Advertisement

மின்னல் – 16

                  அதிரூபனுக்கு தன் காதுகளில் விழுந்த சொற்கள் உண்மையா என்பதை உணர்ந்து தன்னுணர்வு பெறவே நிமிடங்கள் பிடித்தது.

“துவா?…” என அதிராமல் அவளை அழைக்கவே முடியவில்லை.

“நான் தான் பூட்டிவச்சேன்…” திரும்பவும் ஸ்திரமாய் நிமிர்ந்து பதில் சொல்லியவளை முதன் முறையாக வியந்து பார்த்தான்.

“உண்மையாவா சொல்ற?…” அவனுக்கு ரத்தினசாமியை கவனிப்பதை விட துவாரகா தான் செய்ததாக சொல்லியது உண்மையா என அறிந்துகொள்வது முக்கியமாகபட்டது.

“நானே சொல்லியும் நம்பலைனா உங்க அப்பாட்டையே கேளுங்க…” என சொல்லிய அவளின் இதழ்களில் இகழ்ச்சி புன்னகை வந்தமர்ந்தது.

அதையும் கண்ட அதிரூபனுக்கு இதை எப்படி எதிர்கொள்வது என்பது புரியவே இல்லை.

தன் மனைவி தன்னுடைய அப்பாவை ஒரு பழைய அறையில் போட்டு அடைத்து வைத்திருக்கிறாள் என்றதும் அவனுக்கு கோபம் பெருக்கெடுத்திருக்க வேண்டாமா?

ஏன் இப்படி செய்தாய் என கேள்விகளால் அவளை துளைத்திருக்க வேண்டாமா? ஆனால் அப்படி செய்ய முடியவில்லை அதிரூபனுக்கு.

ரத்தினசாமி இங்கு தான் இல்லாத நேரம் வந்து எதுவும் பிரச்சனை செய்திருப்பாரோ? அதனால் பயந்துபோய் செய்வதறியாமல் துவாரகா அவரை அடைத்து வைத்திருப்பாளோ என்றுதான் என்ன தோன்றியது.

ஏனென்றால் ரத்தினசாமியும் அப்படித்தான். துவாரகாவும் இப்படித்தான் என்னும் பிம்பம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றே. அதனால் அவனால் வேறு எதுவும் சிந்திக்க முடியவில்லை.

ஆனால் சாது மிரண்டால் காடுகொள்ளாது என்பதை அந்த நிமிடம் அவன் உணராமல் போய்விட்டான்.

“நீங்க எதுக்குப்பா இங்க வந்தீங்க? இங்க வந்தும் பிரச்சனை செய்ய நினைச்சீங்கன்னா உங்களை என்னதான் செய்ய? இப்ப துவா என்னோட வொய்ப். அதையும் தாண்டி அவளுக்கு பிரச்சனையை உண்டு பண்ணி கஷ்ட்டப்படுத்தனும்னு வரீங்களே?…”

“அதிபா, அப்பா சொல்றதை கேளுய்யா….” கெஞ்சலாய் அவர் குரல் ஒலிக்க முகம் அத்தனை சோர்வாய் இருந்தது.

“இன்னும் என்ன கேட்கனும்? துவாவுக்கு கஷ்டம்னா அது எனக்கும் கஷ்டம் தான்னு உங்களுக்கு ஏன்ப்பா புரியலை. பிடிக்கலைனா என்னைவிட்டு கூட நீங்க விலகிடுங்கப்பா…” என்றதும் கலக்கமாய் பார்த்தவர்,

“அதிபா, இல்லப்பா. உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்னு நான் காரை கூட திருப்பி அனுப்பிட்டேன். இங்க வந்ததும் வேற யாருக்கும் தெரியாது. ட்ரைவர்ட்ட யார்ட்டையும் சொல்லகூடாதுன்னு சொல்லி அனுப்பிட்டேன்.  உன்னை விட்டுட்டு…” என்றவருக்கு வார்த்தையே வரவில்லை. அவரின் தளர்வு எதுவோ செய்ய,

“நைட் சாப்ட்டீங்களாப்பா?…” என்றான் அவனாக.

“அவர் நேத்து மத்யானமே வந்துட்டார்…” இறுக்கமாய் பதில் வந்தது துவாரகாவிடமிருந்து.

“என்ன?…” என அவளை திரும்பி பார்த்தவனின் முகத்தில் ஏதேதோ உணர்வுகள்.

“துவா அவர் வயசென்ன? நேத்துல இருந்து சாப்பிடலை. டேப்லெட் வேற எடுத்துக்கறவர்…” என்றவன் வேகமாய் சமையலறைக்கு சென்று தட்டில் இரண்டு இட்லிகளையும் சாம்பாரையும் ஊற்றி எடுத்துவந்து ரத்தினசாமிக்கு ஊட்ட ஆரம்பித்தான்.

அவனின் பதட்டமும் பரபரப்பும் தந்தையின் உடலின் மீதான அக்கறையும் துவாரகாவின் மனதை ஆட்டியது. அவர்களையே வெறித்து பார்த்தபடி நின்றாள்.

அதிரூபனுக்கு அப்போதைக்கு ரத்தினசாமியின் பசியை போக்குவதும் சோர்வை நீக்குவதும் மட்டுமே கடமையாய் தோன்ற மகனாய் அவன் அவரை கவனித்தான்.

இயல்பிலேயே ஒருவரின் துன்பத்தில் இறக்கம் கொள்பவனாய் இருந்துவிட்டவன் இந்த இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தாலும் அவரின் பசியை போக்கிஇருப்பான் தான்.

ஆனாலும் தந்தை என்று வரும் போது கூடவே அக்கறையும் பாசமும் அதிகமாய் போனது.

கொண்டுவந்த உணவை அவரே எடுத்து சாப்பிடகூட முடியாத அளவுக்கு ஒருநாள் பசியில் துவண்டுபோய் இருந்தவரை பார்க்க கலங்கிப்போனது அதிபனுக்கு.

‘அனைத்தும் இவர் செய்த பாவத்தின் சம்பளம்’ என உள்மனம் எக்களித்தது.

செய்த பாவ செயல்களுக்கு எஜமானராகிய பின் அதற்கான பலனை அனுபவித்து தானே ஆகவேண்டும். ஆனாலும் அதை பார்க்கும் போது வலிக்கத்தான் செய்தது அதிபனுக்கு.

‘இது உங்களுக்கு தேவையாப்பா? அகிலாத்தைக்கும், துவாவுக்கும் நீங்க செஞ்ச பாவத்தோட பலன் தான் இன்னைக்கு பெற்ற மகன் வீட்டிலேயே பசிக்கு தவிச்சிருக்கீங்க.’ என மனதிற்குள் நினைத்தவன் முகம் உணர்வுகளை தொலைத்து இருந்தது.

ஊட்டி முடித்த பின்பு தான் அவரின் கையை பார்த்தான். எங்கோ நன்றாய் இடித்து அந்த இடம் லேசாய் வீங்கிப்போய் இருந்தது.

“அப்பாக்கு ஒன்னுன்னதும் பதறுதா மாமா?…” என துவாரகா கேட்டதும் வேகமாய் திரும்பி பார்த்தவன்,

“அடி பான்=பட்டிருக்கு துவா. பர்ஸ்ட்எய்ட் பாக்ஸ் எடுத்துட்டுவா…” என,

“சின்ன அடிதான் மாமா. சாகறதுக்குள்ள சரியாகிடும்…” என அசராமல் சொல்ல,

“துவா?….” என கத்திவிட்டான்.

“இது எங்களுக்கு என்னைக்கோ உங்க அப்பா சொன்னது தான் மாமா…” என இன்னும் அழுத்தமாய் சொல்ல,

“துவா எப்ப என்ன பேசிட்டு இருக்க? அவர் பண்ணினதை நான் நியாயப்படுத்தலையே. ஆனா இந்த நிலமைல அவரை பார்த்துட்டு அதுவும் நம்ம வீட்ல, நான் எப்படி விடமுடியும்?…” அவளுக்கு எப்படியாவது புரியவைத்துவிடவேண்டும் என்கிற அவசரம் அவனுக்கு.

“ஆமாம். வயசானவர், பசி, படுக்க மெத்தை இல்லாம தூசி படிஞ்ச ரூம்ல போட்டு அடச்சுட்டேன். உண்மை தான். ஆனா இதெல்லாம் வரனும்னா பதவி இருக்கனும். பணம் இருக்கனும், அதிகாரம் இருக்கனும். என்னன்னு கேட்கிறதுக்கு சொந்தம்னு யாராவது இருக்கனும். இல்லையா மாமா?…”

“நாங்களும்தான் இருந்தோம். நாள் முழுக்க சாப்பிடாம, தூங்காம, பயத்தோட குடும்ப பொண்ணுங்க போகவே கூடாத போலீஸ்ஸ்டேஷன்ல. அம்மா வயசானவங்க தான். அவங்களும் அப்பா ஏதோ டேப்லெட் போட்டுட்டு தான் இருந்தாங்க…” அவளின் குரலில் அப்படி ஒரு இறுக்கம்.

“துவாம்மா…” என்றபடி அருகில் வர பார்க்க,

“அங்கேயே நில்லுங்க மாமா. நான் பேசனும்…” என அவனை விட்டு இன்னும் இரண்டடி பின்னால் சென்று நின்றாள்.

“எனக்கு பசின்னா என்னனே தெரியாத வயசு. எங்கம்மா என்னை ஸ்ட்ரிக்டா வளர்த்தாங்களே தவிர என்னை எதுக்கும் ஏங்கவிட்டது இல்லை. முக்கியமா பசி. நான் பசிச்சு என்னைக்குமே சாப்பிட்டது கிடையாது மாமா. அப்படி ஒண்ணை நான் பீல் பன்றதுக்குள்ள எனக்கு சாப்பிட குடுத்திருவாங்க. ஆனா அன்னைக்கு நான் காலைல சாப்பிட்டது தான்…”

“வேண்டாம்டா, மறந்திடு அதையெல்லாம்…” அவளை சமாதானப்படுத்தும் விதமாய் மீண்டும் நெருங்க முயற்சிக்க,

“கிட்ட வராதீங்கன்னு சொல்லிட்டேன்…” முடிவாய் துவாரகா சொல்ல அப்படியே நின்றான் அதிரூபன்.

துவாரகா குரலை உயர்த்தவில்லை. அழவில்லை. கத்தவில்லை. கண்களில் கள்ளம் கூட இல்லை. அத்தனை வெறுமை. எந்த ஒரு உணர்வையுமே அவளின் குரல் வெளிப்படுத்தவில்லை.

அதுவே அதிரூபனுக்கு பயத்தை கொடுத்தது. ஏற்கனவே அவள் அவனிடம் பேசுவதே இல்லை. இன்று திடீரென அதுவும் ரத்தினசாமியை அடைத்துவைத்துவிட்டு அதைப்பற்றி கொஞ்சமும் கவலையோ பயமோ கொள்ளாமல் இவள் இப்படி பேசுவது அவனுக்கு பேரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியது.

அகிலாவின் பேச்சும், விலகலும் துவாரகாவை  மனதளவில் பாதித்துள்ளதோ? அந்த பாதிப்பின் வெளிப்பாடு தான் இந்த குமுறலோ? என பார்த்திருந்தான்.

ரத்தினசாமியை பார்த்தால் அவர் துவாரகாவை முறைத்தால் கூட மகன் எதுவும் நினைப்பானோ என அவனைத்தான் பார்த்தார்.

“நாங்க எங்காவது போய்ருப்போம்ல. அத்தனை பேர் முன்னால அம்மாவை அரஸ்ட் பண்ணி கூட்டிட்டு போறாங்க. என்னை என்னவோன்னு பார்க்காங்க. அங்க அந்த ஆட்டோக்கார அங்கிள் தான் என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாரு. திரும்ப ஸ்டேஷன்க்கும் அவரே கொண்டுபோய் விட்டாரு…”

“அப்பவும் நான் சாப்பிடலைதான். ராத்திரி முழுக்க, மறுநாள் மத்யானம் வரை சாப்பிடலை தான். அன்னைக்கு எங்களுக்கு இதை கேட்க யாருமே இல்லை மாமா. அப்ப கூட எனக்கு அம்மா இருந்தாங்க. ஆனா இன்னைக்கு நான் அநாதை ஆகிட்டேன்ல…”

“துவா நான் இருக்கேன்லடா…” அவனின் குரலில் இருந்த வலி அவளை எட்டவே இல்லை.

“உங்களுக்கு புரியாது மாமா, ஒரு பொண்ணா அந்த ராத்திரி முழுக்க என்னை இவங்க எதுவும் பண்ணிடுவாங்களோ? இதோ பார்க்கறாங்க? ஐயோ கிட்ட வர மாதிரி இருக்கு? என்ன பேசுவாங்க? என்ன சொல்லுவாங்க இப்படி ராத்திரி முழுக்க பயந்து பயந்து நான் இருந்ததை நான் மட்டுமே உணர முடியும்…”

“என்னோட அம்மா அம்மா தான் அவங்க. ஐயோ தன் பொண்ணு இப்படி இருக்காளேன்னு வேதனை படுவாங்க தான். அம்மா எனக்கு இப்படி ஆகிடுச்சு. நான் இப்படி பீல் பண்ணினேன்னு வார்த்தையால சொன்னா கூட அதை நினச்சு அத்தனை வருத்தபடுவாங்க, வேதனை படுவாங்கதான். ஆனா அதை முழுமையா வார்த்தைல கூட கொண்டுவரமுடியலை மாமா…”

“இதை நீங்களோ உங்க வீட்டு பொண்ணுங்களோ அனுபவிச்சிருந்தா அப்ப தெரிஞ்சிருக்கும். என்னோட வலி என்னன்னு. ம்ஹூம். அப்பாவும் தெரியாது. ஏனா நீங்க ஏன் இந்த கஷ்டத்தை அனுபவிக்க போறீங்க? நீங்கலாம் ஆசிர்வதிக்கப்பட்டவங்க இல்லையா?…”

“நாங்க என்ன மாமா பாவம் பண்ணினோம்? எந்த வகையில உங்க குடும்பத்துக்கு தொந்தரவு கொடுத்தோம்? எதுவுமே பண்ணலையே?…”

“பொதுவா ரோட்ல ஒரு பொண்ணை எவனாவது தொடர்ந்து பார்த்தா கூட இவன் என்னை பார்க்கிறான், பாலோ பன்றான்னு கம்ப்ளைன்ட் பண்ணினா உனக்கெப்படி தெரியும் அவன் பார்க்கிறான்னு? நீயும் பார்க்கிறதால அவன் பார்க்கிறான்னு சிலபேரும், நீ எதுக்கு அவனை கண்டுக்கற. நீ உன் வேலையை மட்டும் பார்த்துட்டு போகவேண்டியது தானேன்னு சிலபேரும் அட்வைஸ் தான் பன்றாங்க…”

“ஆனா யாரும் அவனை போய் எதுக்கு அந்த பொண்ணை டிஸ்டர்ப் பன்றன்னு கேட்டு கண்டிக்கிறதில்லை. அப்படிப்பட்ட உலகத்துல நாம வாழ்ந்துட்டு இருக்கோம்…”

“அப்படி இருக்கிறபட்சத்துல  நாங்க போய் போலீஸ் ஸ்டேஷன்ல நாள் இருந்தோம்னு சொன்னா இதுல உங்க பணத்திமிர் இருக்குன்னு நம்புவாங்களா? இல்லை இதுங்க எதோ பண்ணி மாட்டி இப்ப வெளில வந்திருக்குன்னு சொல்லுவாங்களா? சொல்லுங்க மாமா?…”

“துவா, இப்ப ஏன்?…” என அவன் கெஞ்ச ரத்தினசாமி வாயே திறக்கவில்லை.

“இப்பவும் பேசலைனா எப்படி மாமா? இன்னைக்கு அம்மா இல்லாத பொண்ணா இருக்கேன். எங்கம்மாவுக்கு நான் உண்மையா இல்லையே. அவங்க நினைவு தப்பி இருந்த சூழ்நிலையை நான் பயன்படுத்தி உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் தானே. அப்ப நான் என் அம்மாவுக்கு உண்மையா இல்லைன்னு தானே அர்த்தம்…”

“துவா அப்படி எல்லாம் இல்லைடா….”

“அப்படித்தான். நான் மட்டும் இல்லை. நீங்க கூடத்தான் மாமா. உங்க நெஞ்சுல கை வச்சு சொல்லுங்க. என் அம்மா மட்டும் நல்லா இருந்திருந்தா அவங்கட்ட பேசி என்னை முறையா பொண்ணு கேட்டு மேரேஜ் பண்ணியிருப்பீங்களா? சொல்லுங்க…”

அவளின் கேள்விகள் எதற்கும் அவனிடம் பதிலே இல்லை. அவள் இத்தனை பேசுவாள் என்றே இன்று தானே தெரியும். உண்மையை இப்படி சொல்லும் அவளிடம் எந்த சமாதானமும் எடுபடாது என்பது புரிந்து திருதிருத்தான்.

உண்மையில் அவன் அத்தனை வேகமாக செயல்பட்டதும் அதற்கு தான். அகிலாவின் நிலை. துவா தன்னிடம் வந்து சேர்ந்த நேரம், தன்னுடைய திருமண ஏற்பாடு. அனைத்தும் ஒன்று சேர்ந்து வந்து நிற்கும் பொழுது அந்த சந்தர்ப்பத்தை அழகாய் பயன்படுத்திக்கொண்டான்.

அவனுக்குமே நிச்சயம் அகிலா இதற்கு ஒருகாலும் சம்மதிக்க மாட்டார் என்பது. அதனாலேயே தானே வந்த சந்தர்ப்பத்தை கெட்டியாய் பிடித்து துவாரகாவை மனைவியாக்கிக்கொண்டான்.

“சொல்லுங்க மாமா, அதை பேசாத. இதை மறந்திடுன்னு சொன்னீங்க. இப்ப நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. இப்போ எங்கம்மா நல்லாவே இருந்திருந்தாங்க. நீங்க எப்படி என்னை கல்யாணம் முடிச்சிருப்பீங்க?. எனக்கு உண்மையான பதில் வேணும்…” அவளுக்கு அந்த நொடி ரத்தினசாமி என்கிற ஒரு மனிதன் இருக்கிறான் என்ற எண்ணமே இல்லை.

“துவா…”

“எனக்கு தெரியனும் மாமா…” பிடிவாதமாய் சொல்ல,

“எப்படினாலும் உன்னை மேரேஜ் பண்ணியிருப்பேன். ஏனா உனக்கும் என்னை பிடிக்கும்னு எனக்கு தெரியும். என்னால உன்னை கன்வின்ஸ் பண்ண முடியும்னு நம்பினேன்…” அவளை நேர்பார்வை பார்த்துக்கொண்டே சொல்லவும் இகழ்ச்சியாய் புன்னகைத்தவள்,

“இதுதான் மாமா இந்த பதில் தான் வரும்னு எனக்கும் தெரியும். ஏனா நான் ஸ்டெடி மைண்ட் இல்லை. அம்மாவோட கஷ்டத்தையும் தாண்டி நாங்க அனுபவிச்ச அத்தனை துயரத்தையும் தாண்டி என் மனசு உங்களை தேடியிருக்குன்னு உங்களுக்கே தெரியுது இல்லயா?…”

“இப்ப எதுக்குடா இதெல்லாம்?…”

“இப்ப இது தேவையில்லாம. வேற எப்ப? நேத்து இவர் வந்தார். வந்ததும் உண்மையா எனக்கு பயம் தான். நீங்க வீட்ல இல்லைன்னு சொல்லிட்டு நான் இங்கிருந்து ரூம்க்கு ஓடத்தான் பார்த்தேன். ஆனா அவர் என்ன சொன்னார் தெரியுமா?…” என்றவள் ரத்தினசாமியை நேருக்கு நேர் பார்க்க அவர் முகம் திருப்பிக்கொண்டார்.

“நான் பயந்த சுபாவம் கொண்டவ தான். உங்களை உங்க குடும்பத்தை பார்த்தாலே எனக்கு பயம் நடுக்கம் தான். ஆனா பேசத்தெரியாதவ கிடையாது. எனக்குள்ளயும் உங்கட்ட எதிர்த்து கேட்க ஆயிரம் கேள்விகள் இருக்கு. அது அத்தனையும் எனக்குள்ளையே போட்டு புதைச்சிட்டு தான் இருந்தேன்…”

“நேத்து என்ன சொன்னீங்க? உங்கம்மாவையும் மிஞ்சிட்ட. என் பையனையே வளைச்சுபோட்டுட்ட திமிர்ல என் முன்னாடி நிக்கிறியான்னு கேட்டீங்கள. இப்ப உங்க பையனே இருக்கார். கேளுங்க அவர்க்கிட்ட…” என்றதும்,

“அப்பா…” என அதிரூபன் கத்த,

“நான் பேசி முடிச்சிடறேன் மாமா. உங்க கோபம் கொந்தளிப்பை எல்லாம் அப்பறமா வச்சுக்கோங்க…” என அவனை அடக்கிவிட்டு முதல்நாள் நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.

மதிய உணவிற்கு வரமாட்டேன் என்று அதிரூபன் சொல்லியதால் தனக்கு மட்டும் சமைக்க பிடிக்காமல் சப்பாத்தியை மட்டும் போட்டு காலையில் வைத்த சப்பாத்தி குருமாவையே வைத்து சமாளித்துக்கொள்ளலாம் என்று தனக்கு மட்டும் சப்பாத்தியை தேய்க்க ஆரம்பித்தாள்.

திடீரென ரத்தினசாமி வந்து நிற்பார் என கனவிலும் காணாத துவாரகாவிற்கு நடுவீட்டில் யாருமற்ற நேரத்தில் அவர் முன்பு நிற்கவே அச்சமாக இருந்தது. கையில் இருந்த பூரிக்கட்டையை பற்றுகோலாய் அவள் பிடித்திருக்க தன் நடுக்கம் அவருக்கு தெரிந்துவிடாதபடி எச்சிலை கூட்டி விழுங்கி நின்றாள்.

“அதிபன் எங்க?…” பெரும் முறைப்புடன் முகத்தை சுளித்து கேட்க,

“அவர் இல்லை…” என்று ஒரு வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் அடுப்படிக்குள் செல்ல முயல,

“அம்மாவுக்கும், பொண்ணுக்கும் என் குடும்பத்து ஆம்பளைங்களை வளைச்சு போடறதுதான் பொழைப்பு போல. ச்சீ…” என கேவலமாய் பேச சென்றுகொண்டிருந்தவளின் கால்கள் செயலிழந்து போயின.

அசையாமல் அப்படியே நின்றவளுக்கு அழுகை வெடிக்கும் போல வந்தது. அதிலும் அகிலா தன்னை சொல்லிய ரத்தினசாமியின் மருமகள் என்னும் அடையாளம் இன்னமும் உள்ளுக்குள் குறுக செய்துகொண்டிருக்க ஏற்கனவே விரக்தியிலும் அகிலாவின் தவிர்ப்பிலும் புழுவாய் துடித்துக்கொண்டிருந்தவளுக்கு ரத்தினசாமியின் இந்த இளக்காரமான கேவலப்பேச்சு பேரும் பிரளயத்தை ஏற்படுத்தியதும்.

அழுகையை அடக்கிக்கொண்டு திரும்பினாள். ரத்தினசாமியை நேருக்கு நேராய் பார்க்க அவரின் வெறுப்பான பார்வை இவளுள் லேசான நடுக்கத்தை பிறப்பித்தது தான். ஆனால் அதையும் தாண்டிய கோபத்தில் சினந்து நின்றவள்,

“என்ன சொன்னீங்க?…” என அமைதியாய் கேட்க,

“ஏன் நான் சொன்னது அப்படியே தேன் பாய்ஞ்சது மாதிரியா இருந்துச்சு? இன்னொருக்க சொல்ல சொல்ற. எத்தனை தடவை வேணும்னாலும் சொல்லுவேன் நீயும் உன் அம்மாவும்…” என்று அவர் முடிக்கும் முன்னாலே கையில் இருந்த பூரிக்கட்டையை எறிந்திருந்தாள்.

கொஞ்சம் சுதாரிக்கா விட்டால் ரத்தினசாமியின் நெற்றியை கண்டிப்பாய் அது வெகுவாய் பதம் பார்த்திருக்கும். அத்தனை ஆக்ரோஷமாய் எறிந்தாள் துவாரகா.

“ஏய் சனியனே, உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? எவ்வளவு தைரியம் இருந்தா என் மேலையே கை நீட்டுவ? இரு இன்னைக்கு உன்னையும், உன் அம்மாவையும் மொத்தமா சோலியை முடிச்சு மேல அனுப்பிவைக்கிறேன்…”

துவாரகா எறிந்ததில் அவரின் ஈகோ சீண்டப்பட அதிரூபனை மறந்தார். அவள் தனது மருமகள் என்பதை மறந்தார். இருப்பது மகனின் வீடு என்பதையும் மறந்தார். அந்த நிமிடம் துவாரகாவை ஏதாவது செய்துவிடவேண்டும் என்கிற கோபம் மட்டுமே பிரதானமாய் அவருக்கு.

தன்னுடைய மொபைலை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுக்க முயன்றுகொண்டே,

“ஆத்தாளுக்கும் மவளுக்கும் துளிர்விட்டுப்போச்சுல. போனா போகுதேன்னு உசுரோட விட்டா என்னையே எதிர்ப்பியோ நீ. என் முன்னால நிக்ககூட அருகதை இல்லாத நாய் நீ…” என்று யாருக்கோ அழைக்க அங்கிருந்த பூஜாடியை தூக்கி மீண்டும் எறிந்துவிட்டாள் துவாரகா.

தன்னை வேண்டாம் என்று சொன்னாலும் இனியாவது தன் அம்மா நிம்மதியாக இருக்கட்டும் என நினைத்துக்கொண்டிருக்க அதற்கும் ரத்தினசாமி முடிவுக்கட்ட நினைத்ததால் மொத்த கோபமும் ஆங்காரமாய் உருவெடுத்து தன் ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி அவரை கீழே தள்ளிவிட்டாள்.

தூரமாய் போய் அவர் விழ அவரின் மொபைல் கீழே விழுந்துவிட ஆக்ரோஷம் கொண்டு அருகில் கிடந்த பூரிக்கட்டையால் அத்தனை முறை ஆத்திரம் தீருமட்டும் அடித்து நொறுக்கினாள்.

“ஏய் லூசு என்ன பன்ற?…” என இன்னும் சிலவார்தைகளால் திட்ட அதே பூரிக்கட்டையை ஓங்கிக்கொண்டு அவரை பார்த்தாள்.

“என்ன என்ன சொன்ன? எங்கம்மாவை இனி ஏதாவது ஒரு வார்த்தை பேசின, உன் மண்டையை பிளந்திருவேன். நாங்க என்னய்யா தப்பு பண்ணினோம் உனக்கு? எங்கம்மாவை பேச உனக்கு என்ன தகுதி இருக்கு?. இத்தனை பேசற நீ உன் புள்ளை முன்னால என்னை பேசிடுவியா? ஆம்பளைன்னா அப்பா பேசுய்யா…”

துவாரகா முன்னே செல்ல செல்ல ரத்தினசாமி பயந்துதான் போனார் இவளுக்கு எதுவோ ஆகிவிட்டது என. இங்கிருந்து முதலில் கிளம்பினால் போதும் என்று நினைத்து வாசலை பார்க்க அதற்கு வழியில்லாமல் துவாரகா தான் அவரை ஸ்டோர் ரூம் வரை கொண்டுவந்திருந்தாளே.

“இன்னைக்கு உன்னை ஒரு அடியாச்சும் அடிக்கலை நான் அகிலவேணி பொண்ணு இல்லடா…” என அடிக்க போக சட்டென அவளிடமிருந்து தப்பிக்க அந்த அறைக்குள் புகுந்துகொண்டார் ரத்தினசாமி.

உள்ளே அவர் சென்றதுமே வெளியில் பூட்டி சாவியை வைத்துக்கொண்டாள். அதிரூபன் வந்த பின்னால் அவனிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று.

அவ்வப்போது கதவை தட்டுவதும் கத்துவதுமாக அவர் இருக்க இருக்க அன்று தன் அம்மாவை காப்பாற்ற அவர் வீட்டு வாசலில் நின்றதும் போலீஸ் ஸ்டேஷனின் இருந்ததும் கண்முன் வந்து அவளின் காதை செவிடாக்கியது.

அவளுக்கு தெரியும் அந்த அறையில் படுக்க கூட எதுவும் இல்லை என.

குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் வாஷ்பெஷன் மட்டுமே இருந்தது. அதுவும் குட்டியாய் ஒரு பாத்ரூமோடு. அனைத்தும் தெரிந்தே கல்போல இருந்தாள்.

அவள் சொல்ல சொல்ல ஆத்திரமாத்திரமாய் வந்தது அதிரூபனுக்கு ரத்தினசாமியின் மேல்.

“நான் அன்னைக்கு அவ்வளவு சொல்லியும் நீங்க துவாவை என் மனைவியை இப்படி பேச உங்களுக்கு என்ன தைரியம் இருக்கனும்? அப்போ நீங்க செய்யறதை செய்வீங்க. நான் பேசாம இருப்பேன்னு நினைச்சுட்டீங்கள?…” அதிரூபன் கேட்டதும் பதறியவர்,

“அதிபா…” என்று வர,

“இவர் முன்னாடி பேசனும்னு தான் நான் வெய்ட் பண்ணேன். எத்தனையோ நாள் எங்கம்மாட்ட கூட கேட்காம இது எனக்குள்ள நானே பலதடவை கேட்டுக்கிட்டே ஒரு விஷயம் தான்…” என்ற துவாரகா,

“வளைச்சுப்போட்டோம்னு சொன்னீங்களே யார் யாரை வளைச்சு போட்டது? உங்க தங்கச்சி புருஷனை எங்கம்மா வளைச்சு போட்டாங்களா? இல்லை முறையா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி குடும்பம் குழந்தைன்னு ஆனா பின்னால இவரைத்தான் கட்டிப்பேன்னு பிடிவாதமா நின்னு எங்கம்மாவோட புருஷனை உங்க தங்கச்சி வளைச்சு போட்டாங்களா?…” என கேட்டேவிட,

“ஏய்…” என அடிக்க கை ஓங்கிவிட்டார் ரத்தினசாமி. அதிரூபனே ஆடிப்போனான் துவாரகாவின் பேச்சில்.

“எங்கம்மா பயந்து ஒன்னும் உங்களை விட்டு விலகி நிக்கலை. உங்களை எல்லாம் அசிங்கம்னு, சாக்கடைன்னு நினச்சி தான் விலகி போனாங்க. இது உங்களுக்கு பெருமையா?…”

“நானும் பயந்தேன் தான். எங்க உங்களால எங்கம்மாவுக்கு எதுவும் பிரச்சனை வந்திருமோன்னு, அவங்க உயிருக்கு ஆபத்து வந்திடுமோன்னு. ஆனா இன்னைக்கு இந்த சாக்கடை குடும்பத்தில நானும் வந்து விழுந்துட்டதால என்னையே வேண்டாம்னு போய்ட்டாங்க என்னோட அம்மா…”

சுருக்கென தைத்த முள்ளின் வேதனை உயிரில் பரவ அத்தனை வலியையும் கண்களில் தேக்கி அவளை பார்த்தான் அதிரூபன்.

“என்ன பண்ணிடுவீங்க? யாரை கேட்டாலும் நீங்க பண்ணின அசிங்கத்தை தான் காறி துப்புவாங்க. நான் ஒன்னும் தப்பா பேசலையே. உண்மையில் தப்பு பண்ணினது உங்க தங்கச்சி. இன்னொருத்தி புருஷன் மேல ஆசைப்பட்டது அவங்க தப்பு. அதை கேட்க உங்களுக்கு துப்பில்ல…”

“இங்க பாரும்மா என் தங்கச்சியை பேச உனக்கு எந்த உரிமையும் இல்ல…” என ரத்தினசாமி குதிக்க,

“அப்படித்தான் சொல்லுவேன். எங்கம்மா வாழ்க்கையை தட்டிபறிச்சவங்க உங்க தங்கச்சி…”

“இன்னைக்கு நான் உங்க பையன் மேல வச்ச அன்பை உங்க பையன் அவருக்கு சாதகமா பயன்படுத்தி என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டார். நானும் தான் சம்மதிச்சேன் இல்லைன்னு சொல்லலை. ஆனா நினைச்சதை அடைஞ்சுட்டார் இல்லையா? இப்போ இழந்துட்டு நிக்கிறது நான் தானே. அம்மாவை இழந்துட்டேன்…”

“அன்னைக்கு உங்க தங்கச்சி, இன்னைக்கு உங்க பிள்ளை. இதுல நாங்க எங்கிருந்து வந்தோம்? என்னை மருமகன்னு சொல்லிக்க உங்களுக்கு அசிங்கமா இருக்கா? இன்னொருத்தரோட புருஷனை தட்டிப்பறிச்சு ஊர்மெச்ச கல்யாணம் வேற செஞ்சுவச்சு குடித்தனம் வச்ச உங்களை என் புருஷனுக்கு அப்பான்னு சொல்ல நான் தான் அசிங்கப்படனும்…”

“திரும்பவும் என் தங்கச்சியை இழுக்காத. சொல்லிட்டேன். உன்னாலதான் இன்னைக்கு என்கிட்டே ஒருவார்த்தை கூட பேசாம இருக்கா. அதிபா…” என மகனை துணைக்கிழுக்க பார்க்க அவன் ஏற்கனவே வேரோடு சாய்ந்திருந்தான் துவாரகாவின் சாக்கடைக்குள் விழுந்துவிட்டேன் என்கிற உவமையில்.

“ஏன் இல்லாம? எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. சொல்லப்போனா எனக்குத்தான் இப்ப அதிக உரிமை. இல்லைன்னு உங்க பிள்ளையை சொல்ல சொல்லுங்க…” என துவாரகா சொல்ல,

“அப்படி சொல்லுடி என் தங்கக்குட்டி…” என கைதட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அஷ்மிதா.

“உன்னை இப்படி பார்க்கனும்னு தான் நான் ஆசைப்பட்டேன். ஏன் உன் புருஷனும் தான் ஆசைப்பட்டான். நீ கேட்கிறதுல எந்த தப்பும் இல்லை…” என துவாரகாவை அஷ்மிதா அணைத்துக்கொள்ள அமைதியாய் பார்த்திருந்தான் அதிரூபன்.

“டாக்டர், என்னால முடியலை. இன்னும் எத்தனை நாள் தவறே செய்யாம நாங்க ஓடிட்டே இருக்கிறது?…”

“கேட்கனும். இங்க எதுவுமே கேட்டா தான் கிடைக்கும். கேட்க இத்தனை நாள் இவங்க விடலை. இனி உனக்கு காவலா உன் புருஷன் இருப்பான். அவனை மீறி உன்னை யாரும் எதுவும் பண்ணிடமுடியாது…” அஷ்மிதா சொல்ல அதிரூபனை பார்த்தாள் துவாரகா.

“உண்மைதான் டாக்டர். இனி எனக்கு யாரை நினைச்சும் பயமில்லை. பயந்து பயந்து நாங்க ஒதுங்கினது போதும். எனக்கு மாமா இருக்காங்க. பார்த்துப்பாங்க…” என்றவள்,

“ஆனா அம்மா எனக்கு எப்பவும் இல்லைன்னு ஆகிட்டாங்கள்ள?…” என ஏக்கத்தோடு அவள் கேட்க அஷ்மிதா ஆறுதலாய் பார்க்க,

“இதை எப்பவோ கேட்டிருக்கனும் டாக்டர். எத்தனை நாள் என்னோட ரூம்க்குள்ள பைத்தியக்காரி மாதிரி நானே பேசிக்குவேன். எங்கம்மாவுக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கைன்னு? அவங்க என்ன தப்பு பண்ணினாங்க?. யார்ட்டையும் ஏன் என் அம்மாட்டையுமே கேட்க முடியாது…”

“நாங்க இருந்த ஊர்கள்ல கொஞ்சம் நாள் நல்லா பேச ட்ரை பண்ணுவாங்க. ஆனா அம்மா அதுக்கு அவ்வளவா இடம் குடுக்க மாட்டாங்க. அதையே எத்தனை தப்பா பேசுவாங்க தெரியுமா? அப்பா யாருன்னு என்கிட்டே கேட்டா கூட தெரிஞ்சும் நான் அவர் பேரை சொன்னதில்லை. எத்தனை கொடுமை?…”

“இதை நான் முன்னமே கேட்டிருந்தா எங்கம்மா எனக்கும் எல்லாம் சொல்லிகொடுத்து வளர்த்திருந்தா எத்தனை கஷ்டத்திலும் இவங்களை தேடி வந்திருக்க மாட்டேன். இவங்க என்ன என்னை விரட்டறது? நான் இவங்களை விரட்டியிருப்பேன். இது எதுவுமே தெரியாம தானே இன்னைக்கு இந்த இடத்தில நின்னுட்டு இருக்கேன்…”

துவாரகா இத்தனை பேசியும் அவளின் விழிகள் சிறிதும் கலங்கவில்லை. முகம்  அக்னி ஜுவாலையாய் தகித்தது. அவளின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் ரத்தினசாமியை சுட்டதோ இல்லையோ அதிரூபனை சுட்டது.

அவளின் வேதனைகள் ஒவ்வொன்றையும் இத்தனை நாள் அனுபவித்த வலியின் வெளிப்பாடு ஒவ்வொன்றையும் அவளின் மனக்குமுறல்களை கொட்டிக்கொண்டிருந்தாள் தான். ஆனால் அந்த நொடி அதிரூபன் என்ற ஒருவனை மறந்தே போனாள். தன் மீது காதலாகி குடும்பத்தை எதிர்த்து தன்னை நேசித்து தனக்கே அவர்களை விட்டு விலகி வந்தது என அனைத்தையும் மறந்தே போனாள்.

அவளின் கண்முன் ரத்தினசாமி மட்டுமே. அவரை சாகும்படி கேட்கவேண்டும் என்கிற நோக்கம் மட்டுமே அவளுக்கு. ஆனால் அதிரூபன்?

உன்னால் என் தாயிடம் பேசி அவரின் சம்மதத்துடன் என்னை திருமணம் செய்திருக்க முடியுமா என்கிற சவாலும், என் சூழ்நிலையை நீ பயன்படுத்திக்கொண்டே என்கிற குற்றசாட்டும் வெகுவாய் அவனை தாக்கியிருந்தது.

தொய்ந்துபோய் சோபாவில் அவன் முகம் மூடி அமர்ந்துவிட ரத்தினசாமி பதறி போனார்.

“அதிபா?…” என்று தோளில் கை வைக்க,

“நீங்க கிளம்புங்க…” என்று ஒற்றை சொல்லோடு எழுந்துகொண்டவன்,

“சுரேஷ்…” என உச்சஸ்தானியில் கத்தி ட்ரைவரை அழைத்து,

“அப்பாவை வீட்ல பத்திரமா கொண்டுபோய் விட்ருங்க…” என சொல்லிவிட்டு யாரையும் பார்க்காமல் வேகமாய் மாடி ஏறிவிட்டான்.

 

மின்னல் தெறிக்கும்…

Advertisement