Advertisement

அத்தியாயம் ஆறு :

திருமணம் முடிந்து ஒரு வாரமாகியிருக்க, கிருஷ்ணாவின் வீட்டினில் இயல்பு வாழ்க்கை திரும்பி இருந்தது. ஆனால் காவ்யா கிருஷ்ணாவின் கண்ணில் படவேயில்லை. திருமண அன்று பார்தது தான் மொட்டை மாடியில் அவளின் ரூமின் கதவு திறக்கப் படவேயில்லை.

உண்மையில் காவ்யா திருமணத்தில் எப்போதும் தன் பார்வை கிருஷ்ணாவை சுற்றியே இருந்தததினால், தவிர்க்க நினைத்தாள்.

சில முறை இரவினில் ஆள் அரவம் அடங்கியதும், அவளை திட்டுவதற்காக கதவை தட்டி திற என்று சொல்லியிருக்கிறான் தான். ஆனால் இப்போது அது முடியவில்லை.

அப்போது காவ்யாவை குறித்த உணர்வு, “தன்னோடு, தான் பார்த்து வளர்ந்தவள், தான் பார்த்துக் கொண்டவள்” என்பது மட்டுமே. இப்போது சில இனம் காண முடியாத உணர்வு. அதனை இனம் காண ஒரு ஆர்வம். அதனால் முன்பு போல சகஜ பாவம் அவனிடம் இல்லை.

அன்று இரவு மொட்டை மாடிக் கதவு திறந்து இருக்க யார் என்பது போல ஆர்வமாகப் பார்க்க, நவீனும் பிரவீனும் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர்.

“என்னடா இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்களா” என்று பேச்சுக் கொடுக்க, “இல்லை மாமா வேலைக்கு போறதில்லை, காலையிலயும் போறதில்லை. இன்னும் ஒரு மாசத்துல பரீட்சை. அதனால அம்மா எங்கேயும் இனி போக வேண்டாம். பரிட்சை முடிஞ்சு பார்த்துக்கலாம் சொல்லிட்டாங்க”

“எங்கடா காவ்யா கண்லயே படலை”

“அதுவா மாமா அவ சர்டிஃபிகேட் இப்போ தான் வந்தது, அதனால பேப்பர் பார்த்து இண்டர்வியுக்கு பார்த்துட்டே இருக்கா. அம்மா எங்கேயும் போகாத, உங்க மாமா ஒரு மாப்பிள்ளை சொல்லியிருக்கான். அது தகைஞ்சா வேலை எல்லாம் தேவையில்லை. அவங்களுக்கு வேலைக்கு போற பொண்ணு வேண்டாமாம்ன்னு சொல்லிட்டாங்க” என நவீன் நடப்பவற்றை பிட்டு பிட்டு வைத்தான்.

“என்ன மாப்பிள்ளையா?” என்று அதிர்ச்சியாகிவிட்டது, கிருஷ்ணாவிற்கு தன்னுள் இருக்கும் பிடித்தம் என்ன என்று தான் அசை போட்டுக் கொண்டிருக்க, “அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்களா? அதுவும் தன்னிடம் சொல்லவேயில்லை! தனக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பது வேறு. எல்லாம் ஒரு வார்த்தை கேட்டோ இல்லை சொல்லியோ செய்பவர்கள் இதை சொல்லவே இல்லை” என்பது அவனால் சட்டென்று ஜீரணிக்க முடியவில்லை. 

“வேலைக்கு சொல்றதுக்கு எல்லாம் என்னை அத்தை கேட்டாங்க, இதுக்கு ஒரு வார்த்தை கூட சொல்லலை” எனக் கிருஷ்ணா கேட்டு விட,

“அது நீங்க காவ்யாவை ஹாஸ்டல் சேர்க்கறேன் சொன்னீங்க இல்லையா? அதனால அம்மாக்கு ரொம்ப கோபம் வருத்தம்” என்று பிரவீன் சொல்லிவிட்டான்.

“என்ன கோபம்னாலும், எப்படி அப்படி நீ சொல்லலாம்னு என்கூட சண்டை தானே போடணும், இப்படி சொல்லாம செய்வீங்களா?” என்று வருத்தத்தில் கேட்டே விட்டான்.

திரும்ப அவர்கள் எதோ சொல்ல வர அதனை தவிர்த்து “படிங்கடா, நான் சும்மா டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கேன்” என்று சொல்லி அவனின் ரூமின் உள் சென்று மறைந்து கொண்டான்.

படுத்துக் கொண்டே மனம் முழுவதும் காவ்யாவை தான் அசை போட்டுக் கொண்டிருந்தான்.

அவனுக்கு காவ்யாவை சிறு வயது முதலே மிகவும் பிடிக்கும். ஆனால் அந்த பிடித்தம் வேறு, அந்த பிடித்ததை வேறு பார்வையில் வேறு வகையில் மாறியது இப்போது சில மாதங்களாக, அதுவும் அவனே நிச்சயப் படுத்திக் கொண்டது இப்போது தான்.

ஆனால் அதற்கு முழு முழு காரணம் காவ்யா மட்டுமே. இந்த மாற்றம் அவளின் பார்வை மாற்றத்தால், அவளின் ஒதுக்கதினால், அவளின் அலட்சியத்தினால், இப்படி தான் வந்தது. இப்படி தான் அவளை வேறு மாதிரி கவனிக்க ஆரம்பித்தான்.

இதுவரை அவள் சொல்லியதில்லை, இவனுக்கு இப்போதுதான் காதல் போன்ற ஒரு பிடித்தம் என்பது நிச்சயமானது. உடனே இல்லாவிட்டாலும் ஒரு இரண்டு மூன்று சந்திப்பில் சொல்லியிருப்பான்.

ஆனால் அவள் ஏன் என்னிடம் சொல்லவில்லை, சரி முன்பு சொல்லவில்லை, இப்போது மாப்பிள்ளை பார்க்கும் போதாவது என்னிடம் ஒரு கோடி காட்டியிருந்தால், பின்பு நான் பார்த்துக் கொண்டிருப்பேனே!

ஒரு வேளை என் அம்மா அப்பாவை குறித்த தயக்கமா, புரியாமல் தடுமாறினான். அதுவும் ரத்னா அத்தை ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை. அது வேறு ஒரு கோபத்தைக் கொடுத்தது.

கீழே சென்ற நவீனும் பிரவீனும் அம்மாவிடம் நடந்த உரையாடலை ஒப்புவிக்க, அதனை காவ்யாவும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள். “ஏன்டா எனக்கு கோபம்னு அப்படியே சொல்வீங்களா”  

“அது இவன் உளறிட்டான்மா” என நவீனைக் காட்ட, “எனக்கு பொய் சொல்ல வரலைம்மா, அப்புறம் தோணிச்சு, உனக்கு கோபம்னு அவரும் தெரிஞ்சிக்கட்டுமே, இனிமே இப்படி பேச மாட்டார் இல்லையா”  

“ப்ச்” என சலித்துக் கொண்டவர், “இவளுக்கு வரன் அமையட்டும் அப்புறம் சொல்லிக்கறேன்” என்றார்.

“மா, முன்ன சொன்ன மாதிரி நான் கொஞ்சம் நாள் வேலைக்கு போறேன்” என்று ஒரு வாரமாக காவ்யா திரும்பத் திரும்ப படிக்கும் பாட்டை படித்தாள்.

“நீ வேற சும்மா இருடி, எனக்கு இந்த வரன் அமைஞ்சிட்டா போதும். நல்ல இடம், நல்ல ஆளுங்க, நல்ல வசதி, மாப்பிள்ளைக்கு இங்க சென்னையில தான் வேலை, நீயும் கண்பார்வையில இருப்ப”

“வேற ஊர், அதனால வேலைக்கு போகவேண்டாம் சொன்ன”  

“வேற ஊர் தான், ஆனா மாப்பிள்ளைக்கு இங்க இருக்குற ஒரு ஐ டீ கம்பனில தான் வேலை”  

“போம்மா, போம்மா, நீ மாத்தி மாத்தி பேசற”

“ஷ், சும்மா இரு, அவங்க பிடிக்கணும்னு சொல்லணும், அத்தனை வேண்டுதல் வெச்சிருக்கேன்”  

“எனக்கு பிடிக்க வேண்டாமா?”  

“உனக்கும் பிடிக்கும், எனக்கு தெரியும், மறுக்குற மாதிரி எதுவுமே இல்லை” என்றார் ஸ்திரமாக.

“என்ன மறுக்க காரணம் இல்லையா, இங்கே நான் பல வருடமாக ஒருவனை பார்த்துக் கொண்டிருக்கிறேன் அதனை என்ன செய்ய?, அப்போ சொல்லேண்டி” என்று மனசாட்சி குரல் கொடுத்தது.

“சொல்ல முடியாது, அது சரி வராது!” என மனம் காரணம் சொல்லியது.

“அப்போது வேறு திருமணதிற்கு சரி என்று விடுவாயா?”

“என்னவோ என் மனது சொல்கின்றது, இது நடக்காது என, பேசாமல் இறடி” என அவளுக்கு அவளே சண்டைகள் வாக்குவாதங்கள் சமாதானங்கள் என பலதும் செய்து கொண்டாள். கூடவே பலமான மறுப்பை தெரிவித்தால் அம்மா கண்டு கொள்வார் எனப் புரிந்து அடக்கி வாசித்தாள். எப்படியும் நடக்காது என்ற நம்பிக்கை திண்ணமாக இருந்தது.   

மனது திக் திக் என அடித்தெல்லாம் கொள்ளவில்லை. ஏனென்றால் அவளின் காதலை கிருஷ்ணா கண்டு பிடித்திருப்பான் என்றோ அவனுக்கும் பிடித்திருக்கும் என்றோ அவள் நினைக்கவேயில்லை.

கிருஷ்ணா கோபமாக வேறு இருப்பான் போலவே என்ற நினைவு வர, அதனைக் குறித்து மட்டும் “அச்சோ” என்றிருந்தது. அவனை பார்க்க வேண்டும் போல ஒரு உந்துதல் கூட. “ஒரு வாரமாகப் பார்க்கவில்லை தானே, இனியும் பார்க்காதே. எப்படியாவது குறைத்துக் கொள், பின் நிறுத்தி விடு” என அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டாள்.

பின் அம்மாவிடம் “மா, நாளைக்கு அந்த இன்டர்வியுமா, போயிட்டு வர்றேனே ப்ளீஸ்” எனக் கேட்டாள்.

“அடி பின்னி எடுத்துடுவேன், டீ வீ க்கு வேலைக்கு போறாளாம். அப்புறம் யாருடி உன்னை கட்டுவா?”  

“ம்மா அது நியூஸ் ரீடிங் தான், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரம் தான், அதுல ஒரு மரியாதை தான் வரும். அதுவும் இங்கிலீஷ் நியூஸ். நான் என்ன நடிக்கவா போறேன், அது தான் பலருக்கு பிடிக்காது, இப்போல்லாம் அதுவும் கூட சகஜம் தான் மா” என்று பெரிதாக விளக்கம் கொடுத்தாள்.

“ப்ச், நீ போகக் கூடாது, அவ்வளவு தான்! போ, போய் தூங்கு!” என்று முடித்து விட்டார்.

எப்படியும் போக வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள். முதலில் இன்டர்வியூ போவோம், பின்பு செலக்ட் ஆனால் பிடிவாதம் பிடித்துக் கொள்ளலாம் என நினைத்தவள், “சரி, போகலை போ” என்று சொல்லி படுத்துக் கொண்டாள்.

பின்பு அடுத்த நாள் காலேஜில் இருந்து “இன்னும் ஒரு சர்டிஃபிகேட் வரவில்லை” எனச் சொல்லி காலேஜ் கிளம்புவது போல அந்த இன்டர்வியூ கிளம்பிச் செல்ல,

ரத்னாவிற்கு சந்தேகமே வரவில்லை. ஏனென்றால் இப்படி பொய் சொல்லி எல்லாம் எதுவும் காவ்யா இதுவரை செய்ததில்லை. செய்யவும் மாட்டாள்.

இன்டர்வியூ சென்றது வினய் ரிதன்யாவின் ஆபிஸ், “இங்கே தானே நாம விழுந்தோம்” என்று நினைத்துக் கொண்டே ஆபிஸின் வாயிலை தாண்டினாள்.

அங்கே இருந்த செக்யுரிட்டி என்ன ஏதென்று விசாரிக்க “இன்டர்வியூ” எனச் சொல்லவும், அங்கே என்று ஆஃபிஸ் உள் தான், ஆனால் தனியாக இருந்த ஒரு சிறு பில்டிங் காட்டினான்.

ஆம்! இன்டர்வியு அங்கே தான், பெரிய தொலைக்காட்சி நிறுவனம் என்பதால் அப்படி யாரும் சட்டென்று உள்ளே நுழைந்து விட முடியாது.

அங்கே உள்ளே சென்றால், இவளைப் போல பலர், எப்படியும் ஒரு நூறு பேராவது இருப்பர் என்பது அவளின் அனுமானம். அதிலும் உடை, பெண்களில் பலர் ஜீன்ஸ், குர்தி, டாப்ஸ் இல்லை டி ஷர்ட், கோட் என இருக்க, ஆண்களும் ஃபார்மல்சில் இருக்க, இவள் மட்டும் தான் சுரிதாரில்.

அதுவும் விலை உயர்ந்தது எல்லாம் இல்லை, எப்போதும் கல்லூரிக்கு அணிவது போல தான். புதிதாயோ அல்லது விலை அதிகமானது அணிந்தால் “என்ன? எதுக்கு இந்த டிரஸ்?” என்று ரத்னா கேட்டு விடுவார் என்பதால், தனக்கு பொருத்தமான ஒன்றை மட்டும் அணிந்து வந்திருந்தாள்.

ஆனால் அங்கிருந்தவர்களின் ஸ்டைலின் முன்னால் இது ஒன்றுமில்லை என்பது போல தான் தோன்றியது. எல்லோரையும் விட அவளின் தோற்றமே அவளின் ப்ளஸ் என்பது ஞாபகத்தில் இல்லை.

“குட் ஈவ்னிங் லேடீஸ் அண்ட் ஜென்டில் மேன்” என்று பேச ஆரம்பித்தார்கள். பேச ஆரம்பித்தவரின் பக்கத்தில் வினய் நின்று கொண்டிருக்க, “இவன் தானே நம்மை தள்ளி விட்டான், நாம் சண்டை வேறு போட்டோமே, இனி எங்கே செலக்ட் ஆவது?” என்று தோன்றியது.

அவர்கள் பேச்சை நிறுத்தியதும் சென்று விட உத்தேசித்து அமர்ந்திருந்தாள். அவர்களின் தொலைக்காட்சி நிறுவனத்தின் புகழை சற்று பாடி, நிறைய பேர் இருப்பதால் ஐந்து டீம் களாக இன்டர்வியூ நடைபெறும் என்று சொல்லி, அது ஒரு வாக் இன் இன்டர்வியு என்பதால் செலக்ட் ஆனால் மட்டும் விபரங்கள் கேட்கப் படும் என்று விட்டனர்.

எல்லோரும் பிரிந்து ஆளுக்கு ஒரு புறமாக போய் இன்டர்வியூ டேக் வாங்கிக் கொள்ள, “அவன் என்ன இருக்கவா போகிறான், அட்டன்ட் செய்” என மனது ஆசைப் பட, ஆனது ஆகட்டும் என அவளும் அதில் கலந்து கொண்டாள்.

நூறு பேருக்கும் மேல் இருந்தவர்கள் ஒரு ஒரு மணிநேரத்தில் பத்து பேராக வடிகட்டப் பட, அதில் ஐந்து ஆண்கள் ஐந்து பெண்கள் இருந்தனர்.

எல்லோருடைய தோற்றமும் ஹய் ஃபையாக இருக்க, தன்னை எப்படியும் செலக்ட் செய்ய மாட்டார்கள் என நினைத்து தான் அமர்ந்திருந்தாள். பத்து பேரையுமே திரும்ப படிக்கச் சொல்ல, எல்லோருமே நன்றாக படித்தனர். சொல்லப் போனால் ஒரு இடத்தினில் தடுமாறி விட்டாள் காவ்யா.

ஆனாலும் அவளை தான் செலக்ட் செய்திருந்தனர். ரிதன்யா அவளை ஸ்ட்ராங்காய் சிபாரிசு செய்திருந்தாள். அதனையும் விட உண்மையில் தலைமை தான் அவளை செலக்ட் செய்தார்.

காரணம் எல்லோரும் நல்ல செய்தி வாசிக்கும் போது முகத்தை உற்சாகமாக வைத்தும், சோக செய்தியின் போது முகத்தினில் அந்த பாவனை கொண்டு வந்தும் வாசித்தனர். ஆனால் காவ்யாவின் முகத்தினில் அப்படி எந்த வித்தியாசமும் இல்லை. அதனையும் விட அவளின் முகம் கேமராவில் அவ்வளவு அழகாக இருக்க,  

“செலக்டட்” என்று விட்டனர். அவளால் சந்தோஷம் தாங்க முடியவில்லை, வினய் வந்து சொல்லவும், “எப்படி என்னை செலக்ட் பண்ணுனீங்க, நாம தான் சண்டை போட்டோமே” எனக் கேட்டும் விட்டாள்.

“ரிதன்யா தான் உனக்கு ஸ்ட்ராங்கா ரிகமன்ட் பண்ணினா” என அவளிடம் ஒரு நன்றி சொல்ல, “ரிகமன்ட் பண்ணினேன் தான், ஆனாலும் திறமையில்லைன்னா ஹெட் செலக் பண்ண மாட்டார்” என அவளும் வாழ்த்து தெரிவித்தாள்.

“இன்னும் பத்து நாள் குள்ள ஜாயின் பண்ணனும், என்ன டைமிங் என்ன டிரெஸ்ஸிங் எல்லாம் இதுல இருக்கு, கூடவே பேமென்ட் டீடைல்ஸ் எல்லாம்”  

“பத்து நாள், அதற்குள் அம்மாவை சமாளிக்க வேண்டும்” என நினைத்து அவள் வீடு வந்தாள், வந்தவுடன் சாப்பிட அமர்ந்தவள், அப்போது தான் கவனித்தால் கதவை திறந்து விட்டதும் சரி எதுவுமே பேசவில்லை, அவர் பாட்டிற்கு போய் படுத்துக் கொண்டார்.

சாப்பிட்டு முடித்து வந்தவள் “அம்மா, ஏன் மா படுத்துகிட்ட?” எனக் கேட்கவும்,  “தலைவலி” என்றார் ரத்னா.

“சாப்பிட்டியா?” என மகள் கேட்டதுமே, அப்படி ஒரு அழுகை. “என்னம்மா? என்னம்மா?” என பதறி காவ்யா கேட்க, “ஒண்ணுமில்லை, ஒண்ணுமில்லை” என்று சொல்லி, அப்படி ஒரு அழுகை, பின் சிறிது நேரத்தில் சமன் படுத்திக் கொண்டவர், “என்னவோ மாதிரி இருந்தது” என்று மட்டும் சொன்னார்.

அம்மாவை என்றுமே இப்படிப் பார்த்திராத காவ்யா கலங்கி தான் போனாள். என்னவோ இருக்கின்றது என மனது அடித்து சொன்னது. அது போலவே மாலை ஆனதும் ராஜேந்திரனும் கிருஷ்ணகுமாரும் வரும் நேரத்தை கணக்கிட்டு, நவீனும் பிரவீனும் படித்துக் கொண்டிருக்க, அவர்களிடம் சற்று நேரத்தில் வந்துவிடுவோம் என்று சொல்லி, காவ்யாவை “வா” என அழைத்து கிருஷ்ணாவின் வீடு வந்தார்.

திடீரென்று இவர்கள் எதற்கு வந்திருக்கிறார்கள் என்று தெரியாமல் ராஜேந்திரனும் சசிகலாவும் விழித்தனர்.

கிருஷ்ணாவும் அங்கு தான் இருந்தான். “வாங்க அத்தை” என்று அவன் தான் வரவேற்றான். ஆனாலும் ரத்னாவின் முகம் பார்த்ததுமே புரிந்தது எதோ சரியில்லை என்று.

“உடம்பு சரியில்லையா அத்தை” என ஆதூரமாக வினவ,

அதற்கு பதில் சொல்லாதவர், “சாரி கேளு காவ்யா” என்றார்.

எதுவுமே புரியாதவள் “என்ன மன்னிப்பா? எதற்கு?” என விழித்தாள், மீண்டும் “சாரி கேளு” என்று அழுத்தமாக ரத்னா உரைக்கவும்,

என்னவென்று புரியாத போதும் “சாரி” என்றார்.

“என்ன அத்தை இதெல்லாம்?” என கிருஷ்ணா தான் பதறினான்.

எதற்கென்று தெரியாத போதும் ராஜேந்திரனுக்கும் சசிகலாவிற்கும் எதோ வென்று விட்ட திருப்தி காவ்யா மன்னிப்பு கேட்டதும்.

“சரி, நீ போ! நான் பேசிட்டு வர்றேன்” என்று ரத்னா சொல்லவும்,

“நீங்க சொன்னீங்க, நான் சாரி கேட்டுட்டேன். அவ்வளவு தான்! கண்டிப்பா நான் எந்த தப்பும் செய்யலை. எனக்கு தெரியும். ஆனா இந்த இடத்தை விட்டு போக மாட்டேன். எது பேசறதுன்னாலும் என் முன்ன பேசுங்க” என்றாள் அம்மாவை விடவும் அழுத்தமாக காவ்யா.     

கிருஷ்ணா குழப்பத்துடன் பார்த்திருந்தான். ஆனாலும் மிக நிச்சயம் அப்பாவோ அம்மாவோ எதோ செய்திருக்கிறார், இல்லை பேசியிருக்கிறார் என்பது போல.

“முதல்ல உட்காருங்க அத்தை” எனக் கிருஷ்ணா பேச,

“ப்ளீஸ் கிருஷ்ணா, இதுல நீ தலையிடாதே!” என அவனை பார்த்து சொன்ன ரத்னா, ராஜேந்திரனிடம் திரும்பினார்.   

                  

 

Advertisement