Advertisement

அத்தியாயம் மூன்று :

வீடு வரவுமே கிருஷ்ணாவின் பைக் அரவம் கேட்டு,  அவனின் வீட்டில் இருந்தும் எட்டிப் பார்த்தனர், காவ்யா வீட்டினில் இருந்தும். ரத்னா வாயிலிற்கு வர, அப்போது தான் நவீனும் பிரவீனும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தனர்.

நொடியில் காவ்யா அவனின் பைக்கின் பின் புறமிருந்து இறங்கிவிட்டாள். அதனால் அப்போது பார்ப்பவருக்கு எல்லோரும் நின்று பேசுவது போல தான் தோன்றும்.

அவர்கள் எல்லோரும் நிற்க, பார்த்த சசிகலாவிற்கு அப்படி ஒரு கோபம். அவரின் மகன் அவரின் கையை விட்டு போனது போன்ற ஒரு தோற்றம், பார்த்தது பார்த்த படியே நிற்க,

காவ்யாவின் பார்வையில் அது பட, நிற்காமல் உள்ளே சென்றாள். “ஏன் காவ்யா லேட்?” என ரத்னா கேட்க நிற்கவேயில்லை.

செல்லும் மகளை ரத்னா கோபமாகப் பார்க்க, “உள்ள போங்க” என்று அவரை அதட்டியவன், அவரின் பின்னோடு செல்ல, அதனையும் சசிகலா கோபமாகப் பார்க்க, “உள்ள போங்கம்மா, அஞ்சு நிமிஷம் வந்துடுவேன்” என்று இந்த வீட்டில் இருந்த படியே அவரிடமும் சொல்லிச் செல்ல, எதோ ஒரு வகையில் அது மனதிற்கு ஆறுதலை தர அவர் உள்ளே சென்றார்.

இங்கே எல்லோரும் வீடு வந்ததும், காவ்யாவைப் பார்க்க, அவள் அங்கே இல்லவே இல்லை, மேலே அவளின் ரூம் சென்றிருந்தாள்.

ரத்னா மேலே முறைத்துப் பார்த்திருக்க, “உங்களால அவளை பார்த்துக்க முடியும்னா பார்த்துக்கங்க, இல்லை அவளை நான் ஏதாவது ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுடறேன்” என

அதிர்ந்து பார்த்தார் “என்ன பேச்சு இது” என்பது போல,

“கோபப்பட்டு பார்த்தா மட்டும் போதாது, அவ செய்யறது சரியா தப்பான்றது பேச்சில்லை. நீங்க என்ன பண்றீங்கன்னு தான் பேச்சு, சாப்பிடறதை பத்தி எல்லாம் பேசுவீங்களா, காலையில இருந்து சாப்பிடாம இருந்திருக்கா. பஸ்க்கு காசில்லாம நடந்து வந்திருக்கா, எப்படியோ எனக்கு போன் பண்ணிட்டா, அப்போ கூட உங்களுக்கு பண்ணலை, யோசிங்க!”

“என்ன சண்டைன்னாலும், ஒரு பிரச்சனைன்னா முதல்ல குழந்தைங்க அம்மாவைத் தேட வேண்டாமா, சாப்பிடாம இவ்வளவு தூரம் நடந்து வந்தது, எங்கேயாவது மயங்கி இருந்தா?” என சொல்லவும், ரத்னாவும் நவீனும் பிரவீனும் அப்படியே நின்று விட்டனர்.

“சாப்பிடறதை எல்லாம் சொல்லிக் காட்டாதீங்க அத்தை. அது ஒரு ஒரு வாய் சாப்பிடும் போதும் வலிக்கும். அது ஒன்னும் அவ்வளவு பெரிய வேலை இல்லை, அவ போகலைன்னா என்னவோ வாழ்க்கையே போற மாதிரி பேச”

“இன்னும் கொஞ்சம் நேரம் நின்னேன், இன்னும் ரொம்ப பேசிடுவேன்” என்றபடி கிருஷ்ணா சென்று விட,

ரத்னா அப்படியே அமர்ந்து விட்டார். கண்களில் நீர் பொலபொல வென்று இறங்கியது. நவீனும் பிரவீனும் ஒரு புறம் அமர்ந்து விட்டனர்.         

சிறிது நேரத்தில் அம்மா அழுவதை உணர்ந்தவர்கள், “மா, என்ன இது?” என சமாதானம் செய்ய,

“என் பொண்ணை அவன் ஹாஸ்டல்ல சேர்ப்பானாம்” என,

“அவரை தானே தேட அனுப்பினீங்க, ஆனா அவர் சொல்றது மட்டும் வருத்தப் படுத்துமா” என நவீன் பளிச்சென்று நியாயத்தை சொல்லவும், சற்று தெளிந்தவர்,

“எல்லாம் இவளால” என மகளைச் சாட,

“அம்மா நீங்க சாப்பிடறதை பேசினது தப்பு. அதுவும் எப்போவுமே காவ்யாக்கு ரோஷம் அதிகம் அதை அவ்வளவு சுலபத்துல மறக்க மாட்டா” என மீண்டும் சொல்ல,

“உண்மையை தானே சொன்னேன்” என,

“என்ன உண்மை? எங்க சம்பாத்தியம் மட்டும் தான் இங்கேயா, நம்ம வீட்டுக்கு பின்புறம் தடுத்து, பின் பக்க வழியா ரெண்டு போர்ஷன் வாடகைக்கு விட்டிருக்கோம். அதுல இருந்து பதினைஞ்சாயிரம் வாடகை வருது, அது போக அப்பப்போ நீங்க கேட்கறவங்களுக்கு ஸ்வீட் சமையல் பொடி எல்லாம் செஞ்சு கொடுக்கறீங்க. அதுல எதோ பணம் வருது. அதுக்கு அப்புறம் தான் எங்க சம்பாத்தியம். ஏன் அவ சாப்பிடறதை இதுல கொண்டு வர்றீங்க” என்று சண்டையிட,

“இந்த வாடகையும் எனக்கு வர்றதும் நாம சாப்பிடப் பத்தாதா. ஆனாலும் ஏன் உங்களை கஷ்டப் படுத்தறேன். அவளுக்கு நகை செய்யணும் அவளை ஒரு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு தானே. அதை கொஞ்சமாவது புரிஞ்சிக்கறாளா?”

“இதுவரை நான் சேமிச்சு என் பொண்ணுக்கு முப்பது பவுன் செஞ்சிருக்கேன். உங்க அப்பா இறந்தப்போ இந்த வீட்டை தவிர நம்ம கிட்ட எதுவுமே கிடையாது. நகைன்னு இருந்தது நான் கழுத்துல போட்டிருந்த தங்கத் தாலி மட்டும் தான். பிசினெஸ் பண்றேன்னு அத்தனையும் முடிச்சிட்டார் உங்கப்பா”

“இந்த பதினெட்டு வருஷமா ஒத்தையா நான் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பேன். பொறுப்பா இருன்னு சொன்னா அது ஒரு தப்பா?” என வேகமாக பொறிந்தவர்.

“அப்போ இருந்து இப்போ வரை நான் தங்கம்னு எதுவும் போடலை தோடு தவிர. ஏன்? எல்லாம் என் பொண்ணுக்கு பொண்ணுக்குன்னு சேர்த்து தானே வைக்கறேன். கழுத்துல நான் ஒரு செயின் போட்டாக் கூட அது பழசாகிடும்னு நான் கவரிங் போட்டு தான் இருக்கேன்” என,   

“என்ன இருந்தாலும் நீங்க பேசினது தப்பு, முதல்ல சமாதானம் செய்ங்க” என,

அவர் மாடியேறவும் நவீனும் பிரவீனும் தொடரவும், அங்கே இருந்த ஒற்றை நாடாக் கட்டிலில் சுவரில் சாய்ந்து அமர்ந்து கால்களை பிடித்து விட்டு கொண்டிருந்தாள்.

“ஏன் காவ்யா இப்படி பண்ணின? ஒரு ஆட்டோ பிடிச்சு வரமாட்டியா?” என நவீன் ஆதங்கப் பட, பிரவீன் எதுவும் பேசாமல் கால்களை பிடித்து விட,

எதுவும் வேண்டாம் என்பது போல கால்களை மடக்கிக் கொண்டவள் “அம்மா தான் எப்பவும் என்னை திட்டிட்டே இருக்காங்க” என சொல்லும் போதே மீண்டும் அவளின் கண்களில் நீர்.

“அம்மா திட்டுவாங்கன்னு ரொம்ப கவலை படற ஆசாமியா நீ, திட்டுனா இன்னும் சேர்த்து தானே டென்ஷன் பண்ணுவ?” என விளையாட்டுப் போல என்றாலும் நவீன் உண்மையை சொல்ல,

பிரவீன் அவளின் கால்களை வலுக்கட்டாயமாக நீட்ட இழுத்துக் கொண்டிருக்க,

“ஒன்னும் வேண்டாம் போ போ” என பிரவீனின் கையை தட்டி விட்டவள், “அதுக்குன்னு நான் சாப்பிடறதை எல்லாம் சொல்லுவாங்களா, சாப்பாடு எல்லாம் போட முடியலைன்னா எதுக்கு பெத்துக்கணும், இல்லை என்னை அப்படியே தெருவோட போட்டிருக்க வேண்டியது தானே”  

அவ்வளவு தான் ரத்னாவிற்கு கோபம் பொங்க “அறைஞ்சன்னு வெச்சிக்கோ” என அவளை அறையப் போக, வேகமாக நவீன் தான் பிடித்து நிறுத்தினான்.

“ஒவ்வொரு நிமிஷமும் உங்களுக்காக யோசிச்சு உங்களுக்காக வாழ்ந்துட்டு இருந்தா உன்னை தெருவுல விட சொல்லுவியா, இப்ப தான் ஒருத்தன் வந்து சாப்பாடு போட முடியலைன்னா உன்னை ஹாஸ்டல் சேர்த்து விடறேன் சொல்றான். என்னடி நினைச்சிருக்கிங்க எல்லோரும் என்னை” என சொல்லி வெடித்து அழ,

காவ்யாவிற்கு அம்மாவைப் பார்த்தும் பாவமாகப் போய்விட்டது. “அழாத, அழாத, நான் அந்த வேலைக்கு போகலைன்னு சொல்ல மாட்டேன்” என,

ரத்னா அவளை பார்த்த பார்வையில் “இவ்வளவு தான் நீ என்னை புரிந்ததா?” என்ற கேள்வி இருக்க,

“அதுக்கு தான சண்டை வந்தது” என்றாள் காவ்யா.

“போடி” என்றவர் அங்கே இருக்காமல் கீழே இறங்கிவிட, நவீன் அவரின் பின் போக, பிரவீன் “ஏன் காவ்யா இப்படி பண்ற?” என்றான்.

“எப்படி பண்றேன்?” என்ற காவ்யாவிற்கும் அழுகை பொங்க, அவர்கள் இருவரையும் வைத்துக் கொண்டு நவீனும் பிரவீனும் தான் தவித்துப் போயினர்.

யாரும் சமாதானம் ஆகவில்லை என்றாலும் வயிறேன்று ஒன்று இருக்கின்றதே, யாரும் உணவு உண்ண மாட்டார்கள் எனப் புரிந்து காவ்யா பசியில்லாத போதும் “பசிக்குது” எனச் சொல்ல, அவளுக்காகப் பின் அனைவரும் உணவு உண்ண அமர்ந்தனர்.

அவள் ஒரு இட்லியை வைத்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் “சாரி நான் சொன்னது தப்பு தான், சாப்பிடு” என ரத்னா சொல்ல,

“அதில்லைமா, கிருஷ்ணா டிஃபன் வாங்கிக் கொடுத்தான். அதுதான் பசிக்கலை” என,

“வேஸ்ட் பண்ணாத அதை நவீன்க்கு கொடு” என, இப்படியாக அவர்கள் உண்டு உறங்கும் போது பன்னிரண்டு மணி,

உறங்க வந்தவள் கதவை திறந்து பக்கத்துக்கு வீட்டின் மொட்டை மாடியைப் பார்க்க,

நிறைய டென்ஷன் அன்று என்பதால் உறக்கம் வராமல் இருந்த கிருஷ்ணாவும் அப்போது தான் வெளியே வந்து ஒரு சிகரெட் பற்ற வைத்திருந்தான். பொதுவாக வீட்டில் இதுவரை பிடித்ததில்லை. இன்று தான் முதல். இவள் வருவாள் என்றும் எதிர்பார்க்கவில்லை. இவளை பார்த்ததும் சிகரெட் எங்கே மறைப்பது என்று தெரியாமல் தடுமாறி அதனை கீழே போடப் போக,

“எப்போ இருந்து நீ சிகரெட் பிடிக்கற” என்று அதிர்ந்து சத்தமாக காவ்யா கேட்க,

“ஐயோ ஏன் கத்துற, என்னோட தான் ரூம்ல ரமேஷ் தூங்கறான், மெதுவா பேசு!” என,

அந்த வார்த்தைகளையே திரும்ப படித்தாள். மெதுவாக “எப்போ இருந்து நீ சிகரெட் பிடிக்கிற?” என்றாள் அதிர்வு குறையாமல்.  

“நீயேன் இவ்வளவு ஷாக் ஆகற” என கிருஷ்ணா கேட்கவும் சுதாரித்து கொண்டவள்,

“ஏன் உன்னை கேள்வி கேட்கக் கூடாதா?” என,

“தாராளமா கேளு, நான் எப்போ வேண்டாம்னு சொன்னேன். நீதான் எப்பவும் என்கிட்டே முன்ன பேசின மாதிரி பேசாம, அவாய்ட் பண்ணுவ. ஆனா நான் எப்பவும் அதே கிருஷ்ணா தான்” என்றான் சற்று கர்வமாகவே.  

“எதோ ஒன்னு சிகரட் பிடிக்காதே” என்றாள் பட்டென்று.

“நீ சொன்னா நான் ஏன் கேட்கணும்?” என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி.  

“கேட்காத, எப்படியோ நாசமா போ! எனக்கென்ன?” எனச் சொல்லி, வேகமாக ரூமின் உள் வந்து கதவை சாத்திக் கொண்டாள்.

“எமகாதகி” என்று முணுமுணுத்துக் கொண்டே “வட போச்சே” என்பது போல கீழே போட்ட சிகரெட்டை பார்த்தான்.

அவன் சிகரெட்டை பார்த்துக் கொண்டிருக்கும் போதே பட்டென்று கதவு திறந்து வெளியே வந்தவள் அவனை முறைத்து பார்க்க,

“இப்ப என்ன?” என்றான் கூலாக.

“எங்கம்மாவை பேசினியா? நீயார் எங்கம்மாவை பேச, இனிமே பேசின.. என்ன பண்ணுவேன்னு தெரியாது!” என கோபமாகப் பேச.

“என்ன பண்ணுவ?” என்றான் திரும்பவும் கூலாக.

“ம்ம்ம்! என்ன பண்ணுவேன்னு இனிமே தான் யோசிக்கணும்” என்று கோபத்தை விட்டு அவனின் பாவனைக்கு மாறியவள், “பேசக் கூடாது” என்றாள் திரும்பவும் கறாராக.

“ஏய் ஓவரா பேசாத, உங்கம்மாவை விட எங்கம்மாவை இப்ப எவ்வளவு பேசியிருக்கேன் தெரியுமா? அந்த டென்ஷன்ல தான் சிகரட்,  பிடிக்கறேன், உங்கம்மாவை பேசக் கூடாதுன்னு சொல்றதை விட்டு, உங்கம்மாவை பேசற சூழ்நிலை எனக்கு கொண்டு வராதே, போ, போ, போய் தூங்கு! கொஞ்சமாவது பொறுப்பா இரு!” என,

“நீ பெரிய பருப்பு மாதிரி முதல்ல பேசறதை விடு, போடா!” என அவனை திட்டி திரும்பவும் உள்ளே போகப் போக,

நேற்றை போல ஒரே தாவில் இந்த புறம் வந்தவன் அவளிடம் கைநீட்டி, “தொலைச்சிடுவேன், இப்படி இனிமே சாப்பிடாம, இந்த மாதிரி நடந்து வர்ற பைத்தியக்காரத்தனம் எல்லாம் பண்ணின.. என்னவோ ஏதோன்னு பதறி உன்னை கண்ல பார்க்கற வரை எவ்வளவு டென்ஷன் தெரியுமா? பின்ன உங்கம்மாவை திட்டி, அப்புறம் எங்கம்மா கூட சண்டை போட்டு எல்லாம் உன்னால, என் தங்கை கல்யாணம் அதை என்னை அனுபவிக்க விடு. ஏதாவது இழுத்து வெச்ச” என மிரட்ட,

பேசும் அவனை முறைத்து பார்த்தவள், அவன் பேசி முடித்ததும் உள்ளே சென்று கதவை மூடிக் கொண்டாள்.

அவளை திட்டி முடித்ததும் கிருஷ்ணா உறங்கிவிட மீண்டும் உறக்கம் தொலைத்தாள் காவ்யா.

காவ்யா மட்டுமல்ல சசிகலாவும் உறங்கவில்லை, மகன் அவரை பேசியதை நினைத்து! யாரோ ஒரு பெண்ணுக்காக என்னையும் “நீங்க இப்படி தான் ஊர் சுற்றுகிறீர்களா” என்று கேட்கிறான். அதனையும் விட “அவள் யார் உனக்கு?” என்று கேட்டால், “யாராயிருந்தால் உங்களுக்கு என்ன?” என்று கேட்கிறான், மனம் ஆறவேயில்லை.

வெகுநேரம் உறங்கவில்லை. எல்லாம் ஒரு கோபமாக வன்மமாக காவ்யாவின் மேல் தான் திரும்பியது. 

அடுத்த நாள் காலையில் காவ்யா வேலைக்கு கிளம்ப, “வேண்டாம் நீ போகாதே” என்றார் ரத்னா.

“இல்லை நான் போறேன்” என,

“போகாதேன்னு சொன்னேன். அப்படி நீ நாள் முழுசும் சாப்பிடாம இருந்து, எனக்கு ஃபோன் கூட செய்யாம, நீ பாட்டுக்கு அங்க இருந்து ரோட்ல நடந்து வர்ற, சாப்பாடு கூட போட முடியலைன்னா எதுக்கு பெத்துகிட்ட கேட்கற, நீ எங்கேயும் போக வேண்டாம், வீட்ல இரு!” என முடிவாகச் சொல்ல,

“நீங்க போன்னா நான் போகணும், நீங்க இருன்னா நான் இருக்கணும், அப்படி தானே!” என தீர்க்கமாக பார்த்தவள், “என்ன செய்யணும்னு நான் முடிவு பண்றேன், தப்பா பண்ணினா சொல்லுங்க சரியா, அதுவரைக்கும் எனக்கு சாப்பாடு போடறதுக்கு கணக்கு வெச்சிக்கங்க” என திமிர் பேசினாள்.

“காவ்யா நீ இதை பேசாத, இதை விடு!” என நவீன் அதட்ட,

“அப்படி தான் பேசுவேன்” என முறைத்தவள், “நான் இனிமே வரமாட்டேன்னு போய் சொல்லிட்டு வர்றேன், சொல்லலைன்னாலும் எனக்கு ஒன்னும் இல்லை. ஆனா கிருஷ்ணாக்கு மரியாதையா இருக்காது” என,

ரத்னா பேசாமல் நிற்க, “போயிட்டு, சொல்லிட்டு வர்றேன்” என்று அப்படியே நின்றாள்.

“சரி போ” என்று சொல்லும் வரையிலும் அப்படியே தான் நின்றாள். அதுதான் காவ்யா! என்ன சண்டையிட்டாலும் அவரின் சம்மதம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டாள்.

அவள் வாசல் இறங்கவும் ரேணுகா அவளை பார்த்து விட்டவள், வேகமாக அருகில் வர,

“என்ன ரேணு” என,  

“நாளைன்னைக்கு கல்யாணம், அதையும் இதையும் சொல்லாம வந்துடணும்!” என,

“கண்டிப்பா வந்துடறேன், ஆனா மண்டபத்துக்கு வந்துடறேன்!” என்று சிரித்த முகமாகவே சொல்ல,

“நான்.. நான்.. உனக்கு ஒரு புடவை எடுத்தேன், என் கல்யாணத்துக்கு, நீ கட்டிக்குவியா?” என,

“புடவையா? எப்போ எடுத்த? எதுக்கு என்னை கேட்காம எடுத்த?” என்று குறை பட,

“ப்ளீஸ் காவ்யா, உனக்கும் எனக்கும் ஒரே மாதிரி, ஆனா வேற வேற கலர்ல கிருஷ்ணா தான் எடுத்தான். நான் தான் எடுத்துட்டு வரச் சொன்னேன், ப்ளீஸ்!” என,

“நான் அதை கட்டுவேன், நீ அதையா கட்டுவ? அப்புறம் என்ன?” என,

“ப்ளீஸ்” என்றவளிடம்,  

“ஓகே வாங்கிக்கறேன், ஆனா ஒரே ஒரு கண்டிஷன், உங்கம்மாக்கு தெரிஞ்சு அதை கொடுத்தா வாங்கிக்கறேன். தெரியாம கொடுத்தா வாங்க மாட்டேன்” என்றவள்,

“அது எப்படி முடியும்” என்ற கவலையை ரேணுகாவின் முகத்தினில் பார்க்க,

“ஹே கல்யாணப் பொண்ணு, காவ்யா எல்லாம் டம்மி பீஸ்! இப்ப நீ அவளை பத்தி எல்லாம் நினைக்கக் கூடாது, ஹேப்பியா உன் மாப்பிள்ளையை நினை” என சொல்லி கன்னம் தட்ட,

“வாங்கிக்கோடி” என ரேணுகா திரும்பவும் சொல்ல,  

“நான் சொன்னது சொன்னது தான். மனசை குழப்பாதே சரியா, உங்கண்ணன் வேற நான் எதோ உன் கல்யாணத்தை என்ஜாய் பண்ண விடாம டென்ஷன் பண்றேன்னு சொன்னாங்க. காவ்யா எந்த டென்ஷனும் கொடுக்க மாட்டா சொல்லிடு” என,

“அவனா சொன்னான், இருக்காதே!” என ரேணுகா நம்பாமல் சொல்ல,

“சொன்னாங்க சொல்லிடு!” என்றாள் திரும்பவும்.

“சரி, விடு! ஈவ்னிங் நான் என்னோட ரிஷப்ஷன் அண்ட் கல்யாணப் புடவை காட்டுறேன், நீ எந்த மேக் அப் சொல்லு, அந்த பியுட்டி பார்லர் பொண்ணு கிட்ட சொல்லணும், அவளை வரச் சொல்லட்டும்மா இல்லை நம்ம போகலாம்” என,

“நானா?” என,

“பின்ன நீ என்கிட்டே சரியா பேசவேயில்லை, இல்லை முன்னமே டிஸ்டர்ப் பண்ணியிருப்பேன். எனக்கு எது நல்லா இருக்கும்னு சொல்லணும் ப்ளீஸ்” என,

“அய்ய எதுக்கு இத்தனை ப்ளீஸ். நான் சொன்னா உங்கம்மா டென்ஷன் ஆவாங்க” என,

“ஆனா ஆகிட்டு போறாங்க. நான் என் கல்யாணத்துல அழகா இருக்க வேண்டாமா?” 

“சரி, கண்டிப்பா உங்கம்மா என்ன டென்ஷன் ஆனாலும் நான் பார்த்துக்கறேன். ஃபிரண்ட் டீ நான் உனக்கு” என,

“அது” என்றவள் மலர்ந்து சிரிக்க. ரேணுகாவின் உற்ற தோழி, எல் கே ஜி யில் இருந்து ஒரே வகுப்பு, காலேஜ் வரையிலுமே. ஆம்! ரேணுகாவுமே பி ஏ இங்கிலீஷ் தான். இந்த சமயம் எதையும் முன்னிறுத்தாமல் அதனை காட்ட வேண்டிய அவசியம் மிக முக்கியம். “குட், போய் கனவு காணு” என சொல்லி, “நான் வேலைக்கு வரலைன்னு சொல்லப் போறேன்னு உங்க அண்ணா கிட்ட சொல்லிடு” எனச் சொல்லி சென்றாள்.  

Advertisement