கதைத்திரி-26

அத்தியாயம் 68

நாட்கள் மெல்ல நகர , சஞ்சு தைரியம் பெற்றவளாக தனியாக நடைபயிற்சிப் போக ஆரம்பித்தாள் . நான்கு நாட்கள் சென்றிருக்க , தற்செயலாக அன்று நடைபயிற்சியில் விஜயனை  நேருக்நேர் சந்திக்க , மெதுவாகக் தலையைக் குனிந்தபடி கடக்க முயன்றாள் .

சஞ்சு…” என்று விஜயன்அழைக்க , நின்றாள் .

 “எப்படி இருக்கிறாய்?” 

“நன்றாக இருக்கிறேன் அப்பா “என்றாள் மெதுவாக.

“என்ன நன்றாக இருக்கிறாய்? “என்றார் கோபமாக.

அவரின் கோபகக் குரலில் மனம் பதற தொடங்க , தன்னைச் சமன்படுத்திக் கொண்டு , ஏதோ பேச முயல, 

“பேசாதே, நாங்கள் நன்றாக வாழ்ந்து விடுவோம், கிழித்து விடுவோம் என்று வீரவசனம்  பேசினானே உன் அண்ணன் , இப்போது மூஞ்சியை எங்கே போய் வைத்துக் கொள்வான்..?” என்றார் எகத்தாளமாக .

சஞ்சு புரியாமல் , அந்தப் புகைப்பட பிரச்சனை முடிந்து விட்டது அப்பா…”

அப்புறம், “ஏன் நீ இன்னும் கல்லூரிக்குப் போகவில்லை…?” 

அப்பா சொல்வது புரிய , அப்படியே குன்றினாள் . 

மேலும் அவர் , நீயும் உருப்படமாட்டாய் , அவனையும் உருப்பட விடமாட்டாய் , உனக்காக நெதர்லாந்து போய் வந்ததால் கிடைத்த பதவி உயர்வையும் மறுத்து விட்டான் என்றார் கடுப்பாக .

இவ்விசயத்தைக் கேட்டு அதிர்ந்த சஞ்சு , “எனக்குத் தெரியாது அப்பா “என்று வருந்த ,

நீ ஏன் தெரிந்து வைத்துக் கொள்ளப் போகிறாய்? உனக்கு எது வசதியோ , அதைத்தானே பிடித்துக் கொள்வாய்..” என்று கடுமையாகக் குற்றஞ்சாட்ட ,

“அப்படியில்லை அப்பா…”என்று மறுத்து பேச வர, 

உன் அண்ணனுக்கு  நல்லது செய்ய நினைத்தால் , பேசமால் வீட்டுக்கு வந்து வீட்டைப் பார்த்துக் கொள் . பெற்ற கடமைக்கு சோறு போடுகிறேன் . விவேக் அவன் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளட்டும் . இரண்டு மூன்று வருடம் போகட்டும் ,  இந்த கண்டறாவியெல்லாம் ஓயட்டும். ஊர் பக்கம் பார்த்து உன்னைக் கல்யாணம் செய்து வைத்து விடுகிறேன் என்றார் அழுத்தமாக .

சஞ்சு பதைபதைக்க,

“அவனவாவது நிம்மதியாக இருக்கட்டும், பொட்டியைத் தூக்கிக் கொண்டு வா…” என்றபடி நகர்நதார் .

சஞ்சு மனம் அதிர , கண்கலங்க அப்படியே அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள் . மூளை எதையும் யோசிக்க மறுத்து ,  நேரம் போவது தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் .

அன்று விவேக் அலுவலகத்திற்கு சென்றிருக்க , சஞ்சுவைத் தேடிச் சென்ற கீத்து , வீடு பூட்டியிருப்பதைக்  கண்டு , அவளை தேடிக் கீழே வந்தாள் . பூங்காவில் சஞ்சு இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்தாள் . 

சஞ்சு..” என்று உலுக்க , கீத்துவைக் கண்டவுடன் , ஓவென என்று அழுதவண்ணம் , அவளின் தோளில் சாய்ந்தாள் .

பூங்காவில் இருப்பவர்கள் கவனிக்க , “வா  சஞ்சு, வீட்டுக்குப் போய் பேசலாம்…” என்று கீத்து மெதுவாகச் சஞ்சுவைக் கிளப்பினாள் .

சஞ்சுவும் நடக்க , வீட்டிற்குள் வந்தவள் , சத்தமாக கத்தி அழ , கீத்து செய்வதறியாது திகைத்தாள் . ஏதேதோ பேசி சமாதானப்படுத்த முயல , எதையும் கவனிக்கும் நிலையில் சஞ்சு இல்லாது, கண்ணீர் சொறிந்து கொண்டே இருந்தாள் .

  சஞ்சு, இப்படியே அழுது கொண்டிருந்தால் , நான் குருவை அழைக்கிறேன்…” என்று கைப்பேசியை எடுக்க , 

சஞ்சு வேகமாக, வேண்டாம்….” என்று பிடுங்கினாள் .

அப்ப முதலில் அழுகையை நிறுத்து” என்றவள் , பின் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு , “என்ன நடந்தது என்று சொல்? “ என்றாள் கீத்து .

சஞ்சு அத்தனையும் விளக்க ,

சரி, அப்ப நீ என்ன செய்யலாம் என்று யோசித்து இருக்கிறாய்? 

அண்ணனுக்கு என்னால் கஷ்டம்…” என்று தேம்ப , 

ஆமாம் கஷ்டம் தான்…” என்றாள் கீத்து கோபமாக ,

தன்னைச் சமாதானப்படுத்தாமல் , குற்றஞ்சாட்டும் தன் தோழியைத் திகைத்துப் பார்த்து  , என்ன சொல்கிறாய் கீத்து? என்று அதிர்ச்சியுடன் கேட்க ,

அந்த அதிர்ச்சியை பிடித்துக் கொண்ட கீத்து , உங்க அப்பா சொல்லும் படியாகத் தானே , நீயும் இருக்கிறாய்…” என்றாள் வேகமாக .

சஞ்சு கண்ணீரோடு கீத்துவை பார்க்க , உன்னைக் கல்லூரிக்குப் போவதைப் பற்றி யோசி என்றேனே , என்ன முடிவு செய்திருக்கிறாய் ?“

சஞ்சு அமைதியாகப் பார்க்க  ,

இப்போது தான் பிரச்சனை முடிந்து விட்டதே , அப்புறம் என்ன இன்னும் தயக்கம் ?

அனைவரையும் சந்திக்க பயமாக இருக்கிறது கீத்து…என்று கண்ணில் நீர் கோர்க்க சொல்ல ,

இப்படிப் பயந்து கொண்டே இரு…” என்றாள் கடுப்பாக .

“கீத்து “என்று சஞ்சு பாவமாய் பார்க்க,

தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு , இந்தப் படிப்பு  உன் ஆசை , உன் கனவு தானே? ஒரு பிரச்சனை வந்தால் அதைக் கைவிட்டு விடுவாயா?”

சஞ்சு அமைதியாக இருக்க,.

வேறு உதாரணத்தைத் தேட வேண்டாம். உன் அம்மாவே பெரிய  போராளி தான் . குடும்ப வன்முறையில் இருந்து உங்களைத் தற்காத்து , முடிந்தவரை ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கி , நீங்கள் ஆசைப்பட்ட படிப்பு வரை போராடி பெற்றுத் தந்திருக்கிறார்கள்…” என்றாள் பொறுமையாக.

சஞ்சுவின் அழுகை குறைய,

மஞ்சு ஆன்ட்டியை யோசித்து பார். அவங்களுக்கு இந்த இருபது வருடத்தில் எத்தனை அவமானங்கள் , அசிங்கங்கள் , போராட்டங்கள்…., உங்களுக்குக்காக அத்தனையும் தாண்டி வரவில்லையா ? உன்னை மாதிரி முடங்கியிருந்தால் , அழுது கரைந்து கொண்டேயிருந்தால் , நீங்கள் எப்படி நல்லபடியாக வளர்ந்திருக்க முடியும் ?

“கீத்து…”

ஆன்ட்டியோட பெயரை காப்பாற்ற வேண்டாமா? அவர்கள் ஆசைப்பட்ட மாதிரி , சுயசிந்தனை , சுயமரியாதை மற்றும் பொருளாதார சுதந்திரத்தோடு , நீ உன் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டாமா?

“கீத்து…”

மேலும், நீ முடங்கிப் போனால் , உனக்காக நிற்கும் எங்கள் நிலையை நினைத்துப் பார். ச்ச…., எங்களை கூட விடு. உன் அப்பாவை எதிர்த்து , உனக்கு நல்வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்து விட வேண்டும் என்று போராடும் , உன் அண்ணனை நினைத்து பார்..” என்று சொல்லும் போதே கீத்துவின் குரல் தளுதளுத்தது . அவர் எனக்காக நிற்கவில்லை என்று பல முறை புலம்பியிருக்கிறாய் , இன்று உனக்காகப் பெரிய முடிவுகளை எடுத்துத் துணை  நிற்கிறார் .நீ அவருக்கு என்ன செய்யப் போகிறாய் ? அவனமானத்தைத் தான் தேடித் தரப்போகிறாயா? இல்லை  நீ ஜெயித்து அவரையும் ஜெயிக்க வைக்கப் போகிறாயா?, நீயே யோசி….”

சஞ்சு அனைத்தையும் அதிர்வுடன் கேட்க , 

ஒன்றே ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன் சஞ்சு, உன் அண்ணன் வயதுக்கு மீறிய பாரத்தைச் சுமக்கிறார் . பகிர்ந்து கொள்ளா விட்டாலும் பொதியை ஏற்றி விடாதே பிளீஸ்….  என்றாள் வேதனையுடன்.

சஞ்சு முகம் பொத்தி அழ , 

முதலில் அழுகையை நிறுத்து . அழுவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை , அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசி…” என்றாள் கோபமாக .

அப்புறம் வருகிறேன்…” என்று அறையை விட்டு வெளியேறினாள் .

ஹாலில் விவேக் இருப்பதைக் கண்டவள் , அப்புறம் போன் செய்கிறேன் என்று சைகை காட்டிவிட்டு ,  கண்ணைத் துடைத்தபடி வெளியேறினாள் .

விவேக்கும் தங்கையைத் தொந்தரவு பண்ணாமல் இரவு உணவிற்கான வேலைகளைத் தொடங்கினான் .

அத்தியாயம் 69

இரவு உணவைத் தயாரித்து விட்டு , தங்கையை அழைத்தான் . 

இல்லை அண்ணா , எனக்கு வேண்டாம்…” 

சாப்பாட்டில் கோபத்தை , வருத்தத்தைக் காண்பிக்காதே , சாப்பிட்டு யோசி , அப்போது தான் தெளிவு கிடைக்கும் என்று சொல்ல , சஞ்சுவும் அமைதியாக சாப்பிட வந்தாள் .

சாப்பிடும் போது, “அண்ணா…” என்று ஆரம்பிக்க , சாப்பிட்டுப் பேசலாம்..” என்று முடித்தான் .

சாப்பிட்ட பின் இருவரும் ஷோபாவில் அமர , ஏன் அண்ணா , பிரோமோஷன் வேண்டாம் என்றாய்?

உனக்கு எப்படித் தெரியும்இன்றைய நடையில் அப்பாவைப் பார்த்தேன்….” சஞ்சு?

ஒ…! அதான் இத்தனை அழுகையா? என்ன சொன்னார்?

அப்பா பேசியதைச் சொன்னாள் , பின், ஏன் அண்ணா வேண்டாம் என்றாய் ? என்று பிடித்த பிடியிலே நின்றாள்.

இல்லைடா சஞ்சு , திரும்ப நெதர்லாந்து போக வேண்டியது வரும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் அது சரிவராது டா….”

உன் வளர்ச்சியைத் தடுக்கிறேனா அண்ணா?

இல்லைம்மா , நான் நெதர்லாந்து போவதைத் தான் தவிர்த்து விட்டேனே தவிர , இங்கே பதவி உயர்வை ஏற்றுக் கொண்டேன் , அங்கே போயிருந்தால் சம்பளம் கூட , இங்கே அது மட்டும் தான் குறை…” 

ஸாரி அண்ணா , என்னால் தானே…”  என்று மன்னிப்பு வேண்ட , 

அப்படியெல்லாம் யோசிக்காதே , வெறும் பணம் டா , எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம்…”

இன்னும் சஞ்சு முகம் தெளியாததைக் கண்டு , 

நமக்குப் பணத்தைச் செலவளிக்கக் கூடத் தெரியாது…” என்று சிரித்தான் . 

பின், கீத்து சொன்னதையெல்லாம் மனதில் போட்டுக் குழப்பிக்காதே , அவள் ஏதோ கோபத்தில் பேசிவிட்டுப் போகிறாள். டேக் யுர் ஓன் டைம் , உனக்கு எப்போது கம்ஃபர்டபிள் ஆக இருக்கிறதோ அப்போது போகலாம். எதையும் யோசிக்காதே , நிம்மதியாகத் தூங்கு…” என்று தங்கையை தூங்க அனுப்பினான் 

சிறிது நேரம் கழித்து கீத்துவை அழைத்தான் , 

என்ன தங்கையை கொஞ்சி முடித்தாகிவிட்டதா? என்று கடுப்படித்தாள் .

விவேக் சிரித்தபடி , ஏன் கீத்து இவ்வளவு கோபம் ?

நீங்களும் என் நண்பர் தானே குரு , உங்கள் நலத்தையும் நான் பார்க்க வேண்டும் தானே , ஒரு பக்கம் மட்டுமே சாய்ந்து இருந்தால் எப்படிச் சரியாகும்..?”

கீத்துவின் வார்த்தைகளை கேட்டவுடன் மனம் கனிந்தது. தனக்காக ஒரு இதயம் துடிக்கிறது என்பது தனி பலத்தைத் தந்தது .

அம்மாவிற்குப் பின், நீதான் என் நலத்தை யோசிக்கிறாய், தாங்ஸ் கீத்து…” என்றான் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன்.

சரி, சரி விடுங்க , என்ன செய்கிறாள்.உங்கள் தொங்கை? என்றாள் எடக்காக ,

இன்னும் கோபம் குறையவில்லையா?

கோபம் எல்லாம் இல்லை , புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே என்ற ஆதங்கம் தான்…”

வருத்தப்படாதே கீத்து , முன்பு இருந்ததற்கு சஞ்சுவிடம் இப்போது பெரிய முன்னேற்றம் இருக்கிறது . எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சீக்கிரம் சரியாக விடுவாள் . ரொம்ப அழுத்தம் கொடுக்க வேண்டாம்…” என்று அண்ணனாக வக்காலத்து வாங்கினான் .

நீங்க கொஞ்சுங்க. நான் கொஞ்சம் பளிச்சென்று உண்மையை பேசுகிறேன் . அப்போது தான் அவளுக்கு நிதர்சனம் புரியும் . அப்போது தான் அவள் அடுத்த கட்ட நகர்வை சிந்திப்பாள் . மற்றவர்கள் பேசினால் தப்பாக எடுக்க வாய்ப்பு உள்ளது. நான் என்றால் அப்படி எதையும் யோசிக்க மாட்டாள்..” என்று நீண்ட விளக்கத்தைக் கொடுத்தாள் .

சூப்பர் கீத்து , எப்படி ? என்று ஆச்சரியப்பட , 

நான் ஒன்றும் தனியாக  சிந்திக்க வில்லை , வீட்டில் பேசினேன் , எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு தான் 

எத்தனை தடவை தான் உங்களுக்கு நன்றி சொல்வதென்றே தெரியவில்லை கீத்து. இப்படி எங்களுக்காக யோசிக்க ஒரு குடும்பம் கிடைத்ததே எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம்..” என்று உணர்ச்சி வசப்பட்டான். பின், உனக்கு ஏதாவது கேள்?” 

வார்த்தையை விடாதீர்கள் குரு , அப்புறம் உங்கள் பாக்கெட் பழுத்து விடும்…” என்று கலகலத்தாள் .

எதுவென்றாலும் கேள் , நிச்சயமாகச் செய்கிறேன் என்றான் உறுதியாக .

சரி , பெரிய பட்ஜெட்டாக யோசித்துச் சொல்கிறேன்…”  என்று  போனை வைத்தாள் .

அடுத்து வந்த நாட்களில் , கீத்து சற்று கோபமாக இருப்பது போல் காட்டிக் கொண்டாள் . சஞ்சு பேச வந்தால் நிறைய வேலை இருப்பது போல் நகர்ந்தாள் .கீத்து இடத்திற்கு ராதா நகர்ந்து , சஞ்வோடு பேசிக் கொண்டிருந்தார் . பெரும்பாலும் சிறப்பு பள்ளியைப் பற்றி இருக்கும்படி பார்த்துக் கொண்டார் .

ராஜியும் அவள் சிந்தனையைத் தூண்டும் வகையில் பேச்சுக்கள் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள் . ரமேஷ் கூட அவருடைய கவுன்சிலிங் வகுப்பில் நடக்கும் சுவாரசியங்களைப் பகிர்ந்து கொண்டார். இப்படி எல்லோரும் தங்கள் முயற்சியை செய்து கொண்டிருந்தனர் .

ஒரு வாரம் சென்றிருக்க , சஞ்சு கீத்துவைப் பிடித்தாள். நான் திங்கட்கிழமையில் இருந்து கல்லூரி போகலாம் என்று நினைக்கிறேன் , இனிமேலாவது என் கூட நன்றாகப் பேசுவாயா? என்று ஏக்கத்துடன் கேட்க , 

சந்தோஷம் சஞ்சு…” என்று  சஞ்சுவைக் கட்டிக்கொண்டாள். உன் நல்லதிற்குத் தானே இவ்வளவும்… என்று உணர்ச்சிவசப்பட்டாள் .

 சங்கடமெல்லாம் முதல் நாள் தான் சஞ்சு , மறுநாள் சகஜமாகிவிடும் . உன் தோழிகளிடம் பேசியிருக்கிறேன், அவர்கள் உனக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று படபடத்தாள் கீத்து .

சரி…”

சஞ்சு மனம் மாறிவிடக்கூடாது என்ற காரணத்திற்காக உடனே செய்தியைப் பரப்பினாள் . கொஞ்ச நேரத்தில் அனைவரும் சஞ்சு வீட்டில் ஆஜராக , ராஜி கேசரியோடு வந்து ,

 ரொம்ப சந்தோஷம் டா சஞ்சு, இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது . உன் அம்மாவின் கனவை நிறைவேற்று , உன் அப்பாவின் முன் நிமிர்ந்து நில் என்று வாழ்த்த , 

விவேக் கட்டிக் கொண்டு உச்சி முகர்ந்தான் . பின் இதைக் கொண்டாடும் வகையில் நாளை டின்னருக்கு  போகிறோம் என்று அறிவித்து , அவன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் . 

அனைவரின் கண்களில் ஆசையையும் , அன்பையும் கண்ட சஞ்சு , இவர்களுக்காகவது நிச்சயம் ஜெயிக்க வேண்டும் என்று உறுதி கொண்டாள் .

திங்கள் அன்று பல தயக்கங்களுடன் , பயத்துடன் நான்கு மாதத்திற்குப் பிறகு கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தாள் . கீத்துவும் ,  விவேக்கும் ஆயிரம் பத்திரம் சொல்லி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர் . முதல் சில நாட்கள் சங்கடத்தோடு சென்ற போதும் தோழிகளும் , ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்தனர் . பின் நாட்களில் , அவள் தயக்கங்கள் தளர்ந்தன , ஆர்வமுடன் படிப்பைத் தொடர்ந்தாள் .

தொடரும்…….