Advertisement

அத்தியாயம் பத்து :  

கிருஷ்ணாவின் அந்த பேச்சை கேட்ட பிறகு அவனைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் வெறியாகவே மாறிவிட்டது.

எப்படி? எப்படி அவனை பார்க்க? மண்டை குடைந்தது!

காலையில் எழுந்ததும் முதலாக எல்லாம் தூக்கி ஏறக் கட்டி ரேணுவிற்கு அழைத்தாள். “ரேணு” என காவ்யாவின் குரல் கேட்டது தான், அப்படி ஒரு அழுகை ரேணுவிற்கு! “என்னடி? என்னடி?” என காவ்யா பதற, தேறிக் கொண்டவள், “ஒண்ணுமில்லைடி” என்றாள்.

எதற்கு காவ்யா ஃபோன் செய்தால் என்பது எல்லாம் பின்னுக்குப் போக, “எதுக்கு அழுத சொல்லு” என்றாள் அதட்டலாக.

“அதான் ஒண்ணுமில்லை சொல்றேனே”  

“எங்கே இருக்க”  

“இங்க அம்மா வீட்ல”  

“உன் ஹஸ்பன்ட் வீட்டுக்குப் போகலையா. அவர் உன்னை யூ எஸ் கூப்பிடலையா”  

“நான் எங்கே போனேன்?”

“என்ன போகவேயில்லையா?”

“இல்லை, அப்போ கல்யாணமாகி ஒரு பத்து நாள்ல வந்தவ, அப்போ இருந்து இங்க தான் இருக்கேன்”

“உன் வீட்டுக்காரர் வந்து போகலாம்னு இருக்கியா?”  

“அவரா?” என நிறுத்தியவள், “நீ எப்படி இருக்க சொல்லு?”

“நானா, என்னை விடு, நீ ஏன் இப்படி டல்லா பேசற” என்றாள் திரும்பவும் காவ்யா.

“இல்லை, நான் நல்லா தான் இருக்கேன்”  

“சரி, வாட்ஸ் அப் கால் வா, உன் முகம் காட்டு, நீ டல்லா, நார்மலா, நான் சொல்றேன்”  

“நான் இப்போ தான் எழுந்தேன், அப்போ டல்லா தானே தெரிவேன்”  

“சரி, குளிச்சிட்டு மேக் அப் போட்டுட்டு கூப்பிடு, சரியா. நானும் ரெடி ஆகிட்டு கூப்பிடறேன்” என வைத்தாள்.

“குளிச்சிட்டு மேக் அப் பண்ணினா மட்டும் என் முகம் மாறவா போகுது” என நினைத்து ரேணு கசப்பாய் ஒரு புன்னகை சிந்த, அப்போது தான் எழுந்து வந்த கிருஷ்ணா “என்ன ரேணு?” என்றான்.

“ஒண்ணுமில்லண்ணா” என்றவளின் முகத்தினில் ஒரு புன்னகை கீற்று, சில மாதங்களுக்கு பிறகு அந்த உதடுகள் புன்னகைக்க விரிந்திருக்கிறது.

“யாராவது ஃபோன் பண்ணினாங்களா?”  

“ம்ம், காவ்யா!”  

கிருஷ்ணாவின் முகம் இறுக “என்னவாம்?” என்றான்.

“எதுக்கு கூப்பிட்டா தெரியலை, அவ குரல் கேட்டதும் நான் அழுதிட்டேன், அப்புறம் ஒண்ணுமில்லை சொல்லிட்டேன். உன் முகம் காட்டு ஏதாவது இருக்கா இல்லையா நான் சொல்றேன் சொல்றா. நான் இன்னும் குளிக்கலை டல்லா தெரிவேன் சொன்னா, சரி குளிச்சிட்டு பேசு வாட்ஸ் அப்ல சொல்றா” என சிரித்தாள்.

அந்த சிரிப்பு கிருஷ்ணாவை தொற்றவில்லை, தான் நேற்று பேசாததால் இன்று ரேணுவை அழைத்திருக்கிறாள் என்று புரிந்தான்.

இருவருக்கு காலை பானம் குடிக்க எடுத்த வந்த சசிகலா, தன் பெண்ணின் முகத்தினில் சிரிப்பை பார்த்து அப்படியே நின்றார். அவள் சிரிப்பை தொலைத்து சில மாதங்கள் ஆனதே.

மக்களிடம் அதனை நீட்ட, எடுத்துக் கொண்டார்கள், “அம்மா நீ சாப்பிடலை” என ரேணு கேட்க, அதிசயமாய் அவளை பார்த்தார் அவளின் அம்மா.

பின்னே இந்த மாதிரி கேட்பதெல்லாம் அவரின் மக்களுக்கு மறந்தே போயிருந்தது. கிருஷ்ணா எதுவுமே கேட்டுக் கொள்வதில்லை, சொல்லிக் கொள்வதுமில்லை. ரேணு சில மாதங்களாய் எல்லாம் மறந்து போயிருந்தவள், இப்போது தான் கேட்கிறாள், “இனிமே தான் மா குடிக்கணும்” என்றவரிடம்,

“நீ இது குடி, நான் போய் எனக்கு போட்டுட்டு வர்றேன்” என்று அம்மாவிடம் கொடுத்துப் போக, அவரும் கிருஷ்ணாவும் மட்டும் இருக்கவும், அவன் காஃபியை தூக்கிக்கொண்டு உள்ளே போய் விட்டான்.

கிருஷ்ணா சகஜத் தன்மை அந்த வீட்டோடு முடிந்திருந்தது. இந்த வீடு வந்த பிறகு வேலையை விட்டுவிட்டான், வீட்டினரோடும் என்ன ஏதென்ற பேச்சு மட்டுமே! என்ன செய்கிறான் என்று தெரியவில்லை. எதாவது செய்கிறானா அதுவும் தெரியவில்லை. எப்போது வெளியே போகிறான் வருகிறான் எதுவும் தெரியவில்லை.

கேட்டாலும் பதில் சொல்வதில்லை. இப்போது ரேணுவின் வாழ்க்கையில் சிக்கல், இவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவேயில்லை. பார்த்து பார்த்து பெரிய இடம் மாப்பிள்ளை அமெரிக்காவில் இருக்கிறான் என்று கட்டிக் கொடுத்து, ஒரு வாரத்தில் வீடு வந்தவள் தான் இதோ இங்கேயே!

மனது விட்டுப் போனது, மகளின் வாழ்க்கை இப்படி ஆனதில் இருந்து ராஜேந்திரன் ஒடுங்கி விட்டார். எதுவுமே சரியில்லை. மனது அந்த வீட்டினில் இருந்த மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக ஏங்கியது.   

அப்படியே அமர்ந்து விட்டார், ரேணு வந்தவள் “குடிம்மா” என அதன் பிறகே குடித்தார். ரேணு வேகமாக குடித்து, “நான் குளிக்க போறேன்” என்று சென்று விட்டாள்.

மகள் இப்படி இருந்தே சில காலம் ஆகிவிட, செல்லும் மகளைப் பார்த்திருந்தார்.

குளித்து வந்தவள், அவளாகவே காவ்யாவிற்கு அழைத்து, “ம்ம் சொல்லு” என்றாள்.

“என்ன சொல்ல?” என்ற காவ்யா, “நீதான் சொல்லணும்” என்றாள் கைபேசியில் தெரிந்த அவளின் முகத்தினை பார்த்துக் கொண்டே,

“நீ ரொம்ப அழகாகிட்ட காவ்யா முன்னை விட”  

“ஆனா நீ ரொம்ப டல் ஆகிட்ட, ஏன் இப்படி ஆகிட்ட” என அதட்டலாக காவ்யா கேட்க,

“இல்லையே”  

“என்ன இல்லையே, ஐ ப்ரோ கூட பண்ணலை. லுக்கிங் வெரி டல். முகத்துல என்னவோ குறையுது, ஃபோன்ல சரியா தெரியலை”  

“அதுவா வீட்ல தானே இருக்கேன்னு போகலை”  

“என்ன போகலை? எப்பவும் பளிச்ன்னு இருக்க வேண்டாமா. யாரும் நம்மளை பார்க்கணும்னு இல்லை. நாம நம்மை பார்க்கணும். இதென்ன குளிச்சிட்டு நைட்டி போட்டிருக்க, சுரிதார் போடு இல்லை, சேலை கட்டு, நைட்டி போட்டா தானா சோம்பல் வந்துடும்”  

“சரிங்க நியூஸ் ரீடர் அம்மா”  

“ம்ம், நான் எப்படி படிக்கறேன்” 

“செமையா டெவலப் ஆகிட்ட டீ, நம்ம காவ்யா வான்னு இருக்கு”  

அவளை சிறிது நேரம் பேச விட்ட காவ்யா, “காலையில எதுக்கு அழுத?” எனக் கேட்கவும்,

“ஒண்ணுமில்லையே” என்று அவசரமாக காவ்யா சொன்ன விதமே, எதோ இருக்கின்றது என்று காட்டியது.

அந்த அவளின் பாவனையில் கிருஷ்ணாவைப் பற்றி தெரிந்து கொள்ள காலையில் அழைத்தது எல்லாம் மறந்தே போயிற்று.

“நாம ஒரு முறை பார்க்கலாமா?” என காவ்யா கேட்க,

“பார்க்கலாமே” என்றாள் உற்சாகமாக ரேணுகா.

“நான் காலையில போயிட்டு மதியம் லீவ் போடறேன், நீ எங்க ஆஃபிஸ் கிட்ட வர்றியா நாம எங்கேயாவது போகலாம்”     

“உங்க ஆஃபிஸ்கா அது எங்க இருக்கு, நான் தனியா வந்தே பல நாள் ஆச்சு”  

“என்ன பயம்? தெரிஞ்ச ஆட்டோக்காரர் உங்களுக்கு எப்பவும் இருப்பார் தானே. அவர் கிட்ட சொல்லு கொண்டு வந்து விட்டுடுவார்”.  

“ம்ம்ம், சரி” என்றாள் அரை மனதாக ரேணு, வீட்டினில் சம்மதம் வாங்க வேண்டுமே என்ன சொல்வார்களோ என்ற யோசனை ஓடியது.

“என்ன குரலே உள்ள போயிடுச்சு, பார்க்க இஷ்டமில்லையா”  

“இல்லையில்லை நான் வர்றேன்”  

“உண்மை சொல்லிட்டு வா, பொய் சொல்லாத”

“அனுப்பலைன்னா”

“அனுப்பலைன்னா, நான் உங்க வீட்டுக்கு வந்து உன்னை கூட்டிட்டு போறேன்னு சொல்லு. உங்கம்மா அனுப்பிடுவாங்க”  

கேட்ட ரேணுவின் முகத்தினில் ஒரு விரிந்த புன்னகை. “ம்ம் சரி” என்று வைத்து விட்டாள். 

“மா, நான் வெளில போகட்டுமா”  

“எங்க ரேணு” எனக் கேட்டவரிடம், “நியூஸ் சேனல் ஓட விட்டு இந்த ஆஃபிஸ்க்கு” என்றாள்.

“இங்க எதுக்கு?”  

“அது ஒரு ஆங்கில நியூஸ் சேனல்” என்பதால் அதனை சசிகலாவாக போட மாட்டார், ரேணு காவ்யா வாசிக்கும் போது பார்த்தாலும் அம்மா வந்தால் மாற்றி விடுவாள்.

காலை முதல் மாலை ஆறு மணி வரை தான் காவ்யாவின் பணி நேரம் என்பதால் மாலை வந்து ராஜேந்திரன் அந்த சேனலை கடந்து போனாலும், காவ்யா தென் பட மாட்டாள்.

“காவ்யா இங்க வேலை பார்க்கறா மா, நாம பார்க்கலாம் சொன்னா”  

“என்ன? நீ ஒன்னும் போக வேண்டாம்!”  

“ப்ச், மா அவ என்னோட பெஸ்ட் ஃபிரண்ட், நீ உன்னோட பக்கத்துக்கு வீட்டு சொந்தத்தை விடு” என்றாள் அதட்டலாக.

மகள் இப்படி இயல்பாக பேச, யோசனையில் இருந்தார். “அம்மா” என கத்தி கூப்பிட ஒரு பக்கம் ராஜேந்திரன் வந்து எட்டிப் பார்க்க, ஒரு பக்கம் கிருஷ்ணா எட்டிப் பார்த்தான்.

அவளின் குரலில் கலைந்த சசிகலா ரேணுகாவை பார்க்க, “நான் போகலைன்னா அவ வந்து கூட்டிட்டு போவா”  

“வேண்டாம், வேண்டாம், அதுக்கு நீயே போயிடு”  

“ம்ம், சரி மதியம் தான்”  

“யார் ரேணு?” என ராஜேந்திரன் கேட்க,

“காவ்யாப்பா”  

போகவேண்டுமா என்ற பார்வை பார்த்தார்.

“அவ என் பெஸ்ட் ஃபிரண்ட் பா, ஐ மிஸ் ஹெர் எ லாட்” என அழுகைக்கு தயாராகி சொல்ல. ராஜேந்திரன் இப்போது கிருஷ்ணாவை பார்க்க, அவன் எதுவும் சொல்லாமல் ரூமின் உள் புகுந்து கொண்டான்.

அவளை சாக்காய் வைத்து தன்னிடம் வருகிறாளோ என யோசனைகள் ஓடியது. ஆனால் காவ்யா அப்படி செய்ய மாட்டாள் என்றும் மனது சொல்லியது.

அவளின் அலுவலக வாசலிலேயே காவ்யா ரேணுவை எதிர்கொண்டாள். அவர்களுக்கு தெரிந்த ஆட்டோவில் ரேணு செல்ல, “அண்ணா நான் வீட்ல விட்டுடறேன் போங்க” என ஆட்டோவை அனுப்பி விட்டனர்.

“ஹேய் காவ்யா” என ரேணு தான் கட்டிக் கொண்டாள். “ம்ம், எங்கே போகலாம், சாப்பிட்டிட்டா வந்த?”  

“இல்லை” எனவும், “வா” என அவளின் வெஸ்பாவை எடுத்து வந்தாள்.

“காவ்யா நீ வண்டி ஒட்டுறையா” என

“எஸ், என்னோட வண்டி வாங்கி ஆறு மாசம் ஆகுது, அம்மா விடவேயில்லை, சண்டை போட்டு வாங்கிட்டேன். லோன்ல தான் வாங்கினேன். எங்கம்மாக்கு நான் வண்டில சுத்தினா கருப்பாகிடுவேனாம், நான் விடாம சண்டை போட்டு வாங்கிட்டேன்”  

“நீ எங்கே கருப்பாகிட்ட, இன்னும் கலர் ஆகிட்ட”  

“அது இப்போ டீ வீ ல வேற வர்றேன் இல்லையா, சோ அம்மா வீட்ல செஞ்சி கொடுக்குற பேக் எல்லாம் முகத்துக்கு போடறது தான் சாயந்திரம் என்னோட வேலை, நீ ரொம்ப டல்லா தெரியற, அதான் உனக்கும் எடுத்துட்டு வந்தேன். ஈவ்னிங் டெய்லி போடு”   

பின்பு ஒரு ஹோட்டல் போய் இருவரும் உணவருந்தினர். உணவருந்தும்  போது “எப்போ எப்போ உன் வீட்டுக்காரர் உன் கிட்ட பேசறார், அவரை விட்டு இருக்கறதனால தான் அழுகையா” என காவ்யா கிண்டல் செய்தாள்.

அத்தனை நேரம் இருந்த இளக்கம் மறைந்து, கண்களில் நீர் நிறைய, “ஐ அம் பேக் ஹோம் காவ்யா” என்றாள்.

காவ்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை, “என்ன சொல்ற?”

“டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணியிருக்கேன்”  

“என்ன?” என்றாள் அதிர்ந்து.

“ஏன்? ஏன்?”  

“அவனுக்கு வேற ஒரு பொண்ணோட ரிலேஷன்ஷிப் இருக்கு, சில வருஷமா இருக்கும் போல, அங்கேயே யூ எஸ் ல, அப்பா அம்மா சொல்லவும் என்னை கல்யாணம் பண்ணிகிட்டான். கல்யாணம் ஆன ஒரு வாரத்துல யூ எஸ் போனவன் தான், திரும்ப எனக்கு ஒரு ஃபோன் கூட பண்ணலை”

“அந்த ஒரு வாரமும் என்கூட சரியா பேசக் கூட இல்லை. அவங்கப்பாம்மாக்கும் தெரியலை”

“உனக்கு எப்படி தெரியும்”  

“கிருஷ்ணா அவனோட ஃபிரண்ட்ஸை மேரேஜ்க்கு கூப்பிட்டான் இல்லையா. அவங்க எங்களோட ஃபோட்டோ எடுத்துக்கிட்டாங்க. அந்த ஃபோட்டோ அவங்க அக்கா யூ எஸ் ல இருந்து வந்தவங்க பார்த்துட்டு. இவரை எங்களுக்கு தெரியுமே அல்ரெடி மேரீட் எங்க வீட்டு பக்கம் தான் சொல்லியிருக்காங்க”

“இல்லைன்னு சொல்லவும், பேர் அவர் வொர்க் பண்ற ப்ளேஸ் எல்லாம் கேட்டு, அங்க இருக்குறவங்க மூலமா விசாரிச்சு, அவங்க தான் இவங்கன்னு சொல்ல, அப்போ கூட கிருஷ்ணா எங்க கிட்ட சொல்லலை. அவன் திரும்பவும் விசாரிச்சிட்டு இருக்கும் போதே, ஒரு நாள் நைட் ஃபாரின் கால், ஒரு பொண்ணு அவர் என்னோட கணவர்ன்னு சொல்லி ஃபோன் பேசுது. நான் இப்போ கன்சீவ்ன்னு சொல்லுது”

“அப்புறம் அவனுக்கு ஃபோன் பண்ணி கேட்டா, அப்படி எல்லாம் எதுவும் இல்லை ஜஸ்ட் ஒரு தொடர்புன்னு சொல்றான். ஆனா அங்க மாறீட்ன்னு சொல்றாங்க எங்களுக்கு எதுவுமே புரியலை அப்படி சொல்லி வெச்சிருக்காங்க போல”

“முன்னமே நல்லா விசாரிக்கலையா”

“அதெல்லாம், வேலை செய்யற இடத்துல, அவனோட ஹையர் ஆஃபிசர்ஸ் இப்படி தான் கேட்டாங்க. எல்லோருமே அவன் ரொம்ப நல்லவன் தான் சொன்னாங்க. யாரும் தப்பு சொல்லலை. அப்பா ஆபிஸ்ல அவருக்கு கீழ இருக்குற ஒருத்தரோட மனைவியோட தம்பி இவன். அவங்க வீடு அப்பா க்கு ரொம்ப வருஷ பழக்கம். அப்படி வந்த வரன் தான். ஆனா அவங்க யாருக்கும் கூட தெரியலை” 

“அவர் வீட்டுக்கு வந்து எங்களுக்கு தெரியவே தெரியாது சார்ன்னு அப்பா கால்ல விழுந்திட்டார்”    

“அவன்கிட்ட கேட்டா, இந்த மாதிரி ரிலேஷன்ஷிப் இருக்கு என்னால விட முடியலைன்னு கூலா சொல்றான். இதுக்கு அட்ஜஸ்ட் பண்ணி இருக்குறதுன்னா இங்க வா இல்லை டைவர்ஸ் பண்ணிக்கலாம் சொல்றான்”

“ச்சே ன்னு ஆகிடுச்சு. அம்மா நீ அங்க போ, ஒருவேளை கூட இருந்தா திருந்திடுவார் சொல்றாங்க”  

“ரப்பிஷ்” என்றவள், “நீ என்ன சொன்ன” என,

“யாரையும் திருத்த எல்லாம் நான் பிறக்கலை. அப்படி எல்லாம் எனக்கு யாரோடையும் வாழ வேண்டாம் சொல்லிட்டேன். கிருஷ்ணாவும் போக வேண்டாம் சொல்லிட்டான்”

“அவனை சும்மாவா விட்டான் கிருஷ்ணா”

“என்ன பண்ண முடியும். அவன் யூ எஸ் ல இருக்கான், நாம இங்க இருக்கோம். கிருஷ்ணா தான் டைவர்ஸ்க்கு அப்ளை பண்ண சொன்னான். கம்ப்ளைன்ட் கொடுக்க சொன்னாங்க, வேண்டாம் சொல்லிட்டான். அவன் யூ எஸ் ல இருக்குறதால சும்மா ஒரு சென்சேஷன் தான் ஆகும். அவனை யாரும் கேட்க மாட்டாங்க, எல்லோரும் நம்மை கேட்பாங்க. வேண்டாம் டைவர்ஸ் மட்டும் கேளு, அவனை பின்னால பார்த்துக்கலாம் சொல்லிட்டான்”        

“ஒரு வாரம் சரியா பேசலை தானே அவன். வேற ஹஸ்பன்ட்டா கூட நடக்கலையா” என்றாள் காவ்யா தயங்கித் தயங்கி, கேட்பது சரியா தவறா என்று தெரியவில்லை. அந்த வகையில் தோழி தப்பித்து விட்டாளா என்று தெரிந்து கொள்ள,

“பேச மட்டும் தான் இல்லை, ஆனா வேற எல்லாம் கரக்டா நடந்தது” என்றவள், “நான் யார் கிட்டயும் சொல்லலை, அவன் சொல்றான், எனக்கு உன்கிட்ட சேடிஸ்ஃபேக்ஷன் இல்லை, ஒருவேளை இருந்திருந்தா அவளை விட்டு உன் கூட வந்திருப்பேன்னு, என்னால அதை தாங்கவே முடியலை”

“மனுஷங்க இப்படி இருப்பாங்கன்றது நான் கதைல தான் படிச்சிருக்கேன். என் வாழ்க்கையில இப்படி நடக்கும்னு நான் யோசிச்சது கூட இல்லை, இன்னும் என்னால நம்பக் கூட முடியலை” என தேம்பி தேம்பி அழ,

காவ்யாவால் இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளியே வரவே முடியவில்லை. ரேணுவின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதா, திருமணத்தில் பார்த்த அவனை கொல்லும் வெறி வந்தது.

“இந்த கிருஷ்ணா ஏன் இப்படி பண்ணிட்டான். அப்பா பார்த்த வரன்னாலும் அவன் இன்னும் நல்லா விசாரிச்சு இருக்க வேண்டாமா”

“அது தான் கிருஷ்ணாக்கு ரொம்ப கில்டி ஆகிடுச்சு. நான் இருந்தும் உனக்கு இப்படி ஒரு நிலைமை வர விட்டுட்டேனேன்னு அவ்வளவு ஃபீல் பண்றான். ஆனா கிருஷ்ணா விசாரிச்சான், ஃபிரண்ட்ஸ் மூலமா அவன் வொர்க் பண்ற இடத்துல விசாரிச்சான்”

“கிருஷ்ணாவும் ஃபோன்ல பேசினான், ஸ்கைப்ல பேசினான். நானும் கல்யாணத்துக்கு முன்ன அப்பப்போ பேசியிருக்கேன். அவ்வளவு நல்லா பேசுவான். மரியாதையா பேசுவான். எங்களுக்கு கொஞ்சம் கூட சந்தேகமே வரலை. ஏமாந்துட்டோம்” என திரும்பவும் அழ.

“அழாத! முதல்ல அழாத! ஏமாத்திட்டு அவன் சிரிச்சிட்டு இருக்கும்போது, ஏமாந்துட்டோம்னு நாம ஏன் அழணும், நீ எந்த தப்பும் பண்ணலை. அப்போ நீ அழக் கூடாது, புரிஞ்சதா”  

ஆனாலும் தேம்பி தேம்பி அழ, “உனக்கு அவனை பிடிச்சிருந்ததா?” என்றாள் கேள்வியாக.

“இல்லை, அவன் யூ எஸ் போனப்போ ஷப்பா போய்ட்டான்னு கொஞ்சம் நிம்மதியாக் கூட இருந்தது. என்னை அந்த ஒரு வாரத்துலயே கொஞ்சம் டார்ச்சர் பண்ணிட்டான். என்னால இதை அம்மா கிட்ட சொல்லக் கூட முடியலை. உன்கிட்ட கூட அதிகம் சொல்ல முடியாது. உனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலை” என அப்படி அழுதாள்.

காவ்யா என்ன சொல்வது என்று கூடத் தெரியாமல் அமர்ந்திருந்தாள். ஒருவேளை பெற்றோர் செய்த பாவமோ எனத் தோன்ற, அதனை உடனே அழித்தாள்.

அப்படி ஒன்றும் பாவம் செய்தவர்கள் கஷ்டப்படுவதும் கிடையாது, புண்ணியம் செய்தவர்களுக்கு எதுவும் வராமல் இருப்பதும் கிடையாது. வருவதை தெரிந்தவரோ தடுப்பவரோ யார்.

என்ன பாவம் செய்தார் உன் அம்மா! வாழ்க்கை துணையை இருபத்து இரண்டு வயதில் தொலைத்து, இன்று வரை தனியாக மக்களை வளர்ப்பதே கடமையாக வாழ்ந்து வருகிறார் எந்த ஆசாபாசங்களும் இன்றி.

நடப்பதற்கு யாரும் பொறுப்பு கிடையாது என உணர்ந்தவளாக, ரேணுவை தேற்ற வேண்டிய அவசியத்தை புரிந்தவளாக, அவளிடம் பேசத் துவங்கினாள்.   

 

Advertisement