Advertisement

மின்னல் – 25

             கோர்ட் வளாகத்தில் அகிலாவிற்காக வைத்தியநாதனும் அன்னபூரணியும் காத்திருக்க அகிலா தன்னுடைய வக்கீலுடனும், வைத்தியநாதன் நண்பன் சுரேந்திரனுடனும் பேசிக்கொண்டே நடந்து வந்துகொண்டிருந்தாள்.

“அகிலா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்…” என வைத்தியநாதன் வந்து நிற்க நிமிர்ந்து ஒரு பார்வை அகிலா பார்த்ததுமே பேச வந்த அனைத்தையும் மறந்து வாய் மூடி அமைதியாக நின்றுகொண்டான்.

“அவர்கிட்ட நீங்க பேச விரும்பலைனா பரவாயில்லை. ஆனா என்கிட்டே பேசித்தான் ஆகனும். இப்பவும் சொல்றேன் நீங்க எடுத்த இந்த முடிவு ரொம்பவே தவறு…” அன்னபூரணி வந்து பேச,

“அப்படியா?…” என கேட்டு மார்பின் குறுக்கே கைகட்டி கூர்மையாக பூரணியை பார்த்துக்கொண்டே கேட்க,

“அப்படித்தான் அகிலாக்கா…” என்ற பூரணியை கண்டிப்பு பார்வை பார்க்க அதை கண்டுகொள்ளாமல்,

“நான் ஒன்னும் இவர் உங்களை கல்யாணம் செஞ்சதுக்கு அப்பறமா விரும்ப ஆரம்பிக்கலை. நான் விரும்பினவரைத்தான் நீங்க கல்யாணம் செய்திருக்கீங்க. என்னோட ஆசை நான் பொறந்ததிலிருந்தே எனக்குள்ள விதைக்கப்பட்டு வளர்ந்தது. நான் எப்படி இவரை விட்டுகுடுக்க முடியும்?. இதுக்காக நீங்க எடுத்த முடிவு ரொம்பவே தப்பு…”

பூரணி அகிலாவிடம் நியாயம் பேச அதை கேட்டு நக்கலாய் சிரிப்பொன்றை உதிர்த்த அகிலா,

“உங்களை மாதிரி ஆளுங்களுக்கு என்னோட முடிவு தவறா தெரியறதுல எனக்கொண்ணும் ஆச்சர்யமில்லை. ஏனா நீங்க நல்லவிதமா யோசிச்சா தான் அது உலக அதிசயம். ஆனா நான் இதை செய்யனும் செய்ய கூடாதுன்னு சொல்ற எந்த தகுதியும் உங்களுக்கு இல்லை. அதுக்கான உரிமையை உங்களுக்கு நான் குடுக்கவும் இல்லை…” மிக நிதானமாகவே அகிலா பேச,

“டேய் சுரேந்திரா நீயாவது அகிலாகிட்ட சொல்லுடா…” தன் நண்பனின் கையை பிடித்துக்கொண்டு வைத்தியநாதன் கெஞ்ச அவன் முகம் திருப்பினான்.

“நான் ஒன்னும் ஆசைப்பட்டு பூரணியை கல்யாணம் செய்துக்கலைடா. அகிலாவை கொன்னுடுவேன்னு மிரட்டினாங்க. அதுவும் இல்லாம பூரணியை காப்பாத்தவும் தான் நான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்…” என சொல்ல பூரணிக்கே அந்த நிமிடம் சுருக்கென்றது தான்.

அது அகிலாவிற்கு புரிந்தாலும் முகத்தில் கண்டுகொள்ளாத பாவனை தான் இருந்தது. அது பூரணிக்கும் புரிந்து உள்ளுக்குள் சுறுசுறுவென புகைந்தது. முகத்தில் காண்பித்துகொள்ளவில்லை அவ்வளவு தான்.

“அகிலாவை கொன்னுட்டா அதுக்கப்பறம் என்னடா பண்ண? அவளையும் என் குழந்தையையும் காப்பாத்த மட்டும் தான் இந்த கல்யாணம்…” வைத்தியநாதன் சொல்ல,

“கொன்னிருந்தா அப்பவே ஒரு நிமிஷ வலியால செத்திருந்திருப்பேன். இப்படி ஒரு தப்பான ஒரு ஆளை நம்பினதுக்கு அது எவ்வளவோ மேல். ஒரு பேச்சுக்கு நான் செத்த பின்னால இன்னொரு கல்யாணம் செய்றதா சொன்னாலே என்னால ஏத்துக்க முடியாது…”

“கொன்னுடுவேன்னு மிரட்டினா ஒரு ஆம்பிளைக்கு உன்னால முடிஞ்சதை பாரு. என் பொண்டாட்டி பிள்ளையை என் சக்திக்கு நான் காப்பாத்துவேன்னு கூடவா சொல்ல தெரியாது?. இதே அவர் இடத்தில நான் இருந்து. ப்ச். இதுக்கு சரியான பதிலை என்னால சொல்லமுடியும். ஆனா அது என்னை நானே கீழ இறக்கிக்கற மாதிரி…”

அகிலா பொரிய அவள் சொல்ல வந்ததின் சாரம்சத்தில் வைத்தியநாதனுக்கு நாக்கை பிடுங்கிக்கொள்ளலாம் போல தான் வந்தது. பூரணியின் முதிர்ச்சியற்ற பேச்சினால் அகிலாவின் அதிகபட்ச கோபத்திற்கு தான் ஆளாகிக்கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது.

“பூரணி போதும், ஏன் இப்படி அகிலாவை கோவப்படுத்தற?…” தான் பேசியதை மறந்து வைத்தியநாதன் பூரணியை கடிய அவளும்,

“நீங்க சும்மா இருங்க. உங்களுக்கு ஒன்னும் தெரியாது. நான் தான் அவங்களோட வந்து இருக்கேன்னு சொல்றேன். அது வேண்டாமா, அவங்களை நம்மோட பார்த்துப்போம். குழந்தைக்கு நல்ல எதிர்காலத்தை அமைச்சு குடுப்போம். இப்படி இத்தனை சொல்லியும் பிடிவாதமா இருக்காங்க…” என்றவள்,

“ஓகே, பிடிக்கலைல. விடுங்க. எல்லாம் அவங்களே முடிச்சுக்கனும்னு முடிவு பண்ணிட்டாங்க. இனி நான் ஒன்னும் பண்ணப்போறதில்லை. ஹ்ம்ம். ஓகே ஜீவனாம்சம் எவ்வளவுன்னு சொல்லுங்க. இனி தனியா வாழனும்னு முடிவு செஞ்சதுக்கு பின்னால வாழறதுக்கு ஏற்பாடு செய்யனுமே?…”

பூரணிக்கு தான் சொல்லியதை அகிலா கேட்கவில்லையே, இந்த காலத்தில் இரு திருமணம் அந்தளவிற்கா குற்றமாகிவிட்டது? தானே ஒப்புக்கொள்ளும் பொழுது இவருக்கு என்னவாம்? என்கிற அகங்காரம் தலைதூக்க பேச்சு தறிகெட்டு வந்தது.

அதை சரியாக கண்டுகொண்ட அகிலாவிற்கு கோபம் வந்தாலும் அதை காட்டாமல் தன்னுள் அடக்கி நிறுத்தினாள். தான் கோபப்படும் அளவிற்கு கூட இவர்கள் உயர்ந்தவர்கள் இல்லை என்னும் எண்ணம் பூரணியின் தலைகனம் மிகுந்த இந்த பேச்சில் அதிகமாக இவர்களிடம் எல்லாம் கோபப்படுவதா? என தோன்ற அமைதியான குரலிலே,

“உங்க காசு பணம் எல்லாமே என் கால் செருப்புக்கு சமானம்னு நினைக்கிறவ நான். இந்த உலகத்துல யாரை எப்படி எதிர்கொள்ளனும்னு, எப்படி வாழனும் வாழகூடாதுன்னு எனக்கு போதிச்சு சுய சிந்தனையோட வாழற அளவுக்கு என்னை பெத்தவங்க வளர்த்திருக்காங்க…” என்றதற்கு பூரணி பேச ஆரம்பிக்கும் முன்,

“போதும், என்னால என் குழந்தையை பார்த்துக்க முடியும். என்னைக்குமே அடுத்தவங்கட்ட இருந்து எதையும் எதிர்பார்க்காதவ உங்கட்ட இருந்து மட்டும் வாங்கிடுவேனா? அடுத்தவங்க உடமைக்கும், உரிமைக்கும் என்னைக்கும் நான் ஆசைப்படமாட்டேன்…” என பேச,

“அகிலாக்கா நீங்க செய்யறதை, பேசறதை பார்த்தா என்னவோ நான் உங்க வாழ்க்கையை தட்டி பறிச்சுட்டதை போல இல்ல இருக்கு. உங்களை எங்களோட கூப்பிடத்தானே செஞ்சேன். வரமாட்டேன்னு வீம்பு செஞ்சு பிரச்சனையை பெருசாக்கறது நீங்க தான்…” என பேச,

“உங்க தாராள மனசுக்கு ரொம்ப நன்றிங்க மிசஸ் அன்னபூரணி. ஆனா பாருங்க இவ்வளவு பெரிய ஆஃபரை ஏத்துக்கற அளவுக்கு எனக்கு பெரிய மனசு இல்லாம போச்சு. என்னோட சின்ன மனசுல நிறைய தன்மானம், ஒழுக்கம், நெறிமுறையான வாழ்க்கை கோட்பாடுகள் தான் நிறைஞ்சிரு இருக்கு…”

“இப்படி பட்ட நான் உங்களோட சாக்கடைக்குள்ள வாழற சகதி வாழ்க்கைக்கு சரிப்பட்டு வரமாட்டேன். இதுக்கு மேல என்கிட்டே பேச முயற்சி பண்ணினா இதுக்கு மேல அசிங்கமா பேசுவேன். ஆனா அத நீங்க பெரிசு பண்ணிக்கமாட்டீங்கனாலும் என்னோட தரத்துக்கும் சரியில்லை…”

அகிலா முகம் மாறாமல் பேசிய பேச்சில் பூரணியின் முகம் மொத்தமாய் மாறிவிட இதற்கு மேல் இங்கிருந்தால் இன்னும் பிரச்சனையாகும் என நினைத்து வைத்தியநாதன் பூரணியை கை பிடித்து இழுத்து செல்ல அவர்களை கண்டுகொள்ளாமல் கையில் இருந்த பேப்பர்களை பார்த்து நின்ற அகிலாவிடம்,

“அகிலா, எப்படி உன்னால இப்படி இருக்க முடியுதுன்னு எனக்கு புரியலை. உனக்கு கொஞ்சமும் கஷ்டமா இல்லையா? உன் கண்ணுல கண்ணீருக்கான தடம் கூட இல்லை. எப்படி இவ்வளவு தைரியம்?…” சுரேந்திரன் கேட்க,

“ஏன் சுரேந்தர்? நான் எதுக்காக அழனும்? அழற அளவுக்கு நான் எந்த தப்பும் செய்யலை. எதையும் இழக்கலையே. என்னோட காதல் உண்மை. ஆனா அதுக்கு தகுதியானவரை நான் தேர்ந்தெடுக்காதது மட்டும் தான் என்னோட தப்பு. அதுக்காகவெல்லாம் என்னோட கண்ணீரை விலைகொடுக்க முடியாது. அதுக்கு அந்தாளுக்கு தகுதியும் கிடையாது…” என சொல்லிய அகிலா,

“புருஷன் விட்டுட்டு போனா பொண்ணுங்க கண்ணீர் விட்டு கதறனுமா என்ன? நானும் அப்படி இருப்பேன்னு நீங்க நினைச்சா உங்க கணிப்புதான் தப்புன்னு நான் சொல்லுவேன். அப்கோர்ஸ் என் வாழ்க்கை விஷயத்துல என் கணிப்புமே தப்பா தான் போய்ருச்சு. ஆனா எப்பவுமே அப்படி சறுக்கிட மாட்டேன் தானே?…”

“ஓகே. ஆனா இதை சொல்லாம என்னால இருக்க முடியலை. நீ எதுக்கும்மா விட்டுக்குடுத்த? இதுக்கு கேஸ் போட்ருக்கலாமே? அவனை இவ்வளவு ஈஸியா ஏன் விட்ட?…” தன் ஆதங்கத்தை சுரேந்திரன் சொல்ல,

“விட்டுக்குடுத்தேனா? என்னை தவிர வேற யாரையும் கல்யாணம் செஞ்சுக்க முடியாதுன்னு சொல்லிட்டு என்கிட்டே வந்து சேர்ந்து போராடுவோம்னா சொன்னாரு? இல்லையே. இன்னொருத்தி கழுத்தில தாலியையும் கட்டிட்டு அதுக்கு காரணம் நான்னு சொல்றாரே அவரை தக்கவச்சுக்க நான் போராடனுமா?…”

“எனக்கு அது தேவை இல்லை. அது அசிங்கம். ஈஸியா விட்டுட்டேன்னு சொன்னீங்கள. ஹ்ம்ம் விட்டுட்டேன் தான். திரும்ப திரும்ப அந்தாள் முகத்தை பார்த்துட்டு உன்னை வாழ விடமாட்டேன்னு அவங்களுக்கு எதிரா சூழ்ச்சி செய்யனும்னு சொல்றீங்களா? இல்லை சாபம் குடுக்கனுமா? அதுக்கு நான் ஆள் கிடையாது. பிடிக்கலைன்னு ஆகிட்ட பின்னால அவங்க முகத்துல முழிக்கிறது இல்லை அவங்களை பத்தி நினைக்கிறது கூட தப்புதான்…”

“ஓகே, அப்ப உன்னோட பேரன்ட்ஸ் கூட போய்டலாமே?…”

“ஹா ஹா, பேரன்ட்ஸ் கூடவா? அவங்க வேண்டாம்னு தூக்கி எறிஞ்சுட்டு வந்தவ நான். திரும்ப எனக்கு நாதியில்லைன்னு போய் நிக்கனுமா? மாட்டேன். எனக்கு யார் தயவும் தேவை இல்லை. இது அகம்பாவத்துல சொல்லலை. என்னோட தன்னம்பிக்கையை வைச்சு சொல்றேன்…”

இத்தனை தெளிவுடன் அகிலா பேச இதற்கு மேல் அவளை குழப்பவேண்டாம் என நினைத்து ஒருவித நிம்மதியுடன் சுரேந்திரன் கிளம்பினான். அகிலாவும் அவர்களுடனே கிளம்பிவிட அவர்கள் நகன்றதும் அங்கே வைத்தியநாதன் கலங்கிய கண்களுடன் நின்றிருந்தான்.

அவன் நிற்பதை உணர்ந்தாலும் திரும்பி பார்க்க விரும்பவில்லை. இனி அவர்கள் யாரையும் பார்த்துவிடக்கூடாது என்பதில் ஸ்திரமாய் நின்றது அகிலாவின் மனது.

அதன் பின் அகிலாவை பார்க்க எத்தனையோ முறை வைத்தியநாதன் முயன்றுதான் பார்த்தான். ஆனால் முடியவில்லை. அவரின் இந்த அடிக்கடி வருகையை பிடிக்காத அகிலா தன்னுடைய இருப்பிடத்தையே மாற்றிக்கொண்டாள்.

குழந்தை பிறகும் வரை மட்டும் சென்னையில் இருந்தவர் சுரேந்தரின் உதவியுடன் தன்னுடைய வேலையையும் தாங்கும் இடத்தையும் வேறு ஊருக்கு மாற்றிக்கொண்டாள்.

அதன் பின்னான வாழ்க்கை ஓட்டத்தில் அவ்வப்போது இவர்களை பற்றி அரசால் புரசலாக கேள்விப்பட்டாலும் கண்டுகொள்ளாமல் கடந்துவிடுவாள்.

ரத்தினசாமியின் அரசியல் வாழ்க்கை ஏறுமுகமாக அதன் பொருட்டு அவரின் புகைப்படம், குடும்ப விழா என பேப்பரில் பார்த்தாலும் பெரிதாக எந்தவித உணர்வுமே இருக்காது மனதில். யாரோ முன்பின் அறியாதவரின் செய்தி அதில்  என்றுதான் எண்ணிகொள்வார்.

ஆனால் துவாரகா வளர வளர அகிலா அறியாமல் அவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் தாக்கம் அந்த சிறு பெண்ணின் மேல் பரவ துவங்கியது.

எதற்கும் பயம் துவாரகாவிடம். தாயிடம் இயல்பாய் அணுக கூட  அத்தனை யோசனை இருக்கும். தந்தை யார் என்பது தெரியாமலேயே தான் வளர்ந்து வந்தாள். அதை கேட்க கூட அத்தனை தயக்கம்.

அக்கம்பக்கத்தினர் புதிதாய் வந்த புதிதில் நட்பு பாராட்ட முயன்றாலும் அகிலா அதை ஒரு எல்லைக்குள்ளேயே வைத்துகொள்வார். அதிலும் துவாரகாவை தன் கைக்குள் யாரும் அணுகமுடியாத அளவிற்கு கட்டுக்குள் வைத்து வளர்த்தாள்.

தன் பெண் தன்னை எதிர்த்துவிட கூடாது. தன் பேச்சை வேதவாக்காக எடுக்கவேண்டும் என அவளின் பயத்தை வைத்து முடிவுக்கு வந்தவர் தான் செல்லும் பாதை சரியென நினைத்து அதன் படியே நடந்துகொண்டார்.

நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என கஷ்டத்திற்கு குறைவில்லாமல் தங்களின் வாழ்க்கை சுமூகமாகவே போய்க்கொண்டிருப்பதாக அகிலா நினைத்துக்கொண்டிருக்க அதுதான் இல்லை.

துவாரகா தனக்குள்ளேயே ஒரு உலகத்தில் உழன்றுகொண்டிருந்தாள். தகப்பன் யார் என தெரியாமல் சிறு வயதிலிருந்து குழம்பி தங்களுக்கென யாரும் இல்லையா? ஏன் இப்படி இருக்கிறோம்? அம்மா ஏன் தன்னிடம் அதிக கண்டிப்புடன் இருக்கிறார் என யோசித்து யோசித்து பிஞ்சு மனதினுள் குழப்பம் சூழ்ந்தது.

அப்படி குழப்பத்தினுள் இருக்கும் பொழுதெல்லாம் துவாரகாவின் முகமே வாடி தெரிய மகளின் சோர்வை பொறுக்காமல் அவரின் மனம் மென்மையில் தத்தளிக்கும். அவளிடம் பாசத்தை பொழிய பரபரக்கும்.

ஆனால் எங்கே தான் பாசத்தை காண்பித்து மகள் தன்னிடம் சலுகை கொண்டு தன்னை போல ஆகிவிடுவாளோ என அஞ்சியே தள்ளி நின்று அவளையும் நெருப்பு வளையத்தினுள் நிறுத்தினார்.

எதிலும் சரியாக தீர்க்கமாக யோசித்து முடிவெடுக்கும் அகிலவேணி துவாரகா விஷயத்தில் மிக மோசமாக சறுக்கிவிட்டார். மகளை தானே தவிப்பில் ஆழ்த்துகிறோம் என அறியாமல் அவளை திணறடித்தார்.

இரண்டு மூன்று ஊர்கள் மாற்றலாகி உடுமலைபேட்டைக்கு வந்து சேர்ந்தார் அகிலா.

சரியாய் துவாரகாவிற்கு பன்னிரெண்டு வயது நிரம்ப சுரேந்தரின் மூலம் நடந்த அனைத்துமே அகிலாவின் சம்மதமின்றி தெரிவிக்கப்பட்டது. அதனாலே சுரேந்தரிடம் கோபம் கொண்டாலும் பெரிதாக போகவில்லை.

துவாரகாவிற்கு இது எப்போது வேண்டுமென்றாலும் தெரியவேண்டியது தான். எனவே இதை பெரிதாக எண்ணாமல் விட்டுவிட்டார். விட்டுவிட்டதோடு  துவாரகாவிடம் அதை பற்றி பேசவும் இல்லை.

முதன் முதலில் அதை பற்றி பேசியது அதிரூபனின் வரவில் தான். பேசவேண்டிய சூழ்நிலைக்கு அகிலா தள்ளப்பட்டார் என்பது தான் உண்மை.

பத்தாம் வகுப்பின் முடிவின் தருவாயில் பள்ளியில் முக்கியமான ஒரு விழாவிற்கென சிறப்பு விருந்தினராக அப்போதைய எம்எல்ஏ ரத்தினசாமிக்கு தன்னுடைய பால்ய சிநேகிதனின் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்க அவருக்கு பதில் அதிரூபன் அங்கே வரவேண்டும் என்பது தான் விதியோ.

வந்திருந்தான். வந்தவனின் பார்வை வட்டத்தில் துவாரகாவும் விழுந்தாள். பார்த்ததும் கண்டுகொண்டான் அகிலாவின் மகள் என்பது. ஆனால் பார்த்த நிமிடம் காதல் வரவில்லை அவனுக்கு. ஒருவித ஆர்வம்.

“அழகான முயல்குட்டி…” அவனின் உதடுகள் சிரிப்புடன் முனுமுனுத்துத்தது.

துவாரகாவிற்குமே அவனின் முகம் பரிச்சயம். அதே சுரேந்திரனின் கைவண்ணத்தில். ஏனோ சுரேந்திரனுக்கு துவாரகா அனைத்தையும் தெரிந்திருக்கவேண்டும் என தோன்றியது.

அகிலா துவாரகாவை வளர்க்கும் முறை அவருக்கு தெரிந்தது தானே? ஒன்று துவாரகா ரத்தினசாமிவை பார்க்க நேரிட்டால் விலகி சென்றுவிட வேண்டும், இல்லையென்றால் எதிர்கொள்வதற்காவது அவர்களை தெரிந்திருக்க வேண்டும் என்பதனால் அவர் இதை காண்பித்திருக்க விளைவோ வேறு.

பள்ளி விழா நடந்துகொண்டிருக்கும் பொழுதே அந்த வருட சிறந்த மாணவ மாணவியருக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடை பெற இரண்டு பரிசுகள் துவாரகாவிற்கு.

யாரிடமும் நெருங்காமல் தனியாய் இருக்கும் துவாரகாவிற்கு இந்த படிப்பு மட்டுமே துணை என்றிருக்க அவள் மெனெக்கெட தேவையின்றி சிறந்த மாணவியாய் பரிமளித்தாள். அதன் பொருட்டு பரிசு வாங்க அழைக்கப்பட அதிரூபனை கண்டு கொஞ்சம் பயத்துடன் மேடை ஏறியவள் அவனை நிமிர்ந்தும் பாராமல் ஷீல்டை வாங்கிகொண்டு கீழே இறங்கிவிட்டாள்.

இயல்பாய் அவள் வாங்கி சென்றிருந்தால் கூட அதிரூபனுக்கு ஒன்றும் தோன்றி இருக்காதோ என்னவோ? மேடை ஏறி வருவதற்குள் அவள் தவித்த தவிப்பும், பயமும் அவனை சுவாரசியமாக்க இன்னும் அழுத்தமாய் ஒரு சிரிப்புடன் பார்த்தான்.

‘இவளுக்கு என்னை தெரிந்திருக்கிறதே?’ என நினைத்தவனுக்கு ஏனோ அந்த நினைப்பும் பிடித்தது. ஒரு ரசனையோடு அவளை பார்க்க அதற்குள் இறங்கி வேகமாய் ஓடிவிட்டாள்.

அவளின் விலகலில் ‘பார்த்ததற்கே இப்படி ஓடுகிறாள். நிறுத்தி பேசினால் என்ன செய்வாள்?’ என தெரிந்துகொள்ள அவனுக்கு ஆவலாய் இருந்தது. நினைக்கும் பொழுதே முகம் புன்னகையை பூச உள்ளுக்குள் கொஞ்சம் வெட்கம் கூட.

‘என்ன ஆள் நான்? அவர்களுடன் இருக்கும் குடும்ப பிணக்கு அறிந்தும் இப்படி நினைப்பது தவறல்லவா? வேண்டாம் அவர்கள் அனுபவித்தது போதும். விலகியே நில்’ என உள் மனம் எச்சரித்த போதும் பார்வை என்னவோ அவளை தேடவே செய்தது.

அதிலும் பதினைந்து வயது என்றாலும் வயதுக்கு மீறி பெரிய பெண் போன்ற தோற்றம் அவளை குமரியாய் காட்டியது. அகிலாவின் அழகு வேறு அப்படியே அச்சு அசலாய் அவளிடம் வடிவம் கொண்டிருக்க அதிரூபனின் கண்ணை விட்டு அவளின் உருவம் மறையவே இல்லை.

வெள்ளையில் தங்க நிற ஜரிகையிட்ட பாவாடை தாவணி அணிந்து விண்ணுலக தேவதையென அவனின் விழிகளை நிரப்பி சென்றவளை தேடி அவனின் மனம் அலைபாய ஆரம்பித்தது. அவனுக்கே தெரியாது இந்த தேடல் எங்கு கொண்டு சென்று நிறுத்துமென்பது.

கூட்டத்தினுள் கலந்தவள் அவனின் பார்வையில் சிக்கவே இல்லை. அவனின் பார்வையால் உண்டான படபடப்பு. தன்னை அவன் தேடும் விதம். மற்றவர்கள் பார்வைக்கு அவன் சாதாரணமாக அமர்ந்திருந்தாலும் அவளால் உணரமுடிந்தது தன்னை தான் தேடுகிறான் என்று.

‘இவங்க ஏன் இப்படி பார்த்தாங்க? அம்மாகூட சண்டை போடத்தான் வந்திருப்பாங்களோ? ஆனா என்னை பார்த்ததும் சிரிச்சாங்க. கோவப்படலை. இப்படியே கிளம்பிட்டா போதும் சாமி’ என கடவுளையும் துணைக்கழைத்து வேண்ட அவளின் எண்ணங்கள் அவனின் மீதான இப்படி ஒரு அபிப்ராயத்தை தான் கொண்டிருந்தது.

தேடி தேடி களைத்தவன் பின் நிகழ்ச்சியில் கவனமானான். ஆனாலும் அவனின் பார்வை கூட்டத்தில் அலசிக்கொண்டு தான் இருந்தது. நிகழ்ச்சி நிரல் வாசிக்கப்பட்டு முடிவடையவும் உடனடியாக சொல்லிக்கொண்டு கிளம்பியும்விட்டான்.

கிளம்பும் பொழுதே மழை பிடிக்க காரில் சென்றுகொண்டிருந்தவன் சாலையோரம் பார்வையை ஓட்டிக்கொண்டே வந்தவனின் பார்வை கூர்மையாக காரை நிறுத்தும்படி ட்ரைவரிடம் சொல்லி இறங்கிஎவிட்டான்.

“துவா….” என வேகமாய் அவனின் குரல் அவனறியாமல் எழும்பிவிட அவனின் குரலில் திரும்பி பார்த்தவள் அந்த நிமிடம் வேறெதுவும் தோன்றாமல் கண்ணிமைக்கும் நேரத்தில்,

“மாமா…” என்ற அழைப்புடன் அவனிடம் வந்து அவனை கட்டி அணைத்திருந்தாள். எதிர்பாராத நிகழ்வுதான். ஆனாலும் நிகழ்ந்துவிட்டது. ஒரு கணம் தன் கண்ணையே நம்பமுடியவில்லை அதிரூபனால்.

கோழிகுஞ்சென நடுங்கிக்கொண்டு பாதுகாப்பிற்காய் அவனை அணைத்திருந்தவளை தன்னறியாமல் தானும் அணைத்து தலையை தடவியவன் அங்கே நின்றுகொண்டிருந்த விடலை பையன்களை பார்த்து முறைத்தான்.

துவாரகாவின் உடை முழுவதும் மழையில் நனைந்து வண்ணபொடிகளால் வெண்மை நிற உடை வானவில் நிறத்தை ஒத்திருந்தது.

“ஸாரி ஸார். ஸாரி ஸார்…” துவாரகாவின் உரிமையான அழைப்பிலும் அணைப்பிலும், அதிரூபனின் தோற்றத்திலும் அவன்களே உறவினர் என நினைத்து பயந்து,

“ஸாரி ஸார், ஸாரி ஸார்…” என மாற்றி மாற்றி பம்ம நான்குபேரையும் இழுத்து வைத்து அறைந்துதள்ளினான்.

“ராஸ்கல்ஸ் இப்பவே உங்களை என்ன பன்றேன் பாருங்க….” என மிரட்டியவன் கை வளைவினுள் இன்னமும் துவாரகா தன் கண்களை இறுக மூடிக்கொண்டே.

“இனிமே இப்படி பண்ணமாட்டோம் ஸார். மன்னிச்சிடுங்க. ஸாரி துவாரகா…” என கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். அதை கண்டு கோபம் எழுந்தாலும் முதலில் துவாரகாவிடம் பேசவேண்டும் என்று,

“துவா இங்க பாரு…” அவளின் கன்னம் தட்டி அழைக்க நிமிர்ந்து பார்த்தவள் சுயம்பெற்று அவனிடமிருந்து தள்ளி நின்றாள்.

“துவா…” அவன் மீண்டும் அழைக்க பதறியவள்,

“ஸாரி.. ஸாரி…” என உதடு நடுங்க சொல்லியவள் கண்களில் கண்ணீர் கரைகட்டியது.

‘தவறு செய்துவிட்டேன். அம்மாவுக்கு தெரிந்தால்?’ என பயத்தில் உடல் நடுங்க வேகமாய் கீழே கிடந்த தனது சைக்கிளை வேகமாய் எடுக்க எடுத்து நிமிர்த்திய வேகத்தில் மீண்டும் கீழே பொத்தென விழுந்தாள்.

அவளின் அச்சம், பதட்டம், தன் மீதான பயம் என அனைத்தையும் விழியகலாமல் பார்த்துக்கொண்டிருந்த அதிரூபனின் மனதில் எதுவோ அசைந்தது. தன் மீதான அவளின் பயம் தந்த வலி அவனிடம் விஷயத்தை உணர்த்த வலியை தாண்டிய புன்னகை அவனுள் எழுந்தது.

அவனுக்குத்தான் அனைத்தையும் ராஜாங்கம் சொல்லியிருந்தாரே. அத்தனையும் அத்துப்படி. அதிகமாய் அவர்களை கேட்டு அறிந்து அகிலாவின் மீது பிரமிப்பும், துவாரகா மீது அன்பும் இயல்பாகவே அவனை ஆக்கிரமித்தது.

அதனாலே அவளை பார்த்ததும் எழுந்த உணர்வுகளை கட்டுபடுத்த முயன்றான். ஆனால் அவளின் அழைப்பும், அணைப்பும் இந்த விலகலும் கடிவாளமின்றி அவனின் மனதை அவளின் பின்னே பறக்க செய்தது.

ஏற்கனவே கறையாய் இருந்த உடை மேலும் மண் தரையில் மழைநீரில் கலந்த சேற்றில் இன்னும் கறையாக அவனின் முன்னே விழுந்த அவமானம் வேறு அவளுக்கு அழுகையை தோற்றுவித்தது.

லேசான விசும்பலுடன் அவனை நிமிர்ந்து பார்க்காமல் மீண்டும் எழ முயன்று தோற்றவள் காலில் அடிபட்டிருக்க ஒரு புன்னகையோடு அவளருகில் சென்று தன் கையை நீட்டினான். அதை அவள் பற்றாமல் நிமிர்ந்து பார்க்க,

“நீயா கையை பிடிச்சு எழுந்து வாங்க முயல் குட்டி. இல்லைனா நானே தூக்கிட்டு போகனும்…” சிறு பிள்ளையை மிரட்டுவது போல மிரட்ட பயத்தில் இன்னும் மிரட்சியாய் பார்க்க,

“ஓகே டன்…” என அவளை தூக்கபோக,

“வேண்டாம்,  வேண்டாம். தூக்கிடாதீங்க…” என பதறி அவனின் கையை பிடித்து எழுந்துகொண்டவள் முகம் வலியில் சுருங்க,

“ஹேய் அடிபட்டிருக்காடா துவா?…” என்று வாஞ்சையாக கேட்க அவனின் அக்கறை அவளின் அழுகையை இன்னும் அதிகமாக்கியது. ஆமாம் என தலையசைக்க,

“ஓகே, வா மழை ஜாஸ்தியாகுது. கார்ல போய்டலாம்…” என கை பிடித்து அழைக்க மீண்டும் தாயின் முகம் வந்து பயமுறுத்த,

“வீட்டுக்கு போகனும். அம்மா திட்டுவாங்க…” அழுகை இன்னும் பெரிதானது.

“அம்மா ஏன் திட்டபோறாங்க? நான் வரேன். ட்ரெஸ் ஏன் இப்படி ஆச்சுன்னு நான் சொல்றேன்…” என மீண்டும் அழைக்க பதலி சொல்லாமல் அழுதுகொண்டே அவனிடமிருந்து தன் கையை உருவிக்கொள்ள பார்த்தாள்.

“ப்ச், இப்படி அடிபட்ட காலோட வீட்டுக்கு எப்படி போவ? நீ வா என்னோட…” என சொல்லியவன் அவளை வேகமாய் காரினுள் திணித்து தானும் ஏறிக்கொண்டான்.

“என் சைக்கிள்?…” என்றதற்கு அதையும் எடுத்து டிக்கியில் போட்டவன்,

“இப்போ போகலாமா?…” என கேட்கவும் இன்னும் மிரண்டுபோய் பார்த்தாள். நெஞ்சமோ வேகத்திற்கு பஞ்சமின்றி பயத்தில் காற்றில் பறந்தது. எண்ணம் முழுவதும் அகிலவேணியே.

“ஆமா இந்த பசங்க உன் ஸ்கூல் தானே?…” குளிரில் நடுங்கிகொண்டிருந்தவளுக்கு தன்னுடைய காரில் இருந்த ஒரு சால்வையை எடுத்து துவாரகாவிற்கு போர்த்திவிட்டான்.

அவனின் அன்பான பார்வை, அரவணைப்பு, பேச்சு, ஆறுதல், அக்கறை, உரிமை என அத்தனையும் ரத்தினசாமியின் மகன் என்கிற அடையாளைத்தையும் தாண்டி அதிரூபனை அவளுக்கு பிடிக்க வைத்தது.

“என்னோட ஸ்கூல் தான். ஆனா பெரிய க்ளாஸ்…” நடுங்கிக்கொண்டே சொல்ல,

“இன்னைக்கு தான் வம்பு பன்றாங்களா?…” சட்டையின் பட்டனை கழட்டி கையை மேலேற்றிகொண்டே கேட்க,

“இல்லை டெய்லி இப்படி தான் நிப்பாங்க. அம்மாவை கிண்டல் பண்ணுவாங்க. வம்பு பேசுவாங்க. அழ அழ வைப்பாங்க…” அழுதுகொண்டே சொல்ல,

“ஓஹ், இதை உன் அம்மாட்ட சொல்றதுக்கென்ன? தினமும் பேசறாங்கன்னா அம்மாட்ட சொல்லியிருக்கனும். இல்லை ஸ்கூல்ல சொல்லியிருக்கனும். ஏன் இப்படி பயந்து போற? இன்னைக்கு நான் வரலைனா?…”

“அம்மாட்ட சொல்ல பயமா இருந்தது…” என்றவளை அதிசயமாய் பார்த்தவன்,

“அம்மாட்ட என்ன பயம்?…” அவனுக்கு தெரியாதல்லவா அகிலாவின் கண்டிப்பு.

“அது அம்மாட்ட அப்படிலாம் நான் பேசினதில்லை. எதுவும் கேட்கவோ சொல்லவோ மாட்டேன். அவங்களா கேட்டா பதில் சொல்லுவேன். நானா எப்படிசொல்ல?…” என அவள் மெதுவாய் கேட்க பதிலின்றி அவளையே பார்வையால் ஊடுருவினான்.

‘என்ன இப்படி பார்க்காங்க?’ மீண்டும் அவளின் எண்ணம் போக அவனுக்கோ,

‘போதும்டா அதிபா, சிறு பெண். படிக்கவேண்டிய பெண். வீட்டிற்கு தெரிந்தது. அவளுக்குத்தான் ஆபத்து’ என எச்சரிக்க மனமின்றி பார்வையை திருப்பிக்கொண்டான்.

‘முதல்ல இவளை இந்த ஊரை விட்டு கிளப்பி என் கண்ட்ரோல்ல வச்சுக்கனும் யாருக்கும் தெரியாம. பார்த்த அன்னைக்கே என்னோட மூளை மொத்தமா நிறைச்சிட்டா. இங்கயே இருந்தா திரும்ப திரும்ப பார்க்க தோணும். படிப்பை மட்டும் முடிக்கட்டும். அடுத்து என்ன செய்யனும் அதை நான் பார்த்துப்பேன்’ இப்பொழுதிலிருந்தே திட்டங்களை வகுக்க ஆரம்பித்தான்.

அதன் பொருட்டே அகிலாவிற்கு ஆஸ்திரேலியாவில் ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க முயன்றது. விட்டுபிடித்துகொள்ளலாம் என்னும் எண்ணத்தில் அவன் இருக்க அதற்குள் துவாரகாவின் வீடு வந்துவிட்டது.

மழை நேரத்தில் துவாரகா எப்படி வருவாளோ என தவித்துக்கொண்டு அகிலா வாசலிலேயே பார்த்தபடி நிற்க கார் வந்ததும் அவரின் பார்வை கூர்மைபெற்றது.

அதிலிருந்து ஒரு புறம் அதிபனும், மறு புறம் துவாரகாவும் இறங்க மீண்டும் ஒரு இடிசத்தம் அகிலாவின் ரத்தமண்டலத்தில்.

அதிபன் இறங்கியதும் யாரென தெரியாமல் இருந்தாலும் அவனை சற்றுநொடியில் கண்டுகொண்டார் அகிலா.

தாயின் பார்வைக்கு அஞ்சி அதிபனின் முதுகின் பின்னால் துவாரகா மறைய கண்சிமிட்டாமல் அதை பார்த்துக்கொண்டிருந்த அகிலாவிற்கு அதிர்ச்சியில் உலகமே நின்றுவிட்ட பிரம்மை.  

“துவா, உன் அம்மா பார்க்காங்க பாரு…” அதிபன் வேறு அவளை உரிமையாய் அழைக்க அகிலாவின் காதில் நன்றாகவே விழுந்தது. இனியும் அமைதியாக இருக்காமல்,

“துவாரகா உள்ள வா…” என அழுத்தமாய் அழைக்க வேகமாய் வில்லில் இருந்து பாய்ந்த அம்பு போல வீட்டினுள் விரைந்துவிட்டாள்.

மழை வலுவிழந்து தூறலாய் உருமாறியிருந்த வேளை வாசலில் அதிபன் தன்னை அழைப்பார்களா என பார்த்து அகிலாவின் பார்வையில் தானே சென்று பேசினான்.

“ஹாய் அத்தை…” என நெருங்கிய வேகத்தில் அழைத்தும் விட தீப்பற்றிக்கொண்ட உணர்வு அகிலாவினுள்.

“உள்ள கூப்பிடமாட்டீங்களா?…” சிரிப்புடன் கேட்க அகிலா திரும்பி கதவை அடைக்க போக,

“ஒரு நிமிஷம், நான் ஏன் வந்தேன்னு சொல்லலையே…” என கேட்டு நடந்ததை சொல்லி துவாரகாவின் சைக்கிளையும் தானே இறக்கி கொண்டுவந்து நிறுத்த இப்பொழுது அகிலா உள்ளே சென்றுவிட்டு ஒரு இரண்டு நிமிஷத்தில் வெளியில் வந்தார்.

வந்தவர் கையில் துவாரகா போட்டிருந்த உடையோடு தான் அவளுக்கு அணிவித்த சால்வையும் இருக்க தன்னிடம் தான் அதை தரபோகிறார் என நினைத்து பார்க்க அவனின் கண் முன்னேயே அவைகளை குப்பை கூடையில் போட்டு மூடிவிட்டு கையை தட்டிக்கொண்டு வந்தவரை ஒரு நொடி அதிர்ந்து பார்த்தாலும் அடுத்த பார்வை ஒருவித ஆளுமையுடன் பார்த்தான்.

வேண்டுமென்றே அகிலா செய்த இந்த செயலுக்கு தவறே செய்யாமல் உதவிய தனக்கு ஏன் இந்த அவமானம்? என தான் தோன்றியது. அதனால் அவன் பேசாமல் அவரை பார்க்க,

“உங்க உதவிக்கு நன்றி. சரியான நேரத்தில் என் பொண்ணுக்கு ஹெல்ப் செஞ்சிருக்கீங்க. இதை நான் எப்பவும் மறக்க மாட்டேன். அதே நேரம் நீங்க இதை இத்தோட மறந்துட்டு உங்க வேலையை பார்க்கலாம். இனி என் பொண்ணை பார்க்க முயற்சி பண்ணாதீங்க…”

அவனின் பார்வையில் தெரிந்த பாஷையை சரியாக இனம் கண்டுகொண்டார் அகிலவேணி. துவாரகாவிற்கு அப்படி ஏதும் இல்லை என்பதையும் புரிந்து இவனிடம் பேசினார்.

அகிலவேணியின் பேச்சில் முதலில் அதிர்ந்தவன் பின் தெளிந்து ஒரு புன்னகையோடு,

“பை அத்தை…” என்றுவிட்டு கிளம்பிவிட அகிலாவிற்கு தான் கோபம் வந்தது.

இவன் இத்தோடு நிற்க போவதில்லை என ஒருவித கலக்கத்தோடு நினைத்தவரின் எண்ணப்படியே அதிபனின் அடுத்த வரவும் அமைந்தது.

ஆனால் அது துவாரகாவை மனதளவில் எத்தனை பாதிக்கபோகிறது என யாரும் அறியவில்லை.

மின்னல் தெறிக்கும்…

Advertisement