என் பொண்டாட்டி போனப்பவே சமாளித்தவன் என்று முதலில் பிரிவைப் பெரிதாக யோசிக்காது வீம்பாக இருந்தார் விஜயன் .
நாளாக நாளாக , பொறுப்புகள் கூடியது . இதுவரை அடுத்தவரை வேலை ஏவி சுகவாசியாக இருந்தவருக்கு , அடுத்தடுத்து என்ன வேலை செய்ய வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. தானே வேலை செய்வது அதைவிட கொடுமையாக இருந்தது. எல்லாவற்றையும் தானே யோசித்துச் செய்வது மிகவும் கடுப்பாக இருந்தது .
சாரதாம்மா மற்றும் ராணியைப் மேற்பார்வைப் பார்ப்பது என்று வீட்டுக்கு வந்தால் , பல வேலைகள் வரிசை கட்டிக் காத்திருந்தன . அவருடைய மனம் மிகவும் சலிப்படைந்தது . பொறுப்பெடுக்க ஆள் தேடியது . ஆக மொத்தத்தில் எரிச்சலில் இருந்தார்.
மேலும் கெத்தாக இருப்பவருக்குத் தன்னை எல்லோரும் குறுகுறு என்று பார்ப்பது போலவும் இளக்காரமாகப் பார்ப்பது போலவும் தோன்றியது . அதற்குக் காரணமான பிள்ளைகள் மீது அவருடைய கோபம் பல மடங்காகியது . இன்னும் அவர் , தன்னுடைய தவறுகளை யோசிக்கத் தயாராக இல்லை .
அன்று விவேக் அலுவலகம் செல்ல நேர்ந்தது . சஞ்சுவை தனியாக விட மிகவும் யோசித்தான்.
அங்கே வந்த ராதா விவரம் அறிந்து , எங்கள் வீட்டில் இருக்கட்டும் என்று கை கொடுக்க, விவேக்கும் நிம்மதியாக கிளம்பினான் .
ராதா சஞ்சுவுடன் பேசிக் கொண்டே சமைக்க , சஞ்சுவிற்கு நன்றாகப் பொழுது போனது . மாலை வந்த விவேக் , “இன்னும் இரண்டு வாரம் வீட்டில் இருந்து வேலை செய்வதை நீட்டித்துள்ளேன் . இடையில் இரண்டு நாள் மட்டும் போக வேண்டியதிருக்கும் என்று நினைக்கிறேன் ஆன்ட்டி” என்று தயங்கினான் .
“கவலையை விடு விவேக்…” என்று காபியைக் கையில் திணித்தார். பின், “ஆன்ட்டிகள் இருக்க பயமேன்..” என்று ஒற்றைக் கையை ஆசிர்வாதம் செய்வது போல் செய்ய , அவனும் தயக்கம் மறைந்து சிரித்தான் .
அப்போது கல்லூரி முடித்து, உள்ளே நுழைந்த கீத்து , “என்னை விட்டு என்ன வட்ட மேஜை மாநாடு?” என்று இடை புகுந்தாள் .
கடுப்பான கீத்து , “ரொம்ப முக்கியம்…” என்று சடைக்க , அங்கே சிரிப்பொலி பரவியது .
அப்போது ராதா , “சஞ்சு எப்போது கல்லூரிக்கு….?”என்று இழுக்க ,
சஞ்சு சட்டென விரைத்தாள் .
சஞ்சுவை கவனித்த விவேக் , இடைபுகுந்து, “டாக்டர் இரண்டு மூன்று வாரம் ஆகட்டும் என்று சொல்லியிருந்தார் . இந்த வாரம் போகும் போது கேட்க வேண்டும்…”
“ஓ…!”
பின் பேச்சை மாற்றும் விதமாக , “சமையல் வேலைக்கு ஆள் கிடைத்து விட்டார்களா ஆன்ட்டி ?”
“நல்ல ஆளாக தேடிக் கொண்டிருக்கிறோம், எப்படியும் இந்த வாரத்தில் பிடித்து விடுவோம்..” என்றார் நம்பிக்கையாக . அது வரை சஞ்சு முடிந்த நேரம் சமைக்கட்டும். நீயும் உதவு , மற்ற நேரம் மெஸ்ஸில் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று ஐடியா கொடுத்தார்.
“சஞ்சுவிற்கு ஓ.கே. என்றால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை…” என்று பாலை சஞ்சுவிடம் திருப்பினான்
பின் சஞ்சுவிடம் , “உனக்கு ஓ.கே. வா? என்று ராதா கேட்க ,
“முயற்சி செய்கிறேன் ஆன்ட்டி…” என்று சஞ்சு சொல்ல ,
உடனே அதைப் பிடித்துக் கொண்ட ராதா , அடுத்து அடுத்து ஐடியாக்களை அடுக்க ஆரம்பித்தார் .
“எளிய சமையலாக முந்தின நாளே யூ டுயுப்பில் பார்த்துத் தேர்வு செய்து கொள். அது உனக்கு பிளான் பண்ண உதவியாக இருக்கும் . நான் உனக்கு பேச்சலர் , ஒன் பாட் குக்கிங் ரெசிப்பிஸ் அனுப்பி வைக்கிறேன். அதையும் பார்…” என்று மடமடவென பேசினார் .
“அம்மா போதும் , என்னைப் போல் எதையும் தாங்கும் இதயம் அவர்களுக்கு இல்லை உன் வேகத்தை அவர்கள் தாங்க மாட்டார்கள்..” என்று கீத்து கேலி செய்ய . அனைவரும் சிரித்தனர்
சஞ்சுவும் மறு நாளில் இருந்து சமையலில் தன் கைவண்ணத்தைக் காட்ட தொடங்க , மஞ்சுவின் மகள் என்றால் சும்மாவா ? இயல்பாகவே நன்றாக, ருசியாகச் சமைத்தாள் . விவேக் ஆசையாக உண்டான். பின் கண்கள் கலங்க , “அம்மா சமையல் ஞாபகம் வருதுடா சஞ்சு..” என்று நெகிழ்ந்தான் .
அதற்குப்பின் சஞ்சு ஒரு வேளையாவது சமையல் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டாள் . சில நேரம் வித்தியாசமான பலகாரம் செய்யும் போது ராதா மற்றும் ராஜி ஆன்ட்டிக்குக் கொடுத்து அனுப்பினாள் . இப்படியாக காலை பொழுதுகளில் சஞ்சுவை எதையும் யோசிக்க விடாது பார்த்துக் கொண்டார்கள் .
அதில் முக்கால்வாசி வெற்றியும் கண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இரண்டு வாரத்தில் நல்ல மாற்றம் தெரிந்தது. வெளியே போக பயம் இருந்த போதும் முன்னேற்றமிருந்தது .
அத்தியாயம் 62
அந்த வாரம் டாக்டர் கவுன்சிலிங் முடித்து விட்டு , பாஸிட்டிவாக சொல்ல , விவேக் நிம்மதியானான். பின் கல்லூரி செல்வதைப் பற்றிக் கேட்க ,
விவேக்கை அர்த்தமுள்ள பார்வை பார்த்து விட்டு , “ஒன்றும் பிரச்சனையில்லை , அடுத்த வாரமே கல்லூரிக்குப் போகலாம் . பீ ஏ பிரவ் கேர்ள் , ஆல் தி பெஸ்ட்…” என்று சஞ்சுவையும் வாழ்த்தினார் .
சஞ்சனாவிடம், “ மருந்து வாங்குடா , ரெஸ்ட் ரூம் போய் வருகிறேன்…”
சஞ்சனா சந்தேகமாகப் பார்க்க , “டாக்டர் நல்லபடியாக சொல்ல வேண்டும் என்ற படபடப்பில் இருந்தேன்…” என்று அசட்டுச் சிரிப்பை உதிர்த்து விட்டு, வேகமாக நடந்தான். அண்ணனின் கவலையை உணர்ந்தவள் , மருந்தகம் நோக்கி நகர்ந்தாள் .
டாக்டரிடம் வந்தவன் விவரத்தைக் கேட்க , “நிச்சயமாக நல்ல முன்னேற்றம் இருக்கு . ஆனால் இப்போது கல்லூரிக்குப் போக சம்மதிப்பது என்பது கஷ்டம் . அவள் போக்கில் விடுங்கள் . ஆனால் இப்போது நான் செய்த மாதிரி, வலிக்காமல் வலியுறுத்துங்கள்…”
“அதேபோல் பொது விசயங்களைப் பற்றி நிறைய கலந்துரையாடல்கள் நிகழ்த்துங்கள் , பார்வையை விசாலமாக்குங்கள் , மாற்றம் சீக்கிரமாக வரும்…”
“நன்றி டாக்டர்…” என்று விடை பெற்றான் .
வீட்டுக்கு வரும் வழியில் விவேக் சஞ்சுவிடம், கல்லூரி பற்றி கேட்க , “இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அண்ணா…” என்று பதைபதைக்க ,
“சரிடா , டென்ஷன் ஆகாதே , உனக்கு விருப்பப்பட்ட மாதிரியே செய்வோம்…” என்று ஆசுவாசப்படுத்தினான். ஆனால் மனதில் கீத்துவிடம் சொல்லிப் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் .
மாலை ராஜியும் , ராதாவும், சஞ்சு வீட்டுக்கு மருத்துவமனை போய் வந்த விபரத்தைக் கேட்க வந்தனர் .விவேக் அவர்களின் நோக்கம் புரிந்து , கண் ஜாடை காட்ட , பொதுவான விவரத்தைக் கேட்டு விட்டு , வேறு பேச்சுக்குத் தாவினர் .
சற்று நேரத்தில் கீத்து வர , இருவரும் தங்கள் அரட்டையைத் தொடங்க , அறைக்குள் நுழைந்தனர் .
தனிமை கிடைக்க , “டாக்டர் என்னப்பா சொன்னார் ?” என்று கவலையுடன் கேட்க ,
“இப்போது தன் வீடு என்ற எண்ணத்தோடு சுதந்திரமாக வளைய வருகிறாள் . வீட்டைப் பொறுத்தவரை அவளே முடிவு எடுக்கிறாள் . நம் அனைவரிடமும் தயக்கமின்றி , பயமின்றி சகஜமாகிவிட்டாள் . ஆனால் வெளியிடங்களுக்குப் போவதற்கு , வெளி மனிதர்களைப் பார்ப்பதற்கு , பழகுவதற்கு இன்னும் பயப்படுகிறாள் . புகைப்படங்களைப் பார்த்திருப்பார்களோ? தன்னைத் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்களோ? என்ற பயமும் படபடப்பும் இருக்கிறது . அது மெதுவாகத் தான் மாறும் என்று டாக்டர் கூறினார்…” என்றான் கவலையாக .
“சீக்கிரம் சரியாகி விடுவாள் விவேக் , கவலைப்படாதே . பார்த்துக் கொள்ளலாம்..” என்று ஆறுதல் சொல்லி விட்டு கிளம்பினர் .
அன்று இரவே கீத்துவை அழைக்க ,
“என்ன குரு ? என்ன செய்ய வேண்டும்..?” என்று பளிச்சென்று விசயத்திற்கு வர,
“எப்படி கீத்து ?” என்று ஆச்சரியப்பட்டான் .
“சாயங்காலம் உங்கள் முகமே சரியில்லை , அப்போதிருந்தே உங்கள் போனை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்…”
விவேக்கின் மனம் கனிந்து மிகவும் சந்தோஷத்தில் திளைத்தது . அம்மாவிற்குப் பிறகு ஒருவர் , தன் முகம் பார்த்து எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டது, எல்லையில்லா மகிழ்ச்சியைத் தந்தது . “நன்றி கீத்து…” என்றான் .
“எதுக்கு குரு?” என்று புரியாமல் கேட்க ,
“நான் சொல்லாமலே என்னைப் புரிந்து கொண்டதற்கு..” என்று நெகிழ்ந்தான் .
சூழ்நிலையைப் புரிந்து கொண்ட கீத்து , சகஜமாக்கும் பொருட்டு , ‘அதெல்லாம் தானா வருது ‘ என்று நடிகர் விவேக் பாணியில் சொல்ல ,
“உன்னை…” என்று சிரித்தவன். பின் அயல் மனிதர்களை சந்திக்கப் பயப்படுவது மற்றும் வெளி இடங்களுக்குச் செல்லத் தயங்குவது என்று சஞ்சுவின் பயங்களை விளக்கினான் .
“கல்லூரியில் விடுப்பில் ஏதாவது பிரச்சனை வருமா?” என்று கீத்து விசாரிக்க ,
“கவலையில்லை கீத்து , கல்லூரி முதல்வர் சஞ்சுவின் சூழ்நிலையை நன்றாகப் புரிந்து கொண்டுள்ளார் . எல்லாவற்றிலும் உதவுதாக கூறியுள்ளார்.”
“அப்புறம் என்ன? கவலையை விடுங்க குரு, நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் நம்பிக்கையாக . சிறிது நேரம் படிப்பு, கல்லூரி, வேலை என்று வேறு கதைகள் பேசிவிட்டுப் போனை வைத்தனர் .
மறுநாளே கீத்து, “வா, நடைபயிற்சிக்குப் போகலாம்..” என்று ஆரம்பிக்க , சஞ்சு வேகமாக மறுத்தாள் .
முதல் இரண்டு நாட்களுக்குப் பெரிதாக வற்புறுத்தவில்லை . ஆனால் மாலை பாடப்புத்தகத்தோடு வந்து , சஞ்சுவையும் வரைய ஊக்கினாள் .
சஞ்சுவும் மாலை வரைவது , காலையில் சமைப்பது என்று சற்று பிஸியானாள் . அந்த வாரம் முடிய , எங்கே அண்ணன் தன்னைக் கல்லூரிக்குப் போகச் சொல்வானோ…? என்று படபடப்பானாள் .
சஞ்சுவின் படபடப்பைக் கவனித்தவன் , “என்ன சஞ்சு?” என்று விசாரிக்க ,
“அண்ணா, கல்லூரி…?” என்று பயத்துடன் சொல்ல ,
“இந்த வாரமே போக வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. எப்போது உனக்குப் போகலாம் என்று தோன்றுகிறதோ , அப்போது பார்த்துக் கொள்ளலாம் . நான் உன் கல்லூரி முதல்வரிடம் பேசுகிறேன் சஞ்சும்மா.”
“நன்றி அண்ணா…” என்று கட்டிக் கொண்டாள் .
தொடரும்……
அத்தியாயம் 64
அடுத்த வாரத்தில் கீத்துவின் பிடிவாதத்தில் , சஞ்சு நடைபயிற்சிக் கிளம்பினாள் . சஞ்சுவை எதையும் யோசிக்க விடாமல் பேசிக் கொண்டே நடந்தாள் கீத்து . முதல் நான்கு நாட்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் நல்லபடியாகப் போனது .
சஞ்சுவைத் தூக்கிச் சென்ற காவாலாளியை அன்று சந்திக்க , “என்ன பாப்பா ? இப்படிச் செய்து விட்டாய்? உன்னை அப்படி பார்த்தவுடன் குலை நடுங்கி விட்டது..” என்று ஆதங்கப்பட ,
சஞ்சு கண்கலங்கி நிற்க,
“தைரியமாக இருக்க வேண்டும் பாப்பா…” என்று கூறி , நகர்ந்தார் .
“இதற்குத் தான் நான் வரவில்லை என்றேன்…” என்று கலங்கிய கண்களுடன் வீட்டுக்குத் திரும்பினாள் .
விவேக் பதற , கண்களால் அமைதி காக்க சொல்லி விட்டு , சஞ்சு அறைக்குள் நுழைந்தாள் கீத்து.
“என்னாச்சு ?” என்று ஒன்றும் தெரியாதது போல் கேட்க ,
“உன் மீது உள்ள அக்கறையில் தானே பேசினார் . எத்தனை நாளைக்கு உள்ளேயே இருப்பாய் ? ஒரு முறை சந்தித்து விட்டால் , சங்கடமெல்லாம் முடிந்தது…” என்றாள் இயல்பாய் .
“உனக்கென்ன எளிதாகச் சொல்லிவிட்டாய்…” என்றாள் சஞ்சு வேகமாக .
“ஓ…! , சரி, இப்போது நான் கேட்பதற்குப் பதில் சொல்.ஒரு வருடத்திற்கு முன்னாடி எ பிளாக் சரளா ஆன்ட்டி பையன் காரை லைசன்ஸ் இல்லாமல் ஓட்டி , ஒரு சின்ன விபத்து ஏற்படுத்திவிட்டு , கோர்ட் , கேஸ் என்று அலைந்தார்களே , அப்போது எல்லோருமே அதைப் பரபரப்பாகப் பேசினோமே , ஞாபகம் இருக்கிறதா?”
“ம்ம்…” என்று தலையை ஆட்ட ,
“இப்போது அதைப் பற்றி எத்தனை பேர் பேசுகிறோம்? அந்தப் பையன் அந்த விபத்துக்குப் பின் வெளியே வந்தானா? இல்லையா ?”
“நேற்று அவன் கார் ஓட்டிச் செல்வதை வாக்கிங் போகும் போது பார்த்தோமே…” என்று சஞ்சு இழுத்தாள்.
“சரி ,அதை விடு , சி பிளாக் அஸ்வத் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தானே , அதை எத்தனை நாள் பேசினோம்?” என்று புருவத்தைக் கீத்து ஒசத்த , சஞ்சு யோசிக்கத் தொடங்கினாள் .
“இன்றைய உலகில் துக்கம் , சந்தோஷம் எல்லாமே கொஞ்ச நேரம் தான் சஞ்சு . மனிதனின் கவனத்தை ஏழு நிமிடம் பிடித்து வைப்தே பெரிய விசயம் என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது . இதில் உன் விசயம் எல்லாம் எம்மாத்திரம்? அடுத்த சுவாரசியமான விசயம் வரும் வரை பேசுவார்கள் அவ்வளவு தான் . முன்னூறு வீடுகள் கொண்ட குடியிருப்பில் சுவாரசியதிற்குப் பஞ்சமா ?” என்று சிரித்தாள் .
“இதில் எத்தனை பேருக்கு அடுத்தவர் விசயம் பேச நேரமிருக்கு? அவனவனுக்கு ஆயிரம் வேலை மண்டைக்குள் ஓடுது…” என்று நிறுத்தினாள் .
“அந்த விசயம்….புகைப்பட விசயம்…” என்று சஞ்சு பயத்துடன் இழுக்க ,
“எல்லா விசயமும் ஒன்னு தான்” என்றாள் கோபமாக . பின், “நீ பெரிய சன்னிலியோன் , உன் படத்தைத் தான் தேடித் தேடி பார்க்க போகிறார்கள் , எல்லாம் மார்ப்பிங் , அதுவும் கேவலமான மார்ப்பிங் , அபிமான பிட்டு பட ரசிகர்கள் இதைப் பார்த்தவுடன், மார்ப்பிங் கண்டுபிடித்து விடுவார்கள்” என்று கடுப்புடன் பதில் அளிக்க ,
சஞ்சு அதிர்ந்து பார்க்க ,
“நீ சின்னபிள்ளை , உன்கிட்ட பேச வேண்டாம் என்று பார்த்தால் , நீ எங்கே விடுகிறாய் ?” என்று சலித்தபடி ,
“அந்தப் புகைப்படங்களின் முக்கிய நோக்கமே , உன்னைப் பயமுறுத்துவதும் , அதைக் கொண்டு உன்னை வேறு விதத்தில் பயன்படுத்துவதும் தான் . இணையத்தில் போட்டு விடுவேன் என்று பயமுறுத்துவார்களே தவிர அதைச் செய்யமாட்டார்கள்.”
“எப்படி இவ்வளவு நம்பிக்கையாகச் சொல்கிறாய்?”
“உன் மூளையைக் கொஞ்சம் கசக்கு , துருப்புச் சீட்டை வெளியே விட்டு விட்டால் அப்புறம் எப்படி உன்னை வைத்து , அவர்கள் காரியத்தைத் சாதிக்க முடியும்..?”
சஞ்சு யோசிக்க , “இந்த மாதிரி நெட்வொர்க்கின் டார்கட்டே , உங்களை மாதிரி இயல்பாகவே பயந்த சுபாவம் உடையவர்கள் இல்லை குடும்பத் துணையில்லாதவர்கள் இல்லை பிரச்சனை என்றால் எதிர்க்க முடியாத பொருளாதார , சமூகப் பிண்ணனி உடையவர்கள் தான் . மொத்தத்தில் எதிர்க்க பலம் இல்லாதவர்கள் தான்.”
“பெரும்பாலானோர் வெளியே சொல்ல பயப்பட்டு , இந்த வலையில் சிக்கிக் கொள்கிறார்கள் . மஞ்சு ஆன்ட்டியின் புண்ணியத்தில் , உன் விசயம் வெளியே வந்துவிட்டது இல்லை உன் அப்பா விசயம் மாதிரி உள்ளே வைத்துப் புளுங்கிக் கொண்டே இருந்திருப்பாய் , அவர்களிடம் வகையாக சிக்கியும் இருப்பாய்…” என்று விசயத்தை வேறொரு கோணத்தில் கீத்து விளக்க , சஞ்சு அதிர்ந்து போனாள்.
“சமீபத்தில் நடந்த பொள்ளாச்சி பாலியல் பிரச்சனையை செய்திகளில் பார்த்திருப்பாய் தானே?”
“ஆம்..”
“இப்போது புரிகிறதா? உண்மையில் நீ தப்பித்து விட்டாய். மஞ்சு ஆன்ட்டி தெய்வமாக இருந்து உன்னைக் காப்பாற்றி விட்டார்கள்….”
இதைக் கேட்டு, சஞ்சு அரண்டு போனாள்.
“மேலும் உனக்குப் பக்கபலமாய் உன் அண்ணன் , நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் . உன்னை மாதிரி பாதிக்கப்பட்ட எத்தனை பேருக்கு இப்படித் துணை கிடைத்திருக்கும் என்று யோசித்துப் பார் . இது நீ சந்தோசப் பட வேண்டிய தருணம் . அது புரியாமல் , தேவையில்லாததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்காய்…” என்று கீத்து ஆதங்கப்பட்டாள் .
சஞ்சுவின் முகத்தில் சற்று தெளிவு வர ,
“கல்லூரிக்குப் போக மறுக்க இது தான் காரணமா சஞ்சு…?” என்று கீத்து கேட்க ,
“ஆமாம்” என்று தலையாட்ட ,
“அப்பா திட்டினார் , அதனால் உணர்ச்சிவசப்பட்டுத் தவறான முடிவு எடுத்து விட்டாள் என்று மட்டும் தான் வெளியே விசயம் பரவியுள்ளது . அதனால் உன் கவலைகளைத் தூக்கிப் போடு . ரிலாக்ஸாக இரு.”
சஞ்சு முகத்தில் சோகம் கவிழ , கீத்துவைப் பார்க்க ,
“உன்னைத் தூக்கிக் கொண்டு ஓடியதை நிறைய பேர் பார்த்திருக்கிறார்கள் . மேலும் நீயும் , குருவும் தனியாக வந்து விட்டீர்கள் . ஆகையினால் விசயத்தை வெளியே சொல்லாமல் தவிர்க்க முடியாது சஞ்சு . நீ கல்லூரிக்குச் சிக்கிரம் செல்ல ஆரம்பித்தாய் என்றால் இந்த விசயம் முற்றுப் பெற்று விடும்.”
“கல்லூரியில் எப்படி சக மாணவர்களை சந்திக்க?” என்று கலங்கிப் பார்க்க ,
“கல்லூரிக்கு ஏன் வரவில்லை என்று உன் தோழிகள் போன் செய்யவில்லையே, ஏன் என்று யோசித்தாயா…?”
“காவல் நிலையத்தில் தானே போன் உள்ளது..” என்று இழுத்தாள் .
“தேவையானதை ட்ரேஸ் செய்து விட்டு , ஐந்து நாட்களில் திருப்பிக் கொடுத்து விட்டார்கள் . பின், உன் தோழிகள் தொடர்ந்து அழைக்க , தவிர்க்க முடியாமல் குரு , அப்பா திட்டியதால் உணர்ச்சி வசப்பட்டு விட்டாய் என்று சொல்லி இருக்கிறார் .உடனே உன் நண்பிகள் உன்னை பார்க்க வருகிறேன் என்று பதறினார்கள் . பின் சூழ்நிலையை விளக்கி , கொஞ்ச நாள் அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று குரு கூறியிருக்கிறார்.”
“ஓ..! , நான் இதையெல்லாம் யோசிக்கவில்லை…” என்றாள் சஞ்சனா .
“எப்படியும் இந்தச் செய்தி உன் கல்லூரியில் பரவியிருக்கும். நீ போகும் போது அது பழைய செய்தியாகியிருக்கும் . அதனால் ரொம்ப கவலைப்படாதே…”
“மேலும், உன் தோழிகள் அடிக்கடி போன் செய்து விசாரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் . நான் கூட உன் தோழிகளிடம் பேசினேன் . தனியாகக் கல்லூரிக்கு அனுப்ப பயமாக இருக்கிறது என்று எங்கள் கவலையைச் சொல்ல ,
“உடனே அவர்கள் கவலைப்படாதீர்கள் , கல்லூரிக்கு வரட்டும் நாங்கள் கூட இருக்கிறோம் என்றார்கள் .”
“ஓ….!” என்று மட்டும் சொன்னாள் சஞ்சு.
“இந்த தற்கொலை செய்தி , உனக்குப் புகைப்படம் அனுப்பியவனையும் அடைந்திருக்கும் , போலீஸ் கேஸ் என்ற செய்தி அவனை யோசிக்க வைத்திருக்கும் . அதன் பின் எந்தப் புகைப்படங்களும் வரவில்லை , எதற்கு ரிஸ்க் என்று தவிர்த்திருப்பான் என்று நினைக்கிறேன்…”
“இன்னும் போலீஸ் பிடிக்கவில்லையா.. ?” என்று பயந்து கேட்க ,
“ஆளை கண்டுபிடித்து விட்டார்கள் , பாதிக்கப்பட்ட மற்றவர்களிடம் பேசிவிட்டார்கள் . வலையும் விரித்தாகிவிட்டது , யார் பேரும் வெளியே வராமல் கேஸை முடிப்பதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது , சீக்கிரம் மீன் சிக்கிவிடும் என்று குரு சொன்னார்…” என்றாள் நம்பிக்கையாக .
முகத்தில் நம்பிக்கை வர , சற்றே சிரித்தாள் சஞ்சு .
“இப்போது நீ தெளிவாகிவிட்டாய் தானே?”
“ம்ம்…” என்று அரைகுறையாக தலையை ஆட்ட,
“தான் பேசியவுடன் கல்லூரிக்குப் பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விடமாட்டாள் என்பது புரிந்தே , “நல்லா டைம் எடுத்துக்கோ , கல்லூரி போவதைப் பற்றி யோசி…” என்று அன்புக் கட்டளையிட்டாள் .பின், “இனி வாக்கிங் வருகிறாய் , டீல்..” என்று கீத்து கையை நீட்ட ,
கீத்து கல்லூரி விசயத்தில் நேரம் கொடுத்ததே பெரிது என்று வேகமாக , “டீல்” என்று சஞ்சுவும் கை குலுக்கினாள்.
விவேக் பொறுமை இழந்து உள்ளே வர , அங்கே கை குலுக்கும் காட்சி அரங்கேறியது .
விவேக் கண்கள் விரிய , “என்ன விசயம் ?” என்று ஆர்வத்துடன் கேட்க ,
“இந்தியா சீனா ஒப்பந்தம்…” என்று கீத்து இடக்காகச் சொல்ல,