Advertisement

 “வேணும்னா ஓரமா போய் பேசிட்டு வரியா துவா?…” அஷ்மி கேட்க,
“டாக்டர்?…”
“அதேதான். யாருக்கும் கேட்காம முனுமுனுன்னு என்னமோ மந்திரம் பண்ணினியே. அதான் சொன்னேன். எந்த தொந்திரவும் இல்லாம ஓரமா போய் செய்யலாமே?…”
“என்ன டாக்டர் கிண்டலா? கல்யாணப்பொண்ணு வாய் பேச கூடாது. போய் அங்க அப்படி மேகம் கலையாம உட்காருங்க பார்க்கலாம்…” என,
“அட பார்ரா இங்க புள்ளை பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சிருக்கிறத? என்ன முயலு மயிலு கம்முன்னு இருக்குன்னதும் ஓட்டம் அதிகமகிடுச்சோ? ஜாக்கிரதை…”
“டாக்டர்…” என துவா கத்தும் பொழுதே அதிரூபன் வந்துவிட்டான்.
“துவா வா, பூஜைக்கு நேரமாச்சு…” என அழைத்து செல்ல குழந்தையை அகிலாவிடம் கொடுத்துவிட்டு இருவரும் வாசலுக்கு வந்தனர்.
ஏற்கனவே அனைத்தும் தயாராக இருக்க முகூர்த்த காலை அதிரூபன், துவாரகா, அஷ்மிதா, ராஜாங்கம், பத்மினி இவர்கள் ஐவரும் தொட்டு வணங்கி அதை நட்டுவைத்து அடுத்தடுத்த சாங்கீயங்களை செய்ய துவாரகாவின் மனதினுள் ஏகப்போராட்டம்.
அவளின் கண்கள் சடுதியில் கலங்கி நொடியில் இரண்டு சொட்டு கண்ணீரை  மண்ணில் விட அதிரூபன் கண்டுகொண்டான். அவளின் இந்த கண்ணீருக்கான காரணம்.
அதன் பின் அனைவரும் வீட்டினுள் வந்து அஷ்மிதாவிற்கு ஒவ்வொருவராய் ஆசிர்வாதம் செய்து விபூதி, குங்குமம் பூசிவிட அவர்களின் காலில் விழுந்து எழுந்தாள்.
மூத்த தம்பதியாக இருந்தது ரத்தினசாமியும் பத்மினியும் தான். எனவே அவர்கள் இருவருமாய் சேர்ந்து அவளுக்கு நெற்றியில் இட ரத்தினசாமி முறைத்துக்கொண்டே அழுத்தமாய் அவளின் நெற்றியில் பூச ஒரு நமுட்டு சிரிப்புடன் வாங்கிக்கொண்டவள் திரும்பும் பொழுது வேண்டுமென்றே அவரின் காலில் மிதித்துவிட்டு நகர,
“ஆஆ…” வென்ற அலறலுடன் காலை தூக்கி இரண்டு குதி குதித்துவிட்டவர் அனைவரும் தன்னை பார்ப்பதை கண்டு,
“ஒண்ணுமில்ல, ஏதோ எறும்பு கடிச்சுடுச்சு போல. அதான்…” என அசடு வழிய,
“உங்களோட, வர வா சின்னபிள்ளை மாதிரி நடந்துக்கறீங்க நீங்க. சாப்பிட வாங்க. நாங்க போய் எல்லாம் எடுத்து வைக்கிறோம்…” என்று பத்மினி சென்றுவிட்டார்.
அனைவரையும் சாப்பிட அழைத்துக்கொண்டு சென்றவிட மற்றவர்கள் கிளம்ப ரத்தினசாமி மட்டும் அங்கிருந்த சோபாவில் மெதுவாய் அமர்ந்து தன் காலை பார்க்க அது லேசாய் சிவந்து கன்றி போய் இருந்தது.
“அச்சோ மயிலு என்னாச்சு? கட்டெறும்பு ரொம்ப பெருசோ? இவ்வளவு பெருசா சிவந்திருக்கே?…” என கேலி பேசியவள்,
“நானும் உன் வம்புக்கு வராம தானே இருந்தேன்? நீயும் அதை புரிஞ்சுட்டு பொறுப்பா நடந்துக்க வேண்டாமா? இப்ப பாரு நான் மிதிச்சதை கூட யார்ட்டையும் சொல்ல முடியலை…” என உச்சு கொட்ட,
“இந்த ஜென்மத்துல என்னோட முத எதிரி நீ தான்…” ரத்தினசாமி கர்ஜிக்க,
“சிறுத்தைகள் தன் புள்ளிகளை மாற்றவே மாற்றாதாம். உன்னை சிறுத்தைன்னு சொல்ல முடியாது தான். ஆனா உன்னோட அடிப்படை குணம் மொத்தமா மாறாது தானே? உன் பேத்தி உன் ரத்தம்னதும் தானே உன் மனசு மாறுச்சு. இல்லைனா?…”
அஷ்மி கேட்ட கேள்வியில் முகம் மாறியவர் அங்கிருந்து எழுந்து செல்ல முயல தடுப்பை வந்து நின்றவள்,
“உன் பேத்திக்காகவேனும் உண்மையா இரு மயிலு. அவ்வளவு தான்…” என்றவள்,
“போய் சாப்பிடு. உனக்கு என் கையாள நானே பரிமாறறேன்…” என அழைத்து முன்னால் நடக்க கோபத்துடன் அவளின் பின்னே சென்றவருக்கு சாப்பாடு இறங்கவே இல்லை. கஷ்டப்பட்டு முடித்தவர் எப்போதடா அங்கிருந்து கிளம்புவோம் என்றானது.
ரத்தினசாமி குடும்பம் காலை உணவை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிய பின் மதிய உணவு வரை அதிரூபன் குடும்பம் அஷ்மியின் வீட்டிலேயே இருந்தனர்.
இன்னும் பதினைந்து நாளில் திருமணம். அதற்கு தேவையான அனைத்தும் சரியாக இருக்கிறதா? என கவனித்து பேசிக்கொண்டிருந்தனர்.
“லிஸ்ட் படி எல்லாம் வாங்கியாச்சு அண்ணா. இன்னும் வாங்க வேற ஏதாவது அவங்க எதிர்பார்க்கிறாங்களா? அதாவது வரவங்களுக்கு ஏதாவது முறை செய்யறது இந்த மாதிரி…”
“அப்படி எல்லாம் எதுவும் சொல்லலைம்மா. அவங்க எதுவும் கேட்கலை நம்மட்ட. நம்ம விருப்பம் தான். என்ன ஒன்னு அவங்க பழக்கவழக்கத்துக்கு நம்ம பொண்ணு ஒத்து வரனும். அது ஒன்னு தான் என் கவலை…” என ராஜாங்கம் சொல்ல,
“என் பழக்கவழக்கத்துக்கு அவங்களை வரவைக்கிறேன் டாடி. நீங்க வேணும்னா பாருங்க…” அசலாட்டாய் அஷ்மி சொல்ல,
“போதும்மா. கல்யாணம் வரை உன் வால்த்தனத்தை நீ சுருட்டி எங்கையாச்சும் ஒளிச்சு வை போதும்…” ராஜாங்கம் உண்மையில் வேண்டுதல் போலவே சொல்ல அவரை  பார்த்த அதிரூபனுக்குள் கவலை பிறந்தது.
“நீங்க ஒன்னும் கவலைபடாதீங்க அங்கிள், நான் இருக்கேன்ல. பார்த்துப்பேன்…”
“பாரு பாரு நல்லா பாரு பயாஸ்கோப்பு படத்த பாரு…” என அஷ்மி ஆரம்பிக்க ராஜாங்கம் முறைப்பாய் அவளை பார்த்தார்.
“நீங்க ஏன் அவளை பார்க்கறீங்க அங்கிள். எல்லாம் சரியாகிடும். டோன்ட் வொர்ரி…” என்று தைரியம் சொல்லிவிட்டு அவர்களும் கிளம்பி வீடு வந்து சேர்ந்தனர்.
குழந்தையோடு துவாரகா உறங்க செல்ல அகிலா ஹாலில் தேங்கி நின்றார் அதிரூபனின் வரவிற்காக.
“என்ன அத்தை? ஏதாவது சொல்லனுமா?…” என அவனாகவே கேட்க,
“ஹ்ம்ம் ஆமா, நாளை மறுநாள் பாப்பாக்கு செக்கப் இருக்கு. நீங்க போய்ட்டு வரனும்…”
“ஓகே அத்தை…”
“இல்லை நீங்க அன்னைக்கு பாண்டிச்சேரி வரை போகனும்னு பேசிட்டு இருந்தீங்க. அதான் முதல்லையே சொல்லிடலாம்னு…” என்றதும் யோசனையாக பார்த்தவன்,
“ஓகே அத்தை நான் பார்த்துக்கறேன். செக்கப்க்கு கண்டிப்பா போவேன். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க…” என அவரை அனுப்பிவிட்டு சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்திருந்தான் அதிரூபன்.
இன்றும் அகிலவேணிக்கும் அதிரூபனுக்குமான உறவு தாமரை இல்லை தண்ணீர் போலத்தான் இருந்து வருகிறது.
அது அதிபனுக்கு தெரிந்தாலும் அவன் விட்டுபிடித்தான். இந்தளவிற்கேனும் இருக்கிறாரே என்கிற எண்ணமே அவனை அமைதிப்படுத்தியது.
அவருக்கே என்று தன் மீது முழு நம்பிக்கை வருகிறதோ அன்று மருமகனாய் இல்லாமல் மகனாய் தன்னை ஏற்றுகொண்டால் போதுமானது என்று நினைத்தான்.
ஆனால் அவனுக்கும் தெரியாதது அகிலா ஓரளவிற்கு அவனை ஏற்றுக்கொண்டுவிட்டார்  என்பது. அதை காட்டிக்கொள்ள தான் அவர் விரும்பவில்லை.
சில உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பதே துவாவின் எதிர்காலத்திற்கு நல்லது என நினைத்தார். மனதளவில் அதிரூபனுடனான எதிர்கால வாழ்வு மகளுக்கு நிறைவாய் அமையவேண்டும் என நித்தம் நித்தம் வேண்டிக்கொண்டு இருக்கிறார்.
“துவா, பாப்பா தூங்கிட்டாளா?…” என கேட்டுக்கொண்டே வந்தவன் தன்னுடைய ஷர்ட் பட்டனை கழட்ட ஆரம்பித்தான்.
“ஹ்ம்ம் இப்பத்தான் மாமா? தூங்கிட்டா. ஒரே அலுப்பு. மாத்தி மாத்தி தூக்கி வச்சிருந்தாங்கள்ள. அதான் லேசா குளிக்க வச்சு ட்ரெஸ் மாத்தி தூங்க வச்சேன். நல்லா தூங்குவ அபாருங்க இன்னைக்கு…” என்று மகளை பார்த்துக்கொண்டே பேசிய மனைவியின் முகத்தை ஆராய்ச்சியாக பார்த்தான் அதிரூபன்.
“என்ன மாமா? நீங்க இன்னும் ட்ரெஸ் மாத்தலை?…” என கேட்டு அவனை பார்க்க,
“ஹ்ம்ம், தூங்கிடாத. நான் ப்ரெஷ் ஆகிட்டு வரேன்…”
அதிரூபன் சொல்லிவிட்டு போகவும் படுத்திருந்தவள் எழுந்து அமர ஒருவித படபடப்பாய் இருந்தது அவளுக்கு. அவன் எதை பற்றி பேச இருகிற்றான் என்கிற அனுமானம் கொஞ்சம் இருந்த போதும் அவனே சொல்லட்டும் என காத்திருந்தாள்.
குளித்துவிட்டு வந்தவன் உடைமாற்றி வரும் வரை அமர்ந்தவாக்கில் அவனை பார்த்துக்கொண்டே இருந்தாள்.
“என்ன மேடம் ஒன்னும் பேசாம சைலண்ட்டா இருக்கீங்க?…”
“பேசனும்னு நான் சொல்லலையே மாமா. நீங்கதான் வெய்ட் பண்ண சொன்னீங்க. அதான் எப்ப பேசுவீங்கனு பார்த்துட்டு இருக்கேன்…” அவனின் ஒற்றை கேள்விக்கு இத்தனை பெரிய பதில் சொன்னவளை திரும்பி பார்த்தவன் இலகுவாக ஒரு டிஷர்ட் எடுத்து அதற்குள் தன்னை நுழைத்துக்கொண்டவன் மெதுவாக வந்து அமர்ந்தான்.
“ஹ்ம்ம், இப்போலாம் பதில் கூட நீளமா வருது. ஒன்னுக்கு பத்து பேசற. நான் முதன்முதல்ல பார்த்த துவாரகாவான்னு இருக்கு எனக்கு…” அவளோடு நெருங்கி அமர்ந்தபடி அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டு அவன் ஆரம்பிக்க,
“மாற்றம் என்றைக்குமே மாறாதது மாமா. ஆனா அந்த மாற்ற மனிதர்களிடம் ஏற்படுத்தும் மாற்றங்கள் இருக்கு பாருங்க. அபரிமிதமானது…”
“ப்பா, செமையா சொல்றீங்க முயல்க்குட்டி…” அவளின் கன்னம் கிள்ளியவன் கைகளுக்குள் தன் முகத்தை சாய்த்துக்கொண்டாள்.
“கேட்கனும்னு வந்தீங்க மாமா. இதுதான் கேட்கனுமா?..”
“இல்லைடா, அஷ்மி கல்யாணம் ரொம்ப பக்கத்துல வந்திருச்சு. அங்கிள் முகம் வேற சரியில்லை. எதையோ நினைச்சு பயப்படறார். அதனால நாம ஒரு ஒரு வாரம் முன்னவே அங்க போய் ஸ்டே பண்ணிட்டாலாமா? அங்கிள்க்கும் கொஞ்சம் ரிலீபா இருக்கும். ரிலாக்ஸா பீல் பண்ணுவார்…”
“கண்டிப்பா போகலாம்ங்க. இதென்ன இதுக்கு என்னை கேட்டுட்டு? நமக்கும் ஜாலியா இருக்கும்ல. அம்மாவும் இங்க அங்கன்னு அலையாம அங்கயே இருந்து பார்த்துப்பாங்க. எனக்கும் உங்க பக்கம் கல்யாண சடங்கு எல்லாம் எப்படி செய்வீங்கன்னு பார்க்கனும்னு ஆசையா இருக்கு…”
பேச்சுவாக்கில் வார்த்தைகளாய் வெளிவந்துவிட்ட துவாரகாவின் மனதின் ஏக்கங்களில் அதில் தெறித்த உணர்வுகளில் ஸ்தம்பித்தான் அதிரூபன்.
“துவா, உனக்கு எத்தனை பெரிய பாவம் பண்ணிட்டேன்ல?…” சிதறிவிட்ட இதயத்துடன் அவன் கேட்க,
“மாமா, நான் அப்படி எதுவும் நினைக்கலை. ஏன் இந்த மாதிரி. பார்க்கனும்னு தானே சொன்னேன்? நான் எனக்கு விவரம் தெரிந்து எந்த மேரேஜ் பங்க்ஷன்லையும் கலந்துக்கிட்டதில்லை. இது தான் செகென்ட்…”
“அப்போ பர்ஸ்ட்?…”
“நம்மோட மேரேஜ்…” என்றவள்,
“நிஜமா மாமா, நான் யார் கல்யாணத்துக்கும் போனதில்லை. சுரேந்திரன் அங்கிள் வீட்டுக்கு வந்தப்ப தான் அம்மாவுக்கு ஆக்ஸிடென்ட். அதுக்கப்பறம் நான் இங்க. நம்ம கல்யாணம்…” குரல் கம்மா சொல்லியவள்,
“அதனாலையே எனக்கு நேரா ஒரு மேரேஜ் எப்படி நடத்துவாங்க? என்ன பண்ணனும்? இது எதுவும் தெரியாதா, அதான் டாக்டர் கல்யாணத்துல இதையெல்லாம் தெரிஞ்சுப்பேன். நாளைக்கு நம்ம பொண்ணுக்கு அதை எதையும் மிஸ் பண்ணாம நான் பண்ணனுமே?…”
துவாரகா பேச பேச வார்த்தைகளில் இருந்த தவிப்பில் இவனின் மனதின் கனம் கூடியது.பதில் பேசாமல் பார்த்திருக்க,
“மாமா நான் சொல்லிட்டே இருக்கேன். நீங்க தான் ஒன்னும் பேசலை?…”
“ஸாரிடா. உன்னோட கனவுகள் மொத்தத்தையும் கலைச்சுட்டேன்ல…”
“என்னோட கனவு நீங்க மட்டும் தானே மாமா? நான் என் வாழ்க்கையில ஆசைப்பட்ட கனவு ஒரே கனவு. சும்மா மின்னல் மாதிரி வந்தீங்க. என் வாழ்க்கையை வெளிச்சமாக்க. இன்னைக்கு நான் இந்தளவுக்கு சந்தோஷமா இருக்கிறேன்னா உங்களால மட்டும் தான் மாமா. இதை நீங்க மறுப்பீங்களா?…”
“என்னை சமாதானம் செய்ய நீ சொல்ற. ஆனா எனக்கே தெரியுமே நான் பண்ணினது. எத்தனை பெரிய தவறு செஞ்சிட்டேன்…” இன்னும் வருந்தி சொல்ல,
“அப்போ என்னை கல்யாணம் செஞ்சது உங்களுக்கு தவறா தெரியுதா மாமா?…” குறும்பாய் அவள் கேட்டாலும் திடுக்கிட்டு நிமிர்ந்தவன் அவளின் புன்னகையில் தன் வசம் இழந்தான்.
“நீ இருக்க பாரு? முன்னால மிரண்டு பயந்து முழிச்சே என்னை வசியப்படுத்தின. இப்ப பேசி பேசியே வசியப்படுத்தர. எதுவானாலும் நான் உன்கிட்ட இப்பவும் மயங்கித்தான் இருக்கேன். உன்னை எனக்கு காண்பிச்ச அந்த கடவுளுக்கு இந்த ஜென்மம் முழுவதும் கடமைப்பட்டிருக்கேன்…”
“உன்னால மட்டும் தானா என் வாழ்க்கை முழுமையா ஆச்சு. எனக்குன்னு வந்தவ நீ. ம்ஹூம் உனக்குன்னு என்னை வரவச்சவ நீ. இல்லாத வேலையெல்லாம் பார்த்து உன்னை என்னோட இந்த கைக்குள்ள கொண்டுவர நான் பட்ட பாடு இருக்கு பாரேன்…” என்று அவளை கட்டிக்கொண்டு அண்ணார்ந்து பார்க்க,
“மாமா, திரும்பவும் பிளாஷ்பேக்கா?…” என துவாரகா அலற அவளின் காதை கடித்தவன்,
“வாய் மட்டும் தான். சரி சொல்லு. பேபிக்கு என்ன பேர் சூஸ் பண்ணியிருக்க?…”
“என்கிட்டே கேட்டா? அதான் உங்க சித்தப்பாட்ட ஏதோ சொன்னீங்களே? டிஸைட் பண்ணிட்டதா…” என முறுக்கிக்கொள்ள,
“அது சும்மா, இன்னும் பேர் முடிவு செய்யலைனா ஆளாளுக்கு ஒரு பேர் சொல்லுவாங்க. அதான் அப்படி சொல்லிட்டேன். இப்ப நீ சொல்லு…” என கேட்க,
“நிலாவிழி…” என்றாள் துவாரகா.
அவள் சொல்லவும் தன் மகளின் முகத்தை பார்த்தவன் இதழ்களில் அழகிய குறுஞ்சிரிப்பு.
“உண்மை தான். இந்த நிலாவோட விழி. அதான் நிலாவிழி. இதில் நான் எங்கையும் இல்லையே…” துவாரகாவின் முகத்தை நிமிர்த்தி அதிரூபன் கேட்க,
“ஏன் இல்லை மாமா? இந்த நிலவு வலம் வருவது இந்த வானத்தில் தானே மாமா? நீங்க எங்களோட வானம் மாமா. நீங்க இல்லைனா நாங்க இல்லை…” என்றவள் அவனின் மார்பில் தஞ்சம் புக,
“இது போங்காட்டம் துவா. இப்பத்தான் மின்னல்ன்னு சொன்ன. இப்ப வானம்ன்ற. என்னைவச்சு காமெடி பன்ற…” என்று வம்பு செய்ய,
“ஆமா, வானத்துல தானே இடி, மின்னல் எல்லாமே. அது உங்களோட இன்னொரு வெர்ஷன் மாமா. சொல்லலாம் தப்பில்லை…” என்று கண்ணடிக்க அவளின் விளக்கத்தில் முகம் கொள்ளா புன்னகையுடன் அவளுள் தன்னை தொலைக்க ஆரம்பித்தான் துவாரகாவின் மாயக்கண்ணன்.
எந்த உரிமையும் சொந்தமும் வேண்டாமென்று போதிக்கப்பட்டு விலகிய அவளின் வாழ்க்கை போராட்டம், அவள்தான் சொந்தமாய் வேண்டுமென்று இணைய துடித்த அவனின் காதல் போராட்டமும் காதலென்னும் ஒற்றை மையப்புள்ளியில் இணைந்த இரு இதயங்களின் வாழ்க்கை நிறைவாய்.
அவளின் வலிகளை களவாடி அவன் வாழ்க்கையை வரமாய் தந்து அவளின் நேசத்தின் சுவாசமாய் கலந்தான் அவன் அதிரூபன்.
சுபம்

Advertisement