சஞ்சு கல்லூரிக்கும் தொடர்ந்து போக ஆரம்பித்தாள். வாழ்க்கை சீராக ஓடியது , இந்த ஒன்றை வருடத்தில் , விவேக் சஞ்சுவைத் தொடர்ந்து கவுன்சிலிங் அழைத்துச் சென்றான் . மெல்ல மெல்ல தன் பயங்களை , தடுமாற்றங்களை , தயக்கங்களைத் திறந்தாள் . சஞ்சு மனதளவில் நன்றாகத் தேறி வந்தாள் .
ரமேஷ் மற்றும் ராதா , கீத்துவுடன் பேசுவது போல் சஞ்சுவுடன் நிறைய பேசினார்கள் . ராதா தன் சிறப்புப் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக எளிதான ஒவியப் பயிற்சியை சஞ்சு மூலம் நடத்தினார் . கண்ணன் நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொன்னார் . பின் அதைப் பற்றிய உரையாடல்கள் நடத்தினார் .
வார இறுதியில் டிரக்கிங் , ஆமை முட்டை சேகரித்ததல், பழமையான கோவில்களில் உளவாரப்பணி என்று மாதம் ஒரு முறை ஏதாவது ஓரு வித்தியாசமான அனுபவத்திற்கு அழைத்து சென்றான் ரவி . இதில் இளைஞர் பட்டாளம் அனைவரும் கலந்து கொண்டனர் .
ஆக மொத்தம் சஞ்சுவிற்கு எந்த எதிர்மறையான எண்ணங்களும் வராமல் , வாழ்க்கையைப் புதிய கோணத்தில் பார்க்கக் கற்றுக் கொடுத்தனர் .
விவேக்கை தனியாகத் தத்தளிக்க விடாமல் கூடவே உறுதுணையாக நின்றனர் . மொத்தத்தில் ஒரே குடும்பமாகினர் . ஊர் கூடித் தேர் இழுக்க , சஞ்சனா தன் தடைகளைத் தாண்டினாள். மொத்தத்தில் அனைவரும் கூடி, அவள் வாழ்வை செம்மைப்படுத்தினர் .
மெல்ல மெல்ல தன் தடைகளைக் கலைந்து தன்னம்பிக்கை மிக்க பெண்ணாக மிளிர தொடங்கினாள் . கூட்டுப் புழுவாக இருந்தவள் . அழகிய பட்டாம்பூச்சியாகச் சிறகடிக்கத் தொடங்கினாள் . அவளது உலகம் பெரிதாகியது .
ஆனால் விஜயன் மற்றும் பிள்ளைகள் இடையே ஆன உறவில் எந்த முன்னேற்றமும் இல்லை .விஜயனும் தன்னுடைய வீம்பில் இருந்து இறங்கவே இல்லை . அவர் எப்படி கடமையாகப் பிள்ளைகளை வளர்த்தாரோ… அதே மாதிரி இவர்களும் கடமையாகவே அப்பாவை கவனித்தனர் . ஏதேனும் உதவி தேவைபட்டால் செய்தனர் .
ஒரு முறை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . விவேக் துணையாக இருந்து பார்த்துக் கொண்டான் .சஞ்சு சாப்பாடு செய்து கொடுத்தாளே தவிர போயெல்லாம் பார்க்கவில்லை .
“பார்க்க வருகிறாயா?” என்று விவேக் கேட்க முனைய ,
“அவர் கடமையை அவர் செய்தார் , என் கடமையை நான் செய்து விட்டேன்” என்று முடித்துக் கொண்டாள் . விவேக் தங்கையின் நிமிர்வு கண்டு அசந்து போனான் . அன்று இரவு கீத்துவிடம் சிலாகித்துத் தள்ளினான் .
இத்தனை பிரச்சனையிலும் பிள்ளைகள் தனக்குச் செய்வதை உணரவில்லை . கட்டாயமாக செய்தே ஆக வேண்டும் என்ற தோணியிலே நடந்து கொண்டார் . சஞ்சு வராததைக் குற்றஞ்சாட்டினார் . அவள் மீதான கோபத்தையும் , வன்மத்தையும் வளர்த்துக் கொண்டார்.
சஞ்சுவும் கல்லூரியில் முதல் இடம் பிடித்து படிப்பை முடித்தாள் . நிறைய வாய்ப்புகள் வந்தன . எதைத் தேர்ந்தெடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்
சஞ்சு முதல் மாணவியாகத் தேற , ஆளுநரிடம் பட்டமளிப்பு விழாவில் பரிசு பெறும் வாய்ப்பு வர , அனைவரும் கட்டாயமாக வர வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டாள் .
ராஜி கூட அப்பாவிற்குத் தெரிவிப்போம் என்பதற்கு மறுத்து விட்டாள் . என் வாழ்க்கையில் பங்கேற்காதவரோடு , என் படிப்பை அங்கிகரிகாதவரோடு வெற்றியைக் கொண்டாட விருப்பமில்லை ஆன்ட்டி என்று மறுத்து விட்டாள் .
அனைவரும் விவேக்கைப் பார்க்க , தங்கையின் முடிவு சரி என்று ஆமோதிப்பது போல சிரித்தபடி நின்றான் .
தனியாக இருக்கும் பொழுது விவேக்கிடம் , “நீயும் சரி என்பது போல் அமைதியாக இருந்து விட்டாயே ? சொல்ல வேண்டாமா?” என்று ராதா கேட்க ,
“சஞ்சு சொன்னது சரி தானே ஆன்ட்டி . இப் படிப்பை முடிப்பதற்குள் அவள் பட்ட கஷ்டம்… இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது. நீங்கள் இல்லை என்றால் எங்கள் நிலைமை… நீங்கள் எல்லோரும் தானே கூட இருந்து அரவணைத்தீர்கள் . உங்கள் அனைவரின் பலனை எதிர்பார்க்காத எல்லையில்லாத அன்பினால் தானே இன்று சஞ்சு இந்த உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறாள் . அவள் வளர்ச்சியில் சின்ன துரும்பைக்குக் கூட எடுத்துப் போடாதவரை அழைப்பதில் எனக்கும் விருப்பமில்லை” என்றான் ஆணித்தரமாக .
மேலும்,“உங்கள் அனைவரின் அன்புக்கும் எங்கள் சின்ன மரியாதை…” என்று முடித்தான் .
“நம்ம சஞ்சுவா இது? இப்படித் தீர்மானமாக முடிவெடுப்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாகவும் , அதே நேரம் சந்தோஷமாக இருக்கிறது . எப்படி மாறிவிட்டாள்…?”என்று ராஜி சிலாகித்தார்
பட்டமளிப்பு விழாவிற்குத் தன்னுடைய குடும்பமாக மாறிய ராஜி மற்றும் ராதா ஆன்ட்டி குடும்பத்துடன் சென்றாள் . தன் பேராசிரியர்களிடம் , தன் தோழிகளிடம், தன் குடும்பம் என்று பெருமையாக அறிமுகப்படுத்தினாள் .
அவள் வெற்றியில் அனைவரும் பூரித்தனர் . அவளை வாழ்த்திக் கொண்டாடினர் .தன் அன்னையே வந்து வாழ்த்துவதைப் போல் உணர்ந்தாள் .விவேக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி வைத்துக் கொண்டாடினான் .
அதேவேளை கீத்துவும் படிப்பை முடிக்க, அவள் திறமைக்கு நல்ல சம்பளத்தில் , நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தது . அனைவரும் மகிழ்ந்தனர் .கீத்து சின்ன பரிசோடு தன்னை வழி நடத்திய குருவிற்கு நன்றி தெரிவித்தாள் . ரமேஷும் பார்ட்டி கொடுக்க , மொத்தத்தில் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
“ஆமாம் அண்ணா , பிரபல சினிமா கலை இயக்குனரிடம் சேர வாய்ப்பு வந்துள்ளது…” என்றாள் சந்தோஷமாக.
“ஏன் இந்தத் துறை சஞ்சு ?” என்று யோசனையாகக் கேட்க ,
“அலுவலக வேலை எனக்கு செட் ஆகும் என்று தோன்றவில்லை அண்ணா . புதுப்புது முயற்சிகள் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது . அதற்கு இந்தத் துறை தான் சரி . மேலும் என்னுடைய வேலை சவால் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்…”
“சந்தோஷம் டா , இந்தத் துறையில் இருக்கும் சாதக பாதகங்களை யோசித்துக் கொண்டாயா ? இந்த வேலை, அலுவலகம் போய் வருவது போல் கிடையாது . பல இடங்களுக்குப் பயணப்பட வேண்டும் . கிடைத்த இடத்தில் தங்கிக் கொள்ள வேண்டும் . வசதியெல்லாம் எதிர் பார்க்க முடியாது . நேரம் காலம் பார்க்காது உழைக்க வேண்டும் . முக்கியமாக , இது ஆண் ஆதிக்கம் மிகுந்த துறை , மேலும் பாலியல் அத்துமீறல்கள் அங்கு சகஜம்…” என்று நிறுத்தினான் விவேக் .
“எந்த துறையில் இல்லை அண்ணா ?”
“எல்லா இடத்திலும் இருக்குடா , ஆனால் இங்கே அதற்கான சாத்திய கூறுகள் அதிகம் . மேலும் நீ ஏற்கனவே காயப்பட்டு இருக்கிறாய்..” என்று இழுத்தான்.
“உன் கவலை புரியுது அண்ணா , நான் இப்ப பழைய சஞ்சு இல்லை. நான் தெளிவாக உள்ளேன் . எதையும் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கையும் , தைரியமும் உள்ளது.”
“நீ நினைக்கிற மாதிரி இது எளிதான வேலை இல்லை சஞ்சும்மா . மனோபலம் மட்டுமில்லை உடல் பலமும் தேவை . வேலைக்குச் சேர்ந்த தொடக்கத்தில் , எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியதிருக்கும்…” என்றான் கவலையோடு .
“நிச்சயமாக அண்ணா , இதையெல்லாம் யோசித்துத் தான் கடந்த ஒரு வருடமாக உடற்பயிற்சி மற்றும் தற்காப்பு கலையிலும் என்னை இணைத்துக் கொண்டேன்.
தங்கை தீர்க்கமாக யோசித்து இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் , அதற்கு மேல் எதுவும் வாதிடாமல் , “நீ இத்துறையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..” என்று மனமாற வாழ்த்தினான் .
“நன்றி அண்ணா…” என்று கட்டிக் கொண்டாள் .
“நீ இவ்வளவு தெளிவாக இருக்கும் போது , எனக்குப் பிரச்சனையில்லை சஞ்சும்மா . ஆனால் ஒரே ஒரு நிபந்தனை தான். இத் தொழில் பிடிக்கவில்லை என்றோ வேண்டாம் என்றோ தோன்றினால் , உடனே வேலையை விட்டு விடு . இதில் தொடர வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் கிடையாது” என்றான் ஆணித்தரமாக .
“கட்டாயமாக அண்ணா , நானும் அதே முடிவில் தான் இருக்கிறேன் , இந்த வேலையில் கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லையென்றால் நாம் யாருக்கும் , எதற்கும் வளைந்து கொடுக்கத் தேவையில்லை” என்றாள் தெளிவாக .
பின், “பயப்படாதே அண்ணா , நான் தீர்க்கமாக எல்லா விசயங்களையும் அலசித் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்றாள் தீர்மானமாக
“என்னால் இந்த ஆண் ஆதிக்கத் துறையில் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன் . உங்கள் அனைவரின் துணையோடு சிறுகுகளை விரித்து விட்டேன் அண்ணா , இனி எனக்கு வானம் வசப்படும்…” என்றாள் நம்பிக்கையாக. விவேக் அன்புடன் உச்சி முகர்ந்தான் .
விசயத்தைக் கேள்விப்பட்ட அனைவரும் திகைத்தனர். பின் அவள் முடிவில் உறுதியாக இருப்பதை அறிந்து , வெற்றி பெற வாழ்த்தினார்கள் .
“நீ படித்து , உன் காலில் சுயகௌரவத்துடன் நிற்க வேண்டும் என்பது தான் ஆன்ட்டியின் ஆசை . ஆனால் ஏன் இந்தக் கடினமான துறை…?”என்று கீத்து தனியாக இருக்கும் போது விவரம் கேட்க,
“முதலில் இந்தத் துறை எனக்குப் பிடித்திருக்கிறது . கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் , இந்த ஆண் ஆதிக்கத் துறையில் என்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று உள்ளுணர்வு சொல்கிறது.”
“புரியவில்லை சஞ்சு…?”
“இத்துறையில் கால் பதிப்பதன் மூலமாக ஆண் ஆதிக்கத்தால் அடிப்பட்ட என் ஈகோவை சமாதனப்படுத்துகிறேன் என்று நினைக்கிறேன்…”
“ரொம்ப மாறிவிட்டாய் சஞ்சு , ஐ அட்மையர் யூ…!” என்று கட்டிக்கொண்டாள்.
“இந்த மாற்றத்திற்கு , நீங்கள் எல்லோரும் தான் காரணம். நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை , இந்த உதவிக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்…” என்று நெகிழ்ந்தாள் .
“நாங்கள் வெறும் தூண்டு கோல் தான், மற்றபடி எல்லாம் உன் முயற்சிதான்…” என்று தோள் தட்டினாள் கீத்து.
விசயம் கேள்விபட்ட விஜயன் , மானத்தை வாங்கவே இப்படிச் செய்கிறாள் என்று தாம்தூம் என்று குதித்தார் . “எந்த நல்ல குடும்பத்துப் பெண்ணாவது இப்படிச் செய்வாளா?” என்று கண்டபடி விவேக்கிடம் வசை பாடினார் .
நடைபயிற்சியில் சஞ்சுவைப் பிடித்து , “உன் முடிவை மாற்றிக் கொள்.” என்று கட்டளையிட ,
“என் முடிவைப் பற்றி பேச நீங்கள் யார்? என் வாழ்க்கையில் உங்கள் பங்கு என்ன?” என்று நேராக அவரைப் பார்த்து கேட்க ,
சஞ்சுவின் இந்த மாற்றத்தைக் கண்டு அதிர்ந்து போனார் . தன்னைப் பார்த்தால் பயந்து நடுங்கும் சஞ்சுவா இது? என்று அதிர்ச்சி அடைந்தார் .“பெற்ற அப்பன் என்ற மரியாதை இல்லாமல் என்ன வாய் நீளுது… ?” என்று விஜயன் கடுமையாகப் பேச ,
“தேவையில்லாமல் தலையிடாதீர்கள். என் வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்வேன்” என்று கூறி விட்டு நகர்ந்தாள் .
தன்னை அவமானப்படுத்தி விட்டால் என்று பெருஞ் சினம் கொண்ட விஜயன் , “என் பங்கு என்னவா? அதை நிருபிக்கும் காலம் வரும் , அப்போது இந்த விஜயன் யார் என்று புரிந்து கொள்வாய்….” என்று வன்மத்துடன் நினைத்தார்.