Advertisement

அத்தியாயம் பதிமூன்று :

காவ்யா, கிருஷ்ணனின் திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது. கிருஷ்ணாவின் வீடு முழுக்க உறவினர்கள். காவ்யாவைப் பார்க்கவே முடியவில்லை. எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை.

இங்கே இருக்கிறாளா, எதிர் வீட்டினில் இருக்கிறாளா தெரியவில்லை. ஆம்! திருமணம் செய்ய முடிவெடுத்தவுடனயே எதிர் வீட்டில் ஒரு வீடு காலியாக, “அப்பாவிடம் அதை பேசுங்கள் வாடகைக்கு, நான் திருமணம் முடிந்ததும் அங்கே போகிறேன்!” என்று விட்டான்.

“என்ன?” என்று அவர் அதிர்ச்சியாகப் பார்க்க, “இப்போ எல்லாம் நல்லா தான் பா இருக்கும். அம்மா கொஞ்சம் பேச்சை குறைச்சிட்டாங்க. காவ்யாவும் குறைச்சிட்டா. ஆனா எப்பவுமே ரெண்டு பேரும் இப்படி இருப்பாங்க சொல்ல முடியாது! அதனால் தனியா இருக்குறது தான் பரவாயில்லை!” என்று விட்டான்

பேசி விட்டது தான் அவனின் அப்பா, பாக்கி அட்வான்ஸ் கொடுத்தது எல்லாம் கிருஷ்ணா தான். ரத்னாவிற்கு விஷயம் தெரிய, லிஸ்ட் போட்டு மகளுக்கு பொருட்கள் வாங்கிவிட்டார். வீட்டிற்கு தேவையான பண்டம், பாத்திரம், டீ வீ, பிரிட்ஜ், வாஷிங் மெசின் என அனைத்தும். யாரும் எதிர் பார்க்கவில்லை இவ்வளவு செய்வார் என்று. அதுவும் வசதியில்லை என்று அவர்கள் வேறு சொல்லியிருக்க, பார் எங்களுக்கா வசதியில்லை என்று காட்டும் முயற்சியில் இருந்தார்.  

ஒரு ஒரு பைசாவாக அவர் சேர்த்ததற்கு, அனாவசியமாக ஒரு செலவும் செய்யாததற்கு, அவரின் மகன்கள் சில வருடங்களாக வேலைக்கு சென்றதற்கு என்று அத்தனைக்கும் ஒரு அர்த்தம் கொடுத்து விட்டார். அப்பா இல்லை அதனால் குறை என்று ஒரு சொல் வந்துவிடாமல் இருக்க அப்படி மெனக்கெட்டார். ராஜேந்திரனோ சசிகலாவோ எதிர் பார்க்கவில்லை. நகைகள் மட்டும் அந்த முப்பது பவுன் மட்டுமே செய்தார்.

காவ்யாவின் பேச்சை எதுவுமே கேட்கவில்லை. அது போல காவ்யாவின் சம்பாதனை எதுவும் இதில் இல்லை. அது எல்லாம் மகன்களின் படிப்பிற்கு மட்டுமே கொடுத்தார். இப்போது அவர்கள் இரண்டாம் வருடம் முடியும் தருவாயில் இருக்க, இன்னம் இரண்டு வருட படிப்பிற்கும் அவரிடம் பணம் இருந்தது அது காவ்யாவின் சம்பாதனை. எல்லாம் அவர் வாயை கட்டி வயிற்றைக் கட்டி பலவருடமாக சேமித்த சேமிப்பு கொண்டே. இன்றைய பொருளாதார நிலைக்கு நகைகள் வாங்கியிருக்க முடியாது. ஆஅனால் முன்பிருந்தே வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி வைத்து விட்டார்.  உறவுகள் முன் எந்த குறைவுமின்றி நன்றாகவே செய்தார்.

இதில் சசிகாலாவிடம் முன்பு காவ்யாவை பெண் கேட்ட உறவினர், “உங்க பையனுக்கு கொண்டு வர்றதுக்காக தான் அப்போ அப்படி சொல்லி தட்டி விட்டீங்களா” என கேட்டே விட,

தர்ம சங்கடமாய் நின்றவர், “பாரு இப்போவே தனியா போயிட்டான்” என்று பேசி அதையும் இதையும் சொல்லி சமாளித்தார்.

ரேணு தான் அண்ணனின் திருமணம், தோழியின் திருமணம் என வேலை செய்து ஓய்ந்து போக, அவளுக்கு உதவி ரிதன்யாவும் வினயும். அதுவரை அங்கிருந்தவர்களுக்கு அவர்கள் யாரென்றே தெரியாது. ஏன் கிருஷ்ணாவிற்குமே உடன் வேலை பார்ப்பவர்கள் என்று மட்டுமே தெரியும்! அவ்வபோது காவ்யாவின் பேச்சினில் வருவர்.

எல்லா வேலைகளையும் ரத்னாவின் சார்ப்பாக அவர்கள் இழுத்து போட்டு எடுத்து கட்டி செய்தனர். கூட அவர்களின் ஒரு வயது நிரம்பிய மகள் அதிதி. ரேணு அவளை தூக்கி வைத்துக் கொண்டே திரிந்தாள். நவீனையும் ப்ரவீனையும் கையினில் பிடிக்க முடியவில்லை. அப்படி ஒரு மகிழ்ச்சி.  

திருமண பேச்சு எழுந்துதுமே காவ்யா கூட “ரேணு லைஃப் செட்டில் ஆன பிறகு நம்ம பண்ணிக்கலாமா?” என்று கிருஷ்ணாவிடம் கேட்க,

“வேண்டவே வேண்டாம்!” என்று விட்டான். “இது முடிச்சிட்டு அதுன்ற பேச்சு எதுலயும் கூடாது. அதது அதோட போக்குல நடக்கணும்! வாழ்க்கையில் ஒன்னுகொன்னு முடிச்சு போடக் கூடாது!” என்று பேச, காவ்யாவிற்கு சத்தியமாய் புரியவில்லை “பே” என்று விழித்தாள்.

“எல்லாம் நான் பார்த்துக்கறேன், நீ என்னை மட்டும் பார்!” என்று பேசவும், “நான் உன்னை பார்க்க ஆரம்பிச்சு ரொம்ப வருஷமாச்சு” என்று சொல்லி அப்போது ஓடி விட,

“இதோ இப்போ உன் லவ் ஸ்டோரி சொல்லணும்” என்று அவளை கண்டு பிடித்து அவர்களின் வீட்டிற்கு திருமணதிற்கு வந்த கிஃப்ட் பிரிக்கிறேன்” என்று சொல்லி அழைத்து வந்திருந்தான்.

“என்ன? என்ன பிரிக்கணும்?” என காவ்யா கேட்க, “ம்ம் உன்னை தான்” என்றான் சரசமாக.

“அதான் மூணு நாளா பிரிச்சிட்டு தானே இருக்கீங்க” என்று ரகசியம் பேச, அவளின் வாயை மூடியவன் யாரும் இருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்க்க, அவனின் கையை எடுத்து விட்டவள் “நாம தனியா தானே இருக்கோம்!” என்று செல்லமாய் அவனை தோளில் அடிக்க, 

“ம், ஆமாமில்லை!” என்று அசடு வழிந்தவன், “சொல்லு உன்னோட லவ் ஸ்டோரியை” என்றான்.

“மூணு நாளா நான் சொல்ல வர்றேன், நீ கேட்கலை”

“ம்ம், நைட் சொன்னா எப்படி கேட்க?” என்று அணைத்துப் பிடித்தவனிடம்,  “அய்யே” என பழிப்பு காட்டியவள், “பகல்ல மட்டும் கேட்டுடறீங்கலோ, ரெண்டு நிமிஷம் கேப் கிடைச்சா, அஞ்சு நிமிஷம் ரொமான்ஸ் பண்றீங்க” என குறை படுவது போல சொல்ல,

“அப்போ இப்போ கூட தனியா இருக்கோம்னு சொல்ற” என்று அணைப்பை இருக்கியவன், “லவ் ஸ்டோரி அப்புறம் கேட்டுக்கலாம்” என அவளின் காதில் ரகசியம் பேசினான்.

“தோடா, இன்னா, இன்னா நினைச்சிட்டு இருக்க” என்று நிஜமாகவே சென்னை பாஷையில் அலறினாள்.

“ஏய் கத்தாதடி” என்று அவசரமாக வாய் பொத்தினான். இப்படியாக நாட்கள் விரைய, திருமணம் முடிந்து ஒரு மாதம் வரையிலும் காவ்யாவால் அவளின் லவ் ஸ்டோரியை சொல்ல முடியவில்லை. சொல்லுவதற்கு நேரமில்லை!

தனி வீடு, இருவருமே வேலைக்குப் போக, காலையில் அந்த பரபரப்பு! மாலையில் கொஞ்சிக் கொள்ளும் பரபரப்பு. கிருஷ்ணா சொல்லாத போதும் ஒரு விஷயம் நன்றாக கவனித்தால், ராஜேந்திரனின் பணத்தின் பங்களிப்பு இவர்களின் வாழ்க்கையில் எங்கும் இல்லை.

கிருஷ்ணா அப்படி எதுவும் வராமல் பார்த்துக் கொண்டான். அதற்கு தான் இந்த ஒரு வருட இடைவெளி என்று மெதுவாக காவ்யாவிற்கு புரிந்தது. பணத்திற்கு அப்பாவை எதிர்பார்க்காத நிலை வேண்டும் என யோசித்து செய்திருக்கிறான்.

ஒரு இரவின் தனிமையில் “ஏன் கிருஷ்ணா அந்த வேலையை விட்ட?” என்றவளிடம், “தெரிஞ்சும் ஏன் கேட்கற” என்றான். “சொல்லேன்” எனக் அவனின் மார்ப்பில் முகம் புதைத்து கொஞ்சிப் பேச,

“உனக்காக தான்! அந்த வேலை பணம் கொடுத்து வாங்கினது! அதனால விட்டேன்!”

“ம்ம் அப்புறம்” என்றாள் ஒரு வித பரவச நிலையில்.

“என்ன அப்புறம்?”

“நான் உனக்கு கிஃப்ட் கொடுத்தேன் தானே கல்யாணத்துக்கு முன்ன, இப்போ நீ குடு!” 

“அந்த வீடு மட்டும் நமக்கு வரும், அது பூர்வீக சொத்து! வேற எதுவும் வராது! நமக்கும் வராது! நம்ம பிள்ளைகளுக்கும் வராது! சரியா!” 

“தேங்க்ஸ், தேங்க்ஸ் கிருஷ்ணா!” என்றவள், “நான் உங்களை உங்கப்பா அம்மாககிட்ட இருந்து எல்லாம் பிரிக்கலை, ஆனா நமக்கு அந்த சொத்து மட்டும் வேண்டாம்!” 

“எனக்கு சின்ன வயசுல இருந்தே உன்னை ரொம்பப் பிடிக்கும் கிடையாது, ரொம்ப ரொம்ப பிடிக்கும்! அப்புறம் நான் வளர வளர, உன்னை, ஐ ஜஸ்ட் ஸ்டார்டட் லவிங் யு லைக் எனிதிங் அண்ட் எவரி திங். நீ என்கிட்டே எப்பவும் போல பேச வரும் போது, என்னால அப்படி பேச முடியலை. அப்புறம் நீ பார்க்காதப்போ எல்லாம் உன்னையே பார்ப்பேன். அப்புறம் உன்னை எப்பவும் அவாயிட் பண்ண ட்ரை பண்ணுவேன். ஆனாலும் நீ என் கிட்ட எப்பவும் போல தான் இருப்ப! நான் முகத்தை திருப்பறேன்னு நீ திருப்பினதேயில்லை” 

“இதெல்லாம் எனக்கு தெரியும், வேற சொல்லு!” 

“வேற என்ன சொல்ல?”

“என்னை ஏன் வேண்டாம்னு டிசைட் பண்ணின?” 

“அது என்னால அப்படி லஞ்சம் வாங்கறது எல்லாம் ஒத்துக்க முடியாது. அப்படிப்பட்டவரோட பையன் எனக்கு வேண்டாம்னு முடிவு பண்ணினேன்!” 

“அப்புறம் ஏன் என் பின்னாடி வந்த?”

“நீ பக்கத்துல இருக்குறவரை எனக்கு ஒன்னுமே தெரியலை! ஆனா தூர போன பிறகு ஒரு முறையாவது பார்க்கணும்ன்னு, பார்த்த பிறகு உன்னை விடவே முடியாதுன்னு தெரிஞ்சிடுச்சு!”

“சரி, நம்ம ப்ராப்ளம் என்னன்னு உன்கிட்ட சொல்லலாம்னா அதுக்கு முன்னமே நீ வேலையை விட்டிருந்த. சோ என்னவோ நீ பார்த்துக்குவேன்னு ஒரு நம்பிக்கை வந்தது!”

“உனக்கு ஏன் உங்கப்பா செஞ்சது தப்புன்னு தோணலை, ஏன் அதை தடுக்கலை?”

“அது அப்படி ஒன்னும் பெரிய தப்பா இங்க பார்க்கப் படறது இல்லை, இந்த வழில பல அரசியல்வாதியும் சொத்து வெச்சிருக்கான், பல அரசாங்க வேலைல இருக்குறவனும் சொத்து வெச்சிருக்கான், பல தனியார் நிறுவனத்துல இருக்குறவனும் சொத்து வெச்சிருக்கான். யார் என்ன செய்யறோம்? யார் அவங்களை கீழ பார்க்கறோம்? நம்மளோடவே தான் அவங்களும் கலந்து இருக்குறாங்க!”  

“தப்புன்னு தெரிஞ்சாலும் அப்படி பார்க்காத ஒரு பையன் தான் நான். அதுக்காக நான் அப்படின்னு நிச்சயம் சொல்ல மாட்டேன். ஆனா அது ஒரு பெரிய தப்பா பிடிச்சிட்டு அவங்களை கீழ பார்க்கற ஆள் நான் கிடையாது. ஏன்னா நான் அப்படி வளர்ந்ததுனால கூட இருக்கலாம்” 

“இப்போ இதெல்லாம் பண்றேன்றது கூட உனக்காக தான்! உனக்காக மட்டும் தான்! என்னோட பார்வை இப்படித்தான்!”

காவ்யா புரியாமல் பார்க்க,

“அதாவது சில விஷயம் நம்மை பொறுத்தவரை அது தப்பு. ஆனா அடுத்தவங்க செய்யும் போது எனக்கு அதை பத்தி எதுவுமில்லை, செஞ்சா செஞ்சிட்டு போறாங்க, எனக்கென்ன மனப்பான்மை தான். உன்கிட்ட அது தப்பு அப்படி இப்படி தெரியாம நடந்துடுச்சுன்னு எல்லாம் பொய் சொல்ல விரும்பலை. எனக்கு தெரியும் ஆனா கண்டுகிட்டது இல்லை”

“அப்பா செஞ்சாருன்னாலும் பெருசா அதுக்கான பெனிஃபிட்ஸ் இன்னும் நான் அனுபவிக்கலை. எல்லாம் சொத்தா தான் இருக்கு. அந்த சொத்து வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்!”

“அதுவே இப்போ தான், அதுக்கு முன்ன எல்லாம் அதை பெரிய தப்பு மாதிரி நான் யோசிச்சதில்லை. நான் சொல்ல வர்றது உனக்கு புரியுதா?”

“புரியற மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு” என்றாள் பாவமாக.

“நமக்கும் அது வேண்டாம், நம்ம குழந்தைகளுக்கும் அது வேண்டாம். ஆனா அதுக்காக என்னால எங்கப்பா அம்மாவை ஒதுக்கவோ இல்லை நீங்க தப்பு செஞ்சிட்டீங்கன்னு குற்றம் சுமத்தவோ என்னால முடியாது! செய்யவும் மாட்டேன் அடுத்தவங்க செய்யறதையும் அனுமதிக்க மாட்டேன்!”

“நான் இப்போல்லாம் அப்படி பார்க்கறது இல்லையே” எனக் காவ்யா பாடம் படிக்க,

“பார்த்தா எனக்கு பிடிக்காதுன்னு நீ பார்க்கறது இல்லை” என்று உன்னை பற்றி தெரியும் என்பது போல் கிருஷ்ணா பேசியவன்,

“எங்கப்பா அம்மா கிட்ட ரேணுவோட லைஃப் ரொம்ப மாற்றங்கள் கொண்டு வந்திருக்கு. இல்லைன்னா இவ்வளவு சுலபமா நம்ம கல்யாணத்தை நடத்திக் கொடுத்திருக்க மாட்டாங்க, இவ்வளவு அமைதியாவும் மாறியிருக்க மாட்டாங்க. ரேணு வேற அம்மா கிட்ட நீ காவ்யா பத்தி பேசினது தான் அப்படியே எனக்கு வந்துடுச்சுன்னு சொல்ல, ரொம்பவுமே அடங்கிட்டாங்க!” என்று கிருஷ்ணா விளக்கம் கொடுத்தான்.   

மேலும் இந்த பேச்சுக்கள் வேண்டாம் என்பது போல நினைத்தவள், “எல்லாம் தெரியுது, அப்போ நான் லவ் பண்ணினது மட்டும் எப்படி தெரியாமப் போகும்”

“எப்போ தெரியாதுன்னு சொன்னேன், உன்னோட ரகசிய பார்வை தான் என்னை உன்னை பார்க்க வெச்சது”

“அப்படியா என்னை பார்த்தீங்களா நீங்க?” 

“இல்லையே இன்னும் முழுசா பார்க்கலையே” என புதிதாய் பார்ப்பது போல பார்த்தான்.

“இப்படி எல்லாம் பார்க்கக் கூடாது, இந்த ரித்துக்கா என்னை எப்பவும் கிண்டல் பண்றாங்க” என்று சிணுங்கினாள்.  

“என்ன கிண்டல் பண்றாங்க?”

“நான் எப்பவும் ரொம்ப தூங்கி வழியறனாம், எல்லோர் முன்னாடியும் மானத்தை வாங்கறாங்க”

“அப்போ சரி சீக்கிரம் தூங்கு” என்றவனிடம்,

முகத்தை சுருக்கிக் காட்ட, “சரி நாளைக்கும் அங்கேயே போய் தூங்கி வழி” என்றவன் அவளை ரகசியப் பார்வை பார்க்க,

“இல்லை, இல்லை, தூங்கறேன், நான் நாளைக்கு தூங்கவே மாட்டேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்!” 

“அடப் பாவி இதெல்லாமா சொல்லுவாங்க?” என்று முறைத்தான்.

“பின்ன நான் தூங்கும் போது என் வேலையை அவங்க தானே பார்ப்பாங்க” என்று அசடு வழிந்தாள்.

“அப்போ அவங்க வேலையை யார் பார்ப்பா”

“வினய்” எனச் சொல்ல, “அப்போ அவர் வேலையை யார் பார்ப்பா?”

“அவர் பெரிய அப்பா டக்கர், ரித்துக்கா ஒரு பார்வை பார்த்தா பத்து பேர் வேலையை பார்ப்பார்” என சொல்லி நிறுத்தியவள்,

அவனை ஒரு பார்வை பார்த்து, “இதனால நான் சொல்ல வர்றது என்னன்னா?” என நிறுத்த, 

“நான் சொல்ல வர்றதை நீ கேளு, அடுத்தவங்க லவ் ஸ்டோரி சொல்லாத என் லவ் ஸ்டோரி கேளு, காவ்யான்ற பொண்ணை கல்யாணம் பண்ணினதுல காதலை மீறின ஒரு கர்வம் எனக்கிருக்கு” என்றான்.

“ம்ம் அப்புறம்” என

“அந்த கர்வம் இன்னும் இன்னும் அதிகமாகணும்”

“ம்ம அப்புறம்”  எனக் கதை கேட்கும் அவளின் பாவனையை பார்த்து முறைத்தவன்,

“நானும் ஒன்னும் சொல்ல வேண்டாம், நீயும் ஒன்னும் சொல்ல வேண்டாம், நாளைக்கும் போய் நீ அங்கே தூங்கு!” என்று பதில் சொல்லிப் பார்க்க, அந்த பார்வைக்கே அவனுள் முகம் புதைத்தாள், பின்பும் சில பல சீண்டல் பேச்சுக்கள்.

கிருஷ்ணாவின் மனது இவள் சந்தத்தில் பாடாத கவிதை என்று நன்கு உணர்ந்தது! 

காவ்யாவின் மனதிலும் அப்படி ஒரு நிம்மதி! தன்னுடைய கொள்கைகளுக்கு எந்த மறுப்பும் சொல்லவில்லை என்பதை விட அதனோடு பொருத்திக் கொண்டான். நானும் அப்படித்தான் என்று பொய்யுரைக்கவில்லை. கூடவே பெற்றோரையும் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை. “எனக்கு என்னை போல ஒரு பிள்ளை வேண்டாம், இப்படி கிருஷ்ணா போல ஒரு பிள்ளை வேண்டும்” என்ற எண்ணமே.

அதற்கு நேர் மாறாக “எனக்கு காவ்யா போல தான் ஒரு பிள்ளை வேண்டும். அவளை போல நேர்மையாக” என்று கிருஷ்ணா நினைத்தான்.

எண்ணங்கள் வண்ணங்கள் பெற அந்த எண்ணங்களின் சக்தி அதிகம்.     

நேர்மைக்கும் உழைப்பும் கிடைக்கும் உணர்வு என்பது அலாதியானது. அது கொடுக்கும் கர்வம், பெருமைக்கு உரியது. வாழ்க்கையில் வெற்றி கிட்டும் என்பதை விட தோல்வி என்பது இருக்காது. நேர்மை கொடுக்கும் திண்மை மனிதர்களை எப்போதும் வாழ்க்கையில் செம்மையுறச் செய்யும்.    

(நிறைவுற்றது)

           

 

 

 

                 

 

 

Advertisement