Advertisement

அத்தியாயம் ஐந்து :  

வீட்டின் வாசலில் நின்றிருந்த ரேணு “வா வா” எனக் கை பிடித்து அழைத்து போனாள்.

அங்கே ஹாலில் உறவுகள் நிறைய பேர் இருக்க “வாம்மா” என அவளை வரவேற்கவும் செய்ய, சசிகலா அவளை வரவேற்றாரா இல்லையா எனக் கூட அவளுக்கு தெரியவில்லை. கிருஷ்ணா முன் அவள் நின்ற தோற்றம் வேறு மனதினில் ஓட, தானாக ஒரு கூச்சமான தலையசைப்பு அவளிடம் வெளிவந்தது.  

அங்கே ஹாலில் இரு பெண்கள் அமர்ந்திருக்க, “என் ஃபிரண்ட் இவ கிட்ட காட்டுங்க” என ரேணு அமர்ந்து காவ்யாவை அருகமர்த்த, அப்போது தான் ரூமில் இருந்து வந்த சசிகலா இவளை பார்த்ததும் அப்படியே திரும்ப உள்ளே போய்விட்டார். கிருஷ்ணா அதனை கவனித்து தான் இருந்தான்.

அங்கே ஹாலில் தான் ராஜேந்திரன் இருந்தார். அவருமே வா என்றெல்லாம் அழைக்கவில்லை. பக்கத்துக்கு வீடு என்றாலும் காவ்யா அப்படி ஒன்றும் அவளின் வீட்டிற்கெல்லாம் வந்து விட மாட்டாள்.

ஏன் அவர்கள் யாருமே வர மாட்டர். கிருஷ்ணாவும் ரேணுகாவும் தான் அதிகம் செல்வர். இப்போது அவர்களும் குறைந்து விட, நல்ல பழக்கம் என்றாலும் அப்படி ஒன்றும் அவர்களும் செல்லவதில்லை.

“அம்மா எப்படி இருக்கா, கண்லயே படலை” என ஒரு பாட்டி பேச்சுக் கொடுக்க,

“நல்லா இருக்காங்க பாட்டி” என அவள் பதில் சொல்லும் போதே அங்கே வந்த ரமேஷ், “காவ்யா, வாவ் என்ன அதிசயம் இங்க வந்திருக்க” எனக் கேட்க,

ஒரு சிரிப்பு மட்டுமே காவ்யாவிடம். “காவ்யா ரொம்ப அழகா ஆகிட்டால்ல கிருஷ்ணா” என கிருஷ்ணாவின் காதைக் கடித்தான்.

“அண்ணியா வர நிறைய வாய்ப்பிருக்கு பார்த்து பேசு” என்றான் கிருஷ்ணா பளிச்சென்று.

“ஆங்” என ரமேஷ் வாயை பிளந்து நிற்க,

“வாயை மூடுடா, ஈ புகுந்துடப் போகுது” என்றான் கிருஷ்ணா சிரிக்காமல்.

காவ்யா அந்த பியுட்டி பார்லர் பெண் கொடுத்த ஆல்பத்தில் எந்த மேக் அப் ரேணுகாவிற்கு சூட் ஆகும் என பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரேணு மாநிறம், சற்று பூசின உடல் வாகு, நல்ல களையான முகம், உயரமும் சராசரி உயரமே.

“உன் கல்யாணப் புடவை காட்டு” என ரேணுகாவிடம் கேட்க, அதை எடுத்து வர ரேணு உள்ளே வர,

அவளிடம் சசிகலா “எதுக்குடி அவளை கூட்டிட்டு வந்த, பியுட்டி பார்லர் காரங்களுக்கு தெரியாதது அவளுக்கு தெரியுமா? உன் புடவை பார்த்து பார் பொறாமை படப் போறா” என,

“பொறாமையா? காவ்யாவா? போம்மா!” என சசிகலாவை திட்டியவள், “அவளை போலவே அவளுடைய மனசும் ரொம்ப அழகு, மொதல்ல அவ எவ்வளவு அழகு, நான் அவ முன்னாடி ரொம்பவும் சுமார். அவ என்னை, என் புடவையை, பார்த்து பொறாமை படுவாளா. உனக்கு தான் அப்படி இருக்கும்” என சொல்லிச் செல்ல, சசிகலா ஒன்றும் செய்ய முடியாதவறாக முறைத்து நின்றார்.

அவள் புடவையை எடுத்துப் போய் காட்ட, அதனை பார்த்தவள் “நான் உன்கிட்ட எத்தனை முறை சொல்லியிருக்கேன் சின்ன பார்டர் எடு, பெரிய பார்டர் எடுத்தா உயரம் குறைவா தெரிவன்னு” என மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னாள்.

“மாப்பிள்ளை வீட்ல ரொம்ப விலை அதிகமா எடுக்கணும்னு இதை எடுத்தாங்க, நான் சொன்னேன் அவங்க கேட்கலை!” என,

“ப்ச், கலர் உனக்கு நல்லா இருக்கும். ஆனா பார்டர் பெருசு” என்றபடி அந்த பியுட்டி பார்லர் பெண்ணிடம், “பார்டர் கொஞ்சம் உள்ள போனாலும் பரவாயில்லை, ஃபுல் பார்டர் தெரியற மாதிரி ப்ளீட்ஸ் எடுக்காதீங்க” என சொல்ல,

உள்ளிருந்த வந்த சசிகலா “அந்த சேலை எவ்வளவு விலை தெரியுமா? எழுபத்தஞ்ஜாயிரம், பார்டர் உள்ள போனா சேலை அழகு போய்டும். உனக்கு விலை பத்தி ஏதாவது தெரியுமா” என எரிச்சலாக குரலுயர்த்தி சொல்ல,

அங்கே அப்படியே பேச்சுக்கள் குறைந்த ஒரு நிசப்தம்.

“நான் விலை பத்தி தெரிஞ்சு என்ன பண்ண போறேன், சேலை அழகா தெரியறதா முக்கியம், இல்லை அதோட விலை தெரியறது முக்கியமா? ரேணு தான் அழகா தெரியணும்!” என்றாள் காவ்யா பட்டென்று.

“காவ்யா சொல்றது தானே சரி சசி” என அங்கிருந்த பாட்டி பேச,

“அவளுக்கு சேலை பத்தி நகை பத்தி எல்லாம் என்ன தெரியும்மா இந்த மாதிரி பார்த்திருப்பாளா, இல்லை நகை போட்டிருப்பாளா. அப்போ எப்படி அவ யோசனை சொல்ல முடியும்” என அவரின் பிடித்தமின்மையைக் காட்டினார்.

ரேணு “அம்மா, இது என் கல்யாணம், என் இஷ்டத்துக்கு விடு, நீ பேசாதே!” என,

“நேற்று அவ்வளவு திட்டியும், இந்த அம்மா இப்படி பேசுகிறாரே, இவரை என்ன செய்ய?” என்று கிருஷ்ணா இயலாமையோடு பார்த்திருந்தான்.

காவ்யாவின் முகம் அப்படியே கோபத்திற்கு மாறியது. சசிகலாவிடம் வார்த்தையாடத் துடித்த நாவை அடக்கியவள், அவருக்கு எந்த பதிலும் சொல்லாது, பார்லர் பெண்ணிடம் திரும்பி “இந்த மேக் அப் நிச்சயத்துக்கு, இது நைட்க்கு, இது காலையில முகூர்த்ததுக்கு” என பேச ஆரம்பித்தவள்,

“நிச்சயத்துக்கு கல்லில்லாத நகை போடுங்க, நைட் கல்லு வெச்சது, காலையில முத்து செட் போடுங்க” என்றவள், “சொல்லிட்டேன் ரேணு, நான் கிளம்பறேன்” என,

“அம்மா பேசறதை மனசுல வைக்காத, இருடி கொஞ்சம் நேரம், நீ சாப்பிடக் கூட வேண்டாம்” என,

“கொஞ்சம் நேரம் இருந்தாலும், இதை தான் சொல்லப் போறேன். அதை இப்போவே சொல்லிட்டேன்” எனக் கிளம்பினாள்.

எல்லோரிடமும் மரியாதையாக சொல்லிக் கொண்டவள் சசிகலாவை பார்த்த பார்வையில் அவ்வளவு அலட்சியம், “நீயெல்லாம் என்னை பேசுவாயா?” என்பது போல,

சசிகலாவிற்கு என்ன பார்வை அது என்று புரியாத போதும், அவளின் பார்வை ஒரு காழ்புணர்ச்சியை கொடுக்க, முறைத்து பார்த்தவரை, இன்னும் அலட்சியமாய் பார்த்து, கிருஷ்ணாவின் புறம் பார்வையையும் திருப்பாது வீட்டை விட்டு வெளியேறினாள்.

அவனின் அம்மாவை பார்த்த பார்வை கிருஷ்ணாவிற்கும் பிடிக்கவில்லை. அவர் பேசியது சரி கிடையாது தான், ஆனாலும் அவளின் பார்வை கிருஷ்ணாவால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. அப்படி ஒரு கீழான பார்வை.

காவ்யாவின் பார்வை கொடுத்த கோபத்தை அம்மாவிடம் காட்டினான், “நீங்க வாயை வெச்சிகிட்டு சும்மாவே இருக்க மாட்டீங்க. ரேணு சொன்னான்னு நான் போய் கூட்டிட்டு வந்தேன். நீங்க எங்களை தான் அசிங்கப் படுத்துறீங்க” எனச் சொல்ல,

சசிகலாவின் அம்மாவும் “நீ பேசறது சரி கிடையாது சசி” என அதட்ட, திருமண வீட்டின் உற்சாகமே குறைந்தது.

கிருஷ்ணா காவ்யாவின் பின் இறங்க, அதற்குள் அவள் அவளின் வீட்டின் கேட்டின் உள் இருக்கவும், இவன் படியிறங்குவதை பார்த்ததும் சுவரின் புறம் வந்தவள் “நான் அம்மா கிட்ட சொல்ல மாட்டேன், நீங்க வேலையைப் பாருங்க” என்று விட்டாள்.    

அவளின் பதிலில் கிருஷ்ணாவும் திரும்பிவிட்டான். ஆனாலும் காவ்யாவின் பார்வை என்ன உணர்த்தியது என்ற யோசனை மட்டுமே அன்று முழுவதும் கிருஷ்ணாவிடம். இரவு சென்று அவளின் மொட்டை மாடி பார்க்க, அவளின் அரவமே இல்லை. எதற்கு அப்படிப் பார்த்தாய் எனத் தெரிந்து கொள்ள ஒரு உந்துதல். அப்படி அவரை பார்க்காதே, சரி கிடையாது எனச் சொல்லவும் ஒரு உந்துதல்.  என்னவோ டென்ஷன் இனம் காண முடியவில்லை, சிகரெட்டாக ஊதித் தள்ளி விட்டான்.

இரண்டு நாட்களாக சரியாக உறக்கம் இல்லாதது காவ்யாவை அன்று நன்கு ஆக்கிரமித்து இருந்தது.

காலையில் எழுந்ததும் திருமண வேலைகள் இழுத்துக் கொண்டது. சற்று தெளிந்து இருந்தான். காவ்யாவின் வீட்டிலும் உறவுகள் சிலர். ரேணுவின் திருமணத்திற்கு வந்தவர்கள்.

காவ்யாவின் தாய் மாமாவும் அத்தையும் வந்திருந்தனர். ரத்னாவின் தம்பி, ரேணு பல மெசேஜ்கள் அனுப்பியிருக்க, ரத்னா நிச்சயத்திற்கு வராத போதும் அவர்களுடன் காவ்யா சென்றிருந்தாள்.

தனது பட்டுப் புடவையொன்றை மகளுக்கு அணிவித்து, இது வரை வாங்கிய நகைகள் எதையும் தொட்டது இல்லை, சொந்தங்கள் எல்ல்லோரும் வருவர் என்பதால், அதனில் சிலவற்றை அணிவித்து காவ்யாவை அனுப்பியிருந்தார்.

“ஃபிரண்ட்ன்னு ஓடிப் போய் அவ பக்கத்துல நின்னுக்காதே. அத்தை மாமாவோட தான் இருக்கணும்” என்ற கண்டிப்புடன்.

நிச்சயத்திற்கு வந்தவள் “வந்துவிட்டேன்” என்று ரேணுவிடம் சொல்லி மட்டும் வந்துவிடுகிறேன் என போக, “ஹேய் வந்துட்டியா?” என ரேணு அவளின் கை பிடிக்க, அவளின் முகத்தை ஆராய்ந்தவள் “இந்த பக்க ரூஜ்க்கும் இந்த பக்கத்துக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு” என அழகு நிலைய பெண்ணிடம் சொல்ல,

அவர்கள் அதை சரி படுத்த, அப்போது ரேணுவை பார்க்க வந்த கிருஷ்ணா அப்படியே நின்று விட்டான்.     

முதன் முதலில் பட்டில், நகையில், தலை நிறைய பூவைத்து, முகத்தினில் சற்று மேக் கப்புடன் பார்க்கிறான். கிருஷ்ணாவினால் பார்வையை அகற்ற முடியவில்லை. பக்கத்துக்கு வீட்டில் இருந்தாலும் இப்படி பார்த்ததில்லை.

அவன் நிற்பதை பார்த்த ரேணுகா, “சொல்லு கிருஷ்ணா” என,

அப்போது தான் அவனை திரும்பிப் பார்த்தாள் காவ்யா. அவளை பார்த்திருந்தவன் பார்வையை ரேணுவின் புறம் திருப்பி, “ரெடியா பார்த்துட்டு வரச் சொன்னாங்க” என்றான்.

“நான் ரெடியா?” என உடனே காவ்யாவை பார்த்து கேட்க, “ரெடி” என்றவள் அவளை திருஷ்டி எடுத்தாள்.

“நீ என் கூட வா” என ரேணு எழுந்து நிற்க, “அம்மாடி, எங்கம்மா என்னை வடசட்டில வறுத்துடுவாங்க. எங்க மாமா அத்தை பக்கத்துல தான் உட்காரணும் சொல்லியிருக்காங்க, நான் போறேன்” என்றவள் கிருஷ்ணாவிடம் எதுவும் சொல்லாமல் செல்ல,

அவள் செல்வதை பார்த்தவன், “ரொம்ப பண்றா இவ, நான் பார்க்கணும்னே பண்றா” என்பது போல அவனுக்கு  தோன்றியது. ஆனாலும் “அழகா இருக்கா” என  முகத்தினில் தானாக ஒரு புன்னகை. 

சென்றவள் அத்தை மாமாவின் பக்கத்தில் பதவிசாக அமர்ந்து கொண்டாள். அவளின் மாமா, ராஜேந்திரனுக்கு பங்காளி முறை ஆக வேண்டும். ஏன் காவ்யாவின் தந்தையின் வகையிலும் ஒரு சொந்தம் வரும். அதனால் ராஜேந்திரன் வந்தவர், வரவேற்று “வாடா அங்கே வா” என அவரை அழைத்து சென்று விட,

அத்தை பேச ஆளில்லாமல் காவ்யாவை வறுத்து எடுக்க, அவளின் பார்வை எல்லாம் கிருஷ்ணாவின் மேல்.

டார்க் பிரவுன் கலர் பேண்டிலும், கிரீம் கலர் ஷர்ட்டிலும் இருந்தான். “இவன் என்ன யுனிஃபார்மா போட்டிருக்கான், இன்னும் கொஞ்சம் நல்லா டிரஸ் பண்ணியிருக்கலாம். இவன் கலர்க்கு சூட் ஆகலை” என பார்த்திருந்தாள். எல்லா பார்வையும் அவன் பாராத போது, யார் கவனத்தையும் கவராது. கிருஷ்ணாவின் தோற்றம் அதனையும் விட அவனின் புன்னகை யாரையும் அவனிடம் ஸ்நேகிதம் செய்து கொள்ள தூண்டும்.  

“நெட்டை கொக்கு மாதிரி இருந்துகிட்டு கூட இருக்குற எல்லோரையும் குள்ளமா காட்டுறான்” என சலிப்பது போல அவனை ரசித்து பார்த்திருந்தாள். கிருஷ்ணாவின் மாநிறதிற்கு அது பளிச்சென்று எடுப்பாக இல்லை தான். “இப்போ என்ன குறைவா இருக்குன்னு இவனை யாரும் பார்க்காமையா இருக்கப் போறாங்க” என தோன்ற பார்வையை முயன்று திருப்பினாள்.

அப்போது அங்கே வந்த சசிகலா, அவளின் அத்தையை வரவேற்று “முன்னே வாம்மா” என,

“இல்லைக்கா இவளோடயே அண்ணி இருக்க சொன்னாங்க, யாராவது பொறுப்பா தெரிஞ்சா விட்டுட்டு வர்றேன் நீங்க பாருங்க”  

“இவளா இவ ஊரையே வித்துடுவா” என நினைத்து சசிகலா அவளை கவனித்து பார்த்தவர் அசந்து தான் போனார்.

சில நொடிகள் என்றாலும் வேகமாக கண்கள் அவளை படமெடுத்தன. காவ்யாவின் புடவையும் அவளின் நகையும் அது பட்டு, அது தங்கம் என பறைசாற்றியது.

முதலில் அசந்த ஒரு பார்வை, பின் என்ன அணிந்தாலும் நீ எங்களுக்கு இணையா என்ற ஒரு பார்வை. உண்மையில் இது எதுவும் இல்லையென்றாலும் காவ்யா அழகு. ஆனால் அப்படி அவர் கிடையாது, அவரின் உடைகள் அணிமணிகள் தான் அவரை சற்று அழகு படுத்திக் காட்டும். இது தான் உண்மை.

சசிகலாவின் பார்வையின் இளக்காரத்தை பார்த்தவள், அவரை ஒரு பார்வை பார்த்து திரும்பிக் கொண்டாள். “என்ன திமிர் இவளுக்கு, ஒண்ணுமில்லாதப்போவே இவ்வளவு திமிர், இன்னும் வசதி இருந்தா?” என்பது போல நினைத்து அவர் சென்று விட்டார்.

“இந்த பார்வை பார்க்கறாங்க, இவங்களுக்கு எல்லாம் கொஞ்சமும் உதைக்காதா? கூச்சமே இராதா?” என தான் காவ்யாவின் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.

எப்போதுமே அவரின் செல்வ நிலை குறித்த பெருமை சசிகலாவிடம் இருக்கும். செல்வந்தர்கள் என்ற பகட்டை எப்போதும் காட்டுவார். யார் நன்கொடை என்று வந்தாலோ, கோவில் விசேஷம் என்று வந்தாலோ பணத்தை தூக்கி அப்படியே கொடுப்பார். அதனால் அவர்களுக்கு அந்த ஏரியாவில் செல்வாக்கு கூட.

இப்போது ரேணுவிற்கு கூட குறைந்தது நூறு பவுணிற்கு மேல் போட்டு திருமணம் செய்து கொடுப்பர் என்பது காவ்யாவின் அனுமானம். இடங்களும் வீடுகளும் கூட நிறைய இடங்களில் இருக்கின்றது. பேச்சு வாக்கினில் ரேணு எப்போதும் அவளிடம் உளறி விடுவாள்.  

அப்படி என்ன அவர்கள் தொழில் செய்கிறார்களா? இல்லை பரம்பரை சொத்தா? எதுவும் கிடையாது!      

ராஜேந்திரன் இருந்தது அரசாங்க பணியில், அவரின் பணியில் அவர் வாங்கிய லஞ்ச லாவண்யத்தின் மூலம் தான் எல்லாம். செய்வது குற்றம் அதில் என்ன இவ்வளவு பெருமை இறுமாப்பு என காவ்யாவிற்கு எரிச்சலாக வந்தது.

அவளின் இன்னொரு தோழி ஒருத்தி “அவங்கப்பா அப்படி லஞ்சம் வாங்குவாறாமே எங்கப்பா சொன்னார்” என,

“உங்கப்பாக்கு எப்படி தெரியும்?”

“அவருக்கு கீழ தான் எங்கப்பா வேலை செய்யறார்” என சொல்லியிருந்தாள். இவளுமே அம்மாவிடம் பேச்சு வாக்கினில் “அவங்க முன்ன இருந்தே ரொம்ப வசதியாம்மா” என,

“இல்லை இப்போ கொஞ்சம் வருஷமா தான்” என,

ஆம், வசதி ஏற ஏற தான் சகஜ மனப்பான்மை குறைந்து இப்படி தள்ளி நிற்பது. இல்லையென்றால் எப்படி கிருஷ்ணாவின் கை பிடித்து வளர்ந்திருக்க முடியும். இந்த ஏழெட்டு வருடங்களாக தான் மிகவும் அதிகம்.

அதனால் தான் கிருஷ்ணாவை எவ்வளவு பிடித்த போதும் காட்டிக் கொள்ள மாட்டாள்.  இந்த யோசனைகளோடே பணம் தண்ணீராய் வாரி இறைத்து செய்திருந்த செலவுகளை பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனோ மாப்பிள்ளை அவளுக்கு திருப்தியில்லை. அழகாய் இருந்தான், யு எஸ் சில் இருந்தான். எல்லோரிடம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தான். ஆனால் காவ்யாவிற்கு பிடிக்கவில்லை.             

பின்பு இரவு விருந்து, அடுத்த நாள் மூகூர்த்தம், எல்லாவற்றிற்கும் ரத்னா நவீனையும் ப்ரவீனையும் கூட அழைத்து வந்திருந்தார்.

பக்கத்துக்கு வீட்டினில் இருந்து வரவில்லை என்றால் அது பேச்சு வருமே என்பது போல, எல்லா வேலைகளுக்கும் ரத்னா மகளை அவளிஷ்டதிற்கு அழகுபடுத்த விட்டுவிட்டார்.

உண்மையில் அழகு படுத்துவது காவ்யாவிற்கு இயற்கையாக வரும். ஆனால் என்றுமே ரத்னா அனுமதித்தது இல்லை. இப்போது உறவினரின் திருமணம் அங்கு தன் மகள் நன்றாக உடுத்தி இருந்தால் தான் நல்ல இடத்தினில் சம்மந்தம் வரும் என்பதால் விட்டு விட்டார்.

காவ்யாவும் பார்ப்பவர் அனைவரையும் கவர்ந்தாள், கிருஷ்ணாவை சற்று அதிகமாகவே. எப்போதும் உடன் வளர்ந்தவள் என்பதால் ஒரு உரிமை அவனிடம் எப்போதும் இருக்கும். ஆனால் இப்போது அதையும் மீறிய ஒன்று அவனுக்குள் அவனை நிச்சயமாக உணர்த்தியது. 

காவ்யா அவனை மட்டும் கவரவில்லை, ஈர்க்கவில்லை. திருமண வயதில் மகனை வைத்திருக்கும் சில பெற்றோரைக் கூட ஈர்த்தாள்.    

 

Advertisement