Advertisement

அத்தியாயம் எண்பது:

நிஜம் சில சமயம் ஜீரணிப்பது கடினம்.. அந்த நிஜங்கள் சில சமயம் மனிதரின் இயல்புகளை மாற்றிவிடுகிறது! ஏன் எதற்கு என்ற காரணம் வகுக்க யாராலும் முடியாது!   

ரஞ்சனி காலையில் குழந்தையை பால் குடிக்க வைத்துக் கொண்டிருக்க..  “எங்கயோ போயிட்டார் உங்க அண்ணன்” என்றபடி நாளிதழை ரஞ்சனியிடம் காட்ட… அங்கே  ஜகனும் ஈஸ்வரும் அவளின் கண்களுக்கு தெரியவில்லை பின் நின்ற அஸ்வின் தான் தெரிந்தான்..

“என்னை மிரட்டி என் வாழ்க்கையை ஒரு நாளில் மாற்றியவன். பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்ட பழி சொல்லுக்கு ஆளாக்கியவன்… ஆனால் இன்று என் அண்ணன்களுக்கு இன்றியமையாதவன்”

ஒரு ஆவேசம் மனதினில் பொங்க.. அந்த பேப்பரைத் தூக்கி விசிறி அடித்தாள், “ரஞ்சி என்ன இது?” என,

“அவன் நிக்கறான், அப்புறம் அந்த பேப்பரை எதுக்கு என்கிட்டே காட்டறீங்க” என்று கத்த…

“ஏன் முன்ன நிக்கற உன் அண்ணனுங்க கண்ணுக்கு தெரியலையா? எவ்வளவு பெரிய அச்சீவ்மென்ட் இது!”

“என்கிட்டே அவன் இருக்குறது எதுவும் காட்டக் கூடாது அவ்வளவு தான்!”

“ஷ், எதுக்கு இவ்வளவு கோபம்” என.. இந்த சத்தங்களில் பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தை அழ, குழந்தையை தூக்கிக் கொண்டவன், கையினில் வைத்துக் கொண்டு சிப்பர் கொடுக்க.. குழந்தையின் கண்களில் கண்ணீர் பார்க்கவும் அதனை எழுந்து துடைத்து விட்டாள்.

பத்து அவளைப் பார்க்கவும், “ம்ம்ம்ம், சொல்லுங்க நல்லவரே.. என்ன சொல்ல வர்றீங்க” என கிண்டல் பேச,

“ஆரம்பித்து விட்டாயா?” என்பது போல பத்து ஒரு லுக் விட..

“நீங்க ரொம்ப நல்லவங்க, நீங்க இப்படித் தான் பேசுவீங்க, ஆனா நான் அப்படி இல்லை” என்று பேச..

“ஆரம்பிக்காதே ப்ளீஸ்” என பத்து பாவமாய் பார்த்த போதும்.. ரஞ்சனி விடவில்லை.. விளாசித் தள்ள.. “நீ சரி பட்டு வர மாட்ட” என்றவன்.. அவளை இழுத்து அணைத்துப் பிடிக்க.. “விடுங்க, விடுங்க” என்று திமிறியவளிடம் “இதெல்லாம் பேசும் முன்ன யோசிச்சிருக்கணும்” என.

“நான் என்ன தப்பா சொன்னேன் நிஜம் தானே!” என்றாள் அப்போதும்..

பத்துவின் முகத்தினில் புன்னகை பூத்தது..  “கண்டிப்பா உண்மை தான்.. அதான் என் கையில இருக்கானே” என

“வெவ்வவே” என பழிப்பு காட்டி சென்றாள் ரஞ்சனி..

ஒரு புன்னகையோடு செல்லும் அவளையே பார்த்திருந்தான்.. ஒட்டியும் ஒட்டாத அவர்களின் வாழ்க்கையை சீர்படுத்தியது முழுக்க முழுக்கக ரஞ்சனியே..

என்ன முயன்றும் அவனால் ரஞ்சனியை நெருங்க முடியவில்லை என்பது தான் உண்மை.. அவனின் தந்தையை பார்த்து பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ.. ஒரு பெண்ணை மனைவியாகினும் அவளின் அனுமதியின்றி அவனால் நெருங்கவே முடியவில்லை.. வருடங்கள் கடந்த போதும்..

இதில் கோபத்தில் அடித்து.. பின் தேவையற்ற வார்த்தைகள் பேசி.. ஈஸ்வரோடு சண்டையிட்டு.. என இன்னும் இன்னும் சிக்கலாக்கிக் கொண்டான்..

ஒரு கட்டத்தில் அந்த திருமணம் நிலைக்குமா என்ற சந்தேகமே அவனுக்கு வந்து விட்டது.. பல மாதங்கள் ரஞ்சனி அவனிடம் முகம் கொடுத்து பேசவேயில்லை..

இன்னுமே எப்படி சரியாகிற்று என அவனுக்குத் தெரியாது.. ரஞ்சனியாகத் தான் சரியாக்கிக் கொண்டாள். யோசனைகளோடே அமர்ந்திருந்தான்.

அதன் பிறகு ஈஸ்வரோ வர்ஷினியோ முடிந்ததைப் பற்றி பேசவேயில்லை.. ஆனால் பேசி முடித்த அடுத்த நாள் காலையில் அவள் விழித்த போது வெளியே செல்ல தயாராகி நின்றிருந்தான் ஈஸ்வர்..

தோற்றத்தில் சற்று கவனமெடுத்துத் தயாராகி இருக்க.. அவனை தான் பார்த்து இருந்தாள்.. அவள் விழித்தது தெரிந்து அவளைப் பார்த்தவன்..

“ஹாப்பி டே” என்றவன்.. வர்ஷினி தன்னை கவனித்து பார்ப்பது புரிந்து, “இன்னைக்கு தான் முதல் முதலா என்னை பார்க்கற ஃபீல் கொண்டு வா வர்ஷ் மனசுல” என,

அதற்கு பதில் எதுவும் பேசாத போதும் முகத்தில் புன்னகை படர அவனைப் பார்த்தாள்.. காலையில் விழித்தும் இருக்கும் ஒரு சோம்பலான புன்னகை.. அணைத்து முத்தமிட தோன்ற.. அருகில் நெருங்கியவன்.. செல்லமாக கன்னம் தட்டி.. “டைம் ஆச்சு” என்று சொல்லி அவன் கிளம்ப..

முதன் முதலில் பார்ப்பது போல அவளால் முடியவில்லை.. முதல் நாள் முரளி திருமணத்தில் அவனை பார்த்ததை தான் நினைத்துப் பார்த்தாள். முகத்தில் ஒரு முறுவல் தானாகவே வந்தது..

ஈஸ்வரிடம் எல்லாம் சொல்லிவிட்டதால் மனது லேசாகியிருக்க.. அதன் மாற்றங்களை உடலில் உணர்ந்தாள் என்றால் மிகையல்ல.. பாரமான உடலே லேசானது போல இருந்தது..

இதோ இப்போது காரில் போகும் போதும் அதனை உணர்ந்தாள்.. அவள் காரோட்ட.. மறுபக்கத்தில் தாஸ்.. பின்புறம் அஸ்வின்..

“மெதுவா போங்க பாப்பா” என்று தாஸ் சொல்லிக் கொண்டே இருக்க.. சொல்லச் சொல்ல வேகமெடுக்கத் தோன்ற.. வேகமெடுத்தாள்.. ஈ சி ஆர் ரோட்டில்.. அவளின் உடன் படித்தவர்கள் ஒரு ஸ்டுடியோ வைத்திருக்க அதனை பார்வையிடச் சென்று கொண்டிருந்தாள்.

“நீங்க கொஞ்சம் பேசாம இருங்க!” என்று தாஸை அதட்டினான் அஸ்வின்.. “நீங்க சொல்லாம இருந்தாக் கூட மெதுவாப் போவாங்க.. சொல்லச் சொல்ல இன்னும் வேகமா போறாங்க!” என்று அதட்டிக் கொண்டிருந்தான்..

நிஜமாக பயமாக இருந்தது.. நூற்றி அறுபதை தொட்டுக் கொண்டிருந்தது. அது ஈஸ்வரின் போர்ச், ஆம்! ஈஸ்வர் வைத்திருந்ததை எனக்கு வேண்டும் என்று சொல்லியிருந்தாள்..

“அஸ்வின்” என்று வர்ஷினி ஒரு அதட்டல் குரல் கொடுக்க.. “ஆ ஊன்னா என்னை வாயை மூட வெச்சிடுங்க.. இந்த விஸ்வா வெளில தான் டெர்ரர் பீஸ்.. உங்களை ஒன்னுமே சொல்றதில்லை” என்று ஈஸ்வரையும் பேசினான்.

ஈஸ்வரின் பேர் சொல்லவுமே.. கோபமாக “நான் கூப்பிட்டேன், அவர் வரலை!” என்று புகார் படிக்க,

“எங்கேயாவது போகணும்னா முன்னமே சொல்லணும், அப்போ தான் ஃப்ரீ பண்ணுவாங்க, திடீர்ன்னு சொன்னா வேலையிருக்காதா அவருக்கு.. முன்னமே சொல்லிடுங்க, உங்களுக்கு ஃப்ரீ பண்ணாம அவர் யாருக்கு பண்ணுவார். நாங்க உங்க கூட வந்து இப்படி உயிரை கைல பிடிச்சிட்டு இருக்க வேண்டாம்” என்று ஈஸ்வருக்கு பரிந்து பேசுவது மாதிரி வர்ஷினியையும் நக்கல் செய்ய..

“ப்ச், எனக்கொன்னும் இல்லை!” என்று அவசரமாகப் சொல்லி, “நாம போறோம் இல்லையா என் ஃபிரண்ட் அவன் தான் அவரை கூட்டிட்டு வாங்க வாங்கன்னு அத்தனை தடவை சொன்னான்.. இப்போ அவன் கிட்ட என்ன சொல்வேன்!” என்று குறை பட்டுக் கொண்டே இடம் வந்ததும் நிறுத்தினாள்..

“என்னது கூட்டிட்டு வாங்கன்னு சொன்னானா? எவன் அவன்? அவ்வளவு பெரிய ஆளா? அவன் தான் வந்து பார்க்கணும் அவரை! இன்னும் நீங்க வளரணும்! அவரோட உயரம் என்ன? எப்போ கத்துக்குவீங்க இதை!” என சொல்லியும் கொடுக்க..

“அவரோட உயரம் என்ன? இருங்க பக்கத்துல நின்னு காட்டுறேன்!” என வர்ஷினி சொல்ல..

தாஸ் சிரித்து விட்டான்.. “ஹச்சோ பாப்பா, அவர் அப்படி சொல்லைலைங்க!” என,

“எப்படி சொன்னாலும் எனக்கும் தெரியும்.. அவன் என் ஃபிரண்ட் உரிமையா கேட்கறான்.. ஃபிரண்ட் ஷிப் குள்ள ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் கிடையாது” என,

அஸ்வின் அவளை முறைத்துப் பார்த்தான், பார்வை சொன்னது “உங்க ஃபிரண்ட்ஸ் தானே எனக்குத் தெரியாததா” என்பது போல.. ஆனால் அதை வர்ஷினி கவனிக்கவில்லை.

அவள் இறங்கிக் கொள்ள.. தாஸ் காரை பார்க் செய்யப் போக.. பெரிதாக இருந்த அந்த ஸ்டுடியோவை வெளியில் இருந்த கவனித்தாள்.. அந்த இடம் பெரிதாக இருக்க.. ஆட்கள் பரபரப்பாக உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருக்க.. எதோ ஷூட் நடக்கிறது என்று புரிந்தது.

உள்ளே செல்ல அவளை தொடர்ந்தான் அஸ்வின்..

அங்கே ஷூட் தான் சென்று கொண்டிருக்க…. இவளை பார்த்ததும் “ஹேய்ய்ய்யய்ய், வெல்கம், வெல்கம்!” என்று வேகமாக ஒருவன் வந்தான்..

“எப்படியிருக்க? சர் எங்கே?” என..

“அவருக்கு வேலை, வரமுடியலை, ஐ அம் ஃபைன் நீ எப்படி இருக்க?” என்று அவள் பேச ஆரம்பிக்க..

“ரொம்ப வெயிட் குறைஞ்சிட்ட சங்கீதா, லுக்கிங் மோர் ப்ரெட்டி லைக் எ மாடல்” என ..

ஒரு புன்னகை மட்டுமே பதிலாகத் தந்தவள்.. “திஸ் இஸ் மை ஃபிரண்ட் அஸ்வின்.. திஸ் இஸ் ப்ரித்வி!” என்று இருவரையும் அறிமுகம் செய்து “எப்போ ஸ்டுடியோ லாஞ்ச் பண்ணுனீங்க” என,

“ஜஸ்ட் த்ரீ மந்த்ஸ் தான் ஆச்சு” என அவன் சொல்லும் போதே “சர், ஷாட் ரெடி” என யாரோ கூப்பிட..

ப்ரித்வி தயங்க.. “போ ப்ரித்வி, நான் வெயிட் பண்றேன், ஒன்னும் அவசரமில்லை! ஸ்டுடியோ பார்க்கத் தானே வந்திருக்கேன்!” என..

அவர்களுக்கு சேர் போட சொல்லி.. ப்ரித்வி சென்று விட,

“அதென்ன சங்கீதா சொல்றாங்க” என்று அஸ்வின் கேட்க,

“என் முழு பேர் ஞாபகம் இல்லையா சங்கீத வர்ஷினி.. வீட்ல எல்லோருக்கும், ஆனா வெளில மோஸ்ட்லி சங்கீதா தான்!” என,

அதற்குள் அவளின் இன்னொரு தோழி நிஷா வந்திருந்தாள்.. “சங்கீதா எப்படி இருக்க?” என வேகமாக அருகில் வர..

“நீ எங்கே இங்கே?” என்றவளிடம்.. “அந்த பக்கி என்னை பத்தி சொல்லலையா, நானும் இதுல ஒரு பார்டனர்.. இன்னும் ரெண்டு பேர்..” என ஆரம்பிக்க..

“அதெல்லாம் ஒன்னும் சொல்லலை நிஷா அவன்” என.. நிஷா ஈஸ்வரை பிரிந்து வர்ஷினி ஹாஸ்டல் வந்த போது அவளின் ரூம் மேட்.

“நீ எங்க யாரோடவும் டச்ல இல்லை” என்று நிஷா குறைபட,

“இல்லை நிஷா, யு எஸ் போனதுக்கு அப்புறம் யாரோடவும் இல்லை. அன்னைக்கு ஷாப்பிங் போனப்போ தான் இவனைப் பார்த்தேன்.. ரொம்ப இன்வைட் பண்ணினான் வான்னு… வந்தேன்!” என,

“என்ன இன்வைட் பண்ணினானா? இது உன்னோட இடம்.. நீ மறந்திருக்கலாம்.. நாங்க எப்பவும் உன்னை மறந்தது இல்லை” என்று வளவளவென்று பேச ஆரம்பிக்க..

வர்ஷினி அவ்வளவு பேசுவாள் என்பதே அஸ்வினிற்கு அப்போது தான் தெரியும்..

இன்னும் இருவரும் வர… “இது ராஜ், இது மோஹித்” என்று அவர்களையும் அஸ்வினிடம் அறிமுகம் செய்ய…

“நீங்க தானே ஐ பீ எல் டீம் மேனேஜர்” என,

“எஸ், எஸ், இவர் தான் அந்த டேமேஜர்!” என்று வர்ஷினி கிண்டல் அடிக்க..

அந்த இடமே கலகலப்பானது.. அவர்கள் அஸ்வினிடம் பேச ஆர்வம் காட்ட.. இது அஸ்வினிற்கு மிகவும் புதிது, நிறைவாய் உணர்ந்தான். எப்படி இருந்த அவனின் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது.

அப்போது தான் ஷூட் முடித்து.. ப்ரித்வி வந்தவன்… அவனும் சேர்ந்து கொள்ள, அஸ்வின் ஃபோனில் கேம் ஆடிக் கொண்டு அவர்களின் மீது ஒரு கண் வைத்துக் கொண்டு இருக்க..

“அவர் கூட மாடல் மாறி இருக்கார்.. நடிப்பாரா?” என ப்ரித்வி அஸ்வினை காட்டிக் கேட்க, அப்போது அங்கே வர்ஷா வந்தாள்.. அவள் தான் அந்த விளம்பரத்தில் நடித்த மாடல்!

முதலில் அவள் அஸ்வினை கவனிக்கவில்லை… ப்ரித்வி இடம் “நான் கிளம்பறேன்” என,

“ஓகே, வர்ஷா பேமென்ட் நாளைக்கு குடுத்து விடறோம்!” என

அப்போது தான் அஸ்வினை கவனித்தவள் “ஹாய், அஸ்வின்!” என,

அதுவரையிலும் வர்ஷினி அவளை பார்த்தாலும், கவனிக்கவெல்லாம் இல்லை.. யார் என்பது போல பார்க்க..

“ஓஹ் ஹாய்” என்றபடி எழுந்து நின்று கை குலுக்க..

“எங்கே இங்கே? எப்படி இருக்காங்க விஷ்வேஷ்வரன்?” என,

இப்போது நன்றாக அவளை கவனித்தாள், ஆனாலும் ஒரு மிஸ்டர் போடாமல், ஒரு சர் போடாமல், அவள் ஈஸ்வரின் பெயரைச் சொன்னது சற்று கடுப்பைக் கிளப்ப..

அஸ்வினை ஒரு பார்வை பார்த்தாள்.. அஸ்வினும் உடனே வர்ஷினியை தான் பார்த்தான். அதுவரையிலும் சலசலவென்று பேசிக் கொண்டிருந்தவர்கள், எல்லாம் அஸ்வினையும் வர்ஷாவையும் தான் கவனித்தனர்.

அந்த அமைதி, அஸ்வினின் முகத்தினில் தெரிந்த ஒரு பாவம்..

“என்ன?” என்று வர்ஷாவை கேட்க வைக்க.. “ஹி இஸ் மை பாஸ்! எங்க பாஸை இப்படிக் கூப்பிடறதை நாங்க விரும்ப மாட்டோம்!” என

“உங்களுக்கு தானே பாஸ்! எனக்கு இல்லையே!” என வர்ஷா சிரித்தவாரே சொல்ல..

“ஓஹ், நீங்க எங்க டீமல் கண்டினியு பண்ணலையா, ஃபைன்!” என உடனே அஸ்வின் சற்று கடுமையாகவே சொல்ல..

“நான் எப்போ அப்படிச் சொன்னேன்” என வர்ஷா சொல்ல,

“எங்க டீம்ல நீங்க இருந்தா இப்படி சில விதிமுறைகளை பின் பற்றி தான் ஆகணும்!” என்று அஸ்வின் இன்னும் சீரியசாகப் பேச.. அந்த இடம் சற்று டென்ஷன் ஆனது.

இந்த மாடல் உலகம் வந்த பிறகு..  அவள் நடித்த விளம்பரங்கள் நன்றாகப் பேசப் பட.. இப்போது பிரபல நடிகர் இருவரின் படத்திலும் நடிக்க.. தெலுங்கிலும் பெரிய வாய்ப்புகள் வர.. வர்ஷாவை திரை உலகமும் விளம்பர உலகமும் சற்று தலையில் தூக்கி வைத்து ஆட.. அந்த கர்வம்.

கூடவே பழைய ஐ பீ எல் டீமிலும் அவளுக்கு அப்படி ஒரு மரியாதை! கூட அந்த ஓனரும் இவளிடம் வழிந்து கொண்டே திரிய, எப்போதும் பெரிய ஆள் போல அவள் நடந்து கொள்ள.. அந்த பாவனைகள் இங்கே செல்லுபடியாகாது என அவள் மறந்து விட்டாள். அஸ்வின் இப்படிப் பேசியதுமே அவனை அலட்சியமாய் பார்த்தாள்.

இதையெல்லாம் கூலாகத் தான் பார்த்திருந்தாள் வர்ஷினி.

“நீங்க டீம்க்கு மேனேஜர் தான், ஓனர் கிடையாது, பார்த்துப் பேசுங்க!” என,

“உங்களை பார்க்காம வேற எங்க பார்க்கிறேன்! உங்களை பார்த்து தான் பேசறேன்!” என்றான் அவளைப் போலவே அலட்சியமாக அஸ்வின்.

அது வர்ஷாவிற்கு கோபத்தைக் கொடுக்க..

“என்ன திமிரா?” என..

“ஹேய்! என்ன ஓவரா பேசற நீ?” என்று அஸ்வினும் பேச,

அதுவரை யாரும் தலையிடவில்லை.. அப்போது தான் ப்ரித்வி “கூல் வர்ஷா” என்றவன், “சங்கீதா என்ன பார்த்துட்டே இருக்க! உன் ஃபிரண்ட் கிட்ட சொல்லு!” என..

“அஸ்வின்” என்று அப்போது தான் வாயை திறந்தாள் வர்ஷினி!

திரும்பி அவளைப் பார்க்கவும்.. உதட்டின் மேல் கைவைத்து “பேசாதே” என்பது போல ஒரு சைகை செய்து.. “உட்கார்” என்பது போலவும் சேரைக் காட்டினாள்.

உடனே அமர்ந்து விட்டாலும் வர்ஷாவை முறைத்துப் பார்த்தான்! “ஹே, என்ன முறைக்கிற! இரு, உங்க பாஸ் கிட்ட சொல்றேன்!” என,

“எங்க பாஸோட பாஸ், இங்க தான் இருக்காங்க! சொல்லப் போனா என்னோட பெரிய பாஸும் அவங்க தான்! அவங்க கிட்ட சொல்லுங்க!” என்றான் அஸ்வின்.

“யாரு உங்க பாஸோட பாஸ்!” என பார்க்க..

“இதோ இவங்க!” என்று வர்ஷினியைக் காட்டினான்.

வர்ஷா பார்க்கவும் “சங்கீதா எங்க ஃபிரண்ட், கூட படிச்சவங்க.. விஸ்வேஸ்வரன் சர் ஃவைப்” என..

“ஓஹ்! வைஃபா” என்று வர்ஷினியை அவசரமாக ஆராய..

வர்ஷினி தயங்கவேல்லாம் இல்லை, அவளைப் பார்த்து ஒரு அறிமுக புன்னகை பூக்க…

சட்டென்று முகத்தை புன்னகைக்கு மாற்றியவள் “ஹாய்” என,

சரியாக அந்த நேரம் உள்ளே வந்த தாஸ்.. “நம்ம சார் வந்திருக்கார், உள்ள வரட்டுமான்னு கேட்டாருங்க பாப்பா!” என,

அங்கே எல்லோருக்கும் தாஸை தெரியும் அவன் தானே வர்ஷினியை தினமும் காலேஜ் கொண்டு விடுவான்..

“வந்திருக்காரா” என வர்ஷினி எழ…

“நீங்க இருங்க நான் போறேன்!” என்று அஸ்வின் செல்ல.. கூடவே ப்ரித்வியும் சென்றான்.

“உங்க மேனேஜர் பேசறார், நீங்க ஒன்னுமே சொல்லலை!” என்று கம்ப்ளைன்ட் வாசிக்க..

“அவருக்கு பாஸ் பக்தி அதிகம் அண்ட் அவர் சொன்னதும் சரி தான். எங்க சிஸ்டம்ல பேர் சொல்லிக் கூப்பிடற கார்ப்பரேட் கல்ச்சர் கிடையாது!” என புன்னகையுடனே அவள் சொல்ல.. புன்னகையுடன் சொன்னாலும், அதில் தெரிந்த நிமிர்வு, ஒரு கம்பீரம், நான் தான் இங்கே பாஸ் என்பது போன்ற ஆளுமை! அந்தக் கண்களில் தெரிந்த ஒரு அலட்சியம்.. அந்த அழகான நீல நிறக் கண்களை தான் வர்ஷாவும் பிரமித்துப் பார்த்தாள்.

ஆனாலும் என்னவோ அவமானமாய் தெரிந்தது வர்ஷாவிற்கு!

அதற்குள் ஈஸ்வர் உள்ளே வர.. வர்ஷினியின் பார்வை வர்ஷாவை விட்டு ஈஸ்வரிடம் நிலைக்க..

அருகில் வந்தவனிடம் “வரமாட்டேன்னு சொன்னீங்க!” என..

“அது மீட்டிங்க்கு முன்ன, ரூபாகிட்ட சொல்லிட்டு இருந்தேன்! நீ கூப்பிட்ட, நான் போகலைன்னு! மீட்டிங் ரூம் இழுத்து பூட்டி வெளில போடான்னு சொல்லிட்டா!” என,

“ஹ, ஹ, நம்பிட்டேன்!” என வர்ஷினி சிரிக்க..

ஈஸ்வர் என்ன பேசுகிறான் என்று அங்கிருந்த யாருக்கும் காது கேட்கவில்லை.. மெதுவாக அவளுக்கு மட்டும் தான் கேட்குமாறு பேசினான்.

“பின்னே மீட்டிங்க்கு எல்லாம் அரேஞ்ஜ் பண்ணிக் கொடுத்துட்டு நீயே பார்த்துக்கோன்னு ரூபா கிட்ட சொல்லிட்டு வந்தேனா என்ன? இல்லையே!” என பாவனையாக கண்களில் மட்டும் சிரிப்போடு சொல்ல..

வர்ஷினி வாய் விட்டு சத்தம் போட்டு சிரித்தாள். ஒரு சிறு மென்னகையுடன் ஈஸ்வர் பார்த்திருக்க.. அதனை பார்த்த வர்ஷாவிற்கு ஏனோ எரிச்சலாக வந்தது.. ஏன் என்றே தெரியவில்லை.. ஈஸ்வர் அவளை இன்னும் கவனிக்க கூட இல்லை..

அஸ்வின் பேசியது.. வர்ஷினி அவளிடம் பேசிய ஒரு நீயெல்லாம் எங்களுக்கு ஒரு ஆளா என்பது போன்ற பாவனை.. இப்போது ஈஸ்வர் கண்டுகொள்ளாதது.. “ஓஹ் இவர்கள் பெரிய ஆட்கள், நான் ஒன்றுமில்லாதவளா” என்ற ஒரு சிந்தனையைக் கொடுத்தது.. முன்பு அஸ்வினுக்கு இருந்தது மாதிரியான ஒரு சிந்தனை!

மெதுவாக ஈஸ்வர் அங்கிருந்தவர்களை பார்வையிட வர்ஷினி அவர்களை அறிமுகப் படுத்தியவள்.. வர்ஷாவின் புறம் வர.. “இவங்களை நீங்க தான் எனக்கு அறிமுகம் செய்யணும்” என்று ஈஸ்வரிடம் சொல்ல..

“எஸ், இவங்க நம்ம டீம் அம்பாசிடர் பழைய டீம்ல இருந்து அப்படியே ட்ரான்ஸ்ஃபர் ஆனாங்க” என்று சொன்ன விதமே..

முன்பே அவள் இங்கே இருப்பதை கவனித்து விட்டான் என வர்ஷாவிற்கு காமித்துக் கொடுத்தது. ஆனாலும் திரும்பிக் கூட பார்க்கவில்லை என்பது இன்னும் இன்னும் அவமானமாய் தெரிந்தது.

“ஹல்லோ சர்” என்ற வார்த்தை தானாக வந்துவிட.. ஒரு தலையசைப்போடு அதனை ஈஸ்வர் ஏற்ற விதம்.. அப்படி நீ இந்த டீமில் இருக்க வேண்டுமா என்ற யோசனையை அவளுக்கு கொடுத்தது!

“உன் பேர் வெச்சிருக்காங்க வர்ஷ்” என வர்ஷினியிடம் சொன்னவன்.. “அதுதான் அவங்க இருக்கட்டுமா வேண்டாமான்ற தாட்டே வரலை” என்றவன்..

வர்ஷாவிடம் “இவங்க என்னோட பாஸ்!” என்று அஸ்வின் சொன்னது போலவே சொல்லி “சங்கீத வர்ஷினி!” என..

“என்ன இவனின் மனைவியின் பெயர் என்பதினால் என்னை வைத்திருக்கின்றானா? இதை விட என்னை யாரும் அவமானப் படுத்த முடியாது” என்று தோன்றியது!

வருடங்களில் எதிரி உருவாவது வேறு! ஒரு நாளில் எதிரி உருவாவது வேறு! ஒரு நொடியில் உருவாவது வேறு! ஆனால் எப்படி உருவானாலும் எதிரி எதிரி தான்!    

 

Advertisement