Advertisement

“என்ன இன்னும் வரலையா?” என கேட்டுக் கொண்டே கிருஷ்ணா நேரத்தைப் பார்க்க, “உன்கிட்ட நம்பர் இல்லையா ரத்னா, நீ ஃபோன் பண்ண வேண்டியது தானே” என சசிகலா சொல்ல,

அவரின் முகம் கூம்பிப் போயிற்று,

இங்கிருந்து பேசுவதால் சத்தமாகப் பேச, ராஜேந்திரனும் என்ன வென்று வெளியே வந்து பார்த்தார்.

சசிகலாவிடம் ஒன்றும் சொல்லாமல் “பா, இவங்களை உள்ள கூட்டிட்டு போங்க” என கிருஷ்ணா சற்று கடுமையாகக் கூற,  

“நம்பர் குடு கிருஷ்ணா, நான் கேட்கறேன்” என்று ரத்னா சொல்ல,

“வரலைன்னு சொல்லிட்டீங்க இல்லை, நான் பார்த்துக்கறேன். அவ ஃபோன் எடுக்கலையா?” என்று அவரிடமும் கடுமையாகப் பேசினான்.

பின்னே அவனுக்கு பதட்டமாகி விட்டது, எட்டு மணி இன்னும் அவளைக் காணோம்!

“அவ ஃபோன் கொண்டு போகலை” என அவர் தயங்கித் தயங்கி சொல்ல,

“இவ்வளவு நேரம் என்ன பண்ணுனீங்க?” என்று ரத்னாவிடம் பேசிக் கொண்டே பள்ளிக்கு அழைக்க அது எடுக்கப் படவில்லை.

“எட்டு மணிக்கெல்லாம் அங்க யாரும் இருக்க மாட்டாங்க” என்றவன் முகத்தில் அவ்வளவு பதட்டம்.

திரும்ப அவனுக்கு அழைத்த லேண்ட் லைனிற்கு அழைத்தவன், “அவ என்ன கலர் டிரஸ் போட்டுட்டு போனா” என ரத்னாவிடம் கேட்க,

நடந்த சண்டையில் அவர் அதனை கவனிக்க வில்லை. “ஞாபகத்துக்கு வரலை” என்றார் ரத்னா பயந்து,

அதற்குள் சசிகலா “அவ எங்க ஊர் சுத்தறாளோ? சும்மா நீ எல்லோரையும் மிரட்டுற!” என கிருஷ்ணாவை பார்த்துக் கூற,  

அவ்வளவு தான் கிருஷ்ணாவிற்கு கண்மண் தெரியாத கோபம் வர, “ஏன் நீங்க அப்படி தான் சுத்திட்டு இருந்தீங்களா? அதனால அவளைச் சொல்றீங்களா?” எனக் கேட்டு விட,

“கிருஷ்ணா” என ராஜேந்திரன் ஒரு அதட்டலிட, சசிகலாவிற்கு மகனின் இந்த பதிலில் கண்கள் கலங்கி விட்டது.

“தேவையில்லாம பேசினா இப்படித்தான்” என கிருஷ்ணா சொல்லும் போதே, அந்த லேண்ட் லைன் எடுக்கப் பட,

“இது எந்த ஏரியா?” என்றவன், பதில் கிடைக்கவும் அது பள்ளிக்கும் தங்களின் வீட்டிற்கும் இடைப்பட்ட பகுதி எனப் புரிந்து,

“ஒரு பொண்ணு ஒல்லியா கொஞ்சம் உயரமா சிகப்பா வந்துச்சா, அது தான் ஃபோன் பண்ணிச்சா?”  

“தெரியலையே” என பதில் வர,    

பதட்டத்தில் கோபம் வர “என்ன தெரியலையா? டெலிபோன் பூத் இருக்காதுடா? இப்ப தான் பண்ணினாங்க, ரெண்டு மூணு கால் இருக்கு, யார் பண்ணினான்னு பார்க்காம நீ அங்க என்ன டாஸ்டா பண்ணிட்டு இருந்த?” என்று பேசிக் கொண்டே அவனின் பைக்கை எடுத்து இருந்தான்.

அவனின் மொழிகளில் அங்கிருந்த பெரியவர்கள் மூவருமே முகம் சுளித்தனர்.

கிருஷ்ணாவிற்கு பதட்டம், பதட்டம்! என்ன செய்வது என்று தெரியவில்லை. காவ்யா தான் ஃபோன் செய்தாளா என்றும் தெரியவில்லை. இருக்கும் கடவுள்கள் அத்தனை பேரிடமும் வேண்டுதல் வைத்து பைக்கை அந்த பூத் இருந்த இடம் நோக்கி விரட்டினான்.         

எப்படியும் ராஜேந்திரனும் சசிகலாவும் தன்னை முறைப்பார்கள் என்று புரிந்தவராக அவர்களின் பார்வையை தவிர்த்து ரத்னா வீட்டின் உள் சென்று விட,

சசிகலா கணவரிடம் பொறிய ஆரம்பிக்க, “ஷ், வீடு முழுக்க ஆளுங்க, கல்யாணம் முடியற வரை வாய் திறக்காதே” என்று சொல்லி கணவனும் மனைவியும் உள்ளே சென்றனர்.

அந்த டெலிபோன் பூத் இருந்த இடத்தை கண்டுபிடித்து செல்ல, அருகே நெருங்கவுமே தெரிந்து விட்டது அங்கே தான் காவ்யா அமர்ந்திருப்பது. அவனின் கால்கள் எல்லாம் இருந்த பதட்டத்தில் தொய்ந்தது.

அவளும் இவனை தான் பார்த்திருந்தாள், அந்த பார்வையே இவன் வருவான் என எதிர்பார்த்திருந்தது போல இருந்தது.

அங்கே நிறைய நடை பாதை கடைகள், சிறு திட்டு இருக்க, அதில் அமர்ந்து இருந்தாள். கிட்ட தட்ட ரோடில் அமர்ந்து இருந்தது போல தான்.

அருகில் சென்றவன் ஒன்றும் பேசாமல் அருகமர்ந்து கொண்டான். காவ்யாவும் எதுவும் பேசவில்லை.                       

சிறிது நேரம் தன்னை ஆசுவாசபடுத்திக் கொண்டவன், “ஃபோனை ஏன் எடுக்காம வந்த?” என,

“மறந்துட்டேன்” என,

“சரி மறந்துட்ட, இங்க ஏன் வந்து உட்கார்ந்து இருக்க, இங்க எதுக்கு பஸ் விட்டு இறங்கின. நீதான் பண்ணினன்னு எனக்கு எப்படித் தெரியும், நான் வராம இருந்தா?” என கேள்விகளை அடுக்க,  

“என்னவோ சொல்லிச்சு நீங்க வருவீங்கன்னு,  பஸ் விட்டெல்லாம் இறங்கலை, பஸ்ல ஏறவே இல்லை, கைல காசில்லை, நடந்து போகலாம்னு வந்தேன், இதுக்கு மேல முடியலை. அதுதான் ஃபோன் பண்ணினேன், பரவாயில்லை, நீங்க ஃபோன் எடுத்திருந்தா அவனுக்கு காசு கொடுத்திருக்கணும், அது கூட இல்லை” என,

“என்ன?” என்று அதிர்ந்தவன், “ஒரு ரூபா கூட இல்லாமையா வீட்டை விட்டுக் கிளம்பின”

“பத்து ரூபா சில்லரையும், நூறு ரூபாவும் இருந்தது, காலையில பத்து ரூபாக்கு டிக்கட் வாங்கிட்டேன். பின்ன நூறு ரூபா இருந்தது. ஆனா காலையில ஆபிஸ் கூட்டின ஆயாமாக்கு காய்ச்சல், கைல காசில்லைன்னு ஆசுபத்திரிக்கு போகலை சொன்னாங்க, என்கிட்டே நூறு ரூபா தான் இருந்தது, குடுத்து ஹாஸ்பிடல் போகச் சொன்னேன்”

“ஞாபகமில்லாம இப்படியா கொடுப்ப?”

“ஞாபகமெல்லாம் இருந்தது அவங்களுக்கு ரொம்ப காய்ச்சல். சரி, நம்ம நடந்து போய்க்கலாம்னு விட்டுட்டேன்” என,

“அறிவிருக்காடி உனக்கு, இவ்வளவு தூரம் நடக்க முடியுமான்னு தெரிய வேண்டாம், சரி ஒரு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வந்து காசு குடுக்க வேண்டியது தானே” என,

“அம்மா திட்டுவாங்க, காலையிலயே சண்டை” என சொல்லும் போது என்ன முயன்றும் கண்களில் நீர் நிறைந்தது.

“ப்ச், உங்கம்மா தானே திட்டுறாங்க வாங்கிக்கோ, அதுக்காக அவங்களுக்கு ஃபோன் கூட பண்ணமாட்டியா, நவீனும் பிரவீனும் அவங்க வயற்றில இருந்தப்போவே உங்கப்பா ஒரு ஆக்சிடன்ட்ல இறந்துட்டார், அப்போ இருந்து உங்க மூணு பேருக்காக மட்டும் தான் அவங்க வாழ்க்கை, நீ இப்படி நடந்துக்கலாமா?” என்றான் பொறுமையாக.

“இதுக்கு தான், இப்படி எல்லோரும் பேசறாங்கன்னு தான் உனக்கு கூட போன் பண்ணவா வேண்டாமா யோசிச்சேன், போ, போ எப்போ முடியுதோ அப்போ எழுந்து நடந்து வர்றேன்” என்று முகத்தை திருப்பிய போதும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

வெளியில் இருப்பதை உணர்ந்து “எழுந்துரு முதல்ல” என்று அதட்டி எழுந்தவன், அவளின் ஹேண்ட்பேக் எங்கே என்று பார்த்து,

“பேக் எங்கே?” என,

அவளிடம் பதிலில்லை.

“பேக் எங்கே?” என மீண்டும் அதட்ட,

“பர்ஸ் மட்டும் தான் எடுத்துட்டு போனேன்”  

“அப்போ என்ன சாப்பிட்ட?”  

“காலையில இருந்து எதுவும் சாப்பிடலை” என சொல்ல,

“என்ன சாப்பிடலையா? சாப்பிடாம இவ்வளவு தூரம் நடந்து வேற வந்தியா? எங்கயாவது மயக்கம் போட்டு விழுந்திருந்தா, எனக்கு வர்ற கோபத்துல நாலு அப்பு அப்பனும் போல இருக்கு” என்றவன், ரத்னாவிற்கு அழைத்து “அத்தை, நான் அவளை பார்த்துட்டேன். என்னோட தான் இருக்கா, வீட்டுக்கு வர கொஞ்சம் நேரம் ஆகும், அவளை கூட்டிட்டு வர்றேன்” என பாதி சொல்லியும் சொல்லாமலும் வைத்தான் இன்னும் சிறிது நேரம் டென்ஷன் ஆகட்டும் என்று.  

“எழுந்துரு” என அவளின் கை பிடித்து அதட்டி எழுப்பி, பக்கத்தில் நடக்கும் தூரத்தில் இருந்த ஒரு ஹோட்டலிற்கு அழைத்து சென்று ஆர்டர் செய்ய,

“என் கிட்ட காசில்லை” என காவ்யா சொல்ல,

“பல்லெல்லாம் விழுந்தா உன்னை யாரு கல்யாணம் பண்ணுவா?” என கிருஷ்ணா கேட்க,

காவ்யா புரியாமல் விழிக்கவும், “இப்ப நீ சொன்னதுக்கு நான் விடற அறையில அதுதான் நடக்கும்” என,  

உணவு வந்த பிறகும் “நீ என்னவோ சொல்லிக் கொள்” என உணவைக் கையில் தொடாமல் அமர்ந்திருந்தாள்.

“ப்ச்” என சலித்தவன், “உங்கிட்ட காசு இருக்கும் போது என்னை கூட்டிட்டு வந்து டிஃபன் வாங்கிக் கொடு என்ன?” என,

அதன் பிறகே அதனில் கை வைத்தவள், “உங்களுக்கு” என,

“சாப்பிடற மூடில்லை, நீ சாப்பிடு!”  

உடனே அந்த தட்டத்தை அவள் தள்ள, “ஏய், நிஜமாவே அடிச்சிடுவேன் சாப்பிடு” என,

அப்போதும் அசையாமல் இருக்க, “பேரர்” என அழைத்து தனக்கும் ஆர்டர் செய்ய,

அடுத்த நொடி வேகமாக உணவை உள்ளே தள்ள ஆரம்பித்தாள் காவ்யா. உண்டு கொண்டே நிமிர்ந்தவள், “அம்மா சொல்றாங்க என்னை விட சின்ன பசங்க சம்பாதிச்சு நான் உட்கார்ந்து சாப்பிடறேனாம். சாப்பிடக் கூடாதுன்னு நினைச்சாலும் பசிக்குதே. எனக்கு இந்த வேலையும் பிடிக்கலை” என சொல்ல, சிறு குழந்தை காட்டில் தொலைந்து நிற்கும் பாவனையில் தான் இருந்தாள் காவ்யா.

இதற்கு இப்போதெல்லாம் அதிகம் கிருஷ்ணாவிடம் எதுவும் பகிர்வதுமில்லை. இன்றைக்கு அவள் மிகவுமே மனஉளைச்சலில் இருந்திருக்கின்றாள் எனப் புரிந்தது. அதுவும் உணவு விஷயம், அதற்கு எதற்கு அம்மா, ரத்னா மேல் கண்மண் தெரியாத கோபம் வந்தது கிருஷ்ணாவிற்கு.

“எதுன்னாலும் பார்த்துக்கலாம் சாப்பிடு. நம்மளோட உணவு நம்மளோட முடிவு, யாரோட சாப்பாட்டையும் யாரும் கொடுக்கறது இல்லை. அது ஆண்டவன் கொடுக்கறது, சரியா, சாப்பிடு!” என அவளுக்காக ஏதேதோ பேசி சாப்பிட வைத்தான்.

பின்பு அவனின் பைக்கில் ஏறச் சொல்ல, “உங்கம்மா பார்த்தா திட்டுவாங்க” என்றாள் அதற்கும்.

“ஐயோ, எங்கம்மாவைப் பார்த்து உனக்கு ரொம்ப பயம் பாரு, ஏறுடி” என,

“என்ன? ஒரு தடவை டீ போட்ட சும்மா இருந்தேன், திரும்ப திரும்ப டீ போட்ட, உங்கம்மா முன்னாடி உன் பேர் சொல்லி, டா போட்டுக் கூப்பிடுவேன்!” என,

“ஐயோ, அம்மாடி, அப்படி எதுவும் செஞ்சிடாதே, ஏறு காவ்யா, ஒன்பதரை மணி, இப்போல்லாம் ஆட்டோல என்னால அனுப்ப முடியாது” என சொல்ல, பின்பே ஏறினாள்.    

ஏறிவிட்டாலும் “எனக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கலை, அம்மா எப்பவும் என்னை திட்டுறாங்க” என,

“அப்படி எல்லாம் சொல்லக் கூடாது” என அவளிடம் பொறுமையாகப் பேசி, எப்படியோ அவளை வீடு கொண்டு வந்து சேர்ப்பதற்குள் ஒரு வழியாகிவிட்டான்.  

Advertisement