Advertisement

மின்னல் – 13

                வைத்தியநாதனின் உள்ளத்தில் ரத்தம் தான் வடிந்தது. தன் ஆதரவின்றி தன் மகள் எத்தனை துன்பங்களை கடந்துவந்திருக்கின்றார்கள் என நினைத்து கலங்கிப்போய் பார்த்தார்.

சந்தியாவும் பத்மினியும் துவாரகாவை சமாதானம் செய்ய, அன்னபூரணி அழ, விஷால், சந்தோஷ், அர்னவ் கவலையாக அவர்களை பார்த்துக்கொண்டிருக்க, ரத்தினசாமியும், சங்கரனும் மௌனமாய் அமர்ந்திருக்க இப்படி குடும்பம் மொத்தமும் அமைதியில் கிடந்தது.

இதையெல்லாம் கண்டு எரிச்சலடைந்த ஸ்வேதா இப்படியே விடக்கூடாது என நினைத்து,

“இது எல்லாம் ஓவர் ஸீன். யாரும் நம்பி மயங்கிட மாட்டாங்க. இப்படி கண்ணீர் விட்டா உடனே ஏத்துக்கனுமா?…” என பேச,

“ஷட் அப் ஸ்வேதா…” என்றுமே கோபமாக பேசியிறாத அர்னவ் திட்டிவிட இதை எதிர்பார்க்காதவள்,

“போறேன்னு சொல்றவளை எதுக்கு நிப்பாட்டனும்? அப்படி இந்த வீட்ல பயமிருந்தா அப்படி ஏன் வாழனும்? செத்தா சாகட்டுமே…” என சொல்லிய நொடி அவளை அறைந்திருந்தார் அன்னபூரணி.

“அம்மா…” என கத்த,

“இன்னொரு வார்த்தை பேசின பெத்த பொண்ணுன்னு கூட பார்க்கமாட்டேன். ராஸ்கல் கொன்னே போட்டுடுவேன். அவளை சாக சொல்ல நீ யாருடி?. இது அவளோட வீடு. அவ இங்க தான் இருப்பா. இஷ்டம் இல்லைனா நீ போயேன்…”

அன்னபூரணி பேசியதை கண்டு சந்தோஷிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அர்னவ் அவளை முறைத்துவிட்டு வேறு புறம் திரும்பிக்கொள்ள ரத்தினசாமி தனக்கு ஆதரவுக்கு வருவாரா என பார்க்க அவரோ தலையில் கை வைத்து அமர்ந்தது அமர்ந்தபடி தான் இருந்தார்.

“எல்லாரும் பார்த்துட்டே இருக்கீங்க? எவளோ ஒருத்திக்காக என்னை அடிச்சுட்டீங்கள?…” என்ற அழுதுகொண்டே கேட்க,

“திரும்ப திரும்ப அவ இவன்னு மரியாதை இல்லாம பேசின பல்லை தட்டி கைல குடுத்திருவேன். நீன்னு இல்லை, இந்த வீட்ல யாராக இருந்தாலும் அவளுக்கான மரியாதைய குடுத்துதான் ஆகனும்…”

மீண்டும் அனைவரையும் பொதுவாய் பார்த்துக்கொண்டே சொல்ல அது அனைவருக்கும் தான் என்பது நன்றாகவே புரிந்தது. அவமானப்பட்டு இனியும் அங்கிருக்க முடியாமல் ஸ்வேதா கிளம்ப,

“எங்க போற? அதி எல்லார்ட்டையும் தான் பேசனும்னு சொல்லியிருக்கான். போய் உட்கார்…” என அவளை அரட்டிய அன்னபூரணி வைத்தியநாதன் அருகில் இருந்த சேரில் அமர்ந்துகொண்டார்.

ஸ்வேதாவை அடித்ததை பார்த்ததுமே மிரண்டுவிட்ட துவாரகா அதிபனை இறைஞ்சும் பார்வை பார்க்க,

“நத்திங்டா. சாப்பிடேன். வேண்டாம்னா சொல்லு நானே வேற ப்ரிப்பேர் பண்ணி தரேன். உனக்கு ஓகே வா?…” அவளிடம் மன்றாடவே ஆரம்பிக்க,

“பசிக்கலை. எனக்கு வேண்டாம். அம்மாவை பார்க்க கூட்டிட்டு போங்க மாமா. ப்ளீஸ். அதுக்கப்றம் நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன்…” அவனுக்குமேல் அவள் கெஞ்சினாள்.

சில நொடிகள் அவளின் முகத்தையே பார்த்திருந்தவன் கையிலிருந்த இட்லியை கீழே போட்டுவிட்டு அதிலேயே கை கழுவ,

“அச்சோ நீங்க ஏன் சாப்பிடலை? நீங்க சாப்பிடுங்க…” பதறிப்போய் அவனிடம் சொல்ல,

“நீயும் தான் நேத்து மதியத்திலிருந்து சாப்பிடவே இல்லை. நீயே வேண்டாம்னு சொல்லும் போது எனக்கு மட்டும் என்ன? வா…” என அவளை அழைக்க,

“இல்ல நீங்க முதல்ல சாப்பிடுங்க. நான் நான்…”

“நீயும் சாப்பிடுன்னு உன்னை கம்பல் பண்ண கூட என்னால முடியலை துவா…”

“நான் சாப்பிட்டா நீங்களும் சாப்பிடுவீங்க தானே. எனக்கு ம்ம்ம்…” அப்போதும் மேஜையில் இருந்த உணவுகளை பயத்துடன் பார்த்தபடியே தலையசைத்து  சொல்ல,

“நான் சாப்ட்டு பார்த்துட்டே உனக்கு ஊட்டறேன். பயப்படாதே…”

அவன் சொல்லியவாறு இட்லியை தான் ஒரு வாய் உண்டு அதன் பின் அவளுக்கு கொடுக்க இரண்டு இட்லிகள் கூட முழுதாய் அவள் உண்ணவில்லை. ஏனோ உண்ட உணவு தொண்டையில் முள்மாதிரி துறுத்திக்கொண்டு நிற்க அவஸ்தையில் தவித்தாள்.

அவனோடு சாப்பிட்டு எழுந்தவளுக்கு ஹாலை கடந்துதான் எங்கு வேண்டுமானாலும் செல்லமுடியும் என்கிற நினைப்பே நெஞ்சை தடதடக்க செய்ய,

“இங்க கொஞ்சம் பேசனும் துவா. பேசிட்டு போய்டலாம்…” என நடக்க வேகமாய் அவனோடு ஒட்டிக்கொண்டவள்,

“இல்லை, நான் மாட்டேன். போலாம். அம்மா பார்க்க. மாமா ப்ளீஸ்…” அவனின் கையை சுரண்டிக்கொண்டே சொல்ல அதை கேட்டாலும் அவனின் இழுப்புக்கு அவளை நகர்த்தினான்.

அவன் வந்ததும் சந்தோஷ் எழுந்துகொண்டு சோபாவில் அமர சொல்ல அதை மறுத்த அதிபன் அனைவரையும் பார்க்கும் விதமாய் அவர்களின் எதிர்புறம் இருந்த சோபாவில் அமர்ந்துகொண்டு துவாரகாவையும் அமர்த்தினான்.

யாரையும் ஏறிட்டு பார்க்காமல் அவள் அமர்ந்திருக்க வைத்தியநாதன் அவளையே ஆசையாக பார்ப்பதை கண்ட அதிபனுக்கு உள்ளுக்குள் கடுகடுத்துக்கொண்டு வந்தது.

ஆனாலும் பேசவேண்டுமே. கோபத்தை வெறுப்பை காண்பிக்க இது நேரமல்ல என உணர்ந்து தொண்டையை செருமிக்கொண்டவன்,

“இவங்க என் மனைவி துவாரகா. துவாரகா அகிலவேணி. இன்னைக்கு மிசஸ் துவாரகா அதிரூபன். உங்க எல்லோருக்கும் அறிமுகப்படுத்தவும், சில விஷயங்களை தெளிவுபடுத்தவும் தான் உங்க எல்லோரையும் பேச கூப்பிட்டேன்…” என்றவன்,

“துவா, இவர் என்னோட அப்பா உனக்கு மாமா. இவர் சித்தப்பா…” என ஒவ்வொருத்தரையும் உறவுமுறை சொல்லி அறிமுகப்படுத்த குனிந்த தலை நிமிராமல் யாரையும் பார்க்க பிடிக்காமல் அமர்ந்திருக்க,

“துவா என் மனைவியா நீ எப்படி இருந்தாலும் நான் ஏத்துப்பேன். ஆனா…” என சொல்லி அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“இந்த வீட்ல என் மனைவியா மட்டுமில்லை. அகிலவேணி மகளாவும் தான் இருக்கனும். முதல்ல முகத்து நேர நிமிர்ந்து நின்னு பாரு…”என சொல்ல,

“அம்மா இப்படியெல்லாம் சொன்னதில்லை மாமா. இவங்க எதிரே வந்தா கூட கண்டுக்காம போய்டனும்னு சொல்லிடுவாங்க…” சின்னகுரலில் அவனிடம் விளக்க,

“அது நீ அகிலவேணி பொண்ணா இருந்தப்ப. இப்ப இந்த வீட்ல உனக்கான உரிமையை மரியாதையை நீ விட்டுத்தர கூடாது. ஏன் உன் அம்மாவே இதைவிரும்ப மாட்டாங்க. நிமிர்ந்து பார் துவா. இங்க யாரும் உன்னை எதுவும் பண்ணிட முடியாது…” என்றவன் அன்னபூரணியை பார்த்தான்.

அவரும் அவனை மிக திடமாகவே எதிர்கொண்டார். என்ன சொன்னாலும் தாங்கிக்கொள்ள வேணும். என் அண்ணன் மகன். என் மகள். என் பிள்ளைகள் இவர்கள் என்ற எண்ணம் வந்தமர்ந்துக்கொள்ள அவனை புன்னகை முகமாகவே ஏறிட்டார்.

“துவா இந்த வீட்ல முக்கியமான ஒருத்தரை இன்டர்டியூஸ் பன்றேன். இவங்க என் அப்பாவோட தங்கச்சி. அவங்க கணவர். அதாவது எனக்கு அத்தை, மாமா. உனக்கு…” என்றவன்,

“சித்தி, சித்தப்பா. அப்படித்தான் கூப்பிடனும்…” என சொல்ல இதை எதிர்பார்த்தேன் என்பதை போல முகம் மாறாமல் அன்னபூரணி இருக்க இன்று அப்படி இத்தோடு அதிபன் விடப்போவதில்லை என்பதை அறியாமல் போனார்.

வைத்தியநாதனின் முகத்தை மெதுவாய் நிமிர்ந்து பார்த்த துவாரகா, ‘நான் உனக்கு வெறும் சித்தப்பா தானா?’ என ஏக்கம் மிகுந்த விழிகளோடு கேட்பதை போல தோன்ற,

“மாமா…” என அதிபனை பார்க்க,

“மாமா இல்லைடா. சித்தப்பா. எனக்குத்தான் அவர் மாமா. நீ அப்படித்தான் கூப்பிடனும்…” அதில் கட்டளை நிரம்பி இருக்க துவாரகாவிற்கும் பெரிதாய் அவரை அப்பா என கூப்பிட மனமில்லை தான். அமைதியாகிப்போனாள்.

அடுத்து தன் தம்பிகளின் புறம் திரும்ப துவாரகாவிற்கு தெரிந்தது இனி அவர்களை சொல்ல போகிறான் என்று.

“இவன், விஷால், அர்னவ், சந்தோஷ். என்னோட ப்ரதர்ஸ். எனக்காக என்னவேணும்னாலும் செய்வாங்க. அவ்வளோ பாசம்…” குத்தலாய் சொல்லி,

“விஷால், இவங்க யார்ன்னு சொல்லு…” அவனை நேரடியாக கேட்டுவிட்டான்.

தன் அண்ணன் தன்னிடம் ச்நேருக்கு நேர் பேசிவிட்டாலும் அவன் கேட்டதை மனமுவந்து சொல்லிவிட கூசியவனாய் தலைகுனிந்து அமர்ந்திருந்தான் விஷால்.

“அர்னவ் நீ சொல்லு…” என்க,

“அண்ணா ப்ளீஸ்…” அவன் மன்னிப்பை வேண்டும் குரலில் கேட்க,

“இதுவரை எப்படின்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா இனியும் நீங்க அப்படி இருக்க நான் அனுமதிக்க முடியாது. உங்க அண்ணியை இனி பாதுக்காக்கவேண்டிய பொறுப்பை உங்கள்ட்டையே நான் ஒப்படைக்கிறேன். இனி அவ மேல ஒரு தூசி படகூடாது. ஏனா அவளோட உயிருக்கு பாதுகாப்பில்லை…”

“கண்டிப்பா இருப்போம் அண்ணா. துவாரகா அக்காவை நாங்க பார்த்துப்போம்…” சந்தோஷ் உடனடியாக தன் எண்ணத்தை சொல்லிவிட அவனை உட்கார சொல்லியவன்,

“சொல்லுங்க தம்பிகளே. உங்க அண்ணனுடைய மனைவியை, உங்க அண்ணியை, உங்க அம்மாவிற்கு சமமான இன்னொரு தாயை நீங்க பார்த்துப்பேங்களா? இல்லை நான் வேற செக்யூரிட்டி காட்ஸ் ஏற்பாடு செய்யனுமா?…”

அதிரூபன் இன்றைக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஏதோ வைத்திருக்கிறான் என்று புரிந்து போனது.

“சொல்லு விஷால். நான் கேட்டதுக்கு கூட சார்க்கு பதில் சொல்ல கஷ்டமா இருக்கா? கேட்டிருக்க கூடாதோ?…” மேவாயை தடவியபடி கேட்க பதறி போனான் விஷால்.

“அப்படியெல்லாம் இல்லைங்க அண்ணா. கண்டிப்பா பார்த்துப்போம். எங்களை நீங்க நம்பலாம்…”

“யாரை பார்த்துப்பீங்க?…” அவனும் விடுவதாய் இல்லை.

சொல்ல தயங்கிய விஷால் துவாரகாவையும் பத்மினியையும் ஒரு பார்வை பார்த்தவன் கண்களை ஒருநொடி மூட துவாரகாவை அடித்து துன்புறுத்தியதும் அவளை கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டு திட்டியதுமே கண்முன்னால் வர கண்ணீர் பெருக்கெடுத்தது.

“வாழ்க்கைல நம்பிக்கைன்றது ஒருத்தர் மேல ஒருதடவை தான் வரும். அந்த நம்பிக்கை பொய்யாய் போய்டுச்சுனா அடுத்து என்னைக்கும் அவங்களை நம்ப மனசு வராது. உங்க மேல வச்சிருந்த என்னோட நம்பிக்கையும் கொஞ்சநாள் முன்னாடி செத்துப்போச்சு…”

குரல்கம்ம யாரையும் பார்க்காமல் வெறுமையாக சொல்லியவனை காணவே அத்தனை வேதனையாய் போனது தம்பிகளுக்கு. பத்மினிக்கு எதுவும் புரியவில்லை.

ஆண்களுக்கு தெரிந்த விஷயம் அந்த வீட்டு பெண்களுக்கு இதுவரை தெரியாமலே இருந்தது. துவாரகாவை கடத்தியது மட்டுமல்ல துவாரகா ஒரு நாள் முழுவதும் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் காத்திருந்ததும் தான்.

நொடியில் தன்னை சரிசெய்துகொண்ட அதிரூபன் மீண்டும் பேச தொடங்கினான்.

“நம்பவேண்டாம்னு ஒரு மனது சொன்னாலும் என் தம்பிங்கன்ற பாசம் திரும்பவும் உங்க மேல நம்பிக்கை வைக்க சொல்லுது. இந்த நம்பிக்கையாவது காப்பாற்றுவீங்களா? ஏனா இன்னொரு முறை உங்களோட பிரதாபங்களை கண்டும் காணாமல் கடந்து போக என்னால முடியாது…”

“அதி என்ன நடந்துச்சுன்னு சொல்லுப்பா. எங்களுக்கு ஒன்னுமே புரியலை. பசங்க என்ன பண்ணினாங்க நீ இவ்வளவு வேதனைப்பட்டு பேசற?…”

பத்மினி கேட்க சந்தியாவும் ஏதாவது சொல்வானா என பார்க்க சந்தோஷிற்கு படபடப்பாய்போனது அன்னபூரணியை நினைத்து.

மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம். ஆனாலும் அதை பற்றி இன்றளவும் அன்னபூரணியிடம் சொல்லவே இல்லை. அதுவே அவனின் இதயத்தை அறுத்துப்போட்டது.

“சொல்றேன்மா. முதல்ல நான் பேசி முடிச்சிடறேன். ப்ளீஸ்…” என்றவன் விஷாலை பார்க்க அவனோ இந்த நம்பிக்கையையாவது  எப்படியும் உயிரை கொடுத்தேனும் காப்பாற்றவேண்டும் என முடிவு செய்தவனாக,

“கண்டிப்பா அண்ணா. எங்களோட அண்ணியை நாங்க பார்த்துப்போம். நீங்க எங்களை நம்பலாம்….”

இறுக்கமான குரலில் ரத்தினசாமியை பார்த்துக்கொண்டே ஸ்திரமாய் சொல்ல அவனின் குரலில் இருந்த இறுக்கம் துவாரகாவை இன்னும் பயப்படுத்தியது.

“மாமா அவங்க கோவப்பட்டுட்டாங்க. வாங்க போய்டலாம்…” சிறுபிள்ளை போல அஞ்சி நடுங்கியபடி சொல்லியது அங்கிருந்த அனைவரின் காதுகளிலும் விழுந்தது. இதற்கெல்லாம் தாங்கள் தானே காரணம் என நினைத்து,

“ஸாரி அண்ணி…” மனதிற்குள் மன்னிப்பை வேண்டிகொண்டனர் விஷாலும், அர்னவும்.

இந்த நிமிடம் முதல் துவாரகா அதிபனின் மனைவியாய் அவர்கள் மனதில் பதிந்தாள். இனி இவர் எங்களின் அண்ணி. அண்ணனின் மறுபாதி.

இத்தனை வருடம் வைத்து வளர்த்த பகைமையை திரும்ப கிடைக்காமல் போய்விடுமோ என்று ஏங்கிய அண்ணனின் அன்பும் நம்பிக்கையும் அடியோடு எரித்து சாம்பலாக்கியது.

“அர்னவ்…”

“விஷால் சொன்னது தான் அண்ணா. அண்ணி இனி எங்களோட பொறுப்பு. இந்த குடும்பத்தில ஒருத்தரா அவரை நீங்க மாத்தற முயற்சில எங்களால முடிஞ்சதை நாங்க செய்வோம்…” அவனும் கூற ரத்தினசாமியும் சங்கரனும் கோபமாய் பார்த்தனர்.

“பார்க்கலாம். பார்க்கத்தானே போறேன்…” என்றவன்,

“ஓகே அறிமுகப்படலம் முடிஞ்சது. இனி சில விளக்கங்கள் சொல்லலாம்னு இருக்கேன்….” என்றவன் பத்மினியை பார்த்து,

“அம்மா இங்க வாங்க…” என அழைத்து தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டான்.

“இவ்வளவு நேரம் நான் பேசினது துவாரகாவை என்னால பார்த்துக்க முடியாதுன்னு இல்லை. ஆனா எந்த நேரமும் நான் மட்டுமே அவளை பார்க்கமுடியாதில்லையா. ஐ மீன். நான் அவுட் ஆஃப் ஸ்டேஷன் போகலாம். அபிஷியல் ட்ரிப் போகலாம். பொ இந்த வீட்ல அவளோட பாதுகாப்பை நான் உறுதி செய்யனும் இல்லையா?…”

“எனக்கு தெரியும் துவாவை நான் மேரேஜ் பண்ணிக்கிட்டது இந்த வீட்ல இன்னும் சிலருக்கு பிடித்தம் இல்லைன்னு…”

“பழைய பகையை மனசுல வச்சு இவளை என்கிட்டே இருந்து பிரிச்சிடலாம். எனக்கு வேற பொண்ணை பார்த்து கல்யாணம் செஞ்சி வச்சிடலாம்னு கனவு எதுவும் கண்டுட்டு இருந்தா நீங்களே கலைச்சிடறது பெட்டர்…” இது ரத்தினசாமிக்கும், சங்கரனுக்குமே.

“என்னை பொருத்தவரை ஒருத்தனுக்கு ஒருத்தி. எனக்கான ஒருத்தி இவ தான். என்னால எல்லாம் ரெண்டு பொண்டாட்டி ஆசாமியா வாழ முடியாது. அப்படிப்பட்ட கேவலமான வாழ்க்கை எனக்கு தேவை இல்லை. காதலிச்சது ஒருத்திய, கல்யாணம் பண்ணிக்கறது வேற பெண்ணை. அதையும் எந்த உறுத்தலும் இல்லாம வாழ நான் ஆள் கிடையாது…”

அன்னபூரணிக்கு கண்ணீர் கரகரவென வழிய ஆரம்பித்தது. பேசுவான் என்று தெரியும். அனால் இப்படிப்பட்ட விஷம் தோய்ந்த அம்புகளை கொண்டு தாக்குவான் என எதிர்பாக்கவில்லை. வைத்தியநாதன் நிமிரவே இல்லை.

“அதிபா, என்ன பேச்சு பேசிட்டு இருக்க? யாரை என்ன பேசனும்னு தெரியாம பேசற. நல்லா இல்லை சொல்லிட்டேன். இவளால தான இப்படி குடும்பத்து மனுஷங்களை வாய்க்கு வந்தபடி பேசற. இவளே இல்லாம போய்ட்டா…”

“கண்டிப்பா செத்துற மாட்டேன்ப்பா…” கொஞ்சமும் சளைக்காமல் கூற,

“அதிபா…” என பத்மினியும் ரத்தினசாமியும் பதறினார்.

“சாக மாட்டேன்னு தானே சொன்னேன். சாவுன்ற வெறும் வார்த்தை, பெத்த பிள்ளைன்னதும் பதறுதோ? நான் வாழ்வேன். ஆனா இவளை தவிர என் வாழ்க்கைல இன்னொருத்தி வரவிடமாட்டேன். இவளை இல்லாம பண்ணினா அதுக்கு காரணமான உங்களையும் நிம்மதியா இருக்க விடமாட்டேன்…”

“செத்தவளை இன்னும் காதலிக்கிறேன்னு சொல்லிட்டு கட்டிக்கிட்டவளோட கமுக்கமா வாழற வாழ்க்கை என்னை பொறுத்தவரை ரொம்ப ரொம்ப…” என சொல்ல வந்தவன் உதட்டை கடித்துக்கொண்டு வார்த்தைகளை அடக்கினான்.

“இவ செத்தாலும் சரி, என்னை விட்டு பிரிஞ்சாலும் சரி. என் நினைப்புல இவ மட்டும் தான் என்னைக்கும் இருப்பா. நான் மட்டும் இல்லை. இவ கூடத்தான். இதை என்னால உறுதியா சொல்ல முடியும். பெத்தவங்க நீங்க சொல்றீங்க காதலிச்ச பொண்ணை நட்டாத்துல விட்டுட்டு வந்திருவேனா?…”

“இல்லை உயிருக்குயிரா காதலிச்சு கஷ்டப்பட்டு கல்யாணம் செஞ்சு கூட்டிட்டு வந்தவளை அவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு போக விடுவேனா?. அந்தளவுக்கு இந்த அதிபன் ஈனா வானா கிடையாதுப்பா…”

“இதுவரைக்கும் நீங்க செஞ்சதுக்கெல்லாம் தண்டனை கிடைக்காம இருக்கலாம். ஆனா இனியும் அப்படி இருக்க முடியாது. இதுவரை நீங்க செஞ்ச பாவங்களை கண்டும் காணாம போனதுக்கு காரணம் வேற…”

“நீங்க செஞ்சதுக்கு எல்லாம் மறுப்பு தெரிவிக்காம போனது துவாரகா தான் காரணம். என் மனசுல துவாரகா இருக்கிறதை நீங்க தெரிஞ்சு அவளுக்கும்,அகிலா அத்தைக்கும் உங்களால ஆபத்து வந்திடுமோன்னு பயந்தேன். இவ என் மனைவியா என் வாழ்க்கைல வரனும். அதுக்காக தான் பொறுமையா போனேன்…”

“போனேன்னா உங்க பார்வைக்கு அப்படி போனேன். ஆனா நான் தலையெடுத்த பின்னால என்னாலான உதவியை செய்ய நினைச்சேன். இவங்க தான் என்க இருக்காங்கன்னே தெரியலை. எனக்கு இவங்க இருக்கிற இடம் தெரிஞ்சா அது அவங்களுக்கு எப்படியோ தெரிஞ்சு ஓர் ஊரா மாறிட்டே இருந்தாங்க…”

இவன் தனக்காக இத்தனை மெனக்கெட்டிருக்கிறானா என ஆச்சர்யப்பட்டுப்போய் துவாரகா பார்க்க மற்றவர்களோ எத்தனை தூரம் தங்களிடம் தன் மனம் வெளிப்பட்டுவிடாமல் இருக்க பாடுபட்டிருக்கிறான் என பார்த்தனர்.

“இப்படி அவங்க ஓட்டம் பார்க்க பிடிக்காம தான் அத்தைக்கு தெரியாமலேயே அவங்களுக்கு ஆஸ்திரேலியால ஒரு ஜாப்க்கு ஏற்பாடு செஞ்சிருந்தேன். போகவிட்டீங்களா நீங்க?…” என கூர்மையாக கேட்க ரத்தினசாமிக்குள் எரிமலை குழம்பே வெடித்து சிதறியது.

“அதிபா?…” எழுந்தேவிட்டார்.

“எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சீங்களாப்பா? இந்தளவுக்கா நீங்க இறங்கி போவீங்க? உங்களை நினைச்சு வெட்கப்பட்ட நாள் அது. ஆனா என் துரதிஷ்டமோ உங்க அதிர்ஷ்டமோ இது எனக்கு அன்னைக்கே தெரியாம போச்சு…”

தங்களை ஆஸ்திரேலியா அனுப்ப ஏற்பாடு செய்தது அதிபனா என அழுகையுடன் பார்த்தாள் துவாரகா.

“ஏன் மாமா இப்படி பண்ணுனீங்க? நீங்க மட்டும் இந்த ஏற்பாட்டை பண்ணாம இருந்தா நாங்க, நான். அய்யோ…” என அவனின் சட்டையை கொத்தாக பற்றி கேள்வி கேட்டு அழ,

“அப்படியெல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கலைடா துவா. ஸாரி. ஸாரிடா…” என எத்தனை சமாதானம் செய்தும் அவள் அவனை விடவே இல்லை.

“எப்படி பார்த்தாங்க தெரியுமா? என்னால அந்த இடத்தை விட்டு எழுந்துக்கவே முடியலை. அந்த இடமே ரத்தம். ராத்திரி முழுக்க எத்தனை கேவலமா இருந்ததுன்னு தெரியுமா?…” என வெடித்து சிதற இது விஷாலுக்குமே தெரியாத ஓன்று.

தன் பெரியப்பாவையும் துவாரகாவையும் அவளை ஆசுவாசப்படுத்த முயலும் அண்ணனையும் பார்த்தவனுக்கு துவாரகாவின் துடிப்பும், தவிப்பும் அத்தனை வலியாக இருந்தது.

சந்தோஷ் சொல்லியது போல ரத்தினசாமியின் எதிரியாக, அகிலாவின் மகளாக பார்த்தோமே தவிர அப்பாவி பெண்ணாக பார்க்காமல் போய்விட்டோமே? என வருந்தினான். அவளின் அழுகை ஓயும் போல தெரியவில்லை.

“துவா ப்ளீஸ். ஸ்டாப் இட்…” என அதட்ட வாயை கையால் மூடிகொண்டவள் கண்களில் அத்தனை ஏமாற்றமும் வலியும்.

“சொல்லுங்கப்பா. ஏன் அப்படி செஞ்சீங்க? உங்கட்ட இருந்து நிம்மதியா இந்த நாட்டை விட்டே போய்ருப்பாங்க. எதுக்காக அகிலா அத்தையை போலியா அரஸ்ட் பண்ண வச்சீங்க? லாக்கப்ல யாரையும் கான்டேக்ட் பண்ண விடாம சாப்பாடு தண்ணி குடுக்காம பெத்த பொண்ண அதுவும் பதினைஞ்சே வயசு வந்த பொண்ண பார்க்கவிடாம விரட்டியடிக்க வச்சீங்க?…”

“பொண்ணுக்கு என்னாச்சோன்னு தவிச்சு அவளை பார்க்கனும்னு சொன்னவங்களை பார்க்கவிடாம பண்ணினீங்க. பயத்துல என்க போறதுன்னு தெரியாம உதவி கேட்டு இங்க இந்த வீட்டுக்கு உங்க தங்கச்சி புருஷனை பார்க்க வந்த பொண்ணை அடிச்சு விரட்டியிருக்கீங்க…”

“உங்களுக்கு தெரியுமா? ராத்திரி பூரா ஸ்டேஷன் கதவு பக்கத்திலயே உட்கார்ந்திருந்த பொண்ணு மாதவிலக்காகி அதை யார்ட்ட சொல்லன்னு தெரியாம பயத்துல அப்படியே உறைஞ்சு போய் இருந்திருக்கா. இந்த நிலமைல அந்த இடத்துல நம்ம ஸ்வேதா இருந்தா நீங்க என்ன பண்ணியிருப்பீங்க அப்பா? நீங்கல்லாம் மனுஷனா? ச்சை. உங்களை அப்பான்னு சொல்லிக்க அன்னைக்கு அசிங்கப்பட்டேன். ஒரு தாயா அகிலா அத்தை எவ்வளவு வேதனையை அனுபவிச்சி இருப்பாங்க…”

அவன் சொல்ல சொல்ல அன்னபூரணிக்கு மயக்கமே வரும் போல ஆனது. தன் அண்ணனா இப்படி என்று பேச நாக்கு எழாமல் கல்லாய் சமைந்துபோனார்.

“ஐயோ என் பொண்ணு இப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறா? இது கூட எனக்கு தெரியாம போச்சே…” என வைத்தியநாதன் தலையில் அடித்துக்கொண்டு அழ,

“வாயை மூடுங்க மிஸ்டர். பொண்ணு மண்ணுன்னு ஏதாவது பேசினீங்க இப்ப நான் மனுஷனா இருக்க மாட்டேன். காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்ட பொண்ணை நட்டாத்தில விட்டுட்டு வீட்ல உள்ளவங்க பேச்சை கேட்டு இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கிட்ட உங்களுக்கெல்லாம் இவளை சொந்தம் கொண்டாடற அருகதை இல்லை…”

அதிபனின் ஆக்ரோஷத்தில் மௌனமாய் கண்ணீர் வடித்த வைத்தியநாதன் ரத்தினசாமியை கோபமாய் முறைத்தார்.

“அதிபா அது பயம்காட்ட த்தான். அவ உன் மாமாவை பார்க்கத்தான் சென்னை வந்திருக்கான்னு நினைச்சு. மறுநாளே ரிலீஸ் பண்ண வச்சுட்டேன். ஆனாலும் ஸ்டேஷன்ல இந்த பொண்ணுக்கிட்ட, அவ அம்மாக்கிட்ட தப்பா நடந்துக்க கூடாதுன்னு சொல்லித்தான்…”

“அடச்சீ, நிறுத்துங்க. ஸ்டேஷன்ல தூக்கி வைப்பாராம். சொட்டு தண்ணி குடுக்கமாட்டாராம். உதவின்னு கேட்டு வந்த பொண்ணை உன் அம்மாவை கண்காணாத தேசத்துல வித்துடுவேன், கொன்னுடுவேன்னு சின்ன பொண்ணுட்ட மிரட்டுவாராம். ஆனாலும் பாதுகாப்பா வச்சிருந்தாராம்…”

“இதுக்கு அவங்களை அந்த நிமிஷமே கொன்னு போட்டிருக்கலாமே? இன்னைக்கு வரை இந்த நரகத்தை அனுபவிக்காம போய்ருப்பாங்களே. வயசு வந்த பொண்ணு தன்னோட பீரியட்ஸ் டைம்ல எப்படி இருக்கனும். அதுவும் ரொம்ப சின்ன பொண்ணு. பசில சாப்பிடாம தண்ணி கூட குடிக்காம எத்தனை நரகம் அது…”

“நீங்க அனுபவிப்பீங்களா அந்த சித்ரவதையை?…”

“இல்லை உங்க வீட்டு பொண்ணை  அனுபவிக்க விடுவீங்களா? இந்த ஸ்வேதா லேசா தலைவலினாலே எப்படி துடிச்சு போய்டறீங்க? விடியற்காலையில லாக்கப்ல இருந்து பொண்ணை பார்க்க பதறி வர அம்மா கதவோரதுல உடம்பை குறுக்கி அந்த நேரத்து வலியில, அரைமயக்கத்துல தன் பொண்ணை தூக்கும் போது அவள் இருந்த இடம், அவளோட ட்ரெஸ் எல்லாம். ச்சே எத்தனை வலி?…”

தன் மகன் அழுது இதுநாள் வரை பார்த்திராத ரத்தினசாமி இன்று பார்த்தார். அதிபனின் கண்களில் கண்ணீர். குடும்பமே இதை கேட்டு ஸ்தம்பித்து நின்றது.

அதுவரை பேசிக்கொண்டிருந்தவன் தோளில் தொய்ந்து போய் மயங்கி விழுந்தாள் துவாரகா.

“துவா, துவா, இங்க பாருடா…” என அவளை எழுப்ப வேகமாய் அவளை மடிதாங்கிக்கொண்டனர் சந்தியாவும், பத்மினியும் அழுதபடி.

“சொல்லு ஸ்வேதா? இத்தனை அரக்கத்தனம் பண்ணினவங்க வீட்ல எப்படி என் மனைவி பயமில்லாம இயல்பா இருப்பான்னு சொல்ற? நீ இருப்பியாம்மா? நினைச்சுப்பாரு. உன்னை விட துவாக்கு பெருசா வயசுவித்தியாசம் இல்லை. ஆனா அவ வயசுக்கு எதையெல்லாம் அனுபவிக்க கூடாதோ அத்தனையையும் அனுபவிச்சுட்டா…”

“இதெல்லாம் ஏன்னு தெரியுமா? அப்பான்னு ஒருத்தர் சரியில்லாததால. பொண்ணுக்கு தகப்பனோட அரவணைப்பு, பாதுகாப்பு ரொம்பவே முக்கியம். அது துவாக்கு இல்லை. அதனால உண்டானது இதெல்லாம். சொல்லு ஸ்வேதா, நான் எது தப்பா கேட்டுட்டேனா?…” குரல் தழுதழுக்க கேட்க,

“என்னை மன்னிச்சிடுங்க அண்ணா. ஸாரி. ஸாரி. எனக்கு இது எதுவுமே தெரியாது. அண்ணியோட அம்மாவை தப்பா தான் கேள்விப்பட்டிருக்கேன் மாமா மூலமா. அந்த வெறுப்பு இவங்க மேலையும். ஸாரி அண்ணா….”  என ஒடி வந்து அவன் தோளில் சாய்ந்து அழ அவளை ஆறுதல் படுத்தினான்.

“ஸாரி அண்ணா. இது எங்களுக்கும் தெரியாது. இனி நாங்க பார்த்துப்போம்…” அர்னவ் சொல்ல விஷாலும் தலையாட்டினான்.

“அடேங்கப்பா, நேத்து வரை ஸார்ங்க இதே மாதிரி தானே இருந்தீங்க? இன்னைக்கு என்னவாம்?…” எள்ளலாய் அதிபன் கேட்க,

“நேத்து நேத்தோட முடிஞ்சு போச்சு அண்ணா. நாங்களும் ஒன்னும் கெட்டவங்க கிடையாது. அண்ணி விஷயத்துல தான் இப்படி. இனியும் அப்படி இருக்க மாட்டோம் அண்ணா. வேற யார்க்கிட்டயும் இப்படி நடந்துக்கிட்டதும் இல்லை. நம்ம குடும்பத்தில் எங்களை அப்படி வளர்க்கவும் இல்லை…” விஷால் சொல்ல வாய்விட்டு சிரித்த அதிபன் கைகளை தட்டிக்கொண்டே,

“வரேவாவ். இந்த வளர்ப்பு துவர்ப்பு உவர்ப்பு எல்லாம் பத்துநாளைக்கு முன்னால என்க போச்சுங்க மிஸ்டர் ப்ரதர்ஸ்? யாருக்காச்சும் தானமா குடுத்துட்டீங்களா? இல்லை அன்னைக்கு மட்டும் உங்களை வேற யாராவது வளர்த்தாங்களா?…”

“அண்ணா?…” நடுங்கினான் விஷால்.

“அடி செருப்பால. ராஸ்கல். நான் கேட்கலைனா கேட்காமலே விட்டுடுவேன்னு நினைச்சியா? அகிலாத்தை ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு என்ன பண்ணன்னு தெரியாம வேற வழி இல்லாம என்னை பார்க்க வந்த பொண்ணை குடிக்கிற தண்ணில எதையோ கலந்து குடுத்து இங்க இருந்து பெங்களூர் கடத்திட்டு போனதுக்கு பேர் இந்த குடும்பத்து வளர்ப்பா?…”

“அவளை அடிச்சு உதைச்சு காயப்படுத்தி தப்பான இடத்துல வித்துடுவோம்னு சொன்னதுதான் உங்க வளர்ப்பா? சொல்லுங்கடா? அவளை எப்படி பார்த்தேன் தெரியுமாடா? என்னை பார்த்ததும் எவ்வளவு பயந்தா தெரியுமா? அடிக்காதீங்கன்னு போய்டறேன்னு சொல்லி சொல்லி அலறுனாடா…” என்றவன் பத்மினியிடம் திரும்பி மண்டியிட்டு அமர்ந்து,

“இவ நிம்மதியா தூங்க கூட இல்லைம்மா. தூக்கத்துல கூட விஷால், அர்னவ்ன்னு அலறி துடிச்சு எழுந்துடுவா. நானும் அஷ்மியும் இவளை காப்பாத்த எத்தனை போராடினோம் தெரியுமா?…” என்றவன் விஷாலிடம் திரும்பி,

“உன்கிட்ட ஏன் இத்தனை நாள் கேட்கலைன்னு நினைக்கிற இல்லையா? அதுவும் இவளுக்காக தான்டா. நான் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிட்டா இந்த விஷயம் இந்த பெரியமனுஷனுக்கு போகும். அதுவும் நான் தான் காப்பாத்தினேன்னு தெரிஞ்சா இவளை இந்நேரம் கொன்னு புதைச்சிருக்க மாட்டீங்க எல்லாரும் சேர்ந்து…”

“இல்லைண்ணா இவங்க மாமாவை பார்க்க வந்ததா தான் சொன்னாங்க. அதான்…” என சொல்லிய நொடி விஷாலின் டிஷர்ட்டை கொத்தாக பிடித்துவிட்டான்.

“சொன்னா? சொன்னா என்னடா தப்பு? அவ அப்பாவை பார்க்கனும்னு சொன்னா உடனே கடத்திடுவியோ? அவளோட அப்பாவை தான அப்பான்னு சொல்றா? இல்லைன்னு இந்த ஆள் சொல்லிடுவாரா? என்க என்முன்னால சொல்ல சொல்லு பார்ப்போம்…”

“அதி…” வைத்தியநாதன் அலற,

“மூச். உங்களுக்கு துவா விஷயத்துல பேச தகுதியே இல்லை. இத்தனை நான் நான் ஒன்னும் உங்களுக்கு மரியாதை குடுத்து அமைதியா போகலை. உங்கட்ட பேசி என் மரியாதையை குறைச்சிட கூடாதேன்னு தான் ஒதுங்கி போனேன். பேச வச்சிடாதீங்க என்னை…” என சொல்லி விஷாலை பார்த்தவன்,

“ஹ்ம்ம் சொல்லு, அப்ப அவ தேடி வந்தா இப்படித்தான் பண்ணுவ. இல்லையா?. இதுல ஒன்னு சந்தோஷம்டா. அடிச்சு காயப்படுத்தினதோட விட்டீங்க. இல்லைனா இந்நேரம் அவ உயிரை விட்டிருப்பா. என்னையும் நீங்க இழந்திருப்பீங்க…”

“அண்ணா நான் அப்படிப்பட்டவன் இல்லைண்ணா, ப்ளீஸ். அந்தம்மா மேல இருந்து கோபம். இவங்கட்ட மட்டும் தான் நான் இவ்வளவு மோசமா நடந்துட்டேன். மன்னிச்சிடுங்க அண்ணா…” என கதறிக்கொண்டு அதிபனின் காலில் வீழ்ந்துவிட்டான் விஷால்.

“பால்ல ஒரு துளி விஷம் கலந்தாலும் மொத்தமும் விஷம் தான்டா. ஒரு துளிதானேன்னு விழுந்த இடத்திலேயே அந்தவிஷம் பரவாம இருக்குமா? சொல்லு…”

“உனக்கொன்னு தெரியுமா? துவாவுக்கு ஏதாவது அவசரம்னா சமாளிக்க முடியாத விஷயம்னா என்ன உதவி வேணும்னாலும் என்னை தேடி வரனும்னு நான் தான் அவள்ட்ட சொல்லியிருந்தேன். என்னை பார்க்கத்தான் அவ வந்திருந்தா. என்னோட போன் நம்பரை மிஸ் பண்ணிட்டதால நான் வருவேன்னு வாசல்ல வெய்ட் பண்ணிட்டு இருந்தா. இப்டி பண்ணிட்டீங்களே?…”

மீண்டும் கீழே மண்டியிட்டு அமர்ந்தவன் துவாவையே அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

“அதி, இது எதுவுமே எங்களுக்கு தெரியாதுப்பா. தெரிஞ்சாலும் எங்களால என்ன பண்ணிட முடியும்? இவங்களுக்கு மத்தியில எத்தனை கஷ்டம் இவளுக்கு?…”

மருமகளின் தலையை தடவியபடி கண்ணீரோடு பத்மினி பேச சந்தியாவும் ஸ்வேதாவும் இருபுறமும் துவாரகாவையே பார்த்திருந்தனர்.

“இனி இவளை நல்லவிதமா பார்த்துக்கனும். அவ்வளோ தான். துவாவை மாடிக்கு தூக்கிட்டு போப்பா…” என சொல்ல இல்லை என மறுத்து தலையாட்டியவன்,

“நான் இருக்கிற மனநிலைல என்னால இங்க இருக்க முடியாதும்மா. இவளை வச்சிட்டு வேற இத்தனை விஷயங்களை பேசிட்டேன். பழசை கீறிவிட்ட மாதிரி ஆகிடுச்சு. எழுந்ததும் எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியலை…”

“அதுக்கு என்னப்பா செய்யப்போற? அதுதான் பேசிட்டியே…”

“பேசினது நூத்துல ஒன்னு கூட இல்லைமா. இன்னும் பேசனும். பேசுவேன். இப்போவாவது பேசினேனே. இவளை நாள் முழுக்க ஸ்டேஷன்ல வச்ச அன்னைக்கு நான் இங்க இருந்திருந்தா இதைவிட ரொம்ப மொத்தமான அதிபனை பார்த்திருப்பாங்க…” என்றவன் துவாரகாவை கைளில் ஏந்திக்கொண்டான் சடுதியில்.

“நாங்க கிளம்பறோம்மா. ப்ளீஸ் தடுக்காதீங்க. எப்போ வருவேன்னும் கேட்காதீங்க. கிளம்பறோம்…” என சொல்லி மடமடவென வாசலுக்கு விரைந்து காரில் துவாரகாவை அமர்த்தி தானும் அமர்ந்து காரை விருட்டென கிளப்பிக்கொண்டு சென்றான்.

அவன் சென்று அரைமணி நேரம் ஆகியும் யாரும் இருந்த இடம் விட்டு அசையவில்லை. மெதுவாய் எழுந்த பத்மினி விஷாலின் முன் வந்து நின்றார். ரத்தினசாமியை திரும்பி பார்த்துவிட்டு விஷால் அர்னவ் இருவரின் கன்னத்திலும் மாறி மாறி அறைந்தவர் அழுதுகொண்டே பூஜை அறையில் தஞ்சம் அடைந்தார்.

அன்னபூரணி சந்தோஷை ஒரு பார்வை பார்த்துவிட்டு நடைபிணமென வைத்தியநாதனை மறந்து தன்னறைக்கு சென்றுவிட சந்தியா பத்மினியை சமாதானம் செய்ய போய்விட,

“நீயெல்லாம் அண்ணனாடா? என்கிட்டே பேசாத…” என விஷால், அர்னவ், சந்தோஷ் மூவரையும் கை வலிக்கும் அளவுக்கு அடித்துவிட்டு அழுதுகொண்டே ஓடிவிட ரத்தினசாமி சிலையாய் அனைத்தையும் பார்த்தபடி இருந்தார்.

இத்தனை வருடங்கள் செய்த அராஜகங்கள் மொத்தமும் மறுவுருவெடுத்து தங்களின் பாவச்செயல்களை பட்டியலிட ஆரம்பித்துவிட்டதை உணர ஆரம்பித்தார்.

அகிலாவின் கண்ணீருக்கு உயிர் கிடைத்துவிட்டதென உணர ஆரம்பித்தார்.

ஆம், மருத்துவமனையில் அகிலாவின் உணர்வுகளுக்கும் உயிர் வந்துவிட்டது.  மூடியிருந்த இமைகளுக்குள் அவரின் கண்மணிகள் உருள துவங்கியது.

 

மின்னல் தெறிக்கும்…

 

Advertisement