Advertisement

அத்தியாயம் ஏழு :

மிக அழ்ந்த மௌனம், “மா, பேசு” என்று காவ்யா  பேசமாட்டேன்” என காவ்யா சொல்லவும், அது அவளின் அம்மாவிற்கு புரிந்ததோ இல்லையோ கிருஷ்ணாவிற்கு புரிந்தது, நடுவில் பேசமாட்டாள் கடைசியில் பேசுவாள் என்று.

“ஏன் இப்படி பண்ணுனீங்க, என் பொண்ணுக்கு வந்த வரன் வீட்ல இருந்து காவ்யாவைப் பத்தி பக்கத்துக்கு வீடுன்னு உங்க கிட்ட விசாரிச்சு இருக்காங்க என்ன சொன்னீங்க?” என்றார்.

“சொல்லிவிட்டார்களா” என்பது போல சசிகலாவின் முகத்தினில் ஒரு அதிர்ச்சி, சில நொடிகளில் சுதாரித்து கொண்டார். ஆனால் இது கிருஷ்ணாவின் கண்களுக்கு தப்பவில்லை. அம்மாவின் செய்கை அப்படி ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தது.

“நானா? நான் ஒன்னும் சொல்லலையே!” என சசிகலா சொல்ல,

“பொய் சொல்லாதீங்க அண்ணி, அவங்க உங்க பக்கத்துக்கு வீட்ல, இத்தனை வருஷம் இருக்குறவங்களே அப்படி சொல்றாங்க. உங்க பொண்ணை எப்படி கொண்டு வர்றதுன்னு கேட்கறாங்க?” என சொல்லும் போதே அழுகை வெடித்து விட,

“மா அழாதீங்க” என அவரை அதட்டினாள் காவ்யா.

“நான் ஒன்னும் பொய்யா சொல்லலையே, இருக்குறதை தானே சொன்னேன், பொண்ணு எப்படின்னு கேட்டாங்க, பொண்ணு சரியான வாய் யாரையும் மதிக்க மாட்டா, மரியாதைன்னா கிலோ எவ்வளவுன்னு கேட்பா, அவங்கம்மா பேச்சை கேட்க மாட்டா, எப்பவும் எல்லோரோடையும் சண்டை போடுவா, இவ்வளவு தான் சொன்னேன். உண்மை அதுதானே! எனக்கு உன் பொண்ணை பத்தி அதுதான் அப்பிராயம் சொன்னேன்!” என்றார் தெனாவெட்டாக.

“நீங்க இது மட்டும் சொல்லலை அண்ணி, சரியான அடங்காபிடாரின்னு சொல்லியிருக்கீங்க, இவளை கட்டினா உங்க மகனை பிரிச்சு கொண்டு போயிடுவா, கடைசி காலத்துக்கு உங்க மகன் உங்களுக்கு இல்லாம பண்ணிடுவான்னு என்னென்னமோ சொல்லியிருக்கீங்க, அசல்ன்னா கூட பரவாயில்லை, உறவுக்குள்ள சொல்லியிருக்கீங்க. அப்போ அப்படியே அந்த பேச்சு பரவாதா? அவ தெரியாம ஏதாவது தப்பு செஞ்சிருந்தா கூட மன்னிப்பு கேட்கச் சொல்லிட்டேன். இனி இப்படி பண்ணாதீங்க” எனக் கை எடுத்துக் கும்பிட,

பார்த்திருந்த கிருஷ்ணாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இப்படி பட்ட சூழ்நிலைகள் அவனுக்கு புதிது அவனுக்கு கையாளவும் வரவில்லை. கிருஷ்ணா வாயடைத்து பார்த்திருந்தான்.

காவ்யா அம்மாவின் கையை வேகமாக அருகில் வந்து இறக்கி விட்டாள்.

 ராஜேந்திரன் தான் இடை புகுந்தார், “கையெல்லாம் ஏன் எடுத்துக் கும்பிடற ரத்னா, இனிமே இப்படி நடக்காம நான் பார்த்துக்கறேன்” என்றார்.

“மா, வாங்க போகலாம். இதுதான் விஷயமா? நான் என்னவோ எதோ பயந்துட்டேன். இதுக்கு போய் என்னை சாரி கேட்க சொல்லி, கையெடுத்து கும்புடறீங்க. அவங்களுக்கு விசாரிக்க வேற ஆள் கிடைக்கலை போல” எனத் திமிராக காவ்யா பேசினாள். மனம் அடங்க மறுத்தது. என்ன செய்தேன் நான் இவர்களுக்கு என்னை பற்றி இப்படி தப்பாய் பேசியிருக்கிறார்கள் என்று. அதற்காகவே அப்படி ஒரு திமிரான பதில்.  

“நீ வாயை மூடு” என்று அவளின் அம்மா அதட்ட,

“உன் பொண்ணு எல்லாம் அடங்க மாட்டா, பேசாம வீட்டை விலைக்கு குடுத்துடுங்க. மார்கெட் வேல்யு விட டபிளா கொடுக்கறேன். உங்க கஷ்டமும் குறையும்” என்று ராஜேந்திரன் பேசினார்.

“அப்பா” என கிருஷ்ணா அதட்ட அதட்ட,

சசிகலாவும் “பேசாம குடுத்துட்டு போயிடுங்க, உங்களை பத்தி யார் விசாரிச்சாலும் எங்களுக்கு தெரியாது சொல்லிடறோம்” என பதிலுக்கு அவரும் திமிர் பேசினார்.

“இவங்க எல்லாம் ஒரு ஆளுங்கன்னு பேச வந்தீங்க பாருங்க, கிளம்புங்கம்மா!” என அம்மாவை அதட்டினாள் காவ்யா.

“ஏய் என்ன பேசற?” என சசிகலா காவ்யாவை அதட்ட,

“என்ன பேசறேன்? நாங்க உங்ககிட்ட கஷ்டப் படறோம்னு சொன்னோமா? குடியிருக்குற வீட்டை விலை பேசறீங்க. அப்போ அப்படி தான் பேசுவேன்!” என்றாள் கோபமும் ஆதங்கமும் கலந்து.

“நீ வா” என அவளின் அம்மா இழுத்துப் போக,

“முதல்ல உன் பொண்ணை கூட்டிட்டு போ, இல்லை அடிச்சு துரத்துவேன்” என்று சசிகலா வார்த்தை விட,

காவ்யாவை தப்பாக பேசியிருக்கிறார்கள் என்ற விஷயம் கிரகிக்கும் முன்னே அம்மாவின் வார்த்தைகளை கேட்டு கிருஷ்ணா ஸ்தம்பித்து நின்று விட்டான்.

“மா விடுங்க” என்று கையை உதறியவள், “எங்க அடிப்பீங்களா, அடிங்க பார்ப்போம். எனக்கு திமிரா? உங்களுக்கு தான் திமிர்! எவ்வளவு தைரியமா அடுத்த வீட்டு பொண்ணை தப்பு தப்பா பேசியிருக்கீங்க. அதுக்கு எங்கம்மா வந்து சண்டை போடாம, இனிமே இப்படி பேசாதீங்கன்னு சொல்லி என்னையும் மன்னிப்பு கேட்க வைக்கறாங்க, ஆனாலும் நீங்க என்னை அடிப்பீங்களா அடிங்க பார்ப்போம்” என்று சசிகலாவின் முன் நிற்க,

“நீ வா, நீ வா” என ரத்னா அவளின் கை பிடித்து இழுத்தார்.

கிருஷ்ணா எதிலும் தலையிடவில்லை, பார்வையாளராய் மாறிவிட்டான்.

“ஆமாம் எங்க வீட்டை விலை பேசறீங்களே, அதுவும் மார்கெட் வேல்யு விட அதிகமா பேசறீங்களே, எப்படி வந்தது பணம்? உங்க பரம்பரை பணமா? இல்லை தொழில் செய்யறீங்களா எப்படி வந்தது பணம்?”  

கிருஷ்ணாவிற்கு அவள் செல்லும் பாதை புரிய ஒரு இயலாமையில் அமர்ந்து விட்டான்.

“என்ன? என்ன பேசறே நீ? வா, வா!” என ரத்னா  அவளை தடுத்து இழுக்க,  

“விடுங்கம்மா, எவ்வளவு ஆணவம் இவங்களுக்கு, எவ்வளவு திமிர் இவங்களுக்கு, தப்பு செய்யற இவங்களுக்கே இவ்வளவு இருக்கும் போது நேர்மையா உழைக்கற நமக்கு எவ்வளவு இருக்கணும். கொஞ்சமாவது மனசு உதைக்க வேண்டாம். எந்த உறுத்தலும் இல்லாம எவ்வளவு பெருமை பேசறாங்க. அங்க இடம் இருக்கு, இங்க வீடு இருக்கு, இந்த நகை ரூபி எமரால்ட்ன்னு? எப்படி வந்தது பணம்?”

“கொஞ்சமாவது கூச்சம் இருக்கா? செய்யற வேலைக்கு பெருமை வேற! இதுல நம்ம வீட்டை விலை பேசறாங்க. உங்களை மாதிரி ஆளுங்களைப் பார்க்கும் போதே மனசு உறுத்தணும் மா அவங்களுக்கு. ஒத்தை ஆளா எவ்வளவு சிரமப் பட்டு இருக்கறீங்க. உங்களுக்கு இடைஞ்சல் கொடுக்கறாங்கன்னா என்ன சொல்ல?” என்று ஆவேசமாகப் பேசினாள்.

ராஜேந்திரன் இவள் பேசப் பேச “சின்ன பொண்ணாச்சேன்னு பார்க்கிறேன், இல்லை..” என்று கோபமாக வர,

“இல்லை, என்ன பண்ணுவீங்க?” என்று காவ்யா குரல் உயர்த்த, அதுவரை அமைதியாக இருந்த கிருஷ்ணா, இடத்தை விட்டு எழுந்தவன், அவளின் கையை பிடித்து பிடித்து இழுத்துக் கொண்டிருந்த ரத்னாவிடம், “விடுங்க அத்தை” என்றவன், “நீ வா” என்று அவளின் கை பிடித்து பலமாய் இழுத்து வெளியே போக, ரத்னா அவனின் பின்னோடு நடந்தார்.

“நீயேண்டா அவ கையை பிடிக்கிற, விடு!” என சசிகலா அதட்டினார்.

“விடு கிருஷ்ணா” என்று அவனின் கையை எடுத்து விட்டவள், “என்னை வெளிய தான் இழுத்து போய் விடறாங்க, வேற ஒன்னும் பண்ணலை. எப்பவும் உங்களுக்கு உங்க பையன் என் பின்னாடியே வந்துடுற மாதிரி ஒரு பயம். உண்மையில அப்படி இல்லை. அண்ட் உங்களுக்கு தெரியுமா? கிருஷ்ணாவை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவங்களுக்கு என்னை பிடிக்கற மாதிரி இல்லை. இது வேற மாதிரி, கல்யாணம் பண்ற மாதிரி!” எனச் சொல்ல,

என்ன பேசுகிறாள் இவள் என்பது போல அங்கே அப்படி ஒரு நிஷப்தம். ரத்னா வாயடைத்து விட, கிருஷ்ணா பார்த்தது பார்த்த படி இருந்தான்.

“ஆனா பயப்படாதீங்க நான் எப்பவும் கிருஷ்ணா கிட்ட அதை சொல்லவே மாட்டேன். ஏன் தெரியுமா? இந்த மாதிரி லஞ்சம் வாங்கி, அதுல வசதி வாய்ப்பை வளர்த்திக்கிட்டு, அதை எதோ பெருமை மாதிரி பேசற வீட்ல இருக்குற ஒருத்தன் எல்லாம் எனக்கு எப்பவும் வேண்டாம், புரிஞ்சதா!”

“இனிமே எங்க வீட்டை விலை பேசி, என்னை தப்பா பேசி, எங்கம்மாக்கு கஷ்டம் கொடுத்தீங்க” என நிறுத்த,

கிருஷ்ணா அவளைப் பார்த்து வெளியே போ என்பது மாதிரி வாயிலை நோக்கி கையை நீட்டினான்.

“என்னை சொன்னாங்க இல்லையா கிருஷ்ணா, என்னை கல்யாணம் பண்ணிக்கிறவனை கூட்டிட்டு போய் அவங்க அப்பா அம்மாவை நடுத்தெருவுல நிறுத்திடுவேன்னு, நான் தினமும் சாமி கும்பிடுவேன், உனக்கு அந்த மாதிரி ஒரு மனைவி வரணும்னு” என சொல்லி படியிறன்கினாள்.

ரத்னா “அவ தெரியாம பேசறா” என அப்போதும் சொல்ல,

“நீ வா இவங்கல்லாம் ஒரு ஆளுங்கன்னு இவங்க கிட்ட பேசற” என அம்மாவின் கைபிடித்து இழுத்து போனாள்.

அப்படியே படியில் அமர்ந்து விட்டான் கிருஷ்ணா. “சே, இந்த பார்வையா என்னை இவள் பார்த்திருக்கிறாள்” என்பது போல.

மனம் கூனிக் குறுகி விட்டது.

பிரச்சனைகள் அதோடு முடியவில்லை, போன பத்து நிமிடத்தில் ரத்னா மட்டும் திரும்ப வந்தவர், அவனை பார்த்து, “எதோ கொஞ்சம் நஞ்சம் என்ன பண்றதுன்னு தெரியாம தடுமாறினேன், இனி அப்படி கிடையாது. உங்களுக்கு மரியாதையும் கிடையாது. கூப்பிடு உங்க அப்பா அம்மாவை” எனக் கத்தினார். அவரின் பின்னோடு நவீன் ஓடி வந்திருந்தான். 

“அத்தை, இப்போ என்ன உள்ள வந்து பேசுங்க”  

அவனை தாண்டி உள்ளே வந்தவர், “சொந்த அண்ணன் இல்லைன்னாலும் எதோ சுத்தி வளைச்சு நீங்க அண்ணன் முறை தானே! அதை விடுங்க, இத்தனை வருஷம் எங்க பக்கத்துக்கு வீட்ல இருந்திருக்கீங்க, அந்த ஒரு எண்ணம் கூட இல்லையா!” என்றார் ஆவேசமாக.

“இப்போ என்ன?” என ராஜேந்திரன் கோபமாக வினவினார்.

“என்னவா? என் பொண்ணை இப்ப ஒருத்தர் பொண்ணு கேட்டு போன் பண்ணினாங்க. முப்பத்தி ஏழு வயசாம், ரெண்டு பொண்ணுங்க இருக்காங்களாம். அம்மா இல்லையாம் ரெண்டாம் தாரமா வந்திருக்கு, யாருன்னு பதறி கேட்டா?”

“வசதி கம்மி பொண்ணுக்கு கல்யாணமானா போதும்னு இருக்காங்கன்னு நீங்க சொன்னதா தான் சொல்றாங்க, சொன்னீங்களா?” என,

“அது அப்படி சொல்லலை, பொண்ணு நல்லாயிருக்குன்னு சொன்னாங்க, என்கிட்டே கேட்டாங்க, வசதி குறைவு அப்பா இல்லைன்னு சொன்னேன். அவ்வளவு தான்! இப்படி இந்த மாதிரின்னு எனக்கு தெரியாது” என்றார் திடமாய்.

“எதோ ஒன்னு, நீங்க சொன்னதுனால தானே. என் பொண்ணுக்கு கல்யாணம் செய்ய வக்கில்லைன்னு உங்ககிட்ட சொன்னேனா! அப்பா தானே இல்லை. நான் உயிரோட தானே இருக்கேன். என் பணத்துல முப்பது பவுன் செஞ்சு வெச்சிருக்கேன். உங்க பொண்ணுக்கு இதை விட பல மடங்கு நீங்க அதிகமா போட்டிருக்கலாம். ஆனா எப்படி வந்துச்சு, இவ்வளவு கீழ்தரமானவங்களா நீங்க, நல்லா இருக்க மாட்டிங்கன்னு என் வாயால எல்லாம் சொல்ல மாட்டேன். ஏன்னா சொல்லும் அவசியமேயில்லை, இந்த எண்ணம் இருக்குறவங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டாங்க” என்று ஆவேசமாக பேசிச் சென்றார்.

கிருஷ்ணா தன்னுடைய அப்பா அம்மா இப்படி செய்வார் என்று நினைத்ததேயில்லை. 

காவ்யாவை ரூமின் உள் வைத்து அடைத்து வந்திருந்தார், இவர் சென்று கதவை திறந்து விட்டவும், வெளியே வந்து அவள் கோபமாக நிற்க,

“எதுன்னாலும் நான் பார்த்துக்கறேன், நீ பேசக் கூடாது” என்று கடினமாய் சொன்னார்.

“என்ன பார்த்துக்குவீங்க? எந்த தப்பும் செய்யாம மன்னிப்பு கேட்டேன். இன்னும் என்ன செய்ய போறீங்க?”  

“நான் இவ்வளவு கீழ அவங்க நடப்பாங்கன்னு நினைச்சதே இல்லை, விசாரிச்சப்ப சரியா சொல்லலை, அதைக் கூட விடு, ஆனா இப்போ ஒரு வரன். என் பொண்ணை போய்” என தேம்பி தேம்பி அழ,

“அம்மா விடும்மா, விடும்மா” என அவரை மூன்று மக்களுமாக தேற்றினர்.

“ஃபோன் எடு நவீன், நான் மாமாவைக் கூப்பிடறேன் இவங்க என்னை என்ன நினைச்சாங்க?” என பேசிக் கொண்டிருக்க, வாசலில் நிழலாட திரும்பிப் பார்த்தால் கிருஷ்ணா.  

“அப்பாவும் அம்மாவும் இப்படி பேசுவாங்க, பண்ணுவாங்கன்னு நான் என்னைக்கும் நினைச்சது இல்லை அத்தை” என்றான்.

பேசும் போது குரலில் அப்படி ஒரு குற்ற உணர்ச்சி, “அவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன், இனிமே இந்த மாதிரி எப்பவும் நடக்காது” என கையெடுத்து கும்பிட்டான்.

பார்த்த எல்லோருக்குமே கஷ்டமாக தான் இருந்தது. எல்லோரும் அப்படியே இருக்க “யாரையும் எல்லாம் கூப்பிடாதீங்க அத்தை, வீணா எல்லோருக்கும் விஷயம் பரவும். இதை இப்படியே விட்டுடுங்க, அப்படியே அடங்கிடும். கண்டிப்பா எங்க அப்பா அம்மாக்காக சொல்லலை. உங்க பொண்ணுக்காகத் தான் சொல்றேன்” எனக் குரல் கம்ம சொன்னவன்,

மீண்டும் “சாரி” என்று சொல்லி திரும்பி நடந்தான்.

காவ்யாவை பார்க்கக் கூட இல்லை. அவன் கவனமாக தன்னை தவிர்த்தது காவ்யாவிற்கு நன்கு புரிந்தது. அவனையே தான் பார்த்திருந்தாள்.

“திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு அவனை பிடிக்கும் என்று சொன்னேனே. என்னை பற்றி என்ன நினைத்திருப்பான். அதனால் தான் என் புறம் திரும்பாமல் கூடச் செல்கிறானோ. அதனை நான் சொல்லியே இருக்க வேண்டாமோ?”

“ஒரு உணர்ச்சி வேகத்தில் அம்மா முன்பும் சொல்லி விட்டேனே. அவர் என்னை பற்றி என்ன நினைப்பார். தப்பாக எடுப்பாரோ?” என மனது மிகவும் சஞ்சலம் ஆக,  அம்மாவின் புறம் சமாதானமாக அமர்ந்திருந்தவள் தன்னுடைய செய்கைகளினால் யாரையும் பார்க்கப் பிடிக்காமல் சென்று படுத்துக் கொண்டாள்.   

விடியல் அவர்களுக்கு எதிர்பாராத விதமாக இருந்தது.   காலையில் எழுந்து ரத்னா கதவை திறந்து பார்க்கும் போது, அங்கே கிருஷ்ணாவின் வீட்டின் முன் லாரி நின்று கொண்டிருக்க, அதில் பொருட்கள் ஏற்றப் பட்டுக் கொண்டிருந்தன.

அதிர்ந்து சுவரின் புறம் நின்று பார்க்க, ஏழெட்டு பேர் இருப்பார். அப்போது அந்த பக்கத்துக்கு வீட்டினில் இருப்பவர் கிருஷ்ணாவின் வீட்டின் உள் வந்து வாயிலில் நின்று பார்த்தார்.

உள்ளிருந்த கிருஷ்ணா அவரை பார்த்ததும் வெளியே வந்தான். “வீடு காலி பண்றோம் சார்” என அவன் சொன்னது ரத்னாவின் காதில் விழ கவனித்தார்.

“ஏன் பா திடீர்ன்னு?”

“இல்லை, முன்னமே முடிவு பண்ணினது தான். ரேணு கல்யாணம் முடியறதுக்காக வெயிட் பண்ணினோம். ஒரு மாசம் போகட்டும்னு நினைச்சோம், ஆனா இன்னைக்கே மாத்திடணும்னு ஜோசியர் சொல்லிட்டார். அப்பாவும் அம்மாவும் நாலு மணிக்கே போயிட்டாங்க பால் காய்ச்ச, நான் சாமான் எடுக்க நின்னுட்டேன். அப்புறம் வந்து சொல்லிக்குவாங்க” என்று சொல்லி விட்டான்.

“சரிப்பா, வீடு வாடகைக்கு விட்டா சொல்லுங்க!” என்று சொல்லிச் சென்றார்.

உண்மையில் “இனி நான் உங்கள் மகனாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், இங்கே நாம் இருக்கக் கூடாது. காவ்யா வீட்டினருக்கு எந்த தொந்தரவும் எப்போதும் கொடுக்கக் கூடாது. இங்கே இருந்து நாம் கிளம்பலாம்” என்று விட்டான்.

“நாம ஏன் போகணும்?” என்று அவர்கள் கேட்க, “பணம் இருக்குற திமிர்ல அவங்க வீட்டை விலை பேசினோம் தானே. அப்போ நாம தான் போகணும்” என்று விட்டான் முடிவாக. கூடவே இங்கிருந்த சென்ற பிறகும் காவ்யாவை பற்றி ஒரு வார்த்தை தப்பாக அவர்களிடம் இருந்து வந்தால் என்றும் அவர்களின் மகன் அவர்களுக்கு இல்லை என்றும் விட்டான். 

அவர்களுக்கு வேண்டியது என்ன அவர்களின் மகன் தானே, அதிலும் “எனக்கு கிருஷ்ணாவை கல்யாணம் பண்ற அளவுக்கு பிடிக்கும்” என்ற வார்த்தை காவ்யாவிடம் இருந்து வந்த பிறகு எல்லாவற்றையும் விட அப்படி ஒரு பயம் ஆட்கொண்டது .

இவ்வளவு பிரச்சனைகள் நடந்த பிறகும் ரிஸ்க் எடுத்து அங்கே ஏன் இருக்க வேண்டும் என்று நினைத்து மகனின் யோசனைக்கு சரி என்று விட்டிருந்தனர்.   

திரும்பப் போனவன், ரத்னா அந்த புறம் நின்று கவனிப்பதை பார்த்தவன், அருகில் வந்தான். “இனி ஒரு தொந்தரவும் இருக்காது உங்களுக்கு அத்தை. காவ்யாவை பத்தி எதுவும் சொல்லிடுவாங்களோன்னு பயம் வேண்டாம். நாங்க வீடு மாத்திட்டோம்” எனச் சொல்லி சென்றான்.

“கிருஷ்ணா” எனக் குரல் கலங்க அவர் அழைக்க,

திரும்பியவன், “இனி என்னால இங்க இருக்க முடியாது அத்தை. அவளை பார்த்துட்டே இருக்க முடியாது. சரி வராது, நடக்காதுன்னு தெரியும். பக்கத்துல இருக்குறது ரொம்ப கஷ்டம்” என்று சொல்லிச் சென்று விட்டான். 

என்ன சொல்கிறான் அவன் எனப் புரிந்தும் புரியாமலும் ரத்னா பார்த்தது பார்த்தபடி நின்றார்.     

 

 

Advertisement