Advertisement

அத்தியாயம் இரண்டு :

மறுநாள் காலையிலேயே காவ்யா விழிக்கும் முன்னே ஒரே சத்தம், பக்கத்துக்கு வீட்டு மொட்டை மாடியில் இருந்து,

திருமண வீடு ஆட்கள் வர ஆரம்பித்து விட்டார்கள் எனப் புரிந்தது. சிறு வயதில் இருந்து அருகருகில் என்பதால் அவர்களின் அத்துணை உறவுகளையும் தெரியும். அதையும் விட உறவினர்கள் கூட, நேரடி உறவுகள் இல்லை இந்த ஒன்று விட்ட இரண்டு விட்ட என்ற வகையறாக்குள் வருவார்கள். 

கதவை திறந்து எட்டிப் பார்த்தாள், அங்கே ரேணுவின் தலைக்கு எண்ணெய் வைத்துக் கொண்டிருந்தனர். வேகமாக கதவை மூடிக் கொண்டாள் இல்லை அவளை பார்த்தால் பேச்சில் இழுப்பர். இவள் இன்னம் குளிக்கவில்லை, ஒரு பழைய நைட்டி வேறு, யார் வேண்டுமானாலும் பார்க்கும் அபாயம் இருப்பதால், வேகமாக கீழிறங்கி குளிக்கப் சென்றாள்.

அங்கே மொட்டை மாடியில் ஒரு பாத்ரூம் உண்டு ஆனால் அதற்கு சிறிது தூரம் நடக்க வேண்டும். அப்போது எல்லோர் கண்ணிலும் கட்டாயம் படுவாள். அதனால் கீழே சென்று குளித்தாள்,  உடன் அடுத்த சோதனை என்ன உடை அணிவது.

காவ்யா நிதானமாக இருப்பதை பார்த்த அவளின் அம்மா ரத்னா, “என்ன சாவகசமா இருக்க, ஸ்கூல்க்கு லேட் ஆகலை” என,

“நான் போகலை”  

“என்ன போகலையா?” என அவர் கேட்ட விதத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி இருந்தது.

“போகலை” என அவரை திரும்பிப் பார்த்து சொல்ல,

“கொஞ்சமாவது உனக்கு பொறுப்பிருக்கா, வீட்டோட கஷ்டம் தெரியுதா, இன்னும் காலையில எழுந்து போன நவீனும் பிரவீனும் வரலை. ஒருத்தன் பேப்பர் போடறான், ஒருத்தன் பால் பேக்கட் போடறான். சாயந்தரம் ஒருத்தன் ஜெராக்ஸ் கடை போறான், ஒருத்தன் மெடிக்கல் ஷாப் போறான், பத்து மணிக்கு தான் வர்றானுங்க, அவங்களோட பொறந்து நீ எப்படி இப்படி பொறுப்பில்லாம இருக்க?”  

“ரெண்டு பேரும் ப்ளஸ் டூ இப்போ, நீ வேலைக்கு போனா அவங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவாங்க, அவங்க படிப்புக்கு அந்த சம்பாத்தியம் உதவும் தானே” என,

“எனக்கு அந்த வேலை பிடிக்கலை” என்றாள்.

“என்ன பிடிக்கலை, வேலைக்கு போற எல்லோரும் பிடிச்சா போறாங்க, குடும்ப சூழ்நிலை அவங்களை நம்பியிருக்குற ஆளுங்க இவங்களை நினைச்சு தான் போறாங்க. கிருஷ்ணா சொன்ன வேலை இது கண்டிப்பா உனக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்குற மாதிரி சூழ்நிலை சரியில்லாத மாதிரி சொல்ல மாட்டான்” என சத்தமிட,

“வேலைக்கு போகணும்னா நீ போ, அது என்ன நான் மட்டும் போகணும்” என்று அவளையும் கத்தினாள்.

“கத்தாத முதல்ல வெளில கேட்கப் போகுது, நான் என்னால முடிஞ்ச வேலையை வீட்ல இருந்து செஞ்சிட்டு தான் இருக்கேன். பத்தாவது படிச்ச எனக்கு எல்லாம் யாரும் வேலை கொடுக்க மாட்டாங்க”

“பீ ஏ படிச்ச எனக்கு மட்டும் கிழிப்பாங்களா” என மீண்டும் கத்தினாள்.

“முதல்ல கத்தாத” என அவளை அருகில் வந்து மிரட்டியவர், “என்ன பேச்சு பேசற? கிழிப்பாங்களான்னு கெட்ட வார்த்தை எல்லாம் எப்போ இருந்து பேச ஆரம்பிச்ச” என விட்டால் அடித்து விடுபவர் போல பேச,

அப்போது தான் நவீன் வீட்டிற்குள் நுழைந்தான். அம்மா திட்டிக் கொண்டிருக்க, இப்போது அழுவேனா அப்போது அழுவேனா எனக் கண்களில் நீரை தேக்கி அம்மாவை முறைத்து கொண்டிருக்கும் காவ்யா பட,

“அம்மா, எதுக்கு இப்போ காவ்யாவை திட்டறீங்க” என வர,

“நீ என்னடா இவளுக்கு சப்போர்ட், உன் வேலையைப் பாரு, நாலு கழுதை வயசாச்சு, கொஞ்சம் கூட இன்னம் பொறுப்பில்லை. வேலைக்கு போக மாட்டேன்னு சொல்றா” என,

“மா, போகலைன்னா விடுங்களேன்” என்றான்.  

 “நீ வாயை மூடு, இப்போ இருந்து போனா தான் இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல கொஞ்சம் சொல்ற மாதிரி சம்பளம் வரும். அப்போ தான் மாப்பிள்ளை பார்க்கும் போது பொண்ணு வேலைக்கு போகுது, இவ்வளவு சம்பாதிக்குது சொல்ல முடியும்”

“இப்போல்லாம் வசதி இருக்கோ இல்லையோ வேலைக்குப் போற பொண்ணுங்களை தான் மாப்பிள்ளைங்க கேட்கறாங்க, படிச்சிருந்தா எப்படியாவது நல்ல கோர்ஸ் சேர்த்திருக்கலாம். இவ வாங்கின மார்க்குக்கு இதுல சேர்த்துக்கிட்டதே அதிகம். எப்படியோ இதுல அரியர் வெக்காம பாஸ் பண்ணிட்டா” எனப் பொரிந்து,

“கிளம்புடி முதல்ல வேலைக்கு, உன்னை விட சின்ன பசங்க அவங்க சம்பாதிச்சு நீ சாப்பிடுவியா” என,

அந்த வார்த்தைகள் ரோஷத்தை கொடுக்க, கண்களில் நீர் வழிய வழிய தயாரானவள் கிளம்பினாள்.

“காவ்யா” என நவீன் அவளை சமாதானம் செய்ய முற்பட, ரத்னா விடவில்லை “டேய், நீ ஸ்கூல் கிளம்பு” என அவளை விரட்ட,     

காவ்யாவை ஒரு இயலாமையோடு நவீன் பார்த்து நிற்க

“டேய், ரொம்ப சீனப் போடாத, அவளை விடு” என அதட்ட, கிளம்பியவள் காலை உணவும் உண்ணவில்லை, மதியமும் எடுத்துக் கொள்ளவில்லை, வேகமாக படியிறங்கி விட்டாள்.

எப்பொழுதும் நடக்கும் சண்டை சச்சரவுகள் தான், ஆனால் எதுவாகினும் உணவின் மீது காட்டியது கிடையாது.

உணவை தயாரித்துக் கொண்டிருந்தார் ரத்னா, அப்போது வந்த பிரவீன் “ஏன்மா காவ்யா இன்னைக்கு ரொம்ப சீக்கிரம் போயிட்டா” என,

“என்ன போயிட்டாளா?” என பதறி வந்து பார்க்க, அவள் இல்லை.

“டேய், சாப்பிடலை பஸ்க்கு காசு வாங்கலை, அவ கிட்ட இருக்கோ இல்லையோ தெரியலையே” என பதற,

“திட்டி, திட்டி, அவளை துரத்தி விட்டுட்டு, இப்போ என்ன நீங்க?” என மகன்கள் இருவரும் அம்மாவிடம் சண்டை பிடிக்க,

“சும்மா இப்படி அவளுக்கு சப்போர்ட் செஞ்சு தான் வாழ்க்கையோட கஷ்டமே தெரியலை. கிடைச்ச வேலையை ஈசியா தூக்கிப் போடறா, இப்படி இருந்தா எப்படிடா?” என்றார் ஆதங்கமாக.

“ப்ச், போங்கம்மா” என நவீன் சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாக பஸ் ஸ்டாப் போக, அவன் போகவும் காவ்யா பஸ் ஏறவும் சரியாக இருந்தது.

உடனே வீட்டிற்கு வந்து அம்மாவிடம் கைபேசி வாங்கி அழைக்க, அது இங்கேயே அடித்தது. ஃபோன் எடுத்துக் கொள்ளவில்லை எனப் புரிய, மகன்கள் இருவரும் அம்மாவிடம் பாய்ந்தனர்.

“எதுக்கு நீங்க அவளைத் திட்டிட்டே இருக்கீங்க, அவ சம்பாரிச்சா என்ன? இல்லைன்னா என்ன? நாங்க பார்த்துக்குவோம் அவளை, இனிமே அவளை திட்டுனீங்க” என சண்டையிட,

உணவு உண்ணாமல், உணவு எடுத்துக் கொள்ளாமல் அவள் போனது மனதிற்கு கஷ்டமாய் இருக்க, அவரும் முகத்தை தொங்க போட்டு திரும்ப,

அம்மாவையும் கஷ்டப்படுத்த விரும்பாதவர்களாக அவர்கள் பள்ளிக்கு கிளம்பினார்கள். ப்ளஸ் டூ என்பதால் நினைத்த நேரத்திற்கு லீவும் போட முடியாது.

ஆனாலும் காவ்யா அப்படி சென்றது மனதே இல்லை. அவர்கள் பள்ளி விட்டு வந்து திரும்ப வேலைக்கு கிளம்பும் போதும், “மா, வந்தா அவக்கிட்ட சண்டை போடாத” என்று சொல்லிச் செல்ல,

நேற்றைய ஏழரை மணி கடந்தும் அவள் வீடு வராதது சற்று பயத்தைக் கொடுக்க, கிருஷ்ணாவை கைபேசியில் அழைத்தார். வீடு முழுவதும் உறவினர்கள், ஆளுக்கு ஒரு திருமண வேலையை இழுத்துப் போட்டு செய்து கொண்டிருக்க, கிருஷ்ணா தங்கைக்கு கொடுக்கும் பொருட்களின் லிஸ்ட் வைத்து, இன்னும் ஏதாவது விடு பட்டு இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொண்டிருந்தான் அப்பாவோடு.

அவனின் ஃபோன் சார்ஜில் இருக்க, அது அடிக்கவும் அவனிற்கு காது கேட்கவில்லை. சசிகலா வந்து எடுத்துப் பார்க்க அது ரத்னா அத்தை எனக் காட்டவும், ஃபோனை அப்படியே சைலன்ட்டில் போட்டு விட்டு கவனியாதவாறு சென்று விட்டார்.

அதன் பிறகு தொடர்ந்து பல அலைபேசி அழைப்புகள். அது சைலன்ட்டில் இருக்கவும் கிருஷ்ணாவிற்கு தெரியவேயில்லை. அவனின் சித்தப்பா மகன் ரமேஷ் தான் அவனின் கைபேசியில் இருந்து வரும் ஒளி பார்த்து விட்டு, “கிருஷ்ணா, உன் ஃபோன் ரொம்ப நேரமா அடிக்குது போல” என,

“ஓஹ், எனக்கு சத்தமே கேட்கலை” என்றவன், “அதை எடு” என,

எடுத்துப் பார்த்தால் ரத்னாவிடம் இருந்து மூன்று மிஸ்டு கால்கள், பின் எதோ லேண்ட் லைனில் இருந்து சில அழைப்புகள்.

ரத்னா அவசியமில்லாமல் அழைக்க மாட்டார் என புரிந்தவன், எழுந்து வாயிலிற்கு வந்து கொண்டே, அந்த லேண்ட் லைனிற்கு அழைத்தான். அது ஒரு பீ சீ ஒ , எடுத்தவர்கள் “யார் பண்ணினாங்கன்னு தெரியலைங்க, நிறைய பேர் ஃபோன் பண்ணிட்டாங்க” என்று வைத்து விட, பக்கத்துக்கு வீட்டைப் பார்க்க, ரத்னா வாயிலில் நிற்பது தெரிந்தது.

“என்ன அத்தை கூப்பிட்டீங்களா?” என கேட்டுக் கொண்டே சுவர் அருகில் வர, அவனின் பின்னோடு வந்து சசிகலா என்ன பேசுகிறார்கள் என்று கவனித்து பார்த்தார், அவரின் வீட்டு வாயிலில் நின்று.  

ரத்னா தயங்கித் தயங்கி “இன்னும் காவ்யா வரலை, அதான் ஸ்கூல்க்கு ஃபோன் பண்ண சொல்லலாம்னு” என்றார்.

Advertisement