Advertisement

மின்னல் – 20

                 வந்த செய்தியை கேட்ட பின்புதான் அதிரூபனுக்கு தூக்கமே வந்தது. ஒரு வழியாக நினைத்ததை முடித்துவிட்ட உற்சாகம் வேறு அவனுக்கு அத்தனை நிறைவை தந்தது.

படுக்கைக்கு வந்தவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த துவாரகாவை ஒரு சில நொடிகள் பார்த்திருந்துவிட்டு அவளருகே பட்டும் படாமல் படுத்தான் கனத்த மனதோடு.

அவனுள் இன்னமும் துவாரகா சொல்லிய வார்த்தைகள் ஆழமான கோடிழைத்து சென்றிருந்தது. அதனாலேயே அவளை நெருங்க அவன் முனையவில்லை.

அத்தனை உற்சாகமும் அந்த நிமிடம் காணாமல் போய்விட்டது போலொரு கருநிழல் எழுந்து அவனை சூழ்ந்தது. கண்ணை மூடிக்கொண்டு உறக்கத்திற்குள் செல்ல நினைத்து ஒருவழியாய் அதில் ஜெயம் கண்டான்.

மறுநாள் ரத்தினசாமியை அலுவலகத்தில் வைத்தே சந்தித்தவன் தன்னுடைய முடிவை எந்த காரணத்தை கொண்டும் மாற்றிக்கொள்ள முடியாதென்று ஸ்திரமாக மறுக்க அதன் எதிர்த்தாக்கம் ரத்தினசாமிக்கு வேறு வகையாக இருந்தது.

பேசி பேசி அவனை இன்னமும் கோபமாக்காமல் அங்கிருந்து தளர்ந்த நடையுடன் வெளியில் சென்றார். உணர்வின்றி அவரை பார்த்தவன் ராஜாங்கத்திற்கு அழைத்து நடந்ததை  பகிர்ந்துகொண்டான்.

இப்போது மட்டுமில்லை, முன்பிருந்தே ராஜாங்கத்தின் பங்கு அவன் வாழ்க்கையில் ஏராளம். அகிலாவின் பக்கம் இருக்கும் நியாயத்தை அவனாகவே ஓரளவு உணர்ந்துகொண்டாலும் அதை தெளிவுபடுத்தியது ராஜாங்கமே.

அவர் இன்றுவரை அவனுக்கு உறுதுணையாய் இருந்து வருவது என்பது மிக மிக ஆச்சர்யமே. ஒரு ஆசானை போல, வழிகாட்டியை போல, இன்னொரு தகப்பனை போல என இன்னும் எத்தனை வேண்டுமென்றாலும் அவருக்கு புகழாரம் சூட்டுவான் அதிரூபன்.

“அண்ணா பெரியப்பா வந்துட்டு போனாங்க…” அர்னவ் வந்து கேட்க,

“தெரிந்து என்ன பண்ண போற?…”

ரத்தினசாமியிடம் பேசி பேசி அந்த எரிச்சல் இன்னமும் குறையாமல் அவனுள் மண்டிக்கிடக்க அதை தம்பியிடமும் காட்டிவிட்டான்.

“ஸாரி அண்ணா, இனிமே கேட்கலை…” அவன் அங்கிருந்து நகர,

“சந்தோஷ் ஏன் ஆபீஸ் வரதே இல்லை? அவனை பார்த்தும் நாளாச்சு?…” அர்னவின் வாடிய முகம் பார்த்து மனம் கனிந்தவன் கேட்க அதிரூபன் மேலும் பேசிவிட்ட சந்தோஷத்தில்,

“அப்பாவோட லாரி ஆபீஸ் போறான் அண்ணா. இனி இங்க வரலைன்னு சொன்னான்…” என்றதும் புருவத்தை சுருக்கிய அதிபன்,

“ஓஹோ, இப்போலாம் எந்த முடிவுனாலும் நீங்களே எடுத்துக்கறது போல? வரான், வரலை. அவனோட இஷ்டம். அதை இன்பார்ம் செய்யனுமா இல்லையா?…”

“அண்ணா, அவன்…” என அர்னவ் தயங்க தன் மொபைலை எடுத்து விஷாலிற்கு அழைத்து இங்கு வர சொல்லியவன் அவன் வந்ததும்,

“இதுதான் நீ ஆபீஸை பார்த்துக்கற லட்சணமா? என்ன பண்ணிட்டு இருக்க நீ? சந்தோஷ் இத்தனை நாள் வரலைன்னு நானா கேட்ட பின்னால தான் இவன் சொல்றான். இதை நீ என் நாலேட்ஜ்க்கே எடுத்துட்டு வரலை…”

“ஐயோ அண்ணா, நான்…” விஷால் பதற,

“நான் ஆபீஸ்ல என்னோட ஷேர் இன்கம்மை தான் எனக்கு வேண்டாம்னு சொன்னேன். இந்த ஆபிஸ் வேண்டாம்னு சொல்லலையே. இல்லை இதைத்தான் எதிர்பார்க்கறீங்களா?…” என இன்னும் கடினமாக முகத்தை வைத்துக்கொண்டு அதிபன் பேச அர்னவிற்கும், விஷாலிற்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

“ஸாரி அண்ணா. நாங்க அப்படி நினைக்கலை. நீங்களா கேட்கறதுகுள்ள அவன்ட்ட பேசி இங்க கூட்டிட்டு வந்திடனும்னு தான் இருந்தோம்…”

“அதாவது இதுக்கு முன்ன என்கிட்டே மறைச்சது மாதிரி இதையும் மறைச்சிடனும்னு நினைச்சிருக்கீங்க. குட்…” என்றவன் மேஜையை இரண்டு தட்டு தட்டிவிட்டு உதட்டை கடித்த வண்ணம் சேரில் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.

“அண்ணா ப்ளீஸ், நாங்க அப்படியெல்லாம் நினைக்கவே இல்லை. நீங்க இல்லைனா எங்களுக்கும் எதுவுமே இல்லை…”

விஷாலின் மன்றாடும் குரலில் கொஞ்சமும் முக இறுக்கம் மட்டுபடாமல் கண்களை மூடிக்கொண்டு. மீசையை நீவியபடி சேரில் இங்குமங்குமாய் சுழல,

“நான் சந்தோஷை வர சொல்றேன் அண்ணா. அவனுக்கு நீங்க வீட்டை விட்டு போனதுல அவ்வளவு வருத்தம். அதுதான் இங்க வரதே இல்லை. உங்களோட இந்த முடிவுக்கு நாங்களும் ஒரு காரணம் தானே. எங்கட்ட கூட அவன் சரியா பேசறதே இல்லை…” அர்னவ் பேச,

“இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் இங்க வந்திடுவான். நான் மெசேஜ் பண்ணிட்டேன் அண்ணா…” விஷால் சொல்ல அதிரூபன் பேசவே இல்லை.

சில நிமிடங்கள் அங்கேயே நின்றுபார்த்து அவன் பேசாது போக இருவரும் அந்த அறையை விட்டு வெளியேறினார்கள். அடுத்த நாற்பது நிமிடங்களில் சந்தோஷ் வேகமாய் அங்கு வந்துவிட அறையின் வாசலிலேயே நின்ற விஷால் அவனை பிடிபிடியென பிடித்துவிட்டான்.

“போதும்டா, ஏற்கனவே மாமாவும் திட்டித்தான் இங்க அனுப்பினாங்க. நீங்களுமா?…” என்றவனின் குரலில் எரிச்சலே மிகுந்திருக்க,

“முதல்ல உள்ள போய் அண்ணாட்ட பேசு. அதுக்கு பின்னால உன்னை பேசிக்கறேன்…” என அவனை மட்டும் உள்ளே அனுப்பிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

அறைக்குள் நுழைந்தவன் அதிரூபனை பார்க்க அவன் வீட்டிற்கு கிளம்பிக்கொண்டிருந்தான் மதிய உணவிற்காக.

“அத்தான்…” என்ற குரலில் நிமிர்ந்தவன் வா என்பதை போல தலையை மட்டும் அசைக்க,

“ஸாரி அத்தான்…” தலை குனிந்து சொல்ல,

“எதுக்கு?…” என கேட்டுக்கொண்டே தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேற செய்வதறியாமல் ஒரு நிமிடம் நின்றுவிட்டு அவனின் பின்னாலே ஓடினான் சந்தோஷ்.

அவன் வருவதை பொருட்படுத்தாதது போல வேக எட்டுக்களுடன் நடந்தவன் சந்தோஷ் பேசவே சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. விடுவிடுவென நடந்து காரில் ஏறிக்கொண்டவன் மறுபக்க கதவையும் திறந்துவிட்டான்.

அதிரூபனின் இந்த செயலை நம்ப முடியாமல் பார்த்த சந்தோஷை பார்த்து தலையசைத்தவன்,

“கெட்இன் சந்தோஷ்…” என்ற அழுத்தமான குரலில் அழைக்க வேகமாய் ஏறிக்கொண்டான்.

“ஐ கான்ட் பிலீவ் அத்தான்…” இன்னும் ஆச்சர்யம் விலகாத குரலில் சந்தோஷ் பேச அவனை முறைப்பாய் பார்த்தான் அதிரூபன்.

“நீங்க பேசவே மாட்டீங்கன்னு நினைச்சேன். ஆனா இப்ப உங்களோட என்னை கூட்டிட்டு போறீங்க. ரொம்ப சந்தோஷம் அதி அத்தான்…” தன்னுடைய உள்ளார்ந்த மகிழ்ச்சியை அவனிடம் பகிர்ந்துகொண்ட மலர்வு அவனின் முகத்தில் தெரிய,

“எங்க போறோம்னு கேட்க மாட்டியா சந்தோஷ்?…” அதிபன் கேட்க,

“தெரியலை அத்தான். உங்க கூட இவ்வளவு நடந்த பின்னாலையும் வரேனே. அதுவே போதும். எங்கனாலும் வருவேன்…”  என சந்தோஷ் சொல்லியதும் அதிபனின் முகத்தில் கூட மிதமான புன்னகை.

“எங்கவேணா வருவேன்னு சொல்ற. ஆனா இத்தனை நாள் ஆபீஸ் வரலையே?…”

சாலையில் கவனமாய் இருந்துகொண்டே அதிபன் கேட்க சட்டென்ற மௌனம் சந்தோஷை சூழ்ந்தது.

“பேசு சந்தோஷ்…”

“இதுவரை நீங்க பட்ட கஷ்டம் போதும்னு நினைச்சேன். தினமும் உங்க முகத்தை பார்த்துட்டு இருக்கறது ரொம்ப கில்ட்டியா இருந்துச்சு. அதுதான்…”

“எப்ப இருந்து இந்த கில்டி கான்ஷியஸ்?…”

“ஹ்ம்ம் அது…”

“துவாவை ரிசார்ட்ல வச்சு டார்ச்சர் பண்ணி அனுப்பினதுக்கு பின்னால நீ என்னை பெங்களூர்ல வச்சு பார்த்த. நீயும் சித்தப்பாவும் இன்விடேஷன் கார்ட் குடுக்க வந்தப்ப உன்கிட்ட இந்த கில்டினேஸ் நான் பார்க்கலையே. நார்மலா தானே இருந்த…” சுருக்கென கேட்க தலை குனிந்தான் சந்தோஷ்.

“இப்ப மட்டும் என்ன?…” அதிபனோ அவனை விடுவேனா என்றான்.

“அத்தான், உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியலை. பயமாவும் இருந்தது எனக்கு. சொன்னா விஷால், அர்னவ் மாட்டிப்பாங்க…” என்றுவிட்டு நாக்கை கடித்துக்கொள்ள,

“எனக்கு தெரியாம இருந்தா அது உனக்கு பிரச்சனை இல்லை. எனக்கு தெரிஞ்சது தான் இப்ப உன் ப்ராப்ளம் இல்லையா?. அப்போ விஷால், அர்னவ் என்ன தப்பு பண்ணினாலும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுவியே தவிர அவனுங்க தப்பை நீ சுட்டிக்காட்டி திருத்த மாட்ட. ஹ்ம்ம்…”

“அத்தான் ப்ளீஸ், அதுக்கு பிராயச்சித்தமா தான் நானெதுவும் வேண்டாமேன்னு ஒதுங்கி இருக்கேன். வீட்ல அம்மா பேசறதே இல்லை. பத்மிம்மா கூட அப்பப்ப தான். சந்தியா மூஞ்சியிலையே முளிக்காதன்னு போய்ட்டா. அஷ்மி…”

“என்ன?…”

“இல்ல அஷ்மிதா, அவங்க எவ்வளவு பிரண்ட்லி. இப்ப பேசறதே இல்லை. அவங்க கூப்பிடற பச்சைக்கிளியை நான் ரொம்ப மிஸ் பன்றேன்…”

“ரொம்ப பீல் பன்ற. இரு அஷ்மிக்கு கூப்பிடறேன்…” என மொபைலை எடுக்க,

“அய்யய்யோ, வேண்டாம். இன்னும் திட்டுவாங்க…” என பதறிக்கொண்டு அவனின் மொபைலை பறித்தவன் பாவமாய் அதிபனை பார்க்க,

“இப்படி மூஞ்சியை வச்சுக்காத. சகிக்கலை…” என்றவாறு காரை தன்னுடைய வீடு இருக்கும் பகுதியில் ஒடித்து வளைக்க,

“அத்தான், என்னை இங்கயே இறக்கி விட்டுடுங்க. நான் டாக்ஸி புக் பண்ணி வீட்டுக்கு போய்டறேன். நாளையில இருந்து ஆபீஸ் வரேன்…”

கை கால் எல்லாம் வேர்க்க ஆரம்பித்தது சந்தோஷிற்கு. அதிரூபனின் வீட்டிற்கு அழைத்து செல்கிறான்? எப்படி துவாரகாவை எதிர்கொள்வது? ஏற்கனவே இங்கு வந்து சென்றவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்த பின் சுனாமி வராத குறைதான்.

அந்தளவிற்கு அவர்களின் குடும்ப அமைதி ஆட்டம் கண்டுவிட்டிருந்தது. இப்போதெல்லாம் சங்கரனுக்கும் ரத்தினசாமிக்கும் கூட வாக்குவாதம் நடு வீட்டிலேயே நடக்க ஆரம்பித்திருந்தது.

அதிபனுக்காக துவாரகாவை விட்டுவிட சொல்லி சங்கரன் பேச எப்படி நீ அதை சொல்லலாம் என ரத்தினசாமி ஆக்ரோஷம் கொள்ள குடும்பமே சங்கரனின் பேச்சுக்கு தலையாட்ட தனியாளாய் தனித்துவிட்ட கோபம் துவாரகாவிடம் சென்றது ரத்தினசாமிக்கு.

இப்படி துவாரகா என்னும் ஒருத்தியால் குடும்பத்தில் இத்தனை கலவரங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தது. அன்னபூரணி அதிபன் வீட்டிற்கு வந்து சென்ற பின் ஸ்வேதாவிடமிருந்து மெதுவாய் யாருமறியாமல் பேச்சுக்களை கேட்டு வாங்கியிருந்தான் சந்தோஷ்.

கேட்டதிலிருந்து அப்படி ஒரு மனபாரம். எந்த பிள்ளைக்கும் தாயை ஒருவர் கடிந்து பேசினால் தாளாது தான். ஆனால் இங்கு நியாயத்தின் புறம் தானே நிற்கவேண்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவள் பதிப்பை கொடுத்தவருக்கு கேள்வி எழுப்புகிறாள். அவளின் இழந்துவிட்ட வலிமிகுந்த பிள்ளை பருவத்தின் காயங்களின் சுவடுகளுக்கு இப்பொழுதான் மருந்திட்டு கொண்டிருக்கிறாள்.

இதை தவறு என எவராலும் கூற முடியாதே. தாய் ஒரு புறம், தமக்கை ஒருபுறம். ஆம், துவாரகாவை அவன் என்றோ தன் சகோதரியாக வரித்துவிட்டான் மனதினுள்.

இருதலைக்கொள்ளி எறும்பென தவித்தவனின் மொத்த கோபமும் வைத்தியநாதனிடம் தான் மையம் கொண்டது.

அவனின் நினைவுகள் இப்படி இருக்க அதற்குள் வீட்டிற்கு வந்துவிட்டான் அதிரூபன். கார் திறக்கும் ஓசையில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவன் மனதில் அத்தனை தயக்கம்.

துவாரகா தன் வருகையை விரும்புவாளா என்று. இருக்கையில் அழுத்தமாய் அமர்ந்துகொண்டவன்,

“ப்ளீஸ் அத்தான், உங்க பேச்சை மீறுறேன்னு நினைக்காதீங்க. அவங்களுக்கு நான் வரது கண்டிப்பா பிடிக்காது. ஏற்கனவே இங்க நடந்த பிரச்சனைகள் எனக்கு எல்லாமே தெரியும். இன்னும் ஒரு ப்ராப்ளம் எதுக்கு?…”

“சந்தோஷ், இறங்குன்னு சொல்றேன்ல…” அதிபன் அதட்ட,

“அத்தான், தினமும் ஒருத்தர் வந்து பிரச்சனை செய்யறாங்களான்னு கோவப்படப்போறாங்க அவங்க. வேண்டாம்…” தன் மறுப்பை தெரிவித்தபடி அவன் இருக்க,

“அறைஞ்சு பல்லை கழட்டிடுவேன் ராஸ்கல். அப்ப இருந்து அவங்க அவங்கன்னு சொல்லிட்டே இருக்க. அவ யாரு உனக்கு? அக்கான்னு சொன்னா முத்தா உதிர்ந்திடும்? அவங்களாம் அவங்க…” என்றவன் அவனின் கை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

அத்தான், அத்தான் என்ற அவனின் கத்தலை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அவனை டைனிங் ஹாலிற்கே கூட்டி வந்துவிட அங்கே நின்ற துவாரகாவை பார்த்து அப்படியே நின்றுவிட்டான்.

இவனை பார்த்த கணம் கொஞ்சம் திகைப்பை காட்டினாலும் தலை குனிந்தபடி நின்ற அவனை பார்த்துக்கொண்டே,

“சாப்பாடு ரெடி. கை கழுவிட்டு ரெண்டு பேரும் உட்காருங்க. சாப்பிடலாம்…” என்றதும் சந்தோஷின் முகம் இன்னும் தெளியாமல் இருந்தது.

“இல்ல, அத்தான் நான் வீட்ல சாப்பிட்டுக்கறேன். வேண்டாம்…” அவன் மறுக்க,

“பயப்படாதடா. அதெல்லாம் ஓரளவுக்கு நல்லாவே சமைக்கிறா இப்ப. நான் நல்லா தான இருக்கேன்…” என கேலி பேசி அவனை இலகுவாக்க முயல அவனை முறைத்தாள் துவாரகா.

“அவ்வளவு கஷ்டப்பட்டு யாரும் சாப்பிட வேண்டாம் போங்க…” என பொருமலுடன் எடுத்து வைத்திருந்த உணவு பாத்திரங்களை மீண்டும் அடுப்படிக்குள் எடுத்து செல்ல போக,

“தெரியாம சொல்லிட்டேன் தெய்வமே. இவனை வேற சாப்பிட கூட்டிட்டு வந்துட்டேன். எடுத்து வை…” என அதிபன் சரண்டர் ஆக அவனை ஆச்சரியமாய் பார்த்துவைத்தான் சந்தோஷ்.

“என்னடா லுக்கு? உட்காரு. இல்லைனா இன்னைக்கு பட்டினி தான். பசிக்குதேன்னு ஹோட்டலுக்கும் போய்டமுடியாது. அதுக்கும் சேர்த்து ஆடிடுவா. மலை இறக்கறது கஷ்டம்…” கிசுகிசுப்பான குரலில் முகமெல்லாம் புன்னகையாக அதிரூபன் சொல்ல அவனையே பார்த்த சந்தோஷ்,

“நீங்க இப்படி பேசி, சிரிச்சு நான் பார்த்ததே இல்லை அத்தான். பேசுவீங்க தான். எல்லாத்துலையும் ஒரு லிமிட் இருக்கும். ஆனா இந்த முகம் எனக்கு புதுசா இருக்கு…”

“ரியல்லி…” என அதற்கும் அவன் சிரிக்க,

“அவங்களுக்கு என் மேல கோவம் போய்டுச்சா?…” தயக்கமாய் சந்தோஷ் கேட்க அதிரூபன் பார்த்த பார்வையில்,

“ஸாரி, அக்கா அக்காவுக்கு…” என அசடு வழிய,

“ஹ்ம்ம், அது. உன் அக்காட்டையே  கேளேன்…” என சொல்ல ம்ஹூம் என மறுப்பாய் தலையசைத்துவிட்டு அவனுக்கு வைத்த ப்ளேட்டை பார்த்து குனிந்துகொள்ள,

“இப்படி தலையை குனிஞ்சுட்டா நான் என்ன வச்சுருக்கேன்னு உங்களுக்கு எப்படி தெரியுமாம்?…” அதட்டலாய் வந்த துவாரகாவின் குரலில் அவன் நிமிர்ந்து பார்க்க அவனை பார்த்து லேசாய் சிரித்தாள்.

“தேங்க்ஸ்…” என்று துவாரகா சொல்லவும் சந்தோஷின் விழிகள் இரண்டும் கலங்கிப்போயின.

“நான், ஸாரி…” அவன் அதற்கு மேலும் அவளின் முகத்தை பார்க்கமுடியாமல் திரும்பிக்கொள்ள,

“இது உங்களுக்கு தான். ஸ்வீட். நானே செஞ்சேன். கொஞ்சம் சுமாரா இருந்தாலும் சாப்பிடுங்க மிச்சம் வைக்காம…” என்றவள் மீண்டும் கிட்சனிற்குள் வர அங்கே மாலதி மும்மரமாய் பார்த்திரங்களை தேய்த்துக்கொண்டிருந்தாள்.  

“நீங்க போகலையா?…” என துவாரகா கேட்க,

“அம்மா, எங்கம்மா?…” ஒன்றும் அறியாதவள் போல கேட்க,

“அதுதான் உங்க பாஸ்க்கு இன்பார்ம் பண்ண. காலையில இருந்து வந்துட்டேன். இது சாப்பிட்டாங்க. இதோ கிளம்பிட்டாங்க. இது செய்யறாங்க. இப்டின்னு வந்ததுல இருந்து தகவல் சொல்லிட்டே இருக்கீங்களா. டயர்ட்ல இதை மறந்திட போறீங்களோன்னு தான் ஞாபகப்படுத்தறேன்…” என,

“அது வந்துங்கம்மா…” என பிடிபட்டதில் திக்கி திணற,

“போய் அவங்களோட பையன் இங்க சாப்பிட வந்திருக்காங்கன்னு சொல்லுங்க. என் கையால அவனுக்கு நான் பரிமாறினேன்னு சொல்லுங்க. ஹ்ம்ம் போங்க…” என்றவள் ஒரு முறைப்புடன் சென்றுவிட மாலதிக்கு குழப்பமாகியது.

“இவங்க இப்ப என்ன செய்ய சொல்றாங்க என்னை? பூரணி அம்மாகிட்ட சொல்லுன்னு சொல்றாங்களா? நீ சொன்னதை கண்டுபிடிச்சுட்டேன். இனி இப்படி பண்ணாதன்னு சொல்றாங்களா? குழப்பமா இருக்கே…”  என வாய்விட்டு புலம்பியபடி தன் வேலையை தொடர்ந்தாள். ஆனாலும் செவிகள் இரண்டையும் டைனிங்ஹாலில் வைத்தபடி.

“சாப்பிடுடா. நானுமே உனக்கு தேங்க்ஸ் சொல்லத்தான் உன்னை வரவழைச்சேன். இந்த வீட்டுக்கு வந்த மறுநாளே உன்னை பார்த்து பேசனும்னு இருந்தேன். நீ என்னடான்னா ஆபீஸ்க்கே வரலை. அவ்வளவு நல்லவனாடா நீ?…” என சிரிக்க,

“மாமா, சாப்பிடும் போது என்ன பேச்சு? பேசாம சாப்பிடுங்க. அவங்களையும் சாப்பிட விடுங்க…” என அதிபனை கண்டித்தவள் சந்தோஷிற்கு தேவையானதை பார்த்து பரிமாறினாள்.

அவனுக்குத்தான் ஒரு வாய் சாப்பாடு கூட தொண்டையில் இறங்கவில்லை. முள்மேல் அமர்ந்திருக்கும் அவஸ்தை அவனுக்கு.

“இப்போ எதுக்கு இவ்வளோ ப்ரெஸ்ட்ரேக்ஷன்? சாப்பிடுங்க…” என துவாரகா சொல்ல தலை குனிந்திருந்தவன்,

“ஸாரிங்க. சத்தியமா ஸாரி. அன்னைக்கு நான் முதல்லையே அத்தானுக்கு இன்பார்ம் பண்ணியிருக்கனும். ஆனா என் மொபைலை புடுங்கிட்டானுங்க. என்னால வேற ஒன்னும் பண்ண முடியலை. நான் அவனுங்களோட வந்திருந்தா அப்பவே உங்களை காப்பாத்தி இருப்பேன்…”

“ரிஸார்ட் வரவரை விட்டிருக்க மாட்டேன். உங்களை கூட்டிட்டு வந்துட்டானுங்க. எனக்கு ரொம்ப ஷாக் தான். ஆனா அப்போதைக்கு உங்களை சேவ் பண்ணனும்னு தான் எனக்கு தோணுச்சு. அதுக்கு பின்னால நீங்க எங்க எப்படி இருக்கீங்கன்னு தேட ட்ரை பண்ணினேன். முடியலை…”

“அதுக்கப்பறமாவது அத்தான்கிட்ட சொல்லியிருக்கனும். ஆனா விஷால், அர்னவை என்னால விட்டுகொடுக்க முடியாதே? எப்படி காட்டிக்கொடுப்பேன்?…”

“அதான் சொல்லலை. அன்னைக்கு மேரேஜ்க்கு ரெண்டு நாள் முன்ன அஷ்மிதா வீட்லயே நான் உங்களை பார்த்துட்டேன். ஆனாலும் யார்க்கிட்டையுமே சொல்லலை. என்கிட்டே ஏன் கோவமா இருக்காங்கன்னும் எனக்கு அப்போ கொஞ்சம் புரிஞ்சது…”

சந்தோஷ் சொல்லியது அவர்கள் இருவருக்குமே அதிர்ச்சி தான். துவாரகாவை அஷ்மிதா வீட்டில் பார்த்தும் யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறானே என வியப்பாய் இருந்தது.

“ஆனா கல்யாணபொண்ணா நீங்க வந்தது மத்தவங்களுக்கு எப்படியோ எனக்கு உண்மையிலையே அவ்வளவு சந்தோஷம். என் கூட பிறந்தவங்களுக்கே கல்யாணம்ன்ற மாதிரி நான் பீல் பண்ணினேன்…”

சந்தோஷ் பேச பேச குறுக்கிடாமல் இருவரும் கேட்டுக்கொண்டிருந்தாலும் மீண்டும் பழைய விஷயங்கள் கிளறப்பட ஏனோ அப்படி ஒரு உணர்ச்சி வளையத்தினுள் மூவரும் ஆட்பட்டிருந்தனர்.

இதை அனைத்தையும் மாலதியும் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள். இப்பொழுதே அன்னபூரணிக்கு இதை சொல்லிவிடவேண்டுமென்ற வேகம் அவளுள். ஆனால் இப்பொழுதே மொபைலை எடுத்துக்கொண்டு சென்றாள் துவாரகாவிடம் மாட்டிக்கொள்வோம் என்று இருந்துவிட்டாள்.

“தேங்க்ஸ்…” என்ற துவாரகாவின் வார்த்தையில் அவளை நிமிர்ந்து பார்க்க,

“உண்மையில நீங்க இல்லைனா கண்டிப்பா என் நிலைமை என்னன்னு எனக்கு தெரியலை. அதுவுமில்லாம கரெக்ட்டா அந்த நேரத்துக்கு நீங்க என்னை போகவிட்டது தான் கடவுள் செயல்ன்னு நினைக்கிறேன். இல்லைனா நான் மாமா கார்ல ஏறியிருக்க மாட்டேன். அதுக்கும் தேங்க்ஸ்…”

துவாரகா அவனிடம் நன்றி சொல்ல அதை இன்னமும் ஏற்றுகொள்ள முடியாமல் தவித்தவன்,

“எந்த நிலைமைக்கும் போயிருக்காது. நான் விட்டிருக்க மாட்டேன். அன்னைக்கு உங்களை வெளில தப்பிக்க விட்டதும் உடனே வந்து சென்னைக்கு கூட்டிட்டு வந்திடலாம்னு தான் பார்த்தேன். ஆனா நீங்க அதுக்குள்ளே போய்ட்டீங்க…”

“போதும் சந்தோஷ். இப்ப சாப்பிடு…” அதிபன் சொல்ல,

“என்னால சாப்பிட முடியலை அத்தான். இன்னமும் என்னை நினச்சு எனக்கே அசிங்கமா இருக்கு. இது எப்பவும் என்னை விட்டு போகவே போகாது…” என கண்ணீர் விட அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தவளுக்கு அவனிடம் எந்த சமாதானமும் சொல்ல தோன்றவில்லை.

அவன் அவளை காப்பாற்றினான் தான். அதற்காய் அவனோடு உறவு கொண்டாடவும் விரும்பவில்லை. அதனாலேயே இந்த எல்லையிலேயே நின்றுகொண்டாள்.

அதிரூபனுக்கு ஏதோ இந்தளவிளாவது துவாரகா சந்தோஷை பார்க்கிறாளே என நிம்மதியானான். அதன் பின் பேசிக்கொண்டே சந்தோஷை சாப்பிடவைத்த பின்னரே அங்கிருந்து அவனுடனே கிளம்பி அலுவலகம் வந்துவிட்டான்.

நாட்கள் அதுபோக்கில் நகர்ந்துகொண்டிருக்க மாதங்கள் இரண்டு கடந்துவிட்டது. ரத்தினசாமி அதன் பின்னும் அதிபனிடம் எதுவும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை.

அதிபா, அதிபா என அவ்வப்போது அப்பா நான் இருக்கிறேன் என வந்து நின்று முகத்தை காண்பித்து எதையாவது தத்து பித்துவென பேசி செல்வார். இவரா அரசியலில் வெற்றிகரமாக கோலூற்றுகிறார்? என சந்தேகமே வந்துவிட்டது. கூடவே புன்னகையும்.

மற்றவர்கள் அவ்வப்போது பேசினாலும் வீட்டிற்கு வந்து போவது இல்லை. ஆனால் இங்கு நடக்கும் அத்தனையும் தெரியும் அவர்களுக்கு. அதுவும் இவர்கள் இருவருக்கும் தெரியும். ஆனாலும் கண்டுகொள்ளாமல் கடந்துவிடுவர்.

பத்மினியும் சந்தியாவும் மட்டுமே நேரில் வந்து செல்வர். சந்தியாவுடன், அவளின் குழந்தையுடனும் ஏனோ கொஞ்சம் ஒட்டுதல் தான் துவாரகாவிற்கு.

அதை சாக்காய் வைத்தே சந்தியாவுடன்  பத்மினியும் வந்துவிடுவார். ஒரே மருமகளாகிற்றே. தள்ளி நிற்க மனமில்லை. அன்னபூரணியை அவள் பேசியதில் கோபம் தான். ஆனாலும் இப்பொழுது பெரிதாக நினைப்பதில்லை.

என்னதான் வாழ்க்கை அதன் போக்கில் பேசினாலும் துவாரகாவும் அதிரூபனும் பெயரளவில் இருக்கிறார்களே தவிர அவர்களுக்குள் ஒரு பனித்திரை இன்னமும் தான் இருந்து வருகிறது.

சிரிப்பு, கேலி, கிண்டல், அன்பு, நேசம், காதல், அரவணைப்பு, அன்னியோனியம் எதற்கும் குறைவில்லை. ஆனாலும் இருவரையும் எதுவோ தடுத்தது. தங்களுக்குள் இன்னமும் சரியாகவில்லை என அதிரூபனுமே நினைத்தான். அதனாலேயே துவாரகாவை நெருங்கவில்லை.

அவனின் எண்ணம் புரிந்தும் துவாரகாவும் விலகியே இருந்தாள். அகிலாவின் புறக்கணிப்பு இன்னமும் கரையானாய் அரித்துக்கொண்டிருந்தது. அதன் பொருட்டு அவனோடு ஒன்ற அவளுக்கு விருப்பமில்லை. அனைத்தும் சரியாகட்டும். அதிரூபன் சரிபண்ணிவிடுவான் என நம்பினாள்.

அகிலா எங்கிருக்கிறார்? என்ன, ஏதுவென தெரிந்தாலும் என்று அவரை நேரில் பார்க்கவென ஆவலாய் இருக்க அதிரூபன் தான் அதையும் தடுத்து வைத்திருந்தான்.

அதிரூபன் அகிலவேணியை சந்திக்க சரியான நாளை யோசித்துக்கொண்டிருந்தான். அன்றைய நாள் தனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்க போகிறது. அதற்கு அவன் தன்னையே தயார் செய்யவேண்டிய அவசியம்.

ஆனால் அந்த நாள் அவனுக்கு எத்தனை வலியை தரப்போகிறது என அப்போது அவனுக்கு தெரியவில்லை.

தெருத்தெருவாய் பைத்தியக்காரனை போல அலைய வைக்க போகிறது என்றும் அவன் அறியவில்லை.

அந்த நாளும் விரைவில் வந்தது. அவனின் வாழ்வே அஸ்தமித்துவிட்டதை போல ஒரு வலியை முதன்முதலில் உணர்ந்தது அன்றுதான்.

அர்த்த ராத்திரியில் இதோ நடுரோட்டில் தரையில் கசங்கிய உடையுடன் தளர்ந்துபோய் அமர்ந்திருந்தான்.

அவன் முன் பதட்டமான முகத்துடன் விஷால், அர்னவ், சந்தோஷ், சங்கரன் என நின்றுகொண்டிருந்தனர்.

 

மின்னல் தெறிக்கும்…

Advertisement