னை ஏதாவது சொல்லிட்டே இரு…”என சலித்துக்கொண்டு ஜூஸை வாங்கி பருகியவள் கோசலைக்கும், பூரணிக்கும் வாங்க சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த கடையில் பாப்கார்ன் வாங்க சென்றாள்.

ஜூஸை வாங்கிகொண்டு திரும்பியவனின் அருகில் நந்தினி இல்லாமல் போக ஒரு கணம் பதை பதைத்துவிட்டான். எங்கே போனாளோ என்று. பக்கத்து கடையில் அவளது குரல் கேட்டதும் தான் போன உயிர் திரும்பிற்று.

“மித்ரா…” என பல்லை கடித்துகொண்டு அழுத்தமாக அழைத்தான். அவனது கோவத்தை காற்றில் பறக்கவிட்டவள்,

“டேய், விஜி, இந்த ரெண்டு பாக்கெட்க்கு காசு குடுத்துட்டு இன்னும் ரெண்டு வாங்கிட்டு வா. நான் முன்னால போறேன்…” என்று அவன் கூப்பிட கூப்பிட காதில் வாங்காமல் சிட்டாக பறந்துவிட்டாள்.

கூட்டத்தில் துழாவியவன் அவள் தன் தாயை நோக்கிதான் செல்கிறாள் என அறிந்துகொண்டு இன்னும் இரண்டு பாக்கெட்டை வாங்கிகொண்டு பணத்தை கொடுத்துவிட்டு  நகர்ந்தான்.

குடுகுடுவென ஓடிவந்த நந்தினி யார் மீதோ மோதி கீழே தடுமாறி விழுந்தாள். கையில் வைத்திருந்த பாப்கார்ன் பாக்கெட்டை நழுவ விட்டதும் அந்த பாக்கெட்டையும் எடுத்து தனக்கும் எழும்ப கரம் நீட்டியவனை பார்த்து,

“சாரி அண்ணா. பார்க்காம மோதிட்டேன். ஹெல்ப் பண்ணினதுக்கு தேங்க்ஸ்…”

“பரவாயில்லை. நானும் தான் கவனிக்கலை….” என்றான் அவன்.

“அப்போ நான் சொன்ன சாரி வாபஸ். ஏனா நீங்களும் என்னை போல பராக்கு பார்த்துட்டே வந்து தானே இடிச்சிட்டீங்க. நீங்க கவனமா வந்திருந்தா நான் கீழே விழுந்திருக்க மாட்டேன் தானே? அப்போ நான் எதுக்கு தேவையில்லாமல் சாரி கேட்கணும்? தப்பு உங்க பக்கம் தான்…” என படபடவென கூறி அவனை திகைக்க வைத்துவிட்டு சென்றுவிட்டாள்.

“என்னடா மச்சான் இப்டி ஷாக் குடுத்துட்டு போகுது அந்த பொண்ணு?…” என கேட்டதும் தான் திகைப்பிலிருந்து விடுபட்டவன் மீண்டும் அவள் சென்ற திசையை பார்த்தான். பட்டுப்பாவாடை சட்டையில் இரட்டை ஜடை அங்குமிங்கும் துள்ளியபடி அவள் ஓடிய ஓட்டத்திற்கு ஏதுவாக ஆட நடக்காமல் பறந்துகொண்டிருந்தாள் நந்தினி.

“டேய் கணேஷ், அந்த பொண்ணுக்கு என்னா வாய் பாரேன்? சரியான குள்ளகத்தரிக்காக்கு பாவாடை சட்டை போட்டு விட்ருக்காங்க. கால் தரையில நிக்குதா பாரேன்…” என்று சிரித்துக்கொண்டே வந்தவழி திரும்பி நடந்தான் உதயா. உதய் பிரபாகரன்.

தன் கல்லூரி நண்பனின் அழைப்பின் பேரில் அவ்வூருக்கு வந்திருந்தான். அவனோடு விஷ்ணுவும்.

“பிரபா பிரசாத்தும் இங்க வந்திருக்கான். தெரியுமா?…” என உதயாவின் காதில் முணுமுணுத்தான் விஷ்ணு.

ஒரு நொடி புருவத்தை சுருக்கியவன் பின் இயல்பாக, “விடுடா, அவனுக்கு வேற வேலை இல்லை. நான் என்ன செய்யறேன். எங்க போறேன்னு நோட்டம் விட்டுட்டே இருக்கிறதை புல் டைம் ஜாப் மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டான். நமக்கு செலவே இல்லாம ஒரு பாடிகார்ட். அப்டி நெனச்சுப்போம்…” என்று கூறி விஷ்ணுவோடு சிரித்தான். 

பின் கணேஷின் புறம் திரும்பி, “கணேஷ் எங்க உன் தம்பியை காணோம்?…” என கேட்டவனிடம் கணேஷ் பதில் சொல்லும் முன் வந்து சேர்ந்தான் சிவா. கணேஷின் தம்பி.

“இந்தா வந்துட்டான்ல உன் லவ்வர். ஏண்டா சிவா நீ இந்த பொம்பளை புள்ளைங்களை எல்லாம் லவ் பண்ண மாட்டியா? காதலியை பார்த்தது போல பிரபாவை அப்படி பரவசமா பார்க்கற? என்னா ஒரு லவ் லுக் விடற. அவனா நீ?…” என சிவாவை வம்பிழுத்தான் விஷ்ணு.

“டேய் அடங்க மாட்டியா நீ? பேசாம இருடா…” என்று விஷ்ணுவை அடக்கிய உதயா சிவாவோடு பேசிக்கொண்டே வேறு புறம் நகர அவர்களை பின்தொடர்ந்து கணேஷும், விஷ்ணுவும் சென்றனர்.

சிவாவுக்கு உதயாவின் மேல் அப்படி ஒரு மரியாதை. சிவாவின் ரோல்மாடல் உதய் பிரபாகரன். அதனால் எப்போதுமே விஷ்ணு அவனை கேலி செய்துகொண்டே இருப்பான். அதற்கும் சளைக்காமல் புன்னகையை மட்டுமே பதிலளிப்பான் சிவா. உதயா என்ன சொன்னாலும் ஏனென்று கேட்காமல் அதை செய்து முடித்து விட்டுத்தான் மறு வேலையே.

இப்போதும் அவனின் படிப்பு சம்பந்தமாக பேசவே திருவிழாவை ஒட்டி வந்திருக்கிறான் உதயா.

விஜியை பின்னால் விட்டுவிட்டு நந்தினி மட்டும் வந்ததில் கலவரமடைந்த கோசலையும், பூரணியும்,

“மித்ரா என்னம்மா நீ மட்டும் வந்திருக்க? விஜி எங்க? உன்னை விட்டு எங்க போனான்?…” என கோவமாக கேள்விகளை அடுக்கினார்கள்.

Advertisement