Advertisement

மின்னல் – 30

               “நினைச்சதை விட விசேஷம் நல்லபடியா முடிஞ்சிருச்சு அதி. எனக்கு ரொம்ப சந்தோஷம்…” ராஜாங்கம் அதிபனிடம் கூற அங்கிருந்த அனைவரின் முகத்திலும் புன்னகை.

வளைகாப்பு முடிந்து அவரவர் கிளம்பிவிட அதிரூபன் இல்லத்தில் பத்மினியும் சந்தியாவும் மட்டும் தங்கிவிட்டனர். மாலை கல்லூரி முடிந்து ஸ்வேதா நேராக இங்கே வருவதாய் சொல்லிவிட அவளுக்காக இவர்கள் இங்கே இருந்தனர்.

மாலை டீ குடித்தபடி ஹாலில் அனைவரும் அமர்ந்திருக்க துவாரகா நல்ல உறக்கத்தில் இருந்தாள். அத்தனை களைப்பு. அஷ்மிதா வேறு ஹாஸ்பிட்டலில் இருந்து போன் வந்திருப்பதாய் சொல்லி கிளம்பிவிட பெரியவர்கள் மத்தியில் அதிரூபனும், சந்தியாவும் மட்டும்.

“நான் சொன்னதை பத்தி நீ என்ன நினைக்கிற அதி? மாப்பிள்ளையை பத்தி விசாரிச்சயா?…” ராஜாங்கம் ஆரம்பிக்க,

“எல்லாம் பக்காவா விசாரிச்சாச்சு அங்கிள். நல்லபையன் தான். தாராளமா குடுக்கலாம்…” என அவன் சொல்ல,

“யாருக்கு மாப்பிள்ளை?…” பத்மினி கேட்க,

“நம்ம அஷ்மிக்கு ஒரு வரன் வந்திருக்கும்மா. அதை தான் அதிட்ட நான் சொல்லி பார்க்க சொல்லியிருந்தேன். எனக்கும் அதியை விட்டா யார் இருக்கா? அஷ்மிக்கு ஒண்ணுன்னா அவன் தான எல்லாம் எடுத்து செய்யனும். நான் ஒன்னும் தப்பா சொல்லிடலையே?…” பத்மினி என்ன சொல்வாரோ என பார்க்க,

“இதிலென்ன இருக்கு அண்ணா. கண்டிப்பா அதி தான் செய்யனும். அவன் செய்வான். நீங்க ஒன்னும் கவலைபடாதீங்க. அஷ்மி எனக்கு பொண்ணு மாதிரிதான்…” பத்மினி சொல்லவும் அகிலா அவரின் கையை பிடித்து சந்தோஷமாய் பார்க்க ராஜாங்கத்தின் கண்கள் கலங்கிப்போனது.

“தாயில்லா பொண்ணும்மா. நீங்க தான் அவளுக்கு என்ன செய்யனும் ஏதுன்னு எனக்கு சொல்லனும். எனக்கப்பறம் அவளை பார்த்துக்க ஒரு குடும்பம் இருக்குன்னு நினைக்கிறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா…” என உடைந்த குரலில் பேச,

“ப்ச், அங்கிள் என்ன இது சின்ன குழந்தை மாதிரி. முதல்ல இப்படி கண் கலங்குறதை நிறுத்துங்க. நான் தான் ஏற்கனவே சொல்லிருக்கேன்ல. அஷ்மி எங்க வீட்டு பொண்ணு. நாங்க இருக்கோம் அவளுக்கு. நீங்க இப்படி பீல் பண்ணி அவ பார்த்தா கல்யாணத்துக்கே சம்மதிக்க மாட்டா…” மிரட்டலாய் அவன் சொல்ல,

“அது என்னவோ உண்மைப்பா. பையன் குடும்பத்தை பத்தி அவகிட்ட சொல்லி கல்யாணம் பேசப்போறோம்னு சொன்னா அப்படியான்னு ரொம்ப சாதாரணமா கேட்டுட்டு போறா. கண்டுக்கவே இல்லை. என்னன்னு சமாளிச்சு அவளை மேடையேத்த போறேனோ?…”  ராஜாங்கத்தின் கலக்கத்தில் வாய்விட்டு சிரித்தான் அதிரூபன். அவனை அவர் முறைக்க,

“அதி கிண்டல் பண்ணாத. என்ன சிரிப்பு?…”

“பின்ன என்னம்மா, அவகிட்ட வேற எந்த ரியாக்ஷனை எதிர்பார்த்தாராம் இவரு? அவ அப்படித்தான்னு தெரியும்ல. வானமே இடிஞ்சு விழறதுன்னு சொன்னா ஓரமா போய் விழ சொல்லுன்னு சொல்லுவா…” என்று இன்னும் சிரிக்க அவனின் கூற்றில் இருந்த உண்மையில் அனைவருக்குமே புன்னகை அரும்பியது.

“சரி நீங்க சொல்லுங்கண்ணே. மாப்பிள்ளை அந்நியமா? சொந்தமா?…” பத்மினி கேட்க,

“அந்நியம்னு சொல்லமுடியாதும்மா. தூரத்து சொந்தம்னு சொல்லலாம். அப்பா காலத்துல இருந்த உறவு. விட்டுப்போச்சு. இப்ப தானா தேடி வருது. யார்ன்னு பார்த்தா நல்லா தெரிஞ்ச குடும்பமும் கூட. இன்னொன்னு அஷ்மிக்கு ஏத்த குடும்பம்னும் சொல்லலாம்…”

ஆரம்பித்தவர் சொந்த வளைவுகளை சொல்லி பத்மினிக்கு விளக்கிக்கொண்டிருக்க ஸ்வேதாவும் வந்துவிட்டாள். அதன் பின் துவாரகாவை எழுப்பி அவளுக்கு தானும் சடங்கு செய்யவேண்டும் என அடம்பிடித்து அவளின் கையில், கன்னத்தில் சந்தனமிட்டு வளையல் போட்டு பூ தூவி குதூகலித்தாள்.

அவளின் ஆர்பாட்டத்தில் துவாரகாவிற்குமே சிரிப்பு தான். அகிலா அனைத்தையும் பார்வையாளராய் பார்த்திருந்தார். இரவு வரை இருந்துவிட்டு சந்தோஷ் அவர்களை அழைக்க வந்த பின்னர் தான் கிளம்பினர். வரமாட்டேன் என்று அடம்பிடித்த ஸ்வேதாவை கல்லூரி தேர்வை காரணம் சொல்லி சந்தோஷ் தான் இழுத்துசென்றான்.

மறுநாள் காலை பரபரப்பாக அதிரூபன் கிளம்பிக்கொண்டிருக்க துவாரகா அவனை பார்த்தபடி ஜூஸ் குடித்துகொண்டிருந்தாள்.

“துவா சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குல? நான் வர லேட் நைட் ஆகிடும். ஒழுங்கா சாப்பிடனும். மறக்காம வாக்கிங் போ. மூச்சுவாங்குது, கால் வலின்னு அத்தையை ஏமாத்தின பார்த்துக்கோ. ஸ்வீட் சாப்பிடாத. அஷ்மி ஸ்ட்ரிக்ட் ஆடர். என்னை தொலைச்சிடுவா. அத்தை அசந்த நேரமா பார்த்து மாடி ரூம்க்கு போன நான் என்ன செய்வேன்னே தெரியாது. புரியுதா?…”

அரட்டலும் மிரட்டலுமாய் அவளை அவன் எச்சரித்துக்கொண்டிருக்க அனைத்தையும் பாவம் போல கேட்டு தலையை அசைத்தாள் துவாரகா. எதை எல்லாம் செய்ய கூடாது என்பானோ அதைத்தான் செய்துவைத்து அவனிடம் வாங்கிக்கட்டுவாள்.

மாடியில் உள்ள தங்களது அறை அவளுக்கு அத்தனை ஸ்பெஷல். கர்ப்பம் தரித்த பின்னர் அவளின் உடல்நிலையை முன்னிட்டு மாடிக்கு செல்வதற்கு தடை விதித்தனர் அஷ்மியும், அகிலாவும். அதன்பொருட்டே கீழறைக்கு அவள் மாற்றப்பட்டது.

ஆனாலும் யாரும் இல்லாத நேரம் அங்கு சென்று அமர்ந்திருப்பது அவளுக்கு பிடித்தமான ஒன்று. அங்கு தரும் உணர்வு கீழே இருக்கும் அறையில் அவளுக்கு கிடைப்பதே இல்லை.

“அங்கயும் நான் தான் இருந்தேன். இங்கயும் நான் இருக்கேன். அப்படி என்ன அந்த ரூம் மட்டும் உனக்கு இவ்வளவு பிடித்தம்?…” என கேட்டு அவ்வப்போது கேலியும் செய்வான். அத்திபூத்தார் போல சண்டையுமிடுவான் அதிரூபன்.

“துவா நான் சொல்லிட்டே இருக்கேன். வாயே திறக்காம இருந்தா என்ன அர்த்தம்?…” வேகமாய் அவள் புறம் திரும்ப,

“ஜூஸ் குடிச்சுட்டு இருந்தேன் மாமா…”

“உன்னை என்ன தான் செய்ய? காலைல ஆறு மணிக்கு யாராவது ஜூஸ் குடிப்பாங்களா? சூடா பால் கொண்டு வந்தா தாகமா இருக்குன்னு நீ ஜூஸ் கேட்கற. என்ன டேஸ்ட் உன்னோடது?. வரவர ரொம்ப அடம்பிடிக்கிற…” என அலுத்துக்கொண்டவன்,

“இங்க பாரு துவா, கிளைமேட் வேற மோசமா இருக்கு. ஜில்லுன்னு சாப்பிடாத. ப்ச். கேட்கமாட்ட இல்ல. கொஞ்சமா சாப்பிட்டு சூடா தண்ணி குடிச்சுடு. சரியாகிடும். நான் மாப்பிள்ளை வீட்ல போய் பேசிட்டு வந்திடறேன். அங்கிள் வெய்ட் பண்ணுவாரு. வர டைம் ஆகிடும். புரியுதாடா?…” என கெஞ்சலாய் அவன் சொல்ல அதற்கும் தலையசைத்தாள்.

அவளிடம் பேசிக்கொண்டே ஹாலிற்கு வர அகிலா ராஜாங்கத்திடம் மாப்பிள்ளை வீட்டில் என்ன பேசவேண்டும் அவர்களிடம் என்ன கேட்க வேண்டும் என சொல்லிக்கொண்டிருக்க அவரும் தலையாட்டிக்கொண்டிருந்தார்.

“போலாமா அங்கிள்…”

“எஸ், நான் ரெடி…” என்று எழுந்து நிற்க,

“அத்தை நான் துவாட்ட எல்லாம் பேசிட்டேன். பார்த்துக்கோங்க. மறக்காம வாக் பண்ண சொல்லுங்க. கால் எல்லாம் நீர் கோர்த்திருக்கு. ஆயில் அப்ளே…”

“நான் பார்த்துப்பேன்…” அவனை பேசவிடாமல் ஒற்றை வார்த்தையில் அகிலா சொல்ல சிரித்துக்கொண்டான் அதிரூபன்.

“போய்ட்டு நைட் வந்திடுவோம் அகிலாம்மா. எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. துவா பிரசவ நேரத்துல கல்யாண வேலையா இழுத்தடிக்கிறேனோன்னு எனக்கே கில்டியா இருக்கு…” சங்கடமாய் சொல்ல,

“அட என்னண்ணே? அதான் இன்னும் இருபது நாள் இருக்குல. நீங்க நல்ல காரியத்துக்காக கிளம்பும் போது இப்படி எல்லாம் கவலைப்படகூடாது. வந்து சாமியை கும்பிட்டுட்டு கிளம்புங்க…” என பூஜை அறை நோக்கி அகிலா நடக்க மற்றவர்களும் அவரின் பின்னே.

“நீ அங்கயே நில்லு. குளிக்காம உள்ள வர…” துவாரகாவை நிறுத்திவிட்டு கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டியவர் ராஜாங்கத்திற்கு காட்ட செல்லும் காரியம் நல்லவிதமாய் நடந்தேற வேண்டுதலுடன் ஒற்றிகொண்டார்.

அதன்பின் அதிபனிடம் காண்பிக்க தானும் ஒற்றிகொண்டவன் விபூதியை தனக்கு இட்டுக்கொண்டு மீண்டும் விபூதியை எடுத்துக்கொண்டு துவாரகாவின் நெற்றியில் பூசிவிட்டு தலையசைத்து விடைபெற்றான். அவனின் செய்கையில் அகிலாவின் முகத்தில் முறுவல். துவாரகா வேகமாய் அவனின் பின்னே செல்ல,

“துவா நைட் மழைபெஞ்சு தண்ணியா இருக்கு. நீ உள்ளயே இரு…” என அதிரூபன் அங்கிருந்தே குரல் கொடுக்க சிணுங்கலுடன் அமர்ந்துகொண்டாள்.

“ஒரு நிமிஷம்…” என்றவாறு வேகமாய் ஒரு பேக்குடன் ஓடிவந்த அகிலா,

“இதுல டிபன், ப்ளாஸ்க்ல டீ இருக்கு. பிஸ்கட்ஸ் கூட. போற வழியில சாப்பாடு எப்படி இருக்குமோ? அதான் நானே ரெடி பண்ணிட்டேன். சாப்பிட்டுக்கோங்க…” பார்வை ராஜாங்கத்திடம் இருந்தாலும் அதிரூபனிடம் பேக்கை கொடுத்தார் அவர்.

வாங்கி வைத்துவிட்டு காரை அவன் கிளப்ப, “மாமியாருக்கு உன் மேல ரொம்ப கரிசனம் தான்ப்பா…” என ராஜாங்கம் சொல்ல தலையசைத்து அதை ஆமோதித்தான் அதிரூபன்.

மாலை வரை இருந்த வானிலை அப்படியே தலைகீழாய் மாறிவிட்டிருந்தது. வீட்டின் வெளியில் தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தவள் பயங்கரமான இடி சத்தத்தில் மிரண்டுபோய் தன்னுடைய வயிற்றை ஆதரவாய் பிடித்துக்கொண்டவள் வீட்டிற்குள் செல்லும் முன் இனி மின்னலுடன் பலத்த காற்றுடனும் பேய்மழை கொட்ட ஆரம்பித்தது.

பயந்துப்போய் வேகமாய் வாசலுக்கு வந்த அகிலா,

“உன்னை வெளில வாக்கிங் போகாதன்னு சொன்னேன்ல துவா. ஏன் கேட்காம போன? மாடியில துணி எடுத்துட்டு வரதுக்குள்ள இப்படியா? உள்ள வேலையா என்னை அங்க இங்க இருக்க விடமாட்டேன்ற. ஹால்ல உண்ண காணோமேன்னு பதறிப்போய் வந்தேன்…”

அவளை திட்டிக்கொண்டே ஒரு டவலை எடுத்துவந்து லேசாய் நனைந்துவிட்டிருந்த அவளின் தலையை துவட்ட ஆரம்பித்தார்.

“போய் வேற ட்ரெஸ் மாத்திக்க. குடிக்க சூடா ஏதாவது கொண்டு வரேன்…”

“ம்மா ப்ளீஸ், வெல்லம் போட்டு ஸ்ட்ராங்கா ஒரு டீ. உங்க ஸ்பெஷல் டீ…” முகம் சுருக்கி கெஞ்சலாய் கேட்க,

“உன்னை காபி, டீ எடுத்துக்க கூடாதுன்னு சொல்லியிருக்காங்க துவா. பால் கொண்டு வரேன்…”

“நோ ம்மா. ப்ளீஸ், ப்ளீஸ்…”

விடாமல் அவரின் கை பிடித்து கேட்க பிள்ளைதாச்சி என்ன கேட்டாலும் செஞ்சு குடுக்கனும்னு வேற மாமியார் சொல்லியிருக்காங்க.

“சரி கொஞ்சமா கொண்டுவரேன். நீ போய் ட்ரெஸ் மாத்திட்டு வா…” என அனுப்பிவிட்டு கிட்சனிற்குள் நுழைந்தவரின் முகத்தில் அப்படி ஒரு புன்னகை.

இப்பொழுதெல்லாம் துவாரகா அவரிடம் சிறுபிள்ளை போல நடந்துகொள்கிறாள். கெஞ்சல், கொஞ்சல், பிடிவாதம், அடம் என  சிறுவயதில் செய்யவேண்டியதெல்லாம் அவள் இப்பொழுது செய்ய மனதிற்குள் அதை ரசித்தவருக்கு அத்தனை ஏக்கமாய் இருந்தது.

இந்த நாட்கள் அனைத்தும் மாறி பின்னோக்கி சென்று துவாரகாவை தான் பெற்றெடுத்த நாளில் காலசக்கரம் நின்றுவிடாதா? கடவுளே எனக்காக, எதையும் காணாமல் வளர்ந்துவிட்ட என் பெண்ணுக்காக அந்த அதிசயத்தை நிகழ்த்துவாயா? என் பொண்ணை சீராட்டி வளர்க்க இன்னொரு வாய்ப்பை வழங்குவாயா? என அவரின் மனம் குமுறியது.

“ம்மா டீ போட்டாச்சா?…” அங்கிருந்து அவளின் குரல் ஒலிக்க,

“இதோம்மா…” என்று வேகமாய் வெல்லம் கலந்து எடுத்து சென்றார்.

“என்னம்மா இது கிணத்துக்கு கீழே இருக்கு டீ?…” என டீ கப்பை காண்பித்து உதட்டை பிதுக்கினாள்.

“போதும், போதும். இவ்வளவு தான்…” என சொல்லி முறைக்க,

“ஹ்ம்ம் ஹ்ம்ம் சும்மா முறைக்காதீங்க…” என்கிற சலிப்போடு குடித்து முடித்தவள் அதிரூபனுக்கு அழைப்பு விடுத்தாள். எத்தனை முறை முயன்றும் இணைப்பு கிடைக்கவே இல்லை.

அகிலவேணி டெலிபோனில் முயற்சி செய்ய அதுவும் உயிரிழந்துவிட்டது.

“மழை பெய்யுதுல. அதான் ப்ராப்ளம் ஆகிடுச்சு போல. ஒரு மழைக்கு தாங்கமாட்டிக்கு இந்த ஊர். விடு அங்க இருந்து கிளம்பறதா சொன்னாருல்ல. வந்திடுவாங்க…” என சொல்ல ஏனோ படபடப்பாய் இருந்தது துவாரகாவிற்கு. சிறிது நேரத்தில்,

“அம்மா, அகிலாம்மா…” என வாசலில்  ட்ரைவர் வந்து நிற்க,

“என்ன வேலு? ஏன் பதட்டமா வந்திருக்க?…”

“அம்மா, வீட்ல கரண்ட் இல்லைம்மா. வொய்ப்க்கு திடீர்ன்னு பிட்ஸ் வந்துருச்சும்மா. எனக்கு என்ன பண்ணன்னே தெரியலை. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கம்மா. ஒரு ஆட்டோவும் வரலைமா…”என்று சொல்லி அழ,

“ஒன்னும் பதட்டபடாத வேலு. கார் எடுத்துட்டு நீ கிளம்பு. முதல்ல பொண்டாட்டியை பாரு…”

“அம்மா, ஐயா வந்தாருன்னா…”  தயக்கமாய் பயத்துடன் சொல்ல,

“இங்க இப்ப எந்த அவசரமும் இல்லை வேலு. முதல்ல பேசிட்டே நிக்காம கிளம்பு. நான் சொல்லிக்கறேன் அவர்ட்ட…” என்று அனுப்பிவைத்தார்.

அந்த ஏரியாவின் முடிவில் அவன் வீடிருக்க வேகமாய் காருடன் கிளம்பினான் வேலு.

“என்னாச்சும்மா?… துவாரகா கேட்க,

“வேலு பொண்டாட்டிக்கு உடம்புக்கு முடியலையாம். வண்டி எதுவும் கிடைக்கலை மழையில. கார் எடுத்துட்டு போக சொன்னேன்…”

“ஹ்ம்ம், சரிங்கம்மா…”

“வா சாப்பிடு நீ. மணி ஏழரை ஆகிடுச்சு. இப்ப சாப்பிட்டா தான் மாத்திரை போட முடியும். வா…” என அழைக்க,

“இன்னும்கொஞ்ச நேரம்மா ப்ளீஸ்…” என்றவள்,

“ம்மா, எனக்கு நீங்க ஒரு தண்ணி குடுப்பீங்களே லேசா வலிச்சா. அது தரீங்களா?…” என குரல் தடுமாற அவள் கேட்டதும் தான் அவளை பார்த்தார்.

அவளின் முகம் வியர்த்துப்போய் படபடப்பாக இருந்தது.

“துவா, என்ன பண்ணுது? என்னாச்சு?…” என பதறி வர,

“இல்லம்மா, லாஸ்ட்ல ஒருநாள் வலி எடுத்துச்சுல. அதுமாதிரி வலிக்குது போல. ஏன் டென்ஷன் ஆகறீங்க? அந்த தண்ணி குடுங்க சரியாகிடும்…” என கேட்டாள்.

வேகமாய் கிட்சனிற்குள் சென்றவர் மதியம் எடுத்துவைத்திருந்த வடிகஞ்சியை சூடு செய்து வெண்ணையை அதில் போட்டு நன்றாய் ஆற்றிக்கொண்டு எடுத்து வந்தார்.

“மெதுவா வாங்கம்மா. இங்க தான இருக்கேன்…” என சிரித்துக்கொண்டே சொல்ல முயன்றவளுக்கு வலியின் தீவிரம் அதிகமாக உதட்டை கடித்துக்கொண்டாள்.

கண்ணீர் முட்டிக்கொண்டு வருவதை போல தோன்ற ஏனோ இப்பொழுது அவளுக்கே பயம் வந்தது. அன்றைக்கும் போல இன்றைக்கும் பொய் வலியாக இருக்கும் என நினைத்தவள் இது அப்படி இல்லையோ என தோன்ற வைத்தது அந்த பிரசவ வலி.

“அம்மாஆஆஆஆஆ…” என்கிற அலறல் அகிலாவை ஆட்டம் காண வைத்தது. துடித்து கத்தியவளின் வலியை கண்டு கண்கள் கசிய பார்த்தவர்,

“இருடாம்மா, நான் போய் டாக்சி எதாச்சும் கூட்டிட்டு வரேன். ஹாஸ்பிட்டல் போய்டலாம். ஐயோ இருந்ததையும் அனுப்பிவிட்டேனே? என்ன செய்ய?…” என பதறிக்கொண்டு வெளியே செல்ல போனவர் மீண்டும் வந்து,

“துவா இங்கயே இருடா. கொஞ்சம் பொறுத்துக்கோ அம்மா வண்டி பார்த்து கூட்டிட்டு வந்திடறேன். கடவுளே என் பொண்ணுக்கு துணையா இரு…”

வேகமாய் பூஜையறைக்கு சென்று விபூதியையும் குங்குமத்தையும் எடுத்தவர் அங்கிருந்த ஒரு எலுமிச்சை பழத்தையும் கொண்டுவந்து துவாரகாவின் கையில் வைத்துவிட்டு விபூதி குங்குமத்தை அவளின் நெற்றியில் பூசி வேகமாய் வெளியே ஓடினார்.

“செக்யூரிட்டி என் கூட வாங்க. துவாவுக்கு வலி வந்திருச்சு. டாக்சி, ஆட்டோ ஏதாவது இருந்தா கூட்டிட்டு உடனே வாங்க. சீக்கிரம்…” என்றவர் ஒருபக்கம் அவரை அனுப்பிவிட்டு மறுபக்கம் தானும் தேடி ஓடினார்.

அடித்து பெய்துகொண்டிருந்த மழையிரவில் எந்த ஒரு வாகனமும் கண்ணுக்கு புலப்படாமல் போக அகிலாவின் பதற்றம் அதிகரித்தது.

“கடவுளே என் பொண்ணை காப்பாத்து. அவளுக்கும் அவ குழந்தையும் நல்லபடியா பொழைச்சு வரனும் கடவுளே…” என அழுகையுடன் வெறிபிடித்தவர் போல இன்னும் வேகமாய் ஓடினார்.

அதே நேரம் சரியாய் வாசலில் வந்து நின்றது விஷாலின் கார். அவனுடன் அர்னவும்.

“என்ன செக்யூரிட்டி இன்னொருத்தன் எங்க?…” என கோபமாய் மற்றொருவனிடம் விஷால் பிடித்து கேட்க,

“ஸார் ஸார். துவாரகாம்மாவுக்கு டெலிவரி பெய்ன் வந்துடுச்சாம். இப்பத்தான் கார் ஏதாவது பிடிச்சுட்டு வர அகிலாம்மா போய்ருக்காங்க…” என்று நடந்ததை சொல்ல அவனை விட்டுவிட்டே வேகமாய் உள்ளே நுழைந்தனர் விஷாலும் அர்னவும்.

அங்கு சோபாவில் வலியுடன் போராடிக்கொண்டிருந்த துவாரகாவை பார்த்ததும் பதறி,

“அய்யோ, அண்ணி வாங்க ஹாஸ்பிடல் போய்டலாம். கிளம்புங்க…” என வேகமாய் அவளருகே வர ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் இவர்களை பார்த்தவளுக்கு முதலில் தன்னை இவர்கள் அழைத்து சென்ற நாளின் சென்று நின்றது இவளின் ஞாபகத்தின்  கால்தடம்.

“நீங்க எப்படி இங்க? இப்ப புரியுது. வேலுவை நீங்க தானே காரை எடுத்துட்டு போக வச்சது. இப்படி அம்மா வெளில போகவும் என்னையும் கடத்திட்டு போய் கொல்ல பார்க்கறீங்களா? நீங்க மாறிட்டீங்கன்னு நினச்சேன். திரும்பவும் புத்தியை காண்பிக்கறீங்கள? மரியாதையா போய்டுங்கடா…”

இடுப்பை பிடித்துக்கொண்டு பார்த்த துவாரகாவின் பயம் அதிகமானது. அப்படித்தான் நடந்துவிடும் என நினைத்தவள் பயத்தில் அங்கிருந்து எழுந்து செல்ல முயன்று தோற்றவள் வலியுடன்,

“அம்மா…” என அரற்றினாள்.

“ஐயோ அண்ணி நீங்க தப்பா புரிஞ்சுட்டீங்க. அண்ணா தான் மெசேஜ் பண்ணியிருந்தார். வீட்ல போன் டெட்டா  இருக்கு. என்னன்னு போய் பாரு. கூட இருன்னு. அதனால தான் வந்தோம். வந்ததும் நல்லதா போச்சு…” அர்னவ் சொல்ல,

“நான் நம்ப மாட்டேன். நம்பி தான அன்னைக்கும் உங்க கூட வந்தேன். என்னை என்ன பண்ணுனீங்க நீங்க. நான் மாட்டேன். உங்கப்பா வேலை தான இது எல்லாம்…” என கத்த,

“சத்தியமா இல்லை அண்ணி. ப்ளீஸ், வலி அதிகமாகி ரிஸ்க் ஆகறதுக்குள்ள ஹாஸ்பிட்டல் போய்டுவோம் அண்ணி….” விஷாலின் எந்த கெஞ்சலும் எடுபடவில்லை. அவள் முன் மண்டியிட்டு கேட்டனர். எதற்கும் அசரவில்லை. வலியை தாங்கிக்கொண்டு தீப்பிழம்பென நின்றாள்.

வலியின் தாக்கமும், விஷால் அர்னவோடு இருக்கும் தனிமையும் துவாரகாவை பித்துபிடிக்க செய்தது.  அவர்கள் தன்னை ஏதேனும் செய்துவிடுவார்கள் என பயந்தாள்.

இருவரும் கை எடுத்து கும்பிட்டு கேட்டும் துவாரகா நம்பாமல் பார்த்தவள்,

“என்னால வலி தாங்க முடியலைடா. போய்டுங்க இங்க இருந்து. உண்மையில திருந்திட்டா நீங்க போய்டுங்க. என்னோட அம்மா வரவும் அவங்களோட போய்க்கறேன். நீங்க போய்டுங்க…” என விரட்ட,

“நீங்க கேட்க மாட்டீங்க. ஸாரி அண்ணி. உங்களை காப்பாத்த வேண்டியது எங்க கடமை. வேணும்னா உங்க கால்ல விழறோம்…” என அவளருகே செல்ல டீப்பாயில் இருந்த பேப்பர் வெய்ட்டை தூக்கி எறிந்தாள் துவாரகா.

எறிந்த வேகத்தில் அர்னவின் தலையை பதம்பார்த்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. அதை கண்டு மிரண்டு போனவள் அழ ஆரம்பித்துவிட்டாள்.

“விட்டுடுங்கடா. நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணேன்? என் குழந்தைக்காக வேணும் விட்டுடுங்கடா. பாரு அவனுக்கு ரத்தம் வருது. முதல்ல அவனை கூட்டிட்டு போ நீ…” என பிதற்ற ஆரம்பிக்க இனியும் பேசி பயனில்லை என்றுணர்ந்த அர்னவ் தனது கைகுட்டையை எடுத்து நெற்றியில் கட்டியவன்,

“விஷால் தூக்குடா அண்ணியை…” என துவாரகாவின் ஒரு கையினை பிடித்து இருவரும் சேர்ந்து துவாரகாவை காருக்கு தூக்கி வந்தனர்.

பின் சீட்டில் அமர்த்தி விஷால் அவளருகே அமர்ந்துகொள்ள அர்னவ் காரை கிளப்பினான். வாசலில் நின்ற செக்யூரிட்டியிடம் செல்லும் ஹாஸ்பிட்டலை சொல்லி அகிலாவை அங்கு வரசொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

அவர்கள் சென்ற ஐந்தாவது நிமிடம் அகிலாவும் வந்துவிட நடந்ததை அவரின் மூலம் அறிந்துகொண்ட அகிலா வேகமாய் வீட்டினுள் சென்று துவாரகாவிற்கு தேவையான பொருட்களை எடுத்து கிளம்பிவிட்டார்.

காரில் செல்லும் பொழுதே சந்தோஷிற்கு தகவல் சொல்லமுயன்று முடியாமல்போக அதிர்ஷ்டவசமாக அதிரூபன் அழைத்துவிட்டான்.

“அண்ணா நீங்க நேரா ஹாஸ்பிடல் வந்திருங்க. அண்ணிக்கு டெலிவரி பெய்ன் தான். நாங்க கிளம்பிட்டோம்…” என சுருக்கமாக சொல்லி அவனை வர சொல்ல,

“இன்னும் ஒரு மணி நேரத்தில் ரீச் ஆகிடுவேன்டா. பார்த்துக்கோங்க…” என்று மறுபுறம் அவன் சொல்ல வேறேதும் பேசமுடியாது மீண்டும் நெட்வொர்க் சதி செய்தது.

அருகில் அமர்ந்திருக்கும் விஷாலை அத்தனை அடி அடித்தாள் துவாரகா. மனதில் அதுவரை வைத்திருந்த மொத்த கோபத்தையும் அவன் மீது காட்டினாள். தவறாது வாங்கிக்கொண்டவன்,

“அண்ணி ப்ளீஸ் ஸ்ட்ரெய்ன் ஆகாதீங்க. குழந்தைக்கு தான் ஆபத்து. ப்ளீஸ் அண்ணி. என்னை என்னவேணும்னாலும் திட்டுங்க அடிங்க. உங்களை கஷ்டப்படுத்திக்காதீங்க. இப்ப ஹாஸ்பிட்டல் போய்டுவோம். அண்ணா வந்திடுவாரு. நம்புங்க அண்ணி…”  என கெஞ்ச,

“அன்னைக்கும் நம்பித்தானட வந்தேன். கூட பிறந்தவங்க யாருமில்லாம வளர்ந்தவ. உங்க அண்ணனுக்கு அப்பறம் உங்க குடும்பத்துல நீங்க தான் என்கிட்டே தன்மையா பேசுனீங்க. ஒரு சகோதரனா நினைச்சு தானடா வந்தேன். என்னலாம் பேசினீங்க. அப்படிலாம் சொல்லி சொல்லி அடிச்சீங்க?…”

துவாரகா வேதனையுடன் சொல்ல அவள் கொண்ட வேதனை குழந்தை வலிக்கா இல்லை அன்றைய நாளின் வலிக்கா என்று தெரியாமல் அரற்ற தலையில் அடித்துக்கொண்டான் விஷால். சகோதரனாக பார்த்திருக்கிறாளே எங்களை?

“தப்பு பண்ணிட்டோம்டா அர்னவ். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கழுவ முடியாத தொலைக்க முடியாத பாவத்தை பண்ணிட்டோம்டா…” என்று அவன் கதறி அழ அர்னவின் கண்களிலும் கண்ணீர். வெடித்து அழ முடியாதபடி உதட்டை கடித்துக்கொண்டவன்,

“ஹாஸ்பிட்டல் பக்கத்துல வந்துட்டோம். அண்ணி வந்தாச்சு. இப்ப அண்ணனும் வந்துருவாங்க…” என்று சொல்ல விஷாலின் கையை நொறுங்கும் அளவிற்கு இறுக்கி பிடித்தாள் துவாரகா. அத்தனை வலி இருந்த போதும் தாங்கினான்.

“என்னால முடியலை. நான் அவரை பார்க்கனும். மாமாவை பார்க்கனும்…”

கண்ணீரோடு சொல்லியவள் கொண்ட வேதனையில் இவர்கள் இருவருமே துடித்துவிட்டனர். ஹாஸ்பிட்டல் வாசலுக்கு வந்ததுமே வேகமாய் இறங்கியவன் துவாரகாவை தன் கைகளில் தூக்கிக்கொண்டான்.

“என்னை விடுடா. நானே நடந்து வரேன்…” என துள்ளிக்கொண்டு சொல்ல,

“உண்மையா சொல்றேன் அண்ணி. உங்களை என் அம்மாவா நினைச்சுதான் தூக்கினேன். ப்ளீஸ்…” என்றவன் பேசிக்கொண்டே உள்ளே செல்ல,

“விஷால் நீ எமர்ஜென்ஸி போ. நான் அஷ்மி இருக்காங்களான்னு பார்த்துட்டு வரேன்…” அர்னவ் அஷ்மிதா இருக்கும் அறை நோக்கி செல்ல நல்ல வேலையாக அவளும் அங்கே இருந்தாள் சக நர்ஸ்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு. அர்னவ்வை பார்த்ததும் பதறியவள்,

“என்னடா தலையில இவ்வளவு ரத்தம்?…” என வேகமாய் வந்துவிட்டு,

“என்ன எதாச்சும் தகறாரா?…” என்று கேட்க,

“அண்ணிக்கு வலி வந்திருச்சு. சீக்கிரம் வாங்க…” என்றதும் அவளிடமும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அதற்குள் வழக்கமாய் துவாரகாவிற்கு பார்க்கும் மகப்பேறு மருத்துவர் சுபத்ரா வந்துவிட, அகிலாவும் வந்து சேர்ந்தார். நொடியில் அனைத்தும் துரிதமாய் நடந்தது.

அதன் பின் அர்னவிற்கும் முதலுதவி வழங்கப்பட  விஷால் வீட்டிற்கு தகவல் சொல்ல சென்றான். வீட்டில் உள்ள தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள அப்போதுதான் அனைவரும் சாப்பிட்டு முடித்து அன்னபூரணி வைத்தியநாதனை பார்க்க சென்றார்.

பத்மினியும் வேலையாய் இருக்க ரத்தினசாமி தான் அழைப்பை எடுத்தார்.

“பெரியப்பா, சீக்கிரமா ஹாஸ்பிட்டல் வாங்க. அண்ணியை அட்மிட் பண்ணியிருக்கோம்…” பதட்டத்துடன் விஷால் சொல்ல,

“என்னடா சொல்ற? நேத்துத்தான வளைகாப்பு முடிஞ்சது. இன்னும் நாள் இருக்கேடா?…”

“ஐயோ அதை ஆராய்ச்சி பண்ண இதுவா நேரம்? பத்மிம்மாக்கு சொல்லுங்க. கிளம்பி வாங்க…” என்று வைத்துவிட,

“பத்மி, வா இங்க. சீக்கிரம் கிளம்பு. அந்த பொண்ண ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்காங்கலாம். விஷால் போன் பண்ணிருக்கான்…” என சொல்லி விறுவிறுப்பாக கிளம்பிய ரத்தினசாமி பத்மினிக்கு புதிதாக தெரிந்தார்.

வெளியில் சென்று நனைந்தபடி, “டேய் மாரி. வண்டியை எடுடா…” என்றவர்,

“இன்னும் என்ன மசமசன்னு நிக்கிறவ? கிளம்புன்னு சொல்றேன்ல. அதி வேற ஊர்ல இல்லன்னு பசங்க மதியமே சொன்னானுங்க. இப்ப பார்த்தா மழை வேற ஊத்தனும். முருகா…” என கடவுளையும் வேண்டிக்கொண்டு பத்மினியை இழுத்து செல்லாத குறையாக காரில் ஏற்றினார் வீட்டில் வேறு யாரிடமும் சொல்லாமல்.

“வண்டியை சீக்கிரம் வுடுடா. அங்க என்ன செய்தாங்களோ தெரியலை…” ரத்தினசாமிக்கு உள்ளூர ஏதோ படபடப்பாக இருந்தது.

“ஏன் பத்மி, ஆம்பளை புள்ளையா இருக்குமா? பொம்பள புள்ளையா இருக்குமா? தலைச்சன் பேரன் ஆம்பிளைனா அரசனே பொறந்ததா சந்தோசம். பொம்பளை பிள்ளைனா மட்டும் என்ன மகாலட்சுமியே பொறக்கும்…” என கேட்டவர்,

“எதுவா இருந்தா என்ன? நல்லபடியா பொறக்கட்டும். என் அதிபனோட புள்ளை. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் தாத்தா. ஹா ஹா ஹா…” என தனக்கு தானே பேசிக்கொண்டு வந்தவரை பார்க்க என்ன மாதிரி உணர்ந்தார் என்றே தெரியவில்லை பத்மினிக்கு.

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது இதுதானோ? என நினைக்க தோன்றியது. இப்பொழுதெல்லாம் அகிலாவை தான் திட்டுகிறாரே தவிர துவாரகாவை எதுவும் சொல்வதில் என்பது இப்பொழுதுதான் அவரின் புத்திக்கே உரைத்தது. ஏற்றுகொண்டால் சரி என சந்தோஷமாய் இருந்தது பத்மினிக்கு.

வேகமாய் ஹாஸ்பிட்டலுக்கு நுழைந்தவர், “டேய் விஷால் என்னடா? டாக்டர் என்ன சொல்றாங்க? இப்ப அந்த பொண்ணு எப்படி இருக்குது?. ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சாச்சா?. அதி எங்க வந்திட்டிருக்கான்…” என கேட்டு விட்டு அப்பொழுதுதான் அகிலாவை பார்த்தவர் தொண்டையை செருமிக்கொண்டு விஷாலை அழைத்துகொண்டு தள்ளி சென்றார்.

அகிலா வந்ததிலிருந்து யாரிடமும் பேசாமல் இருந்தவர் பத்மினியை பார்த்ததும் கையை பிடித்துக்கொண்டார். அகிலாவின் கை நடுங்க ஆரம்பித்தது.

“அகிலாம்மா, ஏன் பதட்டபடறீங்க? நல்லபடியா குழந்தையை பார்க்கலாம்…” என ஆறுதல் சொல்ல,

“நார்மல் ஆகறதுக்கு வாய்ப்பு கம்மின்னு சொல்லிட்டாங்க…”

குரல் நடுங்க சொல்ல பத்மினிக்குமே திக்கென்று இருந்தது. ஆனால் ஏற்கனவே சஞ்சலத்துடன் இருந்தவரை மேலும் குழப்பவேண்டாம் என்று,

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. கவலையை விடுங்க…” என தேற்ற,

“என்னடா சொல்ற? நார்மலுக்கு வாய்ப்பில்லையா? ஏன்டா இதை சொல்லவா அவ டாக்டருக்கு படிச்சா? கூடவே ஒட்டிக்கிட்டு சுத்துவாளே அவ என்ன சொல்றா? கஷ்டங்களை சரி பண்ணி நல்லபடியா பொறக்க வைக்க தானே இவளுங்க டாக்டருக்கு படிச்சு ஹாஸ்பிட்டல் வச்சிருக்காளுங்க. இப்ப கஷ்டம்னு சொன்னா? அவளை…”

ஏகவசனத்தில் ஹாஸ்பிடல் என்றும் பாராமல் ரத்தினசாமி குதிக்க அதிபன் வந்துவிட்டான் சரியான நேரத்திற்கு. உடன் ராஜாங்கமும்.

“அப்பா…” என இவரை பார்த்ததும்.

“அதிபா அப்பா இருக்கேன்ப்பா. நீ ஒன்னும் கவலைபடாதே…” என சொல்ல அதிரூபனின் பதற்றம் இன்னும் அதிகமானது அகிலாவின் முக கலக்கத்தில்.

துவாரகாவை பார்க்கவேண்டும் என சொல்லிய அதிபனை உள்ளே விடவே மறுத்துவிட்டாள் அஷ்மிதா.

“உள்ள அவனது அவளை சமாளிக்கவா? உன்னை சமாளிக்கவா? பேசாம இங்கயே இரு…” என திட்டவட்டமாய் சொல்லி சென்றுவிட்டாள்.

சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு பெரும்வலி எடுத்து அழகான பெண் குழந்தையை பிரசவித்தாள் துவாரகா. குழந்தையை சிறிது நேரத்தில் வெளியே எடுத்து வர முதலில் தான் வாங்கியவன் பின் அகிலாவை பார்த்து அவரின் கையில் கொடுத்துவிட்டான் அதிரூபன்.

எல்லையில்லா சந்தோஷத்தோடு தம்பிகளை கட்டிக்கொண்டு சுற்றியவன் அப்பொழுதுதான் ரத்தினசாமியை பார்த்தான் அகிலாவின் கையில் இருந்த குழந்தையை ஆவலுடன் எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தவரை காண சிரிப்பாக இருந்தது அவர்களுக்கு.

ஒருவர் மாற்றி ஒருவர் கொஞ்சிய பின் சிறிது நேரம் கழித்து தான் குழந்தை ரத்தினசாமியின் பக்கமே வந்தது. தூக்குவதற்கே கைகள் நடுங்க எப்படி தூக்குவது என தெரியாமல் பரிதாபமாய் பரிதவித்து நின்றார்.

சந்தியாவின் குழந்தையை கூட எட்ட நின்று கொஞ்சி சென்றவர் தன்னுடைய ரத்தம் என்றதும் தூக்கி உச்சிமுகர வேண்டும் என்கிற ஆவல் ஆர்ப்பரித்தாலும் முடியாமல் போக கண்கள் கலங்கிப்போனது.

“எனக்கு தூக்க தெரியலப்பா அதிபா…” சிறுபிள்ளையை போல சொல்லி பாவமாய் பார்க்க அதற்குள் நர்ஸ் வந்து மீண்டும் குழந்தையை வாங்கி சென்றுவிட்டாள்.

“என்ன நான் சரியா கூட பார்க்கலை. அதுக்குள்ளே உள்ள தூக்கிட்டு போய்ருச்சு…” என பொங்க,

“வருவாங்க பெரியப்பா. கொஞ்ச நேரம் இருங்க. திரும்ப தூக்கிட்டு வருவாங்க…” என சொல்லியதும் அங்கேயே அமர்ந்துவிட்டார்.

அந்த நிமிடம் சுற்றியுள்ளவர்களை மறந்தார். அகிலாவை மறந்தார். பூரணியை மறந்தார். தன்னை மறந்தார். தான் உயிராக நினைக்கும் மான் அதிபனின் குழந்தை. தன் வாரிசு. என் பேர் சொல்லி என்னையும் அரட்ட ஒரு ஆள். என நினைத்து நினைத்து மகிழ்ந்தார்.

அங்கே ரத்தினசாமியின் வீட்டில் திடீரென எங்கே சென்றார்கள் என தெரியாமல் யாருமில்லாமல் தனியாய் ஹாலில் அமர்ந்திருந்தார் அன்னபூரணி.  

மின்னல் தெறிக்கும்…

Advertisement