Advertisement

மின்னல் – 23

               அதிரூபனை முறைத்து பார்த்தபடி நின்ற அகிலா ஒன்றும் பேசவே இல்லை. இறுகிய முகத்துடன் நின்றிருந்தார்.

“உட்காருங்க அத்தை…” அதிரூபன் சொல்ல அவனை தீ பார்வை பார்த்தவர்,

“மிஸ்டர்…” என ஒன்றை விரலை நீட்டி எச்சரிக்கும் விதமாய் பார்க்க,

“இப்பதானே சொன்னேன். ஆன்ட்டிக்கு பதில் அத்தை. இதை நீங்களா வேற விதமா நினைச்சுட்டா நான் பொறுப்பில்லை அத்தை…”

அவருக்கு பாடம் நடத்துவதை போல மிக பொறுமையாக சொல்லியவனின் இதழோரம் சிரிப்பு வெடி வெடிக்க துடித்துக்கொண்டிருந்தது. அதையும் கண்டுகொண்ட அகிலாவிற்குள் தீ பற்றியது.

“பிரச்சனை பண்ணனும்னே வந்திருக்கீங்களா?…” அவனை கேட்க,

“நான் ஏன் பிரச்சனை பண்ண போறேன் அத்தை?…” அவனும் திருப்பி அவரிடமே கேள்வியை திருப்ப,

“ஆமாமாம், நீங்க ஏன் பிரச்சனை பண்ண போறீங்க? பன்றதா இருந்தா என்னை இங்க இருந்து துரத்த தான் பார்த்திருப்பீங்க. ஆனா அப்படி செய்யாம இந்த இல்லத்துல என்னை வேலைக்கு சேர்த்து இருக்க மாட்டீங்கள?…”

அகிலா கேட்டதுமே ஒரு ஷணம் அதிர்ந்து பின் ஒரு புன்னகையுடன் நிமிர்ந்து அமர்ந்துவிட்டான் அதிரூபன்.

“உங்களுக்கு தெரிஞ்சுமா சைன் பண்ணுனீங்க?…”

“ம்ஹூம், சைன் பண்ணினப்ப தெரியாது. ஆனா இங்க வந்த இரண்டாவது நாள்லயே தெரிஞ்சிடுச்சு. இங்க இருக்கிறவங்களுக்கு நல்ல மோட்டிவேஷனா இருந்து பார்த்துக்கறதா வாக்கு குடுத்துட்டேன். அதுக்காக மட்டும் தான் இருக்கேன்…”

“ஓகே அப்போ சுத்தி வளைச்சு பேசவேண்டிய அவசியமில்லை. நேராவே விஷயத்துக்கு வந்திடலாம்…” என சொல்ல,

“நமக்குள்ள பேச எந்த ஒரு விஷயமும் இல்லை…” அவர் கிளம்ப பார்க்க,

“எனக்கும் நீங்க வாக்கு குடுத்திருக்கீங்க. எப்ப எந்த உதவினாலும் நான் செஞ்ச உதவிக்கு பிரதி உபகாரமா எனக்கு திரும்ப உதவி செய்யறதா சொல்லியிருந்தீங்க. இப்ப அதுக்கான சந்தர்ப்பம் அமைஞ்சிடுச்சு. உங்க உதவியை கேட்டு இங்க வந்திருக்கேன்…”

அதிரூபன் பேசவும் ஒரு நிமிடம் திகைத்தவர் என்ன செய்வது என புரியாமல் நின்றார்.

“இப்போவாவது உட்காரலாமே?…” தன்மையான அவனின் பேச்சில் மெதுவாய் அமர்ந்தவர் முகத்தில் கவனம் கூடியது.

“இந்த இல்லத்துக்கு உங்களை வரவழைச்சது உங்களால இங்க இருக்கிற பெண்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்க முடியும்னு தான். வாழ்க்கையை இழந்து இதுக்கு மேல சாவை தவிர ஒண்ணுமே இல்லைன்னு நினைக்கிற பொண்ணுங்களுக்கு அதையும் தாண்டிய ஒரு உலகம் இருக்குன்னு நீங்க காட்டுவீங்கன்னு நான் நம்பினேன்…”

அவன் சொல்லுவதை செவிமடுத்தவர் அவனை மேல் பார்வை பார்க்க அதில் அவனின் முகம் புன்னகையை பூசியது.

“அப்கோர்ஸ், இதில் என்னோட சுயநலமும் இருக்குது தான். உங்களோட உதவி எங்களுக்கும் தேவைன்னு தான் இங்க உங்களை வரவழைச்சேன். எனக்கும் உங்களை வேற எங்கயும் அனுப்பிட்டு தேட முடியாது…”

“ஓகே, என்னால முடிஞ்சதை என்னால முடிஞ்சதை மட்டும் நான் பன்றேன்…”

“கண்டிப்பா உங்களால முடியும்னு தான் நானும் இதை உங்கட்ட கேட்கறேன் அத்தை…” அவனின் பேச்சில் தெறித்த உரிமையில் எரிச்சலுற்றவர்,

“இன்னும் விஷயம் என்னன்னே நீங்க சொல்லலை. அதுக்கு அப்பறம் தான் முடியுமா முடியாதான்னு நான் முடிவு பண்ண முடியும்…”

அகிலாவின் விலகல் பேச்சில் ஒரு நொடி அயர்ந்தவன் இதற்கே இப்படி சோர்ந்துவிடகூடாது என நினைத்து ஒரு பெருமூச்சுடன் பார்த்தவன்,

“கண்டிப்பா உங்களால முடிஞ்சதை தான் கேட்பேன்…” என்றவன்,

“என்னோட மனைவிக்கு துணையா என்க வீட்டுக்கு நீங்க வரனும்…” என்றான்.

அதிரூபன் சொன்னதை ஒரு கணம் நம்பமுடியாமல் பார்த்தவர் உண்மையில் அதை தான் சொன்னானா? இல்லை தன் காதுகளுக்கு தான் அப்படி விழுந்ததா என மூளையை கசக்கிக்கொண்டு அவனை பார்க்க அவனோ இவரின் முகமாற்றங்களை அவதானித்துக்கொண்டிருந்தான்.

“என்ன சொன்னேங்க?…” என மீண்டும் கேட்க,

“அதான் சொன்னேனே, எங்க வீட்டுக்கு வரனும்னு…” அவன் மீண்டும் அழுத்தமாய் சொல்ல கோபம் கொந்தளித்துக்கொண்டு வந்தது அகிலவேணிக்கு.

இவன் என்ன என்னைவைத்து விளையாடுகிறானா? என அவனை முறைத்து பார்த்தவரின் முகத்தில் அத்தனை வெறுப்பு.

“உங்க விளையாட்டை வேற இடத்தில வச்சுக்கங்க. நான் முடியாதுன்னு சொல்லிட்டு இங்க இருந்து கிளம்ப எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது. என்னோட மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தான் நான் இங்க இருக்கேன். வேற எதுக்காகவும் இல்லை…”

“நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க அத்தை. நான் சொன்ன எங்க வீடுன்றது நானும் துவாரகாவும் மட்டும் இருக்கிற என்னோட வீடு. என் சம்பாத்தியத்தில் நான் வாங்கிய வீடு. இதுல என் அப்பாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. நீங்க தாராளமா வரலாம்…”

அவன் என்னவோ அவருக்கு விளக்கி சொல்ல வேண்டும் என்கிற நோக்கில் தான் சொன்னான். ஆனால் அவருக்கு அப்படி அல்லவே.

“என்ன உங்க சம்பாத்தியமா? எதை வச்சு சம்பாதிச்சீங்க? உங்கப்பா பணத்துல படிச்சு அந்த பணத்துல படிச்சு, சாப்பிட்டு  இந்த உடம்பை வளர்த்து இன்னும் எத்தனையோ சொல்லிட்டு போகலாமே? இதுல உங்கப்பாவுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லைன்னா?…” அகிலவேணி சினம் கொள்ள,

“அத்தை…” அவரை மறித்து அவன் பேச முற்பட,

“உங்க உடம்பில ஓடற ரத்தம் கூட உங்க அப்பாவோடது தான். இதுல அவருக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லைன்னு கூசாம சொல்றீங்க? வேடிக்கையா இல்லையா?…” இப்படி அவனை அவர் மடக்குவார் என கொஞ்சமும் எதிர்பார்க்காதவன் தடுமாறித்தான் போனான்.

“முதல்ல ஒரு விஷயம் பேசறதுக்கு முன்னால யோசிச்சு பேசுங்க. பேசிட்டு இப்படி பதில் சொல்ல முடியாம முழிக்க தேவையில்லை பாருங்க…” இன்னும் அவரின் குரலில் எள்ளல் கூடியது.

அதில் கோபம் எழுந்தாலும் அதை கட்டுப்படுத்திய அதிரூபன் இது ஆத்திரம் கொள்வதற்கான நேரமல்ல என்று நிதானமானான்.

“ஓகே நீங்க சொன்னதை நான் அக்சப்ட் பண்ணிக்கறேன். இப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. என் மனைவிக்கு துணையா…”

“நான் எதுக்கு உங்க மனைவிக்கு துணையா வரனும். தி க்ரேட் மினிஸ்டர் வீட்டு மருமகளுக்கு துணையா ஆள் கிடைக்காதா என்ன? அதோட இந்த வேலை என் படிப்புக்கான வேலை இல்லை. ஆனாலும் என் மண நிம்மதிக்காக தான் இதை நான் பார்க்கறேன். யாருக்கும் ஆயா வேலை பார்க்க நான் இல்லை…”

நறுக்கென அவனுக்கு உரைக்கும் படி கூறிவிட்டாலும் அதிரூபன் அதை கண்டுகொண்டான் இல்லை. புன்னகையோடே அவரை பார்த்தவன்,

“என் வொய்ப்க்கும் அவ மாமனார்க்கும் சண்டை. வீட்டுக்கு வந்தவரை ரூம்க்குள்ள போட்டு பூட்டிட்டா. அதனால பெரிய பிரச்சனை…” என சொல்லிக்கொண்டே அவரின் முகத்தை பார்க்க அகிலவேணியின் முகம் ஒரு நொடி ஆச்சர்யபாவத்தில் விழுந்து எழுந்தது. அதை கவனித்துவிட்டவன்,

“இப்ப அவ அம்மாவா ஆக போறா. அவளுக்கு கூடவே இருந்து பார்த்துக்க ஒருத்தர் வேணும். நீங்கன்னா ஒரு தாயை போல பார்த்துப்பீங்கன்னு தான் உங்களை தேடி வந்தேன்…”

துவாரகா உண்டாகியிருக்கும் செய்தியில் ஒரு நொடி உருகி கரைந்தவர் தாயாய் இருந்து பார்த்துக்கொள்வீர் என்கிற அவனின் வார்த்தையில் இரும்பாகிவிட்டார்.

“தாயாய் இருந்து நான் எதுக்காக பார்த்துக்கனும்? எனக்கு வேற வேலை இல்லையா? இல்லை இங்க தான் வேற ஆள் இல்லையா? என்னால முடியாது…” என ஸ்திரமாய் மறுக்க அவரை கூர்மையாய் பார்த்தவன்,

“நான் ஒன்னும் உங்க பொண்ணை பார்த்துக்க வர சொல்லலை. என் பொண்டாட்டியை பார்த்துக்க வர சொல்றேன். அதுவும் நீங்க எனக்கு திரும்ப அந்த உதவிக்கு உதவி செய்யறதா சொன்னதால…”

அவனின் அதிகாரமான அழுத்தமான பேச்சில் இப்பொழுது பொங்கியேவிட்டார் அகிலவேணி.

“என்ன என்னோட பொண்ணா? எனக்கு பொண்ணே இல்லைன்னு நான் சொல்லிட்டேனே. இப்ப என்க இருந்து வந்தா எனக்கு பொண்ணு?…” ஆக்ரோஷம் கொண்டு இருக்கும் இடம் மறந்து அவர் பேச இதைத்தானே எதிர்பார்த்தான் அதிபன்.

“அவ உங்க பொண்ணுன்னு இப்ப வரைக்கும் நான் சொல்லலை. ஆனா உங்களுக்கு ஏன் கோவம் வருது? நீங்களும், நானும் இல்லைன்னு சொல்லிட்டா மட்டும் துவா உங்க பொண்ணு இல்லைன்னு ஆகிடுமா? உங்க பேச்சுக்கே வரேன். அவ உடம்பில் ஓடறது உங்க ரத்தம் தானே? என்னவோ சம்பந்தம் இல்லாதது மாதிரி பேசறீங்க?…”

இனி நடப்பது எதுவாக இருந்தாலும் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்கிற முடிவுக்கு வந்துவிட்டான் அதிரூபன்.

“பதில் சொல்லுங்க அத்தை. நீங்கதானே பேசறதுக்கு முன்னாடி யோசிக்கனும்னு சொன்னீங்க. இப்போ பேசிட்டு யோசிக்கிறீங்களே?…” என சீண்ட,

“பேசினதை என்னைக்குமே நான் தப்பா பேசிட்டோமேன்னு யோசிக்கவே மாட்டேன். ஏனா நான் பேசறது எல்லாமே சரியா தான் இருக்கும். இப்பவும் சொல்றேன். என்னைக்கு உங்க குடும்பத்துக்கு மருமகளா ஆனாளோ அன்னைக்கே அவ எனக்கு பொண்ணில்லை…”

“வெல், ரொம்ப நல்லா பேசறீங்க. அவ எந்த சூழ்நிலையில் என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டான்னு உங்களுக்கு தெரியுமா? இந்த மேரேஜ்ல முக்கால்வாசி பங்கு என்னோடது. கிட்டத்தட்ட துவாவை பேசி பேசி கரைச்சே சம்மதிக்க வச்சேன். வற்புறுத்தின்னு கூட சொல்லலாம். அதுதான் சரியாவும் இருக்கும்.  சும்மா நீங்களா ஒரு பக்கமா பேச கூடாது…”

“வற்புறுத்தினா உடனே மேரேஜ் பண்ணிக்கறதா? அதை எப்படி பேஸ் பண்ணனும்னு கூடவா தெரியவேண்டாம்?…” என அகிலா கேட்க இப்பொழுது அதிபனின் அடக்கப்பட்ட கோபம் வெடிக்க ஆரம்பித்தது.

“வாட்? என்ன சொன்னீங்க? ப்ராப்ளம்னா பேஸ் பன்றதா? அவளை அப்படித்தான் வளர்த்தீங்களா?. இதை நீங்க உங்க வாயால சொல்றீங்க. குட் ஜோக்…” என நக்கலாய் பேசியவன் எழுந்து மேஜையில் அமர்ந்துகொண்டு அவரை பார்க்க,

“என் வளர்ப்பில் எந்த குறையும் இல்லை. அதை நீங்க அதாவது ரத்தினசாமி மகன் நீங்க பேசகூடாது…” அகிலாவும் பதிலுக்கு தாக்க,

“உண்மையை தான் சொல்றேன். இல்லன்னா முடியுமா உங்களால? அவளை அத்தனை தைரியமா நீங்க வளர்த்திருந்தா நீங்க ஆக்ஸிடன்ட் ஆகி இருந்தப்போ ஏன் அவ என்ன செய்யன்னு தெரியாம எங்களை தேடி வந்தா? யாரோட உதவியும் இல்லாம அவ உங்களுக்கு ட்ரீட்மென்ட் பார்த்து கிளம்பி போயிருக்கலாம்ல…”

“ஆனா என்ன செய்யன்னு தெரியாம தவிச்சு போய் நின்னா. அவளுக்கு உதவறதா சொல்லி என்னோட காதலை நான் நிறைவேத்திட்டேன். அப்படி ஒரு நிலையை உருவாக்கி கொடுத்தது நீங்க தான். நீங்க மட்டும் உங்க பொண்ணுக்கு எப்ப எப்படி நடந்திருக்கனும்னு சொல்லி வளர்த்திருந்தா அவளும் சுட்சுவேஷனை ஹேண்டில் பண்ணியிருப்பா…” என்றவன் சலிப்பாய்,

“இப்ப வந்துட்டு அவ போய்ட்டா, தப்பு பண்ணிட்டா பொண்ணே இல்லைன்னு மொத்த குற்றத்தையும் அவ மேல சுமத்தறீங்க. தப்பு மொத்தமும் உங்க மேல. அதை முதல்ல அக்ஸப்ட் பண்ணிக்கோங்க. அத விட்டுட்டு…”

“கிட்டத்தட்ட உங்க பொண்ணை உங்க புருஷனை மாதிரி வளர்த்திருக்கீங்க. இதுதான் உண்மை. எதுக்கெடுத்தாலும் பயம். பயந்து பயந்து அவளை தினமும் சாகடிச்சிருக்கீங்க. சொந்தமா முடிவெடுக்க முடியாம…”

“போதும் நிறுத்து. என்ன தெரியும் உனக்கு. ஆமா என் பொண்ணை அப்படி வளர்த்தேன் தான். பொண்ணுங்களை அதிகம் படிக்க வைக்காம கட்டுக்கோப்பா வளர்க்கற காலத்துல கூட என்னை என்க வீட்ல சுதந்திரமா தான் வளர்த்தாங்க. சுயமா முடிவெடுக்கற அளவுக்கு தைரியமான பொண்ணா தான் வளர்த்தாங்க. நான் என்ன சாதிச்சுட்டேன்?…”

“காதலிச்சேன், நம்பினேன். வீட்ல வேண்டாம்னு சொல்லியும் தைரியமா அவங்களை எதிர்த்து நின்னு கல்யாணமும் செஞ்சுக்கிட்டேன். ஆனா எத்தனை நாளைக்கு அதுக்கான ஆயுசு? ஒரு வருஷம் தான். அது கூட முழுமையா இல்லை. என் பொண்ணுக்கு அப்படி வேண்டாம்னு நினைச்சேன்…”

“என்ன ஏன்னு யாரும் கேட்க முடியாத இடத்துக்கு போய்டனும்னு நினைச்சேன். வாழ்க்கையில நான் தோத்துட்டதா நான் நினைக்கவே இல்லை. அதே நேரம் என் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நான் அமைச்சு குடுக்கனும்னு நினைச்சேன். நான் சொல்றதை கேட்டு அவ நடக்கனும், அதுக்கு மறுப்பு சொல்ல கூடாதுன்னு நினைச்சேன்…”

“அப்படித்தான் அவளை வளர்த்தேன். மத்த பிள்ளைங்களை மாதிரி அவளுக்கு அத்தனை செல்லம் கொடுத்து பாசத்துல குளிப்பாட்ட எனக்கும் ஆசைதான். ஆனா பயத்துல அவளை அடக்கி வச்சேன். ஆனா எது நடக்க கூடாதுன்னு நினைச்சேனோ அதுதான் நடந்துச்சு. உன் பக்கம் அவ திரும்ப கூடாதுன்னு நான் எவ்வளவோ முயற்சி பண்ணினேன். ஆனா…”

அகிலா பேச பேச முகத்தின் இறுக்கம் கூடிக்கொண்டே போனது. அதிரூபனுக்கே அத்தனை வேதனை.

“எதுக்கு யாரையும் தேட தோணலை. தேடனும்னு நினைக்கலை. அத்தனை கஷ்டத்தையும் ஒத்தை மனுஷியா நான் தாண்டினேன். எதுக்காக என் பொண்ணுக்காக. அவ ஒருத்தியை ஆதாரமா வச்சு நான் வாழ்க்கையை நகர்த்தினேன். உங்க குடும்பத்தை விட்டு விலகி போனேன்…” இத்தனை பேச்சிலும் அவரின் நிமிர்வு குறையவே இல்லை.

“இவ்வளோ சொல்ற நீங்க அவளை உண்மையில் நல்லா வளர்க்கலை. பழி வாங்கியிருக்கீங்க. உங்க புருஷனுக்கு தண்டனை குடுக்க முடியாம உங்க பொண்ணை தண்டிச்சு இருக்கீங்க. இது நியாயமா அத்தை?…”

அதிரூபன் இதற்கு மேலும் மறைக்க முடியாமல் அகிலா அடிபட்டதில் இருந்து துவாரக அதன் வீட்டிற்கு வந்தது விஷால் அவளை துன்புறுத்தியது என இன்றுவரை அனைத்தையும் சொல்லி முடிக்க அகிலவேணி முகம் மாறாமல் இருக்க பேரும் சிரமம் மேற்கொண்டார்.

கலங்கள் கசிவதை போல இருக்க அதையும் இழுத்து நிறுத்தினார். அழக்கூடாது என்கிற வைராக்கியத்தில் அவர் உறுதியாக இருந்தார். ஆனாலும் பெற்ற மனது பரிதவித்தது.

“இப்பவும் உங்க பொண்ணு உண்மையில் தைரியத்தின் முகமூடியில் தான் இருக்கிறாள் அத்தை. அவ பயம் இன்னும் குறையலை…” என்றவன்,

“அவளோட பயத்தை உங்களோட புறக்கணிப்பு திரைபோட்டு மறைச்சிருக்கு. அது எத்தனை நாளைக்குன்னு சொல்ல முடியாது. இப்பவும் அவ ராத்திரியில் அப்பப்ப பயந்து நடுங்கத்தான் செய்யறா. அந்த பயம் மொத்தமும் உங்களுக்கு என்னோட அப்பாவால ஏதும் ஆபத்து வந்துடுமோன்னு மட்டும் தான்…”

“உங்க பொண்ணோட பயம் எனக்கு என் காதலுக்கு சாதகமா போச்சு. ஒருவேளை உங்க பொண்ணை உங்களை போலவே தைரியமா வளர்த்திருந்தா இந்த அதிரூபன் அவ வாழ்க்கையில் நிச்சயம் வர வாய்ப்பில்லை தான். இதை நான் ஒத்துக்கிட்டே ஆகனும்…”

அவனின் பெருமூச்சும், அலைப்புறுதலும் அகிலாவின் மனதை அசைத்தாலும் அதற்கு எந்தவிதமான பிரதிபலிப்பையும் அவர் காட்டவில்லை.

“ஒருநாள் முழுக்க உங்க பொண்ணை காணாம நான் அனுபவிச்ச வேதனை எனக்கு மட்டும் தான் தெரியும். இன்னொரு முறை செத்து பிழைக்க என்னால முடியாது…” என சொல்லியவன் சில நிமிடங்கள் மௌனம் காக்க அகிலாவும் எதுவும் பேசவில்லை.

அவனின் நிலை கண்டு கொஞ்சமும் இரங்கவில்லை என்பது தான் உண்மை. ஆனாலும் துவாரகா தாயாகப்போகும் செய்தியில் உள்ளுக்குள் ஒரு ஓரத்தில் உணர்வுகள் சந்தோஷ ஆர்ப்பரிப்பை அகிலா அனுமதியின்றி நிகழ்த்திக்கொண்டிருந்தன.

அதை உணர்ந்தாலும் அதை கட்டுப்படுத்த அகிலாவிற்கா சொல்லித்தர வேண்டும். கற்சிலை என நின்றார்.

“நான் நடந்ததை எல்லாமே சொல்லிட்டேன். எதையும் மறைக்கனும்னு நான் நினைக்கலை. என் மனைவியோட அம்மாவா வாங்கன்னு நான் உங்களை கூப்பிடலை. அட்லீஸ்ட் ஒரு கேர்டேக்கரா நீங்க வரனும்னு நான் விரும்பறேன். வருவீங்கன்னும் நம்பறேன்…” என்றவன் எழுந்து நின்றான்.

“இதை நான் இங்க வொர்க் பன்றவங்கட்ட  கேட்கிறதா நீங்க நினைச்சாலும் சரி. இல்லை நான் செஞ்ச உதவிக்கு பதிலுக்கு செய்யறதா இர்ந்தளும் சரி. எனக்கு இதை நீங்க செஞ்சே ஆகனும். நாளைக்கு நீங்க வருவீங்க. கண்டிப்பா…” என்றவன் அவரின் பதிலை எதிர்பாராமல் வெளியேறிவிட்டான்.

அவன் கிளம்பிய பின் அங்கிருந்து வெளியேறிய அகிலா சிவகாமியிடம் சொல்லிவிட்டு தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று முடங்கினார். பழைய விஷயங்கள் மறந்து வாழ்கிற அளவிற்கு அவரின் நடப்பு வாழ்க்கை இல்லை.

நித்தம் நித்தம் தன் இறந்தகாலம் அவரின் கண்முன்னே தோன்றி மறைந்துகொண்டு தான் இருக்கிறது. இன்று அதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே.

அதிரூபன்  சுமத்திய குற்றசாட்டில் கொஞ்சமும் அவர் கலங்கவில்லை என்றாலும் அதில் இருக்கும் உண்மையை உணரத்தான் செய்தார்.

ஒருவேளை அவன் சொன்னதை போல தன் பெண்ணிற்கு எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தைரியத்தை அவளுக்கு காட்டியிருந்தால் இன்று இந்த அதிரூபன் அவள் வாழ்க்கையில் வந்திருக்க முடியாது அல்லவா?

ஏன் இப்படி தனக்கும், தன் பெண்ணிற்கும் விதித்திருக்கிறது? என எண்ணிக்கொண்டவர் படுக்கையில் சாய்ந்து அமர்ந்துகொண்டார். கடந்தகால கசப்புகள் அவரின் கண்களை நிறைக்க ஆரம்பித்தது.

——————————————————————-

“உன்னை பெத்து, வளர்த்து, படிக்க வச்சு, சம்பாதிக்க அனுப்பி ஆளாக்கினதுக்கு நல்ல பேர் வாங்கிக்கொடுத்துட்ட எங்களுக்கு. இப்படி எங்க தலையில இடியை இறக்கிட்டியேடி?…” என மரகதம் வாசலில் அமர்ந்து தலையிலடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார்.

“அம்மா, நான் உங்களுக்கு தெரியாமலா கல்யாணம் செஞ்சுட்டேன். இவரை விரும்பறதா சொன்னேன். நீங்க ஒத்துக்கலை. கண்டிப்பா என்க கல்யாணம் நடக்கும்னு சொன்னேன். நீங்க சம்மதிக்கலை. நான் என் வாழ்க்கையை என் விருப்பப்படி அமைச்சுட்டேன். இதுக்கு ஏன் அழுகனும்?…”

அகிலவேணி வைத்தியநாதனின் கையை பற்றிக்கொண்டு தன் தாயை கடிந்தாள். அக்கம்பக்கத்தினர் வேறு கூட்டம் கூட ஆரம்பித்தனர்.

“அம்மா, முதல்ல எழுந்து உள்ள போங்க. சுத்தி வேடிக்கை பார்க்கறாங்க…” என அவரின் கையை பிடித்து எழுப்ப அகிலாவை உதறி தள்ளியவர்,

“ச்சீ, என்னை தொடாதடி. போய்ரு இங்க இருந்து…” என இரைய,

“அம்மா, நான் அப்பாவை பார்த்துட்டு போய்டறேன். உங்களுக்கு விருப்பமில்லைன்னு தெரிஞ்சும் நான் இங்க இருக்க போறதில்லை. அப்பாவை பார்க்கனும்….” என்று பேசியபடி வீட்டிற்குள் நுழைய பார்க்க,

“வாசல்ல காலெடுத்து வச்ச வெட்டிடுவேன் வெட்டி. அந்த மனுஷனை உயிரோட கொன்னுட்டு இப்ப வந்து என்ன பேச போற? படிச்சு படிச்சு சொன்னாரே. இவன் வேண்டாம்னு கேட்டியாடி?. இப்ப உன் அண்ணி பிரசவத்துக்கு உன் அண்ணன் போயிருக்கிற நேரமா பார்த்து இப்படி பண்ணிட்டு வந்துட்டியே…” அவர் ஆற்றாமையில் கொதிக்க,

“அம்மா, நான் சொல்றதை கேளுங்கம்மா…” அகிலாவின் கெஞ்சல் அவரிடம் எடுபடவே இல்லை.

“இங்க பாருடி. இவனோட நீ எப்படி வாழ்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களை பொறுத்தவரை உனக்கு காரியம் பண்ணிட்டதாவே நாங்க நினைச்சிக்கறோம். தயவுபண்ணி இன்னொருக்க இந்த வீட்டுக்கு வந்து எங்க சாவுக்கு நீ காரணமாகிடாதே…” என்று சொல்லிவிட்டு மரகதம் வாசலில் இருந்த கேட்டை அடித்து பூட்டிவிட்டு வீட்டு கதவையும் பூட்டிக்கொண்டார்.

கடைசிவரை அகிலவேணியால் தன் தகப்பனை காணமுடியாமலே போனது.  மனது தளர்ந்தாலும் சீக்கிரம் இதை சரிபண்ணிவிடலாம் என்று நினைத்து வைத்தியநாதனை அழைத்துக்கொண்டு சென்றாள்.

ஒரு புது வாழ்க்கையை எந்த ஒரு சஞ்சலமும் இன்றி ஆரம்பித்தனர் இருவரும். புதிய இடம், அவர்களுக்கென சின்ன வீடு. கையில் வேலை. கஷ்டத்திற்கு வழி இல்லை அங்கே.

வைத்தியநாதனின் வீட்டில் வைத்த்யனாதனின் தாயை தவிர வேறு யாருக்கும்  இன்னமும் அவர்களின் திருமணத்தை பற்றி இன்னும் சொல்லியிருக்கவில்லை. அவரின் தாயோ சமயம் பார்த்து தகப்பனிடம் சொல்லுவதாக சொல்லிவிட அகிலாவிடம் கவலைப்பட்டார் வைத்தியநாதன்.

“சோ வாட் நாதன்? இப்போ எதுக்கு இதை நினைச்சு பீல் பண்ணனும்? அவங்களுக்கு எப்ப சொல்லனும்னு தோணுதோ சொல்லட்டும். உங்கம்மாவுக்கு தெரியும்ல. அது போதும்…” என அவரை அகிலா தான் தேற்றுவார்.

மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு சென்று பார்க்கும் பொழுது அகிலாவின் குடும்பம் அந்த ஊரையே காலிசெய்து போயிருந்தனர். உண்மையில் அதிர்ந்தே போயினர்.

“எல்லாம் என்னால தான் இல்லையா அகிலா?. நான் தானே சீக்கிரம் மேரேஜ் செஞ்சுக்கலாம்னு உன்னை கட்டாயப்படுத்தினேன்…”

வைத்தியநாதன் சொல்ல ஏற்கனவே கலங்கிபோயிருந்த அகிலாவிற்கு அவரின் இந்த பேச்சு இன்னும் கலக்கத்தை உண்டுபண்ணியது.

ஏற்கனவே தன் தந்தை என்ன சொல்வாரோ என்னும் அச்சத்தில் இருப்பவர் இதையும் நினைத்து குழம்புவது பிடிக்காது வைத்தியநாதனுக்கு ஆறுதல் கூறினார் அகிலா.

“நீங்க எதுக்கு கவலைபடறீங்க நாதன்? அப்பாவும், அம்மாவும் சீக்கிரம் அவங்க கோபத்தை விட்டு நம்மை ஏத்துப்பாங்க. இல்லைனா கூட என்ன நீங்க என்னை பார்த்துப்பீங்க தானே?…”

அகிலாவின் முகத்தில் நாதனின் மீதான பெரும் நம்பிக்கை நட்சத்திரமென மின்னியது.

மின்னல் தெறிக்கும்…

Advertisement