Advertisement

NVV 14(2)

“ஒவ்வொரு நொடியும் என் மனசுக்குள்ளயே அணுஅணுவா சித்ரவதை அனுபவிச்சேன். நீயும் சரி எங்கப்பாவும் சரி என்னை பத்தி கொஞ்சமாவது யோசிச்சீங்களா? இல்லையே. என்னோட விருப்பம் இல்லாமலே, நான் சுயநினைவிலேயே இல்லாதப்போ என்னை உன் மனைவியாக்கின….”

“கல்யாணம் எப்டி வேணும்னானும் நடந்திருக்கட்டும். ஆனா கட்டின பொண்டாட்டியை கடைசி வரைக்கும் காப்பாத்தனும்னு தோணலையே உனக்கு. உடனே எங்கப்பா வந்து பேசினதும் காப்பாத்தத்தான் செஞ்சேன். உங்க பொண்ணு எப்போவும் உங்க பொண்ணுதான். உங்க விருப்பம் போல வேற நல்ல பையனா கட்டிவைங்கன்னு சொன்னியே? அதை சொல்ல நீ யாருடா? நான் எக்கேடு கெட்டு போனா உனக்கென்ன?…” என படபடவென பேசிவிட்டு சிறிது மூச்சுவாங்கியவள் மீண்டும்,

“உன்னை சொல்லி என்ன செய்ய? பெத்த அப்பாவே நான் என்ன நினைக்கிறேன், என்ன மனநிலையில இருக்கிறேன்னு என்னிடம் கேட்கலையே? என்னோட வாழ்க்கையை ஆளாளுக்கு அவங்கவங்க இஷ்டத்துக்கு காலில போட்டு மிதிச்சீங்களே. என்னோட மனசை யாருமே மதிக்கலையே…” என மீண்டும் நந்தினி அழுகையில் கரைய உதயா அப்போதுதான் வாயை திறந்தான்.

“அப்போ அன்னைக்கு நான் கூப்பிட்டிருந்தா வந்திருப்பியா?…” என்று வம்பாக கேட்டு மீண்டும் தன் தலைக்கு தானே தீ வைத்துகொண்டான்.

“கடமையை தட்டிகழிச்சுட்டு கேள்வி வேற கேட்பியா நீ? அருவியூர் விட்டு கிளம்பும் வரைக்கும் என்னால எதையுமே உணரவோ, யோசிக்கவோ முடியலை. எங்க வீட்டுக்கு போற வழியிலேயே உள்ள கோவில்ல எங்கப்பா நீ கட்டின தாலியை கழட்டி கேட்டாங்க பாரு. அப்போ தாண்டா எனக்கு உணர்வே வந்துச்சு. தாலியை கெட்டியா பிடிச்சிட்டு கால்ல விழுந்து அழுதேண்டா. அது சரியா தப்பான்னு கூட எனக்கு தெரியலை. நான் ஏன் அப்படி செய்தேன்னும் புரியலை. ஆனா அதை கழட்டி தூக்கி எறிய எனக்கு மனசு வரலை. அதை எங்கப்பா கேட்கலையே. தாலியை கழட்டி போட்டுட்டா ஊருக்கு போகலாம். இல்லைனா பொணமாத்தான் ஊருக்குள்ள போவேன்னு சொல்லிட்டாங்கடா…” என்று கதறவும் அதற்குமேல் தள்ளியிருக்காமல் அருகே சென்று எதிலிருந்தோ காப்பவன் போல இறுக்கி அணைத்துகொண்டான்.

அவள் பட்ட கஷ்டத்தை, அனுபவித்த வேதனையை கேட்க கூட தன்னால் முடியவில்லையே. அவளுக்கு எப்படி இருந்திருக்கும்? என்று மருகினான்.

“வேற வழியில்லாமல் நானும் கழட்டி கோசலை அத்தை கையில குடுத்தேன். அத்தை அதை வெளில போய் போடுறதுபோல போய்ட்டு திரும்ப ஊருக்கு வரவும் பத்ரமா என் கையில குடுத்துட்டாங்க. என்னோட இந்த செயலில் உன் மேல காதல்ன்னு துளியுமில்லை…”

“ஆமா நான் உன்னை எதிர்பார்த்தேன் தான். நீ என்னை கூட்டிட்டு போக எப்டியும் வருவன்னு நான் எதிர்பார்க்கத்தான் செஞ்சேன். ஏதோ ஒரு நம்பிக்கை. அதை மட்டுமே கையில பிடிச்சுட்டு காத்திருந்தேன்…” என்று மனைவியவள் கூற கூற அவனது மனதில் சந்தோஷமும் துக்கமும் ஒன்றாக உருவானது.

தன் மீது காதலில்லாவிட்டாலும் தன்னை இந்த அளவிற்கு தேடியது உதயாவிற்கு ஒரு பக்கம் மனத்தின் ஆழத்திலிருந்து கிளர்ந்தெழுந்த  மகிழ்ச்சியும்,  மறுபுறம் மிக ஆழமான ரண வேதனையும் மாறி மாறி படையெடுத்து இரண்டும் ஒன்றான சூறாவளியாய் ஒரே சேர தாக்கி அவனை அலைக்கழித்தது.

“ஏன் எங்க கோசலை அத்தை அவ்வளோ தூரம் உன் கிட்ட சொன்னாங்கல்ல?. அவங்க சொன்னதை காதிலேயே வாங்கிக்கலையே நீ? அவங்கதான் எனக்கு நீ திரும்பி வருவன்னு நம்பிக்கையை கொடுத்தாங்க. உனக்காக போராடினதால தான் எங்கப்பா கோசலை அத்தையை சொந்த அக்கான்னு கூட பார்க்காமல் வீட்டை விட்டு வெளியேற சொல்லிட்டாங்க. எல்லாமே உன்னாலதாண்டா…”

“சாரிடா. இந்த ஒரு வார்த்தையில நான் பண்ணினதை தப்பை சரிசெய்ய முடியாதுதான். ஆனா இனிமே அப்படி நடக்கவிடமாட்டேன் நான். நம்புடா. அதான் நமக்கு நல்லபடியா கல்யாணம் நடந்து எல்லோரும் ஒண்ணா சேர்ந்து சமாதானம் ஆகி நாமளும் சந்தோஷமா வாழ ஆரம்பிச்சுட்டோமே?…” என்று அறிவு ஜீவியாட்டம் விளக்கம் கொடுக்க இன்னும் சூடானாள் அவனின் மனையாள்.

“எப்டி? எப்டி? நம்ம கல்யாணம் நல்லபடியா நடந்துச்சா? எப்படிடா உன்னால இப்படிலாம் பேச முடியுது? எங்கப்பா கழுத்துல கத்திவைக்காத குறையா அத்தனை ஊர்க்காரங்க மத்தியில வச்சு என் சொந்த பந்தம் அத்தனை பேர் முன்னிலையிலும் எங்கப்பாவை தலை குனியவச்சு என் குடும்பத்தை அசிங்கபடுத்தி நடந்துச்சுடா…”

“அவங்க கிட்ட இருந்து கண்ணீரும், வேதனையும் தான் ஆசிர்வாதமா நமக்கு கிடச்சது….” என்று நந்தினி அந்த நாளின் தாக்கத்தில் கதற தன் செய்த காரியத்தில் தன் பக்க நியாயம் மட்டுமே பார்த்த உதயாவிற்கு அதன் மறுபக்கம் பயங்கரமானதாக இருந்தது.

“நீ வராம அந்த கல்யாணம் நடந்திருந்தா நான் நடைபிணமாதான் வாழ்ந்திருப்பேன் அவனோட. நீ வந்ததும் எனக்கு அவ்வளோ சந்தோஷம். ஆனா நீ பேசின பேச்சு. அப்பப்பா. இன்னிவரைக்கும் என்னால ஜீரணிக்க முடியலை. பொண்டாட்டி பொண்டாட்டின்னு அத்தனை தடவை அன்னைக்கு சொன்னியே. இப்படி திடீர்னு வந்த அக்கறை கொஞ்ச நாள் முன்னாலையே வந்திருந்தா என்னோட குடும்பம் அத்தனை பேர் கூடிய சபையில அசிங்கபட்டிருக்காதே…”

“எங்கப்பா பிடிவாதமா, சாதி சனம்னு நினைக்கிறவருதான். ஆனா நீயும் உன் வீட்டாளுங்களும் பேசி கரைச்சிருக்கலாமே அவரை. உன்னால் முடியாதா என்ன?…”

“அப்படி செய்திருந்தா அத்தனை பேர் முன்னாலயும் நானும் சேர்ந்து அவமானபட்டிருக்க மாட்டேன். ரெண்டு குடும்பத்துக்குள்ளயே பிரச்சனை பேசி சுமூகமா முடிஞ்சிருக்கும். சந்திக்கு வந்து என் குடும்பத்தை பார்த்து நாலுபேர் கைகொட்டி சிரிச்சிருக்க மாட்டாங்க…”

“கல்யாணம் ஆச்சுன்னு சொன்ன நீ எந்த மாதிரி சூழ்நிலையில நடந்துச்சுன்னு சொல்லலையே. அதையே அங்க ஆளாளுக்கு இஷ்டத்துக்கு கற்பனை பண்ணி என்னை பத்தி என்னவெல்லாம் பேசிருப்பாங்க?…”

வார்த்தைக்கு வார்த்தை என் குடும்பம் என் குடும்பம்னு நந்தினி சொல்லியது உதயாவை வாள் கொண்டு அறுத்தது. அப்போ இந்த வீட்டை அவளோட வீடா நினைக்கலையோ? அவள் குடும்பமா இதை ஏற்றுகொள்ளவில்லையோ என்ற அரும்பெரும் ஆராய்ச்சிக்கு போனவனை தன் குரலால் தடுத்தவள்,

“இங்கே உங்க வீட்ல ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணியிருந்தாங்களே. எவ்வளோ பெருமையா உனக்காக எல்லாம் செய்திருந்தாங்களே உன் குடும்பத்தார். எங்கே வீட்லயும் அப்படி செய்து ஊர் மெச்ச பெருமை படனும், சந்தோஷப்படனும்னு தானே நினைச்சிருப்பாங்க….” என்றவளுக்கு வரவேற்பின் போதும் அதற்கு வந்த நாளிலும் உதயா பேசினதனைத்தும் மறந்துவிட்டாளா? இல்லை அவளது ஆத்திரத்தில், கோவத்தில் அடிமனதில் மறைத்துவிட்டாளா?

“திடீர்னு தேடி வந்த நீ, அங்க அத்தனை பேரையும் வச்சு சண்டை போட்ட நீ, முன்னாலேயே வந்து எங்கப்பாவை சமாதனம் செய்து ரெண்டு வீடும் கலந்து பேசிருந்தா நாளைக்கு நான் எங்க ஊருக்கு போகும் போது அத்தனை பேர் முன்னாலும் காட்சிப்பொருளாக நிற்கவேண்டியது இருக்காதுல. என்னை பார்த்து எல்லோரும் என் முதுகுக்கு பின்னால தப்பா பேசுவாங்களே?…” என்று நாளை நடக்கபோவதையும் அறிந்தவளை போல சுட்டுவிரலை நீட்டி நீட்டி உதயாவை குற்றம் சாட்டிகொண்டிருந்தாள்.

அவளது வாதம் அனைத்துமே ஏற்புடையதாகவே இருந்தது. தவறு தன்  பக்கமும் இருப்பதை அறிந்து தலை கவிழ்ந்து மௌனம் காத்தான்.

“நீ வந்து என்னை கூப்பிட்டதும் பெரிய ஆபத்திலிருந்து காப்பாத்த வந்தவனாகத்தான் தெரிஞ்சது. இந்த வீட்டுக்கு வந்து உன்னோட குடும்பத்தை பார்த்ததும், அவங்க என்னை ஏத்துக்கிட்ட விதமும், வந்த அன்னைக்கே என்னை மருமகளா உணரவச்சு இந்த குடும்பத்தில ஒருத்தியா என்னை செர்த்துகிட்டதுல கொஞ்சம் இயல்பாக இருக்க முடிஞ்சது…”

“நீ என் கிட்ட காட்டின அன்பிலும், உன்னோட ஒவ்வொரு அசைவிலும் தான் கொஞ்சம் கொஞ்சமா என் மனசுல நீ பதிஞ்ச. உனக்காக தான் வேணி சித்தி செஞ்சது அத்தனையும் பொறுத்துக்கிட்டு அமைதியா போனேன். உங்ககிட்ட சொன்னா நீ வருத்தபடுவன்னு எனக்குள்ள நான் அதை மறைச்சேன். ஆனா நீ?…” என்றவள்,

“ஆனாலும் நீ என்னை முழுசா ஏத்துக்கலையோன்னு இப்போதான் தோணுது. அப்படி முழுமையா நினைச்சிருந்தா கெளரி பத்தியும், உன் தம்பி பத்தியும் என்கிட்டே சொல்லிருப்ப தானே?…” பிரசாத்தின் பேரைகூட சொல்ல விருப்பமில்லாதவள் உதயாவிடம் தம்பி என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து அவனை வலிக்கச்செய்தாள்.

“நம்ம குடுஉம்ப விஷயத்தை இவக்கிட்ட என்ன சொல்றதுன்னு நினைச்சுதானே சொல்லாம மறைக்கப்பார்த்த?…” என கூறி இன்னும் அமைதியாக பார்த்துகொண்டிருந்தவனை பிடித்து உலுக்கியவள்,

“இவ்வளோ பேசறேனே பிடிச்சுவச்ச பிள்ளையாராட்டம் அப்டியே உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்?. பதில் சொல்ல கூட துரைக்கு முடியாதோ?…” என்று நக்கலாக கேட்கவும் தான் சுதாரித்தான்.

இவ்வளோ நாள் ஊமச்சியாட்டம் இருந்தாளே, அவ்வளவும் என்னை அர்த்தராத்திரியில என் மேல அருவியாய் கொட்டோ கொட்டுன்னு கொட்டத்தானா?. எப்படி சமாளிக்க போறேன்? என முழித்தான்.

“இங்க பாருடா நீ என்னவேணும்னாலும் பேசிக்கோ. நான் செஞ்ச மிகப்பெரிய தப்பு அருவியூர் ல தாலிகட்டின கொஞ்ச நேரத்தில உன்னை என் மாமனாரோட விட்டுட்டு போனதும், அடுத்த பெரிய தப்பு மீனாட்சிபுரத்தில கல்யாணத்தனைக்கு உன்னை பெத்தவங்க கிட்டயும் மத்தவங்க கிட்டயும் நான் ரொம்ப மோசமா பேசினதும்தான். அதுக்காக நான் மன்னிப்புக்கேட்டுக்கறேன். அதை இப்போ மாத்த முடியாது…” எனும்போதே ஏதோ பேச ஆரம்பித்தவளை அவளின் இதழ்களை தன்  கரங்களால் அடைத்து சிறைசெய்தான்.

“நீ பேசும் போது குறுக்க பேசினேனா நான்? ம்ம் சொல்லு…” என்றவனது அதட்டலுக்கு பலன் இருந்ததோ என்னவோ அவனுக்கு கூறும் பதிலாக, “இல்லை” என்று தலையசைத்தாள்.

“அப்போ நான் பேசறதை குறுக்கிடாம கேளு. நான் செஞ்சது தப்புன்னு நான் ஒத்துக்கறேன். நீ வேதனை பட்டத்துக்கு பலமடங்கா இனிமே உன் வாழக்கையில நான் சந்தோஷத்தை மட்டுமே உனக்கு பரிசா கொடுப்பேன். ஆனா நான் உன் கழுத்துல தாலி கட்டினத்தை தப்புன்னு நீ எப்படி சொல்லாம்?…” என்று கேள்விகேட்டு கரத்தை நீக்கியதுதான் தாமதம்,

“ஏன் அன்னைக்கு என்னை தாலி கட்டிதான் காப்பாத்தனும்னு இல்லையே. நீ நினைச்சிருந்தா எப்படியாவது என்னை காப்பாத்தியிருக்கலாமே. அதை ஏன் செய்யலை?…” என்று படபடவென பொரிந்து முடிந்துபோன ஒன்றிற்கு இன்றைக்கு விளக்க உரை கேட்டுகொண்டிருந்தாள் அவனது ஆருயிர் மனைவி.

இவ்வளோ பிரச்சனைக்கு மத்தியிலும் குணாவை தவிர வேறு யாருக்காவது நல்ல மாப்பிள்ளை பார்த்து நந்தினியை கட்டிவைக்க சொல்லி ஏழுமலையிடம் தான் மன்றாடிய விஷயம் மட்டும் நந்தினிக்கு தெரிந்ததென்றால் இன்னும் விளைவுகள் மோசமாகிவிடுமே.

அப்படி அசம்பாவிதம் எதுவும் நிகழ்ந்து குணா விஷயத்தில் அன்றைக்கு நடந்தது எதுவும் நந்தினிக்கு தெரிந்துவிடக்கூடாது என்று கடவுளை வணங்கிகொண்டான். அவனது வேண்டுதலுக்கான பலன் எத்தனை நாட்களுக்கோ? இப்போது அதை நினைத்து வெட்கிகொண்டான்.

“உன் வாய்தாண்டா உன்னை டைவர்ஸ் வரைக்கும் இழுத்துட்டு போகபோகுது. வாயை வச்சிட்டு சும்மா இல்லாம ஓவரா சீன் போட்டேல அனுபவி…” என்று எக்காளமிட்டது அவனது இதயம். மனம் சொன்ன விஷயத்தில் அதன் சாரம்சத்தில் அதிர்ந்தவன் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு,

“ம்ம் நீ சொல்றது சரிதான். ஆனா எனக்கு ஏன் தோணலை? என்னோட மனைவியாக்கி தான் உன்னை காப்பாத்தனும்னு தான் என் மனசுல தோணிச்சு. ஏன்னு இப்போ கேட்டாலும் அதுக்கு பதிலில்லை. என்னை நீ அவ்வளோ பாதிச்சிருக்கன்னுதான் தோணுது…” என்றவன் அன்றைய நந்தினியை கண்முன் நிறுத்தியவன்,

“என்ன சொன்ன அன்னைக்கு என்னை பார்த்து? சாரி அண்ணா தெரியாம இடிச்சுட்டேன்னு சொன்ன தானே. மோதல்ல ஆரம்பிச்சா காதல்ல முடியும்னு சொல்லுவாங்கல. அது சரிதான் போல. என் மேல மோதின இந்த வாயாடியை பார்த்ததுமே நான் விழுந்துட்டேன்னு நினைக்கேன். என்ன செய்ய?…” என குறும்பான குரலில் கூறியவன்,

“நந்து உண்மையை சொல்லு என்னை கல்யாணம் செய்ததில, நீ எனக்கு மனைவியானதில உனக்கு அவ்வளோ வருத்தமா?…” என கேட்டவனுக்கு பதில் சொல்லமுடியாமல் தடுமாறினாள்.

இவன் நம்மை மடக்குறான். இது சரிப்படாது. என்று நினைத்துக்கொண்டே அவனை முடிந்தமட்டும் முறைத்தாள். அதை மட்டுமே இப்போது அவளால் செய்ய முடிந்தது.

“நாம சந்தித்த சூழ்நிலை வேணும்னா சரியில்லாமல் இருக்கலாம். ஆனா அந்த பிரசாத்தாலதான் நீ எனக்கு கிடச்ச. அதை என்னால மறுக்க முடியாதுடா. இதுவரைக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்கு காரணி அவனாகவே இருந்தாலும்…” என்று இழுக்க அதை சரியாக புரிந்துகொண்டவளுக்கோ காதில் விழுந்தது உவப்பானதாக இல்லை.

தன்னவனே தன்னை சொல்லிக்காட்டியத்தில் இருண்ட முகத்தோடு, “ஆமா அந்த சூழ்நிலையை உருவாக்கினது நான் தான். அங்க பிரச்சனையை கிளப்பினதும் நான்தான். இப்போ என்னனு சொல்ல சொல்றீங்க?…” என்று மீண்டும் அழுகை எட்டிப்பார்க்கும் குரலில் பேசியதும் தன்னையே நொந்துகொண்டான்.

பிரசாத்தில் ஆரம்பித்து நந்தினியின் கஷ்டங்களில் நுழைந்து அவள் மனதை அலைக்கழித்து வந்த புயலை உதயாவின் பழைய மலர்ந்த நினைவுகளால் கரையை கடக்கும் வைக்கும் போது மீண்டும் அதே பிரசாத்திடத்தில் வந்து நின்றதை கண்டவன் ஆயாசமடைந்தான்.

“தப்புதாண்டா. இனிமே அதை நியாபகபடுத்துவது போல பேசமாட்டேன். மன்னிச்சிடு. மன்னிச்சிடு. இப்போ தூங்கறியா?…” என்று சரணாகதி அடைய நந்தினியோ இன்னும் மௌனமாகவே இருந்தாள்.

“தூங்குடா. காலையில பேசிக்கலாம்…” எனவும், தன் இதழ் மலர்ந்து,

“இல்லை தூக்கம் வரலை…” என்று முணுமுணுப்பாக கூறினாள் அவனை பார்க்காமலே.

“ம்ம் ஓகே அப்போ பேசலாம்…” என்று கூறிவிட்டு முதுகிற்கு தலையணையை கொடுத்து கட்டிலில் கால் நீட்டி சாய்வாக அமர்ந்து நந்தினியை தன் நெஞ்சத்தில் சாய்த்துகொண்டான்.

அவனிடமிருந்து விலக நினைத்தவளை விடாம இறுக்கிகொண்டவன்,

“ப்ச், பேசாம அப்படியே இரு பொண்டாட்டி…” என்ற அதட்டலான குரலில் கொஞ்சம் அமைதியானாள்.

“ஆனாலும் என்னை நீ சொன்ன டா ரொம்ப ஸ்வீட். அப்டியே கூப்பிடு. ம்ம் இப்போ நான் கெளரில இருந்தே ஆரம்பிக்கிறேன்…” என்றவனை இடையிட்டு,

“வேண்டாம். எனக்கு எதுவும் கேட்கவேண்டிய தேவையுமில்லை, தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் இல்லை…” என்றாள் வெடுக்கென்று.

“ஆனா எனக்கிருக்கே, என்னோட மனைவிக்கிட்ட நான் எதையும் மறைக்கவேண்டாமென நினைக்கேன். அவளுக்காக பார்த்துதான் நான் மறைச்சேன். நீ கேட்டுதான் ஆகனும்…” என்று பிடிவாதமாக கூறியவன்,

“கெளரி என்னோட தங்கச்சிதான். என் கூடப்பிறந்த தங்கச்சிதான்…” என்று கூறவும் விடுக்கென எழுந்தவள் குழப்பமாக பார்த்தாள்.

“அப்படிலாம் அவசரப்பட்டு எழுந்துக்காத படு பேசாம காதுல விழுந்தா போதும்…” என கடிந்துகொண்டவன்,

“உண்மைதான்டா கெளரி என்னோட கூடப்பிறந்த தங்கை. என் தாய், உன் மாமியார் பாக்கியலட்சுமி வயிற்றில் பிறந்தவள்…” என்றான் உதயா.

Advertisement