Advertisement

மின்னல் – 24

                    “இன்னும் எவ்வளவு நாள் தான்மா நாங்க இப்படியே இருக்கறது? அகிலாவுக்கு இது ஏழாவது மாசம். வளைக்காப்பு செய்யனும். நீங்க இன்னும் அப்பாவுக்கு முடியலை. கொஞ்ச நாள் போகட்டும் அப்டி இப்டின்னு சொல்லி தட்டிகழிச்சுட்டே இருக்கீங்க?…”

வைத்தியநாதன் தன் தாயிடம் சலிப்பாய் சண்டையிட அவனின் தாயோ இதையும் எப்படியாவது சமாளிக்க வேண்டும் என யோசனையோடு நின்றார் பார்வதி.

“என்னம்மா இப்படியே நிக்கறீங்க? என்னோட குழந்தை நம்ம சொந்தபந்தகளுக்கு மத்தியில் முழுமையான உரிமையோட இந்த குடும்பத்தோட வாரிசா பிறக்கனும்னு ஆசைப்படறேன். இன்னைக்கு நீங்க சொல்றீங்களா இல்லையா?…”

“வைத்தி நான் ஒரு நேரம் பார்த்து பக்குவமா சொல்றேன் சொல்றேன்ல. அப்பாருக்கு இப்ப வரைக்கும் மேலுக்கு முடியல. நீ இப்படி சுயநலமா இருக்கியே? உங்க அப்பா மேல உனக்கு கொஞ்சமும் அக்கறையே இல்லல?…”

தன் புடவை தலைப்பை எடுத்து வராத கண்ணீரை துடைத்தபடி அடிக்கண்ணால் வைத்தியநாதனை பார்த்தார் தாய் பாரிஜாதம். அவரின் நடிப்பில் வைத்தியநாதன் குற்றவுணர்வில் தவித்தபடி இருக்க,

“உன்னை மாதிரி அவசரப்பட்டு நீ பண்ணியிருக்கிற காரியத்தை சொல்லி அவருக்கு ஏதாவதுன்னா என்னால தாங்கமுடியாது. நாளை நானும் இருக்கமாட்டேன் பார்த்துக்க…” மிரட்டல் குரலில் அவர் சொல்ல வைத்தியநாதனுக்கு வியர்த்தது.

“அதுக்குன்னு இன்னும் எவ்வளவு நாள்ம்மா இப்படியே இருக்கறது? அகிலாட்ட சொல்லிட்டு வந்திருக்கேன்மா. ஒரு பொண்ணா அவ தைரியமா அவ வீட்ல சொல்லிட்டா. ஆனா என் சூழ்நிலை தெரிஞ்சு எனக்காக இத்தனை நாள் பொறுமையா இருக்கா. இன்னைக்கு அத்தனை நம்பிக்கையா நான் சொல்லிட்டு வந்தேன்மா…” பரிதவிப்புடன் வைத்தியநாதன் பேச,

“நம்ம குடும்பத்துக்கே ஆகாத ஒண்ணை செஞ்சுட்டு அதை இத்தனை வளரவிட்டுட்டு இன்னைக்கு உடனே சொல்லனும்னு நின்னா உன் இஷ்டத்துக்கு எல்லாம் செய்ய முடியுமா? அதெல்லாம் முடியாது. அவருக்கு எப்ப சரியாகுதோ அப்பத்தான் சொல்லமுடியும்…” இரக்கமின்றி அவர் பேச,

“அம்மா எனக்காகம்மா. என் குழந்தைக்காக. நீங்க பேசுங்க. இல்லைனா நானே பேசறேன்….”

“ஓஹ் உனக்கு உன் அப்பா எதிர்ல நின்னு பேசற அளவுக்கு தைரியம் வந்திருச்சா? எல்லாம் அவ போட்ட மந்திரம் தானே? இன்னைக்கு அப்பாவை எதிர்த்து பேசுவ, நாளைக்கே அவளை இந்த வீட்டுக்குள்ள கொண்டுவந்து எங்களையும் என் மவ வயித்து பிள்ளைகளையும் கழுத்தை பிடிச்சு வெளியில தள்ளுவ அப்படித்தானே?…”

“அம்மா நான் எப்ப அப்படியெல்லாம் சொன்னேன்? அகிலா எதுவுமே பேசலைம்மா. நானே தான்…” அதிர்ந்துபோய் தன தாயிடம் இறைஞ்ச,

“வெளியில இருக்கறப்பவே அவ இந்த குடும்பத்தை ஆட்டி வைக்கனும்னு பார்க்கறாளே? இந்த வீட்டுக்குள்ள மட்டும் அவ வந்துட்டா? இன்னும் என்னவெல்லாம் பண்ணுவாளோ? இப்ப நீ நடந்துக்கறத பார்த்தா உன் அப்பாட்ட சொல்லனுமா வேண்டாம்மான்னு எனக்கு யோசிக்க தோணுது…”

“என்னம்மா இப்படி சொல்றீங்க? அப்பாட்ட சொல்லாம?…”

“ஏன் சொல்லனும்? நான் நினைச்சா அந்த நாயை விரட்டிட்டு இப்பவே என் பூரணியை உனக்கு கட்டிவைக்க முடியாதா?…”

“என்ன பேசறீங்க? அகிலா என்னோட சட்டப்படி மனைவி. நம்ம சொந்தங்களுக்கு தான் தெரியலையே தவிர சட்டப்படி அவ எனக்கு மனைவி. உங்களால எங்களை பிரிக்க முடியாது அம்மா…” என்றுவிட்டு திரும்ப அதிர்ந்த முகத்துடன் அன்னபூரணி அங்கே நின்றுகொண்டிருந்தாள்.

“அம்மாடி பூரணி…” என வைத்தியநாதனை தள்ளிக்கொண்டு பாரிஜாதம் வந்து பூரணிய கட்டிக்கொள்ள  கண்களில் வழிந்த கண்ணீருடன்,

“அம்மாச்சி மாமா எனக்கு இல்லையா? ஐயோ நான் என்ன அம்மாச்சி செய்ய? இதை ஏன் என்கிட்டே நீங்க சொல்லலை?…” என கதற,

“அப்படி சொல்லாதடாம்மா. பூரணி நாங்க உன்னை அப்படி விட்டுடுவோமா?…” என சொல்லி,

“பாருடா பாவி, தாயில்லா பொண்ணை இப்படி அழ வச்சுட்டியே? இவ கண்ணீர் உன்னை சும்மா விடாதுடா. இவ சாபம் உன்னை வாழவிட்டுடுமா?…” என இஷ்டத்துக்கு பேச,

“ஏய் இந்தா, வாயை மூடிட்டு கொஞ்சம் சும்மா இரு…” என்றபடி வந்தார் கருப்பையா. வந்தவரின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே அஞ்சினான் வைத்தியநாதன்.

“வைத்தி முடிவா கேட்கிறேன். அவளை விட்டுட்டு வர முடியுமா முடியாதா?…” அவர் கேட்க இன்னும் அதிர்ச்சி அதிகமானது வைத்தியநாதனுக்கு.

“அப்பா உங்களுக்கு?…”

“ஆமாம்டா, எனக்கு முன்னவே தெரியும் தான். நீயா அவளை விட்டு வரனும்னு நாங்க காத்துட்டு இருந்தோம். பூரணிக்கு தெரியவிடாம அதுக்குள்ளே உன்னை வரவழைச்சிடனும்னு பார்த்தோம்…”

“அப்பா நான் இன்னொரு பெண்ணோட புருஷன். அகிலா இல்லாத வாழ்க்கை எனக்கு நரகம். என்னால எப்படி நம்ம பூரணியை?….” அதற்கு மேல் பேச அத்தனை பயமாய் இருந்தது வைத்தியநாதனுக்கு.

வைத்தியநாதன் பேச பேச ரத்தினசாமி கருப்பையாவின் பின்னால் நின்று முறைத்துக்கொண்டிருந்தான்.

பூரணிக்கு வைத்தியநாதனை கட்டிவைக்க சுத்தமாய் விருப்பமே இல்லை. முன்பானால் உடனடியாக சரியென்று சொல்லிவிடுவான்.ஆனாலின்று இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்த ஒருவன் தன் தங்கைக்கா? பூரணி இரண்டாவதாகவா? இது அவனுக்கு சுத்தமாய் பிடித்தமில்லை.

ஆனாலும் அதை கருப்பையாவின் முன் காட்டிவிடமுடியாது. இந்த குடும்பத்தின் எந்த முடிவுகளாக இருந்தாலும் அவரின் விரல் நுனியில் தான். ரத்தினசாமி அரசியலில் நுழைந்ததும் கூட கருப்பையாவை கொண்டு தான்.

அதன் பொருட்டே அமைதியாக நின்றவரின் மனதில் வைத்தியநாதன் பூரணியை கட்டிக்கொள்ள சம்மதிக்கவே கூடதெனும் பிராத்தனை ஓடிக்கொண்டிருந்தது. கருப்பையா வைத்தியநாதனின் மனதை மாற்ற பேசிக்கொண்டிருக்க,

“ஐயோ, இங்க வாங்களேன். பூரணியை காப்பாத்துங்க…” பாரிஜாதத்தின் அலறலில் அனைவரும் விழுந்தடித்துக்கொண்டு ஓட அங்கே பூட்டப்பட்டாரையின் வாசலில் நின்றுகொண்டு நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தார்.

“பாவி இப்படி அவளோட உயிரை குடிக்கவா வந்திருக்க?…”

வைத்தியநாதனின் கன்னத்தில் மாறி மாறி அறைந்துகொண்டிருக்க ரத்தினசாமி ஆடிப்போய்விட்டார். உயிர் மொத்தமும் தங்கையை எண்ணி துடிக்க,

“பூரணிம்மா…” என கத்திக்கொண்டு அந்த கதவை உடைக்க முயல வேலையாட்களை அழைத்த கருப்பையா கதவை உடைக்க சொல்ல சில நிமிட போராட்டத்தின் பின்னால் கதவு தகர்ந்தது.

“பூரணி…” என கத்திக்கொண்டே உள்ளே பாய்ந்த ரத்தினசாமி அங்கே தூக்கில் தொங்கிய பூரணியை காப்பாற்றி பேனில் இருந்த சேலையை  கழட்டி கீழே வீச,

“முனியா இத வீட்டுக்கு பின்னால கொண்டுபோய் கொளுத்திடுடா…” என பாரிஜாதம் வேலையாளிடம் தூக்கி எறிந்தார்.

“பூரணி அம்மாடி என்ன காரியம்டா பண்ணிட்ட?…” என கட்டிக்கொண்டு ரத்தநிசாமி கதறிய கதறலில் கருப்பையாவின் முகத்தில் அத்தனை வேதனை.

“பாருடா வைத்தி. என் மக அவ பிள்ளைகளை நல்லா பார்துப்போம்னு நம்பி எங்கட்ட ஒப்படைச்சுட்டு நிம்மதியா உசுர விட்டா. ஆனா இப்படி அவ மகளோட சாவுக்கு நீ காரணமாகிட்டியே? நீயும் அந்த மூதேவியும்னல்லாவே இருக்கமாட்டீங்கடா…” பாரிஜாதம் இன்னும் வைத்தியநாதனை அடிக்கப்போக,

“அம்மம்மா…” என திக்கியபடி பூரணி அழைக்க,

“அம்மாடி, என்ன முடிவு எடுத்துட்ட நீ? எங்கள விட்டு போக எப்படிம்மா மனசு வந்துச்சு?…” என கேட்டு அவரை கட்டிக்கொண்டு அழ,

“அம்மாச்சி, நான் அவட்ட பேசிக்கறேன். நீங்க வெளியில இருங்க…” என்ற ரத்தினசாமி சொல்ல கருப்பையாவும் வெளியே சென்றுவிட வைத்தியநாதனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

மூளையே மரத்துவிட்ட உணர்வு. இந்த சூழ்நிலையை கையாள அவரால் முடியவில்லை. என்ன செய்ய? ஏது செய்ய என தெரியாமல் பயத்தில் உடல் நடுங்கியபடி உறைந்த நிலையில் தான் நின்றான்.

“வெளில போங்கன்னு சொன்னது உங்களையும் சேர்த்துதான்…” ரத்தினசாமியின் கடுமையில் இன்னும் பதறிக்கொண்டு வந்தது வைத்தியநாதனுக்கு. எங்கே அங்கே நின்றால் ரத்தினசாமி அடித்துவிடுவானோ என பதறினான்.

அவர்கள் சென்றதும் அரைமணி நேரம் அமைதியிலே கழிந்தது. ரத்தினசாமிக்கு பூரணியின் இந்த செயலை ஜீரணிக்கவே நேரம் தேவைப்பட்டது. தன் தாயின் மருவுருவாய் பூரணியை நினைத்திருக்க இப்படி நடக்கும் என எதிர்பார்த்திராதவருக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சி.

“அண்ணா…” பூரணி ரத்தினசாமியின் அமைதியில் விசும்ப ஆரம்பிக்க,

“ஏன்டாம்மா இப்படி பண்ணின? நீ என்னோட அம்மாடா. என் தாயிடா. நீ எங்கள விட்டுட்டு போய்ட்டா நாங்க மட்டும்?…” என குலுங்கி அழ,

“என்னால அவரை விட்டுக்குடுத்து வாழ முடியாதுண்ணா. இத்தனை வருஷம் அவரைத்தான் கட்டிக்க போறேன்னு அம்மாச்சி சொல்லி சொல்லி வளர்த்தாங்க. இன்னைக்கு யாரையோ கட்டிட்டேன்னு வந்து நிக்கிறாங்க அவங்க. நான்?…”

“அவன் என்ன பெரிய இவனா? அவனை விட பெரிய மாப்பிள்ளைங்களை நான் உனக்கு பாக்கறேன்டா.  உன் கல்யாணத்தை எப்படி நடத்தறேன்னு மட்டும் பாருடா. அண்ணன் சொல்றேன் அவன் வேண்டாம்டா…”   என சொல்ல பூரணி விரக்தியான முகத்துடன் ரத்தினசாமியை பார்க்க,

“அண்ணனை நம்ப மாட்டியாடா?…” சஞ்சலத்துடன் பூரணியை பார்க்க,

“இத்தனை வருஷம் அவரை புருஷனா நினைச்சுட்டு இன்னைக்கு வேற ஒருத்தனை கட்டிக்கிட்டா நான் என்ன மாதிரியா பொண்ணுண்ணே? தப்பா இல்லையா? நம்ம சொந்த பந்தங்க எல்லார்ட்டையும் நான் தான் அவரை கட்டிக்க போறேன்னு பெருமையா சொல்லிட்டு இருந்தேன்…”

“அதனால என்னம்மா? எவளோ ஒருத்தி கழுத்துல தாலியை கட்டி குடும்பமும் நடத்தி அவ இல்லைனா வாழ்க்கையே இல்லைன்னு சொல்றவன எதுக்கு இழுத்து பிடிக்கனும்?…”

“அவருக்கு மட்டும் இல்லைண்ணா, எனக்குமே அவர் இல்லைனா வாழ்க்கையே இல்லை. நான் நினைச்சவனோட வாழ்ந்தா தான் நான் நல்லவ. என்னால இன்னொருத்தனை என் வாழ்க்கையில ஏத்துக்கவே முடியாது…” என்ற பூரணி,

“ அது மட்டுமில்லை. நாளைப்பின்ன ஒருத்தரும் என்னை பார்த்து விரும்பனது ஒருத்தன கட்டினது வேற ஒருத்தனன்னு நாக்கு மேல பல்ல போட்டு பேசிட்டா அதுக்கு மேல நான் உயிரோட இருக்கவே மாட்டேன்…”

“பூரணி…” என பதற,

“ஆமா அண்ணா. அவர் இல்லைனா என்னோட முடிவு அதுதான்…”

“இது எப்படிமா சரியா வரும்? அவன் இதுக்கு சம்மதிக்கனுமே? அதுவும் இல்லாம நீ எதுக்கு இரண்டாந்தாரமா போகனும்? உனக்கு என்னடா குறை?…” எப்படியாவது பூரணியின் முடிவை மாற்றிவிடமாட்டோமா என்கிற எண்ணத்தில் அவர் தவிக்க,

“எனக்கு அவரோட பொண்டாட்டியா இருக்கனும். அது மட்டும் தான். ஒருத்தனை நினச்சேன். அவனோட தான் வாழனும். எங்கனாலும் அவர் வாலட்டும்னு பார்த்து பார்த்து என்னால தனியா வாழ முடியாது. வாழ்ந்தா அவருக்கு பொண்டாட்டியா மட்டும். இல்லைனா எனக்கு இந்த உயிர் வேண்டாம்…”

இப்படி ஒரு பிடிவாதத்தை பூரணியிடம் எதிர்பாராத ரத்தினசாமி வேறு வழியின்றி தன் தங்கையிடம் கடைசி முயற்சியாக,

“இது நீ மட்டும் எடுக்கற முடிவில்லைம்மா. அந்த பொண்ணும் இதுக்கு சம்மதிக்கனும். அது ஒருக்காலும் நடக்காது. அதுவும் இல்லாம வைத்திக்கு உன்மேல விருப்பமே இல்லைன்னு நினைக்கறேன்….”

“நீங்க ஒன்னும் கவலை படாதீங்க அண்ணா. அதை நான் பார்த்துக்கறேன். நான் அந்த அக்காட்ட பேசிக்கறேன்…”

“அக்காவா? யாரு யாருக்கு அக்கா? பூரணி. நீ என்ன பேச போற?…”

“பேசுவேன். அவங்களோட அவங்க வீட்லயே சேர்ந்து வாழ எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லைன்னு பேசுவேன். என்னால அவங்களை சம்மதிக்க வைக்க முடியும்…”

“என்ன அவ வீட்ல நீ போயா?. அதும் நம்ம சொந்தபந்தம் எல்லாரும் உன்னை இளக்காரமா பார்ப்பாங்கடா…”

“பார்த்தா பார்க்கட்டும். எனக்கு அதைபத்தி கவலை இல்லை. அவர் மனைவியா நான் இருக்கனும். அதுதான் முக்கியம். என்னை பார்க்கறவங்க யாரும் என்னோட துக்கத்தை பங்குபோட்டுக்க போறதில்லை. போற போக்குல என் முதுகுக்கு முன்னாடி கேலி பேசறவங்களும், முகத்துக்கு முன்னாடி உச்சு கொட்டறவங்களும் தானே? அதுக்கு நான் ஏன் முக்கியத்துவம் குடுக்கனும்?…” என்றவர்,

“உங்க கவலை என்ன அவருக்கு இதுல விருப்பமில்லாதது தானே? கண்டிப்பா என்னால அவரை மாத்த முடியும் அண்ணா…” உறுதியாய் சொல்ல பரிதாபமாய் பார்த்தார் ரத்தினசாமி.

அதற்கு மேல் பூரணியின் மனதை மாற்றமுடியும் என்கிற நம்பிக்கை இல்லை. இனி வைத்தியநாதனிடம் தான் பேசவேண்டும் என நினைத்துக்கொண்டே எழ,

“ஒரு நிமிஷம் அண்ணா…” என நிறுத்திய பூரணி,

“இனி அவர் உன் தங்கச்சி புருஷன். மரியாதை முக்கியம். பார்த்து பேசுங்க…” சிரித்த முகமாகவே சொன்னாலும் அதில் தெரிந்த உறுதி ரத்தினசாமியை மீற விடவில்லை.

“புரியுதும்மா…” என சொல்லி குனிந்த தலையுடன் வந்தவர் வாசலில் நின்ற மனைவியை பார்த்து தேங்கினார்.

“பத்மி…” என அழைக்க அவருடன் நின்றிருந்த அதிபனையும் பார்த்து தூக்கிகொண்டவர்,

“அதிபா, அப்பாவை பார்க்க வந்தயா?…” என,

“அப்பா, அத்தை ஏன் அழுதாங்க. பாட்டி அழுதாங்க. எல்லாரும் ஷவுட் பன்றாங்க. பைட் பன்றாங்க. மாமாவை திட்டறாங்க. பேட் ஹேபிட்…” என குற்றம் வாசிக்க,

“ஒன்னும் இல்லைய்யா. எங்க அய்யால. சும்மா தான். நீ இதை பார்க்க கூடாது. உன் ரூம் போகலாம் வா…” ஆறு வயது மகனை தோளில் சுமந்தபடி கொஞ்சிக்கொண்டே அவனை படுக்க வைத்து இன்னும் சில கேள்விகளுக்கு பதில் கூறி உறங்க வைத்துவிட்டு எழும்ப அங்கே பத்மினி கவலையுடன் பார்த்திருக்க,

“இனி வைத்திட்ட தான் பேசனும் பத்மி…” பத்மினியின் எண்ணம் புரிந்தவராக சொல்ல ரத்தினசாமி என்ன சொல்ல போகிறார் என யூகித்த பத்மினி,

“தப்புங்க, அந்த பொண்ணு பாவமில்லையா? வாயும் வயிறுமா ரெண்டு உயிரா இருக்குது. அண்ணனை நம்பித்தான வந்திருக்கு. வேண்டாம்ங்க…”

ரத்தினசாமியிடம் கெஞ்சல் குரலில் கேட்க அவரால் ரத்தினசாமியிடம் மட்டுமே பேச முடியும். இந்த வீட்டில் வேறு எவரிடமும் எதுவும் சொல்லிவிடமுடியாது அவரால்.

அவர் மட்டும் அல்ல சங்கரனின் மனைவிக்கும் அதுதான். பத்மினி தான் அவருக்கு ஆறுதல். ஒருவருக்கொருவர் ஒத்தாசை.

இந்த வீட்டில் கருப்பையாவும் பாரிஜாதமும் வைத்தது தான் சட்டம். அதன் பின் அங்கு ரத்தினசாமி மட்டுமே.

அதன் பொருட்டே ரத்தினசாமியிடம் பத்மினி பேச நினைத்தது. ஆனால் அது எந்தளவிற்கு பலன் தரும்என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

“இது பூரணியோட முடிவு பத்மி. நான் வைத்தி வேண்டாம்னு தான் சொன்னேன். ஆனா என் தங்கச்சி அவன் தான் வேணும்னு நிக்கிறா. அவ விருப்பத்துக்கு சம்மதிக்க வேண்டிய இடத்துல இப்ப அவ என்னை நிறுத்திட்டா…”

“என்னங்க, நான் என்ன சொல்றேன்னா…”

“வேண்டாம் பத்மி, என் தங்கச்சி வேணும்னா இன்னொருத்தியோட வாழ்க்கைய பங்குபோட்டுக்கலாம். ஆனா என்னால முடியாது. வைத்தி பூரணிக்கு மட்டுமே புருஷனா வாழனும். என் தங்கை மட்டுமே முதலா, ஒரே தாரமா வைத்தி பொண்டாட்டியா இந்த உலகத்துக்கு தெரியனும். அதுக்கு நான் என்ன வேணும்னாலும் செய்வேன்…”

ரத்தினசாமி உறுதியுடன் கூறிவிட்டு வைத்தியநாதனை பார்க்க செல்ல ஏற்கனவே அரைஉயிராய் கல்லென இறுகி போய் நின்றார் வைத்தியநாதன்.

“இப்ப என்ன சொல்ற வைத்தி? உனக்காக உயிரையும் விட துணிஞ்சுடா என் பேத்தி. எனக்கு உன்னை விட என் பேத்தி தான் முக்கியம். அவளை இந்த நிலைக்கு தள்ளின அந்த பொண்ணை நான் உயிரோடவே விடமாட்டேன்…”

கருப்பையா மிரட்ட பாரிஜாதமும் வன்மமாய் பார்த்தார். அதற்குள் சங்கரன் வரவழைக்கப்பட்டுவிட பதறிக்கொண்டு வந்தார் சங்கரன். ரத்தினசாமி வந்து நிற்கவுமே,

“சொல்லுய்யா, என்ன செய்யலாம்ன்னு நீயே சொல்லு. அவளை தூக்கிட்டா கேட்க ஆளில்லாதவ போல. செஞ்சிடலாமா?…” கருப்பையா கேட்க,

“வேண்டாம் தாத்தா. இப்ப ஒன்னும் பண்ண வேண்டாம். நான் உங்க பையன்கிட்ட கொஞ்சம் பேசனும்…” என்ற ரத்தினசாமி,

“இங்க பாரு வைத்தி…” என்றுவிட்டு பூரணியின் பேச்சு ஞாபகம் வந்தவனாக,

“ஸாரி, இங்க பாருங்க மாப்பிள்ளை…”

ரத்தினசாமி உறவு முறை சொல்லி அழைக்கவுமே இருந்திருந்த கொஞ்ச நம்பிக்கையும் காற்றில் கற்பூரமென கரைந்தேவிட்டது. வைத்தியநாதனுக்கு தெரியும் ரத்தினசாமிக்கு அந்தளவிற்கு தன் மீது எந்த அபிப்ராயமும் இல்லை என்பதும், தனக்கு திருமணம் ஆகிவிட்டதை அறிந்து இன்னும் வெறுப்பாய் பார்த்ததையும்.

அப்படி இருக்க கருப்பையாவின் மிரட்டலுக்கு இடையில் வைத்தியநாதன் நிச்சயம் ரத்தினசாமி சம்மதிக்க மாட்டான் என்று கொஞ்சம் தைரியமாய் இருக்க இப்பொழுது அதுவும் போனது. பயத்துடன் அடுத்து என்ன வருமென பார்த்து நிற்க,

“நாம இப்ப அந்த வீட்டுக்கு போகனும். அந்த புள்ளைட்ட பேசவேண்டியதிருக்கு. நான் மட்டுமில்ல. பூரணியுமே…” என கூற,

“என்ன என்ன பேச போறீங்க? அகிலா பாவம். விட்ருங்க. நீங்களாவது அப்பாட்ட சொல்ல கூடாதா?…” பதட்டத்துடன் வைத்தியநாதன் பேச,

“இனி பேச வேற எதுவுமே இல்லை. உங்களுக்கு அதுக்கு வாய்ப்பும் இல்லை. இங்க பூரணி தான் முடிவு செய்யனும். அவ முடிவு பண்ணிட்டா…” என்ற ரத்தினசாமி சொல்ல இனி அகிலாவை காப்பாற்றியாகவேண்டுமே இப்போதைக்கு சம்மதித்து வைப்போம் என வைத்தியநாதன் நினைத்தான்.

இப்போதைக்கு சம்மதிப்பதை போல சமத்தித்துவிட்டு சத்தமில்லாமல் அகிலாவை கூட்டிக்கொண்டு எங்காவது போய்விடவேண்டியது தான் என திட்டமிட்டுக்கொண்டிருக்க,

“அம்மாச்சி பூரணியை கூட்டி வாங்க…” என அவரை அனுப்பி விட்டு,

“சொல்லுங்க மாப்பிள்ளை…” என கேட்க,

“அது வந்து இனி நான் சொல்ல என்ன இருக்கு. உங்க முடிவுதான் என் முடிவும். அப்பறம் நான் அகிலாவோட சம்மதத்தையும் வாங்கனும். அது தான் முக்கியம்…”

வைத்தியநாதன் ஒரு வழியாய் உளறாமல் சொல்லிவிட அவரை பார்வையால் துளைத்துக்கொண்டிருந்த ரத்தினசாமி,

“கண்டிப்பா வாங்கிடுவோம். நீங்களே சம்மதிச்சா பின்னால மத்ததை பத்தி கவலை படவேண்டியது இல்லை. நான் எதுக்கு இருக்கேன்?…” என வன்மத்தை மறைத்துக்கொண்டே சிரித்துவிட்டு,

“சங்கரா எல்லாம் தயாரா?…” என கேட்க சங்கரனுமே வந்து ஒரு பாக்ஸை நீட்ட அதை வாங்கிக்கொண்ட ரத்தினசாமி,

“அம்மாச்சிட்ட போய் சீக்கிரம் வர சொல்லு. உன் அண்ணியையும் கூப்பிடு…” என சொல்லி கருப்பையாவின் காதில் எதுவோ சொல்ல அவரும் வேகமாய் தலையசைத்தார்.

அதற்குள் பாரிஜாதம் பூரணியை குளிக்க சொல்லி வேறு புடவை மாற்றி அலங்கரித்து அழைத்துவர வைத்தியநாதனின் உள்ளம் தடதடக்க ஆரம்பித்தது. எதுவோ தவறாக நடக்க இருக்கிறது என அவரின் உள்ளுணர்வு அறிவுறுத்த,

“ஆரம்பிக்கலாம்ய்யா ரத்தினம்…”

பாரிஜாதம் சொல்ல சங்கரன் கொடுத்த பெட்டியிலிருந்து திரும்பாங்கல்யத்தை எடுத்து வைத்தியநாதனிடம் நீட்ட புலி வந்தே விட்டது அவரின் வாழ்க்கையை அடித்து தின்ன.

“என்ன? இது இப்ப எதுக்கு?…” திணறிக்கொண்டு வைத்தியநாதன் அனைவரையும் பார்க்க மற்றவர்களின் முகத்தில் கொஞ்சமும் இளக்கம் இல்லை. அதையும் தாண்டி கருப்பையா முகத்தில் அப்படி ஒரு கொலைவெறி.

அவர்களுக்கு சற்று தள்ளி நின்ற வேலையாள் ஒருவனை கருப்பையா பார்த்துக்கொண்டிருக்க வைத்தியநாதனுக்கு நா உலர்ந்து போனது. எப்போதுவேண்டுமானாலும் கருப்பையா தலையசைத்து அவனை அனுப்பிவிட முடியும். அகிலாவிற்கு ஆபத்து.

வைத்தியநாதனின் ரத்தஓட்டம் அதிகமானது. இனி எந்த பக்கமும் சென்றுவிட முடியாது. இனி தப்பிக்க இயலாது என்றுதான் தோன்றியது. அவர்களை எதிர்க்க தைரியம் வரவில்லை.

உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்று எதிர்க்கும் துணிச்சலும் வரவில்லை. அதை விட பயந்து நடுங்கினார். அகிலாவை காப்பாற்றவேண்டுமே என பயந்தார்.

“தாலியை வாங்கி என் தங்கச்சி கழுத்துல கட்டுங்க மாப்பிள்ளை. அதுக்கப்பறமா அந்த பொண்ணை பார்த்து பேசலாம்…” கத்தி முனையில் நிற்க வைத்து நினைத்ததை நடத்தியும் முடித்துவிட்டனர்.

அன்னபூரணி இந்த உலகத்தையே வென்றுவிட்ட மகிழ்வில் திளைத்துக்கொண்டிருக்க வைத்தியநாதனின் நிலை மிகவும் மோசம்.

பூரணியை அவருக்கு பிடிக்கும் தான். ஆனால் தன் அக்காவின் பெண் என்கிற பாசம் மட்டுமே தான். மற்றபடி வேறு எந்த அபிப்ராயமும் இல்லை.

இப்பொழுதும் அன்னபூரணியின் இந்த தற்கொலை முயற்சியில் பூரணி மேல் எந்த கோபமும் கொள்ளவில்லை. தன்னால் ஒரு பெண் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு சென்றுவிட்டாளே என்று தான் கவலை கொண்டான்.

“இப்ப கிளம்பலாம் நாம…” என கையோடு அழைத்துக்கொண்டு ரத்தினசாமி கிளம்பிவிட இப்பொழுது நடந்ததையே நம்பமுடியாமல் அதிர்ச்சியில் இருந்த வைத்தியநாதனுக்கு எந்த முகத்தை வைத்துக்கொண்டு அகிலாவை பார்க்கமுடியும் என்ற குற்றவுணர்வுடன் கூடிய தவிப்பு பிடித்துக்கொண்டது.

வந்தும்விட்டனர் ரத்தினசாமியுடன் வைத்தியநாதனும், பூரணியும். வெளியில் கார் சத்தம் கேட்கவும் அப்பொழுது தான் வேலையை விட்டு வந்திருந்த அகிலா வாசலுக்கு வந்து பார்த்தார்.

கணவனுடன் இருவர் புதிதாக வந்திருப்பதை பார்த்ததும் வைத்தியநாதனின் உறவினர்கள் தான் தங்களை அழைத்துசெல்ல வந்துவிட்டனர் என நினைத்து மகிழ்ச்சியுடன்,

“ வாங்க வாங்க. உள்ள வாங்க…” என முகம் மலர்ந்து அழைக்க அகிலாவை ஒரு ஸ்நேகபாவத்துடன் பார்த்த அன்ன பூரணி,

“அக்கா, நான் அன்னபூரணி. வைத்தியநாதன் மாமாவோட அக்கா பொண்ணு. இவர் என் அண்ணன் ரத்தினசாமி…” என அறிமுகப்படுத்த,

“ஏன் வெளில நின்னு பேசனும்? உள்ள வாங்க, வந்து உட்கார்ந்து பேசலாம்…”என ஆவலுடன் அழைக்க அகிலாவுடன் பூரணி கை கோர்த்துக்கொண்டு உள்ளே சென்றுவிட ரத்தினசாமி வாசலிலேயே காரில் சாய்ந்து நின்றுகொள்ள வைத்தியநாதன் உள்ளே சென்றான்.

“உட்காருங்க, வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? அச்சோ முதல்ல குடிக்க ஏதாவது தரேன்…” என அகிலா சொல்ல,

“அட இருங்க, ஏன் அவசரப்படறீங்க? அப்பறமா சாப்பிட்டுக்கலாம். உங்கட்ட ஒரு முக்கியமான விஷயமா பேசத்தான் வந்திருக்கோம்…” என பூரணி சொல்ல,

“அதுதான் எனக்கு தெரியுமே. இவரோட அப்பாவும் அம்மாவும் வளைகாப்பு போடற விஷயமா பேசி என்னை அழைச்சுட்டு வர சொல்லியிருப்பாங்க…” என சொல்லிய அகிலாவின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.

அத்தனை நம்பிக்கையாய் சொல்லி சென்றிருந்தான் வைத்தியநாதன். அந்த நம்பிக்கை அகிலாவின் முகத்தில் அத்தனை பெருமையாய் மிளிர்ந்தது என் கணவன் சொல்லியதை செய்துவிட்டார் என.

அது வைத்தியநாதனின் மனதை அறுத்தது. எப்படி ஒரு நம்பிக்கை துரோகத்தை செய்திருக்கிறேன் நான் என உள்ளுக்குள் மறுகினான்.

“நீங்க அவ்வளோ அழகா இருக்கீங்க அகிலாக்கா. இது எத்தனையாவது மாசம்?…” போரனியின் மனதில் ஒரு குற்ற உணர்வும் இல்லை.

பூரணியை பொறுத்தவரை வைத்தியநாதனின் மனைவியாகிவிட்டாலும் அகிலாவின் உரிமையை தான் தட்டிபறிக்கவில்லை. அவர் அவரின் உரிமையில் இருந்துகொள்ளலாம். அவரை விலக சொல்ல போவதில்லை. அவரின் எதிர்காலத்தில் குறுக்கிடவில்லை என தாராளமனதுடன் நினைத்தாள்.

“முதல் முதல்ல வீட்டுக்கு வந்துட்டு சாப்பிட்டுட்டு பேசலாம்ல. உங்க அண்ணன் உள்ள வரலையே…” என கேட்க,

“அவர் கொஞ்சம் கூச்ச சுபாவம். புதுசா உடனே பேசிடமாட்டாரு…” கூசாமல் போய் சொல்லிய பூரணி,

“இன்னைக்கு ஒரு விஷயம் நடந்தது. அதை உங்கட்ட பேசத்தான் வந்தோம்…” என சிரித்துக்கொண்டே வைத்தியநாதனை பார்க்க அவரின் உள்ளம் எகிறிகுதிக்க ஆரம்பித்தது.

‘எப்படித்தான் இந்த பெண்ணால் இத்தனை சாதாரணமாக பேச முடிகிறதோ?’என பார்த்து பயந்துகொண்டிருந்தான்.

“அதுதான் தெரியுமே…” அகிலா சிரிக்க,

“அட அதில்லைங்க அக்கா….” என வெட்கத்துடன் வைத்தியநாதனை பார்க்க,

“அப்போ வேற என்ன?…” என கேட்க,

“அக்கா நீங்க புரிஞ்சுக்கனும். புரிஞ்சுப்பீங்கன்னு நம்பறேன்…” என அவரின் கையை பிடித்துக்கொண்டு கேட்ட பூரணி,

“இன்னைக்கு எனக்கும் இவருக்கும் வீட்ல கல்யாணம் ஆகிடுச்சு…” என சொல்லியேவிட,

“என்ன?. கல்யாணமா? யாருக்கு?…” காதில் விழுந்தது சரிதானா என தெரிந்துகொள்ள அகிலா மீண்டும் கேட்க,

“வந்து , இன்னைக்கு தான் எனக்கு இவருக்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆனது தெரிஞ்சது…”

அதில் ஆரம்பித்து வீட்டில் நடந்ததை ஒன்றுவிடாமல் தனக்கு தெரிந்ததை சொல்ல சொல்ல பூரணியின் கையில் சிறைபட்டிருந்த தன் கையை கொஞ்சம் கொஞ்சமாய் உருவிக்கொண்ட அகிலாவின் பார்வை வைத்தியநாதனை துளைத்தெடுத்தது.

“இவங்க சொல்றது…” வைத்தியநாதனிடம் கேட்க,

“அகிலா, நான்… பூரணி திடீர்ன்னு தற்கொலை பண்ணிக்கறேன்னு, அதான். திரும்பவும் இப்படி எந்த முடிவுக்கும் வரகூடாதுன்னு, உன்னையும் ஏதாவது பண்ணிடுவேன்னு மிரட்டினதால, உன்னை காப்பாத்த…” வைத்தியநாதன் வார்த்தை நாக்கினுள் சிறைபட்டு சிதறியது.

அதற்கு மேல் அகிலாவிற்கு எதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியமின்றி போனது.

வெளியில் சட்டென மழை பிடித்துக்கொள்ள இடியும் மின்னலும் அகிலாவின் மனதின் எரிமலை சீற்றத்தை பறைசாற்றுவதை போல அடித்து பெய்தது. கலக்கம் எல்லாம் சில மணித்துளிகள் தாம்.

“அகிலாக்கா, நீங்க ஒன்னும் கவலை படாதீங்க. பாப்பா பிறக்கற வரைநான் உங்களை நல்லா பார்த்துப்பேன். வளைகாப்பையும் நீங்க ஆசைப்பட்ட மாதிரி சிறப்பா பண்ணிடலாம்…”  என சொல்லி அகிலாவின் நிறைமாத வயிற்றின் மீது கை வைக்க அதை விலக்கிய அகிலா,

“தள்ளி நின்னு பேசுங்க பூரணி. தெரியாதவங்க தொட்டு பேசறது எனக்கு பிடிக்காது. நான் அதை விரும்ப மாட்டேன் எப்பவும்…”

அகிலாவின் குரலில் அத்தனை இறுக்கம். பூரணியின் முகம் மட்டுமல்ல வைத்தியநாதனின் முகமும் மாறிவிட்டது. அவருக்கு இப்பொழுது அகிலாவின் முகம் பார்த்து பயம் பிடித்துக்கொண்டது.

“அகிலா…”

“அகிலாக்கா…”

“நான் யாருக்கும் யாரும் இல்லை. இந்த உரிமையா கூப்பிடறதை இதோட நிறுத்திடுங்க. எனக்கு நெருக்கமில்லாத யாரும் இப்படி உரிமையா கூப்பிட்டா எனக்கு பிடிக்காது. புரியுதா?…”

வார்த்தைகளில் அத்தனை நிதானம். பார்வையில் அவ்வளவு தீர்க்கம். முகத்தில் அப்படி ஒரு தெளிவு. வைத்தியநாதனே இப்படி ஒரு அகிலாவை இன்றுதான் பார்க்கிறான்.

“பூரணி உங்ககிட்ட ஒன்னே ஒண்ணுதான் கேட்கனும். இவர் மேல இருந்த காதலால நான் உயிரோட இருக்கும் போதே பிடிவாதமா கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க சரி. ஆனா உங்களை எல்லாரும் இரண்டாம் தாரம்னு சொல்லுவாங்களே? உங்களுக்கு பரவாயில்லையா?. ஜஸ்ட் ஒரு ஹ்யூமனா தான் கேட்கறேன்…”

“எனக்கு வைத்தியநாதன் பொண்டாட்டின்ற பேர் போதும். அது இரண்டாவதா முதலாவதான்ற பிரச்சனை இல்லை…” பூரணியும் அத்தனை உறுதியாக சொல்ல,

“ஓகே நீங்க கிளம்பலாம்…” என்று வாசலை காட்ட,

“எனக்கே இப்பதான் தெரியுது எங்க வீட்ல மிரட்டி தான் இவர என் கழுத்தில தாலி கட்ட வச்சிருக்காங்கன்னு. உங்களுக்கு கோபம்னா என் மேல க்பபடுங்க. அவர் என்ன பண்ணினார். பாவம்…”

“மிரட்டினா? அதை எதிர்த்து நின்னு போராடி என்னை என் குழந்தையை காப்பாத்தி இருக்கனும். அதை விட்டுட்டு. எப்ப இவர் இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கனும்னு மனதளவில தயார் ஆகிட்டாரோ அப்பவே நாங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லாம போச்சு…”

“அவசரபடாதீங்க அகிலாக்கா…” பூரணி சொல்ல,

“இப்பதான் நிதானமா முடிவெடுத்திருக்கேன்…” என அகிலா சொல்ல,

“அப்படி சொல்லாத அகிலா. என்னை விட்டுடாத. நீ இல்லாம நான் எப்படி வாழ?. கோவத்துல அவசரப்படாதே…” வைத்தியநாதன் கெஞ்ச அவரை கண்டுகொள்ளாத அகிலா பூரணியை பார்த்து,

“அவசரப்படாம நீ ஒரு நாள் நான் ஒரு நாள்ன்னு வாழ்க்கையை பங்குபோட்டு வாழலாம்னு சொல்ல வரீங்களா பூரணி? அப்படி ஒரு அசிங்கமான வாழ்க்கைக்கு நான் ஆள் இல்லை. என்னை பொறுத்தவரை அது அருவருப்பு…”  என சொல்ல பூரணிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.

“ஹ்ம்ம் ஓகே.  எனஃப். நாளைக்கு காலையில கோர்ட்டுக்கு வந்திடுங்க. மியூச்சுவல் டைவர்ஸ் பண்ணிக்கலாம். உங்க தாராள மனசு எனக்கு இல்லைங்க. பெயரளவுல கூட இவரோட மனைவியா வாழ நான் விரும்பலை…” என்று சொல்லி,

“கிளம்புங்கன்னு சொன்னேன். இதுக்கு மேல என்னோட நேரத்தை வேஸ்ட் பண்ணாம கிளம்புங்கன்னு சொன்னேன்…”

அத்தனை கடுமையாக சொல்லவும் குனிந்த தலையுடன் வைத்தியநாதன் செல்ல, பூரணி அகிலாவை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்று காரில் ஏறிக்கொள்ள ரத்தினசாமி அதன் பின் அகிலா கதவை சாற்றும் முன் உள்ளே வந்து நிற்க,

“சொல்லியிருப்பாரே என் தங்கச்சி புருஷன் நடந்ததை. மனசுல பயம் இருந்தா இனி நீ என் தங்கச்சி வாழ்க்கையில இனிமே குறுக்க வரகூடாது. புரியுதா?…”

விரல் நீட்டி எச்சரிக்க ரத்தினசாமியை மேலும் கீழும் பார்வையால் அளந்த அகிலா ‘போடா’ என நினைத்து துட்சமான பார்வையொன்றை வீசி ரத்தினசாமியின் முகத்தில் அடித்ததை போல கதவை படாரென சாற்றி பூட்டிக்கொள்ளவும் ரத்தினசாமியின் முகம் பயங்கரமானது.

“உன் திமிரை அடக்கறேன்…” என கதவின் முன் சத்தமாய் சொல்லி கருவிக்கொண்டே அங்கிருந்து சென்றுவிட,

“என் திமிரை யாராலும் எப்பவும் அடக்கமுடியாதுடா. என் திமிர்தான் என் தைரியம். இனி எனக்கு அந்த தைரியம் அதிகமாவே வேணும். ஏனா நான் ஒரு சிங்கிள் பேரென்ட்…” கர்வமாய் சொல்லிகொண்ட அகிலவேணியின் முகத்தில் ஆயிரம் வெளிச்சபூக்கள்.

மின்னல் தெறிக்கும்…

Advertisement