Advertisement

அத்தியாயம் பன்னிரண்டு :

இதோ வீடு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. சோர்ந்திருந்த நால்வருக்குமே எந்த பிரச்சனைகள் வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்ற ஒரு நம்பிக்கை வந்திருந்தது.

எல்லாம் விட இத்தனை நாளாய் இல்லாத ஒரு உறக்கம் கிருஷ்ணாவிற்கு. இரண்டு நாட்களாக தூங்கி தூங்கி எழுந்தான். இன்னம் மாடியில் இருக்கும் அவனின் ரூம் போகவில்லை. போகும் தைரியமும் இல்லை. யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை. ஆனால் பார்க்காமல் இருக்க முடியும் என்றும் தோன்றவில்லை. 

காலை உறங்கி எழுந்தவன் முன்வாயில் வந்து நிற்க, ரத்னா அந்த பக்க சுவரில் நின்று ரேணுவிடம் பேசுவது தெரிந்தது. எதோ பதில் சொல்லி ரேணு திரும்பி வேகமாக நடந்து வந்து கிருஷ்ணாவின் மீது மோதிக் கொண்டாள்.

“ஏன் இவ்வளவு வேகமா வர்ற?”

ரேணு பதில் சொல்லாமல் உள்ளே சென்று கண்கள் கலங்க சோபாவில் அமர்ந்தாள். “என்ன டா?” என பக்கத்தில் அமர்ந்து கனிவாகக் கேட்டான்.  

“இந்த காவ்யா” என சொல்லி கண்ணில் நீர் வர, “என்ன பண்ணினா அவ?” என சசிகலா வேகமாக வந்தார்.  

“அவளுக்கு எல்லாம் தெரியும், ஆனா அத்தை கிட்ட ஒன்னுமே சொல்லலை போல. அவங்க எப்போ வந்தே? மாப்பிள்ளை எப்படி இருக்கார் கேட்கறாங்க? எனக்கு கஷ்டமாப் போச்சு” என கண்கள் கலங்கினாள்.

“இனிமே இதை நீ எதிர் கொண்டு தான் ஆகணும் ரேணு, எல்லோருக்கும் நாம விளக்கம் சொல்ல முடியாது. இப்படி நீ கலங்கக் கூடாது. மாப்பிள்ளை  செத்துப் போயிட்டான்னு சொல்லு” என்றான் கிருஷ்ணா. 

உடனே சசிகலா – “அப்படி எல்லாம் சொல்ல வேண்டாம். அப்புறம் பூ பொட்டு எல்லாம் வெச்சா கேள்வி வரும்”  

“என்ன கேள்வி வரும்? பொண்ணுங்க அதெல்லாம் பிறக்கும் போது இருந்து வெக்கறாங்க ம்மா. புருஷன் போயிட்டா அதெல்லாம் எடுக்கணும்ன்னு கிடையாது” எனக் கிருஷ்ணா பேசினான்.

“நாம யாரோட சாவை பத்தியெல்லாம் பேச வேண்டாம் கிருஷ்ணா” என்றாள் ரேணுகா.

“காவ்யா சொல்லி வேணும்னு வந்து கேட்பாளோ இந்த ரத்னா” என சசிகலா ஆரம்பிக்க,

ரேணு அம்மாவை முறைத்து ஒரு பார்வை பார்த்தாள். கிருஷ்ணா அந்த இடத்திலேயே நிற்கவில்லை நகர்ந்து விட்டான்.

கிருஷ்ணா சென்றதும் அம்மாவிடம் “உன்னை மாதிரியே எல்லோரையும் நினைக்காதே, ஒரு வார்த்தை கூட எப்பவும் காசிப் காவ்யா பேசவே மாட்டா, அவ கூட இத்தனை வருஷம் இருந்திருக்கேன் எனக்கு தெரியும். அவளே நான் சொன்னேன்னு சொன்னாக் கூட நம்ப மாட்டேன், இனி பேசாதே!” என்று விட்டாள்.

அன்று இரவு தான் கிருஷ்ணா அவனின் ரூமிற்கு சென்றான். மொட்டை மாடி கதவை திறந்து பார்க்க, பக்கத்தில் அங்கே யாரும் இருப்பதாக தெரியவில்லை. எப்படியும் வருவாள் என்று தெரியும். அப்படியே கீழே அமர்ந்து கொண்டான். எவ்வளவு நேரம் இருந்தானோ தெரியாது,

திடீரென்று மொட்டை மாடி சுவரை ஏறிக் குதிப்பது தெரிய, நிமிர்ந்து பார்த்தால் காவ்யா, நேரம் பார்த்தால் பன்னிரண்டு மணி. வருவாள் என்றும் தெரியும், தவிர்க்க முடியாது என்றும் தெரியும், எதிர்கொள்ள மனதை தயார் படுத்தித் தான் இருந்தான். ஒரு முடிவோடு தான் இருந்தான்.   

காவ்யா அவனின் முன் வந்து சமணமிட்டு அமர்ந்து கொண்டாள். கிருஷ்ணா எதுவுமே பேசவில்லை.

“ரெண்டு நாளா நைட் ஃபுல்லா மாடில தான் உட்கார்ந்து இருந்தேன் தெரியுமா? அதனால் எனக்கு ஜுரம் தெரியுமா?”

கிருஷ்ணா எதுவுமே பேசவில்லை.

“ஏதாவது பேசு கிருஷ்ணா”  

“நீ யார் எனக்கு? அதுக்கு எனக்கு பதில் சொல்! அப்புறம் பேசறதா வேண்டாமான்னு முடிவு பண்றேன்!” என்றான் இறுகிய குரலில்.

காவ்யா மௌனம் காட்ட, “பிடிச்சிருந்தாலும் சொல்ல மாட்ட இல்லையா? அப்படிப்பட்டவன் கூட உனக்கு என்ன பேச்சு?” என்றான்.

காவ்யா அதற்கு பதில் சொல்லாமல், “உனக்கு என்னை பிடிக்குமா?” என்று பதில் கேள்வி கேட்டாள்.

“எதுக்கு நான் பதில் சொல்லணும், தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போற?”  

“நீ யார் எனக்குன்னு பதில் கேட்டியே? அதுக்கு பதில் சொல்லணும்!”  

அவளை நேர் பார்வை பார்த்தான். இருட்டு தான், ஆனாலும் பார்வையின் தீட்சண்யம் எதோ செய்தது காவ்யாவை. ஆனால் அவளும் சளைக்காமல் பார்த்தாள்.

“எனக்கு உன்னை பிடிக்கும் எப்பவுமே. பிடிச்சிருந்தாலும் அதுல வெறும் அனுப்பும் அக்கறையும் மட்டும் தான். ஆனா இப்போ அன்பு அக்கறை கூட காதலும் இருக்கு” என்று நேர்பார்வையோடு ஒப்புக் கொடுத்தான்.

“உனக்கு என்னை பிடிக்கும்னு எனக்கு தெரியவே தெரியாது” என்று காவ்யா சற்று சோர்வோடு சொல்லவும்,

“சரி இப்போ தெரிஞ்சிடுச்சே, என்ன பண்ண போற?”  பரிதாபமாக கிருஷ்ணாவை பார்த்தாள். கிருஷ்ணா எதற்கும் அசையவில்லை, முகத்தினில் சற்று இளக்கம் காட்டவில்லை.

“உன்னை பத்தியே நினைக்காத, என்னை பத்தியும் கொஞ்சம் நினை! இங்க இருந்து போன பிறகு இன்னும் நான் எதுவுமே பண்ணலை, எதுவும் பண்ண தோணலை, வெட்டியா இருக்கேன். எதுக்கு நீ என்னை ஏமாத்தின?”

“என்ன நான் ஏமாத்தினேனா? என்ன ஏமாத்தினேன்?”

“காதல் இருந்தும் சொல்ல மாட்டேன் சொன்ன இல்லையா? அந்த அளவுக்கு நான் உன்னை என்ன பண்ணினேன்! இவ்வளவு தான் நீ என்மேல வெச்சிருக்கிற காதலா? இல்லை காதலை சொல்லக் கூட தகுதியில்லாதவனா நான்” என்று ஆவேசமாகப் பேசினான். விட்டால் அடித்து விடுவானோ என்று பயமாகப் போய்விட்டது காவ்யாவிற்கு.   

“ஏன் கிருஷ்ணா இப்படி எல்லாம் பேசற?” என்றாள் அழுகைக்கு தயாரான நிலையில்.

“உங்கிட்ட பேசலை, நான் என்கிட்டே இவ்வளவு நாளா அதை தான் கேட்டுட்டு இருக்கேன்”  

காவ்யாவின் கண்ணில் நீர் நிறைய, கிருஷ்ணா இடத்தை விட்டு எழப் போனான், அவனை எழ விடாமல் நெருங்கி அமர்ந்து கையை பிடித்துக் கொண்டாள்.

“விடு காவ்யா” என்றான் அதட்டல் குரலில்.

“நீ எவ்வளவு கத்தினாலும் நான் விட மாட்டேன்” என்று அவனை இன்னும் நெருங்கி அவனின் கால்களில் மேல் தன் கால்களை வைத்து அவனை நகர விடாமல் செய்தாள்.

“என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என்று வார்த்தைகளை கடித்து துப்பியவனிடம்,

“நீ யார் எனக்குன்னு கேட்ட தானே. அதுக்கு என்னோட பதில்” எனச் சொல்லி அவனின் முகத்தை மிக அருகினில் பார்த்திருந்தாள்.

“இவ்வளவு பக்கத்துல இருந்தா நடக்கற எதுக்கும் நான் பொறுப்பில்லை”

“நீ பொறுப்பில்லை” என்றவளின் முகத்தில் சிறு புன்னகை, கூடவே கண்ணீரும்.

“உனக்கு என்னை பிடிக்கும்னு நான் நினைச்சதேயில்லை” என்றாள் திரும்பவும்.

“ஏன்? ஏன் நீ நினைக்கலை?”  

“எனக்கு தோணலை! நீ இங்க இருந்த வரைக்கும் எனக்கு ஒன்னும் தெரியலை! ஆனா போன பிறகு எப்பவும் உன் ஞாபகம் தான்!” என கண்களில் இருந்து கண்ணீர் கர கர வென இறங்கியது.

அவளின் கைகளில் இருந்து கையை உருவிக் கொண்டவன், கை விரித்தான் கைக்குள் வா என்பது போல், அவள் உணரும் முன் கையை இறக்கி கொண்டவன்,  

“ஒரு தடவை வந்துட்டா, பின்ன போக முடியாது! யோசிச்சிக்கோ, அன்ட் நீ சொன்ன காரணம் எல்லாம் அப்படியே தான் இருக்கு” என்றான்.  

“நீதானே சொன்ன, உங்க அப்பா அப்படியிருந்தா அப்பா இல்லைன்னு சொல்லிடுவியா. சொன்னாலும் உறவு இல்லைன்னு ஆகிடுமான்னு, நீ சொல்றது கரக்ட் தானே!”

அவன் கைகளை விரிக்கும் முன்னே அவளாகவே கட்டிக் கொண்டவள், “நீ ஏன் அப்படி சொன்ன, ஒரு தடவை வந்துட்டாப் போக முடியாதுன்னு, அப்போ போயிடுவேன்னு நினைச்சியா?” என்றவள் அழுகையில் கரைய,

அவனுக்கும் மனது என்னவோ செய்தது. “எனக்கு தெரிஞ்ச காவ்யா அழவே மாட்டா” என்றான் கிருஷ்ணா.

“எனக்கே என்னை தெரியலை, உனக்கு தெரியுமா? உன்னை எவ்வளவு பிடிச்சாலும் காமிக்க கூடாது, கல்யாணம் பண்ண முடியாது இப்படி தான் நினைச்சேன். ஆனா நீ போன பிறகு எப்போ உன்னை பார்ப்போம் தான் இருந்தது. என்னால உன்னை பார்க்காம இருக்க முடியலை” என்று தேம்பினாள்.

திரும்ப அவனின் முகம் பார்த்தவள், “தாடி குள்ள உன் கண்ணு மட்டும் தான் தெரியுது. ஏன் இப்படி பக்கி மாதிரி இருக்க?” என,

“நீ சொல்ற உன்னை பார்க்காம் இருக்க முடியலைன்னு, நான் சொல்லலை அவ்வளவு தான் வித்தியாசம்” என்றுரைத்து புன்னகைக்க முயன்று தோற்றான்.

அவனை விட்டு விலகி எதிரில் அமர்ந்தவள் “ஏன் ரேணு லைஃப் இப்படி பண்ணிட்ட? ஏன் நீ சரியா விசாரிக்கலை?” என்று குற்றம் சாட்டினாள்.

“இல்லை காவ்யா, எனக்கு தெரிஞ்ச வரை நல்லா தான் விசாரிச்சேன். அங்க யு எஸ் ல அவன் கன்சர்ன் ல எல்லாம் விசாரிச்சோம். குடும்பம் இங்கே அப்பாக்கு நல்லாத் தெரியும். நான் பெர்சனலா பேசினேன். எனக்கு நல்ல மாதிரி தான் தெரிஞ்சது. கொஞ்சமும் நெருடலை, இப்படி அவனுக்கு ஒரு தொடர்பு இருக்கும்னு எனக்கு தெரியவேயில்லை” என்றான் குரல் கம்ம,

 “இப்போ என்ன பண்ணப் போறோம்” என்றவளிடம்,

“முதல்ல டைவர்ஸ் வரட்டும், ஒரு வருஷம் போகட்டும், பின்ன யோசிக்கலாம்!” என்றான்.

“அப்போ அவனை அவனை அப்படியே விட்டுடுவோமா?” என்று ஆவேசமாக சண்டையிடுவது போல கேட்டாள்.

“என்ன பண்ண முடியும்? ஒன்னும் பண்ண முடியாது? இது தான் வாழ்க்கையோட உண்மை!”

“அப்போ உண்மை கிண்மைன்னு அப்படியே அவனை விட்டுடுவியா ரேணு லைஃப் ஸ்பாயில் பண்ணியிருக்கான்” என்றாள் கோபமாக.

“முதல்ல டைவர்ஸ் ஆகட்டும், ரேணு கம்ப்ளீட்டா வெளில வரட்டும், பின்ன பார்க்கலாம்!”

ஆனாலும் காவ்யா சமாதானமாகாமல் அமர்ந்திருக்க, “விடு ரேணுவோடது இப்போ முடியற விஷயமில்லை, அவசரத்துல எடுக்குற முடிவுமில்லை. காலம் எல்லாத்தையும் மறக்கச் செய்யும்! அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்! அது தான் நம்மோட எண்ணமா இருக்கணும்! அவனுக்கு தண்டனை கிடைச்சா நமக்கு நடந்தது இல்லைன்னு ஆகிடுமா? வாழ்க்கையில பல விஷயங்களை நாம இந்த கண் கொண்டு தான் பார்க்கணும். நம்மளோட நிம்மதிக்காக!” என்றான் தெளிவாக.

“என்னவோ போ!” என்று மனம் சுணங்கியவள், “நீ என்னை டி வீ ல பார்த்தியா?” என்று பேச்சை மாற்றினாள்.

“இல்லை” என்பது போல தலையசைத்தான்.

“ஏன்? ஏன் பார்க்கலை?”

“நீ என்னை வேண்டாம்னு சொல்வ? நான் உன்னை எதுக்கு பார்க்கணும்?”

“ரைட்டு, பார்க்க வேண்டாம், விடு. ஆனா நீ ஏன் இப்படி இருக்க?” என்று அவனின் தாடியைப் பிடித்து ஆட்டிக்கொண்டே “அசிங்கம்மா கேவலமா இருக்க”

“அது தான் உனக்கு பனிஷ்மென்ட். எப்படி என்னை சைட் அடிப்ப. ஆனா என்னைக்காவது காமிச்சு கொடுத்து இருக்கியா? இல்லை தானே!” என்று முறுக்கினான்.

“அப்போ இப்படி தான் இருப்பியா”  

“ம்ம், ஒருவேளை நமக்கு கல்யாணம் ஆனா எடுக்கறேன்”.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. காவ்யா அமைதியாக இருக்க, கிருஷ்ணாவும் அமைதியாக இருந்தான். 

Advertisement