Advertisement

“எதற்கும், எதற்கும் முடிச்சு போட்டு பேசற நந்தினி? அவன் விஷயம் வேற நம்ம பிரச்சனை வேறடா. புரிஞ்சிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கியே?…”என தன் மனம் நொந்து கேட்டான்.
“நான் என்ன சம்பந்தம் இல்லாமலா பேசறேன்? இத்தனைக்கும் நீ எனக்கு தாலிக்கட்டி விட்டுட்டு போய்ட்ட. அதை நான் கேட்க கூடாதா? என்னை கூட்டிட்டு வர சொல்லி உன் வீட்டாளுங்க சொன்னா உடனே நீ வீட்டை விட்டு வெளில போய்டுவ. நான் கேள்வி கேட்டாலும் திரும்பும் அதையே தானே செய்வ. அப்டிதானே?…” என மூக்கை உறிஞ்சிக்கொண்டு கேட்டவளை பார்க்க மனம் வலித்தது.
இப்படியெல்லாம் தனக்குள்ளே யோசித்து தேவையற்ற விஷயங்களுக்கு முடிச்சு போட்டு தன்னையே வருத்திக் கொள்கிறாளே என மனதிற்குள் அழ மட்டுமே முடிந்தது.
இவன் அவளை அமைதியாக பார்க்க அவளோ கண்களில் போர் முழக்கத்தோடு அவனை நோக்க இருவரையும் திசை திருப்பியது உதயாவின் போன் கால் சத்தம். அதில் மிளிர்ந்த தனத்தின் பெயரை பார்க்கவுமே உதறல் எடுத்தது அவனுக்கு.
அவனது முகத்தில் திடீரென ஒட்டிக்கொண்ட பதட்டத்தை கண்டவள் கேள்வியாக அவனை பார்த்து, “போன் அடிச்சா எடுக்க வேண்டியது தானே? ஏன் என் முகத்தையும் போனையும் மாத்தி மாத்தி பார்த்துட்டு இருக்க?…” என சொல்லவும் போன் காலை கட் செய்ய போனவன் பதட்டத்தில் அட்டென் செய்துவிட்டான்.
தலையில் அடித்துக்கொண்டு போனை காதுக்கு கொடுத்துவிட்டு எழுந்தவன் நந்தினியின் முறைப்பில் மீண்டும் அங்கேயே அமர்ந்தான்.
“சொல்லுங்க சித்தி…” என கூறியதுதான் தாமதம் நந்தினியின் முகத்தில் ரௌத்திரம் வந்தமர்ந்தது. அதை பார்த்ததும் அய்யோவென்று ஆனது உதயாவிற்கு.
“பிரபா நந்தினி இப்போ எப்டி இருக்கா? காய்ச்சல் விட்டுடுச்சா?…”
“ம்ம் விட்டுடுச்சு சித்தி. ஆனாலும் கொஞ்சம் வீக்கா இருக்கா…”
“காய்ச்சல் வந்த உடம்பில்லையா. அப்படிதான் இருக்கும், நல்லா சாப்பிட சொல்லு…” என்றவர்,
“வீட்டுக்கு எப்போ வருவா பிரபா?…”என கேட்டார்.
“வீட்டுக்கு…” என்று நந்தினியை பார்த்துக்கொண்டே இழுத்தவன்,
“வரேன் சித்தி…” என்று மெதுவான குரலில் கூறினாலும் நந்தினிக்கு எட்டத்தான் செய்தது.
“நந்தினிக்கு சரியானதும் சொல்றேன்னு சொல்லியிருக்க, எனக்கு விஷயம் தெரியனும்…” என்று தவிப்பும், அதட்டலும் சரிவிகிதத்தில் கலந்த குரலில் கேட்டவரிடம் இன்னும் இரண்டு நாளில் வருவதாக ஒப்புக்கொண்டான்.
நந்தினியிடம் பேசவேண்டும் என கூறியதும் தூக்கிவாரி போட்டது உதயாவிற்கு. அவள் தூங்குவதாக சொல்லி சமாளித்து போனை அனைத்து வைத்தவன் அடுத்த பிரச்சனையை எதிர்க்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானான்.
பிரசாத்தின் தாய் என்பதால் தனத்தின் மீதும் அப்படி ஒரு கோவம் எழுந்தது. அவர் மட்டும் தன் பிள்ளையை கண்டித்து வளர்த்திருந்தால் பிரசாத் தன்னிடம் அவ்வாறு கேவலமாக நடந்திருக்க மாட்டான் தானே என்று எண்ணினாள்.
“அந்த பொறுக்கிக்கும், உனக்கும் என்ன தகராறு?…” என்று நேரடியாக கேட்டாள்.
“முதல்ல அவனை பொறுக்கின்னு சொல்றதை நிறுத்து…” என்றவன் வேணியை மரியாதையில்லாமல் பேசியதற்கு கண்டிக்கும் போதே சீறினாள். இப்போதும் எதுவும் சொல்லுவாளோ என பார்த்தால் பதிலே சொல்லாமல் முறைப்பதிலேயே இருந்தாள்.
“ஏன் உன் தம்பியை சொன்னா உனக்கு கோவம் வருதாக்கும்? பாசம். ம்ம். பாசம். அந்த பாசம் தானே உன்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கு. இப்படி பட்ட ரொம்ப ஒழுக்கமான ஒரு தம்பி இருக்கிறதால தானே என் கிட்ட அவனை பத்தி சொல்லாம மறைச்சுட்ட?…” என்று தம்பியில் ஒரு அழுத்தம் கொடுத்து குற்றக்குறியை அவன் புறமாக திருப்பினாள்.
“என் தம்பிதான் யாரு இல்லைன்னு சொன்னா?…” என்று பதிலுக்கு அவனும் கோபமாக எகிறினான்.
பொறுமையாக பேசவேண்டுமேன்றுதான் அவனும் நினைத்தான். ஆனால் பொறுமையின் எல்லையை சோதிக்கும் அளவிற்கு தன் மனைவி செல்கிறாளே என மனம் குமைந்தவன் தன் அதட்டலில் பயந்திருப்பாளோ என அவளை சமாதானபடுத்த வேண்டுமே என்று திரும்பி பார்த்தான்.
அவளா அசருவாள்? அசையாமல் தன்னவனின் கடுமையில் அஞ்சாமல் அவனை விழி எடுக்காமல் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். அவளின் தீர்க்கத்தில் இவன்தான் நொந்துவிட்டான்.
“பிரசாத்க்கும் எனக்கும் பிரச்சனை கிடையாதுடா. எங்கப்பாக்கும் அவனுக்கும் தான் பிரச்சனை…”என்றவனை புரியாமல் பார்த்தாள்.
ஏன் எதற்கு என கேள்வி கேட்பாள் என்று பார்த்தான். அவளோ வாயை திறந்தாள் தானே. நீயே சொல்லு என்பது போல இருந்தாள்.
“கதை சொல்லியே உன் காலம் போய்டும்டா உதயா…” என்று தனக்குள் அலுத்துக்கொண்டவன்,
“எங்கப்பாவும், பிரசாத் அப்பா தணிக்காச்சலம் சித்தப்பாவும் நெருங்கிய நண்பர்கள். அதைவிட உடன்பிறவா சகோதரர்கள்னு கூட சொல்லலாம். சித்தப்பாக்கிட்ட கேட்காம, அவங்களை கலந்துக்காம அப்பா எதுவுமே செய்ய மாட்டாங்க. தனம் சித்தியும் முக்கால்வாசி இங்கதான் இருப்பாங்க. நீ நம்ப மாட்ட. நானும் பிரசாத்தும் கூட அவ்வளோ ஒற்றுமையா இருப்போம்…” எனும் போது நந்தினியின் முகத்தில் ஒரு நொடி ஆச்சர்யம் வந்து சென்றது.
“தணிக்காச்சலம் சித்தப்பாக்கு நகை வியாபாரம். அழகான டிஸைன்ஸ்ல நகை செய்து தருவாங்க. இங்க ஊர்ல பெரும்பாலும் அவங்க கிட்டதான் செய்துக்குவாங்க. பரம்பரை தொழில் அதை விடாம செய்துட்டு வந்தாங்க. வயசுல நானும் பிரசாத்தும் ஐந்தாறு மாதம் தான் வித்தியாசம். என்னை விட நல்லா படிப்பான். பத்தாம் வகுப்பு பரீட்சை லீவ்ல பிரசாத் வாழ்க்கையையே விதி எங்கப்பா மூலமா மாத்திருச்சு…”
“அப்பாக்கு எந்த ஒரு பொருளோ, இடமோ, எதுவாக இருந்தாலும் அது சித்தப்பா மூலமா அவங்ககிட்ட கேட்டு அவங்களை கூட வச்சிட்டுதான் வாங்குறது வழக்கம். அன்னைக்கு ஒரு நிலம் முடிக்க வேண்டிய வேலை இருந்தது. கொஞ்சம் விட்டா வேற கை மாறிடும். அன்னைக்கு போயே ஆகவேண்டிய சூழ்நிலை. நிலத்துக்காரங்க போன் மூலமா உடனே கிளம்பி வரும்படி அப்பாக்கிட்ட பேசியிருப்பாங்க போல. அப்பாவும் உடனே சித்தப்பா வீட்டுக்கு போய் அவரை கூப்பிட்டுருக்காங்க…” எனும் போதே பிரசாத்தை நினைத்து வருந்தினான்.
“எப்போவும் மறுக்காத சித்தப்பா அன்னைக்கு வரலைன்னு சொன்னது பிரசாத்துக்கு ஆச்சர்யமாகவும், கொஞ்சம் நெருடலாகவும் இருந்திருக்கு. நானாவது அவனோட அப்பாவை சித்தப்பான்னுதான் கூப்பிடுவேன். ஆனா அவன் எங்கப்பாவை அப்பான்னு தான் கூப்பிடுவான். அந்த அளவுக்கு அப்பாக்கிட்ட ரொம்ப ஒட்டுதல்…”
“சித்தியும் பிரசாத்தும் வேற லீவ்க்கு அன்னைக்கு சித்தியோட ஊருக்கு கிளம்பிட்டு இருந்தாங்க. அப்பா போய் விஷயத்தை சொன்னதும் நகைக்கடையில ஒரு வேலை இருக்குன்னு அப்பாவை மட்டும் போய்ட்டு வர சொல்லிருந்திருக்காங்க சித்தப்பா. அப்பா பிடிவாதமா இருந்து சித்தப்பா வந்தே ஆகணும்னு சொல்லி கூப்பிடவும் சித்திதான் சித்தப்பாக்கிட்ட சொல்லி போய்ட்டு வர சொல்லிருக்காங்க…” அன்றைக்கு போகாமலேயே இருந்திருக்கலாம் என இன்று தோன்றியது.
“சித்தப்பாவும் சித்தி பிரசாத்தை ஊருக்கு அனுப்பிட்டு வேலையை முடிச்சிட்டு ஒரு மணிநேரத்தில் வீட்டுக்கு வருகிறதா சொல்லிருக்காங்க. சொன்னபடி சித்தப்பாவும் சரியா ஒருமணிநேரத்துல வந்திட்டாங்க. ஆனா சித்திக்கிட்ட சொல்ல வேண்டிய முக்கியமான விஷயத்தை சொல்லாம வந்துட்டாங்க. விதி எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்குது பாரு?…” என்றவன் நந்தினியிடம் பதிலில்லாமல் போகவும் தொடர்ந்தான்.
“போன வேலை நல்லபடியா முடிஞ்சதுன்னும், மிட்நைட்ல வந்திடுவோம்னும் அப்பா போன் பண்ணி தகவல் சொல்லிட்டாங்க. விடியக்காலை நாலு மணியிருக்கும். அந்நேரம் போன் வந்தது பக்கத்து ஊர் ஹாஸ்பிட்டல்ல இருந்து. கார் ஆக்ஸிடென்ட் ஆகிட்டதாகவும் அப்பாவையும் சித்தப்பாவையும் அட்மிட் பண்ணியிருக்கிறதாகவும் சொன்னாங்க…” என சொல்லும் போதே நேராக எழுந்து அமர்ந்தாள் நந்தினி.
“பதறியடிச்சு எல்லோருமே ஹாஸ்பிட்டல் போனோம். அங்க போய் நிலைமை எப்டி இருக்குன்னு பார்த்துட்டு அதுக்கப்பறமா சித்திக்கு தகவல் சொல்லிக்கலாம்னு இருந்தோம். அப்பாவை பார்த்தோம். கைல கால்ல நல்ல அடிதான். ஆனாலும் எழுந்து நடக்க கொஞ்ச நாளாகும்னு சொன்னாங்க. அடுத்து சித்தப்பாவை பார்க்க போனோம்…” அந்த நினைவு தாக்க நெஞ்சை அடைத்தது உதயாவிற்கு.
“அவரை ஐஸியூ ல வச்சிருந்தாங்க. நாங்க ஒவ்வொருத்தரா போய் பார்த்தோம். நான் போனதுமே என் கையை பிடிச்சிட்டு பிரசாத் பிரசாத் அப்டின்னு அவனோட பேரை மட்டுமே சொல்லிட்டு இருந்தாரு. அப்டியே சொல்லிட்டு இருக்கும் போதே என் கண் முன்னாலையே அவரோட உயிர் போய்டுச்சு. கெளரி இறப்புக்கு பின்னால என்னை அதிகமா பாதிச்சது தணிக்காச்சலம் சித்தப்பாவோட இறப்புதான்…” எனும் போதே அவன் உடல் லேசாக நடுங்கியது.
“சித்திக்கு தகவல் கொடுத்ததும் உடனே அவங்களோட சொந்தபந்தம் எல்லோருமே வந்துட்டாங்க. அப்பாவை ஹாஸ்பிட்டலை விட்டு அனுப்பமுடியாதுன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. அப்போதைக்கு அது அவங்களோட ஆரோக்யத்துக்காக நாங்களும் அதுவே சரின்னு விட்டுட்டோம்…”
“அப்பாவை தவிர நாங்க எல்லோருமே துக்கத்திற்கு போய்ட்டு வந்தோம். அப்போவே பிரசாத்திடம் ஒரு ஒதுக்கம் இருந்தது. அப்போ அதை நாங்க பெருசா எடுத்துக்கலை. சித்தப்பாவோட இறப்புக்கு தான்தான் காரணமோன்னு நினச்சு நினச்சு வேதனைப்பட்டுட்டே இருந்தாங்க அப்பா. சித்தப்பாவோட பதினாறாம் நாள் விசேஷம் அன்னைக்கு அப்பாவும் டிஸ்சார்ஜ் ஆனாங்க. நேரா வீட்டுக்கு போகாம சித்தப்பாவோட வீட்டுக்குத்தான் போனாங்க…”
“ஆனா வீல்சேர்ல இருந்த அப்பாவை வீட்டு வாசப்படியை கூட மிதிக்க விடலை பிரசாத். அவ்வளோ கோவமும் ஆவேசமும் எங்க இருந்துதான் வந்ததோ? அப்பாவை கொலைகாரன்னு சொல்லிட்டு அடிக்கவே வந்துட்டான். எத்தனை தடுத்தும் தனம் சித்தி, நாங்க பாட்டி எல்லோரும் எடுத்து சொல்லியும் அவனை கண்ட்ரோல் பண்ணவோ, அவனுக்கு புரிய வைக்கவோ முடியலை. அவன் பிடியிலேயே நின்றான்…” நந்தினிக்கு இப்போது பிரசாத்தின் கோவத்திற்கான காரணமும், உதயா மீதுள்ள துவேஷத்திற்கான காரணமும் உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கியது.
“நீ வராம இருந்திருந்தா கூட இவளை விட்ருப்பேனோ என்னமோ. நீ இவ விஷயத்துல தலையிட்டுட்டல. இனி இவ நாசம் தாண்டா…” என அன்று ஆக்ரோஷமாக அவன் சொன்னதற்கான அர்த்தம் இப்போது புரிந்தது. அந்த அளவிற்கா பழியுணர்ச்சியோடு அலைகிறான் என்று தோன்றியது. பழைய நினைவுகளில் உழன்றவளை தன் குரலால் திசை திருப்பினான்.
“யார் சொல்லிக்கொடுத்தா, எதனால இப்படி பேசறான்னு எல்லோருக்குமே அதிர்ச்சி. அப்பாவோட முகத்தை பார்க்கவே முடியலை. குழந்தையாட்டம் அழுதாரு. அவன்கிட்ட கெஞ்சினாரு. நம்பவே மாட்டேன்னுட்டான். அப்பாவும் அந்த இடத்தை விட்டு போகவே இல்லை. ட்ரைவரோட அஜாக்கிரதையால நடந்த பெரிய அசம்பாவிதம் அவங்களோட எதிர்காலத்தையே கேள்விக்குறியா மாத்திருச்சு. சித்திதான் அப்பாவையும் எங்களையும் சமாதானபடுத்தி வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டாங்க…”
“நாங்க போன கொஞ்ச நேரத்துல நகைக்கு ஆடர் குடுத்தவரு வந்து பணத்தை திருப்பி தர கேட்க அந்த விஷயமே சித்திக்கு தெரியலை. தொழிலில் இருக்கும் குடுக்கல் வாங்கல் அனைத்தையும் சித்திக்கு சொன்ன சித்தப்பா, அன்னைக்கு அப்பா படுத்தின அவசரத்துல அதை சித்திக்கு தெரிவிக்க மறந்துட்டாரு. சித்தியும் ஆடர்க்கு பணம் வாங்கியிருந்தா சித்தப்பா சொல்லாம இருக்கமாட்டாங்கன்னு நினச்சு, இறந்த வீட்டுல ஏமாத்த பார்க்கறாங்களோன்னு சந்தேகப்பட்டு அவரை திட்டிட்டாங்க…”
“அவங்களோட துக்கமும், பிரசாத் பண்ணின ஆர்ப்பாட்டமும் யோசிக்கவிடாம பேச வச்சிருச்சு. அதனால ஏற்பட்ட விளைவு அந்தாளும், அவங்க வீட்ல உள்ளவங்களும் சித்தியை ரொம்ப அசிங்கமாவும், மோசமாவும் பேசிட்டாங்க. சித்திக்கு ஒண்ணுமே புரியலை. பிரசாத் கோவத்துல கையை நீட்ட அந்த இடமே கலவரமாகிருச்சு. அந்தாளு பேசினது போலவே ஊர்ல உள்ள சிலபேர் சந்தேகமா கேட்கவும் சித்தி நொந்தே போய்ட்டாங்க…”
“அந்த இடத்துல தெரிஞ்சவங்க போன் பண்ணி எங்ககிட்ட விஷயத்தை சொல்லவும் நானும் நாச்சியும் தான் ஓடினோம். சித்தியை அவமானபடுத்தி ரொம்ப வார்த்தையை விட்டிட்டு இருந்துச்சு அந்தாளோட பொண்டாட்டி. பாட்டிதான் அவங்களை அமைதியா இருக்க சொல்லிட்டு சித்தியை கூட்டிட்டு உள்ளே போனாங்க. கிளம்பற அவசரத்துல எதுவும் மறந்திருப்பானொன்னு சொல்லி வழக்கமா பணம் வைக்கிற இடத்தையும் ஆடர் நோட்டையும் எடுத்து பார்க்க சொன்னாங்க…” இப்போது தனத்தின் மீது பரிதாபம் உண்டானது நந்தினிக்கு.
“உள்ளே போய் பார்த்தா பணமும், ஆடர் நோட்ல குறிச்சிருந்த விவரமும் இருந்தது. சித்தி ரொம்ப கலங்கி போய்ட்டாங்க. பணத்தை எடுத்துட்டு வந்து அவர்க்கிட்ட மன்னிப்பு கேட்டு சித்தி குடுத்தாங்க. ஆனா அதோட விடாம சித்தி காதுபடவே பணத்தை கொடுக்காம ஏமாத்தணும்னு பார்த்தாங்க. இப்படி பட்டவங்க பணத்துக்காக என்ன வேணும்னாலும் செய்வாங்கன்னும் பேசிருச்சு. சித்தியால இந்த வார்த்தையை தாங்கிக்கவே முடியலை….”
“நாச்சி பாட்டிதான் எல்லோரயும் சத்தம் போட்டு அமைதியா போக சொன்னாங்க. இன்னும் சிலபேர் நல்லவங்கலாட்டம் வந்து பணக்கஷ்டம்னா உனக்கு உதவவா ஆளில்லை. அதுக்குன்னு இப்டி அடுத்தவங்க பணத்தை பதுக்கறது நல்லதில்லைன்னு அறிவுரை சொல்றதை போல குத்திக்காட்டி பேசினாங்க…”
உதயா சொல்ல சொல்ல தனத்தின் மேலிருந்த கோவம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வந்தது. ஆனாலும் அவர் பிரசாத்தின் அம்மா என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு கோவத்தை விடாமல் இழுத்துப்பிடித்தாள்.
“அதுக்கு பின்னால எல்லா விதமான கணக்கு வழக்கையும் முடிச்சிட்டு நகைகடையையும் வித்துட்டு ஊரை காலிபண்ணி ஊருக்கு வெளில உள்ள அவங்களோட தோப்பு வீட்டுக்கு குடிபோய்ட்டாங்க. அன்னைக்கு போனவங்கதான் இத்தனை வருஷமாச்சு, இன்னமும் இந்த ஊருக்குள்ள அவங்க வரவே இல்லை. நாங்க எந்த உதவி பண்ணினாலும் ஏத்துக்க மாட்டாங்க…”
“பிரசாத் மட்டும் வருவான். எங்களோட பிரச்சனை பண்ண. வேணுமென்றே வம்பிழுப்பான். இதயெல்லாம் பார்த்த தனம் சித்தி அவனை ஹாஸ்ட்டல்ல சேர்த்துவிட்டுட்டாங்க. ஆனாலும் அவனோட ஆட்டம் அடங்கலை. கோவம் தான் அதிகமாச்சு. அதுக்கும் நாங்களும், இந்த ஊர்க்காரங்களும் தான் காரணம்னு ஒவ்வொரு விடுமுறை அப்போவும் தன்னால ஆனதை செஞ்சுட்டே இருப்பான்…”
“தனம் சித்தியும் அப்பா இல்லாத பிள்ளைன்னு ஓரளவுக்கு மேல கண்டிக்க முடியலை. அவனும் கண்டிக்கும் அளவை தாண்டி கைமீறி போய்ட்டான். படிப்பை முடிச்சு வந்தவன் அப்பாவுக்கும் எனக்கும் இடஞ்சல் குடுத்துட்டே இருப்பான். அவனுக்குன்னு ஒரு கூட்டத்தை சேர்த்துக்கிட்டு சண்டித்தனம் செய்ய ஆரம்பிச்சான். சார் பெருசா ப்ளான்லாம் போட்டு இடைஞ்சல் குடுப்பார் அப்பாவுக்கும், எனக்கும்…” என்றவனது முகத்தில் மெலிதான முறுவல் படர்ந்தது.
“ஆனாலும் அவன் பேசுறதை கவனிச்சு இப்டிலாம் செய்யுறதா இருக்கான், ஜாக்கிரதைன்னு தகவல் சொல்லிட்டே இருப்பாங்க தனம் சித்தி. அவனுக்கு அதுவும் கோவம் அவனை விட என் மேல அக்கறையா இருக்காங்கன்னு. அதுக்கும் சேர்ந்து எதாச்சு ஏடாகூடமா பண்ணுவான்…”
தனத்தின் வைராக்கியமும், பிரசாத்தின் வலியும் சேர்ந்து நந்தினிக்குள் ஏதோ செய்தது. தனத்தை நினைக்க நினைக்க பிரமிப்பாக இருந்தது. ஊர் உறவையே அறுத்து தனியொருத்தியாக வாழ்ந்துகாட்டியிருக்கும் தனம் நிச்சயம் மதிக்கப்பட வேண்டியவர்தான் என்று அவரை எண்ணி அவள் மனம் நெகிழ்ந்தது.
“இப்போவும் அப்பாவை பார்த்தா மட்டும் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான். அது அப்பாவோட மனசை அணு அணுவா சிதச்சிட்டு இருக்கு. என்னைக்கு அவன் மனம் மாறுமோ தெரியலை. ரெண்டும்கெட்டான் வயசுல அவனோட மனசுல நஞ்சை விதச்சிருக்காங்க. அது அவனோட மனசுல ஆழமா பதிஞ்சுபாய் இருக்கு. என்னைக்காவது உண்மையை புரிஞ்சிட்டு வருவான்னு நாங்களும் அமைதியா போய்ட்டு இருக்கோம்…” என்று பெருமூச்சு விட்டவன்,
“நான் கீழே போய்ட்டு வரேன். நீ ரெஸ்ட் எடு…” என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டான்.
அவன் சென்ற திசையை வெறித்துப்பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் நந்தினி.
ஒரே நாளில் கெளரி, பிரசாத் இருவர் பற்றியும் தெரிந்ததால் உண்டான பாரம் மனதை அழுத்தியது. அழுத்தம் தாங்கமுடியாமல் அத்தனை நிகழ்வுகளும் அவளை அலைகழித்தது.
தன் கணவனின் மூலம் இவ்வளவு கேட்டும் அவளால் பிரசாத் தனக்கு இழைக்க இருந்த கொடுமையை மன்னிக்க முடியவில்லை. உதயா மட்டும் அன்றைக்கு வராமல் போயிருந்தால் என நினைக்கும் போதே அவள் தளிர்மேனி நடுங்கியது.
தன் கணவனை சேர்ந்தவர்களின் துன்பத்தில் பங்கெடுத்து கொள்ள தான் நினைத்தாள். ஆனால் அவர்கள் தனக்கு தீங்கிழைத்தவர்கள் ஆகிற்றே. தவறு செய்யும் மனிதர்களை மன்னிப்பது நற்செயல் ஆனாலும் அவர்கள் மனிதர்களில் சேர்த்தியில்லை என்பதுதான் நந்தினியின் எண்ணம்.
மனித ஜாதியிலேயே சேர்ப்பில்லாத ஜந்துக்களான அவர்கள் செய்ததை மறக்கவும் இல்லை, அவர்களுக்கு மன்னிப்பும் இல்லை என்பதுதான் அவளது தீர்மானம்.
அவளது இந்த தீர்மானத்தையும் காலம் மாற்றுமா என்பதுதான் கேள்விக்குறி? விடைதெரியா கேள்வியோடு சூரியன் அஸ்தமமானான்.

Advertisement