Advertisement

மின்னல் – 22

                 ரத்தினசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. அதிபனுக்கு அழைத்தால் இது என்ன பாட்டு சத்தம் கேட்கிறது என நினைத்து மீண்டும் கேட்க,

“ஆகாயம் தீ புடிச்சா நிலா தூங்குமா?…” என மீண்டும் அஷ்மிதா பாட,

“அதிபா?…” என மீண்டும் அழைக்க,

“மயிலு உன் மருமவ கிடைச்சுட்டா…” என்கிற அஷ்மிதாவின் குரலை இப்பொழுது நன்றாகவே இனம் கண்டுகொண்டார் ரத்தினசாமி. அதை விட அவள் சொல்லிய செய்தியில் நெஞ்சே வெடித்துவிடும் போல் ஆனது.

விடியற்காலையில் ஒரு நல்ல செய்தியை எதிர்பார்த்து காத்திருக்க இப்படி ஒரு செய்தியை அவர் நினைத்தும் பார்க்கவில்லை.

அஷ்மிதாவிடம் வாய் கொடுத்தால் இன்னமும் ஏதாவது பேசுவாள் என நினைத்து போனை கட் செய்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம்? என யோசிக்க ஆரம்பித்தார்.

வேகமாய் துவாரகாவை தேட சொல்லிய ஆளுக்கு போன் செய்தவர் ஏகவசனத்தில் நல்லவார்த்தைகளை கொண்டு அர்ச்சிக்க ஆரம்பித்தார்.

“அவளை என் பிள்ளை கண்ணுல படாம பார்த்துக்க சொன்னா கோட்டை விட்டுட்டு நிக்கிறேங்களேடா தடியனுங்களா?…”

“….”

“இப்போதைக்கு ஒன்னும் செய்ய வேண்டாம். நானே நேரம் பார்த்து சொல்றேன்…” என பேசி முடித்தவருக்கு ஒருவிதத்தில் திருப்தி முகத்தில் கூடியது.

தான் மிரட்டிய மிரட்டலுக்கு பலன் இருந்திருக்கிறது தானே? அன்று அவள் பேசியது ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் தான். அவளுக்காவது துணிச்சல் வருவதாவது. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் அவளை பயம்காட்டியே அதிபனை விட்டு ஒரேடியாக விலக வைத்துவிடவேண்டும். என நினைத்தார்.

“என்னையவா எதிர்த்து பேசின? கை ஓங்கின? உன்னை ஒரு ராத்திரிக்கு எப்படி ஓடவிட்டேன். ரத்தினசாமினா சும்மாவா?…” என தன் மீசையை திமிராய் நீவி விட,

“ஆமா கண்டிப்பா நீங்க பெரிய ஆளு தான். ஒத்துக்கிட்டு தான் ஆகனும். நான் ஒத்துக்கறேன். ஆனா இனியும் நீங்க இப்படி செய்ய நான் பார்த்திட்டு இருக்க போறதில்லை…”

அவரின் பின்னால் இருந்து அன்னபூரணியின் குரல் கேட்க தூக்கிவாரி போட எழுந்து திரும்பினார். தன் தங்கையின் முகத்திலிருந்தே அனைத்தையும் அவர் கேட்டிருக்கிறார் என்பது புரிந்துபோனது ரத்தினசாமிக்கு.

யாரும் கேட்டுவிட கூடாது என்று தானே தோட்டத்தில் வந்து பேசியது. இதையும் கேட்டுவிட்டாரே என உண்மையில் பயந்துபோய் பார்த்தார் அன்னபூரணியை.

“பூரணிம்மா, நான் வந்து…”

“போதும் அண்ணே, இனியும் உங்களை நம்ப தயாரா இல்லை. ஏதோ என் மேல உள்ள பாசத்துல தான் இதையெல்லாம் பன்றீங்கன்னு நினைச்சேன். ஆனா பெத்த புள்ளையோட எதிர்காலத்தை விட அந்த பொண்ணுமேல உள்ள பகை உங்களுக்கு பெருசா தெரிஞ்சதுனா இதுக்கு பேர் பாசம் இல்லை அண்ணே. வெறி…”

“அப்படி சொல்லாதடா பூரணி. அண்ணா உன்னோட நிம்மதிக்கு தான் இப்படி பண்ணினேன்…” அவரருகில் வர பார்க்க பின்னால் நகர்ந்த அன்னபூரணி,

“என்ன என்னோட நிம்மதியா? அவளை என் பொண்ணா நான் நினைச்சிட்டு இருக்கேன். என் பொண்ணை அழிச்சு அதுல எனக்கு நிம்மதி கிடைச்சிடுமா? அது எனக்கு தேவையா?. அவ வாழ்ந்தா அதுவும் அவ நல்ல அவால்ந்தா மட்டும் தான் என்னோட குற்றவுணர்ச்சி போகும். என் சந்தோசம் அதுல தான் இருக்கு அண்ணே. அது புரியலையா?…” கண்ணீருடன் அவர் கேட்க ரத்தினசாமியிடம் பதிலில்லை.

“கடைசியா சொல்றேன். என் பொண்ணுக்கு இன்னும் ஓர் கஷ்டம் குடுக்க உங்க சுண்டுவிரல் அசைஞ்சா கூட என்னை நீங்க உயிரோட பார்க்க முடியாது. இது என் மேல சத்தியம்…” என்றவர் ரத்தினசாமியின் கையை எடுத்து தன் தலையில் வைத்து,

“எனக்கு சத்தியம் பண்ணுங்க. உங்களை வேற எதைக்கொண்டும் கட்டிவைக்க முடியாது. ம்ம் சத்தியம் பண்ணுறீங்களா? இல்லை அதிபன் சொன்ன மாதிரி நான் கண்காணாம போயிடவா?. நித்தம் நித்தம் துவாவுக்கு நீங்க என்ன குடைச்சல் குடுப்பீங்களோன்னு பயந்து பயந்து இருக்கிறதா விட எதுவுமே தெரியாம எங்கையாவது போய் பிச்சை எடுத்து வாழ்ந்துப்பேன்…”

“பூரணிம்மா அப்படியெல்லாம் பேசாதம்மா. எங்கம்மாடா நீ…” அவர் கெஞ்ச,

“சத்தியம் செய்ய முடியுமா? முடியாதா?….” என கேட்டும் அவர் தயங்க,

“அப்போ நான் உங்க எல்லாரையும் விட்டு போனா பரவாயில்லைன்னு நினைக்கறீங்கள? சந்தோஷம். நான் போறேன்…” என்றவர் ரத்தினசாமியின் கையை தட்டுவிட்டு நடக்க வேகமாய் அவரின் முன்னே வந்த ரத்தினசாமி,

“சத்தியம்மா, பூரணிம்மா சத்தியமா இனி அவளை எதுவும் செய்யனும்னு நினைக்கவே மாட்டேன். சத்தியம். சத்தியம். போய்டாதம்மா. சத்தியமா சொல்றேன் பூரணிம்மா. சத்தியமா. சத்தியமா சொல்றேன்…”  

அன்னபூரணி சிலையாய் நிற்க அவரின் தலையில் அடித்து நூறு சத்தியம் செய்தார் ரத்தினசாமி. அவருக்கு தங்கையை விட்டு இருக்கமுடியாது. அவரின் பலவீனம் கொண்டே அன்னபூரணி சரியாய் விலங்கு பூட்டினார்.

இனி துவாரகாவிற்கு தானே கூட எதுவும் நடந்துவிட விடமாட்டார் ரத்தினசாமி. அப்படி நடந்து அது தன்னால் தானோ என தங்கை நினைத்துவிட்டு தன்னை பிரிந்துவிட்டால்?

குருட்டுத்தனமான பாசம். அதிலும் தங்கையிடம் தன் தாயை காண்பவர். அவரை இழந்து தான் அகிலவேணியை பழி தீர்க்க வேண்டுமா? நிச்சயம் கிடையாது அவருக்கு.

“அண்ணன் தான் சத்தியம் செஞ்சுட்டேன்ல பேசும்மா பூரணிம்மா…” என கெஞ்ச,

“இனி நீங்க நடந்துக்கறதை பொறுத்துதான் உங்ககிட்ட நான் பேசனுமா வேண்டாமான்னு முடிவு பண்ணனும். எனக்கு என் புருஷன் முக்கியம். அவருக்கு அவர் பொண்ணு முக்கியம். அவருக்கு எது விருப்பமோ அதுதான் எனக்கும். பார்த்து நடந்துக்கங்க…” என்றவர் விறுவிறுவென வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

தளர்ந்து போய் அமர்ந்துவிட்டார் ரத்தினசாமி. இனி தன் தங்கைக்காக துவாரகாவை சகித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையை அறவே வெறுத்து போனார்.

அனைவரும் அந்த குப்பத்தில் உள்ள சிறிய கிளினிக்கில் அமர்ந்திருந்தனர். சிறிய வீடு போல இருந்த அந்த க்ளினிக் மூன்றே அறைகளை கொண்டு இருந்தது. அந்த இடமே மிக குறுக்கலான இடமாக இருந்தது.

துவாரகாவிடமிருந்து போன் வந்ததும் அரக்கபரக்க அங்கே சென்று பார்க்க காபியை குடித்துக்கொண்டிருந்தாள் துவாரகா. பக்கத்தில் ஒரு வயதான் அம்மா உடன் இருந்தார்.

வந்ததிலிருந்து இன்னும் அவளிடம் எதுவும் பேசாமல் இருக்க அவளோ கர்மசிரத்தையாக காபியை உறிஞ்சிக்கொண்டிருந்தாள்.

அவளையே வைத்த கண் வாங்காமல் அதிரூபன் பார்த்துக்கொண்டிருக்க  அஷ்மிதா கன்னத்தில் கை வைத்து பார்த்தாள் இருவரையும்.

மற்றவர்கள் அங்கிருந்த ஆட்களிடம் துவாரகா எப்படி இங்கு வந்தாள் என விசாரித்துக்கொண்டிருந்தனர். மிகவும் பசியில் இருந்திருப்பாள் போலும். வேகமாய் இரண்டு காபியை குடித்து முடித்து கீழே வைத்தவள்,

“ஏன் மாமா? வர இவ்வளோ நேரமா? எப்ப கால் பண்ணினேன்? இப்பதான் வந்திருக்கீங்க…” என உதட்டை பிதுக்க பதில் பேசும் நிலையில் அதிரூபன் இல்லை.

துவாரகாவை பார்த்தது கனவில்லையே என்னும் அச்சத்தில் இருந்து இன்னும் வெளிவராமல் அப்படியே தான் அவளை விழிகளுக்குள் நிரப்பிக்கொண்டிருந்தான்.

எங்கே இமை சிமிட்டினால் கலைந்து சென்றுவிடுவாளோ என்கிற அளவுக்கு அவனுள்ளம் பாதிக்கப்பட்டிருந்தது.  இமைக்காது அவளையே பார்த்திருக்க,

“ஏன் மாமா எல்லாரும் வந்திருக்காங்க? என்னாச்சு?…” என கிசுகிசுப்பாக கேட்டவள்,

“நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா? நல்லவேளையா அந்தம்மா இன்னொரு அண்ணா எனக்கு ஹெல்ப் பண்ணினாங்க. இல்லைனா என்னவாகியிருக்குமோ? பயந்துட்டேன்…” என்று சொல்ல,

“அம்மா தாயே நீ பயந்தது போதும். எங்களை நல்லா பயங்காட்டிட்ட. ஏன் சொல்லாம கிளம்பின? எதுக்கு கார் கூட எடுத்துக்காம புறப்பட்ட? எங்களை இப்படி சுத்தல்ல விட்டுட்டு நீ பாட்டுக்கு நிம்மதியா இங்க வந்து படுத்துட்ட…”

அஷ்மிதா அவளிடம் கடிந்துகொள்ள அவளின் சத்தம் கேட்டு மற்றவர்களும் அந்த அறைக்குள் வர துவாரகாவிற்கு முகம் விழுந்துவிட்டது.

“இப்ப சொல்ல போறியா இல்லையா துவா?…” அஷ்மி முறைக்க,

“அது சஸ்பென்ஸ் டாக்டர்…” துவாரகா சொல்ல,

“இங்க ஒருத்தன் உயிரை கையில பிடிச்சுட்டு நேத்துல இருந்து ரோடு ரோடா பைத்தியக்காரன் மாதிரி சுத்தியிருக்கான் உன்னை தேடி. மண்ணாங்கட்டி சஸ்பென்ஸ்…” என பொரிய,

“வந்து உங்களுக்கு இன்னும் மூணு நாள்ல பர்த்டே வருதுன்னு நேத்து சாப்பிடறப்ப மாமா சொன்னாங்க. அதான் கிப்ட் வாங்கிட்டு வந்து சப்ரைஸ் பண்ணலாம்னு இருந்தேன்…” என சொல்ல அஷ்மிதாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“அதுதான் மாமாக்கும் தெரியாம கிளம்பிட்டேன். உங்கட்ட சொல்லிட்டார்ன்னா. ஆனா நானே இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலை டாக்டர். கிளம்பி ஆட்டோல தான் வந்தேன். நீங்க என்னை எப்பவும் கூட்டிட்டு போற மால்க்கு போகலாம்னு. போய்ட்டிருக்கும் போதே ஆட்டோ ரிப்பேர்…”

“வேற ஆட்டோல மாத்திவிட்டாங்க. அதுல ஏறும்போது மொபைல் கீழே விழுந்து நொறுங்கிடுச்சு. அதுவே ஒரு மாதிரி ஆகிடுச்சு எனக்கு. அது என்னவோ சந்துபொந்தா போச்சா. அந்த ஏரியா என்னவோ ஒரு ஸ்மெல். வாமிட் வந்துருச்சு…”

“வாமிட் பண்ணிட்டு தண்ணி வாங்கலாம்னு ஆட்டோ விட்டு இறங்க பார்த்தப்ப ஏதோ லாரி வேகமா மோதுற மாதிரி வந்துச்சு. அவ்வளவு தான். செத்தோம்னு  பயத்துல மயங்கிட்டேன் போல. ஆட்டோ அண்ணா தான் என்னை இங்க கூட்டிட்டு வந்தாங்க. காலையில தான் முழிச்சேன்…”

பாவமாய் அஷ்மிதாவிடம் சொல்லிக்கொண்டிருக்க அதிரூபன் பார்த்தபடி இருந்தான்.

“உடனே போய் கிப்ட் வாங்கனும்னு என்ன இருக்கு? அப்படி என்ன அவசரம் உனக்கு?…” என அஷ்மிதா கடிய,

“அதி, இவங்க தான் அந்த ஆட்டோ ட்ரைவர் வொய்ப். இவங்க தான் துணைக்கு இருந்திருக்காங்க நம்ம புள்ளைக்கு…” சங்கரன் சொல்ல அவருக்கு நன்றி சொல்ல கூட அவன் வாயை திறக்கவில்லை.

“நீங்க ஒன்னும் நினைக்காதீங்கம்மா. அவன் ரொம்ப பயந்துட்டான். நேத்து இவளை காணோம்னு ரொம்பவே தேடி அலைஞ்சதுல…” அஷ்மிதா அந்தம்மாவிடம் விளக்கம் சொல்ல,

“அட விடும்மா, நான் என்ன நினைக்க போறேன்? இந்த புள்ளை ஆட்டோலையே வாந்தி பண்ணி மயங்கிடுச்சு. வூட்டுக்காரருக்கு என்ன பண்ணன்னு தெரியாம வீட்டாண்ட இத்த இட்டுண்டு வந்துட்டாரு. மயக்கம் வேற தெளியலையா…”

“ரொம்ப ரொம்ப நன்றிங்கம்மா. உங்க உதவியை நாங்க எப்பவுமே மறக்கமாட்டோம்…” என சங்கரன் சொல்ல,

“அட என்னங்கய்யா? போன் நம்பர் தெரிஞ்சிருந்தா நேத்தே தகவல் சொல்லியிருப்போம். வேற எங்கயும் சிக்கிட கூடாதுல. காலம் கெட்டுக்கிடக்கு. அதுதான் இந்த புள்ளையா எழுந்ததும் கேட்டுப்போம்னு இருந்தோம்…”என சொல்ல,

“ஏன் துவா, கிளம்பறப்ப பர்ஸ் எடுத்தியா?…” என அஷ்மி கேட்க,

“ஆமா, ஆனா…” என அவள் யோசிக்க,

“இருக்குதுங்கம்மா. இந்தாங்க…” என அதையும் அந்த பெண்மணி தந்து,

“இதுல அட்ரெஸ் எதுவும் இல்லைங்க. நான் நேத்தே தேடிப்பார்த்துட்டேன். வெறும் காசு மட்டும் தான் இருந்துச்சு…” என கேட்காத தகவலையும் சொல்ல உண்மையில் நெகிழ்ந்தே போனான் அதிரூபன்.

“சித்தப்பா இவங்களுக்கு…” என சொல்ல,

“நான் பார்த்துக்கறேன் அதி…” என்று சொல்லி சங்கரனின் பர்ஸை எடுக்க,

“அட பணம்கிணம் கொடுத்து செஞ்ச உதவிய அசிங்கபடுத்தாதீங்க ஐயா. அந்த புள்ளையை நல்லா பார்த்துக்கங்க போதும். மாசமா இருக்கற பொண்ணு பதவிசா சூதானமா இருக்க வேண்டாமா?…” என சொல்லி அங்கிருந்து கிளம்பியும்விட்டார்.

அவர் சொல்லியதை நம்பமுடியாமல் துவாரகா பார்க்க அதிபனின் முகத்தில் எந்த உணர்வுமே இல்லாமல் இருக்க,

“மாமா?…” உணர்சிவயப்பட்ட குரலில் துவாரகா கட்டிலில் இருந்து இறங்கி நிற்க இருக்கும் இடம் மறந்து அவளை கட்டிக்கொண்டான் அதிபன்.

“செத்துட்டேன்டி. உன்னை பார்க்கற வரைக்கும் நான் நானா இல்லை. முன்ன என்னை விட்டு தள்ளி நின்னு கொன்ன. இப்ப என்னை சோதிச்சு பார்த்து கொல்ற…” என புலம்ப அவனின் பிதற்றல்கள் அனைத்தையும் ஒருவித ஆனந்தத்துடன் தன்னுள் கிரகித்தாள்.

நொடிக்கு நொடி அவனின் அழுத்தம் கூடிக்கொண்டே போக மூச்சுக்கு திணறியவள்,

“மாமா, பாப்பா…” என சொல்லியதும் தான் விட்டான்.

“பேபி இருக்கறதால தப்பிச்ச. இல்லைனா?…” என அவளின் கன்னத்தை கிள்ள,

“இல்லைனா?…” துவாரகாவும் அவனை சீண்ட,

“அட ராமா இந்த கொசுத்தொல்லைங்க தொல்லை தாங்க முடியலை…” என தலையிலடித்துக்கொள்ள அவளை பார்த்து சிரித்தான் அதிரூபன்.

“இந்த சிரிப்பை பார்த்து எத்தனை மணி நேரம் ஆச்சு. அதி உன்னோட இன்னொரு முகத்தை நான் பார்த்துட்டேன்டா…” என கேலி பேசியவள்,

“ஆமா துவா, அதி அப்பா உனக்கு கால் பண்ணினாரே, நீ எதுவும் பேசலையா?…” என அஷ்மி கேட்க,

“பண்ணினார், பண்ணினார். அவர் ஹலோ சொல்லி ஆரம்பிக்கும் போதே குரலை கேட்டு போனை கட் பண்ணாம டீப்பாய்ல வச்சுட்டேன். அவர் பேச்சை யார் கேட்க? தனியா பேசட்டும்னு விட்டுட்டேன்…” அசால்ட்டாய் துவா சொல்ல ஆவென வாயை பிளந்தாள் அஷ்மி.

அதை கேட்டுக்கொண்டிருந்த மற்றவர்களுக்கு சட்டென சிரிப்பு வந்துவிட்டது.

“அடப்பாவிமனுஷா மயில்சாமி. உனக்கு இந்த அவமானம் தேவையா? யாருமே இல்லாத கடையில யாருக்குய்யா டீ ஆத்துன. யாரை மிரட்டனும்னு நினைச்சியோ அவ உன் பேச்சை கூட கேட்கலையாம்…” என அஷ்மி புலம்பி சிரிக்க அதிபன் மற்றவர்களை கண்ணை காண்பித்தான்.

சங்கரனுக்குமே சிரிப்புதான். ஆனாலும் மறைத்துக்கொண்டவர் துவாரகாவிடம்,

“இனி தனியா எங்கயும் போகாதம்மா. உடம்பை பார்த்துக்கோ. நீ இல்லைனா எங்களுக்கு எங்க பிள்ளை இல்லை. இதை மனசுல வச்சுக்கோ…” என சொல்லி அவளின் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பிவிட்டார்.

அவளிடம் அதையும் கூட பதமாய் சொல்ல நினைத்து ஒரு அதட்டலுடன் தான் சொன்னார். அது அவரின் சுபாவம். அன்பு கூட அதட்டலாக தான் வெளிப்படும்.

துவாரகா சங்கரனின் பேச்சை கேட்டாலும் முகத்தில் எந்த உணர்வையும் பிரதிபலிக்கவில்லை. அவருக்கு உடல்மொழியில் கூட பதில் தரவில்லை. முகத்தை அவர்கள் இருக்கும் திசையில் கூட திருப்பவில்லை.

“அதி உங்கப்பா செஞ்சது எப்படி இருக்கு தெரியுமா? டேய் செவல தாவுடா தாவுன்ன மாதிரி இருக்கு. என்னவோ தாட்பூட்ன்னு குதிச்சதுல இந்த புள்ளை பயந்து போய் எங்கையாச்சும் போயிருக்கும்னு பில்டப் எல்லாம் குடுத்தாரு. இனி எங்க தாவ? தவக்கத்தான் செய்யனும். தமாசு. தமாசு…”

என்று சொல்லி இன்னும் இன்னும் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தாள் அஷ்மிதா. விஷாலுக்கு அவளின் சிரிப்பை பார்க்கவேண்டும் என்று ஆவல் பிறந்தாலும் பார்வையை அவள் புறம் திருப்பவே பயந்தான்.

ஆனாலும் அனைவருக்குமே அஷ்மியின் கலாயில் அப்படி ஒரு புன்னகை. அத்தனை நேரம் இருந்த அழுத்தம் மறைந்து அதிரூபனும் கூட வாய்விட்டு சிரித்தான்.

“இன்னும் எவ்வளவு நேரம் இங்கயே இருக்க. கிளம்பலாமா?…” என அர்னவ் கேட்க,

“ஹ்ம்ம் போகலாம் பசங்களா…” என்றவன் துவாரகாவை தன் கைவளைவில் வைத்துக்கொண்டு முன்னே நடக்க விஷால் அங்கு இருந்த செவிலி பெண்ணிடம் துவாரகாவை கவனித்துக்கொண்டதற்கு கணிசமான தொகையை கொடுத்துவிட்டு நன்றி சொல்லி கிளம்பினான்.

அதை பார்த்த துவாரகாவினுள் கசந்த முறுவல். சிறுத்தை தன் புள்ளிகளை என்றும் மாற்றிகொள்வதில்லை என நினைத்தாள்.

இவர்களின் இந்த திடீர் மாற்றம் என்னிடம் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிட போவதில்லை என உறுதிகொண்டாள்.

“அதி, நீ என்னோட வந்திரு. உன் காரை உன்னோட பாசமலர்கள் ஓட்டிட்டு வரட்டும்…” என சொல்லி தன் காரை நோக்கி செல்ல அதிபன் பேசும் முன்பே,

“நீங்க கிளம்புங்க அண்ணா. நாங்க வந்திடறோம்…” என விஷால் சொல்லவும் சந்தோஷ் அதிபனின் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

அதிபனுடன் அஷ்மிதாவின் காரில் ஏறிய துவாரகா முதல்நாள் நடந்ததை கேட்க அஷ்மிதா சுவாரஸியம் குறையாமல் நடந்ததை அவளிடம் கூறிக்கொண்டிருந்தாள்.

விழிகள் விரிய அவள் சொல்ல சொல்ல துவாரகாவிற்கு ஆச்சரியம் தாளவில்லை. அதிபன் ரத்தினசாமியின் சட்டையை பற்றிவிட்டானா? என திகைத்துப்போனாள்.

இந்தளவிற்கு அவன் துடித்திருந்தானால் தான் அசட்டுதனமாய் செய்த செயல் எந்தளவிற்கு அவனை தாக்கியிருக்க வேண்டும்? இவனை பெற என்ன பாக்கியம் செய்துவிட்டேன்?

அதே திகைப்புடன் அவனை திரும்பி பார்க்க அவனோ நிர்மலமான முகத்தோடு உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டான்.

“மாமா தூங்கிட்டாங்க டாக்டர்…” துவாரகா சொல்ல,

“ஹ்ம்ம் தூங்கட்டும். எழுப்பாத. பாவம் அவன். நேத்துல இருந்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்…” என தன் நண்பனை நினைத்து கவலைகொண்டாள்.

இவனுக்காகவேணும் துவாரகா இவனுடனே மகிழ்ச்சியாக நூறாண்டுகள் இருக்கவேண்டும் என கடவுளிடம் ப்ராத்தனை மேற்கொண்டாள்.

ஒருமணிநேரம் சென்று வீட்டிற்கு வந்து சேர கார் நின்ற ஓசையில் கண் விழித்தவன்,

“ஸாரிடா துவா. அசந்துட்டேன்…” என மன்னிப்பை யாசிக்க,

“நான் தான் மாமா தப்பு. நான் சொல்லாம போனதால உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்? என்னை மன்னிச்சிடுங்க மாமா…” அவனின் மார்பில் சாய்ந்துகொண்டே அவள் கேட்க,

“அடடா போதும்யா உங்க ரொமான்ஸ். தாங்க முடியலை. முதல்ல காரை விட்டு கீழே இறங்குங்க…” என அங்கலாய்த்தபடி அஷ்மிதா இறங்க,

“இவளுக்கு பொறாமைடா. நீ வா. நாம உள்ள போய் பேசலாம்…” அதிரூபன் இறங்கி அவளை மெதுவாய் இறங்க சொல்ல,

“உங்களுக்கு முதல்லையே தெரியுமா மாமா? பாப்பா இருக்குன்னு…”

அவள் கேட்டதும் புன்னகைத்தவன் ஆமாம் என தலையசைக்க அஷ்மிதா அவர்கள் அருகில் வந்து,

“வீட்டுக்குள்ள போகலாமா இல்ல இங்கயே இப்பவே உனக்கு மொத்த ஹிஸ்டரியும் தெரியனுமா?…” என பொங்க அவளை கண்டு புன்னகைத்தாள் துவாரகா.

வாசல் அருகில் ஏற்கனவே சந்தோஷ், விஷால், அர்னவ் நின்றிருக்க அவர்களை பார்த்துவிட்டு அதிபனை பார்த்தவள் முகம் மாறிவிட்டிருந்தது.

“நீ உள்ள போ. நான் பேசிட்டு வரேன்…” என அனுப்பியவன் விஷாலை நோக்கி சென்றான்.

“முன்னாடியே வந்துட்டீங்களாடா?…” என கேட்டவன் அப்பொழுதுதான் கேட் அருகே நின்றிருந்த செக்யூரிட்டியை பார்த்தான். வேறு ஆள் காவலுக்கு நின்றிருந்தான் அங்கே. அதிலும் ஒன்றுக்கு இரண்டாக.

“நான் தான் அண்ணா பழைய செக்யூரிட்டியை மாத்தினேன். இனி இவங்க தான் வருவாங்க. பகல்ல ரெண்டு பேர். நைட் ரெண்டு பேர். கார் கூட இன்னொன்னு புக் பண்ணியிருக்கேன் உங்க பேர்ல. ட்ரைவரும் மாத்தியாச்சு…”

விஷால் சொல்ல அவனை பார்த்து புன்னகைத்தான் அதிபன். சந்தோஷ், அர்னவ் இருவரும் தலையசைக்க,

“ஓகே அண்ணா. எதுனாலும் கால் பண்ணுங்க. நாங்க உடனே உங்களோடு இருப்போம். கிளம்பறோம் அண்ணா…” என்றதும் தலையசைத்து விடைகொடுத்தான் அதிரூபன்.

அவர்களை அவன் வீட்டினுள் அழைக்கவே இல்லை. அவர்களும் உள்ளே வரவேண்டும் என நினைக்கவும் இல்லை. வந்தார்கள். சென்றார்கள். ஒரு பெருமூச்சுடன் உள்ளே செல்ல திரும்பியவனின் மொபைல் இசைக்க எடுத்து பார்த்தான்.  ராஜாங்கம் தான் அழைத்திருந்தார்.

“சொல்லுங்க அங்கிள்…” என அவரிடம் பேச,

“அதி ஆர் யூ ஓகே…” என சின்ன சிரிப்புடன் அந்த பெரியமனிதர் கேட்க அவரின் குரலில் அத்தனை அன்பு.

“எஸ் அங்கிள். இப்போ ஓகே தான். ஆனா…”

“சொல்லு அதி. இப்போ ஓகேனா?…”

“எப்பவுமே ஓகேவா இருக்கனும்னு நினைக்கிறேன் அங்கிள். என்னோட அப்பா இன்னொரு தப்பு செய்ய இனி நான் விடப்போறதில்லை…”

“வாட் யூ மீன் அதி?…” ராஜாங்கம் கேட்க,

“அப்பா இன்னும் மாறலை அங்கிள். நேத்து நான் அவ்வளவு பேசிட்டு வந்த பின்னாலையும் அவரோட ஆளுங்களை விட்டு எங்களை கண்காணிக்க வச்சிருக்கார். நம்பத்தகுந்த நியூஸ். துவாவை என் கண்ணுல பட்டுடாம பார்த்துக்கனும்ன்றது மட்டுமில்லாம அவங்கட்ட கிடைச்சா. ப்ச்…” அதி சொல்ல ,

“வாட்? உனக்கு எப்படி தெரியும் அதி?…” அதிர்ந்துபோய் ராஜாங்கம் கேட்க,

“அவர் எனக்கு அப்பா ஆகறதுக்கு முன்னால இருந்தே அரசியல்வாதி அங்கிள். அவர் கிரிமினில் மைண்ட்ல எனக்கும் கொஞ்சமாவது இருக்கும்ல. துவாவை எனக்கு மனைவியா என்னைக்கு நான் முடிவு பண்ணினேனோ அப்ப இருந்தே அவங்க க்ரூப்ல எனக்கான ஒரு ஆளை நான் தேர்ந்தெடுத்துட்டேன்…”

“அதி இதை நீ என்கிட்டே கூட சொல்லலை. வெரிகுட்…” ராஜாங்கம் பாராட்ட,

“அங்கிள் நான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னதை இப்ப செயல்படுத்தனும். ஹெல்ப் பண்ணுவீங்களா?…” அதிபனின் வேண்டுதலில்,

“இதை நீ எனக்கு சொல்லனுமா அதி? கண்டிப்பா செஞ்சிடலாம்…” என அவனுக்கு வாக்களித்தவர்,

“ஈவ்னிங் வந்து நான் துவாவை பார்க்கறேன்னு சொல்லு அதி. டேக் ரெஸ்ட்…”

“இல்லை அங்கிள். ரெஸ்ட் எடுக்க முடியாது. என் மாமியாரை பார்க்க போறேன்…”

“அதி, நேத்து நீ கொஞ்சமும் தூங்கலை. உடனுக்குடனே எல்லாமே பண்ணனுமா? நாளைக்கு கூட பார்த்துக்கலாமே…” ராஜாங்கம் யோசனையாக சொல்ல,

“நோ அங்கிள். இன்னைக்கு, இப்பவே நான் கிளம்பனும். இனி எதையும் தள்ளிபோட போறதில்லை…” என ஸ்திரமாய் சொல்ல,

“ஓகே மை பாய். உனக்கு எப்பவும் பக்கபலமா நான் இருப்பேன். எப்பவும்…” என சொல்லி விடைபெற்றார் ராஜாங்கம்.

அவரிடம் பேசிவிட்டு வீட்டினுள் அவன் வர துவாரகா அவர்கள் அறையில் குளித்துக்கொண்டிருந்தாள். இன்னொரு அறையில் சென்று பரபரவென குளித்து கிளம்பியவன்,

“அஷ்மி, துவாவை பார்த்துக்கோ. நான் ஒரு முக்கியமான வேலையா போய்ட்டு வந்திடறேன்…” வேகமாய் கிளம்ப,

“அகிலா ஆன்ட்டிய பார்க்கவா அதி?…” அஷ்மி கேட்டதற்கு தலையை மட்டும் ஆட்ட,

“ஓகே பை…” என்றாள் அஷ்மிதா.

“துவா கேட்டா,…”

“முக்கியமான கால் வந்தது. கிளம்பிட்டான். வந்திருவான்னு சொல்லிடறேன். போதுமா?…” அஷ்மி அவன் ஆரம்பித்ததை முடிக்க அவளின் தலையில் லேசாய் கொட்டு வைத்தவன்,

“பை. பார்த்துக்கோ. ரெண்டு பேரும் சாப்பிடுங்க…” என்று சொல்லி  சென்றான்.

————————————————————–

அந்த மிகப்பெரிய கட்டிடத்தில் உள்ளே உள்ள அலுவலக அறையில் அகிலவேணியின் வரவிற்காக காத்திருந்தான் அதிரூபன். ஐந்து நிமிட நேரத்தில் சிவகாமியுடன் வந்து சேர்ந்தார் அகிலவேணி.

தன்னை பார்த்ததும் திகைப்பார் அதிர்வார் என இவன் எண்ணியிருக்க அவரோ மிக சாதாரணமாய் அவனை எதிர்கொண்டார். அதுவே ஒருபடபடப்பை கொடுத்தது அதிரூபனுக்கு.

அவனின் உன்னால் இருந்த சேரில் அமர்ந்த அகிலவேணி அவனை பார்த்திருக்க பேசாமல் இருந்தா சரிவராது என நினைத்தவன்,

“நல்லா இருக்கீங்களா அத்தை?…” என ஆரம்பித்தான்.

இப்பொழுது அவன் எதிர்பார்த்தது நடந்தது. அத்தை என்ற விளிப்பு அகிலவேணியிடம் பேரும் தாக்கத்தை ஏற்படுத்த அவனை முறைத்தவர்,

“என்னை அத்தைன்னு கூப்பிட வேண்டாம் மிஸ்டர் அதிரூபன் ரத்தினசாமி…”

அழுத்தம் திருத்தமாய் அடக்கப்பட்ட கோபத்துடன் அகிலவேணி எச்சரிக்கை குரலில் சொல்ல அதில் புன்னகைத்தான் அதிரூபன்.

“உங்க வயசுக்கு நான் மரியாதை தரனுமே அத்தை…” என மீண்டும் அத்தை போட,

“அப்போ ஆன்ட்டின்னு கூப்பிடுங்க. இந்த உறவுமுறை எல்லாம் குப்பையில தூக்கி போடுங்க மிஸ்டர்…” இப்பொழுது சட்டென தன்னுடைய உணர்வுகளை மறைத்து கோபத்தை கட்டுக்குள் நிறுத்திவிட்டார் அகிலவேணி.

“ஆன்ட்டியை தான் அத்தைன்னு நான் தமிழ்ல சொன்னேன். நீங்க என்ன நினைச்சீங்க?…” அதிரூபன் கிடுக்கிபிடி போட வார்த்தையின்றி அவனை வெறித்தார் அகிலவேணி.

 

மின்னல் தெறிக்கும்…

Advertisement