Advertisement

அத்தியாயம் எட்டு :

உள்ளே வந்தவரால் இந்த விஷயத்தால் சந்தோஷப்பட முடியவில்லை. அவர்கள் எப்படியோ ரத்னா சுமுகமாகவே இருந்து விட முயன்றார். அதனால் தான் வரன் வீட்டினில் இப்படி சொல்லியிருப்பது தெரிந்தும், என்னவோ காவ்யாவை பிடிக்கவில்லை என்றுணர்ந்து அவளை மன்னிப்பு கேட்க வைத்து, “இனி இப்படி செய்யாதீர்கள்” என்று சொல்ல தான் சென்றார்.

அவர்கள் நடந்து கொண்டது, பின்பு காவ்யா பேசியது எல்லாம் சேர்த்து சுமுக உறவு என்றுமே இனி சாத்தியமல்ல என்று புரிந்து விட்டது. அதிலும் அவள் கிருஷ்ணா பிடித்தம் என்று சொல்ல, ஒருவேளை இப்படி எதுவும் நடந்து விடுமோ என்று தான் அவர்கள் அப்படி சொன்னாரோ என்றும் தோன்ற, ஆனால் எப்படிஎன்றாலும் அவர்கள் செய்தது சரி கிடையாதே!

அவருடைய மகள் என்பது மட்டுமல்ல, எந்த பெண்ணை பேசினாலும் அது சரி கிடையாதே! அதிலும் இரண்டாம் தாரமாய் இவளை விட பதினேழு வயது மூப்பில் ஒரு வரன் வரவும் தான், தன்னுடைய நிதானத்தை இழந்து சண்டையிட்டார்.

ஆனாலும் அவர்கள் வீடு காலி செய்து போவது என்னவோ அப்படி ஒரு வருத்தத்தைக் கொடுத்தது. அப்படியே அமர்ந்திருக்க நவீனும் பிரவீனும் எழுந்து வரவும் அவர்களுக்கு சமைக்க வேண்டிய அவசியம் உணர்ந்து தினப்படி வேலைகளை ஆரம்பிக்க, பார்த்த அவர்களுக்குமே அவ்வளவு அதிர்ச்சி.

ஏனோ காவ்யா எட்டு மணிக்கு தான் எழ, எழுந்து குளித்து உணவு உண்டு வெளியே வந்து நிற்கவும், அனிச்சை செயலாய் பக்கத்துக்கு வீட்டின் கதவைப் பார்க்க, அங்கே ஒரு பெரிய பூட்டு தொங்கியது. கேட்டும் பூட்டியிருந்தது. படியிறங்கி சென்று காம்பவுண்ட் சுவரின் பக்கம் நின்று எட்டிப் பார்த்தாள்.

காவ்யா வாசல் செல்வதை பார்த்ததுமே அவளின் பின் ரத்னா வந்தார். அவள் எட்டிப் பார்ப்பதை பார்த்தவர், “அவங்க போயிட்டாங்க” எனவும்,

“எங்க போயிட்டாங்க”  

“வீடு காலி பண்ணிட்டு போய்ட்டாங்க”  

“என்ன?” என்றாள் அதிர்ந்து. பின் வாக்கியமே மாறிவிட்டது “கிருஷ்ணா போயிட்டானா?” என்று. 

“ஆம்” என்பது போல ரத்னா தலையசைக்க,

“என் கிட்ட சொல்லவேயில்லை” என்றாள் அவளையும் மீறி, மனதும் அடித்துக் கொண்டது. இது சரிவராது என்பதினால் தான் கிருஷ்ணாவை விட்டு தள்ளி தள்ளி நின்றாள். ஆனால் போய் விட்டான் என்றதும் கண்களில் நீர் நிறைந்ததது.

ரத்னாவாலும் மகளை கடிய முடியவில்லை. “உள்ள வா” என்றழைத்த போதும், பூட்டிய வீட்டையே திரும்ப பார்த்திருந்தாள். பின்பு “உள்ள வா” என ரத்னா சற்று அதட்டல் இட வந்து விட்டாள்.

ஆனாலும் விஷயத்தை ஜீரணிக்க முடியவில்லை. அமைதியாக சென்று படுத்துக் கொண்டாள். ரத்னாவும் தொந்தரவு செய்யவில்லை. முழுதாக இரண்டு நாட்கள் அவள் தெளிவதற்கே ஆகிற்று.

பின்பு தான் வேலை குறித்த ஞாபகம் வர, அந்த நியுஸ் சேனலில் ஒளிபரப்பான ஆங்கில நியூசை வீட்டினில் போட்டு விட்டாள். வேலைகளை முடித்து ரத்னா வந்து அமர்ந்து “வேற ஏதாவது போடு காவ்யா” என்று சொல்லவும்,

“அம்மா நான் இந்த வேலைக்கு போகட்டுமா?”  

அவருக்கு புரியவில்லை!

“இந்த மாதிரி நியூஸ் படிக்க. இந்த சேனல் தான். பாரு எவ்வளவு நல்லா இருக்கு, இதுல தப்பா பேச என்ன இருக்கு?” என்று கேட்க,

அது நன்றாக தான் இருந்தது. குறை சொல்லும் படி ஒன்றுமில்லை. “யோசிக்கலாம்!” என்றார்.

எப்படியோ பேசிப் பேசி அவரை கரைத்து, அவர்கள் சொன்ன பத்து நாட்கள் கெடு முடிவதற்குள் வேலையில் சேர்ந்து விட்டாள்.

முதல் நாள் அவ்வளவு பதட்டம் கூட, ஆனால் ரிதன்யா மிகவும் சிநேகமாக இருந்து உதவினாள். அதனால் பதட்டம் சற்று மட்டுப் பட்டது. இரண்டும் மூன்று நாட்கள் ஆனதுமே பழக்கம் ஆகிவிட்டது. அந்த பதட்டம் தணிந்ததும் “கிருஷ்ணா தன்னை இந்த சேனலில் பார்த்திருப்பானா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்பது தான் சிந்தனையாக போய்விட்டது.

தொலைபேசியில் அழைப்போமா, அழைப்போமா என மனது அலைபாய்ந்தது. முன்பானால் அவளுக்கு அவனை பிடிக்கும் என கிருஷ்ணாவிற்கு தெரியாது. இப்போது தெரியும் தானே. அதனால் பேச முடியவில்லை, பேசும் தைரியமும் இல்லை.

சரி தன்னுடைய தொலைபேசியில் இருந்து அழைக்காமல் வேறு எண்ணிலிருந்து அழைக்கலாமா எனவும் யோசனை. அலுவலக எண்ணில் இருந்து அழைக்க ஆரம்பித்தவள், நொடியில் முடிவை மாற்றி அவளின் எண்ணில் இருந்து அழைத்தாள். வெகு நேரம் கழித்தே ஃபோன் எடுக்கப் பட்டது. எடுக்கப் படுவதற்குள் மனது அப்படி அடித்துக் கொண்டது.

“கிருஷ்ணா” என அழைக்க, “சொல்லுடி” என ரேணுவின் குரல் தான் கேட்டது. அவன் எடுக்கவில்லை என்ற ஏமாற்றத்தை நொடியில் சகித்துக் கொண்டு, “சொல்லுடி கல்யாணப் பொண்ணு எப்படி இருக்க?” என்றாள்.

“ம்ம் நல்லாயிருக்கேன்” எனச் சொல்ல, அந்த நல்லா இருக்கேனில் அப்படி ஒன்றும் பெரிய உற்சாகமில்லாத மாதிரி தான் தோன்றியது. கூடவே “அப்பா அம்மா பண்ணினதுக்கு ரொம்ப சாரிடி” என்றாள்.

“விடுடி அதைப் பேச வேண்டாம்” என்றவள், “எப்படி இருக்கு உன் லைஃப் எப்படி பார்த்துக்கறார் உன் வீட்டுக்காரர்”  எனக் கேட்க,

“அவர் ஒரு வாரம் தாண்டி இங்க இருந்தார், இப்போ யு எஸ் போயிருக்கார்” என்றாள் ரேணுகா.

“எப்போ வருவார்”

“தெரியலை, என்னை தான் கூப்பிட்டுக்குவார் போல”  என்று பேசிக் கொண்டிருக்க, “கிருஷ்ணா இல்லையா?” என்றாள் தயங்கித் தயங்கி. “உன் ஃபோன்னு என்கிட்ட குடுத்தான், இரு எங்கன்னு பார்க்கிறேன்” என்றவள்,

“எங்கேயோ காணம்டி” என,

“நான் வேலைக்கு சேர்ந்திட்டுட்டேன்” தொலைக்காட்சி பேர் சொன்னவள், “அங்க நியூஸ் ரீட் பண்றேன், இன்னும் முப்பது நிமிஷத்துல வருவேன், பார்த்துட்டு சொல்லு. உனக்காக வெயிட் பண்ணுவேன்” என்று சொல்லி வைத்து விட்டாள்.

“வாவ் நியூஸ் ரீடிங் கா” என ரேணு குதிக்க, இவள் குதிப்பதை பார்த்ததும் சசிகலா வந்தவர் “என்ன ரேணு?” என்றார்.

“ஒண்ணுமில்லம்மா”  

“ஓஹ் மாப்பிள்ளை ஃபோனா” என அவர் பதில் சொல்லிக் கொண்டு நகர்ந்து விட, “இந்த அம்மா வேற” என சலித்தாலும், “ஷ், ஷப்பா” என பெருமூச்சு விட்டாள். பின்பு அண்ணனை தேட, இப்போது அவர்கள் இருப்பது ஒரு அபார்ட்மெண்டில், லசுரி அபார்ட்மென்ட் மூன்று பெட் ரூம் கொண்டது,

தனி வீடு ஒரு வகை என்றால் இது ஒரு வகை, சசிகலா காவ்யாவின் பயம் இல்லாமல் நிம்மதியாக இருந்தார். என்ன கிருஷ்ணா அவர்களுடன் சரியாகப் பேசுவதில்லை. அதெல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. காவ்யாவின் தொலை பேசி என்று தெரிந்தால் அவ்வளவு தான். அம்மாவை பயப்படுத்தாமல் அண்ணனைத் தேட, அவனை வீட்டினுள் காணவில்லை.

இந்த இரண்டு நாட்களாக பார்த்திருந்தால் அவ்வப் போது மாடிக்கு சென்று விடுவதை, இவர்கள் இருப்பது இரண்டாவது மாடியில் அது ஐந்து அடுக்குகள் கொண்டது. லிப்டில் மொட்டை மாடிக்குச் செல்ல, அவளை ஏமாற்றாமல் கிருஷ்ணா அங்கே தான் இருந்தான்.

“கிருஷ்ணா” என ரேணுவின் குரல் கேட்க, அமைதியாக திரும்பியவனிடம், “ஏன் நீ பேசலை?” என்று கேட்கவும்,

“பேசத் தோணலை” என்றான். ரேணுவிற்கு அம்மா அப்பா செய்தது, அதற்கு ரத்னா சண்டையிட்டது தான் தெரியும். காவ்யாவின் பேச்சுக்கள் தெரியாது. அதிலும் “எனக்கு கிருஷ்ணாவைப் பிடிக்கும்” என்று சொன்னது எல்லாம் தெரியவே தெரியாது.

“நீ போ, நான் வர்றேன்” என்று விட, “கிருஷ்ணா” என்றவளிடம், “ப்ளீஸ், என்னை விடு. நான் வர்றேன்” என்றான்.

திரும்ப எதுவும் பேசாமல் வந்து விட்டாள். அரை மணிநேரம் கழித்து அவன் வந்த போது அங்கே ரேணு உட்கார்ந்து டீ வீ பார்த்துக் கொண்டிருந்தவள், “கிருஷ்ணா வா வா உட்காரு, அங்கே பாரு” என டீ வீ யைக் காட்ட, என்ன வென்று தெரியாமல் பார்வை அங்கே செல்ல, அப்படியே நிலைகுத்தி தான் நின்றான்.

காவ்யா நியூஸ் வாசித்து கொண்டிருக்க, என்ன இது அவள் நினைப்பாகவே இருப்பதால் பார்ப்பதெல்லாம் அப்படி தெரிகின்றதா? எனக் கண்ணை கசக்கி பார்த்தான்.

“கிருஷ்ணா அது காவ்யா தான், புதுசா சேர்ந்திருக்காளாம்”  

என்னவோ நேரில் பார்ப்பதை விட, இன்னும் பளிச்சென்று இருக்க, சில நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை, எழுந்து ரூமில் சென்று கதவை அடைத்துக் கொண்டான். காவ்யா எந்த அளவிற்கு பளிச்சென்று இருந்தாளோ, அந்த அளவிற்கு கிருஷ்ணா இருட்டடித்து இருந்தான்.

வீட்டை விட்டு வெளியே சென்று நான்கு நாட்களாவது இருக்கும். சவரம் செய்யாத முகம், உண்கிறான் உறங்குகிறான், அதைக் கூட சரியாக செய்வது கிடையாது.

அன்று மாலை அலுவலகத்தில் இருந்து வந்த ராஜேந்திரன், “கிருஷ்ணா வேலைக்கு லீவ் சொல்லலையா. உன் ஆஃபிஸ்ல இருந்து ஃபோன் வந்தா எடுக்க மாட்டேங்கறியாம், சொன்னாங்க. எனக்கு கால் பண்ணியிருந்தாங்க” என்றார்.

“நான் வேலையை விடலாம்னு இருக்கேன் பா” என மின்னாமல் முழங்காமல் அவரின் தலையில் இடியை இறக்கினான்.

“என்ன?” என்று அவர் அதிர்ச்சியில் உறைய, “ஆமாம்ப்பா, விட்டுடலாம்ன்னு இருக்கேன்”

“ஏன்டா? ஏன்டா?” என்று அவர் பதறினார்.

மின்சார வாரியத்தில் அவனுக்கு வேலை. அவனின் வயதிற்கு உயர்ந்த பதவி. இன்னும் அவன் அடையப் போகும் தூரங்கள் அதிகம். அவன் படித்தது எம் ஈ எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ். படிப்பை முடித்தவுடனே அவனை எதோ பரீட்சை எழுத வைத்து இருபது லட்ச ரூபாய் பணம் கொடுத்து, இந்த வேலையை வாங்கினார். சேர்ந்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன.

அரை லட்சம் சம்பளம், அந்த வேலையை வாங்குவதற்குள் எத்தனை சிரமம், இப்போது வேலையை விடுகின்றானா? இவனுக்கு பைத்தியமா? என ராஜேந்திரனுக்கு தோன்றியது.

“என்னடா உளர்ற?”  

“உளறலை பா, நான் இனிமே அந்த வேலைக்குப் போக மாட்டேன்”  

“ஏன்டா? ஏன்டா?” என்று கோபமாகக் கேட்டவரிடம்,

“ஏன்னா அது உங்க லஞ்சப் பணத்துல வாங்கினது, அதையும் விட அந்த மாதிரி பணத்தைக் கொடுத்து வாங்கறதும் தப்பு தான்”  

“இவ்வளவு நாளா தெரியலையோ, எவளோ சொன்னா உடனே தெரிஞ்சிடுச்சோ”  

“மறுபடியும் சொல்றேன் யாரை பத்தியும் பேசக்கூடாது. அதுவும் காவ்யாவை மரியாதையில்லாம பேசவே கூடாது. மேல மேல எதாவது பேசாதீங்கப்பா அதெல்லாம் உங்க பிள்ளைங்களுக்கு திரும்பிடப் போகுது” என்றவன்,

“எனக்கு அப்போ உண்மையா பணம் கொடுத்து வேலை வாங்கறது தப்பா தெரியலை. லஞ்சம் வாங்குறது தப்பு தான். ஆனா இவ்வளவு பணம் குடுத்து வாங்கறவன் வேற என்ன செய்வான், சமுதாயமே அந்த பாதையில போகும் போது மாறி நிக்கறவங்க பெருசா ஒன்னும் செய்ய முடியாது. இப்படி தான் என்னோட எண்ணங்கள் இருந்தது. ஆனா ஒரு விஷயம் மட்டும் கண்டிப்பா என்னால சொல்ல முடியும், எப்பவும் நான் லஞ்சம் வாங்கியிருக்க மாட்டேன். என்னோட வேலைல தவறி இருக்க மாட்டேன்”    

“ரொம்ப நாள் ஒரு மாயைய்ல இருந்துட்டேன். அதுல இருந்து வெளில வரணும்னு பார்க்கறேன். அவ்வளவு தான்! உங்க வாழ்க்கை நீங்க வாழ்ந்துக்கங்க. அதை தப்புன்னு சொல்ற அளவுக்கு இன்னும் நான் வாழ்க்கையில எதுவும் செய்யலை, அதையும் விட, அதை நான் இவ்வளவு நாள் அனுபவிச்சும் இருக்கேன்”

“நீங்க தப்பு செஞ்சீங்களா, எந்த அளவுக்கு செஞ்சீங்க எதுவும் எனக்கு தெரியாது. இனி தெரியவும் வேணாம், என்னை சுதாரிசிக்க கொஞ்சம் டைம் கொடுங்க. அண்ட் கண்டிப்பா இந்த வேலை வேண்டாம். ஊருக்குள்ள ஆயிரம் வேலை இருக்கு. என்னால பிழைக்க முடியும்னு நம்பிக்கை இருக்கு. என்ன ஒரே சந்தோசம் ஃப்ரீ சீட்ல தான் படிச்சேன். அதனால என் படிப்புக்கு எதுவும் நீங்க லட்சக்கணக்குல செலவு பண்ணலை. அது உங்க சம்பளத்துல இருந்து செஞ்சதா நினைச்சுக்கறேன்” என்றான்.

பார்த்திருந்த சசிகலாவும் ரேணுவும் வாயடைத்து போனர்.

“என்னடா? என்னடா கிருஷ்ணா? என்னவெல்லாமோ பேசற” என சசிகலா பதற, “இல்லைம்மா, சரி சரின்னு கடந்து போயிடணும்னு நினைச்சாலும் முடியலை”

“எல்லாம் அவளால” என்று ஆரம்பிக்க. “அம்மா” என்றவன், ‘கண்டிப்பா அவளால தான். நான் இப்படி யோசிச்சதே கிடையாது. ரொம்ப வெக்கமா இருக்கு. அதுக்காக சமுதாயத்தை திருத்தணும்னு நான் கிளம்பலை. என் வரையில சரி படுத்திக்கறேன். அவதான் என்னை பிடிச்சிருக்கு சொன்னா. நான் எப்பவும் சொன்னது கிடையாது, சொல்லப் போறதும் கிடையாது, அதனால சும்மா அவளை இழுக்காதீங்க. அவ்வளவு கூட ஒரு உணர்வில்லாம நான் இருந்திருக்கேன்றது அவ்வளவு கேவலமா இருக்கு”

எல்லாம் எல்லாம் சிக்கலாக்கி கொண்டது போல ஒரு தோற்றம் வந்தது ராஜேந்திரனுக்கு.

“இப்போ மட்டும் என்ன சொல்றேன், நான் முடிஞ்சவரை என்னை சரி பண்றேன். என்னை என் இஷ்டத்துக்கு விடுங்க. இப்போ அவ என்னோட எங்கேயும் இல்லை. சும்மா சும்மா அவ பேரை இழுத்து எனக்கு ஞாபகப் படுத்தாதீங்க”  

“எனக்கு அவளை மறக்கணும், மறக்க விடுங்க!” என்றான் தெளிவாக. காவ்யாவின் பெயர் கூட சொல்லவில்லை.

ஆம்! அவளை காதலிக்கிறோமா என நினைத்ததே வெகு சில நாட்கள் தான். அதனை மறக்க விரும்பினான் முழு மூச்சாக. “என்னை அவள் எந்த வகையிலும் கொள்ளவில்லை. காதலிக்கிறேன் என்றும் சொல்ல விழையவில்லை. உன் அப்பா செய்வது தவறு என்று குற்றம் சாட்டவில்லை, சண்டையிடவில்லை, எதுவுமே செய்யவில்லை. என்னிடம் சொல்லாமல் மறைத்து என்னிடம் இருந்து ஒதுங்க நினைத்திருக்கிறாள். இதுதானா நீ கிருஷ்ணா அவளுக்கு. தப்பென்றால் சண்டை தானே இட வேண்டும் நீ வேண்டாம் என்று ஒதுங்குவது எந்த வகையில் நியாயம்” அவனால் காவ்யாவின் செய்கையை ஜீரணிக்க வே முடியவில்லை.

என்னவோ காவ்யா தன்னை ஏமாற்றி விட்டது போல ஒரு தோற்றம்!என்னவென்று சொல்லத் தெரியவில்லை, இல்லை அவன் நினைப்பு தவறா என்றும் புரியவில்லை. வாழ்க்கையில் தடம் மாறியதால் தடுமாறி நின்றான்.   

Advertisement