கதைத்திரி-25

அத்தியாயம் 65.

சஞ்சுவும் தொடர்ந்து நடைபயிற்சி வர ஆரம்பித்தாள் . ராஜி , ராதா மற்றும் கீத்து என்று யாராவது ஒருவர் மாற்றி மாற்றி துணைக்குச் சென்றனர் . ஒரு வாரம் இயல்பாகப் போக , அன்று அப்பா வீட்டிற்குக் கீழே  இருக்கும்  மாமியைப் பார்க்க , என்ன சஞ்சனா ? இப்படிச் செய்துவிட்டாய்?”என்று கவலைப்பட,

சஞ்சு அமைதி காக்க , இதுதான் சாக்கு என்று மாமி தொடர்ந்தார் . வீடு என்றால் நாலு பிரச்சனை இருக்கத்தான் செய்யும். அதற்காக இப்படியா செய்வாய்?தைரியமாக இருக்க வேண்டும்…” என்று அறிவுரையை அள்ளித் தெளித்தார் .

உள்ளே புகுந்த கீத்து , நீங்கள் சொல்வது சரி ஆன்ட்டி , நாங்களும் அதையே தான் அறிவுறுத்துகிறோம் . ரொம்ப நன்றி ஆன்ட்டி..” என்று வேகமாக நகர்ந்தினாள் .

சஞ்சுவும் தப்பித்தாகி விட்டது என்று நடையில் வேகத்தைக் கூட்டினாள் . இரண்டு சுற்று போயிருக்க , கீத்துவிற்குப் போன் வர , அவள் சற்று ஒதுங்கினாள் .

நீ போ  என்று சைகை காட்ட , சஞ்சு மறுத்து சற்று தள்ளி நின்றாள் . அப்போது அங்கே வந்த மாமி மீண்டும் பிடித்துக் கொண்டார் .

ஏம்மா , வீடு என்றால் சண்டை சச்சரவு இருக்கத்தான் செய்யும் , அதற்காக இப்படி அப்பாவை விட்டு வருவீர்கள் . பெற்று வளர்த்த தந்தை மீது மரியாதை இல்லையா ?  என்று அவர் பாட்டிற்கு குறைகளை அடுக்க ஆரம்பித்தார் . 

சஞ்சு வெலவெலத்துப் போனாள் . போனில் பேசிக் கொண்டே சஞ்சு மீது கண் வைத்திருந்திருந்தவள் , சஞ்சுவின் நிலை கண்டு, உள்ளே புகுந்தாள்  .

கீத்து வர , நீ அறிவுரை சொல்லமாட்டாயா ? என்ன பிரச்சனை என்றாலும் குடும்பத்தோடு தான் இருக்க வேண்டும் என்று மாமி தனக்கு ஆதரவு தேட,

கட்டாயமாகச் சொல்கிறேன் மாமி…” என்றபடி, நேற்று நடைபயிற்சியில்  கிரிஜா அக்காவைப் பார்த்தோம். நம்ம குடியிருப்புக்கே வந்து விட்டார்கள் போல…” என்று தூண்டில் போட ,

ஆமாம் டி பொண்ணே…” அவ மாமியார் ஒரே பிரச்சனை பண்ணிட்டா , எத்தனை நாளைக்குப் பிரச்சனையிலே உழல்வது? அதான் தனிக் குடித்தனம் வந்து விட்டாள்.” என்று நீட்டி முழக்கினார்.

ஆமாம் மாமி… , எத்தனை நாள் குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகப்  பிரச்சனையிலே இருக்க முடியும்….?”  என்று நக்கல் தோணியில் இழுக்க , 

ஆமாம் டி பொண்ணே…” என்று ஆமோதிக்க வந்தவர் , கீத்து போட்டு வாங்கியதை உணர்ந்தவர் , சட்டென்று , அச்சோ.. , மறந்தே போய்விட்டேன்  , நான் கிளம்புகிறேன்…” என்று முக்கிய வேலை இருப்பது போல ஓடினார் .

கீத்து சிரித்தபடி , சஞ்சுவிடம் அர்த்தம் பொதிந்த பார்வையை வீசினாள் .

 ஏன் சஞ்சு பயப்படுகிறாய்? நாம் ஒன்றும் தப்பு செய்யவில்லை. முதலில் எந்தக் குற்ற உணர்ச்சியும் கொள்ளாதே . வெளியே இருந்து ஆளாளுக்கு என்ன அறிவுரை வேண்டுமானாலும் தரலாம் . உள்ளே இருப்பவர்களுக்குத் தான் வலியும் வேதனையும்,  புரியுதா ?

என்னை மாதிரி உன்னால் திருப்பிக் கொடுக்க முடியவில்லையென்றால் , தவிர்த்து விட்டு நகரப் பார் . அதுவும் முடியவில்லை என்றால் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில்  விடு  , அதை மனதில் கொண்டு போய் , உன்னை வருத்திக்காதே…

சரி என்று சஞ்சு யோசனையோடு தலையை ஆட்ட , மீண்டும் நடையைத் தொடர்ந்தனர் .

 ராதாவும் ராஜியும் கடைக்கு , கோவிலுக்கு என்று எங்காவது கூட்டிச் சென்றனர் . இளைய தலைமுறை  சினிமா , ஸாப்பிங் மால் என்று சஞ்சவுடன்  சென்று வந்தனர் . பெரிதாக தன் பெற்றோருடன் வெளியே போகாத சஞ்விற்கு , இவை  அனைத்தும் ஓரு புதிய அனுபவமாக இருந்தது . புத்துணர்வாகவும் உணர்ந்தாள். தன்னைத் தப்பாகப் பார்க்கிறார்களோ என்ற பயம் மெல்ல மெல்ல அகல ஆரம்பித்திருந்தது . 

ஒரு நாள் ராதா , சஞ்சுவைத் தான் போகும் சிறப்புப் பள்ளிக்கு அழைத்துச் சென்றாள். அந்தக் குழந்தைகளைக் கண்டு சஞ்சு அதிர்ந்தாள் . ராதா கதை சொல்ல , அதைக் கேட்டபடி குழந்தைகளைக் கவனித்தாள் . நாம் எவ்வளவு  கொடுத்து வைத்தவர்கள் என்ற நிதர்சனம் முகத்தில் அடித்தது .  தன்னுடைய பிரச்சனை எத்தனை சிறியது என்பதும் புரிந்தது . மெல்ல தெளிவாக ஆரம்பித்தாள் .ஆக மொத்தம் எல்லோரும் சஞ்சுவின் மனநல முன்னேற்றதிற்குத் தங்கள் பங்களிப்பைச் செய்தனர் .

அண்ணன் தந்த சுதந்திரம், சமைப்பது , வரைவது,  கீத்துவுடன் கொரியன் சீரியல் , நடைபயிற்சி , ஆன்ட்டிஸோடு அரட்டை , குடும்பத்துடன் வெளியே செல்வது என்று அவள் பொழுதுகள் நல்லபடியாகப் போனது .  நின்றால் குத்தம் உட்கார்ந்தால் குத்தம் என்று பயந்து பயந்து நகர்ந்த நாட்கள் காணமாலே போயின. சுதந்திர காற்று அவளைத் தாலாட்டியது . வாழ்க்கைக்குரித்தான பார்வை மாற துவங்கியது . 

அத்தியாயம் 66

அன்று அலுவலகம்  சென்று வந்த விவேக் சந்தோஷமாக வந்து சஞ்சுவைக் கட்டிக் கொண்டான் . “என்ன அண்ணா? இவ்வளவு சந்தோஷம்..” என்று சஞ்சு வினவ ,

அந்த ராஸ்கலை போலீஸ் அரஸ்ட் செய்து விட்டது . எல்லா புகைப்படங்களையும் கைப்பற்றி அழித்து விட்டார்கள் என்றான் சந்தோஷமாக . சஞ்சு மகிழ்ச்சியில் வெடித்து அழுதாள் .

“சஞ்சும்மா” என்று தேற்ற, அவனைக் கட்டிக் கொண்டாள் . சரியாக அந்நேரம் உள்ளே வந்த கீத்து , இருவரின் கண்களில் கண்ணீரைக் கண்டவள் , அரண்டு போனாள் .

“என்னாச்சு? என்னாச்சு?” என்று பதற, சஞ்சு அண்ணனை விடுத்து , கீத்துவைக் கட்டிக் கொண்டு அழுதாள் . கீத்து படபடப்பாக விவேக்கைப் பார்க்க , அவன் புன்னகைக்க , நிம்மதியானாள் .

என்ன குரு? ஒரே பாசமலர் காட்சி ஓடுது?” என்று கேலி செய்ய, சஞ்சு முதுகில் இரண்டு அடி போட்டாள்.

“இதற்கு மேல் என்னால் தாங்க முடியாது குருநாதா “ என்று வடிவேலு பாணியில் கேட்க ,

சஞ்சு ம்மா , சொல்வோமா? வேண்டாமா? என்று விவேக் வம்பிழுக்க ,

கடுப்பான கீத்து , “டேய்” என்று கீழே குனிந்து , அடிக்கப் பொருள் தேட , இருவரும் கலகலத்தனர் .

“மீ பாவம்….” என்று முகத்தைக் கீத்து பாவமாக வைக்க,

“சொல்லிவிடுவோமா தங்கச்சி….” என்று விவேக் இழுக்க, 

தங்கைக்கொரு கீதம் , என் தங்கச்சி கல்யாணி என்று உங்க டி.ஆர் படத் தலைப்பெல்லாம் நிறுத்தி விட்டு , விசயத்திற்கு வாங்க…” என்றாள் கடுப்பாக .

விவரத்தைச் சொல்லாமல் , அதிமுக்கியமாக உனக்கு எப்படி டி.ஆர் படமெல்லாம் தெரியும்?” என்று விவேக் சந்தேகத்தைக் கிளப்ப , 

நான் டி.ஆர்.  ரசிகை , என் ஸ்பாடிவை பிளே லிஸ்டில் இந்த படமெல்லாம் உண்டு என்றாள் பெருமிதமாக .

உடனே சஞ்சு , “டண்டணக்க என்று டி.ஆர் ஸ்டைலில் சொல்லி தலையைச் சிலுப்ப , கீத்து ஆவென வாயைப் பிளந்தாள் . பின் சஞ்சுவைக் கிள்ள ,  சஞ்சு அலறினாள். 

அப்ப இது கனவு இல்லை…” என்று இழுக்க , 

“எருமை மாடு “என்று சஞ்சு அடி போட்டாள்.

விளையாட்டு போதும் என்று நினைத்தவன் , குற்றவாளி பிடிபட்டு விட்டான் கீத்து

“ஏய்” என்று கத்தியவள் , சந்தோஷ மிகுதியில் திளைத்தாள் .

“எப்படி? எங்கே? “என்று கேள்விக்கனைகளைத் தொடக்க ஆரம்பித்தாள்.

இவள் கல்லூரி சீனியர் தான் , பெயர் மாதேஷ் 

கீத்து சஞ்சுவைப் பார்த்தாள் , அவள் முகத்தில் ஆளைத் தெரியும் என்பதற்கான, எந்த அறிகுறியும் தெரியவில்லை . தெரியாதா? என்று கேட்க ,

இல்லை என்று தலை ஆட்டினாள் .

சரி , நீங்கள் மேலே சொல்லுங்கள் குரு…” என்று ஊக்கினாள் .

இன்று மதியம் கஞ்சா கேஸில் கைது செய்துள்ளார்கள்…”

“கஞ்சா கேஸ்….” என்று மற்ற இருவரும் திகைக்க ,

முக்கியமாக இந்த விஷயம் வெளியே கல்லூரி பெயர் கெட்டு விடும் , பின், அடுத்த வருடம் கல்லூரி சேர்க்கையில் அது பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும். மேலும் இது அரசு கல்லூரி வேறு , மீடியாவிற்கு விசயம் போனால், இப்போது இருக்கும் ஆட்சியர்களுக்கு அது கெட்ட பெயரையும் , தேவையில்லாத அழுத்தத்தையும் கொடுத்து விடும்  என்பதால் பெரிய இடத்தில் இருந்து அழுத்தம் கொடுத்து, வீட்டில் இருந்து கஞ்சா எடுத்ததாகஇதைக் கஞ்சா கேஸாக மாற்றி விட்டார்கள்.”

“ஓ…!”

“அவன் இந்த மாதிரி வேலைகளுக்காக , தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கிறான்.  அதைப் பயன்படுத்தி கஞ்சா கேஸாக மாற்றி விட்டார்கள். அவன் வெளியே வருவதற்குச்  சில வருடங்களாவது ஆகும்.”

“ஓ…!’

நமக்கும் நல்லதாகப் போய்விட்டது .புகைப்பட மார்ப்பிங் கேஸ் போட்டால் , தேவையில்லாமல் சஞ்சு பெயரோடு மற்ற  கல்லூரியில் பெண்களின் பெயர்கள் வெளியே தெரிய நேரிடும் . மீடியா பேய்கள் அவர்களைச் சுற்றி நாறடித்து விடுவார்கள் . அதுவும் இப்போது ஷோசியல் மீடியா வந்து விட்டு , எந்தக் கட்டுபாடும் கிடையாது . நினைத்ததையெல்லாம் பேசுகிறார்கள் . வாய் கூசாமல் சேற்றை  இறைக்கிறார்கள் . இயல்பாக இந்தப் புகைப்படத்திற்கும் கிடைக்கும் கவனத்தை விட பலமடங்கு அதிகமாக இந்த கேஸ் பெற்று விடும் . அது தான் போலீஸுக்குப் போன போது இருந்த பயம் . ஆனால் நம் கேஸை டீல் செய்த அதிகாரி தான் , நீங்கள் பயப்படாதீர்கள் , வேறு மாதிரி இதை முடித்து விடலாம் என்று நம்பிக்கை கொடுத்தார் . அதே மாதிரி நல்ல படியாக முடிந்தது.

ஏன் இதைச் சொல்லவில்லை..? என்று இருவரும் ஒரே நேரத்தில் கேட்க , சஞ்சு இருந்த நிலையில் இதைப் பற்றி பேசவே முடியாது . பின் உங்கள் யாரையுமே வருத்தப்படுத்த வேண்டாம் என்று தவிர்த்து விட்டோம்.”

தவிர்த்து விட்டோம்… என்றால்  கொக்கிப் போட , 

அங்கிள்ஸ்க்கு தெரியும்.”

ஆஹா…!  இப்படியொரு கூட்டணி உருவாவது சரியில்லையே ? முதலில் இதைப் பெண்கள் சபைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்…” என்று கீத்து பொங்க ,

“போலீஸ் என்னதான் நம்பிக்கை தந்தாலும் மனதிற்குள் பயப்பந்து சுழன்றுக் கொண்டேதான் இருந்தது . யாருக்கும் நம்பிக்கை கொடுக்க தைரியம் இல்லை . எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற வேண்டுதல் ஓடிக் கொண்டே இருந்தது”” என்ற யதார்த்ததை விளக்கினான் .

“அண்ணா” என்று மீண்டும் கட்டிக்கொண்டாள். கீத்தும் கண்கள் பனிக்க , விவேக்கைப் பார்த்தபடி நின்றாள் .

பின் கீத்து , ஏன்  இத்தனை நாள் ? சீக்கிரமே இந்த கேஸை முடித்திருக்கலாமே ? என்று தன் சந்தேகத்தைக் கேட்க ,

இதே கேள்வியை நானும் அதிகாரியிடம் கேட்டேன் . வேறு கேஸாக மாற்ற முடிவு செய்யப்பட்டிருந்தாலும் அதைச் சரியாக , பலமாக எந்த விதத்திலும் சட்டத்தின் ஓட்டையில் இருந்து தப்ப முடியாது  ரெடி செய்ய வேண்டும் . மேலும் பல சின்னப் பெண்களின் வாழ்க்கை அடங்கி இருக்கிறது , எந்த தப்பும் நடந்து விடக்கூடாது என்ற அதிக கவனமும் இருந்தது . முக்கியமாகப் புகைப்படங்களைக்  கைப்பற்ற வேண்டும் , வேறு யாருக்கும் பகிரபட்டிருந்தால் அந்த தடையங்களை பிடிக்க வேண்டும் , அழிக்க வேண்டும் என்று பொறுமையாக , அவர்களுக்கு இருக்கும் சிரமங்களை விளக்கினார்.”

ஓ…! , அவர்களுக்கும் எத்தனை பிரச்சனைகள்  இருக்கிறது பாருங்கள் , ஆனால் நாம் ஈஸியாக போலீஸை சினிமாவில் , வெளியிடங்களில்  சிறுமைப்படுத்திப்  பேசிவிடுகிறோம்என்று கீத்து வருந்தினாள் .

எல்லா இடத்திலும் கருப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றன , அதையும் தாண்டித் தான் ஒவ்வொரு அரசு நிறுவனங்களும் செயல்படுகின்றன..” என்று முடித்தான் .

எப்படியோ நம்ம பிரச்சனை நல்லபடியாக முடிந்தது.” என்று கீத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் . 

“அம்மா தான் கூடவே இருந்து எங்களைக் காப்பாற்றி விட்டார்” என்றான் விவேக் கண்கள் பணிக்க,

சஞ்சு ஆமோதிப்பது போல் விவேக் கைக்குள் தன் கையை விட்டு இறுக்கிக் கொண்டாள். பின் விவேக் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.

கீத்துவும் இந்தக் காட்சியைக் கண்டு நெகிழ்ந்து தான் போனாள். 

தொடரும்……