இரண்டு நாட்களாக கிடைத்த இடத்தில் அமர்ந்து , படுத்து , ஏதோ சாப்பிட்டு , மனம் நிறைய பயத்தோடு , சுற்றி புலம்பல்களையும் , அழுகைகளையும் , மரண ஓலங்களையும் கேட்டபடி உணர்வற்ற நிலையில் இருந்தான் . விதி தன்னை எதை நோக்கி இழுத்துச் செல்கிறது என்று புரியாமல் தவித்து நின்றான் விவேக் . வீட்டிலோ சஞ்சுவும் , விஜயனும் ஆளுக்கொரு மூலையில் இருந்தனர் .
அடுத்து வந்த நாட்களில் , பெரிய முன்னேற்றம் இல்லாமல் , நிலைமை மோசமாக , உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் மஞ்சு . ஐந்து நாட்கள் கடந்திருக்க , போராட்டத்திற்குப் பயனில்லாமல் , அனைவரின் வேண்டுதல்களுக்குப் பலனில்லாமல் மஞ்சுவின் உயிர் பிரிந்தது .விவேக் படாதபாடுபட்டு வீட்டில் விவரத்தைத் தெரிவித்துவிட்டு , தன்னைத் தேற்றுவார் , ஆற்றுவாரின்றி அடுத்தகட்ட வேலைகளைத் தொடங்கினான்.
கொரோனா மரணம் என்பதால் வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதியின்றி , நேராக இடுகாட்டிற்குத் தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நிர்வாகம் அறிவுறுத்த , நிதானமாக அழக் கூட நேரமின்றி , துக்கத்தைக் கொட்டித் தீர்க்க வழியின்றி, கண்ணில் நீர்வடிய , அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தான் .
மீண்டும் சுடுகாட்டிற்கான போராட்டம் , அலைப்புறுதல் தொடங்க , பல சுடுகாடுகளில் தகனம் செய்ய நேரம் கேட்க , நீண்ட காத்திருப்பைக் கேட்டு அயர்ந்து போனான் . பல தொலைபேசி அழைப்புகளுக்குப் பின்னால் , இறுதியில் ஒரு நல்ல மனிதரின் உதவி கிடைக்க ,
மீண்டும் ஆம்புலன்ஸ் பயணம் , உற்றார் உறவினர் இன்றி , இறுதி மரியாதையின்றி , ஊரடங்கு அமலில் இருக்க , கழுத்தில் ஒரு மாலை கூட இல்லாமல் , உயிரற்ற உடலான அம்மாவுடன் சுடுகாட்டை நோக்கிச் சென்றான் .
சஞ்சு ஓவென்று அழ , “மருத்துவமனையில் இருந்து வருகிறேன் , எனக்கு இன்னொரு இழப்பைச் சந்திக்க தைரியம் இல்லை…” என்று சொல்லி கண்ணீர் விட்டான் .
ஒருவரையொருவர் தொட்டு , அனைத்து , கைப்பிடித்து ஆறுதல் கூடச் சொல்ல முடியாமல் முகக் கவசங்களுடன் தள்ளி நின்றனர் .
அம்மாவைக் கட்டி அனைக்க முடியாமல் , தொட்டுக் கூட அழ முடியாமல் , தள்ளி நின்று முகம் பார்த்து , தங்களுக்காகவே வாழ்ந்த அம்மாவை வழியனுப்பி வைத்தனர்.
சற்று தள்ளி ராதாவும், ராஜியும் ,தங்கள் கணவர்களோடு வந்து , தன் தோழியைப் பார்த்து அழுதனர் .
மீண்டும் ஆம்புலன்ஸில் தனியாக , உடலாகக் கூட அம்மா இல்லாமல் , விரக்தி மனநிலையில், அம்மா இல்லாமல் வெறுங்கூடாகி விட்ட வீட்டை நோக்கிய விவேக்கின் பயணம் தொடங்கியது..
வீட்டில் நுழையும் போது , எப்போதும் கேட்கும் ராஜா என்ற குரலும் , சிரித்த முகமும் இல்லாத வீட்டைப் பார்க்க முடியாமல் விவேக் உடைந்து அழ ,
“அம்மா… அம்மா…” என்று சஞ்சு தேம்ப ,
விஜயனையும் மஞ்சுவின் எதிர்பாராத மறைவு , புரட்டிப் போட்டிருக்க , அடுத்து என்ன செய்வது ? என்று தெரியாமல் கலங்கி நின்றார் .
துக்க வீட்டில் சொல்லி அழ கூட ஆள் இல்லாமல் ஆற்றுவார் தேற்றுவாரின்றி , ஆளுக்கு ஒரு மூலையில் தள்ளி தள்ளி நின்று கண்ணீர் வடித்தனர் . அழுதழுது வறண்ட தொண்டைக்கு, ஒரு வாய் காபி கொடுக்கக் கூட ஆள் இல்லாமல் இருப்பது மிகவும் கொடுமை. எதிரிக்குக் கூட இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது .
வாழ்க்கை சூறாவளியாகச் சுற்றி அடித்து , பல உண்மைகளை , பொறுப்புக்களை விவேக்கின் முகத்தின் மீது வீசியிருக்க , கண்களைத் துடைத்துக் கொண்டவன் , நான்கு நாட்களுக்கு தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்து உள்ளே சென்றான் .
அடுத்து என்ன செய்வது? என்று தெரியாமல் , தங்கள் அறைகளில் முடங்கினர் . அடுத்து வந்த நாட்களை எப்படி கடந்தார்கள் என்பது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம் . பொழுது விடிந்தது , முடிந்தது என்று கடந்தது .
சஞ்சு அம்மாவின் மரண வலியைத் தாங்க முடியாமல் மீண்டும் கீறினாள் .
தொடரும்…..
கதைத் திரி -10.2
அத்தியாயம் 24
நியூ நார்மலில் துக்கங்கள் போனில் கேட்கப்பட்டன. விஜயன் அனைவரிடமும் அதிசயமாகப் பேசி ஆறுதல் தேடிக் கொண்டிருந்தார் . எங்கோ ஒரு மூலையில் ,தான் அனுப்பாமல் இருந்திருந்தால் , இது நேர்ந்திருக்காதோ? என்ற குற்ற உணர்ச்சி கொடிபிடிக்க , அதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள , தப்பிக்க , மஞ்சுவிற்கான மருத்துவமனை , அம்புலன்ஸ் அலைப்புறுதல்களை விளக்கிப் பேசிக்கொண்டிருந்தார் .
மஞ்சுவின் தோழிகள் இந்தத் துக்க நேரத்தில் உற்ற துணையாக நின்று சாப்பாட்டுத் தேவைகளைப் பார்த்துக் கொண்டனர் . மூன்று நேரமும் உணவினை டிஸ்போஸபல் டப்பாவில் வைத்து, வீட்டு வாசலில் வைத்து விட்டுச் சென்றனர்.
கீத்து சஞ்சுவிற்கு ஆறுதலானாள் , அவள் தவிப்பை , ஆற்றாமைகளைத் தாங்கிக் கொண்டாள் . “ஏன் கீத்து இப்படி நடந்தது? அம்மா இல்லாமல் என்ன செய்வேன்? என்று சஞ்சு புலம்பிக் கொண்டேயிருந்தாள். ராதா மற்றும் ராஜியும் சஞ்சுவுடன் மாறி மாறி பேசித் தேற்றினார்கள் .
மருத்துவமனை நிகழ்வுகள் விவேக்கை விரக்தியின் எல்லைக்குத் தள்ளி இருந்தது . தனி அறையில் அடைந்து கிடப்பது வெறுமை உணர்வைத் தூக்கிப் பிடிக்க , யார் இருக்கிறார்கள்? யாரிடம் பேசி என்ன ஆகப் போகிறது? என்று சுவற்றை வெறித்தப்படி படுத்துக் கிடந்தான் . அம்மாவை மிகவும் தேடினான் .அப்போது போன் ஒலிக்க , எரிச்சலாக இருந்தது . துக்கம் விசாரிக்க , ஆறுதல்படுத்த எனப் போன்கள் வந்து கொண்டே தான் இருந்தது. நண்பர்கள் பேசினார்கள் தான் , ஆனால் விவேக்கிற்கு இருந்த மனநிலையில் ஏதோ ஒட்டாத தன்மை இருந்தது .
ஆனால் கீத்துவின் நம்பரைப் பார்த்தவுடன் , ஏதோ இனம் புரியாத இதம் மனதில் தோன்ற போனை எடுத்தான் .
“குரு ஓ.கே.யா ? காய்ச்சல் எதுவும் இல்லையே?” என்றாள் கவலையாக .
“காய்ச்சல் இல்லை கீத்து” என்று மட்டுமே பதில் தர ,
“சாப்பிட்டீங்களா ? தூங்கினீங்களா ?” என்று மீண்டும் கேள்விகளை அடுக்க ,
“ம்ம்…”
குரு தன்னுடைய துக்கத்தைக் கொட்டி , அழுது தீர்க்க வேண்டும் இல்லையென்றால் பெரிய மன அழுத்தத்திற்கு ஆளாவான் என்று புரிந்து கொண்டாள். இவனைப் பேச வைக்க வேண்டும் என்று யோசித்தாள். அவள் வளர்ப்பு முறை , அவளுக்கு அந்தப் பக்குவத்தைத் தந்திருந்தது .
விவேக்கைப் பேச வைக்கும் பொருட்டு , மஞ்சு ஆன்ட்டி , கல்லூரி என்று ஏதேதோ நிறைய பேசினாள், தன்னந்தனியாக பத்து நாளாக அல்லாடியவனுக்கு யாராவது தன்னைத் தாங்கிப் பிடிக்கமாட்டார்களா ? என்று ஏங்கிக் கிடந்தவனுக்கு , கீத்து பேசியது மனதிற்குச் சுகமாயிருந்தது . யாரிடமாவது கொட்டித் தீர்க்க மாட்டோமா ? என்று காத்திருந்தவன் போல் ,
“முடியவில்லை கீத்து , எங்கே திரும்பினாலும் அம்மா நின்று ராஜாவென்று அழைப்பது போலவே உள்ளது .”
“தைரியமாக இருங்க குரு..” என்றபோது அவளுக்கும் குரல் உடைந்தது .
“முடியவில்லை கீத்து , கண்ணை மூடினால் மருத்துவமணையில் அம்மா மூச்சுக்குப் போராடியது தான் வருகிறது” என்று விசும்பினான் . மேலும்,“மருத்துவமனையில் கேட்ட அழுகுரல்கள் மற்றும் மரண ஒலங்கள் தான் காதிற்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது…” என்று கதறினான் .
இயல்பாக வயது முதிர்ந்தவர்களின் மரணத்தையே கடந்து வருவது கடினம். அதிலும் எதிர்பாராத அம்மாவின் மரணம் என்பதும் , அம்மாவிற்கான போராட்டத்தைத் தானாக தனியாகச் சந்தித்தது என்று அடி மேல் அடி வாங்கியிருந்தான் .சாதாரணமாக மரண நிகழ்வுகளில் சொந்தங்கள் , நண்பர்கள் தாங்கிப் பிடிக்க இருப்பார்கள் . ஆனால் இவனுக்கு அந்த கொடுப்பினைக் கூட இல்லாமல் தனி அறையில் அடைந்து கிடப்பதுக் கொடுமையிலும் கொடுமை என்பதும் கீத்துவிற்குப் புரிந்தது .
“தைரியமாக இருங்க குரு..” என்று மீண்டும் தேற்ற ,
“உலகமே இருண்ட மாதிரி இருக்கு. நாளைக்கு என்ன ? என்று நினைக்கவே பயமாகயிருக்கு…” என்று அரற்றினான்.
விவேக்கைப் பேச விட்டாள் . அனைத்துப் புலம்பல்களையும் பொறுமையாகக் கேட்டாள் .
பின் மெதுவாக , “உங்களை விட்டு ஆன்ட்டி எங்கேயும் போகமாட்டாங்க , உங்க கூடவே தான் இருப்பாங்க , உள்ளுக்குள் இருந்து வழி நடத்துவாங்க , தைரியமாக இருங்க குரு” என்றாள் தன்மையாக .
கீத்துவிடம் கொட்டியதால் , மனதில் இருந்த அழுத்தம் விடுபட , சற்று நிதானமானான் . கீத்துவின் பேச்சை உள் வாங்கத் தொடங்கினான் .
“உங்கள் வீட்டிலே நீங்கள் தான் சூழ்நிலையைச் சரியாகக் கையாள்பவர் . நீங்களே உடைந்து போனால் எப்படி ? வீடு என்னாகும் ? சஞ்சு என்ன செய்வாள்?, மஞ்சு ஆன்ட்டி இதை விரும்புவார்களா?” என்று அவனை யோசிக்க வைத்தாள் .
“சஞ்சுவைப் பற்றி உங்களுக்கு நல்லாவே தெரியும் , அவள் ஆன்ட்டியை சார்ந்தே இருந்து விட்டாள் . இனி நீங்கள் தான் அவளுக்கு எல்லாமே . நீங்க தைரியமாக இருந்தால் தானே , சஞ்சுவைப் பார்த்துக் கொள்ள முடியும் . வீட்டில் இருக்கும் மற்ற விசயங்களைக் கவனிக்க முடியும்..” என்று பொறுப்பை எடுத்துச் சொன்னாள் . பின் வேறு பேச்சுப் பேசி இயல்புக்குத் திருப்பினாள் .
சற்று தெளிவானான் .
கீத்து தினமும் போன் செய்து ஆறுதல் படுத்தினாள் .
ஐந்து நாட்களுக்குப் பிறகு அறையை விட்டு வெளியே வந்தவனுக்கு நிதர்சனம் முகத்தில் அடித்தது . அப்பா எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இல்லாமல் துக்கம் என்று வசதியாக ஒதுங்கிக் கொண்டார் . சஞ்சு தான் தட்டுத்தடுமாறி ஏதோ சமாளித்துக் கொண்டிருந்தாள் . வீட்டுச் சூழ்நிலையை அவதானித்தவன் , தானும் முடங்கினால் , ஒன்றும் நடக்காது என்று புரிந்தது .
அம்மாவை வெளியே அனுப்பியதால் , விவேக்கிற்கும் அப்பா மீது ஒரு கோபம் சுழன்று கொண்டே இருந்தது . ஆனால் அதே நேரம் , அவனுடைய நற்புத்தி , யாரையும் குற்றவாளி கூண்டில் ஏற்ற வில்லை . இயற்கையை வெல்ல முடியாது , இது நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது , அதனால் நடந்து விட்டது என்று தேற்றச் சொன்னது , ஆனாலும் அவரிடம் எதையும் கேட்கவோ , பேசவோ பிடிக்க வில்லை .
முதலில் ராதா , ராஜி இருவரையும் கான்ஃபிரன்ஸ் காலில் அழைத்து , “நீங்க இரண்டு பேரும் இல்லையென்றால் மிகவும் கஷ்டப்பட்டிருப்போம் , ரொம்ப நன்றி ஆன்ட்டி…” என்றான்.
அம்மாவிற்குக் கிடைத்த உண்மையான நட்பைக் கண்டு மெய் சிலிர்த்தான் .பின் மீண்டும்,“நன்றி ஆன்ட்டி” என்றவன் , “இனி நாங்களே சாப்பாட்டைப் பார்த்துக் கொள்கிறோம்.”
“எப்படிச் சமாளிப்பீர்கள் ?”
“ஒரு மெஸ்ஸில் பேசியிருக்கிறேன் ஆன்ட்டி , அவர்கள் மூன்று நேரமும் டெலிவரி செய்கிறேன் என்றிருக்கிறார்கள்..” என்ற விவரத்தைச் சொன்னான்.
“சரிப்பா , எந்த உதவியென்றாலும் கேள் , சங்கடப்படாதே…” என்று தைரியப்படுத்தினர் . மேலும், “எதையும் யோசிக்காதே , எந்த நேரம் , எந்த உதவியென்றாலும் கூப்பிடு விவேக்…” என்று அன்புக் கட்டளை இட்டு விட்டுப் போனை வைத்தனர் .
இப்போதும் வெளியே நிலைமை மோசம் என்றாலும் அரசாங்கம் பொறுப்பைச் சமாளிக்க கற்றுக் கொண்டிருந்தது . சில ஒழுங்கு முறைகளைக் கடைபிடிக்க ஆரம்பித்திருந்தது .ஆன்லைன் ஆப் மூலம் மூன்று வேலை உணவை ஏற்பாடு செய்து விட்டு அப்பாவிடம் சொன்னான்.
இதுவரை மஞ்சுவிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டு ஹாயாக இருந்தவரால் திடீரென்று எந்த வேலையையும் எடுத்துச் செய்ய முடியவில்லை , மஞ்சுவின் மரணம் விஜயனை ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்க , பிள்ளைகளிடம் மறுத்துப் பேச ஏதோ ஒரு தடை வர , சரியென்று தலையாட்டினார் .
ஆதார் அட்டை , பாஸ் புக் என்று எந்தப் பொருள் இருக்கும் இடமும் தெரியாமல் , தேடித் தேடி களைத்தார்கள் .
அப்பாவிடம் கேட்டால் , பணக்கணக்கைத் தவிர ஒன்றும் தெரியவில்லை , அச்சாணி இல்லாத வண்டி தடுமாறியது. காலைக் காப்பியிலிருந்து இரவு படுக்கும் வரை போராட்டம் நடந்தது . அம்மாவின் விஸ்வரூபம் முழுவதுமாகப் புரிந்தது , வீடு களையிழந்தது.
விவேக் சஞ்சுவின் துணை கொண்டு எப்படியோ சமாளித்தான் .