Advertisement

                     கணபதியே அருள்வாய்

                     சந்தத்தில் பாடாத கவிதை

 

அத்தியாயம் ஒன்று :

“டீ சாப்பிடுங்க காவ்யா” என்று சொன்ன ஹெட் மாஸ்டரிடம், “இட்ஸ் ஓகே சர் தேங்க்யு” என்று சொல்லி, கையில் இருந்த கோப்பைக் கொடுக்க,

“நான் பார்த்துட்டு சொல்றேன்” என அவர் பதில் சொல்லவும், நேரம் பார்த்தால், அப்போதே மணி ஆறு. அவள் நேரம் பார்ப்பதை உணர்ந்தும் அதனைக் கண்டு கொள்ளாதவராக, அவர் பொறுமையாக டீ குடிக்க, அங்கே நிற்கப் பிடிக்காதவளாக வெளியில் வரவும்,

அங்கே இருந்த பியூன் “எப்போம்மா இந்த மனுஷன் கிளம்புவாறு” என,

“அதையேன் என்கிட்டே கேட்கிற, போய் அவர் கிட்ட கேளு” என்று வள்ளென்று விழுந்து செல்ல,

“உள்ள வாங்கின திட்டுக்கு என்கிட்டே முறைக்குது” என்று பதிலுக்கு அவன் பார்க்க, “போடா” என்ற பார்வையைக் கொடுத்து அவளின் சீட்டினில் வந்து அமர்ந்தாள்.

அந்த பெரிய பள்ளி இப்போது வெறிச்சோடிக் கிடந்தது, மாணவர்கள் எல்லாம் சென்றிருக்க, சில மாணவர்கள் மட்டும் விளையாட்டுப் பயிற்சியில் இருக்க, சீட்டில் இருந்து எழுந்து வெளியே நின்று க்ரௌண்டை வேடிக்கை பார்த்திருந்தாள்.

அதற்குள் பியூன் வந்து “சார் கூப்பிடறார்” என,

உள்ளே போகவும், “என்ன டைப் பண்ணியிருக்கீங்க, ஹெட்டிங் ப்ளாக் பண்ணலை, ஸ்டார்டிங் லெட்டர் கேபிடல் போடலை” என குறைகளை அடுக்க, தெரிந்து வேண்டுமென்றே தானே செய்திருந்தாள். பின்னே தினமும் நேரமானால்.. ஒன்றும் பதில் பேசாமல் அமைதியாக நின்றாள்.

“என்ன இவ்வளவு இர்றேஸ்பான்சிபில்” என,

அவர் பேசுவதை விடுத்து நேரம் பார்க்க, “இது ஒன்னும் கவர்மென்ட் ஆஃபிஸ் இல்லை நேரத்துக்கு போக, வேலை இருக்குற வரை செஞ்சிட்டு தான் போகணும்” என,

“இப்போவே ஆறு மணி, எனக்கு இன்னும் ஒரு மணி நேரம் ட்ராவல் பண்ணனும்” என,

“ஒழுங்கா வேலை பண்ணினா ஏன் இருக்கணும்? இப்படி தப்பு தப்பா அடிச்சா, போங்க போய் திரும்ப அடிங்க” என,

“ஓகே, திரும்ப டைப் பண்றேன். ஆனா நான் லேட்டா போகும் போது எனக்கு ரோட்ல ஏதாவது நடந்தா நீங்க தான் பொறுப்புன்னு எழுதிக் கொடுங்க, அடிக்கறேன்” என்றாள் நிமிர்வாய்.

“மிஸ் காவ்யா” என ஹெட்மாஸ்டர் டென்ஷனில் கத்த, அசையாது நின்றாள்.

அவளையே முறைத்துப் பார்த்தார் ஹெட் மாஸ்டர், “என்ன ஒரு இருபது, இருபத்து ஒன்று வயதிருக்குமா இந்த பெண்ணிற்கு, என்ன பேச்சு பேசுகின்றது” எனப் பார்த்தார். ஆனாலும் காவ்யா அழகான பெண், அதோடு அந்த வயதிற்குரிய இளமையின் செழுமையும் இருக்க, “இவள் சொல்வது போல எவனாவது வம்பு செய்து, அது நம் தலையில் விழுந்தால்” என பயம் தோன்ற,   

“போங்க, போய் தொலைங்க, கஷ்டப் பட்டு வந்திருந்தா வேலையோட அருமை பெருமை தெரியும், ரெகமண்டேஷன்ல வந்ததெல்லாம் இப்படித் தான்” என,

“நாளைக்கு வந்து பண்றேன்” என அவரிடம் பணிவாகவே சொல்லி, அவரின் பதிலையும் எதிர்பாராது, அவளின் ஹேன்ட் பேக் எடுத்து வெளியில் வந்து, சிறிது தூரம் நடந்து, பஸ் ஸ்டாப் வந்து, பஸ் வரும் வரை காத்திருந்து..

ஏறி கூட்டத்தில் நெறி பட்டு, அது மெதுவாக நின்று ஊர்ந்து சென்று, ஒரு வழியாக அவளின் இடம் வந்து இறங்கி, திரும்பவும் சிறிது தூரம் நடந்து, அவளின் வீடு இருந்த தெரு வந்த போது ஏழரை மணி கடந்து அதற்கும் மேலும் பதினைந்து நிமிடம் ஆகியிருந்தது.

என்னடா வாழ்க்கை இது என்ற சோர்வு, கூடவே பசியின் சோர்வு என அவளை தளரச் செய்தாலும்,  அதுவரையிலும் மனதில் ஒருவனை அர்ச்சித்து கொண்டிருந்தாள்.

“இவனை நான் ரெகமெண்டேஷன் செய்யச் சொன்னேனா, இன்டர்வியுல செலக்ட் ஆன மாதிரி என்கிட்டே பில்ட் அப் குடுத்துட்டு, எனக்குத் தெரியாம ரிகமன்ட் பண்ணியிருக்கான், என் உயிரை எடுக்கறான், எனக்கு ரிகமண்டேஷன் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் வேணும்னு பண்றான், இந்த அம்மாவும் போ போன்னு கெஞ்சறாங்க, இப்போ?” என நினைக்கும் போதே மனது கொதித்தது.

“ஏன்? ஏன் அவனுக்கு என்ன அப்படி என்னுடைய கொள்கைகளை உடைக்க வேண்டும் என?” ஆத்திரம் பொங்க அவனை மனதினில் திட்டிக் கொண்டே நடந்தாள்.   

அவளின் தெருவில் நடக்கும் போது பார்வை அவளின் வீட்டை விட அதனின் பக்கதினில் ஜொலித்துக் கொண்டிருந்த இன்னொரு வீட்டின் மேல் பார்வை படிந்தது.

அது திருமண வீடு, இன்னும் நான்கு நாட்களில் அந்த வீட்டு பெண்ணிற்கு திருமணம் நடக்க இருக்க, அது விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது.

அந்த வீடு எவ்வளவு ஜொலித்துக் கொண்டிருந்ததோ, அதற்கு எதிர் பதமாக இவளின் வீடு இருளில் மூழ்கி இருந்தது. அந்த ஜொலிப்பை கடந்து இவளின் வீட்டின் கேட்டை திறக்க, அது இட்ட சத்தத்தில் பக்கத்துக்கு வீட்டில் இருந்த ரேணுகா வேகமாக ஓடி வந்து அவளின் வீட்டின் வாயிலினில் நின்று இவளா வந்து விட்டாள் என வேகமாகப் பார்த்தாள்.

இவள் தான் எனவும், “காவ்யா, ஒரு நிமிஷம் நில்லு” என்று அவளின் ஃபோனை எடுக்க வீட்டின் உள் புறம் போக, இவள் நிற்காமல் நடந்து இவளின் வீட்டின் வாயிற்படியில் நின்று பெல் அடித்தாள்.

அடித்து நிற்கவெல்லாம் இல்லை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்க, அதில் வேகமாக அவளின் அம்மா ஓடி வந்து கதவை திறந்தவர், “ஏண்டி இப்படி அடிக்கிற” என,

“நான் இன்னும் வரலைன்னு தெரியுது, நீ கதவை இப்படி மூடி தாள் போட்டா, அதுவும் லைட் கூட போடலை” என கேட்டுக் கொண்டே வீட்டின் உள் நடக்க,

“ம்ம், கரண்ட் பில் யார் கட்டுவா? ஏன் உனக்கென்ன கண்ணா தெரியலை, உள்ள வேலையா இருந்தேன்” என்று அவரும் சத்தமிட, அதற்குள் ரேணுகா அவளின் வீட்டின் காம்பவுண்டின் அந்த புறம் நின்று “அத்தை, காவ்யா கூப்பிடுங்க?” என,

“காவ்யா” என அழைத்தவரிடம், “நான் வரலைன்னு சொல்லிடு” என்ற படி உள்ளே போக,

தர்ம சங்கடமாய் பார்த்தவரிடம், “அத்தை, அவளை அண்ணாக்கிட்ட பேச சொல்லணும் அத்தை, அவன் ஃபோன் பண்ணினா இவ எடுக்கலையாம்” என,

“ஏன் மா? என்ன பண்ணினா?” என அவர் அருகில் போக,

“தெரியலை அத்தை, பேசச் சொல்லு மட்டும் சொன்னான் அண்ணா” என,

“அச்சோ, என்ன பண்ணினாலோ தெரியலையே, இப்ப தான் வேலைக்கு சேர்ந்து இருபது நாள் ஆகுது. இன்னும் ஒரு மாசச் சம்பளம் கூட வாங்கலை” என்று நொந்தவராக உள்ளே சென்றார்.

ஆம், சேர்ந்து இருபது நாட்கள் தான் ஆகியிருந்தது. அந்த வேலையை ரேணுகாவின் அண்ணன் கிருஷ்ணகுமார் சொல்லி தான் அவளை அமர்த்தி இருந்தனர்.

“அத்தை சொல்றீங்களா?” என ரேணுகாவின் குரல் கேட்க,

திரும்பியவர் “கல்யாணப் பொண்ணு நீ, உள்ள போ, இந்த நேரத்துல இங்க செடிங்க கிட்ட வேண்டாம், அவ சொன்னா கேட்க மாட்டா, விடு!” என சலிப்பாக சொல்லிப் போக,

“கிருஷ்ணா, அவ பேசலை!” என்று தன் அண்ணனிடம் கைபேசியில் தகவல் சொல்லவும்,

“சரி விடு, நான் வந்து பேசிக்கறேன்” என்று சொல்லிவிட்டவன், “அவளுக்கு எடுத்த புடவை அவ கிட்ட கொடுத்தியா?” என

“ம்கூம், நான் மாட்டேன்! திட்டுவா!”  

“ஃபிரண்ட்ஸ்ன்னா கொடுக்கறது இல்லையா? அப்படின்னு சொல்லிக் கொடு!”  

“ம்கூம் கிருஷ்ணா, என்னால முடியாது, நீ எனக்கு ஃபிரண்ட் இல்லை சொல்லுவா, இல்லை சமமா இருக்குறவங்க தான் ஃபிரண்ட்ஸ், நீங்க வேற நாங்க வேற சொல்லுவா!”  

“ப்ச்” என சலித்தவன், அவனும் கைப்பேசியை வைத்தான். “தூக்கிப் போடு அவளை” என்று அவனின் அறிவு அவ்வளவு கோபமாக அவனிடம் சொன்னது. “தூக்கி தான் போடப் போறேன்” என்று சொல்லிக் கொண்டான் தான்.

ஆனால் வீடு வரும் வரை மட்டுமே, வீடு வந்து உணவருந்தி மேலே இருந்த அவனின் ரூம் செல்லவுமே, அம்மாவின் அப்பாவின் கவனத்தை கவராது உள்ளே வந்த ரேணுகா “அண்ணா, ஒரே சண்டை அவ, அவ அம்மாக் கிட்ட” என,

“போய் தொலையறா விடு, உயிரை எடுக்கறா” என முணுமுணுத்துக் கொண்டே படுக்கவும், “கிருஷ்ணா” என்ற அம்மாவின் குரல் கேட்க, எழுந்து வெளியில் வந்தான்.

Advertisement