Advertisement

மின்னல் – 27

         அகிலவேணி வந்துவிட்டார் தான். ஆனால் வாசலில் கால் எடுத்து வைக்கும் போதே ஒரு நொடி தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டதென்னவோ அத்தனை உண்மை.

“வந்த பின்னால் இனி எதையும் யோசிக்க கூடாது…” என தனக்கு தானே சொல்லிக்கொண்டவர் நிமிர்வுடன் உள்ளே சென்றார்.

அவருக்காகவே காத்திருந்ததை போல அதிரூபனும் அங்கே ஹாலிலேயே அமர்ந்து இருந்தான். அவனின் பார்வை வாசலுக்கும் பூஜை அறைக்குமாய் அலைபாய்ந்துகொண்டிருந்தது.

பூஜை அறையில் துவாரகா அமர்ந்திருந்தாள். அனைத்தையும் சுத்தம் செய்து விளக்குகளுக்கு பொட்டு வைத்து பூவை வைத்துக்கொண்டிருந்தாள்.

அகிலாவை பார்த்ததும் துவாரகா இருந்த திசையை பார்க்க அவளோ வேலையில் கவனமாய் இருக்க அதிரூபனுக்கு மட்டுமல்ல அகிலாவிற்குமே உள்ளூர ஒரு பரபரப்புதான்.

அகிலா கதவினருகேயே நிற்பதை பார்த்தவன் பதறி,

“ஏன் அங்கயே நிக்கறீங்க? வாங்க அத்தை. உள்ள வாங்க…” என அழைக்கவும் தயக்கம் அனைத்தும் பறந்து முறைப்புதான் அகிலாவிடம்.

அதை கண்டுகொள்ளாதவன் புன்முறுவலுடன் அவரை பார்த்து சிரித்துவிட்டு துவாரகாவின் புறம் திரும்பி,

“துவா, அத்தை வந்திருக்காங்க பாரு. வா இங்கே…” என கூப்பிட அவன் உள்ள வாங்க அத்தை என்ற போதே அன்னபூரணி தான் வந்துவிட்டாரோ என நினைத்து அங்கேயே சட்டமாய் அமர்ந்திருக்க இப்பொழுது அதிபனின் அழைப்பு வேறு அவளை கடுப்பில் ஆழ்த்தியது.

“துவா, வான்னு சொல்றேன்ல…” மீண்டும் அழைக்க,

“இப்ப என்ன? உங்க அத்தை வந்தா நீங்க சீராட்டுங்க. என்னை எதுக்கு கூப்பிடறீங்க? நான் வந்து அவங்க பேச பதிலுக்கு நான் பேச. வேண்டாம் மாமா. நான் இங்கயே இருக்கேன். என் பிள்ளை இதையெல்லாம் கேட்க வேண்டாம்…”

துவாரகா வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டிருக்க அதிபனுக்குள் அடக்கப்பட்ட சிரிப்பு. அவன் அகிலாவை பார்க்க அவரின் அதிர்ந்த முகம் இன்னும் தெளியவே இல்லை.

‘இந்த பெண் தெரிந்துதான் பேசுகிறதா? துவாரகாவா இத்தனை நீளமாக பேசியது?’ என ஆச்சர்யம் பூசி அதியசத்து பார்த்து நின்றவரின் முகத்தில் அதிர்வுக்கும் குறையில்லை. தன்னை தான் பேசினாளோ என்கிற கவலை வேறு அவரறியாமல் சுரந்தது.

‘ஏய் பொண்டாட்டி உன் அம்மா முகத்தை பார்க்க முடியலை. என்னா ஒரு ஷாக்குடா?’ என பார்த்தவன் வேகமாய் பூஜையறையில் இருந்த துவாரகாவிடம் சென்று,

“முதல்ல இங்கிருந்து எழுந்து வா. வந்து யார் வந்திருக்கிறதுன்னு பாரு…” அவனுக்குமே துவாரகாவின் முகபாவனைகள் எப்படி இருக்குமென பார்க்க ஆசை.

“அதான் அத்தைன்னு வாய் நிறைய பாசமா கூப்பிட்டீங்களே? இதுக்கு மேல தெரியாம இருக்க நான் முட்டாளா மாமா?. போங்க முதல்ல…” அவள் திரும்புவேனா என இருக்க,

“அத்தைனா அன்னபூரணி மட்டுமில்லை அகிலவேணி கூட தான் எனக்கு அத்தை…” அவன் கேலி செய்கிறான் என நினைத்தவள்,

“ஆமாமா, எங்கம்மா தானே? வந்துற போறாங்க…” என அசால்ட்டாய் சொல்லியவள் ஒரு நிமிடம், வந்திருந்தால்? என திடுக்கிட்டு அங்கு திரும்பி பார்க்க அகிலவேணி தான் நின்றுகொண்டிருந்தார்.

உண்மையில் வந்துவிட்டாரா? அப்படி ஓர் உணர்ச்சிக்குவியலாய் துவாரகா.

அசைந்துவிட்டால் கலைந்து கனவாகிவிடுவாரோ என்கிற பயம் வேறு பிடித்துக்கொள்ள இமைக்காமல் பார்த்தவளின் ஒவ்வொரு அணுவும் அவரை கட்டிக்கொண்டு கதை பேச தத்தளித்தது.

இனி பார்க்கவே முடியாதோ? ஒருமுறையேனும் பார்த்துவிடமாட்டோமா? என்கிற தவிப்பில் இருந்தவளின் கண் நிறைத்து நின்றார் அகிலா.

“மாமா நிஜமாவே அம்மா வந்துட்டாங்களா?…” அவனிடம் சந்தேகம் கேட்டாள்.

தன் கண்களையே நம்ப முடியாமல் கண்களை கசக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தவளை பார்க்க அகிலாவிற்கே தாளமுடியவில்லை.

இத்தனை நாட்கள் கழித்து பார்க்கும் மகள். அதுவும் அவளே தாயாகி நிற்கும் நேரம். அணைத்துக்கொள்ள ஆசை தான். அவன் மீதான கோபமும், அவள் மீதான வருத்தமும் தடுத்தது.

“அம்மா…” என வேகமாய் எழுந்து அவரின் பக்கம் செல்ல போனவள் அதே வேகத்தோடு மீண்டும் பின்னே வந்துகொண்டிருந்த அதிரூபன் பக்கம் சென்று அவனின் பின்னே பதுங்கினாள்.

“என்னை கூடிட்டு போகத்தான் வந்துருக்காங்களா மாமா?…” கிசுகிசுப்பான குரலில் பாவமாய் அவனிடம் கேட்டவள் முகம் ஏகத்துக்கும் கலங்கி இருந்தது.

தாய் வந்த சந்தோசம், அதையும் தாண்டி தன்னை அதிபனிடமிருந்து அழைத்து சென்றுவிடுவாரோ என்கிற பயம் பிடித்துக்கொள்ள செய்வதறியாமல் அவனின் கையை ஒரு கையாலும், இன்னொரு கையை தன் வயிற்றிலும் வைத்துக்கொண்டு அகிலாவை பரிதாபமாய் பார்த்தாள்.

துவாரகா அத்தனை பேசியது ஆச்சர்யம் தந்ததுவென்றால் தன்னை பார்த்துவிட்டு பயத்தில் தன் கணவனின் பின்னே பதுங்குவது பெரும் வலியை தந்தது.

துவாரகா தன்னை பார்த்ததும் ஓடிவந்து கட்டிபிடித்து முத்தமழை பொழியும் அளவிற்கு தான் ஒன்றும் நெருக்கமாய் வளர்க்கவில்லை. அவளை சொல்லியும் தவறில்லேயே என மகள் புறம் நின்று யோசித்தார்.

வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களை தாங்கியவரால் ஏனோ இதை தாங்கமுடியவில்லை. தன் மனதினை மறைக்க முகத்தை வேறு புறம் திருப்பிக்கொள்ள அதிபனுக்கு அவரின் உணர்வுகள் புரிந்ததோ என்னவோ,

“என்ன பன்ற துவா, அவங்க உன்னோட அம்மா. நம்மோட இருக்கத்தான் வந்திருக்காங்க…” என சொல்லவும் நம்பமுடியாமல் பார்த்தவள் நிஜமாவா என்னும் பார்வையை அகிலாவிற் புறம் பார்க்க,

“வா துவா…” என அவளை அழைத்துக்கொண்டு அகிலாவிடம் சென்றான். அவர் ஆராய்ச்சியாய் அவளை பார்த்தார்.

‘தன் பெண் தன்னை தேடுகிறாளா என’

அகிலாவை அணைத்துக்கொள்ள, அவரின் உடல் நலனை விசாரிக்க, தாயின் ஸ்பரிசத்தை உணரவென எத்தனையோ உணர்வுகள் அவளின் முகத்தில் பிரதிபலித்தது. அதை பார்த்தவரின் மனம் ஒருவகையில் சமன் பட்டது.

“உட்காருங்க அத்தை…” என்று அதிபன் அகிலாவிடம் சொல்ல துவாரகாவிற்கு தூக்கிவாரி போட்டது.

‘அத்தைன்னு சொல்றானே? என அகிலாவை பார்க்க அவள் நினைத்ததை போல அகிலாவின் முகம் பிடித்தமின்மையையும் கோபத்தையும் காட்டியது.

“போச்சு, அம்மா கோவத்துல தான் இருக்காங்க. இதுல இவர் வேற அத்தைன்னு சொல்லிட்டு இருக்காரு. கிளம்பிடுவாங்களோ?’ என பரிதவிப்புடன் அகிலாவை பார்க்க,

“துவா அத்தைக்கு குடிக்க எடுத்துட்டு வா…” அவளை அனுப்புவதற்கு அவன் பேச அவளோ நகராம அகிலாவையே பார்த்து நின்றாள்.

“துவா, என்ன நிக்கிற?…” இன்னும் துவாரகா அகிலாவின் முகத்தையே பார்த்து நிற்க துவாரகா தன் அருகில் வந்ததிலிருந்து அவளின் முகம் பார்க்க தவிர்த்தவர் இப்பொழுது பார்த்துவிட அதற்காகவே காத்திருந்ததை போல,

“அம்மா…” அத்தனை நாள் தேக்கிவைத்திருந்த ஒட்டுமொத்த ஏக்கத்தையும் அவளின் ஒற்றை அழைப்பு உணர்த்த அகிலாவினுள் எதுவோ உடைந்தது.

“உங்க பக்கத்துல வரட்டுமா அம்மா. ப்ளீஸ்…” தாய்மை கொண்டவளின் ஏக்கம் அவரை அசைத்து பார்த்தாலும் அதை கட்டிக்கொள்ளாமல் அவர் நிற்க,

“துவா நான் சொல்றதை கேளுடா. போய் அவங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வா. முக்கியமா குடிக்கிற மாதிரி எடுத்துட்டு வா…” என சிரிப்புடன் சொல்லி அவளை திசை திருப்ப அவனை முறைத்தவள் சிணுங்கலுடன் உள்ளே சென்றாள்.

வேகவேகமாய் டீ தயாரிக்க ஆரம்பித்தாள். முதன் முதலாக தன் கையால் தன் தாயிற்கு தரப்போகிறாள் என்கிற உற்சாகம் அவளை சந்தோஷப்படுத்தியது.

“கடவுளே அம்மாவுக்கு வெல்லம் போட்ட டீ ரொம்ப பிடிக்கும். அவங்களுக்கு பிடிச்ச மாதிரியே போட்டு குடுக்கனும். ஹெல்ப் மீ ப்ளீஸ்…” இறைவனை வேண்டி டீக்கு பாத்திரம் வைத்து கர்மசிரத்தையாக அனைத்தையும் எடுத்துவைத்து ஆவலாய் இருந்தாள் துவாரகா.

அவள் மனமின்றி செல்வதை அதிபன் மட்டுமில்லை அகிலாவுமே கவனித்து தான் இருந்தார். உண்டாகியிருக்கும் நேரத்தில் இப்படி வேலையை சொல்லி விரட்டுகிறானே என அதிபனை அனல் பொங்க பார்க்க,

“உட்காருங்க அத்தை…” அவன் சிரிப்போடு உங்களை கண்டுகொண்டேன் என்பதை போல பார்க்க,

“அத்தைன்னு சொல்லவேண்டாம்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன் மிஸ்டர்…” பல்லை கடித்துக்கொண்டு கோபத்தை அதிபனிடம் காட்ட,

“அதுக்கான பதிலை நானும் சொல்லிட்டேன் தானே? துவாவை வேலை வாங்கினா உங்களுக்கு கோபம் கொந்தளிக்குது?…” என கேட்க,

“அந்த பொண்ணை பார்த்துக்க தானே என்னை அப்பாய்ன்ட் பண்ணியிருக்கீங்க. என் முன்னாலையே வேலை சொன்னா அப்போ நான் எதுக்கு?…” அவன் கேட்டதற்கு காட்டமாய் பதில் கொடுக்க,

“ஓகே, அதான் இனி நீங்க பார்த்துக்கறதா சொல்லிட்டீங்களே? நான் அனுப்பினா நீங்க துவாட்ட வேண்டாம்னு சொல்லியிருக்க வேண்டியதுதானே? ஏன் சொல்லலை?…” அவன் கேட்டான் தான்.

அகிலாவின் நெஞ்ச தாழ்வாரத்தில் புதைந்துகிடந்த ஏராள நினைவுகளில் இருந்து மீள முடியாமல் மனத்தை இறுக்கினார்.

“இப்படியே எத்தனை நாள் பேசாம இருப்பீங்க? உங்க காண்ட்ராக்ட் மூணு வருஷத்துக்கு. அதாவது என் குழந்தை ஸாரி எங்க குழந்தை பிறந்து இரண்டு வயசு வரைக்கும் நீங்க இங்க தான் இருக்க போறீங்க. அதுக்காக சம்மதத்தோட தான் வந்திருக்கீங்க…”

“தெரிஞ்ச விஷயத்தை திரும்ப ஏன் சொல்றீங்க?…” அகிலா சலிப்புடன் பேச,

“தெரிஞ்சது தான். நினைவுப்படுத்துவதில் தப்பென்ன இருக்கு? இப்ப அவ ஒரு குழந்தையை சுமந்திட்டு இருக்கா. அவ மனசு எந்த விதத்திலும் கவலைப்படவோ, எதுக்கும் ஏங்கவோ கூடாது. நீங்க இப்படி மௌனமா இருந்தா அது அவளோட மனதையும், உடலையும், வயித்துல வளர்ந்திட்டு இருக்கிற குழந்தையையும் தானே பாதிக்கும்…”

“இதெல்லாம் எனக்கும் தெரியும். நான் பார்த்துப்பேன். என் வேலையை பார்க்க தான் நான் இங்கே வந்திருக்கேன். நீங்க எதையும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை…”

“அப்ப ஓகே. இனி நீங்களே பேசிப்பீங்க…” என்றவன் துவாரகாவை அழைக்க திரும்ப அவளும் கையில் டீயுடன் வந்துவிட்டாள்.

புன்னகையோடு அவளை பார்க்க அவள் வேகமாய் அகிலாவிடம் சென்று டீயை தர வேண்டாமென்று சொல்ல நினைத்த மனதை மாற்றி துவாரகாவின் முகத்தில் மலர்ந்திருந்த மலர்ச்சியை பார்த்துக்கொண்டே எடுத்துக்கொண்டவர்,

“உட்காரும்மா…” என்றுவிட துவாரகாவின் கண்கள் கலங்கிவிட்டது.

“அம்மா, நீங்க எப்படி இருக்கீங்கம்மா?…” அவளும் கேட்க ஒரு நொடியில் தான் போட்டுக்கொண்ட கட்டுப்பாடுகள் உடைந்துவிட்ட பிரம்மையில் திகைத்து அவர் விழிக்க அதை பார்த்தவன்,

“துவா, இவங்க அகிலவேணி. நம்ம பாரதமாதா இல்லத்துல இருந்து உன்னை பார்த்துக்க நான் ஏற்பாடு செஞ்சவங்க. இனி இவங்க உன் கூடவே இருந்து உன்னை கவனிச்சுப்பாங்க. தாய்க்கு தாயா…”

அதிரூபன் சொல்லியது விளங்காமல் குழப்பமாய் பார்த்தவளுக்கு அடுத்த நிமிடம் அனைத்தும் புரிந்துவிட முகம் சஞ்சலம் கொண்டது.

“அப்போ வேலையா தான் அம்மா இங்க வந்திருக்காங்களா? மாமா நீங்க எதாச்சும்?…” என்ற அவளிடம் பிடிகொடுக்காமல்,

“துவா இனி அத்தை உன் கூடவே தான் இருப்பாங்க. உனக்கு என்னலாம் தேவையோ அதையெல்லாம் பெத்த அம்மாவை போல பார்த்து பார்த்து செய்வாங்க. இப்போ உனக்கு சந்தோசம் தானே?…” என கேட்டு,

“ஓகே அத்தை, உங்களுக்கு மாடியில ஒரு ரூம் அரேஞ் பண்ணிட்டேன். இனிமே நீங்க அங்க தங்கிக்கலாம். மத்தபடி இது உங்க வீடு மாதிரி இல்லை இது உங்க வீடே தான் அத்தை. ப்ரீயா இருக்கலாம்…” என்றான்.

துவாரகாவின் அம்மா என்ற அழைப்பில் நெக்குருகியவர் அதிபனின் அத்தை அழைப்பில் எரிச்சல் கொண்டது என்னவோ உண்மை. இன்னமும் முழுதாய் அதிபனை நம்ப அவரின் மனம் இடம் கொடுக்கவில்லை.

சொல்ல சொல்ல கேட்காமல் தன்னை அத்தை என்று அழைக்கும் அவனை வெறுப்பேற்ற வேண்டுமென்றே அகிலாவும் பேச ஆரம்பித்தார்.

“ஓகே ஸார். நான் பார்த்துக்கறேன் ஸார்…” என சொல்ல அவனின் புருவம் உயர்ந்தது.

“சம்பளம் கொடுக்கும் முதலாளியை சார்ன்னு சொல்றதுதான் சரி. அதுதான் இந்த ஸார்…”

அகிலாவா பேசியது? பிடிக்கவில்லை என்றால் யார் முகத்திலும் முழிக்காதவர் இவனிடம் வம்பிற்கு நிற்கிறாரா? என துவாரகா பார்த்து நிற்க அதிபன் விடாமல் வம்பு வளர்த்தான்.  

“சம்பளம் கொடுத்தா மட்டும் ஸார் ஆகிடுவாங்களா அத்தை. உங்க மகன் வயசு தான் இருக்கும் எனக்கு. என்னை போய் சார்ன்னு கூப்பிடறது எனக்கு என்னவோ சரியா படலை. சோ நீங்க என் பேரை சொல்லியே கூப்பிடுங்க…”

“எனக்கு ஸார் தான் சரி ஸார்…” அகிலாவும் விடாமல் முறைக்க,

“ஐயோ அத்தை, நான் உங்களை எப்படி ஆன்ட்டின்னு கூப்பிடாம அத்தைன்னு கூப்பிடறேன். நீங்க இப்படி என்னை ஸார்ன்னு அன்னியனை கூப்பிடற மாதிரி கூப்பிட்டா என் வொய்ப் மனசு கஷ்டபடாதா? சொல்லுங்க அத்தை?…”

அவனும் விடாமல் வளவளக்க அகிலாவின் கோபம் முகத்தில் அப்பட்டமாய் தெரிய,

“ஐயோ மாமா நீங்க வாங்க இப்படி…” என்ற துவாரகா அவனை எழுப்பி தன் அருகில் நிறுத்திவிட்டு,

“அம்மா, நீங்க மாடிக்கு போய் உங்க திங்க்ஸ் வச்சிட்டு வாங்க. நான் கீழே இருக்கேன்…” அகிலாவை அங்கிருந்து அனுப்பிவிட்டு வேகமாய் சமையலறைக்குள் அவனை இழுத்து சென்றவள்,

“கெட்டது குடி. ஏன் மாமா லூசுத்தனமா பேசிட்டு இருக்கீங்க?. நீங்க பேசறதை பார்த்தா அம்மா தான் அந்நியனா மாறிடுவாங்க…” என அவனை வறுக்க,

“அவங்களை கஷ்டப்பட்டு இங்க வரவச்ச நான் லூஸா?…”

“பின்ன இல்லையா? வரவச்சா மட்டும் போதுமா? அம்மாவே ஏதோ மனசு வச்சு என்னை பார்த்துக்க இங்க வந்திருக்காங்க. நீங்க என்னன்னா அவங்களை அத்தைன்னு கூப்பிட்டு வெறுப்பேத்திட்டு இருக்கீங்க? இது கொஞ்சம் கூட நல்லா இல்ல சொல்லிட்டேன்…”

“நான் என்னடா பண்ணேன்? அவங்க அத்தை தானே. அத்தைன்னு கூப்பிடாம?…”

“மூச், மாமா நான் சொல்றதை கேளுங்க. இனி நீங்க இப்படி அவங்களை சீண்டாம இருக்கனும். அவங்க பாட்டுக்கு கோச்சுட்டு போய்ட்டா நான் என்ன பண்ண?…”

“இது உன் அம்மாவை பார்த்ததும் ஸ்டன் ஆகி என் கையை பிடிக்கிறதுக்கு முன்னால யோசிச்சு இருக்கனும். ஏன் ஒடி போய் அவங்களை ஹக் பண்ணாம என் பின்னால பம்மிட்டு இருந்தீங்கலாம் முயல் குட்டி?…”

அவளின் கன்னம் நிமிண்டி அவன் கேட்கவும் அந்த கேள்வியில் பேச்சற்று போனவள் விழிகள் கண்ணீர் நிரப்பியது.

“துவா?…” என்றவன் மீது சாய்ந்துகொண்டவள்,

“உங்களுக்கு தெரியாது மாமா, எனக்கு தெரிஞ்சு நான் அம்மாவை கட்டிபிடிச்சது ரெண்டு தடவை தான். ஒன்னு உங்கட்ட இருந்து என்னை கூட்டிட்டு போன அன்னைக்கு அவங்களா வந்து என்னை கட்டிக்கிட்டாங்க…”

“இன்னொன்னு, என் கண்ணுமுன்னால அம்மாவை ஆக்ஸிடன்ட் பண்ணி தூக்கி போட்டுட்டு போனப்ப அவங்களுக்கு உணர்வில்லாதப்ப நானே கட்டிபிடிச்சது. இந்த ரெண்டு நிகழ்வுமே அம்மாவை அதிகமா காயத்தோட வலில இருந்தப்ப தான்…”

“துவா அதெல்லாம் மறந்திடு…” அவளை சமாதானம் செய்ய,

“ம்ஹூம் இல்லை மாமா. இது ரத்தத்துல எழுதின மாதிரி. மறக்கவே முடியாது. ஒரு தாயோட பாசமான ஸ்பரிசம் எப்படி இருக்கும்? அவங்க தலை கோதினா எப்படி இருக்கும்? கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்தா எப்படி இருக்கும்? அன்பா செல்லமா அம்மா என் தலையில கொட்டினா எப்படி இருக்கும்? நீங்க அஷ்மியை கொட்டுற மாதிரி…”

“இது எல்லாமே நான் கற்பனையில் தான் மாமா வாழ்ந்திருக்கேன். நிஜத்துல அனுபவிச்சது இல்லை. சில நேரங்கள்ல அம்மான்னாவே இப்படித்தானோன்னு தோணும். ஆனா இந்த உலகத்தில அம்மாவும், நான் மட்டும் இல்லையே. எத்தனையோ தாயும், பிள்ளைகளும் இருக்காங்க தானே?. அதும் புரியும்…”

“துவா எமோஷனல் ஆகாதடா…”

“ச்சே ச்சே அதெல்லாம் இல்லை. இது அத்தனைக்கும் சேர்த்து மொத்த சந்தோஷமா இப்ப அம்மா என் கண்ணு முன்னால இருக்காங்க. அது ஒன்னே எனக்கு போதும். அவங்களை பார்த்துட்டு அவங்களோட ஓரிரு வார்த்தை பேசிட்டு எனக்கு அது போதும் மாமா…”

“துவா அத்தையை இதுல தப்பு சொல்ல முடியாதுடா…” அகிலாவின் புறமும் அதிபன் பேச,

“கண்டிப்பா மாமா, அவ்வளவு கஷ்டத்திலையும் என் அம்மா என்னை விட்டுடலையே. நல்லா படிப்பை குடுத்தாங்க. இல்லைன்ற அளவுக்கு எல்லாமே குடுத்தாங்க. எத்தனை இருந்தும் அத்தனையும் அவங்க பாசத்துக்கு ஈடாகாது தானே மாமா?. நான் என்ன பண்ணினேன் மாமா?…”

அவனின் மார்பில் சாய்ந்து பேசிக்கொண்டிருந்தவள் அழவே ஆரம்பித்துவிட அதிபனின் மனமும் கனத்துப்போனது. கண்ணை துடைத்து நிமிர்ந்தவள்,

“இதுல நான் தெரிஞ்சுட்ட ஒன்னே ஒன்னு என்ன தெரியுமா? என் பிள்ளைக்கு எது இருக்குதோ இல்லையோ என்னோட மொத்த பாசமும், அன்பும், அரவணைப்பும் எல்லாம் எல்லாமே என் பிள்ளைக்கு குறைவில்லாம நான் குடுக்கனும்…”

“அப்ப இந்த மாமனை டீல்ல விட்டுடுவ அப்படித்தானே? ….” என கேட்க,

“என்னை நீங்க விடாம இருந்தா சரிதான்…” அவளும் விடாமல் பேச அவர்களின் பேச்சுக்குரல் குறைந்து சிரிப்பு சத்தம் கேட்கவும் அங்கிருந்து மீண்டும் மாடிக்கு கிளம்பிவிட்டார் அகிலா.

பேக்கை எடுத்துசென்றவர் தன்னுடைய ஹேண்ட்பேக்கை எடுக்க மறந்து கீழே வர துவாரகாவின் ஏக்கங்கள் அனைத்தும் வார்த்தைகளாய் கொட்டிக்கொண்டிருந்ததை கேட்டுவிட்டார்.

விழிகளில் துளிர்த்த நீரை சுண்டிவிட்டு மீண்டும் மாடிக்கு சென்றவர் தன்னுடைய பேக்கில் இருந்த மகளின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தார்.

அவரால் துவாரகாவை நெருங்க முடியவில்லை. எதுவோ ஒன்று தடையாய் அவர்களுள் இருந்துகொண்டே தான் இருந்தது. ஆனாலும் முடிவிற்கு வந்தவராய்,

“முடிந்தளவுக்கு என் மகளுக்கு தாயாய் இருப்பேன். அவளின் ஏக்கங்கள் அனைத்தையும் போக்குவேன். இழந்த அனைத்தையும் கொடுக்க முடியாவிட்டாலும் என்னால் முடிந்த சந்தோஷத்தை தருவேன். அதே நேரம் அகிலவேணி ஒரு போதும் தன்னுடைய சுயமரியாதையையும், தன்மானத்தையும் விட்டுகொடுக்க மாட்டாள்…”

தனக்கு தானே சொல்லிக்கொண்டவர் துவாரகாவின் படத்தை மீண்டும் தன்னுடைய பேக்கினுள் வைத்துவிட்டு முகம் கழுவி கீழே சென்றார்.

“வாங்கம்மா, நான் ஏதாச்சும் சமைச்சு தரட்டுமா?…” அத்தனை ஆனந்தத்துடன் கேட்டவளின் மீது ஆதுரமாய் படிந்தது அகிலாவின் பார்வை.

“வேண்டாம்மா. அதுக்குதான் நான் வந்திருக்கேன். உன்னை நல்லபடியா பார்த்துக்க. சொல்லு உனக்கு என்ன வேணுமோ சொல்லு. நான் செஞ்சு தரேன்…”

பாசமாக கேட்டார் தான். ஆனால் கடைசியாக ஓரிரு வருடங்கள் மட்டுமே கிடைத்த தாயின் பாசத்திலிருந்து இது வேறாய் தெரிந்தது. எதுவோ குறைந்தது.

மனம் சுருங்கினாலும் சமாளித்தவள் இந்தளவிற்கேனும் பேசுகிறாரே. அதுவே போதும் என நினைத்த துவாரகா தனக்கு வேண்டியதை சொல்லிவிட்டு அவரின் அருகேயே ஒரு சேரையும் போட்டு அமர்ந்துகொண்டாள்.

அவளின் ஆவலான பார்வையும் பார்வையில் தெரிந்த தவிப்பும் அகிலாவை உருக்கினாலும் அமைதியாக தான் வந்த வேலையை மட்டுமே பார்த்தார். ஆனாலும் மகளை வாரி அணைத்து உச்சி முகர அளப்பறியா ஆசை தான்.

ஆசையுடன் மகளுக்காக பார்த்து பார்த்து சமைத்தவர் போதுமா வேறு எதுவும் வேணுமா? என கேட்டு துவாவை பார்க்க,

“என்கிட்டயும் கேட்கலாம் ஆன்ட்டி. இந்த பொண்ணை நான் தான் நல்லா பார்த்திட்டு இருக்கேன்…” என வந்து நின்றாள் அஷ்மிதா.

“வாங்க டாக்டர்…” என மலர்ச்சியுடன் திரும்பியவள்,

“அம்மா, இவங்க தான் டாக்டர். மாமாவோட ப்ரென்ட்…” என சொல்லி அகிலாவிற்கு அறிமுகப்படுத்த,

“ஈஸ்வரா, வர வர எனக்கே என்னோட பேர் அஷ்மிதாவா, டாக்டரான்னு டவுட் வருது துவா…” கவலையாய் அஷ்மி சொல்ல,

“ஸாரி ஸாரி டாக்டர். இவங்க டாக்டர் அஷ்மிதா. மாமாவும் இவங்களும் ப்ரெண்ட்ஸ்…” என மீண்டும் அறிமுகப்படுத்த அஷ்மிதாவை பார்த்து சிறு புன்னகை புரிந்தார் அகிலா.

“என்ன ஆன்ட்டி வந்த அன்னைக்கே சமையல் களை கட்டுது?…” என்றவள்,

“என்னோட டாடி வந்திருக்காங்க. வாங்க பேசலாம் கொஞ்ச நேரம்…” என அகிலா கையை  பிடித்து இயல்பாய் அஷ்மி அழைத்து செல்ல துவாரகாவிற்கு தான் கஷ்டமாக போனது.

இப்படி தன்னால் ஏன் அவரை நெருங்க முடியவில்லை என யோசித்தவாறு அவளும் உடன் சென்றாள். அங்கே அதிரூபனுடன் ராஜாங்கம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர் அகிலாவை பார்த்ததும் எழுந்து நின்று,

“வணக்கம்மா, நான் ராஜாங்கம். அஷ்மி டாட்…” என சொல்லி தன்னை அறிமுகப்படுத்தியவர்,

“அதிபனோட வெல்விஷர், அவனோட பேமிலி ப்ரென்ட். அவனுக்கும் ப்ரென்ட் மாதிரி தான்…” என இன்னும் தங்களை பற்றி சொல்ல,

“ஆமாம் அத்தை, என்னோட வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானவர். துவா எனக்கு கிடைக்க காரணமானவர். இவர் இல்லைனா இன்னைக்கு நீங்களும் துவாவும் யார்ன்னே எனக்கு தெரிஞ்சிருக்காது. என்னோட காதலுக்கும் கல்யாணத்துக்கும் ரொம்பவும் உதவி செஞ்சவர். இன்றியமையாதவர்…”

அதிபனும் வாய்த்துடுக்காக ராஜாங்கத்தை பற்றி பெருமையாக பேசுவதாக எண்ணிக்கொண்டு தங்கள் மட்டுமே அறிந்த விஷயங்களை ராஜாங்கத்தின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிக்கொண்டிருக்க அகிலாவின் முகம் மாறி ராஜாங்கத்தை பார்த்தாரே ஒரு பார்வை.

“போட்டான் பாருங்க நங்கூரத்தை நச்சுன்னு. ஆபத்து நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. ஆப்பில் அமர்த்திவிட்டாயே அதிரூபா. டாடி எஸ்கேப்…” என அஷ்மிதா டைனிங்டேபிளில் சென்று அமர்ந்துகொள்ள உண்மையில் கோபமான அகிலாவிற்கு அவளின் சேட்டையில் லேசாய் சிரிப்பும் வந்துவிட்டது.

இனி என்ன முறைத்து, கோபித்து என்ன பயன்? நடந்ததை மாற்றமுடியுமா? என்கிற மனநிலையில் தான் அவர் இருந்தார்.

“வாங்க சாப்பிடலாம். நீயும் வா துவா…” வந்ததிலிருந்து இப்பொழுதுதான் மகளின் பெயர் சொல்லி அழைக்கிறார். உருகிவிட்டாள் துவாரகா.

“அம்மா…” என கை பிடிக்க அதை கவனிக்காதவர் போல கடந்துவிட்டார்.

“வாங்க அங்கிள் சாப்பிடலாம்….” அதிபன் ராஜாங்கத்தை பார்க்க அவர் அவ்வளவு கோபமாய் அவனை பார்த்தார்.

“உனக்கு போய் ஹெல்ப் பண்ணினேன் பாரு. என்னை சொல்லனும். அந்தம்மாட்ட மாட்டிவிடறயே…” என குறைகூற அதிரூபனின் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.

“எவ்வளவு சந்தோஷம் உன் முகத்தில். ஹேப்பியா லைஃப லீட் பண்ணு அதி. எனக்குமே நடக்கிறது எல்லாம் சந்தோஷாமா இருக்கு…” என முழுமையான நிறைவோடு சொல்ல,

“இது நிரந்தரமாகனும்னா நான் சொன்னது நடக்கனும் அங்கிள். அப்ப தான் நிம்மதியான வாழ்க்கை எனக்கும், துவாவுக்கும். ஏன் அகிலா அத்தைக்கும் கூடதான்…” உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட குரலில் வெறுமையோடு அவன் சொல்ல,

“அதுக்கான எல்லாமே நான் செஞ்சிட்டேன். இன்னும் ஒன் வீக்ல கன்பார்ம் பண்ணிடலாம்…” ராஜாங்கமும் சொல்ல,

“அகிலாத்தை வந்த விஷயம் இந்நேரம் அப்பாவுக்கு தெரிஞ்சிருக்கும் அங்கிள். வருவாரு பாருங்க…” என அவன் சொல்ல தலையசைத்தவர்,

“சாப்பிட வாங்கன்னுட்டு நகலமாட்டேன்றியே?…” என சொல்லி சிரித்தபடி ராஜாங்கம் அவனோடு சாப்பிட செல்ல அனைவரும் பேசிக்கொண்டே உணவை அருந்திக்கொண்டிருக்க அகிலா பறிமாறிக்கொண்டிருந்தார்.

அவரையும் அமர சொல்லி அஷ்மிதா சொல்ல மிதமான புன்னகையோடு மறுத்தவர் துவாரகாவை பார்த்து கவனித்தார்.

“டேய் அதி உன் மொபைல் அடிக்குது பார்…” அஷ்மிதா சாப்பிட்டு முடித்து கை கழுவிக்கொண்டே சொல்ல,

“போய் யார்ன்னு பாரு. விஷால், சந்தோஷ் கூப்பிட்டா நான் நாளைக்கு தான் வருவேன்னு சொல்லிடு…” என சொல்லிவிட எழுந்து சென்றவள் அவனின் மொபைலோடு வந்து மீண்டும் அமர்ந்துகொண்டாள்.

“பேசிட்டியா?…”

“ம்ஹூம் இன்னும் இல்லை. கால் திரும்ப வரும்…” என அவனின் மொபைலை பார்த்துக்கொண்டே அஷ்மி கூற,

“போனை குடு, யார் கூப்பிட்டதுன்னு பார்க்கறேன்…” அதிபன் கேட்க,

“நீ முதல்ல சாப்பிட்டு முடி. நான் பேசிப்பேன்…” விடாப்பிடியாய் அவள் அமர்ந்திருந்த விதமே தன் வீட்டில் இருந்து தான் யாரோ அழைத்திருக்கின்றனர் என புரிந்துபோனது.

வம்படியாய் கேட்டால் இன்னும் பேசுவாள் என நினைத்து அமைதியாய் சாப்பிட மீண்டும் அழைப்பு சத்தம் கேட்டது.

“அஷ்மி, ஒன்னு நீ அட்டன் பண்ணு, இல்லை அதிட்ட குடு. ரெண்டும் இல்லாம பார்த்துட்டே இருந்தா எப்படி?…” ராஜாங்கம் உஷ்ணப்பட சலிப்புடன் அட்டன் செய்து காதில் வைத்தாள்.

“அதிபா அப்பா பேசறேன்ப்பா…” என மறுபுறம் ரத்தினசாமி ஆரம்பிக்க,

“மயிலு, நான் அம்மா பேசறேன்ப்பா…” அஷ்மிதா கலாய்க்க அதிபனுக்கு புரையேறிவிட்டது. சிக்கிட்டாரா என நினைத்தான்.

அகிலா புரியாமல் பார்க்க, துவாரகா சிரிக்க, ராஜாங்கம் முறைத்தார். யாரையும் கண்டுகொள்ளவில்லை அஷ்மிதா. அவளின் குரலை இனம் கண்டுகொண்டவர்,

“ஏய் நீ அங்க தான் இருக்கியா? இப்ப புரியுது எல்லாம் ஏன் தப்பு தப்பா நடக்குதுன்னு. என் பையன் வீட்ல நீ நாட்டாமை பன்றியா? இரு வந்து பேசிக்கறேன்…” என வார்த்தைகளை விசிறிவிட்டு போனை அணைத்தார் ரத்தினசாமி.

“ஊப் இந்த அஷ்மிக்கிட்ட சித்துவிளையாட்டு காட்டுறதே சின்ராசுக்கு பொழப்பா போச்சு. என்னைய பார்த்தாலே சின்ராச கையில புடிக்க முடியாது. வரட்டும்…” என அஷ்மிதா சொல்ல,

“அஷ்மி, என்ன பேசற?. போன்ல ரத்தினமா?…” என கேட்க,

“ஆமாம் டாடி. இங்க வராராம். எனக்கு ஏதோ வச்சிருக்காராம். வந்து மயிலு தோகையை மட்டும் விரிச்சு ஆடட்டும் ஒன்னொன்னா பிச்சுவிட்டரறேன்…” என பேச,

“அஷ்மி, பெரியவங்களை தப்பா பேசகூடாது…”

“டாடி, சாப்ட்டீங்கள. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. இல்ல இவனோட மொக்கை போட்டுட்டு இருங்க. நான் அகிலா ஆன்ட்டி கூட பேசிட்டு வரேன்…” என அவரை கிளப்ப முயல,

“அதி…” என தயக்கமாய் அவர் பார்க்க,

“அங்கிள் அவ யார் சொன்னாலும் கேட்க மாட்டா. எங்கப்பா வந்து அவகிட்ட வாங்கி கட்டிட்டு தான் போவாரு. விடுங்க. பூனைக்கு யாராச்சும் மணிகட்டினா போதும்…”

ராஜாங்கத்தை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து சென்றவன் மனம் முழுவதும் ரத்தினசாமியை பார்த்து அகிலா என்ன செய்வாரோ என்று இருந்தது.

இந்த சூழ்நிலையை அஷ்மியால் மட்டுமே இலகுவாக கையாள முடியும் என நம்பினான்.

அவளை திரும்பி பார்க்க அஷ்மியும் அவனை பார்த்து கண்ணடித்தாள்.

மின்னல் தெறிக்கும்…

Advertisement