Advertisement

மின்னல் – 29

             “இங்க பாருங்கண்ணா. நான் சொல்றதை கேளுங்க. அதி சின்ன பையன். நாம தான் இந்த நேரம் அவனோட இருக்கனும். நிறைஞ்ச மனசோட வாழ்த்தனும். நாமலே இப்படி அவனை ஒதுக்கறது போல நடந்துக்கலாமா?…”

அன்னபூரணி ரத்தினசாமியிடம் சண்டை பிடித்துக்கொண்டிருந்தார். தங்கையின் கூற்று சரியென தோன்றினாலும் அவருக்கு அங்கு செல்ல இஷ்டமே இல்லை.

மகனின் வீட்டில் ஒரு விசேஷம். செல்வதற்கு அத்தனை ஆவலாக இருந்தாலும் செல்ல பிடிக்காமலும் ஒரு உணர்வு. அதிலும் வறட்டு பிடிவாதம் வேறு.

அங்கே அகிலா இருக்கிறார். அது ஒன்றே அவரின் பிடித்தமின்மைக்கு போதுமான காரணமாக இருந்தது.

இதுவே அகிலா அங்கு இல்லாமல் இருந்திருந்தால் துவாரகாவை பிடிக்காது என்றாலும் மகனின் குழந்தைக்காக தங்களின் தலைச்சன் பேரனுக்காக இந்த விழாவை திருவிழா போல அல்லவா ஏற்பாடு செய்திருப்பேன் என உள்மனம் கொக்கரித்துக்கொண்டே இருந்தது.

“என்னண்ணே இன்னும் இப்படியே இருக்கீங்க? கிளம்புங்க போகலாம்…” அன்னபூரணி விடாப்பிடியாய் கிளம்பி வந்து நிற்க வீட்டில் ஏற்கனவே கிளம்பி வாசலுக்கு சென்றுவிட்டனர்.

பத்மினி மட்டும் இவரை பார்த்து நின்றுகொண்டிருந்தார். வருவாரா? மாட்டாரா? என்கிற பேச்சுவார்த்தைக்கே இடமளிக்காமல் வந்துதான் ஆகவேண்டும் என்கிற பார்வை மட்டுமே அவரிடம்.

“இவளை பாரேன், நீ இத்தனை பேசற. இவ என்னன்னா வாயே திறக்காம நின்னுட்டு இருக்கா. ஒரு வார்த்தை நீங்க வரனும்னு சொன்னா முத்தா உதிர்ந்திடும்?…” ரத்தினசாமி மனைவியை பார்த்து சொல்ல,

“உங்களை வீட்டு வாசல் வரையா வாங்க வாங்கன்னு கெஞ்சிட்டு இருப்பாங்க? அதும் மகன் வீட்டுக்கு. எல்லாரும் கிளம்பியாச்சு. நீங்களும் தான். இப்பவும் கிளம்பிட்டு வரமாட்டேன்னு சொன்னா அதி வந்து கூப்பிடட்டும்னு இருக்கீங்களா? நம்ம புள்ளை வீட்டு விசேஷம். நம்ம குடும்ப விழா. நல்லவிதமா நடக்கனும்னு நமக்குதான் உறுத்து இருக்கனும். உங்களுக்கு ஏன் இல்லை?…”

“பத்மி, நீ பார்த்தியா? நான் என்னவோ அந்த பங்க்ஷன் நடக்கக்கூடாதுன்னு நினைக்கிற மாதிரியில இருக்கு…”

“நீங்க இப்படி பன்றதுக்கு பேர் அதுதான்…”

“ஐயோ போதும், நிறுத்துங்க. கிளம்பலாம் நாம…” அன்னபூரணி எரிச்சலாக,

“மாப்பிள்ளை…” ரத்தினசாமிக்கு தெரிந்தாலும் கேட்டார்.

“நர்ஸ் பார்த்துப்பாங்க அண்ணா. நானும் பங்க்ஷன் முடிஞ்சதும் வந்திருவேன். ஒன்னும் பிரச்சனை இல்லை…” சொல்லிக்கொண்டே வாசலுக்கு நடந்துவிட அதற்காகவே காத்திருந்தவர் போல,

“இன்னும் என்ன இங்க வாய் பார்த்துட்டு இருக்க பத்மி? கிளம்பு. ஹ்ம்ம்…” என வேகமாய் தங்கையின் பின்னே நடந்தார்.

“இதுக்கொண்ணும் குறை இல்லை…” என்ற முணுமுணுப்புடன் தலையில் அடித்துக்கொண்டு பின்னே நடந்தார் பத்மினி.

ஏற்கனவே சில நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே வந்துவிட்டிருக்க அவர்களின் ஆர்ப்பாட்டமாய் சீதனங்களுடன் சென்று இறங்கினர் ரத்தினசாமி குடும்பத்தினர்.

ரத்தினசாமி முகத்தை பெருமிதமாய் வைத்துக்கொண்டார். சடுதியில் மாறிவிட்ட அவரின் முகமாற்றத்தை கசப்புடன் பார்த்தான் அவர்களை வரவேற்க நின்ற அதிரூபனும், அஷ்மிதாவும்.

“மயிலு தேர்ந்த அரசியல்ன்னு நிரூபிக்கிறார் பாரேன்…” அஷ்மி சொல்ல அதிபன் தலையசைத்தான்.

“அதிபா…” என மகனை நோக்கி வந்தவர் முகம் அஷ்மிதாவின் அருகாமையை கண்டு இஞ்சி தின்ற குரங்கை போல ஆனது.

“அதிபா, அப்பா வந்துட்டேன்ப்பான்னு மட்டும் டயலாக் அடிக்கட்டும் இருக்கு இன்னைக்கு. நானும் ஒவ்வொரு தடவையும் சிக்குவாருன்னு பார்த்தா சிலுக்குவார்ப்பட்டிக்கே ஓடற மாதிரி தெறிச்சு ஓடிடறார் மனுஷன். எனக்கும் ஒரு என்டர்டெய்ன் வேண்டாமாடா அதி?…”

“அஷ்மி பேசாம இரேன். உன் அலம்பலுக்கு அளவே இல்லாம போச்சு…” என அவளின் தலையில் கொட்ட,

“இந்த ஜென்மத்துல இது ஒண்ணை மட்டும் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கடா. எப்ப பார்த்தாலும் என் தலையில கொட்ட…” என சொல்லிக்கொண்டே ரத்தினசாமியை பார்க்க அவரும் இவர்களருகே வந்துவிட்டார்.

“உள்ள வாங்கப்பா…” என அவர் பேசுவதற்கே இடமளிக்காமல் உள்ளே அனுப்பிவிட்டான். அஷ்மி முறைக்க அவளை பார்த்து கண்ணடித்தவன்,

“புலி கூண்டுக்குள்ள சிக்கிடுச்சுன்னு நினைச்சுக்கோடா…” அதிபன் சொல்ல,

“நல்ல மகன்டா நீ. இன்னைக்கு கரைச்சு குழம்பு வச்சிடறேன்…” என இருகைகளையும் பரபரவென தேய்த்தபடி உள்ளே சென்றவளை பார்த்து சிரித்தவன் மற்றவர்களை பார்க்க சென்றான்.

ஆர்வமாய் தன்னை பார்த்த அன்னபூரணியை ஒரு தலையசைப்பு மட்டும் கொடுத்து வரவேற்றவன் சங்கரனிடம் சென்றான்.

“வைங்க சித்தப்பா, பசங்க எடுத்து வைப்பாங்க. நீங்க உள்ள வந்து உட்காருங்க…” என சங்கரனை சொல்ல,

“இருக்கட்டும்ய்யா அதி. இந்தா முடிஞ்சது. இதை எல்லாம் கொண்டு போய் உள்ள வைங்க…” என மற்ற பிள்ளைகளிடம் சொல்லியவர் தானும் எடுத்துக்கொண்டு சென்றார்.

ஹாலில் வளையல் போடுவதற்கான அணைத்து வரிசைகளும் நிரப்பப்பட்டிருக்க பத்மினி அதை சரிபார்த்துக்கொண்டிருந்தார். உடன் அன்னபூரணி நான் நான் என முந்திக்கொண்டு நிற்க அகிலா ஒதுங்கி சமையலறைக்குள் சென்று நின்றார்.

“அம்மா அது எல்லாமே ஓகே தான். இப்ப நீங்க எனக்கொரு உதவி செய்யனும். அகிலா அத்தையை…”

“நான் பார்த்துக்கறேன்ப்பா. நீ போய் மத்த வேலையை கவனி…” என சொல்லி அனுப்பிவிட்டார். சிறிது நேரத்தில் ராஜாங்கமும் வந்துவிட அவர் பங்குக்கு ஆன சீர்வரிசைகள் வந்து நிரம்பியது.

“என் பொண்ணு மாதிரி தானே துவா….” என கேட்ட அதிபனின் வாயை அடைத்துவிட்டவர் ரத்தினசாமியிடம் வந்து அமர்ந்தார். அவர் வந்ததுமே முள்மேல் அமைந்திருப்பதை போலானது ரத்தினசாமிக்கு.

“என்ன ரத்தினம் இப்பலாம் கட்சி ஆபீஸ் பக்கமே வரதில்லைன்னு கேள்விப்பட்டேன்…” என கேட்டுவைக்க அதுவரை அமைதியாக இருந்தவரின் முகம் அக்னி என ஜுவாலிக்க ஆரம்பித்தது.

“என்ன கிண்டலா ராஜாங்கம்?…”

முறைப்பாய் கேட்டவர் தூரத்தில் அதிரூபன் இவர்களை பார்த்துக்கொண்டே இன்னொருவருடன் பேசிக்கொண்டிருப்பதை கண்டு தன்னை கட்டுப்படுத்தி ராஜாங்கத்தின் முகம் பார்த்தார்.

ஆனாலும் கண்களில் அத்தனை ஆக்ரோஷம் கொட்டியது. அதையெல்லாம் கண்டுகொள்பரா ராஜாங்கம்? இத்தனை வருடங்களில் எத்தனை பார்த்திருப்பார்.

“என்னதான் பதவியில் இல்லைனாலும் நீங்க உங்களை பிஸியா வச்சிருப்பீங்கன்னு நினைச்சேன். ஆனா அப்படி தெரியலையே?…” வேண்டுமென்றே கேட்டுவைத்து அவரை சீண்ட,

‘அப்பனுக்கும், மவளுக்கும் என்னை சீண்டறதே பொழப்பா போச்சு. எனக்கும் நேரம் வரட்டும். மொத்தமா மூச்சை நிறுத்திடறேன்.’ என வன்மமாக நினைத்தவர்,

“வயசாகுதில்லையா ராஜாங்கம். அதுதான் போதும்னு ஒதுங்கியிருக்கேன்…” என சொல்லி சிரித்தவரின் முகம் பழிவெறியில் பளபளத்தது.

“நல்லதுதான்…” என சொல்லிய ராஜாங்கத்திற்கும் ரத்தினசாமியின் எண்ணம் புரியாமல் இல்லை. அதை கண்டுகொள்ளாமல் வேறு கதைகளை பேச சங்கரனும் வந்து அமர்ந்துகொண்டார் உடன்.

ரத்தினசாமியின் மனது தான் உலைகலனை போல உக்கிரத்துடன் கொதித்துக்கொண்டிருந்தது.

அவருக்கு தெரியும் திட்டமிட்டே இந்த பதவி இறக்கு நடந்திருக்கிறது என. அதன் பின்னால் நிச்சயம் ராஜாங்கம் இருக்கிறதும் தெரியும். ஆனால் அதிபன் இருப்பான் என்பது அவருக்கு இன்றும் தெரியாது. ஆனாலும் ஒன்றும் செய்யமுடியாத நிலை.

அதற்கும் மேல் தன் மீது சில வழக்குகளுக்கான சட்ட ஒழுங்கு நடவடிக்கையும் சேர்த்தே நிகழ அதிலிருந்து வெளிவருவதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது. அதற்கான வழக்குகள் வேறு மிக வலுவாக இருந்தது.

அதிலும் தன்னுடைய செல்வாக்கே கேள்விக்குறி ஆகிவிட்ட நிலை. மீண்டும் அதற்குள் செல்ல அவருக்கு விருப்பமில்லாமல் போனதற்கு காரணம் அதிரூபன். ராஜாங்கம் தன்னை பழி தீர்த்தாலும் தன் மகனை அவ்விடத்தில் மிக ஸ்திரமாய் அமர்த்தி இருந்தார்.

தனக்கு பின் இனி அனைத்திலும் அதிரூபன் தான் என்பதை தொழில்துறையில் மட்டுமல்லாது அரசியல் வட்டாரங்களுக்கும் உணர்த்தி இருந்தார் ராஜாங்கம். அந்தவகையில் ஒருவித மகிழ்ச்சி தான் ரத்தினசாமிக்கு.

தான் செய்யவேண்டியதை ராஜாங்கம் செய்திருந்தாலும் அவரின் மீதான கோபமும் மட்டுப்பட்ட மறுத்தது ரத்தினசாமியினுள். இவர்களுக்கு தான் என்ன செய்துவிட்டேன்? என நினைத்து நினைத்து வஞ்சம் வளர்த்தார்.

அரசியலில் நுழையாமலே மிகப்பெரும் இடத்தை அதிரூபன் பற்றியிருந்தான். ரத்தினசாமிக்கே இதில் ஆச்சர்யமே. பெருமிதமும் கூட. அதற்காக தன்னை டம்மியாக்குவதா?

இதுதான் அவரை பெரிதும் குடைந்துகொண்டு இருந்தது. அதன் பின் அரசியலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலக ஆரம்பித்தார். தன்னுடைய இருப்பை எதை செய்தாவது உணர்த்திக்கொண்டே இருந்தவருக்கு இப்பொழுது அப்படி செய்ய தோன்றுவதில்லை.

இப்பொழுதும் தன் மகன் வீட்டிற்கு வேகமாய் வந்துவிட்டாலும் வரும் பொழுது இருந்த உற்சாகம் முற்றிலும் வடிந்துபோனது. இங்கு அவருக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டதை கண்கூடாக பார்த்தவர் மனம் வேத்தும்பி அமர்ந்துகொண்டார்.

“அதி துவாக்கு வாங்கின வளையலை என்னோட பேக்ல வச்சிருக்கேன். போய் எடுத்துட்டு வாயேன். கீழே துவா ரூம்ல தான் இருக்கு…” அஷ்மிதா அவனை அனுப்பி அகிலாவிடம் சென்றாள்.

“இருக்கிற வேலை பத்தாதுன்னு இவ வேற எனக்கு வேலை வைக்கிறா…” என்றபடி செல்ல அங்கே நடக்கமுடியாமல் இங்கும் அங்கும் மெதுவாய் நடைபழகும் குழந்தையை போல எட்டுவைத்து நடந்துகொண்டிருந்த மனைவியை பார்த்ததும் புன்னகை மலர்ந்தது அதிபனுக்கு.

உள்ளே வந்தவன் சிரித்தபடி அவளின் முன்னே வந்து நின்று மேலும் கீழுமாய் அவளை அளவெடுப்பவனை போல பார்க்க,

“மாமா, என்ன பார்வை இது? வெளில கூப்பிட்டாங்களா?…” என கேட்க,

“ம்ஹூம் இல்லை…” என்றவன் இன்னும் அப்படியே இருக்க அவனின் பார்வையிடலில் அவளுக்குத்தான் ஒரு மாதிரியாக போனது.

“ப்ச், என்ன இது? எதுக்கு வந்தீங்க மாமா? கிளம்புங்க. எல்லாரும் வெளில இருப்பாங்க…” என அவனை அனுப்ப பார்த்தாள்.

பட்டுப்புடவையும், நகைகளும் இன்றைய நாளுக்கான அலங்காரமும் ஏற்கனவே அழகாய் இருந்தவளை பேரழகியாய் மாற்றியிருந்தது.

அதிலும் அம்மா அருகிலிருக்கும் மகிழ்ச்சி அவளின் முகத்தில் நிரந்தர மலர்ச்சியாய் குடிகொண்டிருக்க, தாய்மையின் பூரிப்பும் அவளின் அழகை மெருகேற்றியிருந்தது.

அவளிடமிருந்து பார்வையை திருப்ப முடியாதவன் தடுமாறி நிற்க அவனின் இந்த உணர்வு துவரகாவையும் தாக்கியது.

“மாமா…” என திக்கி திணறி தவிப்புடன் அழைக்க அதை கவனிக்காதவன் அவளருகே வந்து நெற்றியில் மென்மையாய் முட்டி கீழே கால்களை மடக்கி அமர்ந்து புடவையை விலக்கி அவளின் மணிவயிற்றில் அழுத்தமான முத்திரையை அவன் பதிக்க கடலின் ஆள் விழுங்கும் அலைகள் போலே அவளுள்ளும் அலைகள் அடித்து பெருகி அவளை விழுங்கப்பார்த்தது.

அதுவரை ஆண்மகனான அவன் அத்தனை நாள் பொத்தி வைத்திருந்த மொத்த நேசத்தையும் காதலாய் ஒற்றை முத்தத்தில் அவள் மீது பிரயோகிக்க துவாரகாவினுள் சந்தோஷ மூங்கில்கள் வெடித்து சிதறியது.

பல மாதங்களுக்கு பின்னாக கணவனாய் அவனின் தீண்டல் அப்படியே கண்களை மூடி கால்களை மடக்கி சுருண்டு அமர்ந்துவிட்டாள் தன்னிலை மறந்து.

வாழ்க்கை தீர தீர அனுபவிக்க வேண்டிய அத்தனையையும் அந்த ஷணம் அடைந்துவிட்டதாக ஒரு இதழொற்றலில் தோன்றியது அவளுக்கு. கண்ணீர் குளம் கட்டியது விழிகளில்.

அவள் அப்படி அமர்ந்ததும் பதறிப்போனவன் மெதுவாய் அவளை தூக்கி நிறுத்த முயல அவளின் கால்கள் துவண்டுவிடுவதை போல தோன்ற மெல்ல கட்டிலில் அமர்த்தினான்.

“ஹேய் துவா, ஸாரிடா. ஸாரி. ரிலாக்ஸ் ரிலாக்ஸ். நான் ஒரு. ப்ச். ச்சே, இந்த நிலமைல உன்னை. ஸாரிடா…” தன் மீதே அத்தனை கோபம் பொங்கியது அவனுக்கு.

“குழந்தைக்கு நான் குடுக்கும் முதல் முத்தம் இது. ஆனா உன்னை நினைக்காம விட்டுட்டேன் பாரேன்…” என தந்தையின் பூரிப்போடு அவன் சொன்னாலும் மனைவியை கஷ்டபடுத்திவிட்டோமே என்கிற தவிப்பு வேறு.

‘அப்படி என்ன உன் உணர்வுகளின் பேயாட்டம். அதை கட்டுபடுத்த முடியாத ஆள் நீ? என உள்ளம் மொத்தமும் அவனை வசைபாட,

“நான் தான் மாமா ஸாரி கேட்கனும். தப்பு என்னோடது தான். ரொம்ப மோசமா உங்களை நான் தண்டிச்சிட்டேன்ல மாமா…” என மூக்கு விடைக்க கண்களை துடைத்தபடி அவள் கேட்க அவனுக்கு புன்னகை தான் அரும்பியது.

“இல்லைடா, ரொம்ப மோசமா காக்க வச்சுட்ட. இப்படின்னும் சொல்லலாம். காத்து கிடைக்கிறதுலையும் ஒரு சுகம் இருக்கு. அதை தான் நான் சந்தோஷமா அனுபவிச்சிட்டு இருக்கேன். இதுல உன் தப்புன்னு என்ன இருக்கு?…”

“அப்படி பார்த்தா தப்பு முழுக்க என்னோடது தான். என்னதான் உன்னை பேசி பேசி கல்யாணம் பண்ணிட்டாலும் அந்த வாழ்க்கையை ஏத்துக்க உனக்கு நான் எந்த டைமும் குடுக்கலை. அவசர அவசரமா கல்யாணம் செஞ்சேன். அதை விட வேகமா உன்னோட உணர்வுகளை தூண்டிவிட்டு நம்மோட வாழ்க்கையையும் ஆரம்பிச்சுட்டேன்…”

“இல்லை மாமா, எனக்கு விருப்பமில்லாம எதுவுமே இல்லையே. எனக்கும் பிடிச்சுதானே?…” அதற்கு மேல் பேச முடியாமல் மௌனமாய் அவள் இருக்க,

“ம்ஹூம், இல்லைடா. அன்னைக்கு நான் உன்னை நெருங்கி இருக்கலைனா உனக்கு அந்த தாட் நிச்சயம் வந்திருக்காது. மனசெல்லாம் அகிலாத்தை பத்தி இருக்கும் போது நான் உன்னை என் பக்கமா திருப்பி என்னோட ஆசையை நிறைவேத்திட்டேன்…”

“ஆனா நான் என்னோட அத்தனை வருஷ காத்திருப்பு. நீ கிடைச்சதும் உண்டான சந்தோசம். உடனே எனக்குள்ள மொத்தமா உன்னை சேர்த்திடனும்ன்ற ஆசை, என்னால உன்னை விலகி இருக்க முடியலைடா…”

“மாமா, இல்லை…”

“ரொம்ப ஈஸியா காதலிச்சு, கொஞ்சம் சிரமத்தோடனாலும் கல்யாணம் செஞ்சு அதை விட ஈஸியா உன்னோட வாழ்ந்துட்டேன். இப்ப நின்னு நிதானமா உன்னை என் மனைவியா காதலிச்சுட்டு இருக்கேன். இது போதும். குழந்தை பிறக்கட்டும். வாழாத மொத்த நாட்களுக்கும் சேர்த்து வாழ்ந்திடுவோம்…”

அவளின் தலையில் லேசாய் முட்டி அவளிடம் சொல்ல அவனின் மார்பில் சாய்ந்துகொண்டவளின் நெஞ்சம் விம்மியது. ‘இவனுக்கு தான் என் மீது எத்தனை காதல்?’ என பெருமிதம் கொண்டது.

அகிலாவை பார்த்துவிட்டு வந்த நாளில் இருந்து அவர்களின் இடையேயான உறவு அப்படித்தான் இருந்தது.

எந்த விதத்திலும் தன்னை விட்டுகொடுக்காமல் பார்த்துக்கொண்டவன் கணவனாய் மட்டும் தன்னிடம் நெருங்கிடவே இல்லை. அகிலா வருவதற்கு முன் எப்பொழுதாவது தோன்றும் ஆனாலும் அதற்கும் மேலான கவலைகள் அவளை திசைதிருப்பிவிடும்.

அகிலா வந்த பின்னோ அவளின் உலகத்தில் அகிலா தான் பெரும்பாலான இடத்தில் பிரதானமாய் இருந்தார். அப்படியும் நெருங்க முயலும் நேரம் டாக்டரின் கர்ப்பகால அறிவுரைகள் வேறு.

அதையும் நினைக்க விடாமல் வாழ்க்கையின் மாற்றங்கள் வேறு அவனை அதன் போக்கில் சுருட்டி செல்ல எத்தனை வேலை இருந்தாலும் துவாரகாவை அவன் கவனிக்காமல் விட்டதே இல்லை.

“டேய் இன்னுமாடா வளையல் எடுத்துட்டு வர?…” என்ற அஷ்மியின் கத்தலில் கலைந்த இருவரும் வெட்கமுறுவலோடு விலகி அமர,

“அடப்பாவி உன்னை நம்பி ஒரு பொறுப்ப ஒப்படைச்சா இங்க அவளை தூங்க வச்சிடுவ போலேயே. ஏற்கனவே மேடம் கும்பகர்ணி ரேஞ்ச்ல தான் இருக்காங்க. எழுந்து போடா வெளில. நான் அவளை கூட்டிட்டு வரேன்…”

அஷ்மிதாவின் விரட்டலில் கொஞ்சமும் முகம் மாறாதவனின் கன்னத்தில் ஒட்டியிருந்த குங்குமத்தை பார்த்தவள்,

“மரியாதையா முகத்தை துடைச்சிட்டு போ. ஹால்ல போய் நீ இப்படியே நிக்க அங்க உன்னை கிண்டல் பண்ண நீ வெட்கம்னு அசடு வழிய பாக்க சத்தியமா சகிக்காது போ…” என திரும்பவும் விரட்ட சிரித்துக்கொண்டே சென்று முகம் கழுவினான் அதிரூபன்.

“தானா ஒட்டுதா? ஒட்டனும்னே வான்ட்டடா ஒட்டிக்கிறானுங்களான்னே தெரியமாட்டிக்கு…” என அலுத்துக்கொண்டவள் துவாரகாவை பார்த்து முறைக்க,

“டாக்டர் டச்சப்?…” அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு துவாரகா கேட்க சிரித்துவிட்டாள் அஷ்மி. 

“நீ இருக்க பாரு. பயந்து வருது பயந்து வருதுன்னு சொல்லி சொல்லி இப்ப எங்க  வந்து நிக்கிற பாரு. இதுக்கு பேருதான் பயமுங்களாம்மா?…” என கேலி பேசிக்கொண்டே அவளை தயார் செய்து அழைத்து வந்தாள் அஷ்மிதா.

ஒன்பது மாதம் என்பதால் மிக கவனமாகவே நடந்து வந்தாள் துவாரகா. அதிலும் இன்னும் இருபது நாட்களே உள்ளது அவளின் பிரசவத்திற்கு.

அனைவரையும் பார்த்து பொதுவாய் நமஸ்கரித்தவள் அங்கே அவளுக்கென வரவழைக்கப்பட்ட சேரில் அமர்ந்தாள்.

பார்வை வட்டத்தில் ரத்தினசாமி குடும்பமும் மற்ற பிற உறவினர்களும் இருந்தாலும் தாயை காணாது முகமே வாடிவிட்டது. அதை பார்த்த அஷ்மிதா அதிரூபனை பார்க்க அவனும் பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.

வந்திருந்தவர்களில் ஒரு பெண்மணி,

“நல்ல நேரம் போறதுக்குள்ள ஆரம்பிக்கலாம்ப்பா. மூத்த சுமங்கலி வந்து முதல்ல ஆரம்பிச்சு வைங்க வைபவத்தை…” என சொல்ல,

“அம்மா…” என பத்மினியை அழைத்தான் அதிபன்.

“இதோப்பா…” என சென்றவர் அகிலாவை அழைத்து வந்தார்.

“இவங்க தான் அகிலவேணி. துவாரகாவோட அம்மா. முதல்ல அவங்க ஆரம்பிச்சு வைக்கட்டும்…”

வந்திருக்கும் அனைவருக்கும் சொல்லி பத்மினி அவரை பார்க்க அகிலாவினுள் ஆயிரமாயிரம் உணர்ச்சி போராட்டம்.

துவாரகாவின் ஏழாம் மாதத்திலிருந்தே ஒருவித இறுக்கத்துடனே தான் இருந்தார் அகிலா. இதே போல தான் தானும் நிர்கதியாக்கப்பட்டோம் என்கிற ஞாபகம் அவரினுள் சுழன்றுகொண்டே இருந்தது.

அதன்கொண்டு துவாரகாவையும் அதிரூபனையும் மிகவும் கவனமாய் பார்த்து வந்தார். எங்கே தன் மகளுக்கும் இப்படி ஒரு நிலை வந்துவிடுமோ என்கிற அலைப்புருதல் அவரை மிகவும் படுத்தியது.

இப்பொழுது மகளுக்கு ஊர்கூடி ஒரு வைபவம். கொண்டாடும் கணவன். பாசத்தை கொட்டும் சில உன்னத உறவுகள். அகிலாவினுள் அத்தனை நிறைவை தந்தது. தாயாய் இளக ஆரம்பித்திருந்தார். ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை இன்னமும்.

“நீங்கதான் போடனும் அகிலாம்மா. போடுங்க…” என பத்மினி சொல்ல அங்கிருந்த பெண்களும் பார்க்க அதையும் விட துவாரகாவின் முகத்தில் தெரிந்த ஆசை, எதிர்பார்ப்பு. அகிலாவின் அத்தனை நாள் வீராப்பையும் வீம்பையும் தகர்க்க போதுமானதாக இருந்தது.

“இதோ வரேன். ஒரே நிமிஷம்…” என உள்ளே ஓடினார். அவரை புன்னகையோடு பார்த்திருந்தான் அதிரூபன்.

“பத்மி, என்ன நடக்குது இங்க?…” என வேகமாய் ரத்தினசாமி எழுந்து நிற்க,

“அப்பா, உட்காருங்க…” என்கிற மகனின் ஒற்றை வார்த்தை அவரை அடக்கிவிட அமைதியார் அமர்ந்தார். அவருக்கு இது சுத்தமாய் பிடிக்கவில்லை.

மீண்டும் வந்த அகிலாவின் கையில் ஒரு ஜோடி தங்க வளையல் மின்னியது. அதை கையில் வைத்துக்கொண்டவர் பத்மினியை பார்த்து,

“இது வந்து என்ன செய்யனும்னு சொன்னீங்கன்னா நான் செஞ்சிடுவேன். சொல்றீங்களா?…” என கேட்க பத்மினிக்கு ஆச்சர்யமாக போனது. இவருக்கு இந்த சம்பிரதாயங்கள் தெரியாதா என? ஆனால் தாமதிக்காமல்,

“அதை சொல்லனுமா? நான் சொல்ல சொல்ல செய்ங்க…” என பத்மினி மற்றவர்கள் கேட்காமல் மெதுவாய் அகிலாவிடம் சொல்ல அதை கேட்டு கேட்டு செய்தவர் துவாரகாவின் கை பிடித்து வளையலை அணிவித்துவிட்டு பூ தூவி அவளை ஆசிர்வதித்தவர் உணர்வுகுவியல்களின் பிடியில் துவாரகாவின் நெற்றியில் முத்தம் பதித்தார்.

இது துவாரகாவே எதிர்பார்க்காதது. அவளின் கண்களில் நீர் நிறைந்துவிட அதிபனும் அதை நெகிழ்வுடன் பார்த்து நின்றான்.

“ப்ச் என்ன இது? பிள்ளைதாச்சி அழக்கூடாது…” என அவளின் கண்ணீரை துடைத்தவர் பத்மினியை பார்த்து அவருக்கு வழிவிட்டு நின்றார்.

பத்மினியின் இந்த ஒரு செயலிலேயே துவாரகாவின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார் அவர். அவரின் நன்றி உணர்வுடன் பார்த்திருந்தவள் அவர் ஆசிர்வாதம் செய்து முடித்ததும் அவரின் கைகளை பிடித்துக்கொண்டு,

“தேங்க்ஸ் அத்தை…” என சொல்ல புன்னகையுடன் அவளின் கன்னம் வழித்து திருஷ்டி கழித்தார் பத்மினி. அவர் போட்ட பின்னாலும் அன்னபூரணி வராமல் இருக்க அதற்குள் சந்தியா வந்துவிட்டாள் நாத்தனார் முறை செய்ய.

அன்னபூரணியை சிறிது நேரம் யாருமே கண்டுகொள்ளவில்லை. அது வேண்டுமென்றும் செய்யவில்லை. இதை பார்த்துக்கொண்டிருந்த ரத்தினசாமி,

“பூரணிம்மா, நீ போமா…” என சத்தமாய் சொல்லிய பின்பு தான் சபையில் மறுக்க முடியாது என நினைத்து கடமையே என சென்று செய்தார். பத்மினி மேல் அத்தனை கோபம் அவருக்கு.

அகிலா எப்படியும் சபையில் வந்து நிற்க போவதில்லை. அதனால் தாய் ஸ்தானத்தில் தான் தான் முதலில் சடங்கு செய்ய போகிறோம் என நினைத்து இருக்க பத்மினி அவரை அழைத்து சொல்லிவிட்டார். அகிலாவை தான் செய்ய வைக்க போவதாக.

சொன்னதும் ஏற்றுகொண்டாலும் அதற்கடுத்தாவது தன்னை முன்னிருத்துவார்கள் என்று பார்த்தால் பத்மினி மட்டுமல்ல யாருமே தன்னை கண்டுகொள்ளாதது அவருக்கு பெரும் அவமானமாக போய்விட்டது. அதன் பொருட்டு அமைதியாக ஓரமாக நின்றுகொள்ள ரத்தினசாமி தான் அவரை போட சொன்னது.

போட்டுவிட்டும் ஓரமாக வந்து நின்றுகொள்ள பூரணியின் அருகே வேகமாய் வந்தார் ரத்தினசாமி.

“பார்த்தியா, இதுக்குத்தான் நான் வேண்டாம்னு சொன்னேன். நீ தான் கேட்கலை. இப்போ என்ன பண்ணினாங்க பார்த்தியாம்மா. பூரணிம்மா அண்ணன் இருக்கேன்டா…”  என ஆறுதல் சொல்ல,

“எனக்கு அவர் முக்கியம் அண்ணே. சொல்லி அனுப்பினார் அகிலா முறை செய்யலைனா என் பொண்ணுக்கு அம்மாவா நீ செய்யனும்னு. அவர் ஆசையை நான் என்னைக்கு வேண்டாம்னு சொல்லியிருக்கேன். எனக்கு அவர் தான் முக்கியம்ண்ணே. என்ன கஷ்டம்னாலும் அவர் ஆசையை நான் நிறைவேத்துவேன்…”

தங்கை இப்படித்தான் சொல்வாள் என ரத்தினசாமிக்கு தெரியும்.

அதற்கு பயந்து தானே அகிலாவை மிரட்டி விரட்டியது. அகிலா இருக்கும் இடம் தெரிந்தால் கணவனுக்காக என சொல்லி அகிலாவை கரைத்து தங்களுடன் அழைத்துவந்து தன் தங்கை இரண்டாம்பட்சமாக நின்றுவிடுவாளோ என்கிற பயம் தானே அவரை அத்தனையையும் செய்ய வைத்தது.

“விடுங்கண்ணே. இப்பமட்டும் என்ன அகிலாக்கா செஞ்சிட்டாங்களே. அவர் ஆசைப்பட்டதும் இதுதானே. எனக்கு அது போதும். என்ன அண்ணி என்னை ஒதுக்கினது தான் கஷ்டமா போச்சு…” கண்கலங்கி சொல்ல பதறிவிட்டார் ரத்தினசாமி.

விஷாலும், சந்தோஷும் இதை பார்த்து வந்துவிட,

“பூரணிம்மா, ஏன்டா? அழாதம்மா. அவ வீட்டுக்கு வரட்டும். உன் கண்ணுல கண்ணீரை பார்க்கவா இந்த அண்ணன் இருக்கேன். நீ தான் என் கையை கட்டிப்போட்டுட்ட. இல்லைனா உன் கண்ணுல தண்ணி வரவச்சவங்களை நான் பொளந்திருப்பேன். இப்படி உன் கண்ணுமுன்னால நடமாட விட்டிருப்பேனா?…” என வீரவசனம் பேச,

“ப்ச், மயிலு இன்னமும் விளையாடி முடிக்கலையா? அப்படி ஓரமா போய் விளையாடுய்யா. எப்ப பார்த்தாலும் பெரியவங்க முன்னாலையே குறுக்கமறுக்க குதிச்சிட்டு. போ போ…” என சொல்ல சந்தோஷ் கப்சிப். விஷால் ரசனையுடன் பார்க்க சந்தோஷின் புறம் திரும்பியவள்,

“ஏய் பச்சைக்கிளி, ஆகாத போகாத கதை பேசி கண்ணுல காதுல புகை வரவங்களுக்கு எல்லாம் இங்க ஜூஸ் குடுக்கறோம். இதை ஒண்ணை எடுத்து உன் மாமாக்கு ஊத்திவிட்டு. சூடு குறையும்…” என்று சொல்லி ஜூஸ் கிளாஸ்களை அவனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்ல,

“இவள…” என வேஷ்டியை மடித்துகட்டியவரின் கையை பிடித்த அன்னபூரணி,

“விடுங்கண்ணே, சின்ன பொண்ணு. விளையாட்டுக்கு பேசிட்டு போகுது…” என சொல்லி அவருக்கு ஒரு க்ளாஸை கொடுத்துவிட்டு தானும் எடுத்து குடிக்க ரத்தினசாமியும் பூரணிக்காக குடிக்க ஆரம்பித்தார். அவரின் முதுகுக்கு பின்னே வந்து நின்ற அஷ்மி,

“குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா?…” என பாட அவருக்கு புரையேறி திரும்ப விஷாலுக்கு சிரிப்பை அடக்க பாடுபடவேண்டியதானது.

“மயிலு புகைச்சல் போய்ருச்சா?…” என அவரின் காதருகே ரகசியம் பேசினாள்.

“அடிங்க…” என அவர் கோபத்துடன் திரும்ப சந்தோஷ் விஷால் இருவரும் வெடித்து சிரித்துவிட்டனர்.

“என்னடா அவ என்னை கேலி பன்றா, நீங்க கேட்காம சிரிக்கிறீங்க?…” என மகன்களிடம் எகிற இருவரும் வாயை மூடியபடி நின்றாலும் கண்கள் அப்பட்டமாய் அவர்களின் சிரிப்பை காட்டிக்கொடுத்தது.

அங்கே வளைகாப்பு வைபவமும் மிக நிறைவாய் நடந்தேறியது.

மின்னல் தெறிக்கும்…

Advertisement