Advertisement

நட்சத்திர விழிகள் – 6
6 மணிக்கு கண்விழித்தவன் குளித்து முடித்து கிளம்பி வந்தான். அசையாமல் படுத்திருந்த நந்தினியை கண்டு நிதானமாக அவளது முகவடிவை ஆராய்ந்தவன், “முதல் முதல்ல பார்த்தப்போ எப்படி இருந்தா?… தக்காளிக்கு வால் முளைச்சதாட்டம் ரெட்டை ஜடை போட்டுட்டு இருந்தவ. ம்ம் இவ்வளோ நாள்ல எவ்வளோ மாற்றம் இவ கிட்ட?…” என நினைத்தபடியே அவளை மெல்ல எழுப்பினான்.
அதற்கே, “அப்பா முழிச்சிட்டேன்!….” என பதட்டமாக அலறியடித்து எழுந்தவளை கண்டதும் பரிதாபமாக போயிற்று.
“ஹே, எதுக்கு இந்த அவசரம் நான் தான்!…” என்று ஆசுவாசப்படுத்தினான்.
“சாரிங்க அப்பான்னு நினச்சு……….” அவள் இழுத்த விதத்தில் சிரித்தவன்,
“சரியான பயந்தாங்கோலி!..” என அவளது தலையில் இரண்டு தட்டு தட்டி, “நீ போய் குளிச்சிட்டு வா, நான் கீழே இருக்கேன்!..” என கூறிவிட்டு அவளுக்கு தேவையானதை எடுத்துவைத்தவாறே,
“டேய் உதயா உனக்கு எல்லாமே உல்ட்டாவா நடக்குதுடா, இதையெல்லாம் உன் பொண்டாட்டி உனக்கு செய்யனும், ஹ்ம் நீ அவளுக்கு செய்யற? நாளைய வரலாறு உன்னை ரொம்ம்ம்ம்ப பெருமையா பேசும்டா?…” என தன்னையே மெச்சியவாறே செய்து முடித்தவன் கதவை தட்டும் ஓசை கேட்டதும்,
அதுவரைக்கும் அவன் செய்பவை அனைத்தையும் பார்த்துக்  கொண்டிருந்தவளிடம் திரும்பி, “காபி கொண்டு வந்திருப்பாங்க. நந்தினி நீ போய் கதைவை திறந்து வாங்கிட்டு வா!…” என சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்தான்.
உதவிப்பெண் காபி ட்ரேயோடு நிற்கவும் வாங்கிகொண்டு நன்றி செலுத்திவிட்டு உள்ளே வந்தாள்.
“போய் ப்ரெஷ் பண்ணிட்டு முகம் கழுவிட்டு வா!…”
சொன்னபடி செய்துவிட்டு வந்தவளிடம் முதலில் குடிக்க தண்ணீர் தந்தவன் குடித்து முடிக்கவும் காபி கப்பை குடுத்து ப்ரெட் ஆம்லேட் ப்ளேட்டையும் நகர்த்தினான்.
“இதையும்  சாப்ட்டுட்டே காபி குடி நல்லா இருக்கும்!…”
“ம்ம்!…”
“எதுக்கு முதல்ல தண்ணி குடுத்தேன்னு கேட்கமாட்டியா?…” என்றவன் அவள் கேட்கும் முன்னமே,
“எப்போவுமே காலையில் எழுந்ததும் மட்டுமில்லை சாப்பிடுவதற்கு முன்பும் கொஞ்சம் தண்ணீர் குடிக்கிறது நல்லது, அதுக்குத்தான்!..” என்றான்.
“ஓ!…” ஒற்றை வார்த்தையில் என்றவளை பார்த்தவன் இன்னும் தூக்கம் தெளியலை போல என நினைத்தான்.
“சரி சீக்கிரமா இதை முடிச்சுட்டு குளிச்சிட்டு கீழே வா!…” என்று கிளம்ப எத்தனிக்க,
“தனியா வரணுமா?…” இவ்வளோ பெரிய அறையில் தனியாக இருக்கவேண்டுமே என அஞ்சியபடி கேட்க,
“அதுக்குன்னு துணைக்கு ஆளையா அப்பாயின்ட் பண்ணமுடியும்?…” என்று  இடக்காக கேட்கவும் மௌனமானவளை எழுப்பி தன்னருகில் நிறுத்தியவன்,
“இங்க பாரு நந்து, ஒவ்வொரு நாளும் உனக்கு துணைக்கு நான் வந்துட்டே இருக்க முடியுமா? நீயே பழகிக்கோமா!…” என்றான்.
“எல்லா நாளும் இல்லை. இப்போ மட்டும் ப்ளீஸ்ங்க!…” என அவனை நிமிர்ந்து பார்த்து கெஞ்சியவளை கண்டு மனம் உல்லாசமாக கொஞ்சம் கலாட்டா செய்தால் என்ன என்ற எண்ணம் மேலோங்கியது.
“அப்படியா?… இருக்கனுமா?…” என மிக அருகில் நின்று உதயா கேட்க அவளோ அவனது நெருக்கத்தை உணராமல் கீழே தனியாக போக சங்கடப்பட்டு அவனை இருத்திவைக்க பார்த்தாள்.
உதயாவோ, “ம்ம்ம்!..” என்ற அவளது தலையாட்டலில் வசமாக சிக்கபோகிறாள் என நினைத்து,
“நல்லா யோசிச்சிக்கோ, அப்புறம் நான் நீ போக சொன்னாலும் போக மாட்டேன்!…” என வார்த்தையில் விஷமம் வழிய கூற அவனை யோசனையாக பார்த்தாள்.
“என்னடா இது, நான் துணைக்குத்தானே இருக்க சொன்னேன். இவங்க பார்வையும் பேச்சும் சரியில்லையே ஏதும் வில்லங்கம் இருக்குமோ?….” என நகத்தை கடித்தபடி சிந்தித்தநேரத்தில் அவளது இதழ்களிலிருந்த விரலை விடுவித்து அந்த கையை பற்றியவன் விரல்களை நீவி விட்டவாறே மீண்டும்,
“நிற்கட்டுமா? போகட்டுமா? …என ராகம் இழுத்தவனை பார்த்து அவனது நெருக்கத்தை உணர்ந்து அதிர்ந்து விலகினாள்.
“சரி நீங்க, நீங்க கிளம்புங்க!…” என்றாள் அவசரமாக.
“என்ன நந்துகுட்டி இப்டி சொல்லிட்ட உனக்கு தனியா கீழ வர பயமாச்சே!…” அவள் பாட்டை அவளுக்கே திருப்பி படித்தான்.
எதற்கு வம்பு என்று, “அதெல்லாம் வந்திடுவேன்!…”
“நம்பலாமா?..”
“ம்ம்!…” என்றாள் பலமாக தலையசைத்து இதுக்குமேலே கேட்காதே என்னும் பாவனையில்.
“ம்ம் சுதாரிச்சுட்ட, பார்த்துக்கலாம்!…” என்று கண்கள் சிரிக்க சொல்லிவிட்டு சென்றான்.
கீழே அவன் கண்ட காட்சி கடுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
“இல்லை இல்லை நான் தான் ஜெயிச்சேன்!…..” என்ற நாச்சியின் குரல் வீட்டையே அதிரவைத்தது.
“அதெல்லாம் இல்லை பாட்டி ஜெயிச்சது நானே நான் நான் மட்டுமே!…” என்றாள் கெளரி நாச்சிக்கு போட்டியாக கத்திக்கொண்டு.
“அடியே கெளரி கழுதை, அதான் நான் சொல்றேன்ல நான் தான் ஜெயிச்சேன்னு?…”
“அதெப்படி கிழவி நீ ஜெயிக்க முடியும்? நான் சொன்னது போல தான் அண்ணா அண்ணியை கூட்டிட்டு வந்தாங்க, அப்போ நான் தானே ஜெயிச்சேன்!…” என தன் சொல்தான் ஜெயித்தது என்ற இறுமாப்பில் கெளரி ஆட,
“இந்த சின்னபுள்ளைகிட்ட கூட நம்ம பேச்சு எடுபடமாட்டேங்குதே?..” என்று வெம்பிகொண்டிருந்தார் நாச்சி.
“இந்தா பாரு கிழவி நான் என்ன சொன்னேன்?…”
“அதையும் நீயே சொல்லு!…” என்றார் வெடுக்கென்று.
அதையெல்லாம் கண்டுகொள்ளாத கெளரி, “அண்ணா அந்த மண்டபத்துக்கு போனதுமே மதியண்ணா போன்ல நமக்கு தகவலையும் சொல்லி அவங்களை போட்டோ புடிச்சு எனக்கு அனுப்பிட்டாரு!…”
“அதுதான் எனக்கும் தெரியுமே?…” என்றார் நொடித்தபடி.
“அப்போ நான் என்ன சொன்னேன்? அண்ணா கண்டிப்பா அண்ணிக்கு மறுபடியும் தாலிகட்டி இங்க கூட்டிட்டு வந்திருவாருன்னு சொன்னேன்ல?….” என்றவள் நாச்சி ஏதோ சொல்ல வாயெடுக்க அவரை பேசவிடாமல்,
“ஆனா நீ தான் இல்லை இல்லை என் பேரன் ஏற்கனவே தாலி கட்டிட்டான். அதனால இங்க கூட்டிட்டு வந்து நம்ம முன்னால நம்ம பர்மிஷனோட மறுபடியும் கல்யாணம் பண்ணுவான்னு சொல்லி என் கிட்ட நூறு ரூபாய்க்கு பெட் கட்டின!…” என சீண்டவும்,
உதயாவுக்கோ பொறுமை எல்லை மீறியது. நம்மை வச்சு இதுக ரெண்டும் இப்படி பந்தாடி இருக்கிறாங்கலே என்று. 
“ஆமாடி இப்போ அதுக்கென்ன? ஆனா நான் சொன்னதுல பாதி ஜெயிச்சுட்டேன்ல?…”என்றார் இறுமாப்பாக.
“என்னத்தை ஜெயிச்ச?…” எனு கெளரி நொடிக்க,
“பொண்ணை இங்க கூட்டிட்டு வருவான்னு சொன்னேன்ல? அதான். அதனால நானும் பாதி ஜெயிச்சேன்னு நீ ஒத்துக்கோ!…” என்றதும் அவரை அல்பமாக பார்த்தபடி,
அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பாக்கியத்திடம் திரும்பி, “பாக்கிம்மா இத்தனை வருஷம் எப்படிதான் இது கிட்ட குப்பைகொட்டுன நீ?…” என அவரையும் வம்பிழுத்த நேரம்,
“அடிங்க, நான் அங்க நேத்து என்ன மாதிரி நிலைமையில இருந்தா, நீங்க என்னடான்னா என்னோட வாழ்க்கையை பெட்டுகட்டி ஏலம் விட்டு விளையாடிட்டு இருந்திருக்கீங்களே?…” என விரட்ட ஆரம்பிக்க,
கெளரியோ தலைதெறிக்க ஓடி ஒளிந்தாள். சிக்கியது நாச்சியே. அவரால் வேகமாக ஓடமுடியாமல் உதயாவிடம் இருந்து தப்பிக்க வழிதெரியாமல் தவித்தார்.
“ஆத்தீ, ராசா என்னை உட்டுடு என்னால ஓடமுடியலையே?… இந்த கெளரி கழுத என்னையவும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல….” என கௌரியை திட்டியவாறே சோபாவை சுத்திகொண்டு இருந்தார் அவனது கைக்கு அகப்படாமல் இருக்க பெரும் பிரயத்தனபட்டபடி.
“ஏய் கிழவி இன்னைக்கு உன் காதுல இருக்கிற தண்டட்டியை நான் கைய்யோட பிச்சுபோடாம விடவே மாட்டேன்!…” என்றான். அவனும் கிழவிக்கு ஆட்டம் காட்டிக்கொண்டே.
உதயா தலை தெரியவுமே பாக்கியம், “இன்னைக்கு காலையிலேயே ஆரம்பிச்சுட்டாங்க. அவன் வந்தது கூட தெரியாம தேவையில்லாம மாட்டிகிட்டாங்க….” என்று சிரித்தபடி உள்ளே சென்று மறைந்தார்.
தயாராகி கீழே இறங்கி வந்துகொண்டிருந்த நந்தினி உதயா, பாட்டியின் ஆட்டத்தை வாய்விட்டு சிரிக்கவும் உதயா அவளை பார்த்து முறைக்கவும் பாட்டி அந்த சமயத்தை பயன்படுத்தி எஸ்ஸ்ஸ் ஆகவும் சரியாக இருந்தது.
“உனக்கு சிரிப்பா இருக்கோ என் நிலைமை!…” என கேட்டு முறைக்க முயன்று அவளது சிரிப்பில் தானும் பங்கெடுத்து கொண்டான்.
“அம்மா!…” என அழைக்க பாக்கியம் வந்துவிட்டார். அவரது காலில் இருவரும் விழுந்து வணங்கி எழவும் நந்தினியின் சிகையை கோதியபடியே,
“நல்லா தூங்கினையா?…” என கேட்கவும் வேகமாக தலையசைத்தாள்.
அவளின் செய்கையில் ஒரு நிமிடம் திகைத்தாலும் சட்டென சிரித்துவிட்டார் பாக்கியம்.
“போய் பாட்டிகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு பூஜையறைக்கு வாங்க சாமிகும்பிடனும்!…” என சொல்லி சென்றார்.
நாச்சியோ கௌரியின் அறையில் அவளை தாளித்துகொண்டிருந்தார்.
“வயசான காலத்துல என்னால ஓடமுடியுதா?…இந்த பையன் என்னை அந்த விரட்டு விரட்டுறான், நீயும் என்னை விட்டுட்டு ஓடிவந்துட்ட? நல்ல வேலை என் பேத்தி வந்த்தால் நான் தப்பிச்சேன்!…” கெளரி அறையில் உரையாடிகொண்டிருந்தவரின் காதை பின்னாலிருந்து இழுத்து பிடித்தவன்,
“ஏன் கிழவி இந்த சேட்டை செய்யற?… முதல்ல எங்களை ஆசிர்வாதம் பண்ணு…..” என்றான் புன்னகையோடு.
இருவரும் ஆசிர்வாதம் வாங்கவும் சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது நாச்சிக்கு.
“என்ற சாமிகளா, நல்லா இருக்கணும்ய்யா நீங்க ரெண்டு பேரும்!…” என்றார் அளவில்லா பூரிப்பில்.
“வா அம்மா பூஜையறைக்கு கூப்பிட்டாங்க!…”
அனைவரும் பூஜையறைக்கு செல்லவும்,
“நீ விளக்கேத்துமா சாமிகும்பிட்டு சாப்பிடனும் மண்டபத்துல இருந்து அப்போவே டிபன் வந்திருச்சு!…” என்றார் பாக்கியம்.
சாமிகும்பிட்டு முடிக்கவும்,
“அம்மா அப்பா, அத்தை, மாமா எங்க காணோம்?…” என உட்புறம் பார்த்து கண்களை சுழற்றியபடி கேட்கவும்,
“மண்டபத்துல நம்ம சொந்தபந்தம் எல்லோரும் இருக்காங்கல்ல அவங்களை கவனிக்க நம்ம வீட்டாளுங்க யாராச்சு இருக்கிறதுதானே பிரபா மரியாதை!…” என்றார் பாக்கியம்.
“ஓ அப்போ கோவிலுக்கு அவங்களாம் அப்படியே வந்திருவாங்களா?…” என்றான்.
“அப்பா இப்போ வந்திருவாங்க, அண்ணனும் வேணியும் மத்தவங்களை கூட்டிட்டு கோவிலுக்கு வந்திருவாங்க!…”
“ஓ இந்த விஷ்ணுவையும் காணுமே?…”
“தோப்புக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போனான். அப்பாதான் அனுப்பினாரு. சாப்பிட வந்திருவான்!…” என உதயா கேட்க கேட்க அவனுக்கான தகவலை சொல்லியபடியே சாப்பாட்டு மேஜையில் பதார்த்தங்களை எடுத்து எடுக்கினார் கெளரி, நந்தினி உதவியுடன்.
“முதல்லையே சொல்லியிருந்தா நானும் போயிருப்பேனே?…. அங்க ஒரு முக்கியமான வேலை இருக்குது!…” என்றான்.
“என்ன வேலை பிரபா?…” என அனைவருக்கும் பரிமாற்ற போன  பாக்கியத்தை,
“அம்மாடி பாக்கியம் எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம். அவங்கவங்களுக்கு தேவையானதை நாமே எடுத்துவச்சுப்போம், வெரசா கிளம்பனுமில்ல?….” என்றார் நாச்சி.
“அதுவும் சரிதான் நீங்க உட்காருங்கம்மா!..” என அவரையும் அமரவைத்துவிட்டு,
“இன்னைக்கு தேங்காய் லோடு ஒன்னு போகுதும்மா, நீலகண்டன் கிட்ட விஷயத்தை சொல்லிட்டா அவன் பார்த்துப்பான்!…”
“விஷ்ணுக்கு போன் பண்ணி சொல்லிடு!…” எனவும் விஷ்ணு உள்ளே நுழைந்தான்.
“வாடா, வந்து கொட்டிக்கோ கோவிலுக்கு கிளம்பனும்!…” என்றபடி “இப்போ நீலகண்டனை இங்க வரசொல்லணுமே?…”என யோசித்தவாறே இருக்கவும்,
“அதெல்லாம் நான் சொல்லிட்டேன், லோடு எங்க போகணும், எப்போ அனுப்பனும், எவ்வளோ எண்ணிக்கை எல்லாத்தையும்!..” என உதயாவின் வயிற்றில் ஐஸ் வாட்டரை வார்த்தான் விஷ்ணு.
“ம்ம் அதுசரி, அம்மா நரேஷ்கிட்ட பேசணும், இங்க நடந்ததை சொல்லணுமே!…” எனவும்,
“அதெல்லாம் நாங்க சொல்லியாச்சு, சொல்லியாச்சு!…” என்றார் நாச்சி மிதப்பாக.
“கிழவி எப்போ? எப்படி?..” என ஆச்சர்யமாக கேட்க,
“அதுவா ஈஸ்காயூப்பூல சொன்னேன்!…” என்றார் குதூகலமாக.
அனைவரும் கோரஸாக, “என்னது..” என்றனர் புரியாமல் விழித்தபடியே.
“என்னாத்துக்கு இப்படி முழிக்கீங்க? நான் என்ன தப்பா சொல்லிட்டேன்?…” என விஷ்ணுவை பார்க்க,
அவனோ இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சாப்பாட்டை வெறி வெறியாக ஒரு கை பார்த்துகொண்டிருந்தான்.
“அதான்ய்யா லப்புட்டப்புல கூட பார்த்துட்டே பேசுவாங்களே? இதுகூட தெரியலை நீயெல்லாம் என்னத்தை படிச்சி கிழிச்சியோ?…” என்று தன்போக்கில் பேசிவிட்டு சாப்பிட்டு முடித்தார்.
“பாட்டி அதுக்கு பேரு லேப்டாப், ஸ்கைப்!…” என்ற கெளரியிடம்,
ஒரு நிமிடமே அசடு வழிந்தாலும் “அதைதானே நானும் சொன்னேன், காதும் கேட்காது ஒன்னும் புரியாது என்ன புள்ளைங்களோ?…” என பல்ப் குடுத்துவிட்டு இடத்தை காலி செய்தார்.
அவரது சமாளிப்பில் அனைவருக்கும் சிரித்து முடியவில்லை.
இதையெல்லாம் இந்த கிழவிக்கு சொல்லி குடுத்தவனை கண்டமாக்கிடும் கடுப்போடு பார்த்தால் அவனோ அதை கண்டுகொள்ளாமல் கருமமே கண்ணாக இருந்தான்.
“போதும்டா மதியத்துக்கும் கொஞ்சம் இடம் வை!…” என்றவனை,
“உன் வேலையை நீ பாரு!..” என திருப்பியடித்தான்.
“எல்லோரும் கிளம்பிட்டீங்களா?…” என்றபடி வந்த கிருஷ்ணமூர்த்தியிடம்,
“எல்லாம் கிளம்பிட்டோம் நீங்க சாப்ட்டீங்களாப்பா?..” என்ற கெளரியிடம், “எல்லாம் ஆச்சுடா, கோவிலுக்கு போகனுமில நீ தயாராகு போ!…” அவளை அனுப்பிவிட்டு உதயாவிடம்,
“பிரபா கோவிலுக்கு தேவையானதெல்லாம் அங்க போய் சேர்ந்திருச்சான்னு மாமாகிட்ட போன்ல கேட்டுக்கோப்பா!…”
“சரிங்கப்பா!…” என்று நகந்ததும்,
“என்னம்மா மருமகளே, வீடு பிடிச்சிருக்கா?….” என அன்போடு வினவியரிடம்,
“ம்ம் பிடிச்சிருக்குப்பா!..” என சொல்லிவிட்டு நாக்கை கடித்துகொண்டாள்.
யாரும் ஏதும் சொல்லிவிடுவாரோ என திருதிருவென விழித்தவளை கண்ட பாக்கியம், “நீ அப்பான்னே கூப்பிடு ஒன்னும் தப்பில்லை!…”
“அப்போ உங்களையும் அம்மான்னு கூப்பிடட்டுமா?…” ஆசையோடு கேட்க,
“ஓ, தாராளமா கூப்பிடேன்!…” என்றார் பாக்கியம் சந்தோஷமாக.
“அவ இன்னும் வீட்டை சுத்தியே பார்க்கலை, ஆனா பிடிச்சுருக்குன்னு சொல்லிட்டா?..” என பாக்கியம் சிரிக்கவும்,
“இல்லைங்கம்மா வீடு நல்லாத்தான் இருக்கு!…” என சர்டிபிகேட் குடுத்தவளிடம்,
“சரி சரி. சாயங்காலம் வந்து பார்ப்பியாம், என்ன?…” என கன்னத்தை வருடியவாறு சொல்லவும் நந்தினியும் ஆமோதிப்பாக தலையாட்டவும் அனைவரும் புன்னகைத்தனர்.
போன் பேசிவிட்டு வந்தவன் கண்ட இந்த காட்சியில் முறுவலுடன், “டேய் என்னடா நடக்குது இங்க?…” என்று விஷ்ணுவிடம் வினவினான்.
“ம்ம், உன்னை பெத்தவங்க உன் பொண்டாட்டியை மகளா தத்தெடுத்திட்டு இருக்காங்க. உன் டெப்பாஸிட் காலாவதியாகி நீ டம்மியாக்கபட்டாய். அதுதான் இங்க நடக்குது!…” என தான் சொல்வதை கேட்ட உதயா நொந்து நூடுல்ஸ் ஆவதை காண ஆவலோடு அவனை கடுப்பாக்கினான்.
உதயாவோ, “டெப்பாஸிட்டா?… அது எனக்கு இருந்ததுன்னா நீ நினைக்க?…” என்று விஷ்ணுவின் எண்ணத்தில் கல்லை போட்டான்.
நாச்சி, “கண்ணு பாக்கியத்தோட சேர்ந்து நின்னு புள்ளைகளை ஆசிர்வாதம் பண்ணுய்யா!…” எனவும் ஆசி பெற்றுவிட்டு அனைவரும் கிளம்பி கோவிலை வந்தடைந்தனர். குலதெய்வம் கோவில் ஊரைவிட்டு தள்ளி அந்த சிறு மலையின் மேல் இருந்தது.
இவர்களின் வருகையினை கண்டு சுதர்சனமும் மற்ற உறவினர்களும் வாயிலுக்கு வந்து அழைத்துசென்றனர்.
வேணியை கண்ட நந்தினி, “அம்மா..” என அழைத்தவாறே அருகில் செல்ல, சட்டென அவரோ விலகி சென்றுவிட்டார்.
“இவங்களுக்கு நம்மளை பிடிக்கலையோ?…” என்ற சிந்தனையோடு நின்றவளை நெருங்கிய கெளரி,
“ஏன் அண்ணி உங்களுக்கு பொங்கல் வைக்க தெரியுமா?… ஏன்னா? இன்னைக்கு இங்க நீங்கதான் பொங்கல் வைக்கணும்!…” என்ற தகவலை கூற,
“ஓ நல்லா வைப்பேனே, ஏன்?…”
“இல்லை தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன். வைங்க வைங்க…” என்றாள் நமுட்டு சிரிப்போடு.
“எங்க ஊர்லயும் திருவிழா நேரத்துல கோவில் வாசல்ல பொங்கல் வைப்பாங்க, எங்க வீட்டு சார்பா நான்தான் வைப்பேன்…” என்றாள் பெருமையும் சந்தோஷமுமாக.
“ஆமாம் இங்கயும் ரங்க ஊர்லயும் உண்டு அதை போல!…”என பேசியபடியே கோவில் வாசலை அடைந்தனர் இருவரும்.
“வாம்மா நல்லநேரம் முடியுறதுக்குள்ள சாமிக்கு விளக்கேத்தி ஆரத்தி காட்டி வணங்கிட்டு அதை எடுத்துட்டு போய் பொங்கல் பானைக்கு நெருப்பு மூட்டு தாயி!…” என்றார் பூசாரி.
அவர் சொன்னபடி ஆரத்தி காட்டியதும் பொங்கல் பானையருகே சென்றவளுக்கு மயக்கம் வராத குறைதான்.
அவ்வளோ பெரிய பொங்கல் பானையை இல்லை இல்லை பாத்திரத்தை அங்கே தான் பார்க்கிறாள்.
அரண்டு போய் கண்ணில் பீதியுடன் நின்றவளை பார்த்து வயிற்றை பிடித்துகொண்டு சிரித்தனர் உதயாவும், விஷ்ணுவும்.
“பயப்படாதமா, நீதான் உன் கைப்பட இதை செய்யணும். நாங்க தான் இருக்கோமே. உனக்கு உதவி செய்யறோம்!…” என தைரியமூட்டிய பாக்கியம்,
“நேரமாகுதும்மா சூடம் அணையிறதுக்குள்ள பத்தவச்சிடு !…” எனவும் அம்மனை வேண்டியபடியே புடவையை இழுத்து சொருகிக்கொண்டு மாமியாரின் சொல்படி செய்தாள்.
உலை கொதிக்க ஆரம்பித்ததும் எட்டிப்பார்க்க முடியாதபடிக்கு நெருப்பும் அனலும் பாத்திரத்தை நெருங்க விடாமல் செய்தது.
தீயை குறைத்து விட்டு உலையரிசியை போட சொன்ன பாக்கியம் அரிசியையும் பாசி பருப்பையும் அளவாக எடுத்துகொடுத்தார்.
அரிசியை நீரில் களைந்தவாறே கெளரியிடம், “ஏன் கெளரி இவ்வளோ பொங்கல் செய்யறாங்க?…” என தன் சந்தேகத்தை கேட்க,
“அண்ணி நம்ம சொந்தபந்தம் மட்டுமில்லை இன்னும் கொஞ்ச நேரத்துல ஊர்காரங்க மொத்தமும் பஸ்ல வந்திருவாங்க. எல்லோருக்குமே மதியம் இங்கதான் விருந்து. அதுக்கான சமையல் பின்னால நடக்குது….” என பின் பக்கத்தை காட்டியவள்,
“அதுமட்டுமில்லை இங்க பக்கத்துல மலைக்காட்டு மக்கள் நிறைய இருக்காங்க. அவங்களுக்கு எப்பவாவதுதான் நல்ல சாப்பாடு கிடைக்கும், அவங்களுக்காகவும் சேர்த்து செய்வாங்க!…”
“நாம மட்டுமில்லை இந்த கோவில் யாருக்கெல்லாம் குலதெய்வமா இருக்கோ அவங்க எல்லோருமேதான். நம்ம முன்னோர்கள் ஆரம்பிச்சுவச்ச பழக்கமிது. இது வம்சாவழியா தொடருது. அதனால சாப்பாடு இங்க எப்பவுமே அதிகமாகத்தான் செய்வாங்க!…” என்று முழுமூச்சாக சொல்லியவளை பிரமிப்புடன் பார்த்தாள் நந்தினி.
“என்ன அண்ணி இதுக்கே இப்டியா, அங்க அரிசி கொண்டுபோலாம் வாங்க!…” என்றாள் அரிசி களைந்த பாத்திரத்தை தானும் ஒரு கைபிடித்து அவளுக்கு உதவியவாறே.
“தீயை குறைச்சிட்டு அரிசியை உன் கையாள எடுத்து பாத்திரத்துல போடுமா!…” என்றார் பாக்கியம்.
பெரிய அடுப்பாகையால் தன் பக்கம் இருந்த தீயை குறைத்தாலும் மளமளவென தீ இன்னும் கொழுந்துவிட்டு எறிந்தவாறே இருந்தது.
“அம்மா நானும் நீங்க சொன்னதுபோல செய்தேன். ஆனாலும் தீ குறையவே இல்லையே?…” என தவறு செய்துவிட்ட குழந்தையென நின்றவளை பார்த்து கனிவோடு, “இரு நான் பார்க்கறேன்!…” என எதிர்பக்கம் வந்தவர் வேணியின் செயலை பார்த்து அதிர்ந்தார்.
“வேணி என்ன பண்ணிட்டு இருக்க?…” என்றவரது குரலில் சிறிது கடுமை எட்டிபார்த்ததோ?
“என்னங்கண்ணி, அடுப்பை பார்த்திட்டு இருக்கேன்!…” என்றார் ஒன்றும் அறியாதவர் போல.
“உலை கொதிச்சிருச்சு, அரிசியை போடனும். அதனால தீயை குறைக்கணும்னு அப்போவே உன் கிட்ட சொன்னேன்ல, இன்னமும் இப்டி தீ போட்டுட்டே இருந்தா என்ன அர்த்தம்?….” என்றார் பாக்கியம் லேசாக எரிச்சல் எட்டிபார்க்கும் குரலில்,
வேண்டுமென்றே பதறுவது போல நடித்தவர், “ஐயோ நீங்க சொன்னதை நான் சரியா கவனிக்கலையே? இதோ குறைக்கிறேன்!…” என்றவரை தடுத்து,
“நான் பார்த்துக்கறேன், நீ போய் சாமிக்கு எலுமிச்சை மாலை கோர்த்தாச்சான்னு பாரு!…” என அங்கிருந்து அனுப்பிவிட்டு தீயை குறைத்தார்.
நெருப்பு ஜ்வாலை பாத்திரத்தை நெருங்கும் அளவிற்கு மட்டுபட்டாலும் அனல் இருக்கத்தான் செய்தது.
அதை நெருங்க முடியாமல் இருந்தாலும் சமாளித்து அம்மனை வேண்டியபடி  இரு கைகளாலும் அரிசியை அள்ளி பாத்திரத்தில் மூன்றுமுறை போட்டதும்,
“போதும் நீ வாம்மா!..” என நந்தினியை அழைத்து விட்டு,
“பிரபா இந்த பாத்திரத்தில் மிச்சம் இருக்கிற அரிசியை நீயும்  விஷ்ணுவும் சேர்ந்து மொத்தமா போட்டு அடிபிடிக்காம பார்த்துகோங்க!…” என சொல்லிவிட்டு,
அங்கிருந்த பெரிய பெண்மணியிடம், “நீங்க சொன்னது போலவே செய்துட்டேன் அத்தம்மா. வேற என்ன செய்யனும்?..” என ஆலோசனை கேட்டார்.
அவர்தான் வேணியின் வேலையை பாக்கியத்திடம் சுட்டிக்காட்டி அதோடு வேணியை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கூறியது. வேணியின்  மேல் எதற்கும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும் என பாக்கியத்திடம் எச்சரிக்கையும் செய்தவர்.
அத்தையம்மாவோ, “வேறென்ன பாக்கியா, அரிசி வேகவும் நெருப்பை  ஏற்றாமல் அணைத்து விட்டு அந்த சூட்டிலேயே செதுக்கிய வெல்லம், தேங்காய்ப்பூ, பொடித்த ஏலக்காய்த்தூள், வறுத்த பழம், முந்திரி எல்லாம் சேர்த்து அந்த பாத்திரத்தில போட்டு உன் மருமவ கையால லேசா கிளற சொல்லிட்டு அந்த கரண்டியை வாங்கி பசங்க கிட்ட குடுத்து நல்லா கிளறிவிட்டா போதும் கீழே இறக்கினதும் நெய்யை விடவேண்டியதுதான்!…” என்றார்.
“ஹப்பா!…” என தன்னையறியாமல் பெருமூச்சொன்றை  வெளியேற்றியவளை கண்டு அங்கிருந்த பெண்மணிகள் அனைவரும் சிரித்தனர்.
வெட்கத்தோடு அந்த பெண்மணியின் பின்னால் ஒளிந்தபடி நின்றுகொண்டவளை பலமாக சிரித்தபடி இழுத்து முன்னால் நிறுத்திய அந்த ஆச்சி, “நீ எங்க வீட்டு குலசாமி தாயி உன்னை வெசனபட விட்டுடுவோமா?…” தன்னோடு அணைத்துகொண்டார்.
அனைவருமே அதை ஆமோதிக்கும் வகையில் உதட்டில் நிரந்தர புன்னகையோடு பார்த்தபடியே இருந்தனர்.
எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவாறு இருந்த உதயா, விஷ்ணுவை அழைத்து பொறுப்பை ஒப்படைத்த அத்தையம்மா பாக்கியம், நந்தினியை அழைத்துக்கொண்டு நிழலில் போய் அமர்ந்துவிட்டார்.
“ஏண்டா விஷ்ணு, வீணா போனவனே?…” என பொங்கலை கிண்டியபடியே அழைத்தான் உதயா.
“சொல்லித்தொலைடா வீணா போகவச்சவனே?…” என்று இன்னொரு கரண்டியோடு கடுப்பாக ரிவிட் கொடுத்தபடி.
“இங்க நாம தானே மாங்கு மாங்குன்னு பொங்கலை கிண்டிட்டு இருக்கோம். ஆனா அங்க பொங்கல் வச்சது யாருன்னு கேட்டு அந்த பட்டதை நமக்கா குடுப்பாங்க?…” என்று உதயா இதை தன் முக்கிய சந்தேகமாக கேட்கவும்,
“ஏன் உனக்கு சமையல் சக்கரவர்த்தி என்ற பட்டம் வேணுமாக்கும்?….” அடிக்கும் அனலுக்கு சரியாக வார்த்தையிலும் அனலை கொட்டி,
“ஆமா குடுத்துட்டா மட்டும், பாரேன். எல்லோரும் நம்மை கண்டுக்காம கழட்டி விட்டுட்டாங்களே?…” வெயிலில் இப்படி காயவிட்டுட்டாங்களே என்ற சலிப்போடு.
“அதானே?…” என்றவன், “இப்போ என்னடா மச்சான் எல்லாம் நம்ம தங்கச்சிக்காக தானே?…” என்று பல்டியடிக்க,
“என்னது நம்ம தங்கச்சியா, கொல்லபோறேன் உன்னை? நான் தாலிகட்டினவன் தெரியுமில்ல?…”
“ப்ச். இதையே எத்தனைவாட்டி சொல்லுவா. சரியான இம்சைடா நீ, என் தங்கச்சி போதுமா?…”
“இவ்வளோ நேரமும் பொலம்பிட்டு இப்போ என்னத்துக்கு இப்படி தங்கச்சி பாசம் வருதாம், திடீர்னு தங்கச்சி பக்கம் தாவிட்ட?…” எனவும் லிட்டர் கணக்கில் வழிந்தவனை கண்டு கரண்டியாலே நாலு அப்பு அப்பினா என்னவென நினைத்தபடி பொங்கலை பதமாக கிளறி முடித்தான். வெல்லம் கட்டி இல்லாமல் நன்றாக கலந்து விட்டாதா என சரிபார்த்தபடி.
ஒருவழியாக பொங்கல் வைத்து முடித்து படையலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகின.
அனைவரின் மத்தியில் அமர்ந்து அளவளாவிகொண்டிருந்த நந்தினியையே பார்த்தபடியிருந்தார் வேணி. முதல்நாள் மாலை ரிஷப்ஷன் கிளம்புகையில் பார்த்த அதே அக்னிபார்வையோடு. பார்வையிலேயே நந்தினியை எரித்துவிட்டால் என்னவென்ற துவேஷமான பார்வை.

Advertisement