Advertisement

அத்தியாயம் ஒன்பது :

திரும்ப இரண்டு முறை அவனின் அலுவலக நேரம் பார்த்து எப்படியும் அவன் தானே எடுக்க அவேண்டும் என அழைத்தாள். ஆனால் மறுபடியும் ரேணுவிடம் தான் கொடுத்தான்.

என்ன விஷயமென்று ரேணுவிற்கு தெரியாது கிருஷ்ணாவிடம் கேட்கும் தைரியம் இல்லை. பிறந்தது முதலே மகனை இவ்வளவு இறுகி பார்த்திராத பெற்றோரும், அவன் தேறிக் கொண்டால் போதும் என்று விட்டு விட்டனர்.

அப்படி ஒன்றும் பொறுப்பற்றவன் அல்ல கிருஷ்ணா, தன்னை பார்த்துக் கொள்வான் எனத் தெரியும். அதனால் ராஜேந்திரன் விட்டு விட்டார். அவருக்குமே மனதில் ஒரு குற்ற உணர்ச்சி லேசாக இருந்தது.

சில லஞ்ச லாவண்யங்கள் வாங்கினார் தான், வாங்குகிறார் தான், சில இடங்களில் வாங்கித்தான் ஆக வேண்டும். அது எழுதப் படாத நியதி. வாங்கவில்லை இவரின் உயிரை வாங்கி விடுவர். பின்பு அதனைக் கொண்டு அங்கே இங்கே இடம் வாங்கி பின் அதனை விற்று வேறு இடம் வாங்கி என பலவகையாகப் பணத்தை பெருக்கினார்.

என்ன நியாயங்கள் சொன்னாலும் எதுவும் சரி கிடையாது. வாழ்க்கை இவரைப் போன்றவர்களுக்கு தண்டனை வைத்திருக்கிறதா இல்லையா என்று கூடத் தெரியவில்லை. பலரும் நன்றாகத் தான் இருக்கிறார்கள். நூறு பேர் தப்பு செய்தால் இதில் மாட்டிக் கொள்கிறவர்கள் ஒரு பத்து பேர் இருந்தாலே அதிகம். வேறு எவனும் மாட்டிக் கொள்வதில்லை என்பது தான் உண்மை.

ஆனாலும் வாழ்க்கை எந்த வகையிலாவது இவர்களை தண்டித்து விடும், இப்படித்தான் சொல்லிக் கொள்கிறோம் எதுவும் நமக்கு தெரியாது.

“சொல்லு காவ்யா”  

“உனக்கு பேசணும்னா நான் உன் ஃபோனுக்கு கூப்பிடுவேன் தானே” என நான்காவது முறை சொல்லியே விட்டாள்.“கிருஷ்ணா கிட்ட கொடு நான் பேசணும்”

“கிருஷ்ணாக்கு உன்கிட்ட பேச விருப்பம் இல்லையாம்” என்றாள் தயங்கி தயங்கி.

“ஓஹ்” என்ற காவ்யாவிற்கு அதற்கு மேல் வார்த்தையே வரவில்லை, துக்கம் தொண்டையை அடைக்க, தளர்வாக கைபேசியை வைத்தாள்.

கிருஷ்ணாவிடம் இருந்து தன் கவனத்தை வேலையில் திருப்பினாள். ஆறு மாதத்தில் நியூஸ் ரீடிங் அல்லாது அங்கே நிரந்தரமாக ஒரு பணி வர, ரிதன்யாவின் முயற்சியில் அதுவும் கிடைக்கப் பெற்றாள். ஆம், ரிதன்யாவிற்கு காவ்யாவை சொல்லத் தெரியாமல் பிடித்து விட்டது. அவளுக்கு கீழே ஒரு பணி காலியாக அதற்கு காவ்யாவை போட்டுக் கொண்டாள். இன்னும் நிறைய வேலைகள் ரிதன்யாவிடம் இருந்து காவ்யா கற்றுக் கொண்டாள். ரிதன்யாவின் பணி ப்ரோக்ராம் கோ ஆர்டினேடர். அவளுக்கு கீழே காவ்யா.

அங்கே அவள் சேர்ந்த பிறகு தான் ரிதன்யாவிற்கும் வினய்க்கும் திருமணம் ஆகிற்று காதல் கல்யாணம். இப்போது ரிதன்யா ஐந்து மாத கர்ப்பம். ரிதன்யா தமிழ், வினய் கர்நாடகாவை சார்ந்தவன். அவனும் தமிழ் பின்னணி கொண்டவன் தான். ஆனால் அவனின் தாத்தா பாட்டி எல்லாம் அங்கே முன்பே போய் விட்ட நிலையில் அவன் அந்த மாநிலத்தவனே. அதனால் தான் தமிழை அப்படி கொல்வான்.

ரிதன்யாவின் வீட்டினில் ஏற்றுக் கொள்ளவில்லை. வினய்க்கு அப்படி எதுவும் இல்லை. முன்பே அவனுக்கு அம்மா கிடையாது, அப்பா மட்டும் தான். அவரும் இரண்டாவது திருமணம் செய்து இருந்தார். அதனால் என்ன செய்தாலும் வினய்யை கேள்வி கேட்க ஆள் கிடையாது. உன் வாழ்க்கையை நீ பார்த்துக் கொள் என்பது மாதிரி தான்.     

காவ்யாவிடம் ரிதன்யா சிநேகிதம் ஆகிவிட்டதால், வினய்யும் சிநேகிதம் ஆகிவிட்டான். இருவருக்கும் ஒரே இடத்தில் வேலை. அப்படி ஒன்றும் கொஞ்சிக் கொண்டும் காதல் மொழி பேசிக் கொண்டும் எல்லாம் இருவரும் இருக்க மாட்டார்கள்.

ஆனாலும் அப்படி ஒரு அன்யோன்யம், ரிதன்யா கர்ப்பமாக இருப்பதால் இன்னும் அப்படி பார்த்துக் கொள்வான் வினய். எப்படி என்று காவ்யாவால் இனம் கண்டு கொள்ள முடியவில்லை. அதிலும் ரிதன்யா காவ்யாவை விட ஐந்து வயது பெரியவள், “ரித்துக்கா” என தான் காவ்யா அழைப்பாள். 

பலமுறை கிருஷ்ணாவின் ஞாபகம் அப்படி வந்து விடும்.

ரத்னாவிற்கு இப்போது அப்படி ஒரு திருப்தி, மகளின் வேலை குறித்து, அங்கேயே வேறு நிரந்தரப் பணியிலும் சேர்ந்து விட்டதால், அவளின் வயதிற்கு மிகவும் திருப்தியான ஒரு சம்பளமே.

ஆம் காவ்யாவின் வயது என்ன? இருபத்தி இரண்டு பிறந்து இரண்டு தினங்களே ஆகின்றன.

நவீனும் பிரவீனும் நல்ல மார்க் வாங்கி அங்கேயே ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து விட்டனர். எட்டு மணிக்கு கிளம்பி, வர மாலை ஆறு மணிக்கு மேல் ஆகிவிடுவதால் அவர்கள் எந்த வேலையும் இப்போது பார்ப்பது இல்லை.

காவ்யாவின் வேலை இருப்பதால் பெரிதாக கவலையில்லை. முதலில் அவளுக்கு திருமணம் செய்யும் முடிவில் இருந்தவர், இரண்டு வருடம் போகட்டும் என்று விட்டுவிட்டார்.

சொல்லப் போனால் என்ன நடந்ததோ தெரியாது, முன்பு பக்கத்துக்கு வீட்டில் “உன் பெண்ணை பற்றி இப்படி சொல்லி விட்டார்கள்” என சொன்ன வரன் வீட்டினர், அவர்களாகவே திரும்ப “அப்படி எதுவும் இல்லையாமே, நாங்க பொண்ணு பார்க்க வரட்டுமா?” என்று கேட்டனர்.  

“ஜாதகம் பார்த்தேன் இன்னும் ரெண்டு வருஷத்துக்கு வேண்டாம் சொல்லிட்டாங்க, பண்ணினாலும் சரி வராது சொல்லிட்டாங்க” என்று பொய் சொல்லி தட்டிக் கழித்து விட்டார் ரத்னா. மகளைப் பற்றி அப்படி சொன்னவர்கள் வீட்டினில் கொடுக்க இஷ்டமில்லை. வாழ்க்கை அமைதியாக செல்கிறது இப்படியே சில நாட்க்கள் செல்லட்டும் என விட்டுவிட்டார்.   

பார்ப்பதற்கு அமைதி போல தான் தோன்றியது. ஆனால் காவ்யா அப்படி இல்லை. கிருஷ்ணா அருகில் இருந்த வரை அவளாகத் தான் தள்ளி தள்ளி நின்றாள். ஆனாலும் எப்படியும் கிருஷ்ணாவைப் பார்த்துக் கொண்டு தானே இருந்தாள். இப்போது பார்க்கக்கூட இல்லாமல் அவளால் முடியவில்லை. என்னவோ இழந்து விட்டது போன்ற ஒரு தோற்றம்.

அவனைக் கண்ணில் பார்த்தே எட்டு மாதமாகி விட்டது. “ஒரு முறை பார்த்து விடு” என மனம் ஜெபிக்க,

எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாது. ரேணுவை அழைக்கவும் விருப்பமில்லை. “உன்கிட்ட பேசணும்னா உன்னை கூப்பிடுவேன்” என்று பேசிய பிறகு அவளை அழைக்கவும் கஷ்டமாக இருந்தது. பேசியது தப்பல்லவா.

அவன் எங்கு வேலை செய்கிறான் என்று தெரியும். சரி அங்கேயாவது போய் பார்ப்போம் என இடத்தை கண்டு பிடித்து போனாள்.

“கிருஷ்ண குமார் சாருங்களா, அவர் வேலையை விட்டு போய் ஏழெட்டு  மாசம் ஆச்சுங்களே” என்ற பதில் தான் கிடைத்தது.

“என்ன?” என்று அதிர்ந்து நின்று விட்டாள்.

அவனின் வீடும் தெரியாது, இங்கே பக்கத்தில் இருந்த வீடும் காலியாக தான் இருந்தது. யாரோ ஆட்கள் அவ்வப் போது வந்து சுத்தம் செய்து போவார்கள்.

இருந்த ஒரே விஷயம் தொலைபேசி எண் தான். நைட் பன்னிரண்டு வரை விழித்திருந்து “ப்ளீஸ் கிருஷ்ணா ஃபோன் பேசு, எனக்கு உன்கிட்ட பேசணும்” என மெசேஜ் செய்தாள்.

திரும்ப திரும்ப மெசேஜ் செய்ய “ஏதாவது பிரச்சனையா?” என்று பதில் மெசேஜ் வந்தது .

“இல்லை, எனக்கு உன் கிட்ட பேசணும், உன்னை பார்க்கணும்” என பதில் மெசேஜ் அனுப்பினாள்.

அதற்கு பிறகு எந்த பதிலும் இல்லை. வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாள், “கிருஷ்ணா ப்ளீஸ் என்கிட்டே பேசு” என கெஞ்சல் குரலில் அனுப்ப, அவன் பார்த்ததற்கான அடையாளம் வந்தது. ஆனால் பதில் இல்லை.

திரும்பத் திரும்ப அனுப்ப, “சும்மா என்னை தொந்தரவு பண்ணாத, ஏற்கனவே நாங்க இங்க நிறைய  பிரச்சனையில இருக்கோம்” என்று பதில் மெசேஜ் அனுப்பினான்.

“என்ன பிரச்சனை?” என்று மெசேஜ் அனுப்ப,

“அதை சொல்ற அளவுக்கு நமக்குள்ள ஒண்ணுமில்லை” என்று பதில் வந்தது.

கிருஷ்ணாவின் இந்த உதாசீனம் தாங்கவே முடியவில்லை.

“ஏன் கிருஷ்ணா இப்படி பேசற?” என்று அழும் குரலில் ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாள்.

“நீ என்கிட்டே பேசாத, தயவு செஞ்சு பேசாத, என்னை விட்டுடு. நான் உனக்கு யாருமேயில்லை. நீ அப்படி தான் என்கிட்டே இதுவரை நடந்து இருக்க”

“உனக்கு என்னை பிடிக்கும். ஆனா நீ என்கிட்டே அதை சொல்ல மாட்ட, ஏன்னா எனக்கு அந்த தகுதி இல்லைல்ல, ஒருவேளை உங்கப்பா எங்கப்பா மாதிரி இருந்திருந்தா என்ன பண்ணியிருப்ப? அவரை விட்டுட்டு போயிருப்பியா, இல்லை அவர் உன் அப்பா இல்லை சொல்லியிருப்பியா! என்ன இருந்தாலும் உறவு மாறாது இல்லையா!”

“ஆனா நீ என்கிட்டே என்னை பிடிக்கும்னு கூட சொல்லலை. நீ எனக்கு வேண்டாம் ஐ  ஹேட் யு, என்னை பார்க்கவோ என்கிட்டே பேசவோ முயற்சிக்காதே. என்னை உயிரோட விட்டுடு, கொன்னுடாதே!” என மனதில் இத்தனை நாளாய் இருந்த கோபத்தை எல்லாம் வார்த்தையால் அனுப்பிவிட்டு ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டான்.

எப்படி என்னை பைத்தியமாக்கிவிட்டால் என்று தான் தோன்றியது. உண்மையில் வெகு சில நாட்கள் மட்டுமே காதலியாய் ஒரு ஈர்ப்பு. அவனால் அதிலிருந்தே வெளியே வர முடியவில்லை. ஆனால் மனது சொன்னது நிச்சயம் அவளுக்கு வருடக் கணக்காய் இருக்க வேண்டும் என்று. அவனுக்கு எப்போதாவது அந்த சந்தேகம் வரும். ஆனாலும் அப்போது நிச்சயமாய் தெரிந்ததில்லை. இப்போது நிச்சயம். பிடித்தாலும் சொல்ல மாட்டாளாம் அப்படி என்ன நான் செய்து விட்டேன். போடி என்ற எண்ணம் தான் இப்போது.

கிருஷ்ணாவின் மெசேஜ் பார்த்த காவ்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அவனுக்கும் என்னை பிடிக்குமா? அதனால் தான் இவ்வளவு கோபமா, நான் அவனை உயிரோடு கொள்கிறேனா, எதுவோ ஒன்று அவனின் வார்த்தைகள் தாள முடியாமல் அழுகை வெடித்து கிளம்பியது.

என்ன தப்பு செய்தால் அவள் என்று இன்னம் அவளுக்கு புரியவில்லை. சிறு வயது முதலே அவளுக்கு இந்த நேர்மை நாணயம் மீதெல்லாம் அதீத பிடித்தம்.

வயது ஏற ஏற செய்யும் செயல்யாவற்றிலும் அவளுக்கு ஒரு நேர்மை வேண்டும். தப்பு செய்பவர் யாராயிருந்தாலும் அவளுக்கு பிடிக்காது. அதற்காக உலகத்தை திருத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பிவிட மாட்டாள்.

இப்படி பேசுபவர்களை முட்டாளாய் பார்க்கும் உலகம் இது என்று புரிந்து வைத்திருக்கும் பக்குவம் இருந்தது. நல்லவராய் இருப்பது சுலபம், ஆனால் அதை நிரூபிப்பது கடினம். அதனையும் விட அது ஒரு முட்டாள்தனமான செயலாய் பார்க்கப்படும் என அறிந்தவள். அவளுக்கு தெரிந்து அவள் செய்த நேர்மையற்ற செயல் அம்மாவிடம் வேறு காரணம் சொல்லி வேலைக்கு இன்டர்வியூ சென்றது. இது ஒன்று தான். பின்பு அதனையும் சேர்ந்த உடன் சொல்லிவிட்டாள்.   

தான், தன்னுடைய வாழ்க்கை, தன்னை சுற்றி இருப்பவர்கள், இப்படி தான் நேர்மையாக உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவாள்.

கிருஷ்ணாவை அவளுடைய பப்பி லவ் என்று சொல்லலாம், இன்ஃபாக்சுவேஷன் என்றும் சொல்லலாம், ஃபார்ஸ்ட் லவ் என்றும் சொல்லலாம், ட்ரூ லவ் என்று சொல்லலாம்.

அதாவது பப்பி லவ்வில் இருந்து, இன்ஃபாக்சுவேஷனாக மாறி, பின்பு இது ட்ரூ லவ் என்று அடையாளம் கண்டு கொண்டாள். ஆனால் காட்டிக் கொள்ள தோன்றியதேயில்லை. ஏனென்றால் அவனின் அப்பா அம்மா.

ஒரு ஒன்பதாவது பத்தாவது படிக்கும் போது பண பரிவர்த்தணைகளின் விவரம் புரியும் போது ரேணுவின் அப்பா லஞ்சம் வாங்குவார் என்று சக தோழி ஒருத்தியின் மூலம் தெரியும். அதனையும் விட அதற்கான குற்ற உணர்ச்சி சிறிது இன்றி பணப் பெருமைகளை சசிகலா பேசும் போது எப்படி இப்படி சிறிதும் உறுத்தாமல் பேசுகிறார்கள் என்ற எண்ணம் தான் அதிகம்.

செய்வது தவறு இதில் பெருமை வேறா என்ற எண்ணம் தான். அதனால் தான் கிருஷ்ணாவின் மீதிருந்த ஈர்ப்பை பின்பு அது காதலாக மாறிய போதும் சொல்ல விழைந்தது இல்லை. அவளுக்கு என்றும் அது ஏற்புடையது அல்ல. கிருஷ்ணா என்பவன் தனி மனிதன் மட்டுமல்லவே. அவனோடு அவன் குடும்பமும் தானே.

உண்மையில் சசிகலா சொன்ன உங்க பையனை உங்க கிட்ட இருந்து பிரிச்சு கொண்டு போய்டுவா என்ற சொல் அப்படி தவறானது. அப்படி எதுவும் செய்திடக் கூடாது என்பதினால் தான் கிருஷ்ணாவிடம் சொன்னதில்லை. 

 ஏதாவது சாகசங்கள் செய்திருந்தால் கிருஷ்ணாவை அவளால் தனியாக வர வைத்திருக்க முடியுமோ என்னவோ தெரியாது? ஆனால் என்றும் அதனை செய்ய மாட்டாள். காதலில் கூட அவளுக்கு நேர்மை வேண்டும். அதனைக் கொண்டு அவள் கிருஷ்ணாவை தவிர்க்க தவிர்க்க எல்லாம் அவனை ஈர்த்து அவனை காதலில் தள்ளியது.     

அவர்கள் வீட்டிற்கு போவதை குறைத்துக் கொண்டாள். அவர்களை அவள் பார்க்கும் பார்வையே மாறிவிட்டது . சசிகலா காவ்யாவின் மீது கொண்ட துவேஷத்திற்கு காரணம் இதுவாகக் கூட இருக்கலாம்.

சிறு வயது முதல் இருந்த பழக்கம் எல்லாம் குறைந்து நின்றே போனது. சொந்தம் நண்பர்கள் என்பது எல்லாம் போய் வெறும் பக்கத்துக்கு வீட்டுக் காரர்கள் மட்டும் ஆகிப் போனர்.

எது எப்படி மாறினாலும் கிருஷ்ணாவின் அன்பு அவளிடம் சிறிதும் குறைந்ததில்லை. அவளை வேற்றாளாக என்றும் பார்த்ததில்லை. அவனது தூய்மையான அன்பு மட்டுமே! அது காதலாக மாறியது நிச்சயம் காவ்யாவினால்.

அவளின் பார்வைகள், அவளின் ஒதுக்கங்கள், அவளின் சகஜ மனப்பான்மை குறைந்தது, இப்படி தான் கிருஷ்ணா அவளை கவனிக்க ஆரம்பித்தான். அது காதலாக பரிமளிக்க துவங்கியது இப்போது ரேணுகாவின் திருமணத்தை ஒட்டி தான்.

கிருஷ்ணகாவியமாக மாற்றியது காவ்யா மட்டுமே!

“இப்போது எனக்குப் பிடிக்கிறது, ஆனாலும் நான் சொல்ல மாட்டேன், நீ வேண்டாம்” எனச் சொல்வது கிருஷ்ணாவினால் எந்த வகையிலுமே தாள முடியவில்லை. அவனால் அதிலிருந்து இன்று வரை மீண்டு வர முடியவில்லை.  ஏனென்றால் அவனது காதல் எப்படியோ, ஆனால் அவளின் மீதிருந்த அன்பு தூய்மையானது. அவளின் மீது மட்டுமல்ல அந்த குடும்பத்தின் மீதே!

அது பொய்த்துப் போன உணர்வு தான் இப்போது அவனிற்கு! 

அதிலும் இப்போது ரேணுவின் வாழ்க்கை சிக்கலாகி விட, எதையும் சரியாக யோசிக்க கூட அவனால் முடியவில்லை. காவ்யாவை பற்றி யோசிக்க விருப்பமேயில்லை!   

Advertisement