Advertisement

அத்தியாயம் 9 1
தானே ஏற்படுத்திக் கொண்ட விதியின் விளைவுகளை சந்திக்க ஒரு வித குழப்பமான மனநிலையுடன் பெற்றோரைக் காணச் சென்ற நறுமுகை,  வீடு வந்து சேரும்போது நேரம் நள்ளிரவைக் கடந்திருக்க, “நைட் என்ன சாப்பிட்டே? சூடா பால் இருக்கு, எடுத்திட்டு வரட்டுமா?”, என்று ரங்கப்பா கேட்டார்.
“இல்லப்பா ஒன்னும் வேணாம், நீங்க எடுத்துக்கோங்க”
“உங்கம்மா சாப்பாடு போடாம நானே எடுத்துப் போட்டு சாப்பிட்டது,  எனக்கு லைட்-டா பசிக்கிறா மாதிரி இருக்குடா”, அவருக்கு தானாக போட்டு சாப்பிட்டு பழக்கமில்லை, அதிலும் முக்கியமாக தனியாக வேறு இருந்ததால் அரைகுறையாக சாப்பிட்டு இருந்தார்.
அவர் முகத்திலேயே அவரது பசி புரிய, “இருங்கப்பா நான் எடுத்திட்டு வர்றேன்”, என்று கிட்சன் சென்றாள்.
பாலை சூடு செய்து சிட்டிகை மஞ்சள்தூள், ஏலத்தூள், அரை ஸ்பூன் சர்க்கரை கலந்து கூடவே ஒரு பிஸ்கட் பாக்கெட்டையும் எடுத்துச் சென்றாள்.
வீட்டைப் பூட்டிவிட்டு வாசல் விளக்குகளை அமர்த்தி விட்டு வந்தார் ரங்கப்பா. “ப்பா, பால்”
“உக்காருமா, நீயும் எடுத்துக்கோ”
“இல்லப்பா எனக்கு…”, பால் சாப்பிட்டால் குமட்டலாக இருக்கிறது என்றா சொல்ல முடியும்?
“ச்சும்மா ரெண்டு பிஸ்கட்டாவது எடுத்துக்கடா”
“ம்ம். “, பெயருக்கு ஒன்றை கையில் எடுத்துக் கொறித்தாள்.
“ஆமா, என்ன முகமெல்லாம் வீங்கினாப்ல இருக்கு, கண்ணு வேற செவந்திருக்கு?”, பெண்ணை ஆராய்ந்தார்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா, ஆஃபீஸ் முடிச்சு உடனே ட்ராவல் பண்ணி வந்தேன் இல்லையா அதான்”, பிஸ்கட் தொண்டைக்குழியில் அடமாக நின்றது. முயன்று உள்ளே தள்ளினாள்.
“ஓ..? சரீ.. என்ன அந்த முக்கியமான விஷயம்? நான் எதிர்பார்த்..”
“உவ்வ்…”, வாயைக் கையால் மூடிக்கொண்டு பாத்ரூம் நோக்கி ஓடினாள்.
“ன்னாச்சுமா..?”, பதட்டமாக மகள் பின்னே வந்தார் ரங்கேஸ்வர்.
மொத்தமும்  வெளியே வந்திருந்தது. தண்ணீரால் தன்னை & இடத்தை சுத்தம் செய்து பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள். சோர்வில் கால்கள் நடுங்கியது.
“வல்லி ?”, இந்த வல்லியில் கேள்வி தொக்கி நின்றது.
“……”, நறுமுகை அவரை ஏறெடுத்து பார்க்க துணிவின்றி மிடறு விழுங்கினாள்.
“வல்லி…”, இது சின்ன பய உணர்வை பிரதிபலித்தது.
நறுமுகை நிமிர்ந்து அப்பாவைப் பார்த்து தலையை குனிந்து கொள்ள, அவள் கண்களின் குற்ற உணர்ச்சியை சரியாக படித்த ரங்கப்பா.., “வல்லீ..ஹ்”, என்றார் காற்றாய் போன குரலில்.
கால்கள் தள்ளாடியதால் ஏதும் பேசாமல் நறுமுகை, ரங்கப்பாவைக் கடந்து சென்று சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். ரங்கப்பாவின் பார்வையை தாங்கும் சக்தியின்றி, தடதடக்கும் மனதுடன் உட்கார்ந்திருந்தாள். ‘அப்பாவை எதிர் கொள்ளத்தான் வேண்டும், வேறு வழியில்லை’.
ஆனால் அவரோ எங்கோ இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார். நிமிடங்கள்  யுகமானது. அங்கிருந்த இருந்த மௌனத்தை கலைக்க பயமாக இருந்தது இருவருக்குமே. சில நிமிடங்கள் சென்றதும், அதிர்ச்சியில் இருந்து சற்றே தெளிந்த ரங்கப்பா, மெல்ல நடந்து வந்து ஒரு தீர்மானத்தோடு நறுமுகையின் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
“யாரு..?”
திடுமென அவளை கேட்க, அவர் கேட்டது காதில் விழுந்தாலும் சசியின் பெயரைச் சொல்ல தயக்கம் வர குன்றிய குரலில், “…ப்பா”, என்றாள்.
“இல்ல யாருன்னாவது தெரியுமா?  அதுகூட தெரியாம…?”, வார்த்தைகளால் எதிராளியை கொல்வது எப்படி என ரங்கப்பா நிரூபித்தார்.
அதிர்ந்த நறுமுகை, “ப்ப்ப்… பாஹ்! “, அப்பாவா ? அதுவும் தன்னைப் பார்த்து..?,  நெருப்பிலிட்ட புழுவானாள்.
அவருக்கே அவர் கேட்ட கேள்வியின் சாரம் அருவறுப்பைத் தர, மகளை பார்ப்பதை தவிர்த்தார்.
முகம் சுருக்கி சில நொடிகள் யோசித்தவர், “உன்ன இதுவரைக்கும் அடிச்சு பழக்கமில்ல வல்லி, ஆனா இப்போ கொன்னு போற்றுலாம் போல ஆவேசம் வருது”, வெறுப்பாக மொழிந்து, பின் சில நொடிகளில் விரக்தியாக சிரித்து, “ஆனா… நா முன்னமே யோசிச்சிருக்கணும் இல்ல?”
“எப்பவும் நீ என்னைவிட நாலு ஸ்டெப் முன்னாடி திங்க் பண்றேன்னு உங்கம்மாகிட்ட பெருமையா சொல்லுவேன்”
“ம்ஹும். இப்பவும் நீ நாலு ஸ்டெப் முன்னாலதான் போயிருக்க, ஆனா இத உங்கம்மாட்ட சொல்ல முடியாது”, பெருமூச்சுவிட்டு, “அவ தங்கமாட்டா”, மனைவியின் உடல்நிலை நினைவில் வர, கமறலாக கூறினார்.
“ஏன்மா? ஏன்?, உன்ன எவ்வளவு செல்லம் கொடுத்து சுதந்திரமா வளத்தேன்?, எப்பவாவது ‘நீ பொண்ணு.. இதெல்லாம் பண்ணகூடாது’-ன்னு சொல்லியிருக்கேனா?”, “நல்லவன்னு தெரிஞ்சா நீ யாரை சொன்னாலும் கல்யாணம் பண்ணி வைக்கறேன்னு சொல்லி இருத்தேனே? இப்படி அவசரப்பட்டு? ச்சே”, நெற்றியில் அடித்துக் கொண்டார். பின் சிறிது நேரம் தரையை வெறித்துவிட்டு, ஒரு தீர்மானத்தோடு, “சரி, இப்போ என்ன செய்யப்போற? எதோ முடிவோடுதான வந்திருப்ப?”
இல்லையே, முடிவெடுக்க முடியாமல்தானே இங்கே வந்தாள். புருவம் முடிச்சிட்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.
“யாரவன்? கல்யாணத்துக்கு பேசணுமா? இல்ல நீங்களே பண்ணிப்பீங்களா?”
திருமணமா? அதுவும் தன்னை நம்பாதவனுடன்? சசியின் முகம் ஸ்லைட் ஷோ வாக மனத்திரையில் ஓட, நறுமுகைக்கு முகம் இறுகியது, “ல்லப்பா, அவனோட பிரேக் அப் ஆயிடுச்சு”, மெதுவாக ஆனால் உறுதியாக கூறினாள்.
நறுமுகையை ரங்கப்பா பார்த்த பார்வையில் குழப்பம் + அதிர்ச்சி + அருவருப்பு, அனைத்திற்கும் மேலாக கோபத்துடனான வெறுப்பு. “அப்போ டாக்டரை பாக்கணும்?”
“….”
“ஸ்பீக் அவுட், சொல்லு வல்லி, என்ன பண்ணனும்?”, ரங்கப்பாவின் கோபம் வீடு முழுவதும் தெறித்தது.
“ப்பா…!”, வயிற்றில் பயப்பந்து உருண்டது.
“இல்ல.., பி கிளியர், ஏன்னா எங்களுக்கு இது புதுசு”
“வந்து.. அம்மாட்ட கேட்…”
ரங்கப்பா வெட்டினார், “நோ, அம்மாக்கு சொல்லக் கூடாது, ஏன் யாருக்குமே தெரியக்கூடாது, முக்கியமா என் வொய்ப் இதை தாங்க மாட்டா”
“…..”
“உனக்கு ரெண்டு ஆப்ஷன் தர்றேன், அந்த பையன் யாருனு சொல்லு, உடனே கல்யாணம் பண்ணி வைக்கிறேன், இல்லையா, உடனே டாக்டர்ட்ட போய் கிளீன் பண்ணிட்டு வந்திடலாம். அடுத்த மாசத்துல உனக்கும் நவநீத்-கும் மேரேஜ்.”
OMG, “ப்ப்பா!!!”, நறுமுகை இதை எதிர்பார்க்கவே இல்லை.
“இன்னிக்கு வரைக்கும் உன்னை உன் போக்குல விட்டுட்டேன், ஆனா இனி அதை எதிர்ப்பாக்காத”
“ப்ப்பா..!”
“ஏன் தயங்கற? தப்புக்கு உடந்தையா இருந்த அவன், அதை சரி பண்ண கூட நிக்க மாட்டானா?”
“இது.. வந்து.. அவனுக்கு தெரியாதுப்பா”
“சரி அவனைக் கூப்பிடு, கல்யாணம் பண்ணிக்க சொல்லு”
“அவன் இங்க இல்லப்பா, கனடா-ல இருக்கான்”
“கனடால தான இருக்கான், சந்த்ர மண்டலத்துக்கு போயிடலயே, வரச்சொல்லு”
“இல்லப்பா, நான் அவன் கூட பேசமுடியாது”
“ஏன்?”
“அவன் என்னை நம்பலைப்பா”,
சிறிது நேரம் மகளை உறுத்துப் பார்த்து, “உன்னை அவனுக்கு எத்தனை நாளா தெரியும்?”
“ஒரு வருஷமா..”, தந்தையின் பார்வை குத்தீட்டியாய் தைக்க, தலை குனிந்து “இந்த மூணு மாசமா நல்லா தெரியும்”, என்றாள் முணுமுணுப்பாக.
“இத்தனை வருஷமா உன்னை நம்பின எங்களையே நீ ஏமாத்தி இருக்கும்போது, ஜஸ்ட் ஒரு வருஷம் தெரிஞ்ச அவனை ஏமாத்தி இருக்க மாட்டியா?”, ரங்கப்பா குத்தலாக சொன்னார்..
நறுமுகைக்கு பெற்றவர்களை ஏமாற்றியதை ஒப்புக்கொள்வதா இல்லை அவன் வீண் பழி சொன்னதை தந்தையிடம் விளக்கி அதை மறுப்பதா? “ப்ப்பா.. இல்லப்பா, நான்.. நான்…”, அதற்கு மேல் பேச வார்த்தை வரவில்லை. மூளை யோசிப்பதை நிறுத்தியிருந்தது, நறுமுகைக்கு மிக சிக்கலான தருணம்.
“இப்போ உன் லைஃப்ல அவன் இல்ல, அப்போ நவநீத்தை கல்யாணம் பண்ணிக்கோ”, தீர்மானமாக.
“நோ பா, நா யாரையும் மேரேஜ் பண்ணிக்கறதா இல்ல”
“ஏன்? எப்பவும் லிவிங் டுகெதர் தானா?”, வார்த்தை எனும் முள் சவுக்கு தந்தையின் நாவில்.
முகம் கசங்கி…”ப்பா, நான் அவனை நிஜமா லவ் பண்ணினேன், உங்க கிட்ட சொல்லலாம்னு தான் இருந்தேன், ஆனா மூணு மாசத்துல இந்த ப்ராஜக்ட் முடிஞ்சா எனக்கு ப்ரமோஷன் வித் ஆன்சைட் டெபுடேஷன் கிடைக்கும். அது என் career அச்சீவ்மென்ட். அதுக்கப்பறம் உங்ககிட்ட விஷயம் சொல்லி, மேரேஜ் பண்ணிக்கனும்னுதான் நினைச்சிட்டு இருந்தோம், ஆனா அதுக்குள்ள எங்களுக்குள்ள மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆயிடுச்சு”, எச்சில் கூட்டி விழுங்கி ரங்கப்பாவை நேராக பார்த்து, “அவன் இல்லன்னா, நா லவ் பண்ணினது இல்லன்னு ஆயிடாதுப்பா, மத்த எதுவும் பொய்யின்னு போயிடாது. ப்ளீஸ்ப்பா, I can not marry anyone. இதையும் மீறி நீங்க போர்ஸ் பண்னினா, நா போயிடுவேம்பா”, என்றாள் கண்களின் நீர் கன்னத்தில் உருண்டோட.
ரங்கப்பாவுக்குமே கண்கள் திரையிட்டது, ஆசையாய் தவமிருந்து பெற்ற ஒரே மகள்.., அழுவதே தெரியாதபடி செல்லமாய் வளர்ந்தவள்.. போகிறேன் என்கிறாள். அது வீட்டை விட்டல்ல, உலகத்தை விட்டு என்பது புரியாதா அவருக்கு? துக்கம் தொண்டை அடைத்தது. சற்று நேரம் அமைதியாக இருந்தவர் “க்க்ஹம், இப்போ என்ன பண்ணனுங்கிற வல்லி?”
அதற்குள் நறுமுகையும் ஓரளவுக்கு தெளிவாகி இருந்தாள். “என்னால நவ்னீத்-ன்னு இல்லப்பா, யாரையுமே ஏமாத்த முடியாது. அவனோட நினைவுகள் எனக்கு எப்பவுமே இருக்கும்பா, வேற கல்யாணம் பண்ணி.., முடியாதுப்பா ரொம்ப கஷ்டம், எனக்கு இது.. இந்த குழந்தை தான் லைஃப், இது போதும்பா”
“அவசரப்பட்டு தப்பான முடிவெடுக்கற வல்லி..”
“இல்லப்பா, நா என்ன பண்றதுன்னு தெரியாத குழப்பத்துலதான் இங்க வந்தேன், என் குழப்பத்துக்கு காரணமே, first baby அபார்ட் பண்ணி குழந்தையில்லாம ரொம்ப நாள் கஷ்டப்பட்டு அப்பறம் நான் பொறந்தேன், அதுக்கப்பறம்தான் அவங்க ஹெல்த் போச்சுன்னு அம்மா அடிக்கடி சொன்னதுனாலதான்”
“கலைக்கணுமான்னு ஒரு செகண்ட் தோணுச்சுப்பா, ஆனா, இப்போ தெளிவா இருக்கேன்”
“நான் உங்க நம்பிக்கையையும் காப்பாத்தல, சசிக்கும் நம்பிக்கை வர்ற மாதிரி நடக்கல, at least எனக்குன்னு வந்திருக்கிற இந்த குழந்தையோட நம்பிக்கையையாவது நான் காப்பாத்தறேனே?”, நறுமுகை இறைஞ்சுதலாக கேட்டாள்.
“உன் லைஃப்…?”
“நீங்க இருக்கீங்க, அம்மா இருக்காங்க, இந்த பேபி இருக்கும்”.
“…”, இப்போது அமைதியாக இருப்பது ரங்கப்பாவின் முறையானது.
இமை விளிம்பில் நீர் கோர்த்து நிற்க, “என்ன தப்பு பண்ணினாலும் அவன் போனா மாதிரி என்னை விட்டுடுவீங்களா? வல்லீ வேணான்னு வெறுத்துடுவீங்களாப்பா?”, மொத்தமாக உடைந்தாள்.
அவளது கதறலில் ரங்கப்பாவின் தசையாடியது. சட்டென எழுந்து வந்து மகளின் தலையை வயிற்றோடு கட்டிக்கொண்டு, “உன்னை வெறுத்துட்டு எங்கடா போவோம்?”, தழுதழுத்தார்.
இருவரும் அவரவர் அழுகையில்.
சில நிமிடங்கள் மவுனமாய்க் கரைய, “நீ கவலைப்படாதடா, அம்மாட்ட நா பேசிக்கறேன், இப்போ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு”
“ப்பா. ஸாரிப்பா”, இத்தனை வருடங்கள் சரியாக முடிவெடுத்து, தனது பாதையை தானே தீர்மானித்து, அடைந்த வெற்றிகள் எல்லாம் ட்ராஷ் செய்ததுபோல, இப்போது இவளது நிலை. அழுகையை அறியாத நறுமுகை, மொத்தமாக ஒரே நாளில் அழுது தீர்த்தாள்.
“ச்சு, போடா போய் படுத்துக்கோ”, ரங்கப்பாவால் நறுமுகையை மன்னிக்க முடியாது, அதே சமயம் வெறுத்து ஒதுக்கவும் இயலாது. Blood is thicker than water இல்லையா?
நறுமுகை மெல்ல நடந்து அவள் அறைக்குள் சென்றாள். அறைக் கதவை சார்த்த ஆரம்பித்த போது, ரங்கப்பா தடுத்து, “திறந்திருக்கட்டும்”, என்றார். மகளின் ஓய்ந்து போன முகம் ரங்கப்பாவுக்கு பயத்தைக் கொடுத்தது.
நறுமுகை அவரைப் புரிந்து, ‘தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு நான் கோழை இல்லப்பா’ மனதில் நினைத்து, சரியென தலையசைத்துவிட்டு அமைதியாக சென்று படுத்தாள். கவலைகளை தந்தையின் தோளில் இறக்கி வைத்ததாலோ, அல்லது பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டதாலோ நறுமுகையை உறக்கம் உடனடியாக தழுவிக் கொண்டது.
ஆனால், ரங்கப்பாவின் உறக்கம் அன்றிலிருந்து காணாமல் போனது.

Advertisement