Advertisement

அத்தியாயம் பதினொன்று :

காவ்யா ரேணுகாவிற்கு அவர்களின் தொலைக்காட்சி நிறுவனத்தில் பார்ட் டைமாக சில ஆர்டிக்லஸ் கரக்ஷன் பார்க்கும் வேலை ஒன்றை பார்த்துக் கொடுத்தாள். சொல்லப் போனால் அதில் பணம் பெரிதாக ஒன்றுமே இல்லை. அவளுக்கு ஒரு மாற்றமாக இருக்குமே என தான் அதனை சொன்னாள்.

ரேணுகாவும் உடனே ஒத்துக் கொண்டு சரி என, இதோ இப்போது இரண்டு மாதங்களாக வந்து கொண்டிருக்கிறாள். ஆர்டிகில்ஸ் சரி பார்ப்பது வினயின் கீழ் வரும்.

வந்தால், அன்று நாள் முழுவதுமே அவள் காவ்யாவுடன் தான் இருப்பாள். அப்போது இந்த வினய் ரிதன்யாவை தாங்குவதை பார்த்தால், தனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லை என மனம் ஏங்கும். அதனை எங்கும் காட்டிவிடாமல் சாதாரணமாய் இருக்க, மிகுந்த பிரயர்தனப்படுவாள்.

“சாருக்கு, இந்த வேலையெல்லாம் சும்மா, நம்ம ரித்துக்காவை கவனிச்ச நேரம் போக மீதி நேரம் தான் இங்கே வேலையே செய்வார்” என காவ்யா ரிதன்யாவை வெகுவாக கிண்டல் கூட செய்வாள்.

இப்போது அவளுக்கு ஏழு மாதம், ரிதன்யாவின் வீட்டினர் தொடர்பில் இல்லை, வினய்யின் வீட்டினில் எடுத்து கட்டி செய்ய ஆள் கிடையாது. சொல்லப் போனால் அவர்களின் திருமணதிற்கு வந்து சென்றது தான் அவனின் அப்பா இதுவரை திரும்ப வரவில்லை. இவர்களும் திருமணம் முடிந்து ஒரு முறை சென்று வந்தனர். அதன் பிறகு “வா” என அழைத்ததில்லை.

ரிதன்யாவோ வினய்யோ யாரிடமும் எதுவும் காட்டிக் கொள்ள மாட்டர். “அக்கா இப்போ வளைகாப்பு செய்யணுமே. நான் எங்க அம்மாக்கிட்ட பேசட்டுமா, எப்படி செய்யணும்னு கேட்டு செய்யலாம்” என காவ்யா கேட்க,

“வேண்டாம் காவ்யா, எனக்கு அந்த மாதிரி எக்ஸ்பெக்டேஷன்ஸ் எதுவும் லைஃப்ல இல்லை”  

“நோ, நோ, இதெல்லாம் லைஃப்ல ப்ரெஷியஸ் மொமென்ட்ஸ், பண்ணனும்க்கா”  

ரிதன்யா வினயைப் பார்க்க, “நீ சொல்லு பண்ணலாமா” என்றான் வினய்.

“ம்ம் பண்ணலாமே” என ரிதன்யா சம்மதம் சொல்ல,

“கேட்டது நானு பதில் அங்கேயா” காவ்யா சொல்ல,

இரண்டு பேருமாக சேர்ந்து “ஓஹ்ஹ்ஹ், பண்ணலாமே” என கோரஸ் பாடினர்.

பின்பு ஒரு பார்ட்டி ஹால் புக் செய்து, அம்மாவிடம் கேட்டு கேட்டு ஏற்பாடுகள் செய்து, காவ்யா தான் எல்லாம் செய்தாள். ரேணுவும் உதவிக்கு சேர்ந்து கொள்ள, இருவருமாக சேர்ந்து ஆஃபிஸ் மக்களை அழைத்து எல்லாம் பக்கவாக செய்து ஜமாய்த்தனர். வேலைகள் மட்டுமே அவர்களது, வினய் ஒரு பைசா செலவு செய்ய விடவில்லை.

“என் பொண்டாட்டிக்கு நான் தான் செய்யணும்” என்றவனிடம்,

“என்னது போண்டா, டீ யா, ரித்து அக்கா உங்க வீட்டுக்காரர் உங்களை ஒரு வழி பண்றார்” என காவ்யா கிண்டல் மொழி பேசினாலும், காரியத்தில் கண்ணாய் வினய் செலவு மட்டும் எல்லாம் அவனதாக்கி கொண்டான்.

ஃபங்க்ஷன் முடிந்ததும் “தேங்க்ஸ் காவ்யா” என ரித்து கை பிடித்து நன்றி சொல்ல, வினய்க்கு அது வரவில்லை, உணர்ச்சி பெருக்கோடு மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான்.

காவ்யாவிற்கு அப்படி ஒரு சிரிப்பு தான் வந்தது. “போதும், போதும், கண்ணு வைக்காதீங்க” என பெரிய மனுஷியாய் திருஷ்டி எடுத்து அவர்களை வீட்டிற்கு போக சொன்னவள், “ஹால் கிளியரன்ஸ் செக் பண்ற வரை நான் இருக்கேன், போங்க!” என்றாள்.

“உன்னை எப்படி விட்டுப் போக” என இருவரும் தயங்க, “ரேணு இருக்கா பாருங்க” எனக் காட்டினாள்.

அப்போது தான் கவனித்தனர் ரேணுகா அங்கேயே அமர்ந்து இருப்பதை. “நீ உங்கம்மாவை கூட்டிட்டு வரவில்லை” என ரிதன்யா குறை படவும்,

“அம்மா எப்போவும் இந்த மாதிரி ஃபங்க்ஷன்னா தள்ளி நின்னுக்குவாங்க. இன்னொரு நாள் கூட்டிட்டு வர்றேன். அதுக்கு முன்ன நீங்க எங்க வீட்டுக்கு லன்ச்க்கு வாங்க” என்று காவ்யா சொல்லவும்,

“ம்ம் சரி” என்றபடி இருவரும் காவ்யாவிடமும் ரேணுவிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினர்.

மனதிற்கு இனிமையாக இருக்க, ரேணுவிடம் பேசியபடி அந்த ஹோட்டலை விட்டு வெளியே வந்தாள்.

ரேணுகா ஆட்டோப் பார்க்க, “நான் உங்க வீடு கிட்ட விடட்டுமா” என்றாள் காவ்யா. இதுவரை கேட்டதேயில்லை. ரேணுவை இயல்பாக்கும் முயற்சியில் கிருஷ்ணாவைப் பற்றி காட்டிக் கொண்டதில்லை. தூரமாய் இருந்தாவது ஒரு முறை பார்த்து விட மனது துடித்தது.

“என்னை விட அரை மணி நேரம், திரும்ப நீ அங்க இருந்து வீடு போக ஒரு மணி நேரம். ரொம்ப கஷ்டம் உனக்கு”

“எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை” என்று காவ்யா சொல்ல, இதுவரை ரேணுவும் அவளிடம் இயல்பாகக் கூட கிருஷ்ணா பற்றி பேசியதில்லை. முதல் முறையாக  “கிருஷ்ணா பார்க்கணுமா” என்று கேட்டாள்.

“ஆம்” என்று தானாக தலை அசைந்தது.

“சரி கொண்டு போய் விடு”  

அவளை அமர்த்தி வீடு வரும் வரையிலுமே மௌனம் மட்டுமே, ரேணு அவளின் வீட்டிற்கு வழி மட்டுமே சொல்லிக் கொண்டு வந்தாள். பெரிய பிரமாண்டமான அபார்ட்மெண்ட்ஸ்.

கிருஷ்ணாவிற்கு வாயிலில் நின்று அழைத்தவள், “என் பர்ஸ் எடுத்துட்டு வரலை, ஆட்டோ கட் பண்ணனும் வா” என்றாள்.

“பொய் ஏன் சொல்ற?” என்று காவ்யா சண்டையிட, “நீயா சொல்ற, நான் தானே சொல்றேன். பேசாம இரு”  

கிருஷ்ணாவும் வர, “அம்மா என்ன இது” என்று அதிர்ந்து விட்டாள் காவ்யா, தாடிக்குள் அவனின் முகம் எங்கே என்றே தெரியவில்லை, “ஏன்? ஏன் இப்படி இருக்கான்?”  

“அவன் அந்த வீட்டை விட்டு வந்த நாளா இப்படி தான் இருக்கான்” என்றாள் ரேணுகா.

அருகில் வர வர காவ்யாவைக் கவனித்து விட்டான். அதற்கு மேல் வராமல் அங்கேயே நின்று விட, அவனை பார்த்த காவ்யாவின் கண்கள் கண்ணீரில் நிறைந்தன. இப்படி என்றுமே அவள் கிருஷ்ணாவை பார்த்ததில்லை. “கிருஷ்ணா” என,

அவளின் புறம் திரும்பாமல் “எதுக்கு என்னை வரச் சொன்ன?” என்று ரேணுவிடம் கேட்டான்.

“காவ்யா பார்க்கணும் சொன்னா கிருஷ்ணா”  

“எனக்கு யாரையும் பார்க்க வேண்டாம்”  

“இப்போ நீ என்னை பார்க்கலை, வண்டியை ஸ்டார்ட் செஞ்சு எதிர்ல வர்ற வண்டி மேல மோதிடுவேன்”

“மோது, எனக்கென்ன” என்று அவன் திரும்பி நடக்க, காவ்யாவும் வண்டியில் அமர்ந்து வண்டியை ஸ்டார் செய்தாள்.

“டேய் அண்ணா ப்ளீஸ். இவ நிஜமாவே விட்டுடுவா, எதிர்ல வர்றவங்களை கொஞ்சம் யோசிச்சு பாரு”  

அதற்கு தான் கிருஷ்ணா திரும்பினான்.

“ஓஹ், எனக்கு பார்க்க மாட்டீங்க. எதிர்ல வர்றவங்களுக்கு பார்ப்பீங்க. அப்படி தானே” என்றவள், கண்ணில் நீர் வழிய வழிய, ரேணுவின் கையை வண்டியில் இருந்து எடுத்து விட்டு கண்ணில் நீர் நிறைந்து சாலை தெரியாத போதும் கண்களை துடைத்து துடைத்து வண்டியை ஓட்டிச் சென்றாள்.

“ஏன் கிருஷ்ணா இப்படி பண்ற? ஒரு தடவை பேசினா என்ன?”

“ஏன் பேசணும்? என்னை வேண்டாம்னு சொன்னவ கிட்ட ஏன் பேசணும்?”  

“உன்னை வேண்டாம்னு சொன்னா, நீ அவ மேல இத்தனை நாள் வெச்சிருந்த அன்பும் அக்கறையும் இல்லைன்னு ஆகிடுமா”

கிருஷ்ணா அசையாமல் நின்றான். பின்பு “முன்ன எனக்கு அன்பும் அக்கறையும் மட்டும் தான். இப்போ அது மட்டும் கிடையாது. அதனால் தள்ளி நிக்கறது தான் எனக்கும் நல்லது அவளுக்கும் நல்லது”

“அப்படி சும்மா யாரோ மாதிரி பேசிட்டு என்னால எப்பவுமே முடியாது. நீ வா நீ இதுல மனசை போட்டு குழப்பிக்காதே. நீ இதுல தலையிடாதே” எனச் சொல்லி கிருஷ்ணா அவளின் கை பிடித்து அழைத்துப் போக, ரேணுவால் எதுவுமே பேசவோ செய்யவோ முடியவில்லை. கிருஷ்ணா அதற்கு இடம் கொடுக்கவில்லை.   

காவ்யா வீடு சேரும் நேரம் கணக்கிட்டு, அதன் பிறகும் அரை மணிநேரம் விட்டு காவ்யாவிற்கு அழைத்தால் ரேணுகா. எடுத்த உடனே “ஆக்சிடன்ட் எதுவும் ஆகலை, நல்லா சௌக்கியமா வீடு வந்து சேர்ந்துட்டேன். உங்கண்ணன் கேட்க மாட்டான், இருந்தாலும் சொல்லிடு” என்று தேம்பிக் கொண்டே சொல்லி போனை வைத்தாள்.

“இன்னும் அழறா கிருஷ்ணா”  

“அவ வெளில அழறா, நான் உள்ள அழறேன். அவ்வளவு தான் வித்தியாசம்!” எனக் கிருஷ்ணா பேசினான்.

“இப்படி வெளில அவ அழ, இவன் உள்ள அழ, அப்படி என்ன இவங்களுக்குள்ள நடந்துடுச்சு, கல்யாணம் பண்ணினவன் தப்பா போன நானே இதுதான் வாழ்க்கைன்னு தேறிக்கிட்டேன், இவங்க என்னடா இப்படி ஃபிலிம் ஓட்டறாங்க” என்று கடுப்பாக வந்தது.

தான் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, “அப்பா நாம நம்ம பழைய வீட்டுக்கே போவோம். இங்க வந்த பிறகு எதுவுமே சரியாயில்லை” என்றாள்.

சசிகலாவும் “நாம அங்கயே போய்டுவோம், எனக்குமே தோணிக்கிட்டே இருந்தது” என்றார்.

“நாமளா வந்தோம், உன் பையன் தான் கூட்டிட்டு வந்தான். அவன் கிட்ட கேளு”  

“நாம போவோம் பா”  

“கிருஷ்ணா ஒதுக்கணுமே” என்றார் அவர் கவலையாக.

முதல் முறையாக ரேணுகா சரியான பிடிவாதம் பிடித்தாள். “போகலாம் கிருஷ்ணா, எனக்கு இங்க வந்ததுல இருந்து எதுவுமே சரியில்லை. நாம போகலாம்”

“எனக்கு அங்க போக வேண்டாம்”

“ஏன் போக வேண்டாம், உனக்கு அங்க யாரையாவது பார்த்து பயமா?”

“எனக்கா? எனக்கென்ன பயம்”

“தள்ளி நின்னு காவ்யா வேண்டாம்ன்னு சொல்லக் கூடாது. பக்கத்துல இருந்து முடிஞ்சா சொல்லு” என்று  உசுப்பேற்றினாள்.

“சும்மா என்னை உசுப்பேத்தி காரியத்தை நடத்தக் கூடாது”

“நான் உசுப்பேத்தறேன் ஏத்தலை, உன்னால் முடியுமா? சும்மா அவளைப் பார்க்காம பயந்து பயந்து ஓடற”

கிருஷ்ணா எதுவும் பேசாமல் இருந்தவன் பின்பு எழுந்து அவனின் ரூமின் உள் சென்று விட்டான்.

சிறிது “போகலாம்டா, எதுவும் சரியில்ல, பிள்ளைங்க வாழ்க்கை தான் முக்கியம். ரெண்டு பேருமே இப்படி இருக்கும் போது நாம அங்கயே போவோம்” என ராஜேந்திரன் பேச,                                             

“நீங்க அங்கே போனா அதையும் இதையும் பேசுவீங்க”

“எதையும் பேச மாட்டோம். நான் சொல்றேன், நானும் பேச மாட்டேன். உங்க அம்மாவும் பேச மாட்டா. உண்மையில உங்க அம்மா பேசினது எனக்குத் தெரியாது. அந்த வரன் வந்த விஷயத்துல வசதியில்லை மட்டும் தான் நான் சொன்னேன். இப்படி ரெண்டாம் தாரம் எல்லாம் எனக்குத் தெரியாது”

“உங்கம்மாக்கு எப்பவுமே ஒரு பயம், நீ எங்கே காவ்யாவைக் கல்யாணம் பண்ணிக்குவியோன்னு. அதனால வீட்டை வாங்கிடலாம், அவங்களை இங்க இருந்து அனுப்பிடலாம் சொல்லுவா. அதனால தான் அன்னைக்கு பேசினேன்”

“மத்தபடி நான் அவங்க நல்லா இருக்கக் கூடாதுன்னு எல்லாம் எதுவும் செய்யலைடா. அந்த வரன் தானா வந்தது, உங்கம்மாக்கு காவ்யாவை எப்பவுமே பிடிக்காது. அதுதான் அப்படி பேசியிருக்கிறா”     

“அந்த பாவம் தான் என் பொண்ணு வாழ்க்கையில விளையாடிடுச்சோ” என அவர் பேசப் பேச அழுதுவிட்டார்.

கிருஷ்ணாவால் அதையும் பார்க்க முடியவில்லை. “பா என்னப்பா இது?”  

“என் பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே” தலைபிடித்து அமர்ந்து கண்ணீர் விட, ஒரு வளர்ந்த மகனாய் அவரைத் தாங்கினான்.   

“ஒன்னும் ஆகலைப்பா, மாப்பிள்ளை செத்துட்டான்னு நினைச்சிக்குவோம். அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையும். அமைச்சிக் கொடுப்போம். நான் பார்த்துக்குறேன் அவளை. நீங்க இப்படி கலங்காதீங்க” என வெகுவாக தேற்றினான்.

பின்பு “நாம அந்த வீட்டுக்கு போயிடலாம் கிருஷ்ணா” என்றார். அவன் யோசிக்கவும், “நான் வீ ஆர் எஸ் எழுதிக் கொடுத்திட்டேன்” என்றார் கூடவே.இன்னும் அவர் ரிடையர் ஆக ஆறு வருடம் இருந்தது.

கிருஷ்ணா அவரிடம் “இப்போதைக்கு எனக்கு எந்த எண்ணமும் இல்லை. ஆனா அங்க போன பிறகு காவ்யாவை பார்க்கப் பார்க்க, எனக்கு அவளை கல்யாணம் பண்ற எண்ணம் வந்துட்டா? உண்மையில அவளைப் பார்த்துட்டே இருக்க முடியாதுன்னு தான் அந்த வீட்டை விட்டு வந்துட்டேன். அது தான் நிஜம்!” என்றான்.    

“அதுதான் காவ்யா பண்ண மாட்டாளே” என்றார் ராஜேந்திரன். சிறு புன்னகை கீற்று தோன்ற, “எனக்கு தோணுச்சுன்னா அவ சம்மதம் இருந்தாலும் இல்லைனாலும் பண்ணிக்குவேன். ஏன்னா கல்யாணத்துக்கு தானே சம்மதிக்க மாட்டா. என்னை அவளுக்கு பிடிச்சிருக்கு தானே! அதனால சம்மதம் இல்லாம பண்ணினாலும் தப்பில்லை. ஆனா கல்யாணம் பண்ண தோணும்னு தோணலை! ஒருவேளை அப்படி ஆகிடுச்சுன்னா?” என்று நிறுத்தினான்.

“இப்போ உனக்கு ஒரு வேலை வாங்கினேன், நீ விட்டுட்டு வந்துட்ட, என்ன பண்ணினேன்? ஒன்னும் பண்ணலை! அப்படி தான் அதுவும். ஆனா எப்பவுமே காவ்யா உங்கம்மாவை இளக்காரமா தான் பார்ப்பா. உங்கம்மாவும் சம்மதிக்க மாட்டா. எனக்கு என் பிள்ளைங்களும் முக்கியம், மனைவியும் முக்கியம்” என்றார் உணர்ந்து.பின் கிருஷ்ணா அவரிடம்ஒன்றும்பேசவில்லை.ரேணுகாவிடம் “பழைய வீட்டிற்கு போகலாம்” என்று சம்மதம் தெரிவித்து விட்டான்.       

         

Advertisement