Advertisement

அத்தியாயம் நான்கு :

ஸ்கூல் சென்று நல்லவிதமாகவே ஹெட் மாஸ்டரிடம் வேலைக்கு இனி வரப் போவதில்லை எனச் சொல்ல,

“இங்க மாதிரி உனக்கு வொர்கிங் அட்மாஸ்பியர் கிடைக்காது” என ஆரம்பிக்க, “எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி, என்னை விட நல்லா வேலை செய்யறவங்க உங்களுக்கு கிடைப்பாங்க” என ஒரு வணக்கம் சொல்லி நன்றி தெரிவிக்க,

மேலே பேச முடியாது ஹெட் மாஸ்டரும் ஒரு வணக்கம் தெரிவிக்க, வெளியே வந்து “பியூன் அண்ணா நான் கிளம்பறேன்” என அவனிடமும் சொல்லி வெளியே வந்த போது மனது “ஷப்பா” என இருந்தது. மனது மிகவும் சுதந்திரமாக உணர்ந்தது.

இது தனக்கான வேலை இல்லை என சென்ற இரண்டு மூன்று நாட்களிலேயே புரிந்து விட்டது. அது வேண்டாம் என்பதினால் தான் அம்மாவுடன் அவ்வளவு சண்டை. அப்படி ஒன்றும் கொஞ்சிக் கொள்பவர்கள் அல்ல. இருந்தாலும் அன்றிலிருந்து சற்று அதிகமே.

ரத்னா, தான் தனியாக வளர்க்கும் மக்கள், யாரும் எதுவும் குறை சொல்லி விடக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பு காட்டி வளர்ப்பார். அதுவுமன்றி படிப்பில் காவ்யா சிறந்து வர வேண்டும் என்று அவர் எதிர்பார்க்க, காவ்யா படிப்பில் சுமார் ரகத்திற்கும் கீழே. அதில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. எப்படியோ ப்ளஸ் டூ பாஸ் செய்து ஒரு டிக்ரீ முடிக்க நினைத்து பி ஏ படித்து விட, முடித்தவுடன் கிருஷ்ணாவிடம் ஒரு மாதத்தில் வேலைக்கு ரத்னா கேட்க, அடுத்த மாதத்தில் கிருஷ்ணா சொல்ல, அடுத்த மாதத்தில அவள் சேர இதோ மாதம் முடியும் முன்னே வேலை பிடிக்கவில்லை. இன்னும் படித்து முடித்த சர்டிபிகேட் கூட கையினில் வாங்கவில்லை. அடுத்த வாரம் தான் அதற்கே கல்லூரியில் வர சொல்லியிருக்கிறார்கள். 

இன்னும் தான் என்ன செய்ய வேண்டும் என்பது மாதிரி எல்லாம் அவள் யோசித்ததில்லை. மேலே படிக்கலாமா என்ற எண்ணம் ஓடும் போதே வேலை அம்மா சொல்லி விட, பின்பு அதனை நினைக்கவில்லை. எப்படியோ விடுதலை வந்தாகிவிட்டது. அப்படி மனதிற்கு ஒரு ஆசுவாசத்தைக் கொடுத்தது.     

யோசனைகளோடே அவள் நடந்து வர, எதிரே போன் பார்த்துக் கொண்டே  வந்த ஒருவன் அவள் மீது மோதி விட, அப்படியே எதிர் பாராத விதமாக கீழே விழுந்து விட்டாள்.

“சாரி, சாரி” என அவன் கை கொடுத்து தூக்க, முட்டியிலும் அடி, அதையும் விட முட்டி காயம் ஆகிவிட அந்த இடத்தில் அவளின் சுரிதாரின் பேண்ட்டும் கிழிந்து விட்டது. வலியும் இருக்க, தூக்கி விட்டவனை முறைத்து பார்த்தாள். பார்வை மட்டுமே வாய் வார்த்தையாக எதுவும் பேசவில்லை.

“சாரி, சாரி” என அவன் மீண்டும் மீண்டும் கேட்க, கைகளில் இருந்த மண்ணை தட்டி விட்டுக் கொண்டே கீழே விழுந்திருந்த அவளின் பர்சை எடுக்க,

அதற்குள் இன்னொரு பெண் வந்தவள் “வினய்” என, “வேகமா வந்தேன், இந்த பொண்ணை இடிச்சிட்டேன் கவனிக்காம, கீழே விழுந்திட்டா” என,

அதுவரையிலும் பேசாமல் இருந்தவள், முகத்தினில் ஒரு ஆவேசத்தைக் காட்டி “என்ன விழுந்திட்டா?” ,

“ஆமாம் விழுந்திட்ட தானே. ஐ வாஸ் டெல்லிங் தட் ஒன்லி. வொய் யு ஆர் ரியாக்டிங் திஸ் மச்” என,

“யு மே பீ ஒல்டர் தென் மீ, பட் இஸ் திஸ் தி வே டு டால்க், விழுந்துட்டான்னு என்னை வா போ சொல்ற, ஐ டோன்ட் வான்ட் யுவர் சாரி, நீ நில்லு, நான் உன்னை தள்ளி விடறேன், சரியாப் போயிடும்!” என ஆரம்பித்து அவளும் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு முட்டியில் இருந்த வலிக்கு சரியாகப் பொரிய,  

அவன் திரும்பி பக்கத்தில் இருந்த பெண்ணை பார்த்தான், அவள் ஏதாவது உதவிக்கு வருவாளா என்பது போல.

ஆனால் அவள் விடாது காவ்யாவையே பார்த்திருந்தாள். “ரிது” என வினய் அழைக்கவும் தான் திரும்பியவள், “என்ன?” எனப் பார்க்க,

“ஷி இஸ் பிளேமிங் மீ, எனக்கு தமிழ் சரியா வராது, சொல்லு!”

காவ்யாவிடம் திரும்பியவள் “தமிழ் எல்லாம் சரியா வரும், ஆனா மரியாதையா வராது, தட்ஸ் இட்!” என்றவள், “ஹாய் ஐ அம் ரிதன்யா அண்ட் திஸ் வினய். ரியல்லி வெரி சாரி, இவன் போன் பார்த்துட்டே வந்தான் சோ ஒன்லி” என்றவள்,

“பாவம் இப்போ தான் எங்க ஹெட் கிட்ட வாங்கி கட்டிட்டு வர்றான், அதனால் விட்டுடுவோம்” என்றவள், “நீங்க என்ன பண்றீங்க?” என்றாள் சிநேகமாக.

“நீங்க ஏன் அதை தெரிஞ்சிக்கணும்” என்றவள், வினய்யை முறைத்துப் பார்த்து கிளம்பினாள்.

காலை விந்தி விந்தி தான் நடந்தாள். இரண்டடி வைப்பதற்குள் ஒரு ஆட்டோ வர, இப்படி கிழிந்த உடையுடன் பஸ்ஸில் போக கூச்சமாய் இருக்க, யோசியாது நிறுத்தி ஏறி அமர்ந்து இடம் சொல்லி, செல்லச் சொன்னாள்.

அங்கே ரிதன்யாவும் வினய்யும் வாக்குவாதத்தில் இருந்தனர், “அந்த பொண்ணு, நீ ஏன் பேசின, இப்போ எப்படி போகுது?” என,

“போடா, அறிவில்லாத மண்டையா. அந்த பொண்ணோட இங்கிலீஷ் நல்லா இருந்தது, நியூஸ் ரீடிங்க்கு வருமான்னு கேட்க தான் கேட்டேன், நாளைக்கு இருந்து ரீனா டெலிவரி லீவ்ல போறா, இன்னும் நீ செலக்ட் பண்ணின ஆளை நம்ம ஹெட் பார்க்கலை, போடாங்க உனக்காக பார்த்துட்டு இருந்தா, நீ என்னை திட்டுவியா?” என திட்டி நடக்க, “ஹேய் ரிது, ஐ அம் சாரி” என்று அவளின் பின் கெஞ்சிக் கொண்டே நடந்தான்.

அவர்கள் அங்கே இருந்த புகழ் பெற்ற தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலையில் இருந்தார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியில் இருவருமே இருந்தார்கள், வினய் வேற்று மாநிலத்தவன். இங்கே வந்த பிறகு தான் தமிழ் பழக ஆரம்பித்தான். அது தான் தமிழ் ததங்கினத்தோம்.

அவனிடம் பேசி வந்து விட்டாலும் ஆட்டோவில் போகும் பொழுது அழுகை வரும் போல இருந்தது.  அழக்கூடாது என சொல்லிக் கொண்டு அப்படியே சாய்ந்து அமர்ந்து கொண்டாள். கிட்ட தட்ட ஒரு மணி நேர பயணம். வீடு வரும் போது மதியம் பன்னிரண்டு மணி, இவளின் வீட்டின் முன் ஆட்டோ நிற்கவும், “எவ்வளவு அண்ணா” எனக் கேட்க,

“இருநூற்றி ஐம்பது” என்றவரிடம்,

“ப்ச், பஸ்லயே வந்திருக்கலாம், அம்மா ஒரு வேலை திட்டினா” என யோசித்துக் கொண்டே, “இருங்க அண்ணா, பணம் வாங்கிட்டு வர்றேன்” என்று சொல்லி இறங்கி கேட்டை திறந்து உள்ளே நுழைய, சரியாக அந்த நேரம் கிருஷ்ணா எங்கோ வெளியில் சென்று வந்தவன், இவளின் வீட்டின் முன் ஆட்டோ நிற்பதையும் இவள் கேட்டை திறந்து செல்வதையும் பார்த்து,

“நீயா வந்தே” எனக் குரல் கொடுத்தான்.

குரலை கேட்டு திரும்பியவள் “ஆம்” என்பது போல தலையாட்ட, ஆட்டோவின் அருகில் வந்து எவ்வளவு எனக் கேட்டு கொடுக்கவும்,

“அம்மா கிட்ட வாங்கிக் கொடுக்கறேன்” என இவள் சொல்லவும்,

“போடி” எனத் திட்டி அவனின் வீட்டின் உள் சென்று விட்டான். காவ்யா விந்தி விந்தி நடப்பதை கவனிக்க வில்லை. இவள் கதவின் பெல் அடிக்க வெகு நேரம் கழித்தே ரத்னா கதவை திறந்தவர், “குளிச்சிட்டு இருந்தேன்” என சொல்லியபடி அவளைப் பார்க்க,

முகமே சரியில்லாமல் இருக்க, ‘என்ன காவ்யா, என்ன ஆச்சு?” என்றார்.

“விழுந்துட்டேன் கீழ” என அடிபட்ட முட்டியை காட்ட,

“அச்சோ, டிரஸ் கிழியற அளவுக்கு விழுந்திருக்க, பார்த்து வரக் கூடாதா?” என சொல்லியபடி அவள் அமர்ந்ததும் காலை ஆராய, அது முட்டியில் சிராய்த்து ரத்தம் வந்த்திருந்தது. காயமும் ஆகியிருந்தது.

“சுரிதார் பேன்ட் கழட்டிட்டு தண்ணில கழுவு, மருந்து போடலாம், ஆயின்ட் மென்ட் எங்கே வெச்சேன் தெரியலை” என்று ரத்னா அதை தேடப் போக, அம்மா சொல்லியபடி சென்று புண்ணில் தண்ணியை விட்டு கழுவி வரவும், ஒரு துண்டால் அதனை ஒற்றி எடுத்து ஆயின்ட்மென்ட் போட்டு விட, பேன்ட் போடவில்லை, சுரிதார் டாப்ஸ் மட்டும் போட்டு இருந்தாள். அது புண்ணை தொடவில்லை. புண்ணுக்கு சற்று மேலே இருந்தது.           

வீட்டின் ஹாலில் இருந்த பழைய சோபாவில் அப்படியே சாய்ந்த வாக்கில் அமர்ந்திருந்தவள், சிறிது நேரத்தில் உறங்கி விட்டாள்.  

ரத்னா காய வைத்த துணிகளை எடுக்க மேலே மொட்டை மாடிக்கு சென்று விட, வாயிலின் பெல் அடிக்க, பாதி தூக்கத்தில் விழித்த காவ்யா, அவள் பாட்டிற்கு சென்று கதவை திறந்தாள், பேன்ட் இல்லாதது ஞாபகத்தில் இல்லை.  

கிருஷ்ணா நின்று கொண்டிருந்தான். அவளை இந்த கோலத்தில் எதிர்பார்க்கவில்லை. அதுவும் அது ரெட் கலர் டாப்ஸ், முட்டிக்கு மேலே இருக்க, அவளின் வெண்மையான கால்களின் வனப்பு பளிச்சென்று தெரிய, ஷால் எதுவும் இல்லாமல் உடலின் வனப்பும் தெரிந்தது.

அதையும் விட குறைவான உடைகள் இப்போது நடை முறை வாழ்க்கையிலேயே கண்ணில் தென்பட்டாலும் இப்படி காவ்யாவை பார்த்ததில்லை. சுரிதார் அல்லது லாங் ஸ்கர்ட் இப்படித்தான் அவளின் உடை எப்போதுமே. டைட் டீ ஷர்டில் பெண்கள் இருந்தாலும் அவர்கள் அவனை கவர்ந்ததில்லை.

சில நாட்களாக காவ்யா அவனை கவர ஆரம்பித்து இருந்தாள். அவனுள் அவளை குறித்த சில வித்தியாசங்கள். அது வந்ததற்கு காரணம் நிச்சயம் காவ்யா மட்டுமே. அவன் பாராத போது அவனைப் பார்ப்பது, சகஜமாக பேச முனைந்தால் தவிர்ப்பது, இப்படி சில காவ்யாவின் செய்கைகள் அவளை சற்று ஆர்வமாகப் பார்க்க வைத்தது. அதிலும் முன்பை விட அவள் அழகாக மாறிவிட்டது போல ஒரு அவனுக்குள் தோற்றமளித்தது.

காவ்யா முன்பே நல்ல நிறமாக இருப்பாள், இப்போது இன்னும் அதிகமாகிவிட்டது போல தான் கிருஷ்ணாவிற்கு தோன்றியது. அவளின் சிகப்பு நிற உடைக்கும் அவளின் நிறத்திற்கும் அப்படி ஈர்ப்பு சக்தி இருக்க, அவளையே விடாது பார்த்திருந்தான். 

எதற்கு இப்படி பார்க்கிறான் என காவ்யா பார்த்தாலும் அவளுக்கு புரியவில்லை. அந்த காவ்யாவின் தோற்றம் வசீகரித்தது. அதனை கண்களிலும் காட்டி “என்ன இது?” என அவளின் உடையைக் காட்ட

“என்ன?” என குனிந்து பார்த்துக் கொண்டவளுக்கு பேன்ட் போடாதது ஞாபகம் வர, “ப்ச்” எனத் தலையில் தட்டிக் கொண்டாள்.

அவள் குனிந்து பார்க்கும் போதுதான் அவனும் அவளின் காயத்தை பார்க்க, “என்ன இது” என்றான் திரும்பவும்,

என்ன செய்வது என்று புரியாமல் பதில் பேசாமல் சட்டென்று அப்படியே கதவை சாத்தி விட்டாள். 

சாத்தி விட்டு வேகமாக பேன்ட் போட எட்டு வைக்கவும், ரத்னா இறங்கவும், “அம்மா யாரோ பெல் அடிச்சாங்க பாரு” என்று இருந்த ஒரு ரூமின் உள் புகுந்து கொள்ள,

“யார்” என்பது போல ரத்னா கதவை திறக்க, கிருஷ்ணா படியிறங்கிக் கொண்டிருந்தான்.

“என்ன கிருஷ்ணா பெல் அடிச்சிட்டு அப்படியே போற?” என ரத்னா கேட்க,

காவ்யா சொல்லி வந்திருக்க வேண்டும் என்று புரிந்தவனாக, “ரேணு உங்ககிட்ட சொல்லிட்டு காவ்யாவை கூட்டிட்டு வரச் சொன்னா, பியுட்டி பார்லர்ல இருந்து வந்திருக்காங்களாம், மேக் அப் டிசைட் பண்ண!” என,

“இவளா? இவ எதுக்கு கிருஷ்ணா?” என்று ரத்னா தயங்க,

“ரேணு இஷ்டப்படறா அத்தை, அதுதான் போன் பண்ணினா நீங்க அனுப்பலைன்னான்னு என்னை நேர்ல அனுப்பிவிட்டிருக்கா!”

“இல்லை கிருஷ்ணா, அது வந்து” என அவர் இழுக்க,

“அனுப்புங்க அத்தை” என்றான் சிறு வற்புறுத்தலோடு,

“உங்கம்மா இஷ்டப்பட மாட்டாங்க கிருஷ்ணா, அதுவுமில்லாம வீடு பூராவும் நிறைய பேர் இருக்காங்க, என் மகளை ஏதாவது சொல்லிட்டா எனக்கு ரொம்ப கஷ்டமா போயிடும்” என்று தயங்கி தயங்கி ரத்னா உரைத்து விட்டார்.

“அப்படி எல்லாம் எதுவும் பண்ண மாட்டாங்க அத்தை, நான் இருக்கேன் தானே, இவ நல்லா செலக்ட் பண்ணுவான்னு ரேணு சொல்றா” என,

“காவ்யா” என குரல் கொடுக்க, வேறு சுரிதார் மாற்றியிருந்தாள், அதுவரை. அவள் வரவும் “போறியா” என,

“போறேன் மா, ரேணு கிட்ட வர்றேன்னு சொல்லிட்டேன்” என,

“சரி போ, ஆனா பதவிசா இருக்கணும். யார் கிட்டயும் வாய் கொடுக்கக் கூடாது, சத்தம் போட்டு சிரிக்கக் கூடாது, யார் கவனத்தையும் கவரக் கூடாது” என அடுக்க,

“மா, நான் போகவேயில்லை போங்க” என அவள் திரும்ப,

“போயிட்டு வா” என ரத்னா ஒரு அதட்டல் இட, அவரை முறைத்துக் கொண்டே இறங்கினாள். கிருஷ்ணா எதுவுமே பேசவில்லை. அவனுடன் தனியாக வரவும் அவள் நின்றிருந்த தோற்றம் ஞாபகம் வர, அவளுமே கூச்சத்தில் எதுவும் பேசவில்லை, அவனின் முகத்தையும் பார்க்கவில்லை.

கிருஷ்ணா “எப்படி காயம் ஆச்சு” என,

அவன் தன்னை பார்த்த தோற்றம், அதனைக் குறித்த அவனின் பார்வை மட்டுமே ஞாபகத்தில், அதுவே காவ்யாவின் மனதில் ஓடிக் கொண்டிருக்க, அவன் கேட்டதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூட தோன்றவில்லை. வீடு என்ன வெகு தூரமா? வீடு வந்து விட்டது!   

 

 

Advertisement