சஞ்சனா… கதைத்திரி-11

அத்தியாயம் 25

ஒரு மாதம் போக , ஊரடங்குகள் தளர ஆரம்பித்தன . ஆன்லைனில் பள்ளி , கல்லூரிகள் தொடங்கின. விஜயனும் வீட்டில் இருந்து வேலை பார்த்தார் . 

சஞ்சு அம்மாவை நினைத்து மிகவும் ஏங்கினாள் . அனைத்திற்கும் அம்மாவைத் தேடினாள் . விவேக் முடிந்தவரை சமாளித்தான் .

 விவேக் மற்றும் சஞ்சுவிடம் கீத்து தொடர்ந்து பேசினாள் . இருவருக்கும் பெரிய பலமாக , ஆறுதலாக இருந்தாள் . நல்ல தோழியாக இருவருக்கும் ஆறுதலானாள் .

விஜயனும் பெரிதாக  இறங்கிப் போய் பேச முயலவில்லை ,  எப்போதும் அம்மா பாலமாக இருந்து பேசியதால் , சாதாரண பேச்சு வார்த்தைகளே இல்லை. தேவை தவிர, தானாகப் போய்  பேசப் பிள்ளைகளும் முயலவில்லை. தான் உண்டு தங்கள் வேலையுண்டு என்று ஒதுங்கிக் கொண்டார்கள் 

விஜயன் இறங்கியிருந்தால் நிச்சயம் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் , ஆனால் அவரின் குணம் அதற்கு இடம் கொடுக்கவில்லை . மூன்று வேளையும் விதவிதமான உணவு வகைகளை , சுடச்சுட சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு மெஸ் சாப்பாடு , தொண்டையில் இறங்கக் கஷ்டப்பட்டது . இந்த இரண்டு மாதத்தில் நான்கு மெஸ் மாற்றி விட்டார்கள் . இடையில் ராதா , ராஜி  வெளிச்  சாப்பாடே சாப்பிடுகிறார்கள் என்று ஏதாவது செய்தும் கொடுத்து விடுவார்கள் .

ஒரு முறை சாப்பாடு சரியில்லாமல் விஜயனுக்குக் கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்பட்டு , மருத்துவமனையில் இரண்டு நாள் அனுமதிக்கப்பட்டார். சஞ்சுவை கீத்து வீட்டில் விட்டு விட்டு ,  விவேக் அப்பாவைப் பார்த்துக் கொண்டான் . ஓய்ந்து போனான். மெஸ் சாப்பாட்டு முறை நீண்ட நாட்களுக்கு ஓடாது என்பது புரிந்தது.  

கொரோனாவின் வேகம் குறைய ஆரம்பித்தவுடன் சமையல் வேலைக்கு ஆள் தேடினான் விவேக் . அன்னையின் இழப்பை ஒவ்வொரு நொடியும் உணர்ந்தனர் . அன்னை மடியை மிகவும் தேடினர் . பின் ராஜி உபயத்தில் சாரதாம்மா கிடைக்க , சாப்பாட்டுக் கவலை தீர்ந்தது .பொழுதுகள் ஒருவாறாக ஓடின . 

விஜயனுக்கு அலுவலகம் திறக்க , பிள்ளைகளுக்கும் ஆன்லைன் தேர்வுகள்  தொடங்கின. படிப்பில் கவனத்தைச் செலுத்தினர் . தேர்வை  நல்லபடியாக முடித்தனர் . 

 எதிர்பாராத மரணத்தால் மூன்றுமாதம் அமைதியாக இருந்த விஜயனுக்கு வாழ்க்கை சக்கரம் சீரானவுடன் , அவர் இயல்பு குணம் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.

முதலில் பிள்ளைகள் ஒதுங்கி இருப்பதை பெரிதாக யோசிக்காமல் இருந்தவருக்கு , ஒரு நாள் சஞ்சு கீத்துவிடம் , அன்று மட்டும் அம்மா வங்கிக்குப் போகாமல் இருந்திருந்தால் , இதெல்லாம் நடந்தே இருக்காதில்லையா..?” என்று புலம்பியதைக் கேட்டார்.

தன்னைத்தான் குற்றம் சாட்டுகிறார்கள் என்று குதர்க்கமான எண்ணம் தோன்ற , ( இத்தனைக்கும் அப்பா தான் அனுப்பினார் , அவர் தான் காரணம் என்றெல்லாம் பேசவில்லை , போகாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தான் வருத்தப்பட்டாள்) .

விஜயனின் இயல்பு குணம் தலை தூக்க , தன்னைக் குற்றம் சாட்டுகிறாள் என்ற எண்ணம் தோன்ற , அவருடைய ஈகோவிற்கு வெறி பிடித்தது . ஏற்கனவே சஞ்சு மீது இருந்த கோபமும் உயிர் பெற , அவளை ஏதாவது குற்றம் சொல்ல ஆரம்பித்தார் . சற்று இயல்பு நிலைக்கு வந்திருந்த சஞ்சு,  அப்பாவின் நடவடிக்கையால் , மீண்டும் ஒடுங்க ஆரம்பித்தாள் .

அத்தியாயம் 26

அன்று ஏதோ அவசர வேலையிருக்க , சஞ்சு பரபரப்பாகச் செய்து கொண்டிருந்தாள் . விவேக் வெளியே சென்றிருக்க , அப்போது வந்த விஜயன், “இன்றைக்குச் சாராதம்மா வரமாட்டார்கள் , அதனால் இரவு உணவை , நீ செய்து விட” 

“அப்பா இன்னும் ஒரு மணி நேரத்தில் இதை ஆன்லைனில் சப்மிட் பண்ண வேண்டும். அண்ணா வரும் போது வாங்கிட்டு  வரச் சொல்லவா? இல்லையென்றால் டெலிவரி போட்டு விடுவோமா?” என்று தயங்கியபடி கேட்க ,

அவ்வளவு தான் கோபம் தலைக்கேற , “இப்படித்தான் அன்றும் நான் சொன்னத்தைக் கேட்காமல் , அம்மாவை வங்கிக்குப் போக வைத்தாய் , அப்படியே அவளை அனுப்பி விட்டாய் , அடுத்து என்ன நானா ? நான் சொன்னதைக் கேட்கக் கூடாதென்று கங்கணம் கட்டியுள்ளாயா ?  பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?” என்று சரமாரியாக வசை பாட, 

“அம்மாவை அனுப்பி விட்டாய்” என்ற வார்த்தையே திரும்பத் திரும்ப ஒலிக்க , அடுத்து அவர் பேசிய எதையும் கவனிக்காது , கண்ணில் நீர் வழிய அதிர்ந்து நின்றாள்.

“போய் வேலையைப் பார்..” என்று அறைக்குள் சென்றார் .

சஞ்சுவின் கைகள் பாட்டுக்கு வேலை செய்ய , மனம் அப்பா சொன்னதிலே உழன்றது . ஏற்கனவே சஞ்சுவிற்குப் பூஞ்சை மனது  , சற்று பயந்த சுபாவம். அதனால் அப்பாவின் வார்த்தைகள், அவளை மிகவும் காயப்படுத்தியது .

இரவு வேலை முடித்துப் படுக்க வந்தவளுக்கு, “அம்மாவை கொன்று விட்டாய்…”  என்ற வார்த்தை வலிக்க , வலியை மறக்க மீண்டும் பிளேடால் தொடையில் கீறினாள். ஏனோ வலி குறைந்தது போலத் தோன்ற , அழுதபடி உறங்கினாள் .

விவேக்கின் பார்வைக்கு அப்பா திட்டுவது வர ,  மூலக்காரணம் தெரியாததால் , இதுதானே அவர் குணம் என்று நினைத்தான் கசப்புடன் , பின், “சஞ்சு கவனமாக இரு. முடிந்த வரை அவர் கண்ணில் படுவதைத் தவிர்த்து விடு” என்று பொதுவான அறிவுரையை விவேக் வழங்க ,  

ஏற்கனவே அப்பாவின் பேச்சால் சரியாக யோசிக்கும் நிலையை தொலைத்திருந்தவள் , இதுவரை விவேக், தனக்குச் செய்ததை நினைக்காமல், அண்ணன் தனக்காக நின்று அப்பாவிடம் பேசவில்லை என்று வருந்தினாள் . அம்மாவின் மறைவு மற்றும் அப்பாவின் தொடர் தாக்குதல்களில் மனம் கலங்கியிருந்தவளை, தன்னிரக்கம் சூழ,  தான் அண்ணனுக்குப் பிரச்சனையை விளக்கவில்லை என்பதை யோசிக்காது, அண்ணன் தனக்காக நிற்கவில்லை என்று  நினைத்து மனதளவில் நொந்து போய் , தனக்கு யாரும் இல்லை என்ற சுய இரக்கம் சூழ அமர்ந்திருந்தாள். அப்போது கீத்து வர , சஞ்சு அமைதியாகவே இருந்தாள்.

“என்ன சஞ்சு டல்லாக இருக்கிறாய் ?” என்று கீத்து விவரம் கேட்க ,

“வேலை இருக்கிறது கீத்த. அந்த யோசனை தான் , பத்து நிமிடத்தில் முடித்துவிட்டு வருகிறேன்” என்று உள்ளே சென்றாள் சஞ்சு . 

கீர்த்தனா வகுப்பு இல்லாத நேரத்தில்  வீட்டுக்கு வந்து , சஞ்சுவோடு பேசிக் கொண்டிருப்பாள் , சில நேரம் மூன்று பேரும் அரட்டை அடிப்பார்கள் . சில நாள் விவேக்கிடம் படிப்பில் உள்ள சந்தேகங்களைக் கேட்டுச் செல்வாள்  . 

 சஞ்சு கீத்துவிடம் சொல்லுவோமா ? வேண்டாமா? என்ற மனப் போராட்டத்தில் இருந்தாள் . உடனே கீத்து பின் தொடர்ந்திருந்தால் சொல்லியிருப்பாளோ ? என்னவோ? தோழி வேலையை முடிக்கட்டும் என்று கீத்து எண்ணி , விவேக்குடன் பேச்சைத் தொடர்ந்தாள் .

மனவலியில் , குழப்பத்தில் இருந்த சஞ்சு , இந்த விசயத்தைச் சொன்னால் , கீத்துவும் தான் தான் காரணம் என்று நினைத்து விடுவாளோ என்ற பயம் தோன்ற , யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தாள் .

 “ஏதாவது ஆன்லைன் கோர்ஸ் படிக்கலாம் என்று யோசிக்கிறேன் , வழிகாட்டுங்கள் குரு…”  

“குட் கீத்து , மெஷின் லாங்வேஜ் படி , நல்ல ஃபச்சர் இருக்கு.  நீ எதுவும் பணம் கட்டாதே. என்னுடைய பாஸ்வேர்ட் தருகிறேன் , அதில் படித்துக் கொள்” 

“நீங்கள் முடித்து விட்டீங்களா குரு ?”

“ஒரு லெவல் முடித்திருக்கிறேன் , அடுத்த லெவல் பார்க்கணும்…” என்று இழுக்க ,

“உங்களுக்கு இதெல்லாம் ஜுஜிப்பி மெட்டர் , ஏன் குருநாதா முடிக்கவில்லை  ?” என்று விளையாட்டாக  கேட்க ,

விவேக் சிரித்துக்கொண்டே , “அரைக்காபடி என்று நிரபிக்கிறாய் பார்த்தாயா ? இது கஷ்டமான லங்வேஜ் தான் . ஒழுங்காகப் படி.,” 

“நீங்கள் ஏன் முடிக்கவில்லை?” என்று அதிலே நிற்க , 

“இப்போது இருக்கிற சூழ்நிலையில் கஷ்டம் கீத்து, முன்னாடி அம்மா இருந்தார்கள் , எந்தக் கவலையும் இல்லாமல் படித்தேன்…” என்று பெருமூச்சு விட்டான் .

“இப்போது சஞ்சுவைப் பார்க்க வேண்டும் , அப்பா எனக்கு என்னவென்று இருக்கிறார் ?  அதனால் வீட்டுப் பொறுப்பும்  இருக்கிறது…” என்றான் மெதுவாக ,

 கீத்து மனம் வருந்தி , “குரு…” என்று கையைத் தட்ட, சரியாகச் சஞ்சுவும் தன்னைச் சமன்படுத்திக் கொண்டு, வேலை முடிந்து விட்டது என்று வந்தமர்ந்தாள் . 

சூழ்நிலையை மாற்றும் பொருட்டு , “உங்க அண்ணன் கொஞ்சம் நல்லவன் தான் , ஒத்துக் கொள்கிறேன்..” என்று கீத்து  பேச ,

“என்னடா நடக்குது  இங்க ?” என்று சஞ்சு திருதிருக்க , 

பாஸ்வேர்ட் விவரத்தை கீத்து சொல்ல , 

“எவ்வளவு ரூபாய் மிச்சம் செய்து கொடுத்திருக்கிறார். கொஞ்சம் நல்லவனா ?” என்று சஞ்சு முதுகில் ஒரு அடியைப் போட , 

“என் தங்க தங்கச்சி…” என்று விவேக் தோளனைக்க ,

“உங்க பாசமலர் படம் ஓட்டினது போதும்…” என்று கீத்து கேலி செய்தாள் .

“சஞ்சு ம்மா , என் சார்பில் இன்னும் இரண்டு அடி போடு..” என்று விவேக் ஊக்க ,

“மீ எஸ்கேப்…” என்றபடி ,  “நன்றி குருநாதா…” என்று வடிவேலு பாணியில் பெரிய கும்பிடாகப் போட்டு விட்டு ஓடினாள் . சஞ்சுவும் , விவேக்கும் சிரிக்க , அங்கு ஒரு இலகுவான மனநிலை உருவாகியது ,

கீத்துவிற்கு விவேக்கின் சிரமங்கள் புரிந்தது . தோழியாக இருவருக்கும் துணையாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் . 

அதேவேளை விவேக் , சஞ்சுவின் கஷ்டங்களை ராதாவிடம் புலம்பினாள் கீத்து . “எல்லாம் சரியாகிவிடும்…” என்று கீத்துவைத் தைரியப்படுத்தி விட்டு , 

 “நல்லவர்களை ஏன் தான் கடவுள் சிக்கிரம் எடுத்துக் கொள்கிறாரோ? பிள்ளைகள் தவிக்கிறார்கள்.” என்று ராஜியிடம் வருத்தப்பட்டார்  ராதா .

 “எப்போதும் பெரிதாக , வீட்டை விட்டுக் கொடுக்காத மஞ்சு, அன்று புலம்பின புலம்பல் இருக்கே ராஜி , கேட்க முடியவில்லை , அந்தப் பேச்சை யோசிக்கும்போது , இந்த ஆளோடு வாழ்ந்த வாழ்க்கை போதும் என்று தான் போய்விட்டாள் போல் தோன்றுகிறது . சில நேரம் மதிக்காத புருஷன் கையால் எதுவும் வேண்டாம் என்று ரோஷப்பட்டு , இந்த வீட்டுப் படியை கூட மிதிக்காமல்  போய்விட்டாள் என்றும் தோன்றுகிறது…” என்று தங்களுக்குள் ஏதேதோ பேசி சமாதானப் பட்டுக் கொண்டார்கள்  .

தொடரும்….