Advertisement

 

மின்னல் – 19

                  அன்னபூரணிக்கு அந்த இடத்திலேயே தன் உயிர் பறவை பறந்துவிடுமோ என்கிற அளவிற்கு வேதனை.

இந்த பேச்சிற்கே இப்படி வருந்துகிறோமே, எந்தளவிற்கு அகிலா வலியை அனுபவித்திருப்பார்? என நினைத்து பார்த்தவருக்கு ஏனோ அந்த நிமிடம் கூட தான் தன் பிடிவாதத்தை அப்போது தவிர்த்திருக்களாமோ என தோன்றவே இல்லை.

தான் செய்தது தன்னளவில் சரியே. தானொன்றும் அகிலாவை விலக்கவில்லையே என்று தான்  நினைத்தார்.

“முடிஞ்சதா, நான் போகலாமா?…” துவாரகா கேட்டுக்கொண்டே பூஜை அறையிலிருந்து வெளியேறி நடக்க,

“நான் ஒன்னும் உன்னோட அம்மாவை அதாவது அகிலாக்காவை போக சொல்லலையே. உன் அம்மாவா தான் விலகினாங்க. அவங்களை நான் ஒன்னும்விட்டு கொடுக்க சொல்லலை. இதுக்கு நான் எப்படி பொறுப்பாகமுடியும்?…”

தாளமாட்டாமல் அன்னபூரணி கேட்டும் விட துவாரகா திரும்பி அவரை பார்த்த பார்வையில் அதிரூபன் தான் பயந்துபோனான்.

‘இவ இப்போலாம் ரொம்ப ரொம்ப சரியா பேசிட்டு இருக்கா. இத்தனை வாங்கியும் திரும்ப கொம்பு சீவுறாங்களே. இன்னும் அதிகமா பேச போறா’ என நினைக்கு பொழுதே அவள் ஆரம்பித்திருந்தாள்.

“ஆமாமா நீங்க பொறுப்பில்லை தான். கண்டிப்பா உங்களை தப்பு சொல்லமுடியாது தான். ஆனா ஒண்ணை மறந்துட்டீங்க…” என்றவள்,

“நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல வளர்ப்போட வளர்ந்த எந்த ஒரு பொண்ணும் அந்த முடிவை தான் எடுப்பா. என்னோட அம்மாவும் அப்படித்தான். ஒருத்தனுக்கு ஒருத்தின்னு பார்த்து வளர்ந்தவங்க. இன்னொருத்தரோட பொருளுக்கே ஆசைப்படாதவங்க. நீங்க சொன்னதும் அவங்க உங்களோட வாழ்க்கையை பங்குபோட்டுக்கனும்னு எப்படி நினைச்சீங்க?. இதுல விட்டுகொடுக்கறது என்க இருந்து வந்தது? அவங்க போட்டது உங்களுக்கு பிச்சை…” என அன்னபூரணியை பார்த்து தன் இரு கைகளையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு,

“மனசால ஒருத்தனோட வாழனும்னு நினைக்கிற எந்த பொண்ணுக்கும் தன் புருஷன் மனசும் அப்படி சுத்தமா இருக்கனும்னு தான் நினைப்பா. உங்களுக்கு புரியிற மாதிரி சொல்றேன். மானம், ஈனம் உள்ள யாருக்குமே எச்சில் இலையில சாப்பிட மனசு வராது. எங்கம்மா எல்லாத்தையும் விட உயர்ந்தவங்க…”

நேருக்கு நேராக சொல்லியவள் அங்கிருக்காமல் வேகமாய் மாடிக்கு சென்றுவிட சிலையாய் நின்றார் அன்னபூரணி. அவளின் வார்த்தைகளில் தெறித்த கனல் அன்னபூரணியை பொசுக்காதது தான் குறை.

பத்மினிக்கு பதறியது. இத்தனை வருடங்கள் அன்னபூரணி வாழ்ந்த வாழ்க்கையை நேரில் பார்த்தவர். யாரும் அவரை விளையாட்டிற்கு கூட ஒரு சொல் சொல்லிவிடமுடியாது.

சந்தோஷத்தை தாண்டி வேறு எதையுமே அனுபவிக்காதவர். இப்படி கடவும் மொத்த சந்தோஷத்தையும் கொட்டி கொடுத்தது ஒரு சிறுபெண்ணிடம் பேச்சு வாங்கத்தானோ? என வருத்தமாய் போனது பத்மினிக்கு.

எச்சில் இலை என்கிற வார்த்தை அன்னபூரணியை கூறுபோட அப்படியே வேரறுந்த மரம் போல சரிந்து தரையிலேயே அமர்ந்துவிட்டார்.

“அம்மா….” என அவரை தாங்கிய ஸ்வேதா,

“பார்த்தீங்களா அண்ணா, அண்ணி எப்படி எல்லாம் பேசிட்டாங்க. அவங்களுக்காக அம்மா மாமா கூட சண்டை போட்டு இங்க வந்தாங்க. இந்தளவுக்கு தரமில்லாம பேசிட்டாங்க. இனி நாங்க இங்க வரவே மாட்டோம்…” என்றவள்,

“வாங்கம்மா போகலாம். இங்க இனி வேண்டாம். இவங்க நமக்கு தேவையும் இல்லை. எழுந்திரிங்க…” என எழுப்ப அப்பவும் அசையாமல் இருந்தார் அன்னபூரணி.

“பூரணி, நான் தான் வேண்டாம்னு சொன்னேன்ல. வா போகலாம். அவ ஏற்கனவே கோவமா இருக்கா. இன்னும் கோவப்படுத்தற மாதிரி நாம தான் நடந்துக்கிட்டோம். தெரிஞ்சே தப்பு பண்ணிட்டோம். கிளம்பலாம்…” பத்மினி சொல்ல,

“என்ன பேசறீங்க பத்மிம்மா? கோவமா இருந்தா என்ன வேணும்னாலும் பேசுவாங்களா? அவங்க அம்மா மாதிரி தானே என் அம்மாவும். மரியாதை வேண்டாமா?…” என ஸ்வேதா வீடே அதிரும் படி கத்த,

“என் அம்மாவோட இணையா பேச இவங்களுக்கு என்ன தகுதி இருக்குன்னு நீ இந்த குதி குதிக்கிற?…” என மாடியிலிருந்து துவாரகா மீண்டும் வர,

“ஸ்வேதா, பேசாம இருக்க மாட்ட. சின்ன பொண்ணு உனக்கு தெரியாது…” என அவளை அதட்டிய அதிபன்,

“அம்மா நீங்க அத்தையை கூட்டிட்டு கிளம்புங்க. இங்க இருக்க இருக்க பிரச்சனை தான் பெருசாகும்…” என சொல்லி அவர்களை கிளப்ப பார்க்க,

“என்ன சின்ன பொண்ணு? எனக்கும் எல்லாம் தெரியும். இவங்களை கஷ்டபடுத்தினாங்க தான். ஆனா இப்ப ஏத்துக்கிட்டாங்கள்ள. அதுக்கு காரணமே என் அம்மா தான். அந்த நன்றி வேண்டாமா?அது தெரியாம அம்மாவையே பேசறாங்க…”

ஸ்வேதா இப்பொழுது கீழே வந்துவிட்ட துவாரகாவை முறைத்துக்கொண்டே சொல்ல பதறிவிட்டான் அதிரூபன்.

‘இவ முதலுக்கே மோசம் பண்ணிடுவா போல. ஏத்துக்கிட்டாங்கன்னு சொல்லி என் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கிறாளே?.’ என துவாரகாவை பார்க்க அவளோ நேராய் சமையலறைக்கு சென்று அங்கே எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்த மாலதியை அழைத்து,

“நீங்க கிளம்புங்க…” என சொல்ல அவரோ அன்னபூரணியையே பார்த்து நின்றாள்.

“அங்க என்ன பார்வை? அவங்களுக்கு உடம்புக்கு முடியலை. ஹாஸ்பிட்டல் போறோம். இப்ப கிளம்ப போறீங்களா? இல்லை வேலையை விட்டே போறீங்களா?…” என மிரட்ட,

“அம்மாக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு…”

“இது என்னோட வீடு. அவங்க உங்களை வேலைக்கு வச்சிட்டாங்களேன்னு தான் பேசாம இருக்கேன். இல்லைனா அப்பவே உங்களை வேண்டாம்னு சொல்லியிருப்பேன். இந்த நேரம் உங்களுக்கு இங்க எந்த வேலையும் இல்லை. நாளைக்கு வாங்க. எப்ப வரனும், என்ன வேலைன்னு நான் சொல்லுவேன். கிளம்புங்க…” என கோவமாகவே சொல்ல அடித்துபிடித்துக்கொண்டு வேகமாக சென்றுவிட்டாள் மாலதி.

வேலைக்கார பெண்மணி சென்றதும் வேகமாக ஸ்வேதாவிடம் வந்தவள்,

“உனக்கு எல்லாம் அறிவுன்றதே இருக்காதா? நானும் தான் பேசினேன், ஏதாவது சின்ன சத்தம் இந்த இடத்தை தாண்டி போயிருக்குமா? இப்படி வீடே இடிஞ்சு விழற மாதிரி கத்தற. இப்ப தெரியுதா முழு நேரத்துக்கும் வேலைக்கு ஏன் வேண்டாம்னு சொன்னேன்னு. சொந்த வீடாவே இருந்தாலும் வேலைக்காரங்க முன்னாடி என்ன பேசனுமோ அதத்தான் பேசனும்…”

“ஹ இப்படி ஒன்னொண்ணுக்கும் யோசிச்சு யோசிச்சு பார்த்திட்டு இருந்தா யாரையும் வேலைக்கு வைக்க முடியாது. இதெல்லாம் எங்களமாதிரி பணக்காரங்க வீட்டுல சகஜம். உங்களுக்கு எங்க தெரியப்போகுது?. மாச சம்பளத்துல குடும்பத்தை இழுபறியோட நடத்தின நீங்க வேலைக்காரங்க வச்சிருந்தா தானே?…”

துவாரகாவை காயப்படுத்திவிடும் வேகம் ஸ்வேதாவிடம் ஆர்ப்பரிக்க தேவையில்லாமல் பேச ஆரம்பித்தாள். அவளை கண்டிக்க வந்த அதிரூபனை நிறுத்திய துவாரகா,

“கண்டிப்பா ஒத்துக்கறேன். மாச சம்பளம் தான் என் அம்மாவுக்கு. அதனால தான் இடம் பொருள் பார்த்து எதை எங்க பேசனும்னு எனக்கு தெரிஞ்சிருக்கு. எதை யார் கேட்கனும்னு இருக்கு. வசதிதான் உங்க வீட்ல. அதனால தான் உனக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லாம போச்சு…” என்றவள்,

“லுக், எனக்கு உன்னோட இவ்வளவு பேசனும்னே இல்லை. என்ன சொன்ன என் அம்மாவும் உன் அம்மாவும் ஒண்ணா? இன்னொரு தடவை சொல்லிப்பாரு…” என ஸ்வேதாவிடம் வேகமாக நெருங்க,

“துவா ப்ளீஸ், போதும்…” என்ற அதிரூபன்,

“ஸ்வேதா தேவையில்லாம பேசாதே. இதுதான் உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொன்னேன். பேச தெரியாம எதையாச்சும் பேசிட்டு இப்ப அழுதுட்டு இருக்கறது…” என அவளை கண்டித்தவன் அன்னபூரணியிடம் அமர்ந்து,

“அத்தை நீங்க கிளம்புங்க. பெரியவங்க நீங்க உங்களுக்கு தெரியாதது இல்லை. எதுவுமே தானா நடக்கறதில்லை. முன்ன நாம என்ன பண்ணினோமோ அதுக்கான எதிர்வினை கண்டிப்பா நமக்கு திரும்பி வரும். நாம ஒரு விஷயத்தை செய்யும் போது ரொம்ப ஈஸியா எடுத்துக்கறோம். ஆனா அதுக்கான விளைவு வரும் போது அதையும் ஏத்துக்கற மனப்பக்குவம் நமக்கு வேணும்…” என்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவர் வேகமாய் எழுந்து நின்றார். துவாரகாவை திரும்பி பார்க்காமல்,

“துவாரகாவை பார்த்துகோப்பா. நாங்க கிளம்பறோம்…” என சொல்லி பத்மினியை பார்க்க அவர் துவாரகாவிடம் சொல்லிக்கொள்ள கூட பிரியப்படவில்லை. ஏனோ ஒருவித ஆற்றாமை அவருக்குள்.

மீண்டும் அதிரூபனிடம் திரும்பிய அன்னபூரணி,

“இங்க நடந்தது எதையும் வேற யார்க்கிட்டயும் சொல்லவேண்டாம் அதி. நாங்களும் சொல்லமாட்டோம்…” என கேட்க,

“அம்மா நான் கண்டிப்பா மாமாட்ட சொல்லுவேன்…”

அதற்கும் ஸ்வேதா பொங்கிக்கொண்டு நிற்க அவளை அன்னபூரணி பார்த்த பார்வயில் தலைகுனிந்தவள்,

“நானும் சொல்லமாட்டேன்ம்மா…” என தானாக சொல்லி வீட்டிலிருந்து கோபமாக வெளியேறி காரில் அமர்ந்துகொண்டாள்.

“கிளம்பறோம்ப்பா…” என்று அன்னபூரணி சென்றுவிட பத்மினி மகனிடம் ஒரு தலையசைப்புடன் விடைபெற்றுகொண்டார்.

அவர்கள் சென்றதும் துவாரகா வேகமாய் சமையலறைக்குள் சென்று தண்ணீரை அப்படி குடித்தாள். உடை நனைந்துபோகும் அளவிற்கு அத்தனை வேகம்.  

மீண்டும் ஹாலிற்கு வர அதிரூபன் போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான். முடிப்பான் என பார்த்து பார்த்து சலித்தவள் மாடிக்கு சென்று அமர்ந்துவிட அவள் செல்வதை பார்த்துகொண்டிருந்தவனுக்கு உள்ளுர பெருமூச்சொன்று கிளம்பியது.

‘இத்தனை வருஷமா எனக்கு நானே என்னோட ரூம்ல தனியா கேட்டுட்டிருந்தேன். இதை உங்கட்ட எல்லாம் கேட்க முடியாம இருந்தேன்’ என்று அவள் குமுறிய போது உள்ளுக்குள் வைத்துக்கொண்டு எத்தனை கஷ்டப்பட்டிருக்கிறாள் என்று வருந்தினான்.

இப்படியாவது இந்த வேதனைகளை வார்த்தைகளாய் கொட்டி தீர்த்த பின்னாவது அவள் மனம் அமைதியடைந்து ஒரு இயல்பான வாழ்க்கைக்கு திரும்பினால் போதும் என்று இருந்தது அதிரூபனுக்கு.

மேலும் ஒருமணி நேரம் சோபாவிலேயே அமர்ந்திருந்தவன் போன் மூலம் விஷாலிடம் அலுவலக வேலைகளை கேட்டுகொண்டான்.

அதன்பின்னும் அவளை பார்க்காமல் இருக்கமுடியாமல் மேலே சென்றான். கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவளை பார்த்தும் அவளாய் பேசட்டும் என அவன் இருக்க, அவன் பேசுவானா என அவள் பார்க்க எதுவும் நடந்தபாடில்லை.

அரைமணி நேரம் பொறுத்தவள் அவளாகவே எழுந்துவந்து அவன் முன் நின்றாள். கட்டிலின் மறுபுறத்தில் யோசனையோடு அமர்ந்திருந்தவன் நிமிர்ந்து பார்க்க,

“கோவமா இருக்கீங்களா மாமா?…” என புருவத்தை சுழித்துக்கொண்டு அவள் கேட்டவித அவனுக்கு சிரிப்பை வரவழைக்க முகத்தில் காட்டவில்லை.

“என்கிட்டே உனக்கு வேற எதுவுமே கேட்க தோணாதா? இல்லை உன்னை நான் வேற மாதிரி பார்க்கறதே இல்லையா?…” என கேள்வி எழுப்ப,

“ஹா வேற மாதிரியா? நீங்க இப்ப உம்முன்னு தான இருக்கீங்க? அப்ப வேற எப்படி கேட்கவாம்?…” அதிமுக்கிய கேள்வியை அவளும் கேட்க,

“வேறமாதிரினா உன்னை ஒரு ஹஸ்பண்டா நான் பார்க்கறதே இல்லையான்னு கேட்டேன். அதாவது லவ் லுக். அது இல்லையா உன்னை பார்க்கறப்ப?…”

அது அவளுக்கு கேட்டானா இல்லை அவனுக்கே அவன் கேட்டானா என அந்த கடவுளுக்கே வெளிச்சம். ஆனாலும் தெரிந்துகொள்ள வேண்டுமென கேட்க,

“எனக்கு அதெல்லாம் தெரியாது. நீங்க கோவமா இருக்க போய்தானே என்கிட்டே பேசவே இல்லை.  காலையிலையும் என் கையை தட்டிவிட்டுட்டீங்க. எனக்கு அவ்வளோ கஷ்டமா போச்சு…”

சிறுபிள்ளையென அவள் அவனையே குற்றவாளியாக்கி அவனிடமே புகார் பத்திரம் படிக்க அதிபனுக்கு சந்தேகமே வந்துவிட்டது.

காலையிலும், சற்றுமுன்பும் கீழே பெண் சிங்கமென எதிராளிகளை வாய் திறக்க முடியாதபடி கர்ஜித்ததென்ன? இங்கே தன்னிடம் பிள்ளையாய் கொஞ்சி நிற்பதென்ன? என வியப்பாய் பார்த்தான்.

‘ஆனாலும் கேப்புல கெடா வெட்டுறடா கேடி. இப்ப அவ கொஞ்சினா? அத நீ பார்த்த?.’ என உண்மைவிளிம்பி மனசாட்சி கொக்கரிக்க அதை அடக்க நெஞ்சை நீவியவன்,

“அதெல்லாம் இல்லைடா துவா…” என அவளை சமாதானம் செய்ய பார்த்தான்.

ஆனாலும் அவள் அப்படியே நிற்க இழுத்து தன்னருகே அமர்த்தி புன்னகையோடு அவளை பார்க்க,

“உங்களுக்கு நான் உங்கப்பாவை, அத்தையை பேசிட்டேன்னு கோவமா?. அதான் என் கூட பேசலையா?…” என்றவள் அவனின் பதிலை எதிர்பாராது,

“அவங்க பண்ணினதுக்கு நான் கேட்காம இருக்கவா? என்னால முடியாது. இப்ப நான் பேசலாம் தானே. அம்மா மாதிரி நீங்க பேசக்கூடாதுன்னு சொல்லமாட்டீங்கள்ள. எனக்கு தெரியும்…” என அவனை பேசவிடாமல் கேள்வியும் அவளே பதிலும் அவளே ஆனாள்.

அதில் சிரிப்பு வர முகத்தில் மலர்ந்த முறுவலுடன் அவளையே அவன் பார்த்திருக்க,

“இப்பவும் ஒண்ணுமே சொல்லலை நீங்க. அவங்க ஏன் இங்க வந்தாங்க? இங்க வந்து வேலைக்கு ஆள் வைக்கிறேன் அது இதுன்னு. எனக்கு பிடிக்கலை…”

“எனக்கும் சேர்த்துதான் நீயே பேசறியே. இனி நான் என்ன பேச? அதுதான் சைலன்ட் ஆகிட்டேன்…” என பதில் சொல்ல அவனின் முகத்தை உற்று பார்த்தாள் அவள்.

“எனக்கு நம்பிக்கை இல்லை…” என உதட்டை பிதுக்க இன்னும் அவனின் புன்னகை விரிந்தது.

“நான் கோவமா பேசிட்டு இருக்கேன். சிரிக்கிறீங்க?…” என கேட்டு இடுப்பில் கைவைக்க,

“வேற என்ன பண்ணனும்? உண்மையில சொல்லனும்னா நான் இன்னும் ஷாக்ல இருந்து வெளியில வரலை. நீ பேசினது சந்தோஷம் தான். இவ்வளோ பேசுவியான்னு தோணிச்சு. உனக்கு இப்படி பேசதெரியுமான்னு இருந்துச்சு. ஆனாலும் இவ்வளோ பேசற அளவுக்கு உன் மனசுக்குள்ள அழுத்தம் இருந்திருக்குன்னா எத்தனை கஷ்டம் அனுபவிச்சிருப்ப. அதுதான்….” என்றதற்கு,

“அதனால தான் என் கையை தட்டிவிட்டுட்டு விலகி போனீங்களாக்கும்?…” என கேட்கும் பொழுதே அவளின் கண்கள் சட்டென கலங்கிவிட்டது.

“ப்ச், என்ன இது இப்பத்தான் நீ பேசினதை நினைச்சு சந்தோஷப்பட்டேன். இப்ப இப்படி அழற? …” சட்டென அவளை தோள் சாய்த்து அவளின் கன்னத்தை தட்ட,

“ஒன்னும் வேண்டாம். நீங்க இருப்பீங்கன்னு நம்பிக்கைல தான நான் பேசினேன்…”

“இப்பவும் நான் இருக்கேன்டா. எங்கயும் போகலை…”

“இல்லை, காலைல போய்ட்டீங்க…” என மூக்கை சுருக்கி அவனை குறை சொல்ல,

“அது வேற. அப்ப இருந்த அப்செட். அதனால தான்…”

“அப்போ அப்செட்டா இருந்தீங்கன்னு ஒத்துக்கறீங்க. அப்டித்தானே?…” என்றதற்கு என்ன பதில் சொல்வதென அவன் திருதிருக்க,

“அந்த அப்செட்ல தான் இவளை ஏன்டா கட்டிக்கிட்டோம்னு நினைச்சீங்களா?…”

“என்ன நானா? நான் எப்ப நினைச்சேன்?…” என அவன் அலற,

“அப்ப நீங்க போனதுக்கு என்ன அர்த்தம்?…” இப்படியெல்லாம் அவள் பேசுவாள், கேட்பாள் என எதிர்பாராதவன் கையெடுத்து கும்பிட்டேவிட்டான்.

“அம்மா தாயே, சத்தியமா அப்படி நினைக்கலை. நீயா ஏதாவது கற்பனை கரப்பாம்பூச்சியை பறக்கவிட்டுடாத…” பாவம் போல கூற,

“அப்ப இனிமே இந்த மாதிரி விலகி போவீங்களா?…” மிரட்டலாய் கேட்க,

“இனியும் போய்டுவேனா? மாட்டேன்…” அவனும் ஒப்புக்கொடுக்க,

“நான் தப்பே பண்ணியிருந்தாலும் நீங்க அப்பவே என்கிட்டே கேட்கனும். சண்டை போடனுமா போட்டுடனும். சமாதானமும் செஞ்சிடனும். பேசாம இருக்க கூடாது…”

துவாரகா சொல்ல சொல்ல அவளையே ஆழ்ந்து பார்த்திருந்தான் அதிரூபன். அவனின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்துகொண்டவள்,

“தப்புதான் நானும். நானும் இனி பேசாம இருக்கமாட்டேன். கண்டிப்பா சண்டை போடுவேன். அப்பறம் நீங்க சமாதானம் செஞ்சிடனும். ஓகே…”

“டீலா, டீலா. ஒரு விரலை நீட்டி இந்த ஒண்ணுல ஒண்ணை தொடுங்கன்னு சொல்ற மாதிரியே இருக்குடா துவா. மேடம் அகராதில நோ டீல்க்கு இடமே இல்லை போல. சண்டை நான் போட்டாலும், நீ போட்டாலும் நான் தான் சமாதானம் செய்யனுமா? ரொம்ப நல்லா இருக்குடா…”

அதிரூபன் பேசிய பாவனையில் துவாரகா அதுவரை இருந்த கிலேசங்கள், சஞ்சலங்கள் மறைந்து புன்னகைக்க அவளின் தலையை பிடித்து ஆட்டியவன்,

“வா சாப்பிடலாம்…” என்று அழைக்க,

“எனக்கு வேண்டாம். நான் மாட்டேன். உங்க அத்தை சமைச்சது. நீங்களே சாப்பிடுங்க…” மீண்டும் முறுக்கிக்கொள்ள,

“இது அத்தை சமைச்சது இல்லை. நான் ஆடர் செஞ்சது. அஷ்மி வீட்டு குக் செஞ்சு அனுப்பியிருக்காங்க…” என சொல்ல,

“இது எப்போ?…” வியப்பாய் அவள் கேட்க,

“மெசேஜ் பண்ணினேன். அனுப்பிட்டா. வா…” அவளை இழுத்துக்கொண்டு கீழே இறங்க,

“ரொம்ப படுத்தறேனா மாமா?…” அவனின் முகம் நோக்கி குனிந்து அவள் கேட்க அவன் தலையை மட்டும் மறுப்பாய் அசைக்க,

“இவ்வளோ பேசுவேன்னு தெரிஞ்சிருந்தா என்னை கல்யாணம் செஞ்சிருக்கவே மாட்டீங்கல்ல…”

காலையில் இருந்து அவளின் மனதை அரித்துக்கொண்டிருந்த கேள்வியை கேட்டதும் தான் சற்று நிம்மதியானது. ஆனாலும் அவன் ஆமாம் என பதில் சொல்லிவிட கூடாதே என்ற பயத்தில் உடனடியாக அணைத்து தெய்வங்களையும் தனக்காய் உதவிக்கழைக்க அவளின் பதட்டம் கண்டவனின் கண்களில் குறும்பு கூத்தாடியது.

“ஹ்ம்ம் கரெக்ட் தான். கண்டிப்பா உன்னை மிரட்டி கல்யாணம் செஞ்சிருக்க மாட்டேன்…” என்றவன் அந்த இடத்தில் நிறுத்தி அவளின் முகம் போன போக்கை பார்த்துவிட்டு,

“என்னோட உன்னை சேர்த்துட்டு உங்கம்மாவோடையும் பைட் பண்ணி, லவ் பண்ணி மேரேஜ் பண்ணியிருப்பேன்…” என்றதும்,

“மாமா…” என அவனின் கையை பற்றிக்கொள்ள,

“எனக்கும் ஆசைதான்டா. காதலிக்கிற பொண்ணோட மனசுக்கு பிடிச்ச இடங்களுக்கு போகனும். என்னோட விருப்பு, வெறுப்புகளை உன்னோட ஷேர் பண்ணிக்கணும். உனக்கு பிடிச்சதை எல்லாம் நான் தெரிஞ்சுக்கனும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிப்ட் குடுத்து நம்மோட கடைசி காலத்துல இதயெல்லாம் நினைச்சு நினைச்சு நாம சந்தோஷப்படனும். இப்படி அவ்வளவு ஆசைகள் எனக்குள்ளயும் இருந்தது…”

“நீ மட்டும் தைரியமா இருந்திருந்தா, இன்னைக்கு பேசினதை அப்போ பேசியிருந்தா  உன்னை போல உங்கம்மாவும் எங்க வீட்டை எதிர்த்து நின்னிருந்தா நம்ம கல்யாணம் நீ நினைக்கிறதை விட அருமையா பண்ணியிருந்திருக்கலாம். காதலிக்கிறது, காதலிக்கப்படறது இதுல இருக்கிற சுகம் இருக்கு பாரு…”

“மாமா…” என பேச வந்தவளின் இதழ்களில் கை வைத்து நிறுத்தியவன்,

“ஆனா உனக்கு தெரியாது துவா, எங்க என்னோட விருப்பம் எங்க வீட்டுக்கு தெரிஞ்சு அதனால உனக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமோன்னு ஒவ்வொரு நாளும் நான் தவிச்சது. உனக்கு என்னை பிடிச்சிருந்தாலும் இந்த விஷயத்துல எந்தளவுக்கு நீ ஸ்டபனா நிப்பன்னு எனக்கு தெரியலைல. என்னால உன்னை காப்பாத்திட முடியும் தான். ஆனா அதுக்கு உங்கம்மாவே தடையா இருந்தாங்களே?…”

“வெளிப்படையா காதலை சொல்லமுடியாம, மனசுக்குள்ளயே ஒளிச்சுவச்சு, எந்த நிமிஷம் உனக்கு என்ன நடக்குமோன்னு பயந்து, எப்படி உன்னை என் வாழ்க்கைக்குள்ள கொண்டு வரன்னு யோசிச்சு ஹப்பா நான் பைத்தியம் ஆகாதது தான் குறை…”

“நீ நினைக்கலாம் உன்னோட சூழ்நிலையை நான் யூஸ் பண்ணிக்கிட்டேன்னு. எஸ். என்னோட சூழ்நிலை அப்படித்தான் இருந்தது. நீ சொல்லு, உன்கிட்ட ப்ரப்போஸ் பண்ணியிருந்தா நீ ஒத்துப்பியா? இல்லை உன் அம்மா தான் விடுவாங்களா? திரும்பவும் என் கண்ணுல படாம உன்னை ஒளிச்சுவைக்க தான் பார்ப்பாங்க. திரும்ப உங்களை நான் தேடி, கண்டுபிடிச்சு. இதுக்கு மேல முடியாதுன்னு தோணுச்சு…”

“அப்பா பண்ணினது தப்புதான்டா. ஆனா நான் சாக்கடை இல்லைடா…” குரலுடைந்து அவன் சொல்ல பேச்சிழந்து நின்றாள்.

ஏனோ இதை இப்போதே ஆரம்பித்துவிட்டவன் அவளின் முகமாற்றத்திலும் சஞ்சலத்திலும் பேச்சை நிறுத்தி,

“ஹேய் துவா…” என அழைக்க,

“மாமா, நான்…”  தொண்டை அடைக்க அவனை கட்டிக்கொண்டவள் பேச முடியாமல் திணற அவளின் கண்ணீர் துளிகள் அவனின் சட்டையை நனைக்க ஆரம்பித்தது.

“ஹேய் இதென்ன இப்படி அழுகை. அழக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல. ப்ச்…” அவளின் முகம் நிமிர்த்தி சொல்ல,

“ரொம்ப கஷ்டப்பட்டீங்களா?…”

“ஹ்ம்ம் இல்லைன்னு சொல்லமுடியாது. ஆனாலும் இப்ப ஓகே தான்…”

அவளை தேற்ற சொன்னாலும் அவனின் மனதில் அதன் தாக்கம் இன்னும் முணுக்கெனும் வலியை இன்னும் கொடுத்துக்கொண்டு தான் இருந்தது.

“ஓகே சாப்பிடலாம்டா. சூடு ஆறிடும்…” அவள் மேலும் பேசும் முன்னே இழுத்துக்கொண்டு வந்து அமர்த்தி அவளுக்கும் பரிமாறி தனக்கும் வைத்துக்கொண்டு வேறு பேச்சுக்களை பேசிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.

முடிக்கும் பொழுது போன் வர அதை அடுத்துப்பார்த்தவன் முகம் புன்னகையை பூசியது.

“அஷ்மி தான்…” என அதிபன் சொல்ல,

“சாப்பாடு எப்படி இருக்குன்னு கேட்க கூப்பிட்டிருப்பாங்க. நல்லா இருக்குன்னு சொல்லுங்க…” என்றாள் துவாரகா,

“ம்ஹூம், அதுக்கு கண்டிப்பா இல்ல…” என சொல்லிக்கொண்டே அவளின் அழைப்பை ஏற்றவன் ஸ்பீக்கரில் போட்டு,

“சாப்பாடு வந்திருச்சுடா அஷ்மி. சாப்ட்டோம். நல்லா இருந்தது. துவைக்கும் பிடிச்சிருந்தது…” என அவளுக்கு முன்னே இவன் சொல்ல,

“நீ சாப்பிட்டா என்ன சாப்பிடலைனா எனக்கென்னடா? நீ மட்டும் நல்லா கொட்டிக்கிட்டா போதுமா? நான் சாப்பிட வேண்டாமா?. ப்ரெண்ட்ஸ் கூட ஹோட்டல் வந்திருக்கேன்…” என பொரிந்து தள்ள,

“என்னாச்சு? கோவத்துல இருக்க போல?…”

“இங்க உன் தம்பி என்னவோ லவ் பெயிலியர் ஆனவன் மாதிரியே என்னை பார்த்து கடுப்பேத்துறான். நல்லா இல்லை. சொல்லிட்டேன். சிக்குனான் சிக்கன் டின்னர் தான் இன்னைக்கு என் ப்ரெண்ட்ஸ்க்கு…” என்றவள் போனையும் கட் செய்துவிட சிரித்தபடி மொபைலை வைத்துவிட்டு அவன் கை கழுவ எழுந்துகொண்டான்.

“என்ன மாமா நீங்க அவங்க இவ்வளோ கோவமா பேசறாங்க. நீங்க சிரிக்கிறீங்க? உங்க தம்பிக்கு வேற வேலையே இல்லையா? போன் போட்டு என்னனு கேளுங்க…” துவாரகா அஷ்மிதாவிற்காய் படபடக்க,

“அவ இதை ஹேண்டில் பண்ணிப்பா. நீ இதை முடி…”

அவளிடம் சொல்லிவிட்டு சாவாகாசமாய் டைனிங் டேபிளை க்ளீன் செய்ய ஆரம்பித்தான்.

அவன் எண்ணியது போலத்தான் நடந்ததும். தன்னையே பார்த்துக்கொண்டு சாப்பிடாமல் அமர்ந்திருந்த விஷாலின் டேபிளை நோக்கி வேகமாய் சென்றாள் அஷ்மிதா.

“இங்க வா?…” என அவனின் முன்னால் சொடுக்கு போட்டு அழைக்க விஷாலின் நண்பர்கள் மொத்தமாய் எழுந்து அவளிடம் என்னவென கேட்க,

“டேய் அடங்குங்கடா. அவனைத்தான கூப்பிட்டேன். வந்த வேலையை மட்டும் பாருங்க. அதான்டா கொட்டிக்காங்க…” என்றவள்,

“உனக்கு என்ன மேளவாத்தியம் வச்சு அழைக்கனுமா? வேணும்னா தாரைதப்பட்டையை கூப்பிடுவோமா?…” என கேட்க சட்டென எழுந்துவிட்டான்.

“அது…” என கூறி கார்டன் பக்கம் வந்தவள்,

“என்ன லுக் எல்லாம் பலமா இருக்கு?…”

“இல்லை அது வந்து…” விஷால் வார்த்தைகளை விழுங்க,

“என்னமோ நான் உன்னை லவ் பண்ணிட்டு கழட்டி விட்டுட்ட மாதிரியே பார்க்கற? இந்த தேவதாஸ் லுக் எல்லாம் வேற எங்கையாச்சும் வச்சுக்கோ. இல்ல ஈவ்டீஸிங்னு கம்ப்ளைன்ட் பண்ணி உள்ள தள்ளிடுவேன்…”

“இல்ல சும்மா தான். அண்ணா ப்ரென்ட் தானேன்னு…”

“அண்ணாக்கு தான ப்ரெண்ட். உனக்கில்லையே. இந்த கணக்கு பன்ற  வேலையை காட்டின நீ வேற எந்த பொண்ணையும் கணக்கு பண்ண முடியாது. லாக்கப்ல கம்பிகளை தான் கணக்கு பண்ணனும்…”

அஷ்மிதா எரிந்துவிழ பதில் பேசாமல் நின்றான் விஷால். அவனின் முகமே கறுத்து சிறுத்து போனது.

‘எதார்த்தமாய் பார்த்ததற்காய் இவ்வளவு பேச்சு’ என அவனின் மனம் முரண்டினாலும் அந்த ஹோட்டலில் அஷ்மிதாவை பார்த்ததுமே அவனுக்கு நினைவு வந்தது எல்லாம் தன்னை திருமணம் செய்துகொள்ள நினைத்ததை சொன்னது தான்.

அவன் பார்த்தது வேண்டுமென்றோ இல்லை மீண்டும் அவள் சொன்னதை நிறைவேற்றும் என்னமோ அவனுக்கில்லை. ஆனாலும் அவளை பார்த்தவுடன் இந்த ஞாபகம் வந்து அவளை பார்க்க தோன்றியது. ( நீ பார்த்தது விஸ்வாசத்துக்கு தெரிஞ்சது கண்ணை நோண்டி கைல குடுத்திருப்பான்)

“இல்லை இனிமே பார்க்கலை…” வேறு புறம் பார்த்துக்கொண்டே சொல்ல,

“வந்த இடத்துல நிம்மதியா சாப்பிட கூட முடியலை. போ போ…” என விரட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

விஷாலுக்கும் அதற்கு மேல் அங்கிருக்கவே முடியவில்லை. நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

வரும் வழியில் அதிரூபனுக்கு போனை போட்டு அவனிடம் விஷாலை தாளித்து தள்ளிவிட்டாள் அஷ்மிதா.

சிரித்தபடி அனைத்தையும் கேட்டுவிட்டு மொபைலை வைத்தவனை துவாரகா பார்க்க அவளிடம் நடந்ததை கூறி இன்னும் சிரித்தான். துவாரகாவிற்கும் புண்ணாக தான்.

“உங்க தம்பிக்கு வேணும் இது…” என சொல்ல,

“அவன் உன்னை அண்ணின்னு சொன்னான்…” என சிரிக்க,

“என்கிட்டே சொல்லட்டும் வாயை கிழிச்சிடறேன்…” துவாரகா காண்டாக,

“வர வர அஷ்மி கூட சேர்ந்து நீ டெரரா மாறிட்டு வர…” அதிரூபன் கேலி பேச,

“போதும். எனக்கு தூக்கம் வருது. வாங்க மாமா…”

“இல்லைடா இன்னுமொரு முக்கியமான கால் வரனும். வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். நீ தூங்கு வரேன்…” என்று அவளை அனுப்பியவன் சிறிது நேரம் பார்த்துவிட்டு மாடிக்கு வந்தான்.

“அதுக்குள்ளே தூங்கிட்டாளா?…” என பார்க்கும் பொழுதே அவன் எதிர்பார்த்த போன் வந்துவிட்டது. உடனே கட் செய்தவன் துவாரகாவை பார்க்க அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

வேகமாய் அறைக்கதவை பூட்டிவிட்டு பால்கனிக்கு வந்து நின்றவன் மீண்டும் அந்த எண்ணிற்கு அழைக்க,

“ஹ்ம்ம் சொல்லுங்க சிவகாமி…”

“ஸார், நீங்க சொன்ன மாதிரியே பண்ணியாச்சு…”

“எல்லா டாக்குமெண்ட்ஸ்லயும் சைன் வாங்கியாச்சா?. ஒன்னும் டவுட் வரலையே…”

“இல்லை ஸார். பக்காவா பண்ணியாச்சு. நோ டவுட். ஆனா சைன் வாங்கறதுக்கு கொஞ்சம் கஷ்டமா போச்சு. ஆனாலும் வாங்கிட்டோம். அவங்களுக்கு எந்த டவுட்டும் இல்லை…”

“கஷ்டபடாம எதுவுமில்லை. வெரிகுட்…” என்றவன் மொபைலை வைத்துவிட்டு,

“மாமியாரே, யார்க்கிட்ட? நான் அதிபன்…” என மர்மமாய் புன்னகைத்தான்.

 

மின்னல் தெறிக்கும்…

Advertisement