மறுநாள் காலை போலீஸ் என்கொயரிக்கு வந்தார்கள். விவேக்கிடம் , “இன்றும் சில புகைப்படங்கள் வந்தது , ஆனால் அது அத்தனையும் மார்ப்பிங் செய்யப்பட்டவை. பெரிய மெனக்கெடல் இல்லாமல் , பயமுறுத்தும் நோக்கில் அனுப்பப்பட்டுள்ளன…”
“ஏதேனும் போன் வந்ததா?”
“அநேகமாக சஞ்சு கல்லூரிக்கு வராத காரணம் என்னவென்று தெரிய காத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதனால் தான் இவள் தோழிகளுக்கு உடம்பு சரியில்லை, ஒரு வாரம் கழித்து வருவேன் என்று இவள் அனுப்புவது போல் நாங்களே அனுப்பியுள்ளோம். இந்தச் செய்தி சென்றால் , நிச்சயமாக இரண்டு மூன்று நாட்களில் அழைப்பார்கள் என்று நினைக்கிறேன் . “
ஏற்கனவே கிட்டதட்ட பதிவுகள் வரக்கூடிய போனை டிராக் செய்து விட்டோம் . யார் பேரில் இருக்கிறது என்றெல்லாம் கண்டுபிடித்தாகி விட்டது . சஞ்சனாவின் கல்லூரி சீனியர் தான். சரியான சாட்சியுடன் பிடிக்க வேண்டும் என்று காத்திருக்கிறோம் . எப்படியும் சீக்கிரம் கேஸை முடித்து விடுவோம்” என்றனர் நம்பிக்கையாக .
பின்.”உங்கள் உடம்பு சரியாகிக் கொண்டு சீக்கிரம் கல்லூரிக்குத் தயாராகுங்கள் . படிக்கும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் . உங்கள் பயத்தைத் தான் அவர்கள் அறுவடை செய்கிறார்கள் . கவனமாக இருங்கள்…”என்றார் இன்ஸ்பெக்டர் .
விவேக்கைப் பார்த்து , “இன்று நாம் போய் கல்லூரி முதல்வரைப் பார்த்துப் பேசி வர வேண்டும்”
“போகலாம் ஸார்” என்று எழும்ப , அதே நேரம் கீத்து உள்ளே வந்தாள் . விவேக்கும் இன்ஸ்பெக்டரோடு கிளம்பினான் .
கீத்து அமைதியாகவே அருகில் இருந்த இருக்கையில் உட்கார்ந்திருக்க , “ஸாரி கீத்து…” என்று கை பிடித்தாள்.
“பேசாதே , ஸாரியாம் ஸாரி… எல்லோரும் எப்படி பயந்து விட்டோம் தெரியுமா ? உனக்கென்ன ஜாலியாக வந்து ஐ.சி.யு வில் படுத்துக் கொண்டாய் , ஒவ்வொரு நிமிடத்தையும் எவ்வளவு பயத்தோடு கடந்தோம் என்று எங்களுக்குத் தான் தெரியும் . உயிரே போய்விட்டது…”
“ஸாரி கீத்து…” என்று கட்டிக் கொண்டாள் .
“தொடாத சஞ்சு , எங்களைப் பற்றி கொஞ்சமாவது நினைத்தாயா ? எங்களை விடு , உங்க அண்ணனை நினைத்தாயா ? நான் சஞ்சுவை நல்லபடியாகக் கவனித்துக் கொள்ளவில்லை , அதனால் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டாளா என்று குரு ஒரே அழுகை தெரியுமா? மிகவும் கஷ்டமாகிவிட்டது…” என்று காய்ந்தாள் .
“படங்களை பார்த்தவுடன் , மிகவும் பயந்து விட்டேன் கீத்து…” என்று கண்கலங்கினாள் .
“போடி லூசு , நாம் இவ்வளவு , அழகாக , செக்ஸியாகவா இருக்கோம் என்று ரசித்துப் போவதை விட்டு விட்டு , அழுகிறாய்…” என்று கீத்து கேலி செய்ய,
“உன்னை…” என்று சஞ்சு அடி போட்டாள் , சஞ்சு சற்று இலகுவானாள் .
“போடி , அப்படி போட்டால் தான் என்ன ? ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான வீடியோ அப்லோட் செய்யப்படுகின்றன. இதில் உன் வீடியோவைத்தான் தேடிப் போய் பார்க்கப் போகிறார்கள்…” என்றாள் அசால்ட்டாக .
“பார்த்து விட்டால்…?”
“மார்ப்பிங்கென்று சொல்லி விட்டுப் போ , செய்திகள் பார்ப்பாய் தானே? எத்தனை தலைவர்கள் , பிரபலங்கள் என் குரல் அல்ல டப்பிங் , அது நானே இல்லை மார்ப்பிங் என்று கூவுகிறார்கள்…”
“ நீ இதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறாய். ஆனால் அவங்களுக்கு என்று வரும்போது தான் அதன் வேதனை புரியும்…” என்று அழுக ,
“உண்மை தான் சஞ்சு , அவர்களுக்கென்று வரும் போது வலி தனி தான் . வரவில்லை என்றால் மகிழ்ச்சி தான் . ஆனால் வந்து விட்டதே , அப்போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தான் யோசிக்க வேண்டும் அதைவிடுத்து இப்படி முடங்கக்கூடாது…”
சஞ்சு தெளிவில்லாமல் பார்க்க , “பிரபலமான மீம்ஸ் ஒன்று , இன்று சோஷியல் மீடியாவில் வைரலாக உலா வருகிறது , அது என்ன வென்று தெரியுமா ?”
தெரியாது என்று தலையை ஆட்ட,
“நம் குளியலறை மற்றும் படுக்கை அறை தவிர , அனைத்து இடங்களிலும் கேமரா உள்ளது என்று நம் முதல்வர் சொன்னது தான்…”
சஞ்சு ஆழ்ந்து கவனிக்க,
“இன்று எல்லோர் கையிலும் கேமிரா உள்ளது , குனிந்தால் , நிமிர்ந்தால் , எக்கினால் என்று ஏதோ ஒரு கோணத்தில் போட்டோ எடுத்துக் கொண்டு தான் இருப்பார்கள் . புகைப்படங்களில் சிக்குவதைத் தவிர்க்க முடியாது சஞ்சு….”
“நான் கவனமாக இருக்கவில்லை….” என்று புலம்ப,
“நாம் இருபத்தி நான்கு மணிநேரமும் அலர்டாக இருப்பது சாத்தியமா? போலீஸ் நாயால் கூட முடியாது… பொறுக்கிகள் இருக்கத்தான் செய்வார்கள் , பொறுக்கத்தான் பார்ப்பார்கள்….” என்று அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளில் அர்ச்சித்தாள் கீத்து.
பின், “அவர்களின் கெட்ட எண்ணங்களுக்கு , பயமுறுத்தல்களுக்கு நாம் வளைந்து விடக்கூடாது , அதான் முக்கியம் புரிகிறதா ?”
“எல்லாம் சரி தான் கீத்து , ஆனால் வீட்டிலே அப்பாவே அசிங்கமாகப் பேசிவிட்டார் , சொல்லக் கூடாதா…….வார்த்தைகளைச் சொல்லிவிட்டார் , அவரே இப்படிப் பேசும் போது ஊர் உலகம் என்ன சொல்லும்?” என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள் .
விஜயனை நினைத்துப் பல்லை கடித்த கீத்து , “ உன் அப்பா என்றைக்கு நல்ல வார்த்தைப் பேசியிருக்கிறார் சஞ்சு?” என்றாள் கடுப்பாய் .
“இல்லை கீத்து , ரொம்பப் பேசிவிட்டார்…” என்று மீண்டும் அழ,
“சரி வருத்தப்படாதே , குரு வரட்டும் , இதைப் பற்றிப் பேசி முடிவு எடுப்போம்…” சற்று தெளிவான சஞ்சு , கீத்துவைக் கட்டிக் கன்னத்தில் முத்தம் வைக்க ,
“இருடி , எங்காவது கேமிரா இருக்கப் போகுது , அப்புறம் நாளைக்கு ஷோசியல் மீடியாவின் வைரல் கண்டன்ட்டே நாம் தான் ‘ லெஸ்பியன் என்கௌன்டர்…” என்று கண் அடிக்க , சஞ்சு கலகலவெனச் சிரித்தாள் .
அத்தியாயம் 45
கல்லூரியில் முதல்வரைச் சந்தித்து, அனைத்து விவரங்களையும் கூற , முதல்வர் பயந்து போனார் . “ஸார் , இந்த விசயம் வெளியே தெரிந்தால் , கல்லூரி பெயர் கெட்டுப் போய்விடும்..” என்று பதட்டப்பட்டார் .
“எங்களுக்குப் புரியது ஸார் , நாங்களும் பெண் பிள்ளைகள் பெயர் கெட்டுவிடக்கூடாது என்று தான் யோசிக்கிறோம்…”
“மீடியா கையில் கிடைத்தால் அவ்வளவுதான் துவைத்துத் தொங்கப் போட்டு விடுவார்கள்…” என்று முதல்வர் கலவரப்பட ,
“அதனால் தான் , சத்தமில்லாமல் இந்தக் காரியத்தை முடிக்க வேண்டும் என்று நினைக்கிறோம் . அதற்கு உங்கள் முழு ஒத்துழைப்பு த் தேவை…” என்றார் இன்ஸ்பெக்டர் .
“கட்டாயம் ஸார்” என்று கல்லூரி முதல்வர் உறுதியளித்தார் .
பின் சுற்றுலா பற்றிய விவரங்களைப் பெற்றுக் கொண்டனர். அந்த மாணவனைப் பற்றிய முழு விவரங்களைக் கேட்டுக் கொண்டனர் . பின் பெண்கள் யாரேனும் இதற்கு முன் இந்த மாதிரி புகார் கொடுத்துள்ளார்களா? அல்லது யாராவது கல்லூரியில் இருந்து தகுந்த காரணங்கள் இன்றி பாதியில் நின்றிருக்கிறார்களா? . அப்படி இருந்தால், அவர்கள் முழு விவரத்தையும் இரண்டு நாளில் காவல் நிலையத்திற்கு அனுப்ப உத்தரவு விட்டுக் கிளம்ப முயல ,
“ஸார் , மாணவிகள் விவரம் மற்றும் அவற்றின் பாதுகாப்பு….” என்று முதல்வர் தயங்க ,
“மூச்சு , வெளியே வராது , ரகசியமாக விசாரணை நடக்கும் . கல்லூரியில் எந்த தொந்தரவும் இருக்காது…” என்று இன்ஸ்பெக்டர் உறுதி அளித்தார் . அங்கேயே ஒரு கான்ஸ்டபிளை , அந்த மாணவனின் நடவடிக்கைகளை பின் தொடர ஏற்பாடு செய்தார் .
பின் கல்லூரி முதல்வரிடம், “தைரியமாக இருங்கள் , எல்லாம் நல்லபடியாக முடியும்” என்று விவேக்கிற்கு நம்பிக்கை அளித்துக் கிளம்பினார்.
விவேக் மருத்துவமனை வர நேரமானது . விவேக் அறைக்குள் வர , சஞ்சனா சாப்பிட்டு உறங்கியிருந்தாள். கீத்து கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். காலடிச் சத்தம் கேட்டு கீத்து நிமிர , அசதியுடன் இருக்கும் விவேக்கைக் கண்டாள், “குரு சாப்பிட்டீங்களா?” என்று வாஞ்சையுடன் கேட்க ,
இல்லை என்று தலையாட்ட ,
“ச்சு.. , மணியைப் பாருங்க , நான்காக போகிறது…” என்று சலித்தவள் , “வாங்க , வீட்டுச் சாப்பாட்டு இருக்கிறது…” என்று எடுத்து வைக்க ஆரம்பிக்க ,
அவனும் அமைதியாக உட்கொண்டான் . மனதளவில் மிகவும் சோர்ந்திருந்தான் . கீத்து அவன் நிலையறிந்த்து எதுவும் பேசாமல் உணவைப் பரிமாறினாள் .சாப்பாடு உள்ளே சென்றவுடன் சற்று தெம்பானான் .
பின் கீத்துவிடம் , “சஞ்சு சாப்பிட்டாளா ?ஏதாவது வருத்தப்பட்டாளா? வலிக்குது என்று அழுதாளா ? டாக்டர் வந்தாரா..?” என்று கவலையுடன் கேள்விகளைத் தொடுக்க ,
“எப்படி குரு ? எங்கள் அம்மா சாப்பாடு சாப்பிட்டுத் தெளிவாகினீர்கள் ?” என்று வம்பு செய்ய ,
“உன்னன….” என்று சிரித்தபடி , “ஆன்ட்டி சமையல் நன்றாக உள்ளது…” என்றான் வேகமாக .
கீத்துவும் சிரிப்பில் இணைந்தாள். பின், “ஒன்றும் பிரச்சனையில்லை , நன்றாகச் சாப்பிட்டுத் தான் தூங்குகிறாள்”
“ஏதாவது பேசினாளா கீத்து ? “
“ம்ம்..” என்று நடந்த பேச்சுவார்த்தைகளை விளக்கினாள்.
“நன்றி , சரியாகப் பேசியிருக்கிறாய் , புரிந்து கொண்டாளா?” என்று ஆவலாக கேட்டான் .
“புரிந்த மாதிரி தான் மண்டையை ஆட்டினாள் . பார்ப்போம்…”
பின், “அங்கிள் கொஞ்சம் அதிகமாகப் பேசிவிட்டார் போல, ரொம்ப நொந்து போய் இருக்கிறாள்…”
“ம்ம்..” என்றான் கவலையோடு , “என்ன பேசினார் என்று சொன்னாளா ?”
“இல்லை”
ஏன் சொல்லத் தயங்குகிறாள்? என்னவாகயிருக்கும் ? என்ன பேசியிருப்பார் ….. என்று பல யோசனைகள் ஓட , விவேக் அமைதியானான் .
கீத்துவும் இரண்டு மூன்று முறை “குரு..” என்று அழைத்தும் , அதை உணரும் நிலையின்றி சஞ்சுவைப் பார்த்தபடி இருந்தான் .
கீத்து சற்று சத்தமாக அழைக்க , விவேக் உணர்வு பெற்றுத் திரும்ப , சஞ்சுவும் அந்த சத்தத்தில் சற்று நெளிய ,
உஷ்… என்று விவேக் வாயில் விரல் வைத்தபடி , வாசலை காட்ட , இருவரும் நகர்ந்து , வாசலில் போட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர்.
அத்தியாயம் 46
“என்னாச்சு குரு ?” என்று கீத்து விவரம் கேட்க ,
சற்றுத் தயங்கியவன் , பின் கீத்துவிடம் பேசினால் தெளிவு வரும் என்று தோன்ற , “பிரச்சனைப் பெரிதாக இருக்கும் போல… “என்று இழுத்தான் .
கீத்து புரியாமல் பார்க்க , மெதுவாக டாக்டர் சொன்ன விவரங்களைக் கூற ,கீத்து அதிர்ந்தாள் .
“உன்கிட்ட சஞ்சு இதைப் பற்றி பேசியிருக்கிறாளா…?”
“இல்லை குரு. எனக்கே இது அதிர்ச்சியான விசயம் , எனக்குத் தெரிந்திருந்தால் , நிச்சயம் உங்களிடம் பேசியிருப்பேன் . என் தோழியைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என நினைத்திருந்தேன் , ஆனால்…” என்று கீத்து யோசனையாக ,
“அடுத்து என்ன செய்வது ? எப்படி எடுத்துக்கொண்டு போவது? என்று எதுவும் புரியவில்லை கீத்து…” என்று கவலைப்பட ,
“பார்த்துக்கலாம் குரு , கண்டு பிடித்துவிடலாம்” என்று தைரிய மூட்டினாள் .
அப்போது சரியாக விவேக்கிற்கு அலுவலகத்தில் இருந்து போன் வர , பேச்சு தடைப்பட்டது . கீத்து யோசனையோடு அமர்ந்திருக்க , விவேக் போன் பேசிவிட்டு வந்தான் .
“என்ன விசயம் குரு?”
“நாளை கண்டிப்பாக அலுவலகம் போக வேண்டும் , பிராஜக்ட் சம்மிஷன் இருக்கு .இந்த மூன்று நாளே , என்னுடைய சூழ்நிலைக்காகப் பொறுத்துக்கொண்டார்கள்…” என்றான் யோசனையாக .
“இதில் என்ன யோசனை , சஞ்சுவிற்குப் பிரச்சனை ஒன்றும் இல்லை , நன்றாக இருக்கிறாள் , நாளை மறுநாள் எப்படியும் டிஸ்சார்ஜ் சொல்லி விடுவார்கள்..”
“இல்லை கீத்து , அப்பாவுடன் இவளைத் தனியாக விட பயமாக உள்ளது , தெளிவு வராமல் ஆன்ட்டி , அங்கிளிடம் பேசவும் யோசனையாக உள்ளது…” என்று தன் கவலையைத் தெரிவித்தான் .
“இதற்குத்தான் இவ்வளவு யோசனையா ? நான் பார்த்துக் கொள்கிறேன்.”
“இல்லை கீத்து , இன்னைக்கும் நீ தான் பார்த்தாய்…” என்று தயங்க ,
“குரு..” என்று முறைத்தாள் .
“உங்களைத் ரொம்ப தொந்தரவு செய்கிறோமோ?” என்று தயங்க ,
“அம்மா சாயங்காலம் வருவாங்க, அப்போது இதே வார்த்தையைச் சொல்லிப் பாருங்களேன் குரு..” என்றாள் வம்பாக . பின், “உங்களுக்காக யாரும் ஒன்றும் செய்யவில்லை , மஞ்சு ஆன்ட்டிக்குத் தான் செய்கிறோம்” என்றாள் எடக்காக .
விவேக் ஏதோ சொல்ல வர , மீண்டும் போன் ஒலிக்க , விஜயன் அழைத்திருந்தார் . அவர் விபரம் கேட்க , சுருக்கமாக விவரத்தைத் சொல்லி விட்டு வைத்தான் .சஞ்சுவும் முழிக்க , இருவரும் உள்ளே சென்றனர் .
பின் பொதுவான விசயங்கள் பேசிக் கொண்டிருக்க , பார்வையாளர் நேரத்தில் ராஜியும், ராதாவும் வர , இயல்பான சூழ்நிலை உருவானது .
கீத்து குருவிடம் , “நாளை அலுவலகம் போக வேண்டும் இல்லையா…? நீங்கள் வீட்டுக்குப் போங்கள் குரு”
“இல்லை , இன்று இரவு நான் இருக்கிறேன் , நாளை காலை யாரவது..” என்று தயக்கத்துடன் இழுத்தான் .
அவன் தயக்கத்தைத் கண்ட ராஜி , “எங்ககிட்ட என்ன தயக்கம் விவேக் , நாளை நான் வருகிறேன் , கீத்து நீயும் கல்லூரிக்குப் போ…” என்று முடித்தார் . பின் அனைவரும் கிளம்பினர் .