இரவு உணவை முடித்த பின் , “போலீஸ் நமக்கு நன்றாக உதவுகிறார்கள் . விசயம் வெளியே தெரியாமல் முடித்துவிடுவோம் என்று கூறியிருக்கிறார்கள் சஞ்சும்மா…”
இதைக் கேட்டு சஞ்சு ஆசுவாசமானாள் . “அண்ணா எல்லாம் சரியாகி விடும் இல்லையா…?” என்று அவன் கைப்பிடித்தாள் .
“நிச்சயமாக , இதெல்லாம் இன்றைய உலகில் ஒன்றுமே இல்லை…” என்று தைரியப்படுத்தினான் .மெதுவாக விவேக் சஞ்சுவிடம் , “என்னடா ஆச்சு ?”
சஞ்சு கீத்து விடம் சொன்ன அனைத்து விவரங்களையும் தெரிவித்தாள் .
அனைத்தையும் பொறுமையாகக் கேட்டவன் , “சரிடா சஞ்சு , அப்பா என்ன சொன்னார் ?”
சஞ்சு மனம் படபடக்க , நெற்றியில் வேர்வை பூக்க , கண்கள் அலைபாய , மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க , அவனைப் பார்த்தாள் .அவள் அவஸ்தையைப் பார்த்து பயந்து போனான் விவேக் .
“வேண்டாம் சஞ்சு , உனக்கு கஷ்டமாக இருந்தால் விட்டு விடு , பார்த்துக்கலாம் , எப்போது கம்ஃபர்டபிளாக ஃபீல் செய்கிறாயோ , அப்போது சொல்”
“அண்ணா , அண்ணா….” என்று தேம்ப ,
“ஒன்றும் சொல்ல வேண்டாம்…” என்று தலையை தடவினான் .
சஞ்சு மெதுவாக, “நான் சொல்வதைக் கேட்டு , நீ என்னைத் தப்பாக நினைக்க மாட்டாயே ?” என்று பயத்துடன் கேட்டாள் .
“நிச்சயமாக இல்லை” என்று உறுதியளிக்க ,
சஞ்சு கண்ணைத் துடைத்தபடி, “அப்பா என்னை நம்பவில்லை அண்ணா , அந்தப் புகைப்படங்களைப் பார்த்து விட்டு , ரீல்ஸ் செய்த மாதிரி , நீயாகப் போஸ் கொடுத்தாயா ? இது மட்டும் தானா? இல்லை வேறு அசிங்கங்கள் வருமா…?” என்று கேட்டார் .மேலும், “குடும்பத்திற்கு அவமானத்தைத் தேடித் தந்துவிட்டாய் , நீ இருப்பதே பாவம் என்றார்…” என்று அழுதாள்
இதைக் கேட்டவுடன் , அப்பாவின் மீது மிகுந்த கோபம் கொண்டான் . என்ன அப்பா இவர்?, சொந்தப் பொண்ணையே நம்பாமல் , யாரோ ரோட்டில் போகிற மூன்றாவது மனிதன் மாதிரி பேசியிருக்கிறார் என்று கொதித்தான் .அவளுடைய கஷ்டத்தில் ஆறுதலாக இல்லை என்றாலும் கூடப் பரவாயில்லை, இந்த மனிதர் குத்திக் கிழித்துள்ளாரே எனக் கடுங்கோபம் கொண்டான்.
தங்கை வேதனையை நினைத்து உருகினான் . இந்தப் பேச்சுக்குப் பின் , சஞ்சு எடுத்த முடிவு தப்பாகத் தோன்றவில்லை . யாராக இருந்தாலும் உணர்ச்சி வேகத்தில் செய்திருக்கக் கூடியது என்று தான் தோன்றியது. ஒன்றும் பேசாமல் தங்கையை இறுக்கி அணைத்துக் கொண்டான் . அவளின் கண்ணீர் துளிகள் அவன் சட்டையை நனைத்தது .
அண்ணன் அமைதியாக இருப்பதைக் கண்டு , “அண்ணா….” என்று அவன் முகம் பார்க்க , கண் கலங்கியிருந்தான் .
“அடுத்து என்ன செய்யலாம் ?” என்று யோசிப்போம் சஞ்சு .
அண்ணன் பொறுத்துப் போ என்றோ அப்பாவைப் பற்றித் தெரியுமே என்று சொல்லாமல் இருந்ததே சஞ்சுவிற்குப் பெரிய ஆறுதலாக இருந்தது . எல்லா விசயங்களையும் சொல்லி விடுவோமா? என்று நினைக்க , அதைச் சொல்ல முனைய , எங்கே தன் அண்ணன் தன்னை தப்பாக நினைத்து விடுவானோ என்று பயம் பிடிக்க , சொல்லாமல் அமைதியானாள் .
சிறிது நேரம் அமைதியே நீடிக்க , “என்ன அண்ணா செய்யலாம்?”
“தெரியவில்லை சஞ்சும்மா , யோசிப்போம்…” என்று தன் நிலையை எடுத்துச் சொன்னான் . மற்ற விசயங்களை கேட்போமா? என்று யோசிக்க , பின் வேண்டாம் , டாக்டரிடம் கலந்து பேசிவிட்டு முடிவு செய்வோம் என்று விடுத்தான் .
“ரொம்ப நேரம் ஆகிவிட்டது , நீ தூங்குடா , நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்று நம்பிக்கையூட்ட , சஞ்சுவும் கண் அசந்தாள் .
ஏதேதோ குழப்பங்களும் , கவலைகளும் மனதில் ஒட , வெகு நேரம் தூக்கமின்றி இருந்தவன் , தன்னை அறியாமல் உறங்கினான் .
அத்தியாயம் 48
மறுநாள் ராஜி வந்து பொறுப்பை எடுத்துக் கொள்ள , விவேக் அலுவகத்திற்கு சென்றான் . அவனுக்கு அங்கு பிராஜக்ட் பிரஸன்டேஷன் என்று வேலைகள் இழுத்துக் கொள்ள , மருத்துவமனைப் போக இரவானது . ராஜி மதியம் கிளம்பிவிட , மாலை ராதா வந்து இருந்தார் .
“ஸாரி ஆன்ட்டி லேட்டாகிவிட்டது , வேலை இழுத்துக் கொண்டு விட்டது…” என்று மன்னிப்பை வேண்டினான் .
“விடுடா விவேக் , ஒன்றும் பிரச்சனையில்லை , நாங்கள் பிளான் செய்து கொண்டோம்..” என்று சிரித்தார்.
“டாக்டர் வந்தாரா? என்ன சொன்னார் ஆன்ட்டி?”
“சஞ்சு நன்றாக இருக்கிறாள் . நாளை காலை ஒருமுறை பார்த்து விட்டு , டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்றார்…”
“ஆன்ட்டி, நான்கு நாள் லீவ் போட்டு விட்டேன் , அப்புறம் வொர்க் ஃபரம் ஹோம் வாங்கிருக்கிறேன். இனி கவலையில்லை”
“சரி விவேக் , நான் கிளம்புகிறேன்…” என்று சொல்ல , மீண்டும் தன் நன்றியைத் தெரிவித்தான் .
இரவு உணவை முடித்த பின் , சஞ்சு தூக்கம் வராமல் புத்தகம் படித்துக் கொண்டிருக்க , “ஏன்டா , தூங்கவில்லையா?”
“இல்லை அண்ணா , மதியம் நிறைய நேரம் தூங்கிவிட்டேன் . அப்புறம் காவல்நிலையத்தில் இருந்து ஏதேனும் தகவல் வந்ததா அண்ணா…?”
“இல்லைடா…” என்று அவளை நிமிர்ந்து பார்க்க ,
அவள் கண்களில் கலக்கத்தைக் கண்டவுடன் , “ஒன்றும் பயமில்லைடா , ரமேஷ் அங்கிளும் ஃபாலோ செய்கிறார். நல்ல முடிவு தான் வரும்” என்று தைரியமூட்டினான்.
“சரி அண்ணா…” என்று சொல்ல , சரியாக அப்போது விஜயன் அழைத்து , நிலவரத்தைக் கேட்க ,
விவேக் டிஸ்சார்ஜ் என்று சொல்லிக் கொண்டிருக்க , தற்செயலாக சஞ்சுவைப் பார்க்க , அவள் முகத்தில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது . உடனே சுருக்கமாகப் பேசி போனை வைத்தான் .
“நாளை வீட்டுக்குப் போகிறோமா அண்ணா ?” என்று பயப்பட ,
அவளின் கவலை புரிந்தது . “லீவ் போட்டிருக்கிறேன் , நீ தனியாக இருக்க மாட்டாய், நான் கூடவே இருப்பேன் சஞ்சும்மா…” என்று கை பிடித்தான் .
சரி என்று அவள் தலையை ஆட்ட ,
விவேக்கிற்குச் சட்டென்று கேட்க தோன்ற , “என்ன பிரச்சனை சஞ்சு? நீ தெளிவாகப் பேசுடா , அப்பத்தான் என்னால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை யோசிக்க முடியும்.”
சஞ்சு மௌனமாகவே இருக்க ,
“நீ மனம் விட்டுப் பேசினால் தான் , பிரச்சனையின் ஆழம் தெரிந்தால் தான் , என்னால் தீர்க்கமான முடிவு எடுக்க முடியும் சஞ்சும்மா…”
சஞ்சு கலக்கமாக பார்க்க ,
“அண்ணா மீது நம்பிக்கை இல்லையாடா? உன் நம்பிக்கையை பெறும் வகையில் நான் நடக்கவில்லையா? ஏன்டா உடம்பெல்லாம் காயம் செய்து வைத்திருக்கிறாய் ?” என்றான் வேதனையுடன் .
விவேக்கிற்கு விசயம் தெரிந்ததை நினைத்து அதிர்ந்தாள் . “அண்ணா…” என்றாள் கண்ணில் நீர் வழிய,
“சரி, உனக்குச் சொல்லப் பிரியமில்லை என்றால் விடு , ஆனால் இனி இந்த மாதிரி உன்னைக் காயப்படுத்திக் கொள்ள மாட்டேன் என்ற உத்தரவாதம் மட்டும் கொடு சஞ்சும்மா…” என்று வேண்டினான் .
அண்ணன் கலங்கியதைப் பார்த்தவுடன் , தாங்காமல் “அண்ணா…” என்று கட்டிக் கொண்டாள் .
அத்தியாயம் 49
விவேக் சஞ்சுவின் முகம் ஏந்த , “அண்ணா, அப்பா…” என்று தேம்ப , கண்ணீர் கொட்ட , “சஞ்சும்மா…” என்று கண்களைத் துடைத்து விட்டான் .
“நான் சொல்வதைக் கேட்டு என்னைத் தப்பாக நினைக்க மாட்டாயே அண்ணா ? எனக்கு உன்னை விட்டால் யாருமில்லை…” என்று மீண்டும் அழுக ,
“நான் இருக்கிறேன் , நீ கொலையே செய்தாலும் உன்னைக் காப்பற்றுவது என் பொறுப்பு” என்று விவேக் உணர்ச்சி வசப்பட ,
“அப்பா அதைத் தான் சொல்கிறார் அண்ணா…” என்று அழுதபடி கூற ,
விவேக் புரியாமல் திகைத்தான் . “என்னடா சஞ்சும்மா?” என்று மீண்டும் கேட்க ,
“நான் தான் அம்மாவை கொன்று விட்டேன் என்று அப்பா சொல்கிறார்…”
அவள் சொல்வது புரியாமல் , “புரியவில்லை சஞ்சும்மா…?”
“அன்று அம்மா வங்கிக்குப் போகாமல் , நான் போயிருந்தால் அம்மா இறந்திருக்க மாட்டார்கள் இல்லையா அண்ணா ? நான் போயிருக்க வேண்டும் , தப்பு செய்து விட்டேன்…” என்று புலம்பியபடி தலையில் அடித்துக் கொண்டாள் .
தலையில் அடிப்பதைத் தடுத்தவன் , “இதை அப்பா சொன்னாரா?” என்று கேட்கும் போதே குரலில் கடுங்கோபம் வெளிப்பட்டது
“ஆமாம் அண்ணா , ஒருமுறை அல்ல பலமுறை , நான் தான் கொலைகாரி என்று குற்றம் சாட்டுகிறார் . இந்த வார்த்தைகளை கேட்கும் பொழுதெல்லாம் வலி பொறுக்க முடியாமல் தான் , என்னைக் காயப்படுத்திக் கொண்டேன் . காயத்தின் வலியில் , இந்த வார்த்தைகளால் உண்டாகும் வலி தெரியாமல் போய் விடும் . அப்படியே அந்த வலியில் தூங்கி விடுவேன்…” என்று தேம்பினாள் .
இதைக் கேட்ட விவேக் சொல்ல முடியாத வேதனையில் உழல , அப்படியே அசையாது அமர்ந்திருந்தான் .
“நீயும் என்னைக் கொலைகாரி என்று நினைக்கிறாயா அண்ணா ?”என்று தவிப்புடன் கேட்க ,
சுதாரித்தவன் , “லூசு மாதிரி பேசாத சஞ்சும்மா , நான் எப்படி அப்படி நினைப்பேன்.”
“அப்பா நினைக்கிறாரே அண்ணா ? “
“அவர் சொன்னால் திருப்பிக் கொடுக்க வேண்டியது தானே?” என்றான் கோபமாக .
“இல்லை , அவர் சொல்லும் போது நான் தான் காரணமோ என்று தோன்றுகிறது…” என்று குமற ,
இந்தக் கடுஞ் சொற்களைப் பேசிய விஜயன் மீது கடுக்கடங்காத கோபம் வர ,
“சஞ்சும்மா, கொஞ்சம் யோசி , அன்று வேலையை கொடுத்ததே அப்பாதானே? அப்ப அவர் தானே கொலைகாரர்.”
“அம்மாவிற்குக் கொடுக்கவில்லையே ?”
“அப்ப , அது எனக்குக் கொடுத்த வேலை , நான் தானே போக மறுத்தேன் , அப்ப நான் தானே கொலைகாரன்”
“இல்லை அண்ணா , இறுதியில் எனக்குத் தானே ஒதுக்கப்பட்டது , நான் போயிருக்க வேண்டும் , தப்பு செய்து விட்டேன்…” என்று புலம்ப ,
தங்கையை தன்னிரக்கத்தில் தள்ளிய அப்பாவை நினைத்து அருவருத்தான் .
“சஞ்சும்மா…” என்று விவேக் ஏதோ சொல்ல வர ,
“நான் போயிருக்க வேண்டும் , அம்மா இருந்திருப்பார்கள், குடும்பம் நன்றாக இருந்திருக்கும் , நீயும் நிம்மதியாக இருந்திருப்பாய். இப்பப் பார் என்னைத் தலையில் தூக்கிக் கொண்டு சுமக்கிறாய் , இப்போது நடந்திருப்பது வேறு , உனக்குக் கூடுதல் மனவேதனை . போலீஸ் , கேஸ் என்று அலைகிறாய் , நாளை சோசியல் மீடியாவில் வந்து விட்டால்…., அய்யோ அண்ணா, பயமாக இருக்கிறது…” என்று அரற்றினாள் .
“ரொம்ப யோசிக்காதே , ஒன்றும் நடக்காது” என்று தேற்ற ,
“என்னால் குடும்பத்திற்குப் பெரிய தலைகுனிவு ஏற்பட்டுவிடும் , பெரிய அவமானமாகி விடும் .நான் உயிரோடு இருப்பதே பாவம் அண்ணா” என்று கத்தி அழ ,
விவேக் பயந்து போனான் ,சத்தம் கேட்டு வந்த ஓடி வந்த நர்ஸ் , நிலைமை புரிந்து , சஞ்சு தூங்க வைக்க ஊசி போட, சஞ்சு சற்று நேரத்தில் விசும்பியபடியே உறங்கிப் போனாள் . பிரச்சனையின் வீரியத்தில் அரண்டு போனான் விவேக்