மக்கள் மெதுவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் . பள்ளி , கல்லூரிகள் இயங்கலாமா ? பெரிய வகுப்புகளுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா? என்ற ஆலோசனைகள் நடந்து கொண்டிருந்தன .
கும்பமேளாக்கள் , தேர்தல்கள் , கூட்டங்கள் , பேரணிகள் என்று சூடுபிடிக்க , மக்களும் , அரசாங்கங்களும் கொரோனா பாதுகாப்புகளை மறந்தே போயினர் . மக்களும் பயமின்றி , கவலையின்றி சுற்றித் திரிந்தனர் .
கொரோனா தன் கோர முகத்தைக் காட்டத் துவங்கியது. முதலில் வட இந்தியாவை தாக்கியது, பல்லாயிரம் உயிர்களை காவு வாங்கியது . மக்கள் மூச்சுக்குத் தவித்த தவிப்பைக் காணும் போது, இப்படிக் கூட நிகழுமா ? என்று மக்கள் பீதியில் , அதிர்ச்சியில் உரைந்தனர் .
பின் மெல்ல மெல்ல கொரோனா தன் கைகளை தமிழகத்திற்குள்ளும் நீட்ட , மக்கள் வீட்டிலேயே முடங்கினர் .
காய்ச்சல் விரைவாகப் பரவத் தொடங்க , ஆம்புலன்ஸ் ஒலித்துக் கொண்டே இருக்க , மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிய , அனுமதிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணற , மரண ஓலங்கள் கேட்க , எங்கும் மரண பயம் ஆட்டிவிக்க , மக்கள் பேயறைந்தது போல் இருந்தனர் .இதுவரை எங்கோ நடந்தது என்று கேள்விபட்ட செய்தி , தங்கள் பக்கத்து வீடுகளில் , நண்பர்களுடையே , சொந்த பந்தங்களிடையே நடந்தது. பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது .
மஞ்சு தன் தோழிகளைச் சந்திக்க முடியாமல் போனாலும் , விஜயன் எப்போதும் போல் இருந்தாலும் , இவர்களிடையே தோன்றிய நெருக்கம் , மஞ்சுவிற்கு ஆறுதலாக இருந்தது .
விவேக் வெளி வேலைகளைப் பார்க்க , இம்முறை சஞ்சுவும் சிறு உதவிகள் செய்ய , மஞ்சு சற்று ஆசுவாசமாகவே இருந்தார் .
அன்று விவேக்கிற்கு ஆன்லைனில் இறுதி ஆண்டு பிராஜக்ட் சப்மிஷன் மற்றும் வைவா இருந்தது . அதற்குத் தீவரமாகத் தயாராகிக் கொண்டிருந்தான்.
எப்போதும் விஜயன் பணம் விசயத்தில் மிகவும் கணக்காக இருப்பவர் . எந்த பேமண்ட் என்றாலும் கடைசித் தேதிக்கு இரண்டு நாள் முன்பு கட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார் . இந்த முறை கொரோனா செய்திகளால் கட்ட வேண்டிய தேதியை மறந்து , கிரடிட் கார்டு பேமண்ட்டைக் கடைசி நாளில் பரபரப்பாகச் செய்து கொண்டிருந்தார் .
அந்தப் பதட்டத்தில் பாஸ்வேர்ட்டைத் தப்பாகப் போட, அக்கௌன்ட் லாக் ஆகியது . பணம் கட்ட முடியவில்லை . மிகவும் டென்ஷன் ஆனார்விவேக்கை அழைத்து வங்கியில் போய் நேராகப் பணம் கட்டிவிடு என்று பணித்தார் .
விவேக் தன் பிராஜக்ட் விவரத்தைச் சொல்லி , என்னால் இன்று எங்கும் அசைய முடியாது , வேண்டுமானால் நாளை கட்டுகிறேன் என்றான் .
அவ்வளவு தான் விஜயனுக்குக் கோபம் தாறுமாறாக வர, “இன்று தான் கடைசி தேதி. கட்டவில்லை என்றால் இருபத்தெழு சதவீதம் வட்டி கட்ட வேண்டும். ஒரு மணி நேர வேலை தானே..” என்று கத்த ,
“இன்று வைவா இருக்கிறது அப்பா. இதை நான் சரியாக முடிக்கவில்லை என்றால் கிடைத்த வேலையே போக வாய்ப்பு உள்ளது…” என்று விளக்கினான் . பின்,“ஒரு மணி நேர வேலை தானே அலுவலகத்தில் நீங்கள் ப்ர்மிஷன் போட்டு முடியுங்கள்” என்று சொல்ல ,
“எனக்குத் தெரியாதா ? எனக்கு இன்று காலை முக்கியமான மீட்டிங் இருக்கிறது, மதியத்திற்கு மேல் வங்கி கிடையாது, இப்படிப் பல விஷயங்களை யோசித்துத் தான் சொல்கிறேன்…” என்று சொன்னவர், பின்பு இவனுக்கெல்லாம் விவரம் கொடுக்க வேண்டுமா? என்ற கடுப்பில் , “எல்லாம் சம்பாதிக்கப் போகிறோம் என்ற திமிர். எனக்கே அறிவுரை வழங்குகிறாய்…” என்று ஆடித் தீர்த்தார் .
கடைசி தேதி வரை கட்டாமல் இருந்தது. உங்கள் தப்பு என்று பேச நினைத்து வாயை திறக்க , பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்த மஞ்சு , வேகமாக வேண்டாம் என்று கண்ஜாடை செய்தார் .
அம்மாவின் பேச்சைக் கேட்டு விவேக் அமைதியாக , அப்போது தான் மஞ்சுவை பார்த்த விஜயன் , “பிள்ளைகளை எனக்கு எதிராகக் கொம்பு சீவி விடுகிறாயா ? ஒரு அவசரத்திற்கு உதவாதப் பிள்ளை இருந்து என்ன பிரயோஜனம்?” என்று வார்த்தையை விட, மஞ்சு வெடவெடத்துப் போனாள்.பின் தாங்க முடியாமல் , “என்ன பேச்சுப் பேசுறீங்க ?” என்று கோபமாகக் கேட்க ,
அவ்வளவு தான் விஜயன் , உச்சாணிக் கொம்பில் ஏறிவிட்டார். “ பிள்ளைகள் பெரிதாகி விட்டார்கள் , மகன் சம்பாதிக்கப் போகிறான் என்ற தைரியத்தில் என்னையே எதிர்த்துப் பேசுகிறாயா ?” என்றபடி எதிர்பாராத தருணத்தில் மஞ்சுவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் .
கன்னத்தில் ஐந்து விரலும் பதிய , மஞ்சு கன்னத்தில் கை வைத்தபடி , கண்களில் நீர் வழிய , அவரையே பார்த்துத் திகைத்து நின்றார் . விவேக் வேகமாக அம்மாவை தன் பக்கம் இழுத்தான். பின் வேகமாகப் பேச வர , மஞ்சு மற்றொரு கையால் அவனைப் பிடித்துத் தடுத்தார் .சஞ்சு இக்காட்சியைக் கண்டு உறைந்தாள் . பயந்து நடுங்கினாள் .
பொண்டாட்டியை கை நீட்டும் ஆசாமி கிடையாது விஜயன் , வார்த்தைகளிலே பெரும்பாலும் கட்டுபாட்டில் வைத்திருப்பார் . மஞ்சுவும் கோபத்தை வளர விடமாட்டார் , பெரும்பாலும் பணிந்து போய் விசயத்தை முடித்து விடுவார்.
பிள்ளைகள் கூட சில நேரம் நீங்கள் பணிந்து போயே அவரை ஏற்றி விட்டீர்கள். நீங்கள் எதிர்த்துப் பேசியிருந்தால் , நாங்கள் இந்த அடக்குமுறைக்கு ஆளாகியிருக்க மாட்டோம் என்று சண்டை பிடிப்பது உண்டு . அதற்கு வெற்றுப் புன்னகையை மட்டுமே பதிலாகத் தருவார் மஞ்சு.
சில நேரம் பிள்ளைகள் மிகவும் புலம்பினால் , “நீங்கள் நன்றாக வளர வேண்டும் என்பது தான் என் குறி. நான் பெண்ணியம் பேசிப் போர் கொடித் தூக்கினால் , இப்போதிருக்கும் இந்தக் கொஞ்ச நஞ்ச அமைதியும் இருக்காது . உங்களுக்கு ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு நல்ல சூழ்நிலையை உருவாக்க முயலுகிறேன்…” என்று சமாதானம் சொல்வார்.
மேலும்,“எனக்கு வேண்டியது ஒன்றே ஒன்று தான். நீங்கள் நல்லவர்களாக , வல்லவர்களாக வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் . முக்கியமாக என் வாழ்க்கையில் இருந்து பாடம் கற்று , உங்கள் துணையை மரியாதையோடு , நட்போடு நடத்த வேண்டும் . மிகவும் முக்கியமாக சஞ்சு நல்ல நிலைக்கு வரவேண்டும். வேலைக்குப் போய் தன் காலில் சுயமரியாதையோடும் , கௌரவத்தோடும் இருக்க வேண்டும்…” என்று தன் உள்ளக்கிடக்கைக் கொட்டியிருந்தார் .
மீண்டும் அம்மா சொன்னது பிள்ளைகள் மனதில் ஓட , ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர் .
பண டென்ஷன் , விவேக் எதிர்த்து பேசியது மற்றும் மஞ்சுவின் கத்தல் என்று அனைத்தும் சேர்ந்து அவரை மிருகமாக்கியிருந்தது . நிதானத்தை முற்றிலும் இழந்திருந்தார் . கோபத்தில் மேல் மூச்சு வாங்க நின்ற விஜயன், கண்ணில் சஞ்சு பட , “நீ போய் பணத்தை வங்கியில் கட்டி வா…” என்றார் .
“அப்பா…” என்று தயங்க ,
“அதான் தேவையில்லாத பல காரியங்களை செய்கிறாயே . அப்புறம் என்ன?” என்று அவளை குத்திக் காட்டி , “பணத்தைக் கட்டி வா” என்றார் .
பின் விறுவிறுவென உள்ளே சென்று பணத்தையும் , கணக்கு விபரத்தையும் கையில் கொடுத்து , “பணத்தைக் கட்டி விட்டு , செலானை கொண்டு வந்து தா , பெரிய தொகை கவனம்…” என்றவாறு தன் அறைக்குள் செல்லும் முன் மஞ்சுவை பார்த்து , “அவள் சின்னப்பிள்ளை என்று நினைத்தால் , யாராவது போங்கள். எனக்கு வேலை முடிந்திருக்க வேண்டும்..” என்று கதவை ஓங்கிச் சாத்தினார் .
வீடு நிசப்தத்தில் ஆழ்ந்தது . சஞ்சு ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டாள் . விவேக்கும் அம்மாவை ஆறுதலாக அணைத்துக் கொண்டான்
பின் சஞ்சு , “அம்மா கவலைப்படாதீர்கள் , நான் போய் கட்டி வருகிறேன். அண்ணாவிடம் விவரம் கேட்டுக் கொள்கிறேன்…” என்று சமாதானப்படுத்தினாள் .
“ஆமாம் அம்மா , நான் விவரம் சொல்லி விடுகிறேன்” என்றான் விவேக்
“அப்படியும் ஏதாவது சந்தேகம் என்றால் அங்கேயும் கேட்டுக் கொள்கிறேன் இல்லையென்றால் வீடியோ கால் போடுகிறேன்” என்று தைரியமூட்டினாள் சஞ்சு .
மஞ்சுவோ பதட்டத்திலே இருந்தார் , “சரி , நான் கிளம்புகிறேன்…” என்று நகர , அவள் கையைப் பிடித்தவர், “நான் கட்டுகிறேன்” என்று பணத்தை வாங்கினார் .
“வேண்டாம் அம்மா , சஞ்சு சரியாகச் செய்வாள் , நீங்கள் வெளியே போக வேண்டாம் , தேவையில்லாத ரிஸ்க்…” என்று தடுத்தான் .
மஞ்சு பிடிவாதமாக , “இல்லைடா ராஜா , நானே போகிறேன்.”
சஞ்சு இடைபுகுந்து , “நான் சரியாகச் செய்வேன் அம்மா” என்று உத்தரவாதம் தர ,மஞ்சு பிடிவாதமாக மறுத்தார் .
“வேண்டாம் அம்மா…” என்று மீண்டும் சொல்ல ,
“இல்லைடா ராஜா , இப்போது அப்பா இருக்கும் மனநிலையில் , ஏதேனும் தவறு நடந்தால் வீடு தாங்காது . சஞ்சு துவண்டு விடுவாள் . ஏற்கனவே அவள் படும்பாடு போதும்…” என்றார் வேகமாக .
பின் மடமடவென சஞ்சுவிடம்,“பருப்பை வேக வைத்து விடு , பொரியலுக்குக் காய்கறிகளை நறுக்கி வை…” என்று அடுத்து ஆக வேண்டிய காரியங்களைச் சொன்னார் .
“எதையும் யோசிக்காத , நீ போய் படி விவேக் , நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்“ என்றார் மஞ்சு .
அம்மா முடிவில் இருந்து மாறமாட்டார் என்பதை உணர்ந்தவன் , “அம்மா டபுள் மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள்…..” என்று அறிவுறுத்தி விட்டுப் படிக்கச் சென்றான் .
மஞ்சு வங்கிச் செல்ல , அங்கு எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக இருக்க , வேலை முடிய , இரண்டு மணி நேரம் ஆனது . பின் அவசர அவசரமாக வீடு வந்தவர் , மதிய உணவிற்கான வேலையில் புகுந்தார் .
சஞ்சுவிடம் செலானை கொடுத்து கணவனிடம் கொடுக்கச் சொன்னார் . ஏற்கனவே ஒரு மணி நேரத்திற்கு முன் வெளியே வந்தவர் , மஞ்சு தான் சென்றிருக்கிறார் என்பதை அறிந்து, ஒரு வெற்றிச் சிரிப்பு உதட்டில் தவழ , தன் வேலையை தொடர்ந்தார்.
என்ன தான் சஞ்சுவிடம் வேலையைக் கொடுத்திருந்தாலும் , உள்ளூர அவள் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை இருந்தது. அதற்குத்தான் சின்ன பிள்ளை என்ற வார்த்தையைப் போட்டார் . அது சரியாக வேலை செய்ததை நினைத்து சந்தோஷமானார் . மஞ்சு வந்து கொடுக்கவில்லை என்பது உறுத்தினாலும் , ஏங்கே போகப் போகிறாள் , பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக எண்ணினார் .
மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் வரவில்லை . காலை வேலையை முடித்து வெளியே வந்தவர் , நன்றாக மொக்கி விட்டு உள்ளே சென்றார் .