Advertisement

நட்சத்திர விழிகள் – 4
மண்டபத்தின் வாயிலுக்கு வந்த உறவினர்கள் கைகளில் பூச்செண்டோடு ஊர்வல காரிலிருந்து இறங்கிய மணமக்களை வரவேற்த்தனர்.
மண்டபத்தை பார்த்தவளின் மனதில் துக்கபந்தொன்று  எழுந்து தொண்டையடைக்க கரையுடைத்த கண்ணீருக்கு அணைபோட முடியாமல் அரற்றினாள்.
அவளது நிலையறிந்தோ உதயா, “நீங்க எல்லோரும் முன்னால போங்க நாங்க இதோ வந்திடறோம்!…” என அனைவரையும் அனுப்பிவிட்டு அவள் புறம் திரும்பினான்.
சற்று ஒதுக்கமாக அழைத்து சென்றவன், “என்னாச்சு?…” என வினவியும் பதிலில்லை. அவனை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை.
இது வேலைக்காகதென்று முகத்தை தானே நிமிர்த்தியவன் அவளது கண்ணீரை கண்டு பதறிவிட்டான்.
அவனையறியாமல் அவளை தன் புறம் திருப்பி பதட்டத்துடன், “ஹே என்னடா?…. ஏன் அழற?….. என்னாச்சு உனக்கு?…” என்று இரு கைகளையும் அவளது கன்னத்தில் வைத்து முகத்தை தாங்கியவாறு கேட்க,
அவளோ, “என்னோட அப்பா?…. அம்மா? எனக்கு எனக்கு எல்லோரையும் பார்க்கணும் போல இருக்குதே?…” “அழ அழ வருது!…” என சொல்லியபடி கதறியவளை இழுத்து மென்மையாக அணைத்துகொண்டான். எவ்வளவு நேரம் சென்றதோ?
“சரிடா, அழாதே உன்னை தேடி ம்ஹூம் நம்ம தேடி நிச்சயம் வருவாங்க!…” என்றவனுக்கு நம்ப இயலாத பார்வையை பதிலாக கொடுத்தாள்.
“நான் நிஜமாதான் சொல்றேன், கண்டிப்பா வருவாங்க!..” என்றவன் அவளை மீட்டுக்க 
“இங்க பாரு நந்துக்குட்டி இதுக்கு மேல அழுதா மேக்கப் லாம் கரைஞ்சு போய்டும். அப்புறம் மண்டபத்துக்குள்ள நீ அடியெடுத்து வைக்கவுமே உன்னை பார்த்து பயத்துல ஆளாளுக்கு அலறியடிச்சு ஓடிடுவாங்க!…” என வம்பிளுத்தவன் கெளரிக்கு போன் செய்து டச்சப் செய்ய தேவையானதை எடுத்துவருமாறு கூறினான்.
கெளரியும் சூழ்நிலையை புரிந்துகொண்டது போல நந்தினியை கலகலப்பாக்கும் பொருட்டு முகத்தை திருத்தியவாறே, “என்ன அண்ணி மேக்கப் பத்தலைனா வீட்லயே சொல்லியிருக்கலாமே? இங்க வந்து உள்ள வரமாட்டேன்னு அடம்பிடிச்சுட்டா இருப்பீங்க?…” என கேலி செய்ய லேசான வெட்கம் எட்டிப்பார்க்க அவளிடம் சிணுங்கினாள். கௌரியின் தலையில் கொட்டு வைத்தவன், “போதும் வாலு, நீ போ நான் கூட்டிட்டு வரேன்!…” என அவளை அனுப்பிவிட்டு தோளில் கைபோட்டவாறே உள்ளே அழைத்துசென்றான்.
அவனது மனசாட்சியோ கண்ணுக்கு முன்னால் எட்டி பார்த்து, “டேய் நீ என்னடா பண்ற?..” என்றது.
“நான் என்ன பண்ணினேன் ஒண்ணுமே இல்லையே?…” எனவும்,
“நீ என்ன பண்ணின்னு நான் தான் பார்த்துட்டுதானே இருந்தேன்!…”
“ப்ச், இப்போ என்ன அதான் பார்த்துட்டல்ல அப்புறம் என்னவாம்?…” என்றான் சலிப்போடு.
“டேய் நல்லவனே, அந்த புள்ளைய கைய புடிக்கிற? கண்ணீரை துடைக்கிற? இதுதான் சாக்குன்னு அணைச்சுக்க வேற செய்ற?…” என்றது.
“ஆமா அதுக்கு இப்போ என்ன?, பாவம் பெத்தவங்களை நினச்சு அழுதா, அதான் ஆறுதல் சொன்னேன், அவ்வளோதான்!…”
“என்னது அவ்வளோதானா? என்ன நினச்சு அந்த புள்ளைய கூட்டியாந்த நீ? இப்போ என்ன பண்ணிட்டு இருக்க? பாவம்டா, ஆச காட்டி மோசம் செஞ்சுடாத. நல்லா யோசி!….” என்று சொல்லிமுடிக்கவும்,
“உன்னை!….” கடுப்பேற்றிய பிடித்து மனசாட்சியை கையகப்படுத்தி காவலில் வைத்தான்.
ஓரளவு தன் எண்ணம் பிடிபட்டாலும்  முழுதாக அதை உணர முடியாமல் குழுமியிருந்தவர்களின் கூட்டம் கூடி சுற்றிவளைத்தது இருவரையும்.
அனைவரின் பார்வையும் நந்தினியை மொய்ப்பதுபோல தோன்ற இன்னும் உதயாவை நெருங்கியபடியே நடந்து வந்தாள்.
அவர்களின் நெருக்கம் நாச்சிக்கு அளப்பறியா ஆனந்தத்தை உண்டு பண்ணியது.
“பார்வையை பாரு புள்ளைகளை இப்படியா பார்த்துவைக்கிறது? வச்சகண்ணு வாங்காம பார்க்குற இந்த கொள்ளிக்கண்ணை எல்லாம் நோண்டி குப்பையில போடனும்!…” என வசவுமழை பொழிந்தபடி பொருமி தள்ளினார்.
அவரது பொருமலை கேட்ட கௌரி, “ஏன் கிழவி எல்லோரும் பார்க்கிறதுக்காகதானே இந்த வரவேற்பே? அப்புறம் ஏன் இப்டி தாளிக்கிற? வாயை மூடிட்டு பேசாம இரு இல்லைனா அண்ணா ஆடிரும். அம்பூட்டுத்தான் சொல்லிட்டேன்!….” என அடக்கிவைத்துவிட்டு மேடையை நோக்கி சென்றாள்.
துள்ளிக்குதித்து சென்றுகொண்டிருந்தவளை, “கெள!…” என்ற அழைப்பு தடுத்து நிறுத்தியது. அந்த குரலில் எரிச்சலோடு திரும்பியவள், “எத்தனை தடவை சொல்றது உங்களுக்கு என்னை அப்டி கூப்பிடாதீங்கன்னு?…” என்றாள் கோவத்தில் செந்தணலாக ஜொலித்த முகத்தோடு.
“சரி அப்போ சவுரின்னு கூப்பிடறேன் அதுதான் எனக்கு சவுகரியமா இருக்கு, உனக்கு ஓகேன்னா சொல்லு!…” என்று சீண்டினான் விஷ்ணு உதயாவின் நெருங்கிய தோழனும் அவன் நடத்தும் கார்மெண்ட்ஸ் தொழிலில் பாட்னருமான விஷ்ணுவரதன்.
“வேணாம் என்னை அவசரமா திட்டவச்சிடாதீங்க சொல்லிட்டேன்!…”
“நீ என்னை நிதானமாக கூட திட்டேன் எனக்கு வேலைஎதுவுமே இல்லை. பொழுதும் போகலை. வா அப்டி ஓரமா உட்கார்ந்து நீ திட்டுறதை கேட்கவாச்சும் செய்வேன்!…” என வம்பு செய்ய,
பதிலுக்கு பதில் பேசுபவனை ஒன்றும் செய்ய முடியாமல் காலை உதைத்தவாறு தையதக்கா தையதக்காவென கோவத்தோடு சென்றவளை பார்க்க பார்க்க பள்ளி சிறுமியின் பாவனைகள் நினைவுக்கு வந்து சிரிப்பை உண்டாக்கின. சிரிப்போடே மற்றவர்களை கவனிக்க சென்றவனது இதழ்களில் புன்னைகை மட்டும் நிரந்தரமாக தங்கிகொண்டது.
விஷ்ணுவிற்கு கெளரியை வம்பிளுப்பதென்றால் அல்வா சாப்பிடுவது போல. அவ்வளோ பிடித்தம். அவனை பொறுத்தவரை அவள் இன்னமும் பள்ளிச்சிறுமியே.
உதயா, நந்தினி இருவரும் அனைவருக்கும் கைகூப்பி நமஸ்காரம் தெரிவித்துவிட்டு அமரவும் பரிசுபொருட்களுடன் உறவினர்கள் ஒவ்வொருவராய் நெருங்கவும் சரியாக இருந்தது.
அவர்களை கண்டு மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று கொண்டனர் இருவருமே. உதயா அவளுக்கு ஒவ்வொருத்தரையும் அறிமுகபடுத்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துகொண்டுமே இருந்ததில் புன்னகை மாறா முகத்தோடு ஓரிரண்டு வார்த்தைகளையும் பேசினாள். அதிலேயே மிகவும் சோர்வாக உணர்ந்தாள் நந்தினி. காலையிலிருந்து அலைச்சல் அதனால் உண்டான அசதி என அனைத்தும் வரிசையாக அணிவகுத்து நின்றன.
அவளையும் மீறி களைப்பு முகத்தில் தெரிய, “இன்னும் கொஞ்சம் தாண்டா பொறுமையா இரு, என்ன?…” மென்குரலில் சொன்னவனை கண்டு புன்னகைத்து தலையசைத்தாள்.
“தட்ஸ் குட்!…” என்று சொல்லிவிட்டு தன்னை நெருங்கிய தம்பதியினரை முகம்நிறைய சிரிப்போடு வரவேற்றான்.
“வாங்க அத்தை, வாங்க மாமா!…” என்று
“நந்தினி இவங்க என்னோட அத்தை. அப்பாக்கு கூடபிறந்த தங்கை பேர் கிருஷ்ணவேணி!…” என அறிமுகபடுத்தபட்டவரை நோக்கி இருகரம் கூப்பினாள் நந்தினி.
அவரோ பதிலுக்கு தலையை கூட அசைக்காமல் வெறுமையான பார்வையோடே நந்தினியை நோக்கினார்.
அந்த கண்களில் எந்தவிதமான உணர்வுமில்லாமல் ஸ்நேக பாவம் கூட துடைத்தெறிந்ததுபோல காட்சியளித்தது. இவங்க ஏன் இப்படி பார்க்கறாங்க என நினைத்துகொண்டே அவரது பார்வையை தவிர்த்து அவரருகில் இருந்த மனிதரை காணவும், “இவங்க சுதர்சனம் மாமா, அத்தையோட கணவர், அதுமட்டுமில்லை அம்மாவின் அண்ணனும்!…” என்றான்.
அவர் எப்படியோ என்று நினைக்கவேண்டிய அவசியமே இல்லாமல் பரிவோடு பார்த்தவரை கண்டதும் தன் தந்தையின் முகமே மனதில் சட்டென நிழலாடியது. கைகூப்பியதும், “நல்லா இருடாம்மா. நான் உனக்கு அப்பா முறையாகனும், புரியுதா? நீ என்னை சித்தப்பா இல்லை பெரியப்பா எப்டி வேணும்னாலும் கூப்பிடலாம்!..” என்று அன்பு கட்டளையிட்டார்.  
உடனடியாக தலையாட்டியவளை கண்டு புன் சிரிப்போடு, “அம்மாடி, இந்த படவா ஏதாச்சும் கோக்குமாக்குத்தனம் பண்ணினா என் கிட்ட சொல்லிடு. லெப்ட் & ரைட் வாங்கிடலாம்!…” என கூட்டணி போட்டவரின் பேச்சில் இயல்பாக சிரித்தாள்.
அந்நேரம், “அண்ணி!…” பட்டாம்பூச்சிக்கு கால் முளைத்ததுபோல வந்து நின்ற கெளரியை அணைத்தவாறே, “என் பொண்ணு கெளரி!..” என சுதர்சனம் நந்தினியிடம் அறிமுகபடுத்தவும் அதிர்ச்சியோடு அவள் உதயாவை நோக்கினாள் என்றால் வேணியோ ஆத்திரமாக நோக்கினார்.
அவனோ அசால்ட்டாக கெளரியை தன் புறம் இழுத்து, “இல்லை… என் தங்கை!….” என்றான் விரிந்த புன்னகையோடு.
நந்தினிக்கோ, “இங்க என்னதான் நடக்குது?..”என குழப்பத்துடனே வேடிக்கை பார்த்தாள்.
கெளரி புன்னகை மாறா முகத்தோடு நந்தினியை பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள். அவள் மட்டுமில்லாது சுதர்சனன், உதயாவுமே நந்தினி பேந்த பேந்த முழிப்பதை பார்த்து பலமாக நகைத்துகொண்டனர்.
உதயா மீண்டும் “என்னடா செல்லம், நீ என் செல்ல தங்கச்சிதானே?…” என கூறவும்,
முதலில் அனைத்தையும் பார்வையாளராக மட்டுமே பார்த்துகொண்டிருந்த கிருஷ்ணவேணிக்கு கோவம் எல்லை மீற, “போதும் பிரபா மறுபடியும் கௌரியை உன் தங்கைன்னு சொல்லாத, எத்தனை தடவை சொல்லிருக்கேன் உன் கிட்ட?…” என்றாரே உக்கிரமாக.
ஆவேசமாக பேசியவரை நிதானமாக பார்த்து, “என் தங்கச்சிதான் இவ, எத்தனை தடவை வேணும்னாலும் சொல்லுவேன்!…” என்றான் அமர்த்தலாக.
சுதர்சனனோ, “வேணி என்ன இது?, இப்டியா நடந்துகொள்வது? பொது இடத்துல, அதுவும் நம்ம வீட்டு விசேஷத்துல?…..”என்றார் கடுமையாக.
விருந்தினர்களில் பாதிக்கும் மேல் பந்தியில் இருக்க மீதி உள்ளவர்கள் எல்லோரும் வட்டமேஜை மாநாடு போட்டு சொந்தகதை சோகக்கதை என ஆர்வமாக அலச ஆரம்பித்துவிட்டனர்.
அதனால் இந்த சம்பவம் மற்றவர்களின் கண்களுக்கு விருந்தாகாமல் தப்பிப்பிழைத்தது. வேணியின் முகமாற்றத்தை கண்டு அவரை நெருங்கிய மூர்த்தியும், பாக்கியாவும் என்னவென கேட்டுவைக்கவும்,
“அண்ணி! அண்ணி! இவன் கிட்ட சொல்லுங்க அண்ணி தயவு செய்து கெளரியை அவனோட தங்கைன்னு சொல்லவேண்டாம்னு!…” என்று சட்டென கண்களை நிறைத்த கண்ணீருடன் மன்றாடினார்.
விஷயம் அறிந்ததுமே மூர்த்தியின் முகத்தில் இறுக்கம் வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. அந்த பாவத்திலேயே தெரிந்துவிட்டது இனி அவரிடமிருந்து தனக்கு சாதகமாக எந்த ஒரு வார்த்தையையும் வாங்க தன்னால் முடியாதென்னும் செய்தி.
பாக்கியாவோ ஒருவிதமான இயலாமையோடு உதயாவை பார்க்க அவனோ கண்டுகொள்ளாமல் அலட்சியமாக நின்றான்.
“யார் புறம் பேசுவது?….” என தவித்தபடி கைகளை பிசைந்தனர்.
சமீபத்தில் இருந்தே தங்கள் வீட்டில் நடந்து வரும் பிரச்சனை தான் இது. வேணியிடம் ஏதோ மாற்றம் இருப்பது அனைவருக்கும் புலப்பட்டது. அவரையும் எதுவும் சொல்லமுடியாமலும், உதயாவின் பிடிவாதத்தை தளர்க்கமுடியாமலும் போராடி தோற்றுதான் போயினர். இது இங்கே விசேஷ வீட்டில் அதுவும் புதிதாக வந்த மருமகள் முன் நடப்பது தான் மேலும் சங்கடத்திற்குள்ளாக்கியது.
உதயாவும் சரி, வேணியும் சரி விட்டுகொடுக்காமல் சிலிர்த்துக்கொண்டு நின்றனர்.
கெளரி “அம்மா அண்ணா சொல்றதுல என்ன தப்பு? நீங்க இப்டி பேசறது எனக்கு பிடிக்கவே இல்லை. நான் அவங்க தங்கச்சிதான்!…” என்றவுடனே மீண்டும் ஆத்திரம் அதிகமாக அவளை அறைய போனார். நிமிடத்தில் கௌரியை தன் பின் நகர்த்தியவன்,
“அத்தை!.. என்ன காரியம் செய்ய பார்த்தீங்க? இந்த வேலையெல்லாம் இங்க வச்சுக்காதீங்க சொல்லிட்டேன்!…” என்றான் கடுமையாக எச்சரிக்கும் குரலில்.
உதயாவின் கடுமையில் திகைத்து கௌரியை அடிக்க ஓங்கிய கையை தளர்த்தினாலும் உஷ்ணம் குறையாமலேயே மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றவரை பார்த்து மிரண்ட நந்தினியை கண்டு வேணியை அவ்விடத்தில் இருந்து அப்புறபடுத்தவேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார்  சுதர்சனம்
எவ்வளவு மகிழ்வுடன் வந்தாரோ அதை அளவு மனவருத்தத்துடன் வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டுவிட்டாளே? என குமைந்தபடி வேணியிடம், “வா போகலாம்!..” என்றார் சுதர்சனம் அழுத்தத்தோடு.
“ஐயோ!!! அண்ணா என்ன இப்படி சொல்றீங்க?…” என்றார் பாக்கியா.
“அதானே? சுதர்சனா எதுக்காக இப்படி சொல்ற? இன்னும் சாப்பிடவும் இல்லை இரண்டு பேரும். அதுக்குள்ளே கிளம்பினா எப்டிப்பா?…” என்றார் மூர்த்தி மனம் கொள்ளா ஆற்றாமையோடு.
“நான் என்ன செய்ய மச்சான். நீ தப்பா நினைக்காதம்மா பாக்கியா. நாங்க நாளைக்கு விருந்துக்கு கண்டிப்பா வருவோம், இப்போ கிளம்பறோம்மா!…” எனவும் மூர்த்தி கண்டிப்பான பார்வையோடு உதயாவை நோக்கினார்.
அவனோ புரிந்துகொண்ட விதமாக, “அத்தை நீ இப்போ சாப்பிடுவீங்களா? மாட்டீங்களா?…”
“நீ இனிமே அப்டி சொல்லமாட்டேன்னு சொல்லு, அப்போதான் சாப்பிடுவேன். இல்லைனா கிளம்பிடுவேன்!…” என்று வீம்புபிடிக்கவும்,
“அப்படியா சரி கிளம்புங்க!…” என்று முடித்துவிட்டு இதுக்குமேல என்னால பேச முடியாதென்றுவிட்டான்.
“ஏன் வேணி இப்டி பிடிவாதம் பிடிக்க? அத்தை மட்டும் இப்போ இங்க நம்மை தேடி வந்துட்டாங்கன்னா அவ்வளோதான். புரிஞ்சுக்கோ!….” என பாக்கியா சொல்லவும்
அதை ஆமோதிக்கும் விதமாக மூர்த்தியும், “இதை இங்க வச்சு பேசவேண்டாம், முதல்ல சாப்பிட போகலாம்!…” என கூறி வேணியை அதற்குமேல் யோசிக்கவிடாமல் தள்ளிக்கொண்டு சென்றனர் இருவருமே.  
அவர்களை பின்தொடர்ந்தபடி, “இதெல்லாம் சகஜமப்பா!…” என்ற பாணியில் கலகலப்பாக பேசிக்கொண்டே சென்றனர் சுதர்சனமும் கெளரியும்.
நடந்து ஒண்ணுமே விளங்காமல் தலையை பிடித்தபடி அமர்ந்துவிட்டாள் நந்தினி.
“என்னாச்சு நந்து? தூக்கம் வருதா?…” என்றான் கூலாக. 
நிமிர்ந்து நோக்கியவளின் பார்வையில் விளையாட்டுத்தனத்தை கைவிட்டு அவளது வினா என்னவென தெரிந்தும் அமைதியாக நின்றான்.
“எனக்கு இந்த விஷயத்தை பத்தி சொல்லுங்க?…”
“என்ன விஷயம்னே நீ இன்னமும் சொல்லவே இல்லையே?…” எனவும் கேட்டேவிட்டாள்.
“கெளரி யார்???….”
“இப்போ என்ன கெளரி யார்னு தெரியனும் அதானே?…” என்றான் அமைதியாக.
நானும் இதைத்தானே கேட்டேனேனும் பாவனையில் தலையை மட்டும் ஆட்டி ஆமோதித்தாள்.
“கிட்டவாயேன், சொல்றேன்!…” என அருகில் அழைத்ததும், “பக்கத்தில தான இருக்கோம், இதுக்கு மேலயும் கிட்டவான்னா எப்டி?…” என குழம்பி நின்றவளை கண்டு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
அவனே அவளை நெருங்கி நின்று காதருகில் குனிந்து, “இங்க பாரு நந்து இன்னைக்கு நீ ரொம்பவே டயர்ட் ஆகிட்ட, காலைல இருந்து அதிர்ச்சிமேல அதிர்ச்சி. சோ இன்னைக்கு இது போதும். நானே ஒருநாள் கெளரி பத்தி உன் கிட்ட சொல்றேன். சரியா?…” என்றான் கிசுகிசுப்பான குரலில்.
“ரொம்பத்தான் அக்கறை என் மேல, சொல்லமாட்டேன்னு நேர சொல்றதுக்கு என்னவாம்?…” என அவனை விட்டு நகர்ந்து முணுமுணுத்துகொண்டே தலையாட்டிவைத்தாள்.
“வேணி அத்தை ரொம்ப நல்லவங்க. நீ ஏதும் தப்பா நினைக்காத அவங்களை!…” எங்கே முதல் சந்திப்பிலேயே வேணியின் மேல் தவறான அபிப்ராயம் உண்டாகி உறவில் விரிசல் ஏற்பட அதுவே ஏதுவாகிவிடுமோ என அஞ்சி. அதற்கும் தலையாட்டினாள்.
“கொஞ்சம் கோவம் வரும், நீயே போக போக புரிஞ்சுப்ப!…” இதற்கும் தலையாட்டி வைத்தாள்.
“ஹ்ஹ்ம், ரொம்ப கஷ்டம் எல்லாத்துக்கு தலையாட்டிட்டே இருக்கிறது சரியில்லைமா, கொஞ்சமே கொஞ்சம் பேசவும் செய்யணும்!..” என ஆலோசனை வழங்கியவனை கண்டு புன்னகைத்து அதற்கும் தலையாட்டினாள் வேகமாக.
“டேய் உதயா, உனக்கு தேவையா? இல்லை தேவையான்னு கேட்டேன்? பெரிய அட்வைசர்னு நினைப்பு. இவ்வளோ லெக்சர் குடுத்தும் திரும்பவும் தலையாட்டி வைக்கிறாளே? இனியும் பேசுவியா?…” என தனது சுட்டுவிரலை முகத்திற்கு முன் நீட்டி தன்னையே திட்டிகொண்டான்.
“நான் என்ன பண்ணேன் நீங்க சொன்னதுக்கு தலையாட்டினேன். அவ்வளோதானே?…அதுக்காக நீங்க சுவத்துல போய் முட்டிக்காதீங்க…” என்றாள் அப்பாவியாக.
அவளது பேச்சில், “அடிப்பாவி?????….”என வாயை பிளந்தவன், “இவ நம்மளை காமெடி பீஸ் ஆக்குறாளோ?…” என நந்தினியை சந்தேகமாக கூர்ந்து பார்த்தான்.
“ஆனா முகத்தை பார்த்தா அப்படி தெரியலையே? ச்சே ச்சே இருக்காது!… ஆனாலும்…” என யோசனையில் இருப்பவனை கலைத்தவள்,
“என்னங்க? என்னாச்சு? ஏதாச்சும் குடிக்கறீங்களா? கெளரி ஜூஸ் கொண்டு வந்து குடுத்தா!…..”
“ஒன்னும் வேண்டாம் சாப்பிட போகலாம் ரொம்ப பசி. ஆளாளுக்கு படுத்திட்டாங்க. நீ வரியா இல்லை நான் போகட்டுமா சாப்பிட?…” என்ற அவனது படபட கேள்வியில் கடுப்பாகி, 
“சரி நீங்க போங்க, நான் இங்க இருக்கேன்!..” என்றாள்.
“எனக்கென்ன, இங்கயே இரு நான் போய் நல்லா கொட்டிகிட்டு வரேன்!…” என்று கிளம்ப எத்தனிக்க,
“சரிங்க, தனியா போரடிக்கும் பாட்டியை கூப்பிட்டுக்கறேன் பேச்சுதுணைக்கு…” என ஓரக்கண்ணால் அவனை பார்த்தவாறே கூறவும்,
“அம்மா தாயே பரதேவதையே, வந்த அன்னைக்கேவா? வா!….” என கை பிடித்து அழைத்துசென்றான்.
“இந்த கிழவியை சொல்லணும். எல்லோர் முன்னாலையும் என்னை ட்ரில் வாங்கி என்னை என் இமேஜை டேமேஜ் பண்ணி விட்ருச்சு, உதயா கெத்தை எத்தி தள்ளிருச்சே?…” என சகட்டுமேனிக்கு நாச்சிக்கு சாபம் குடுத்தபடியே சாப்பாடு அறைக்குள் நந்தினியுடன் நுழைந்தான்.
“டேய் என்னடா? இப்படி வந்துட்ட?…” – விஷ்ணு பதறிய பதட்டத்தில் என்னமோ ஏதோவென அதிர்ச்சியடைந்த உதயா,
“என்னடா மச்சான் சொல்ற? ஏண்டா? ஏன்? எதுக்கு இப்டி கத்துற?…”
“நீ மாப்பிள்ளைடா!…”
“கொஞ்சம் சத்தமா சொல்லுடா, எனக்கே டவுட்டா இருக்கு. எவனும் நம்பினா மாதிரி தெரியலை!…” என்றான் சலிப்போடு,
“இப்படியாடா நீ இங்க வரது?….”
“அடிச்சு மூஞ்சியை உடைக்க போறேன் பாரு, மறுபடியும் மறுபடியும் இப்படியே சொல்லிட்டு இருக்க?, எப்படிடா வந்தேன்?…”என பசியில் தீயாய் காய்ந்தான்.
“இல்லைடா மாப்ள, இங்க ஹீரோவே நீதாண்டா. இன்னைக்கு ராஜ மரியாதை கிடைக்கும் டா உனக்கு. அதை நீ மிஸ் பண்ணிடகூடாதேன்னுதான் இப்படி சொன்னேன்!…”  
“என்ன மரியாதை ராசா? கொஞ்சம் கோனார் நோட்ஸ் குடேன்?…”
“அதாவது நாங்க எல்லோரும் மேடைக்கு வந்து உன்னை கூட்டிட்டு வரணும். அதை விட்டுட்டு சாப்பாட்டு அறைக்கு, நீ பாட்டுக்கு இப்படி பொசுக்குன்னு எந்திரிச்சு வந்துட்டே?…” என்றான் வகையாக சிக்கிகொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல்.
“என்னை கூட்டிட்டு வந்தா என் பொண்டாட்டியை யார் கூட்டிட்டு வருவா?…”
“அடடா ஒரு பேச்சுக்கு தங்கச்சியை விட்டுட்டேன். இனிமே விடலை. போதுமா? …” என உதயாவை நோக்கி சமாதான புறாவை பறக்கவிட அதை பிடித்து சிறைவைத்தவனாக,
“விட்ரு!…” என்றான் மொட்டையாக.
“எதை?…” என புரியாமல் அழாத குறையாக கேட்ட விஷ்ணுவை பார்த்த நந்தினி சிரிப்பை கட்டுபடுத்த பெரும்பாடுபட்டாள்.
“ப்ச், உன் தங்கச்சியை என் கிட்ட விட்ருன்னு சொன்னேன்!…”என்று கடுப்பேத்தினான்.
“உன்னைய பெத்தாங்களா? இல்லை செஞ்சாங்கலாடா?…” என்றான் விஷ்ணு நொந்துபோய்.
“அந்தா அங்க உட்கார்ந்து பையனும் மருமகளும் இன்னும் சாப்பிடாலையேன்னு  கவலைபடாம கட்டு கட்டுன்னு பாத்தி கட்டி அடிக்காத குறையா சாப்பிடறாங்களே அவங்களை போய் கேட்டுதான் பாரேன்!…” என்று தன் குடும்பத்தினரை காட்டி,
“ஊருக்குள்ள சொன்னாங்கடா நீ ரொம்ப நல்லவன்னு, அப்பப்போ நிரூபிக்கிற!…” இவன் இப்டி சொன்னான்னு சொன்னாக்கூட அதை அங்க யாருமே நம்பமாட்டாங்களே? என காது இரண்டிலும் புகைவர நின்றவனிடம் மேலும், 
“பெத்தவங்ககிட்ட கேட்க கஷ்டம்னா என் பாட்டிகிட்ட கேட்டுக்கோ, அவங்களுக்கு தெரியாத விஷயமே கிடையாது. சந்தேகம்னு வந்துட்டா வச்சுக்காம உடனே தீத்துடனும் தம்பி!…” கோர்த்துவிட்டே ஆகவேண்டுமென்ற முடிவில்.
“நீ என்னை தீர்த்துக்கட்ட ப்ளான் பண்ணிட்டன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு!….” என விஷ்ணு உஷார் ஆக,
உதயா “பய எஸ்ஸ்ஸ் ஆகிட்டானே?…” என முணுமுணுத்தான்.
“ரொம்ப பீல் பண்ணாத, கிராதகா யார் கிட்ட சிக்கவைக்க பார்க்கற? இன்னும் வாழ்க்கையில நான் எதையுமே பார்க்கலை. எனக்கு இன்னும் ஒரு தடவை கூட கல்யாணம் ஆகலை தெரியும்ல!…” என்று புலம்பியவனை கண்டு மனதிற்குள் குத்தாட்டம் போட்டான் அவனது ஆருயிர் நண்பன்.
“நீ ஒண்ணு பார்த்த, அதை நான் பார்த்துட்டேன்!…” என்றான் மீண்டும் தூண்டிலோடு மாட்டுவானா என அவனையே பார்த்தபடி தேவுடுகாக்க.
“நானே பார்க்காததை என்னத்தை பார்த்த? என்னை கிளம்புன்னு நேர சொல்லவேண்டியதுதானே?…”
“அதை என் வாயால நான் எப்டிடா சொல்லுவேன்?….”
“ஏன்? சொல்லித்தான் பாரேன்?…”
“நீ என் நண்பேன்டா!…” எனவும்
“போதும்டா இதுக்குமேல எதையும் சொல்லிடாத, அழுதுபோடுவேன் அழுது!…”
இருவரது வாக்குவாதத்தையும் ஆச்சர்யமாக வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தவள் விஷ்ணுவின் கடைசி வார்த்தையில் அடக்கமாட்டாமல் வாய்விட்டு சிரித்துவிட்டாள்.
அவள் சிரித்ததை பார்த்த விஷ்ணு, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிரபாகரா?..” என்று விஷ்ணு  முறைத்த முறைப்பில் பக்கத்தில் வைத்திருந்த வாழை இலைக்கட்டு பற்றி எரிந்திருக்கும்.
கோவமாக செல்ல போனவனை தடுத்து,
“அவ்வளோ சீக்கிரம் உன்னை விட்டுடுவேனா? இவ்வளோ நாளா என்னலாம் சொல்லி படுத்தி வச்ச?…” என மனதிற்குள் கருவியபடி அவனை
“வாடா வந்து பரிமாறு!…” என இழுத்துவந்தான்.
“வந்து வச்சு தொலையிறேன்!…” என்றான் கடுப்போடு சாம்பார் பாத்திரத்தை எடுத்தவனை தடுத்து,
“என் பக்கத்துல உட்கார்ந்து என் கூட சாப்பிடு!…” என பாசமாக தன அருகில் அமரவைத்துகொண்டான்.
அனைவரையும் பெருமையாக பார்த்தவாறு சட்டை காலரை தூக்கி விட்டு ஸ்டைலா அமர்ந்தவனை கண்டு, “என்ன ஒரு எகத்தாளம் இவனுக்கு!…” என எண்ணியபடி எதிர் இருக்கையில் அமர்ந்தவாறே பார்த்தனர் நாச்சியும், கெளரியும்.
நடுவில் உதயாவும் அவனது இருபுறமும் நந்தினியும் விஷ்ணுவும் அமர்ந்திருந்தனர்.
ஏற்கனவே பரிமாறப்பட்ட பதார்த்தங்களை ஆராய்ந்து நந்தினிக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என அவளிடம் கேட்டுகொண்டிருந்தான்.
விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்த அவல்கேசரியை இலையில் முதல் கிண்ணத்தில் கண்டதும் அவனுக்கு ஒரே குஷியாகிவிட்டது.
அவன் குதூகலத்தில் வானத்தில் ஒருநிமிஷம் பறந்து விட்டு கீழே இறங்கும் முன் அவனது இலையில் இருந்த பிடித்தமான பதார்த்தங்கள் அனைத்துமே காணாமல் போயிந்தது.
“எங்க இங்க இருந்த கிண்ணம்?…” என தேடவும்,
“என்னடா? சாப்பிடலையா?..” – உதயா.
“இல்லடா மச்சான். இங்கதான் வச்சதுப்போல இருந்துச்சு மச்சான்!…”
“எது? ஓ அதுவா? அது நந்தினிக்கு பிடிக்குமாம் அதான் எடுத்துகொடுத்துட்டேன்!….” என்றான் சாவகாசமாக சாப்பிட்ட படி.
“அவதான் வேண்டாம்னு சொல்றாளே அப்புறமும் ஏண்டா கம்பல் பன்ற?…”
“பாருடா உன் தங்கச்சியை!…” எனவும் அவளை எட்டிப்பார்க்க அவளோ அவனை கண்டு மீண்டும் மீண்டும் சிரித்தால் ஏதும் நினைத்துவிடுவானோ என வேறு திக்கில் பார்த்துகொண்டிருந்தாள்.
“பார்த்துட்டேன், ஏண்டா?…”
“சரியா சாப்பிடாம இருக்கா எப்டி ஒல்லியா இருக்கா பாரு? அதான் எடுத்துகொடுத்துட்டேன்!…” அதற்குமேல் அவனை கவனிக்காமல் சாப்பாட்டில் கவனமானான்.
“ஒருவேளை சாப்பாட்டிலையா அவ பூசணிக்காய் சைஸுக்கு ஆகிடுவா? இதெல்லாம் ஓவர்டா, நல்லா இல்ல சொல்லிட்டேன்….” என உதயா காதில் புலம்ப அவனோ இந்த காதி வாங்கி அந்த காது வழியாக பறக்கவிட்டான்.
நந்தினிக்கோ விஷ்ணுவை பார்க்க பாவமாக இருந்தது.
“இவங்க ரொம்பத்தான் அண்ணாவை படுத்திவைக்கிறாங்க!…” நினைத்துக்கொண்டே சாப்பாட்டை அளந்து கொண்டிருந்தவளை பார்த்து,
“சாப்பிடாம என்ன செய்ற? வீட்டுக்கு கிளம்பனும் சீக்கிரம்!….”என அவளை விரட்டினான்.
“என்னது? இதுக்காடா பக்கத்துல உட்காரவச்ச?…” என கொதித்துபோனான்.
அதெல்லாம் உதயா கண்டுகொண்டால்தானே?
ஆனால் பார்க்ககூடாதவர்கள் பார்த்துவிட்டனர். எதிரே அமர்ந்திருந்த கெளரியும், நாச்சியும் சிரித்த படியே…
அதனால் கடுப்பானவன் சமாளித்துகொண்டு தெனாவெட்டாக “இந்தாப்பா கேசரி கொண்டு வா!…” என பரிமாறியவனை அழைத்து கேட்கவும்,
அவனோ “சார் தீர்ந்துபோச்சு!…” என்று அசால்ட்டாக அரைவண்டி கரியை அள்ளி அப்பிவிட்டு போய்விட்டான்.
இப்போது நாச்சியும் கெளரியும் மட்டுமல்லாது இவர்களை கவனித்துகொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி பாக்கியமும் கூட இடியென சிரித்துவிட்டனர்.
“இங்க நண்பனுக்கு இவ்வளோ அவமானம் நடந்து போச்சு. இவன் என்னடான்னா எதுவுமே நடக்காதது போல ஒரு எபெக்ட் குடுக்குறானே?…”
“நான் மட்டும் அப்போவே சாப்ட்டு இருந்தா?..” என அண்ணாந்து பார்த்தபடி அவசரமாக பாதி எரிந்து அணைந்திருந்த இருந்த கொசுவத்தி சுருளை கொளுத்திவிட்டான்.
வெளியூர் சென்றிருந்தவன் உதயாவின் திருமணத் தகவலை கேட்டதும் கிளம்பி ஊருக்குள் வருவதற்கும் வரவேற்பு தொடங்குவதற்கும் சரியாக இருந்தமையால் வெளியே உள்ள ஆட்களை கவனித்துகொள்ளும் பொறுப்பை மட்டுமே ஏற்றிருந்தான்.
சாப்பாட்டு அறைக்கு சற்றுமுன்னரே சாப்பிட வந்தவனை வரவேற்ற அவல்கேசரியை ஆசையாக கண்டு அமரப்போனவனை,
நாச்சி, “இந்தா விஷ்ணு பந்தியை கவனிப்பா அங்கே யாருக்கு என்ன வேணும்ன்னு கேட்டு பரிமாறு!…” என அவனது கையில் கேசரி பாத்திரத்தை எடுத்து திணிக்கவும் நொந்தேவிட்டான்.
“இதென்ன சோதனை? இதுதான் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலைன்னு சொல்றதா?…” புலம்பியவாறே ஒவ்வொருத்தர் இலையிலும் வைத்தபடியே.
கிழவி அசந்தநேரமாக பார்த்து ஒருகேசரி கிண்ணத்தோடு ஒதுங்க நினைத்த நேரம், “விஷ்ணு அதென்ன அதையே கைல வச்சிட்டு காவல் காத்துகிட்டு இருக்க?…”
“இதோ வரேன் பாட்டி!..”கிண்ணத்தை வைத்துவிட்டு வந்தவனிடம்,  
“இங்க வந்து சாம்பார் ஊத்து. நம்ம வீட்டு விசேஷம் நாம தான நல்லா கவனிக்கணும்!…” என சொல்லிவிட்டு அங்கேயே நின்ற கிழவியை கொதிக்கும் சாம்பார் குண்டாவில் முக்கியெடுத்தால் என்ன என்று ஆத்திரம் கிளம்பியது.
எல்லாம் முடித்து, ”ஹப்பா இனிமே சாப்பிடலாம்!…” என ஆசுவாசப்பட்டு நிமிரவும் உதயா தம்பதியர் வரவும் சரியாக இருந்து.
விஷ்ணுவிற்கு பின்னந்தலையில் யாரோ சடாரென அடித்த உணர்வு.
“கொசுவத்தி சுருள் மொத்தமும் முடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு மச்சான். சீக்கிரமா இருக்கிறதையாச்சு சாப்பிட்டு முடிக்கிறியா?…” என்றபடி எழுந்து நந்தினியோடு கிளம்பிவிட்டான்.
“உன்னோடு சேர்ந்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்!…” என்று பல் இடுக்கிற்குள் வார்த்தைகளை கோவமாக கடித்து துப்பியபடி.
“எனக்கும் நீ போதும் போதும்னு சொல்ற வரைக்கும் குடுக்கத்தான் ஆசை என்ன செய்ய? சாப்பாடு எல்லாம் தீர்ந்து போச்சு மச்சி, அதனால அடம்புடிக்காம இருக்கிறதை காலிபண்ணிட்டு வா. வெளில இருக்கோம் வீட்டுக்கு கிளம்ப நேரம் ஆச்சு!…” என சொல்லிவிட்டு நகர்ந்தவனை விஷ்ணுவின் குரல் தொடர்ந்தது.
“உன் கூட வீட்டுக்கு நான் வரமாட்டேன்!…” என அடம்பிடித்தவனிடம்,
“அப்போ அப்பா கார்ல வா!…” என்று கூறி வெளியேறிவிட்டான் சாப்பாட்டு அறையை விட்டு.
“எல்லாம் இவன் முடிவு, போகலைனா அதுக்கும் எதாச்சு பண்ணி வைப்பான்!…” என்று இருக்கிறதை சாப்பிட ஆரம்பித்தான்.
கையை கழுவிக்கொண்டு வெளியே வந்தவனை கிருஷ்ணமூர்த்தி அழைத்து, “விஷ்ணு எல்லோருக்கும் செட்டில் பண்ணியாச்சுப்பா கிளம்பலாம் தானே?…” என்றார்.
“நீங்க கிளம்புங்கப்பா நானும் கிளம்பறேன்!…” என்றவனை முறைத்த பாக்கியம்,
“அண்ணாவும் அண்ணியும் இன்னும் ஊர்ல இருந்து வரலையே அப்புறம் என்னவாம்? வீட்ல தனியா இருப்பியா? நான் போன்ல பேசிட்டேன் அவங்க நாளை வந்திடுவாங்க, அதுவரைக்கும் நம்ம வீட்ல இரு!….” என்றார் கண்டிப்போடு.
உதயாவை காண அவனோ இதுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல கெளரியுடன் உரையாடிகொண்டிருந்தான்.
குடும்பம் மொத்தமும் சேரந்து ப்ளான் பண்ணிட்டு ஆடர் போடறாங்க.
விஷ்ணுவை பார்த்து கெளரியும் உதயாவும் தங்களுக்குள் ஏதோ சொல்லி சிரித்தபடி அவனை காணவும்,
“சரியான வில்லன்டா நீ!…” என பார்வையாலேயே பஸ்பமாக்க பார்த்தான்.
அனைவரும் மண்டபத்தை ஒழுங்கு செய்துவிட்டு புறப்பட்டு வீட்டிற்கு வந்தனர்.
மறுநாள் விருந்து என்பதால் வெளியூர் சொந்தங்கள் அனைவரும் மண்டபத்தின் அறைகளிலேயே தங்கிகொண்டனர்.
புதுமண தம்பதிக்கு திருஷ்டி கழித்துவிட்டு வந்து ஆசுவாசமாக அலுப்போடு அமர்ந்தனர்.
நந்தினி கௌரியோடு அவளறைக்குள் சென்று மறைந்தாள்.
“இந்த விசேஷம் நல்லவிதமா திருப்தியா முடிஞ்சதுல ரொம்ப சந்தோஷமா இருக்குமா எனக்கு!…” –கிருஷ்ணமூர்த்தி.
“பின்ன இல்லையா கண்ணு, நம்ம வீட்டு விசேஷம்னா சும்மாவா?…” என பெருமையாக பேசிகொண்டிருந்தவரிடம்,
“பாட்டி நான் போய் தூங்கறேன். கொஞ்சம் அலுப்பா இருக்கு ஊர்ல இருந்து நேர வந்துட்டதால!…” என்று சொல்லவும்,
“சரிய்யா நீ போ போய் ஓய்வெடு!…” என அனுப்பிவைத்தவர் சிறிது நேரத்தில் அவனது அறைக்கு சென்றார்.
அந்த வீட்டில் விஷ்ணு தங்குவதற்காக அவனுக்கென ஒரு அறை தனியாக உண்டு அந்த வீட்டில்.
முகம் கழுவி விட்டு படுக்க நினைத்த நேரத்தில் கதவு தட்டப்படும் ஓசையில் வெளியே வந்தான் விஷ்ணு.
நாச்சி கையில் பெரிய தட்டை வாழையிலை வைத்து மூடி அவனது கையில் திணித்தார்.
“இந்தா அங்க உன்னை இந்த படுவா சாப்பிட விடாம ரொம்பவே கலாட்டா பண்ணிட்டான்ல அவனை அப்புறமா கவனிச்சுக்கலாம். இப்போ நீ சாப்பிடு!..” எனவும்,
தட்டை வாங்கி உள்ளே வைத்துவிட்டு, “என் செல்ல டார்லிங், எங்க இன்னும் கோவமா இருக்கியோன்னு நினச்சேன்!…” என்று நாச்சியை தூக்கி ஒரு சுற்று சுற்றி இறக்கினான். அதை பார்த்துக்கொண்டே வந்த உதயா,
“போதும்டா தாங்களை உங்க அலப்பரை. போ போய் சாப்ட்டு தூங்கு!…” என சிரித்தபடி உரைத்துவிட்டு மாடிபடிகளில் ஏறினான் தனது அறை நோக்கி செல்ல.
அவன் செல்வதையே பார்த்துகொண்டிருந்த நாச்சி, “ஐயோ இப்போ ஒருத்தன் மலையேற போறானே?…” என பம்மியபடியே உதயாவின் காட்டுகத்தலுக்காக மாடியையே பார்த்தபடி காத்திருந்தார்.
“என்னாச்சு டார்லிங்?… ஏன் இந்த நெவர்ஸ்?…” என்றான் விஷ்ணு.
நாச்சி “ஒரு நர்ஸும் இல்லை, இப்போ பாரு உன் ப்ரெண்ட் என்ன ஆட்டம் ஆடுறான்னு!…” என்று சொல்லி முடிக்கவில்லை………..
“நாச்சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ?????????????????….”

Advertisement