Advertisement

“என்னடா? வந்த சாப்பிட்ட தூங்கப் போயிட்ட. இன்னும் நாலு நாள் தான் கல்யாணத்துக்கு இருக்கு, என்ன வேலை பாக்கின்னு பார்க்க மாட்டியா?” என,

“நாளைல இருந்து லீவ் போட்டிருக்கேன் மா, பார்த்துக்கறேன்!” என்று திரும்ப உள்ளே போகப் போக,

“எத்தனை நாள் லீவ் போட்டிருக்க” என்று அப்பா கேட்கவும், “ஒரு வாரம்” என்றான்.

“நாளைக்கு காலையில ஊர்ல இருந்து பாட்டி, சித்தப்பா, அத்தை வீடு எல்லாம் வர்றாங்க. கார் எடுத்துட்டு போய் கூட்டிட்டு வந்துடு” என,

“ம்ம்” என்று சுரத்தின்றி தலையசைத்து உள்ளே செல்ல,

“ஏண்டி இவன் இப்படி இருக்கான்?” என,

“ஏன்?” என்ற யோசனைகள் ஓடப் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அவன் மேலே படியேறி  விடவும்,

ரேணுகாவை பார்த்தனர் இருவருமே, “எனக்கு தெரியாது” என்றாள் அவசரமாக.

“என் பையன் இப்படி இருக்கான்னா அதுக்கு ஒரே காரணம் அந்தப் பக்கத்துக்கு வீட்டு பிசாசா தான் இருப்பா. அந்த பக்கத்துக்கு வீட்டு பிசாசோட பேசினியா நீ?” என்று அம்மா கோபமாகக் கேட்கவும்,

“இல்லையே” என தலையசைத்து ஓடிவிட்டாள் ரேணுகாவும்.

“அதுங்களை ஒன்னுமே பண்ண முடியாதா?” என சசிகலா கேட்கவும்,

“என்ன பண்ணமுடியும்? நானும் எழுபது எண்பது லட்சம் பெரும் அவங்க வீட்டை ஒரு கோடிக்கு கேட்கறேன், கொடுக்க மாட்டேங்கறாங்க” என,

“இன்னும் பத்து இருபது லட்சம் சேர்த்து சொல்லுங்க, இந்த இடத்தை விட்டு அதுங்க போனாப் போதும்”  

“கல்யாணம் முடியட்டும், திரும்ப விலை பேசி பார்க்கலாம்” என்றார்.

“எப்படியாவது துரத்தி விட்டுடுங்க” என்றார் எரிச்சலாக.  

“சத்தமா பேசாத, உன் பையன் நம்மளை துரத்தி விட்டுடுவான். இதை பார்த்து பக்குவமா தான் கையாளனும்” என்றார் கிருஷ்ணாவை பற்றி நன்கு தெரிந்தவராக அவனின் தந்தை ராஜேந்திரன்.

“துரத்தி விட்டுடுவானா அவன்?” என சசிகலா பொங்க,

“அந்த மாதிரி ஒரு நிலைமை வராம பார்த்துக்கறது தான் நம்ம புத்திசாலித்தனம், வீணா அவனை சீண்டி விடாதே, காணாம இருக்குற வரை எதுன்னாலும் செய்ய யோசிப்பான், தெரிஞ்ச மாதிரி காட்டிகிட்டோம், அவனுக்கு ரொம்ப தைரியம் ஆகிடும்!” என்றார்.

பெரும் கவலை இருவர் முகத்திலுமே மகனை குறித்து. ஆனால் கிருஷ்ணாவிற்கு காவ்யாவைக் குறித்த கவலை மட்டுமே!

ஊர் அடங்கியதும் மாடியில் அவனின் ரூமின் உள் படுத்துக் கிடந்தவன், கதவை திறந்து மொட்டை மாடிக்கு வந்தான். பக்கத்துக்கு வீட்டின் மொட்டை மாடியை பார்க்க, அங்கே இருந்த ரூம் இருட்டாக இருக்க, விடிவெள்ளி வெளிச்சம் அந்தக் கதவில் தெரிய, சிறிது நேரம் அந்தக் கதவை வெறித்து பார்த்திருந்தவன், பின்பு ஒரே தாவாக தாவி அந்த மொட்டை மாடிக்கு இறங்கினான்.

பின்பு கைபேசியில் காவ்யாவின் நம்பருக்கு அழைப்பு விடுத்தான். வெகு நேரம் எடுக்கப் படவில்லை. அது அடிக்கும் சத்தம் அவனுக்கு நன்கு கேட்டது. அவன் கதவின் பக்கத்தில் தானே நின்றிருந்தான்.

மூன்றாவது அழைப்பில் தான் அது எடுக்கப் பட, “வெளில வா” என கிருஷ்ணா சொல்லவும், தூக்க கலக்கத்தில் காவ்யா வந்து கதவை திறந்தாள்.

“எப்படி இப்படி உன்னால நிம்மதியா தூங்க முடியுது, ஒரு மனுஷன் இத்தனை தடவை கூப்பிடறானே போன் எடுப்போம்னு தோணுதா. அதுவும் பத்து மணி தான் ஆகுது”  என வார்த்தைகளை கடித்து துப்ப,  

அதற்கு பதில் சொல்லாதவள் “இப்ப என்ன வேணும் உங்களுக்கு” என,

அதற்கு பதில் சொல்லாதவன், சிறிது நேரம் அவளின் முகம் பார்த்து நின்றான். பின்பு “சரி, உள்ள போய் கதவை சாத்திக்கோ” எனவும்,  

முறைத்து நின்றவளிடம், “முறைக்கரதை தவிர நீ ஏதாவது பிரயோஜனமா பண்ணியிருக்கியா”

“நான் பண்றேன் பண்ணலை உங்களுக்கு என்ன வந்தது. என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க, அண்ட் இன்னைக்கு அந்த ஹெட் மாஸ்டர் கிட்ட சண்டை போட்டுட்டேன்” என,

“தெரியும்” என்றான் அமைதியாக.

“என்னால அங்க வேலைக்கு போக முடியாது”

“சரி போகாத” என்றான் உடனே.

“நீங்க எனக்குத் தெரியாம ரிகமன்ட் பண்ணியிருக்கீங்க, உங்களை யாரு பண்ணச் சொன்னா?”  

“பின்ன யாரு உனக்கு வேலை கொடுப்பா?”

“ஆனா எனக்கு வேலை வேணும், அது நானா செலக்ட் ஆகணும்”  

“எதுக்கு உனக்கு வேலை, உன்னால எந்த வேலைலயும் இருக்கவே முடியாது. எனக்கு நல்லா தெரியும். உன்னோட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்க்கு எந்த வேலையும் செட் ஆகாது”

“அதையும் விட உன் படிப்பு, என்ன படிச்சிருக்கற நீ, பி ஏ இங்கிலீஷ் , இதுக்கு நீ டீச்சர் ட்ரைனிங் படிச்சு அந்த வேலைக்கு தான் போகணும், படிப்பு முடிச்சு மூணு மாசம் தான் ஆச்சு, அதுக்கு படின்னா இப்போதைக்கு பணம் இல்லைன்னு சொல்லிட்ட, உனக்கு வேலை குடுக்க என்ன கியூலயா நிக்கறாங்க” என்றான் கோபமாக.

“அது எனக்குத் தெரியும், நீங்க சொல்லிக் காட்ட வேண்டிய அவசியமில்லை”  என்றாள் விரைப்பாக.

“தெரிஞ்சிருந்தா ஏன் ஹெட் மாஸ்டர் கிட்ட சண்டை போடணும்” என,

“தினமும் லேட் ஆகுது, அதுதான் நான் லேட்டா போகும் போது எனக்கு ஏதாவது ஆனா நீங்க தான் பொறுப்புன்னு எழுதிக் குடுங்கன்னு சொன்னேன்” என,

கிருஷ்ணா சிரித்து விட்டான் அவளின் பதிலில்.

“என்ன சிரிப்பு?” என காவ்யா முறைக்க,

“நீ தனியா வரும் போது வெளில இருக்குறவங்க தானே பயப்படணும். அதை நினைச்சு சிரிச்சேன்!” என்றவனிடம்.

“அய்யே” என பழிப்பு காட்டினாள். கூடவே “யார் பயந்தாலும் நீங்க பயப்படறது இல்லை” என சலிக்க,    

“ஹ ஹ” என சத்தமாக சிரிக்க துவங்கினான்.

அது அந்த ஏகாந்தத்தில் உரத்து கேட்க, “அச்சோ சத்தம், என்ன இது? இருட்டுல மொட்டை மாடில பார்த்தா என்ன நினைப்பாங்க. நாளைக்கு காலையில பார்க்க வேண்டியது தானே. இன்னும் கொஞ்சம் சத்தம் போட்டா நவீனும் பிரவீனும் வந்துடுவாங்க” என பதறினாள். 

அவளின் பதற்றம் பார்த்தவன், “நீ நடை பழகின வயசுல இருந்து என்னைப் பார்க்கற, என்கூட பேசற, அப்போ இருந்து இத்தனை வருஷமா எல்லோரும் நம்மை பார்க்கறாங்க. இப்போ மட்டும் என்ன?” என பாவனையாகக் கேட்டான். 

பதில் சொல்லத் தெரியாமல் நிற்க, “அப்போ எல்லாம் இல்லாத ரெஸ்ட்ரிக்ஷன் இப்போ மட்டும் என்ன புதுசா?” என விடாது பார்த்துக் கேட்க,  அவனின் பார்வை பாராது வேறெங்கோ பார்த்தாள். அவளை மேலும் பதட்டப் படுத்தாது,

“போ, போய் தூங்கு!” என,

“தூங்கறவளை எழுப்பி போய் தூங்குன்னு சொல்றீங்க” என கடுப்பாக முறைக்க,

“முறைச்சு, முறைச்சு, உன் முட்டை கண்ணு வெளில வந்துடப் போகுது” என கிண்டல் பேசினான்.

பதில் பேசாமல் முறைத்து நிற்க, “உள்ளே போ” என சைகை செய்ய, “இப்ப எதுக்கு என்னை எழுப்புனிங்க” என வழக்காட 

“உன்னை பார்க்காம தூங்க முடியலை, உன்னை பார்க்கத் தான்” என்றான் ஆழ்ந்த குரலில் கிருஷ்ணா. அடுத்த நிமிடம் எதுவும் பேசாமல் உள்ளே வந்து கதவை தாளிட்டு கொண்டாள். 

திரும்ப படுக்கையில் வந்து படுத்த கிருஷ்ணாவிற்கு அடுத்த நிமிடம் உறக்கம் தழுவ,

காவ்யா சுத்தமாய் உறக்கம் தொலைத்து இருந்தாள். இவன் ஏன் இப்படி செய்கிறான் என்ற கவலையும்.         

 கிருஷ்ணா சொன்னது போல காவ்யா நடை பழகியதே அவனின் கை பிடித்து தான். அவள் மட்டுமல்ல ரேணுகாவும் கூட. இருவரையும் விட ஐந்து வயது பெரியவன். காவ்யா தன் தம்பிகளிடம் கூட அப்படிப் பேச மாட்டாள்.

எப்போதும் சல சலவென்று அவனிடம் கதையடிப்பாள், நிறைய வேலைகளுக்கு கிருஷ்ணா வேண்டும், எல்லாம் பருவம் எய்தும் வரை.

அதன் பின் ஒரு ஒதுக்கம் வந்து விட, ரேணுகாவிடம் இருந்த ஒரு சகஜம் கிருஷ்ணாவிடம் வந்ததில்லை. ஆனால் கிருஷ்ணா அவளை அதிகம் ஒதுங்க விட்டதும் இல்லை. ஏதாவது ஒரு வகையில் பேசிக் கொண்டு தான் இருப்பான்.

பேசுவாள் தான், ஆனாலும் முன்பிருந்த எதோ ஒன்று இருந்ததில்லை. அந்த ஒரு ஒதுக்கம் தான் கிருஷ்ணாவை அவளை சுவாரசியமாய் பார்க்க வைத்தது, இன்று வரை!       

Advertisement