Advertisement

மின்னல் – 21

                   அன்று மதியநேரம் சாப்பிட வந்து சென்றபின் இரவு வர தாமதமாக இருக்கும் என தெரிந்தது அதிரூபனுக்கு. அதனால் துவாரகாவிற்கு அழைத்து சொல்லிவிடுவோம். சாப்பிட்டுவிட்டு தூங்கட்டும் என நினைத்தான் அதிரூபன்.

அவனின் முகம் அத்தனை தெளிவாய் இருந்தது. இந்த மாலை வேளை எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பது அவன் மட்டுமே அறிந்த ஒன்று.

ஆம், அகிலாவை சந்திக்க இருக்கிறான்.

இனியும் தள்ளிபோடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. இனி அவர் மறுப்பதற்கும் எதுவுமில்லை. மறுத்தால் என்ன கூறவேண்டும் என்றும் தெளிவாய் முடிவுசெய்துகொண்டான்.

அனைத்தும் நல்லவிதமாய் நடந்துவிட்டால் துவாரகாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து அவளின் முகம் மலர்வதை காணவேண்டும். அந்த நிமிடம் அதை அவள் எப்படி அனுபவிக்கிறாள் என பார்க்கவேண்டுமென ஆசைகொண்டான்.

நினைக்கும் போதே உற்சாகம் குமிழிட துவாரகாவிற்கு அழைத்தான். எடுக்கப்படவில்லை. மீண்டும் அழைத்து அழைத்து பார்த்தவன் வீட்டு எண்ணிற்கும் முயற்சித்து தோற்றவன் செக்யூரிட்டிக்கு அழைக்க,

“ஸார் மேடம் மதியமே ரொம்ப வேகமா கிளம்பி போனாங்க ஸார். ட்ரைவர் இப்ப வந்திடட்டும். கார்ல போங்கன்னு சொன்னதுக்கு கேட்காம இப்ப வந்திடறேன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க…” என பதட்டமாய் சொல்ல இவனுக்கு பதறிவிட்டது.

சொல்லாமல் தனியாக இதுவரை எங்கும் சென்றதில்லையே இவள்? என்ன அவசரமோ? மொபைல் வேறு ரீச் ஆகவில்லை. அதுவே ஒரு பதட்டத்தை அவனுள் விதைத்திருந்தது.

“கார் வீட்ல இல்லாம எங்க போச்சு?…” என இரைய,

“ஸார் காரை சர்வீஸ்க்கு விட்டிருந்தான் ட்ரைவர். அதை எடுக்கத்தான் போயிருந்தான். அதுக்குள்ளே மேடம் கிளம்பிட்டாங்க…”

“யூ டேமிட், உனக்கு எல்லாம் எதுக்குயா செக்யூரிட்டி போஸ்ட்? என்ன டேஷ்க்கு நீ வேலை பார்க்கற? அதை எனக்கு அப்பவே போன் பண்ணி சொல்லவேண்டியது தானே? யூஸ் லெஸ்…” என கோபமாய் சொல்லிவிட்டு  வேகமாய் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

அவன் கிளம்பும் பொழுதே விஷாலும் அவனுடன் வந்தவன் என்னவென கேட்க ஒன்றுமில்லை என சொன்னாலும் அதிரூபனின் முகத்தில் இருந்த பதட்டத்தில் தானும் அவனுடன் சேர்ந்துகொண்டான்.

அத்தோடு நிற்காமல் சந்தோஷிற்கு இன்று வீட்டில் ஏதாவது ரத்தினசாமி பேசினாரா? என்னவென கேட்குமாறு ஒரு மெசேஜையும் தட்டிவிட்டான்.

ஏனென்றால் அதிரூபன் இந்தளவிற்கு பதட்டம் கொள்வது துவாரகாவின் விஷயத்தில் மட்டுமே. வேறு விஷயமாக இருந்தால் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அதை கையாண்டிருப்பான் அவன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

அதனாலேயே உடனடியாக சந்தோஷிற்கு தகவலை அனுப்பியவனின் வேண்டுதல் இதில் தன் பெரியப்பாவிற்கு எந்த சம்பந்தமும் இருக்க கூடாது என்பது மட்டும் தான்.

துவாரகாவின் எண்ணிற்கு அழைத்து அழைத்து ஓய்ந்துபோன அதிரூபன் வீட்டிற்கு நுழைந்ததும் அங்கே ஹாலில் இருந்த டீப்பாயில் டெலிபோன் அதனிடத்தில் பொருத்தப்படாமல் நிமிர்த்தி வைக்கப்படிருக்க வேகமாய் சென்றான்.

காலர் ஐடியில் கடைசியாக வந்த நம்பரை பார்த்ததும் அவனின் கண்கள் கோபத்தில் சிவந்துபோனது.

“பார்த்தியா உன் பெரியப்பா பண்ணின வேலையை. அவர் தான் கடைசியா போன் பண்ணியிருக்கார். அதுதான் துவா அவசரமா கிளம்பி போயிருக்கா…” என கர்ஜிக்க,

“அண்ணா, இருங்க. எதுக்கு பெரியப்பா கால் பண்ணினாங்கன்னு தெரியாம நாம முடிவுக்கு வரவேண்டாம். அண்ணி வேற விஷயமா கூட போயிருக்கலாம்ல. கொஞ்சம் அவசரப்படாம தேடலாம்…” என விஷால் சொல்ல அவனை பிடித்து தள்ளியவன்,

“இன்னும் என்னடா வேணும் உங்களுக்கு? அவ இருக்கிற நிலைமை தெரியாம பேசிட்டு…” என தலையில் அடித்தவன்,

“இன்னைக்கு அந்த மனுஷனை உண்டில்லைன்னு ஆக்கிடறேன்…” அவனின் ரௌத்திரத்தில் விஷால் பயந்துவிட்டான்.

“அண்ணா…”

“நானும் அமைதியா விலகி இருக்கனும்னு தானே நினைக்கிறேன். இல்லை எங்கையாவது கண்காணாத இடத்துக்கு போய்டனுமா? குடும்பத்தை விட்டு உங்க எல்லாரையும் விட்டு போக மனசில்லாம தானடா இங்கயே உங்க முன்னால உங்க எல்லோரோட மத்தியில வாழ்ந்துட்டு இருக்கேன்…”

அவனின் ஆதங்கம் விஷாலை சுட்டது. அவனும் இதில் என்ன செய்யவென தெரியாமல் திகைத்து நிற்க,

“எங்க போனாளோ? என்ன பன்றாளோ? அவ இன்னும் இந்த ஊருக்கு பழகவே இல்லைடா. அவ போற இடங்களே ரொம்ப கம்மி…” என்றவனின் மூளையில் திடீரென மின்னலடிக்க வேகமாய் தன்னுடைய மொபைலை எடுத்து சிவகாமிக்கு அழைத்தான்.

“சொல்லுங்க ஸார். இன்னைக்கு எத்தனை மணிக்கு வரீங்க?…” எடுத்த எடுப்பில் அவர் விஷயத்திற்கு வர,

“இல்லை சிவகாமி, நான் இன்னைக்கு வரலை. அது வந்து டாக்டர் அஷ்மிதா இன்னைக்கு அங்க வந்திருந்தாங்களா?…” என கேட்க அவனுள்ளம் வந்திருக்கவேண்டும் என ஜபம் செய்ய ஆரம்பித்தது.

“இல்லையே ஸார், போன வாரம் தான் வந்துட்டு போனாங்க. இன்னும் பத்துநாள் கழிச்சு தான் வருவேன்னு சொன்னாங்க…”

“ஓஹ்…” என்றவன்,

“அகிலா அத்தை?…”அவன் இழுக்க,

“இங்கதான் ஸார் இருக்காங்க…”

“இன்னைக்கு வெளியில எங்கையாவது போனாங்களா? இல்லை போன் பண்ணினாங்களா யாருக்கேனும்?…” அவன் சந்தேகமாய் கேட்க,

“நோ ஸார். யாருக்கும் பேசலை, யாரையும் பார்க்கவுமில்லை. இப்போன்னு இல்லை. இங்க வந்ததிலிருந்தே…” என்றவர்,

“ஸார், எனி ப்ராப்ளம்?…” சிவகாமி கேட்க,

“நத்திங். ஓகே தேங்க் யூ…” என்று வைத்துவிட இப்பொழுது அஷ்மிதாவிற்கு அழைத்தான்.

“சொல்லுடா, என்னவாம் உன் வொய்ப் கால் பண்ணியிருந்தா? நான் பேஷன்ட்ஸ் பார்த்துட்டு இருந்தேன். எடுக்கலை. உன்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணினாளாக்கும்?…” என அவள் கேட்க அதிபனுக்கு தலையே சுற்றியது.

“அஷ்மி, துவா எப்போ உனக்கு கால் பண்ணினா?…”

“என்ன உன் வாய்ஸ்ல இவ்வளோ டென்ஷன்? ஒரு ஒரு மணி நேரம் இருக்கும். என்னாச்சுடா?…” சரியாக அவனின் நிலையை அவள் கணிக்க,

“துவா வீட்ல இல்லடா அஷ்மி. எங்க போனான்னு தெரியலை…” என்றதுமே,

“முதல்ல மயில்சாமியை பிடி. துவாவை கண்டுபிடிச்சுடலாம். எனக்கும் டியூட்டி முடியபோகுது. நானும் வரேன். போய் அந்தாளை பாரு நீ. க்விக்…”  என அவனை துரிதப்படுத்தியவள் தானும் கிளம்ப ஆரம்பித்தாள்.

இங்கே விஷாலின் மொபைலுக்கு சந்தோஷ் அழைக்க அதிபன் பேசி முடிக்கவும் அதை ஏற்றவன்,

“சொல்லுடா…” என,

“டேய் உன் பெரியப்பா தான் வேலையை பார்த்திருக்காருடா. ஸ்வேதா பண்ணிவச்ச வேலை இது எல்லாம்…” என சந்தோஷ் பொறும,

“வாட்? ஆர் யூ சூர்?…” என விஷால் பயத்துடன் அதிபனை பார்த்துக்கொண்டே கேட்க எழுந்த வந்தவன் விஷாலிடமிருந்து மொபைலை பறித்தான்.

“சந்தோஷ்?…” என மொபைலில் இருந்த பெயரை பார்த்துவிட்டு தன் காதில் பொருத்தியவன்,

“சந்தோஷ், அங்க என்ன நடந்தது?…” என கேட்க,

“அத்தான்…” சந்தோஷ் தயங்க,

“இப்ப சொல்ல போறியா இல்லையா?…”

அவனிடம் கேட்டுக்கொண்டே விஷாலை அழைத்தவன் வேகமாய் காரில் ஏறி விஷாலை ட்ரைவ் பண்ணுமாறு பார்வையில் உணர்த்தினான்.

“அத்தான், அங்க நடந்த எல்லாத்தையும் காலையில ஸ்வேதா மாமாட்ட சொல்லிட்டா. ஏதோ வேகத்துல உளறிட்டா…”

“அதனால?…”

“அதுதான் மாமா கோவமா அக்காட்ட பேசியிருக்காங்க. அப்ப ஸ்வேதா கூடவே தான் இருந்திருக்கா. இப்பத்தான் நான் அதட்டி கேட்டதும் சொன்னா…” என்று சொல்ல,

“இப்ப அவரு எங்க?…” உணர்ச்சி துடைத்த குரலில் கேட்க,

“மதியம் போனவரு வீட்டுக்கு இப்பதான் வந்தாங்க. ரூம்க்கு போயிருக்காங்க…” என்றதும் இணைப்பை துண்டித்தவன்,

“வீட்டுக்கு போ விஷால்…” என்றவன் ராஜாங்கத்திற்கு அழைத்தான்.

“இப்பதான் அஷ்மி சொன்னா அதி. நான் பார்த்துக்கறேன்…”

“அங்கிள், துவா எனக்கு ரொம்ப முக்கியம். அவ இல்லைனா…” உடைந்த குரலில் அவன் சந்தோஷ் பேசியதையும் சேர்த்து நடந்ததை கூற மறுபுறம் இருந்த ராஜாங்கத்திற்கு அத்தனை வேதனையாக போனது.

எதற்கும் கலங்காதவன் இந்தளவிற்கு உடைந்துவிட்டானே? காதல் எத்தனை மோசமான ஒரு வியாதி? எப்பேர்ப்பட்டவனையும் கோழையாக்கிவிடும் என நினைத்தவர்,

“நாம எந்த நெகட்டிவ் தாட்ஸும் வச்சுக்க வேண்டாம் அதி. துவா கண்டிப்பா சேபா தான் இருப்பா. நீ முதல்ல தைரியமா இரு. உன் அப்பனுக்கு மேல எனக்கு தெரியும். நம்ம பொண்ணுக்கு தப்பா எதுவும் நடந்திருக்காது. துவாவை கண்டிப்பா கண்டுபிடிச்சிடலாம்…” ராஜாங்கம் அவனுக்கு ஆறுதல் கூற,

“நான் இப்ப அவர் வீட்டுக்கு தான் போறேன்…”

“ஓகே, நான் என் சைட் ஆளுங்களை விட்டு தேட சொல்றேன். ரத்தினசாமி என்னதான் சொல்றார்ன்னு கேட்டு சொல்லு…” என்றவை அழைப்பை துண்டித்துவிட்டு தனக்கு நம்பகமான ஆட்களை முடுக்கிவிட்டார்.

ஏற்கனவே அதற்கான வேலையில் அதிபனும் தன்னுடைய ஆட்களை வைத்து தேடுதலை தொடங்கியிருந்தான். விஷயம் வெளியில் கசியாதவாறு துவாரகாவை தேட ஆரம்பித்திருந்தனர்.

விஷாலும் அர்னவிடம் விஷயத்தை கூறியிருந்தான்.

அவனும் அவன் நண்பர்களுடன் துவாரகாவை தேட ஆரம்பித்தான். ஆனாலும் உள்ளுக்குள் ரத்தினசாமியின் செயலால் அதிபன் என்ன செய்வானோ என்ற பயம் படுத்தி எடுத்தது.

ரத்தினசாமியின் வீடு வந்ததும் புயல் வேகத்தில் காரை விட்டு கீழே இறங்கியவன் கிட்டத்தட்ட ஓட்டமும் நடையுமாய் வேகமாய் உள்ளே நுழைந்து ஹாலில் காபி குடித்துக்கொண்டிருந்த ரத்தினசாமியின் முன்னால் நின்றான்.

கார் வந்த வேகத்திலேயே வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் ஹாலில் வந்து குழுமிவிட்டனர். வைத்தியநாதன் உட்பட.

திடீரென அதிபன் வந்து நின்றதும் ஒருகணம் தன் கண்களையே நம்பமுடியாது பார்த்தவர் வேகமாய் எழுந்துவிட்டார் ரத்தினசாமி.

“அதிபா எத்தனை நாள் ஆச்சுப்பா நீ இந்த வீட்டுக்கு வந்து. அவளோட போனவன், இன்னைக்குத்தான் இங்க வர தெரிஞ்சதா உனக்கு?…”  

ஆர்ப்பாட்டமாய் அவனின் அருகில் நெருங்க தன்னுடைய மொத்த கோபத்தையும் அடக்கியவனாக அமைதியாக அவரை அணுகுவோம் என நினைத்தான். அதற்கேனும் அவர் சொல்லிவிடமாட்டாரா என நினைத்து.

“துவா எங்க?…” என்றான் அதிபன்,

“அவ ஓடிட்டாளா?அதுதான் இங்க வந்தியா? அப்பா சொன்னேன்லப்பா அவ நம்ம குடும்பத்துக்கு சரிப்பட மாட்டான்னு. பாரு. அவளே போய்ட்டா. விட்டது சனியன்னு விட்டுத்தொலை…”

அதிரூபன் வந்திருக்கும் மனநிலை புரியாதவராக மகன் வந்துவிட்டான் என்கிற சந்தோஷத்தில் அவர் பேச,

“என்ன சொன்னீங்க? துவாரகா எங்கன்னு கேட்டா?…” என்றவனை முழுதாய் பேச விடாது,

“போனா போகட்டும்ப்பா. அப்பா உனக்கு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைக்கிறேன். அவளை எதுக்கு தேடற? எங்குட்டு போய் தொலைஞ்சாளோ? நிம்மதியா இரு. போனவ எங்கையாச்சும் செத்துட்டான்னு சேதி கிடைச்சா இன்னும் நிம்மதி…”

ரத்தினசாமி இன்னும் பேச அதற்கு மேல் பொறுக்காதவன் அவரின் சட்டையை கொத்தாய் பற்றிவிட்டான்.

“ஏய்….” என்றவன் விழிகளில் அத்தனை சினம். வார்த்தையில் அத்தனை சீற்றம்.

“அப்பான்னு பார்த்தா உன் அரசியல் புத்தியை நீ உன் பிள்ளைக்கிட்டையே காண்பிச்சுட்டல. என் வாழ்க்கையை விட உனக்கு உன்னோட பகையும் உன் தங்கச்சியும் தான் பெருசா போய்ட்டாங்க இல்லையா? என்ன மனுஷன்யா நீ? எனக்காகவாவது நீ துவா மேல இருக்கற கோபத்தை விட்டுடுவன்னு நினைச்சேன். ஆனா நீ?…”

செத்தால் நிம்மதி என்கிற வார்த்தையில் தகப்பனுக்கான மரியாதை எல்லாம்  எல்லாம் பறந்திருந்தது.

உடலே ஒரு கணம் தூக்கிப்போட்டது அவர் சொல்லிய அந்த வார்த்தையில். கண்கள் கசிய அவரை பார்த்தவன்,

“வாயும் வயிறுமா என் வாரிசை சுமந்திட்டு இருக்காய்யா. மாசமா இருக்கிற பொண்ணை இன்னும் எத்தனை பாடு படுத்துவ? அவளை என்ன பண்ணின?…” இப்பொழுது குரல் மொத்தமும் கெஞ்சலே விஞ்சியிருந்தது.

என்ன? என அனைவரும் பார்த்திருக்க அவனருகே வந்த பத்மினி,

“அதி…” என அழைத்ததும் அவரை திரும்பியும் பார்க்காதவன்,

“சொல்ல சொல்லுங்கம்மா இந்த மனுஷனை. என்ன பண்ணினாருன்னு. அவளை என்கிட்டே குடுத்துட சொல்லுங்கம்மா. இனி இந்த குடும்பத்தோட உறவே வேண்டாம்னு நாங்க போய்டறோம்…” என கத்த,

“அதி, என்ன பேச்சு இது? நீ எதுக்கு போகனும்?…” என அன்னபூரணி வேகமாய் வர ரத்தினசாமி துவாரகாவிற்கு போன் செய்தது ஸ்வேதாவை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவள் பயந்து நடுங்கிக்கொண்டிருந்தாள் தன் தாயை நினைத்து.

அதிபன் தன் தோளில் இருந்த அன்னபூரணியின் கையை வேகமாய் உதறியவன் அவரை பார்த்து கையெடுத்து கும்பிட்டான்.

“போதும், இத்தோட உங்க அண்ணனை நிறுத்திட சொல்லுங்க. அவருக்கு இப்ப நான் அவரோட மகனா தெரியலை. அகிலவேணி மருமகனா தான் தெரியறேன். அவங்க பொண்ணோட புருஷனா தெரியறேன். அதுக்காக தான் இப்ப இவ்வளவு வில்லத்தனம் செய்யறார். மகனா நினைச்சிருந்தா துவாரகாவுக்கு கஷ்டம்னா அது எனக்கு வலிக்கும்னு அவருக்கு தோணவே இல்லையே. தங்கச்சிக்கு நியாயம் செய்யனும். அது மட்டும் தான் அவருக்கு…”

என அவரை விட்டு விலகி பேசியவன் ரத்தினசாமியை பார்க்க அவர் முகத்தில் அத்தனை வேதனை தன் மகனா தன்னை மரியாதை இல்லாமல் பேசியது என.

இதை அனைத்தையும் விட பத்மினிக்கு துவாரகா தாயாக போவது உள்ளூர அத்தனை மகிழ்வை தந்தது.

“துவா உண்டாகியிருக்காளா?. இதை ஏன் எங்ககிட்ட சொல்லலை அதி?. சொல்லியிருந்தா அவளை நான் என் கண்ணுக்குள்ள வச்சு பத்திரமா பார்த்திருந்திருப்பேனே?…”  என கேட்க,

“அவளுக்கே இன்னும் தெரியாதும்மா. அஷ்மி தான் கண்டுபிடிச்சா. அதை அவளே இன்னும் உணரலை. நாங்க அவளை எப்படி பார்த்திட்டு இருக்கோம்னு தெரியுமா?…” என்றவன்,

“நீங்க துவாக்கிட்ட என்ன பேசினீங்க? சொல்லுங்க. நீங்க பேசின பின்னால தான் துவா வேகமா வெளியில கிளம்பி போனா. இப்ப எங்க இருக்கான்னு தெரியலை. அவ இப்ப எங்கன்னு எனக்கு தெரியனும்…” அடக்கப்பட்ட கோபத்தில் அவன் பல்லை கடித்துக்கொண்டு கேட்க சங்கரன் வந்துவிட்டார் அங்கே.

“அதி, என்ன ஆச்சு?…” என வர,

“இவரோட பாவத்துல உங்களோட பங்கு இன்னும் எவ்வளவு சித்தப்பா? நீங்களாவது உண்மையை சொல்லுங்க…” என்றவன் விஷாலை பார்க்க அவனின் பார்வைக்கான அர்த்தம் புரிந்ததை போல ரத்தினசாமியின் மொபைலை கேட்டான்.

“போன் தாங்க பெரியப்பா. ப்ளீஸ். அண்ணனோட கோவத்தை இன்னும் அதிகமாக்காதீங்க. அண்ணி வேற இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியலை. இல்லை நீங்களே அவங்களை எங்கையாவது அடைச்சு வச்சு…”

“விஷால்…” என ரத்தினசாமி சீற,

“அண்ணே என்ன பண்ணுனீங்க? இப்ப சொல்ல போறீங்களா இல்லையா?…” என சங்கரன் கேட்கவும் சந்தோஷ் தான் அனைத்தையும் சொன்னான். கேட்டதும் தலையில் அடித்துக்கொண்டவர்,

“எத்தனை சொன்னாலும் உங்களுக்கு புரியாதா அண்ணே?…” என்றார்.

“சங்கரா, நான் எதுவும் செய்யலைப்பா…” என தம்பியிடமும்

“அதிபா, அப்பாவை நம்புப்பா. நான் அவளை ஒன்னும் செய்யலைப்பா…” என கெஞ்ச அவரின் மொபைலை கேட்டு அதிபனே கையை நீட்டினான்.

வேறு வழியின்றி அதை அவர் கொடுக்க அதை வாங்கியவன் அவர் பேசிய கால் லிஸ்ட்களை பார்த்துவிட்டு துவாரகாவின் அழைப்பில் பதிந்திருக்கும் ரெக்காடரை ஓடவிட்டான்.

அதில் அவர் பேசியது மொத்தமும் பதிவாகி இருந்தது. கேட்க கேட்க அதிபனின் ரத்தம் சூடேறியது.

அதன் சாராம்சம் துவாரகா ஹலோ என்று மட்டும் தான் பேசியிருந்தாள். அதில் இருந்து ரத்தினசாமியின் மொத்த கொலைவெறியும் வார்த்தைகளாய் அதில் கொடூரமாய் பதிந்திருந்தது.

துவாரகாவை திட்டியதிலிருந்து, தன் தங்கையை அவள் பேசியதற்கு துவாரகாவை ஆள் வைத்து தூக்கிவிட்டு இருக்குமிடம் தெரியாமல் அழித்துவிட்டு காணாமல் போய்விட்டதாக கதைகட்டிவிட போவதாய் மிரட்டலில் ஆரம்பித்து இப்பொழுதே அகிலவேணியை கொலைசெய்ய போவதாய் பேசியது வரை பதிவாகியிருந்தது.

அதை கேட்டுக்கொண்டிருந்த அனைவருக்குமே கொலை நடுங்கிபோனது. ரத்த தாகம் கொண்ட அத்தனை மிருகங்களின் மொத்த குணமும் அந்த ஒற்றை மனிதரின் உள்ளே இருந்தததை அன்றுதான் அனைவருமே உணர்ந்தனர்.

கேட்டுமுடித்த அதிரூபன் அவரிடம் மொபைலை தந்துவிட்டு கைகட்டி அவரை பார்வையால் துளைத்தான்.

“இப்ப சொல்லுங்க, துவா எங்க?…” மீண்டும் அழுத்தமாய் கேட்க,

“அதிபா அப்பா உண்மையா தான்ப்பா சொல்றேன். பாப்புக்குட்டி நடந்ததை சொல்லவும் எனக்கு கோபம். என்ன பண்ணனு தெரியாம அந்த புள்ளைட்ட ஆத்திரம் தீர பேசிட்டேன். அதுக்கப்பறம் தான் எனக்கு உன் ஞாபகமே வந்துச்சு. நான் விட்டுட்டேன்…”

அவனிடம் மன்றாடியவரை நம்பாமல் அனைவருமே பார்க்க அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

“அதிபா, அப்பாவை நம்புப்பா. அது நான் பேசின பயத்துல எங்கையாவது போயிருக்கும். கண்டிப்பா கிடைச்சிடும்…”  என்று சொன்னலும் அவள் கிடைக்க கூடாது என்றே நினைத்தார்.

அவருக்கு துவாரகாவை காணவில்லை என்றதுமே மகிழ்ச்சி தான். அவளும் கிடைக்க கூடாது. தன் மகனும் தன்னிடம் வந்துவிடவேண்டும் என்று ஆசைகொண்டார். பேராசை பெரு நஷ்டம்.

“என்ன அதுவா? அவ என் பொண்டாட்டி. நீங்க எது பண்ணலைன்னு சொன்னாலும் அவ போனதுக்கு நீங்க தானே காரணம். என் பொண்டாட்டியை எப்படி கண்டுபிடிக்கன்னு எனக்கு தெரியும். ஆனா உங்களை நான் மன்னிக்கவே மாட்டேன்…” என அதிபன் சொல்ல,

“அதிபா. கண்டிப்பா நானும் நம்ம ஆளுங்களை விட்டு தேட சொல்றேன்…” என அவர் அவனின் கையை பிடிக்க,

“உங்க அரசியலை என் வாழ்க்கையில நடத்தறீங்களா? இனி தான் இந்த அதிபன் யாருன்னு பார்க்க போறீங்க. அவளுக்கு ஒண்ணுன்னா உங்களுக்கு முதல் எதிரி நான் தான்…” என்ற கர்ஜனையில்,

“அதிபா….” என ரத்தினசாமி பதற,

“உங்களை இனி நம்ப போறதில்லை. தேடற மாதிரி தேடி அவளை கிடைக்க விடாமகூட நீங்க செய்யலாம்….” அவரின் எண்ணத்தை கணித்தபடி அவன் கூற அவர் முழித்தார்.

“அப்போ இதுதான் உங்களோட நினைப்பு இல்லையா? நான் சரியா தான் சொல்லியிருக்கேன்…” என்றவன் அங்கிருந்து வேகமாக செல்ல,

“இரு அதி, நாங்களும் வரோம்…” என சங்கரன் அவனுடன் வர அவரை அவன் பார்த்த பார்வையில்,

“மருமகளை தேடி கண்டுபிடிக்க வேண்டிய கடமை எனக்கும் இருக்குப்பா. உன் அப்பா மாதிரி உள்ள ஒண்ணு வெளியில ஒண்ணுன்னு நான் கிடையாது. பிடிக்கலைனா பளிச்சுன்னு சொல்லிடுவேன். உனக்கு தெரியும்ல…”

சங்கரன் சொல்லவும் அதிபனின் முகம் கலங்கியது. முதன் முறையாக துவாரகாவை மருமகள் என்கிறார். அதுவும் உணர்ந்து. அதை பார்த்தவரின் மனம் கனத்துவிட்டது.

“நீ எதுக்குய்யா கலங்கற. அதான் உனக்கு இன்னொரு அப்பன் நான் இருக்கேன்ல. என்னை மீறி மருமகளை யார் என்ன பண்ணிட முடியும்னு பார்த்துடறேன்…” என சங்கரன் தன் வேஷ்டியை மடித்துக்கட்டி,

“டேய் விஷால், எடுடா காரை…” என்று வாசலுக்கு செல்ல அங்கே அஷ்மிதா நின்றுகொண்டிருந்தாள்.

“அதியை கூட்டிட்டு போகத்தான் வந்தேன். தேங்க்ஸ் அங்கிள், நீங்க உண்மையா தான் சொல்றீங்கன்னு நம்பறேன்…” என சொல்ல,

“பொம்பளப்புள்ள நீ இருத்தா, நாங்க போய் பார்த்துட்டு வரோம்…” என சொல்லிவிட்டு செல்ல வேகமாய் அனைவரும் அவர்கள் பின்னே செல்ல ரத்தினசாமி மட்டும் சிலையென நின்றார்.

அவரை பார்த்துக்கொண்டே உள்ளே வந்த அஷ்மிதா,

“என்ன மயிலு? உன் மகன் பேசினதுக்கு தும்பப்பூவுல தூக்கு மாட்டிக்கனும்னு நினைக்கிறயோ? கடல்லையே இல்லையாம். அதாம்ப்பா உன் ரோஷத்தை சொன்னேன். அடடா தப்பு தப்பு. அரசியல்வாதிக்கு எங்க இதெல்லாம் இருக்க போகுது…”

அஷ்மிதாவை அப்படி ஒரு முறை முறைத்தார் ரத்தினசாமி. விட்டால் இங்கேயே அவளின் கழுத்தை திருகி போட்டுவிடவேண்டும் என்கிற அளவிற்கு ஆத்திரம் எழுந்தது.

வெளியில் சென்றவர்கள் எந்நேரமும் வீட்டினுள் நுழையலாம் என இருக்க கைமுஷ்டியை மடக்கியபடி பல்லை கடித்தார்.

“சாக சொல்லிட்டேன்னு ரொம்ப பீல் பண்ணாத. நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா நீ சாகறதுல தப்பே இல்லை. செத்துரு. யார் அந்த நாலு பேருன்னு பார்க்கறியா? உன் புள்ளை, உன் மருமக, இன்னும் பத்து மாசத்துல வரப்போற குட்டியும். கூடவே நானும் தான்ப்பா…”

“ஏய் உன்னை என்ன பன்றேன்னு பாரு. இப்ப நேரம் சரியில்லை. அதனால நீ பொழைச்ச…” என்று உறும,

“அப்பப்பா, பயந்துட்டேன். போயா. நேரம் நல்லா இருந்தா மட்டும் செஞ்சிறகிஞ்சிற போற. எனக்கு உன்னை பார்த்தாலே இரிட்டேட் ஆகுது மயில்சாமி…”

அஷ்மிதா கோபத்தை இப்படி வார்த்தைகளால் நக்கலில் காண்பிக்க அவரின் கண்களில் தீப்பொறி பறந்தது.

“ஏய் ஸ்டமக் பையர் மயிலு. லார்ட் லபக்குதாஸ். இதத்தான் தீப்பொறி திருமுகம்னு சொல்லுவாங்களோ? வச்சுக்க வச்சுக்க. உனக்கு எத்தனை பேர் வேணும்னாலும் வச்சுக்க. இப்ப நான் என் செல்லக்குட்டியை தேட போறேன். கண்டிப்பா கிடைச்சிடுவா. அப்பறமா வந்து உன்னை பொறுமையா கலாய்க்கறேன்…” என சொல்லியவள் மீண்டும் திரும்பி பார்த்து,

“அவளுக்கு எதாச்சும் உன்னால ஆகியிருக்கட்டும். உன்னாலன்னு இல்லை. அதுவாவே ஆகியிருந்தாலும் இருக்கு உனக்கு…” என்ற பேச்சோடு வேகமாய் கிளம்பிவிட்டாள்.

“போ போ, உனக்கும் சேர்த்து சங்கு ஊதறேன்…” என வஞ்சகத்தோடு அஷ்மிதாவை பார்த்தார்.

அஷ்மிதா, ராஜாங்கம் ஒருபுறம் தேட அதிரூபன் விஷால்,அர்னவ், சந்தோஷ் சங்கரன் என்று மொத்த சென்னையையும் சல்லைடையாய் சலித்தனர். இரவு கடந்து நள்ளிரவு ஆகிவிட்டது.

அதிபனின் நிலையோ சொல்ல வார்த்தைகள் இல்லை. தேடி சலித்து நடு ரோட்டில் அமர்ந்துவிட்டான். அவனின் நிலை பொறுக்காமல் மீண்டும் ரத்தினசாமியை அழைத்தார் சங்கரன்.

“அண்ணே ஏதாவது உங்க வேலைனா சொல்லிடுங்க. நான் உங்க பேர் வராம அதிக்கு தெரியாம அந்த புள்ளையை மீட்டுக்கறேன். நம்ம பையனை பார்க்க முடியலைண்ணே…” என சஞ்சலத்துடன் சொல்ல,

“சங்கரா நீ கூட நம்பலைல. உண்மையை சொல்றேன். என் வேலையா இருந்தா இத்தனை நேரம் அவளை உயிரோட விட்டா வச்சிருப்பேன். என் பையன் என் கையை கட்டிப்போட்டிருக்கான். இல்லைனா…” என சொல்ல,

“நீங்கலாம் திருந்தவே மாட்டீங்க…” ரத்தினசாமியிடம் பேசி பயனில்லை என தெரிந்து எரிச்சலுடன் போனை வைத்தவர்,

“இப்ப என்னய்யா உனக்கு? நீயே இப்படி நினைச்சா, கவலை பட்டா ஆச்சா? முழு வேகத்தோட தேடவேண்டாமா? கிடைச்சிடுவான்னு நம்பி தேடு. கண்டிப்பா கிடைச்சிடுவா…” என சங்கரன் தைரியமூட்ட மீண்டும் ஒரு வேகத்துடன் தேடல் தொடங்கியது.

ஒருவழியாக அனைவரின் பிராத்தனைக்கேற்ப விடியற்காலை துவாரகா இருக்குமிடம் தெரிந்துவிட அனைவருமே அங்கு சென்றுவிட்டனர்.

சென்னையில் ஒரு மூலையில் ஒரு குப்பத்தில் உள்ள சிறிய கிளினிக்கில் துவாரகா அட்மிட் செய்யப்பட்டிருந்தாள்.

ரத்தினசாமிக்கு இருப்புக்கொள்ளவில்லை. அதிரூபன் துவாரகாவை கண்டுபிடித்துவிட்டான் என்ற தகவல் அவர்களை பாலோ செய்யும் ஆள் மூலம் ரத்திரசாமிக்கு கிடைக்க இப்பொழுது மகனிடம் நிலவரம் என்னவென கேட்காமல் விட்டால் சரியாக இருக்காது என நினைத்தார்.

அதற்காக போனாள் போகிறது மகனுக்காம துவாரகாவை பற்றி கேட்டு அறிந்துகொள்ளலாம் என அவனுக்கு அழைக்க முதலில் ரிங் முழுவதும் போய் கட் ஆகிவிட மீண்டும் அழைத்தார். இந்த முறை அழைப்பு ஏற்கப்பட்டுவிட,

“அதிபா, அப்பா பேசறேன்பா. அந்த புள்ளை கிடைச்சிடுச்சுன்னு கேள்விப்பட்டேன். ராத்திரியெல்லாம் அப்பா தூங்கவே இல்லைப்பா…” என ஆவலாய் பேசினாலும் அவரின் குரலில் துவாரகா கிடைத்ததற்கான பிடித்தமின்மை  நன்றாகவே எட்டிப்பார்த்தது.

“ஆகாயம் தீ புடிச்சா நிலா தூங்குமா?…” என்ற அஷ்மி குரல் கேட்க,

“அதிபா?…” என சந்தேகமாய் மீண்டும் அழைக்க,

“மயிலு உன் மருமவ கிடைச்சுட்டா…” என்ற அஷ்மிதாவின் ஆர்ப்பரிப்பு நிறைந்த குரலால் ரத்தினசாமியின் வன்மம் விசிறிவிடப்பட்டது.

 

மின்னல் தெறிக்கும்…

Advertisement