Advertisement

அத்தியாயம் 8
அன்று…
ரங்கப்பாவின் நம்பிக்கையை பொய்யாக்கிய தினம்…
பரபரப்பான சென்னை, அதே அமைதியான புறநகர், நகர்புற நெரிசல்கள் தாண்டி நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்பு வளாகம், ஒரு அழகான வழக்கமான காலை, நறுமுகையின் அதே சென்னை வீடு.. மைனஸ் சசி.
சசி…!  கிட்டத்தட்ட ஒரு வருடமாக room mate, பெங்களூருவுக்கு அடிக்கடி வேலை விஷயமாக சென்று தங்கினாலும், எத்தனை தவிர்க்க முடியாத நெருக்கடி இருந்தாலும் ஞாயிறு அன்று இங்கு வந்துவிடுபவன், அதிலும் இந்த மூன்று மாதங்களாக, இவர்கள் உறவு வேறு ஒரு பரிணாமத்திற்கு சென்றதாலோ என்னமோ ஆன்-சைட் என்றால் சடைத்துக் கொண்டே செல்வான்.
பதினைந்து இருபது நாட்களுக்கு மேல் ஆகிறது. அவன் வரவில்லை, அலுவலகத்தில் பேப்பர் தந்து விட்டான், கனடா போகப்போகிறானாம், விசா நடைமுறைக்கு காத்திருப்பதாக சொல்லக் கேள்வி. எக்கேடோ கேட்டு ஒழியட்டும். இனி என் கண்முன் வராமல் இருந்தால் போதும். என்ன ஒரு திமிர்? என்னைப் பார்த்து…?,  ஷ்ஷ்..  அவனை பற்றி நினைத்தால் கூட உடம்பும் மனதும் எரிகிறது.
அவனது கதகதவென்ற தோள் வளைவு பழகியிருந்தவளுக்கு, AC யினால்  சில்லிட்டுருந்த தலையணை உறக்கம் தருவதற்கு பதில், இயலாமையை தந்தது. இயலாமையின் விளைவான கோபத்தில் விழித்துவிட்டாள்.
‘இன்று அலுவலகதிற்கு சீக்கிரம் செல்ல வேண்டும், க்ளையண்ட் மீட்டிங். கிளம்பு, எழுந்து ஏதாவது வேலை செய், அவனை மற’, படுக்கையில் இருந்து எழுந்தமர நினைக்க.., நிற்க முடியாத அளவு தலைசுற்றல். எப்படியோ சமாளித்து சென்று பல் துலக்கியதும், அப்படி ஒரு குமட்டல், வயிறு காலியாகும்வரை. அனைத்தும் வெளிவந்துவிட்டது.
கால்கள் நடுங்க நின்றாள். ‘என்னவாயிற்று? food poison ஆகி இருக்குமோ? இரவு என்ன சாப்பிட்டோம்? சட். யாருக்கு தெரியும்? ஏதோ ஒரு துரிதஉணவு, அல்லது இலகுவாக சமைக்கும்படி இருக்கும் ரெடிமேட் பாக்கெட்-ல் சுடு நீர் ஊற்றி ஏதாவது உள்ளே தள்ளியிருப்போம்.
சுத்தம் செய்து முகம் துடைத்து, சமையலறை வந்தாள். பால் ஒரு கோப்பை நிறைய எடுத்துக் கொண்டாள், அதன் வாசமும் குமட்டலைத் தந்தது, முயன்று கட்டாயப்படுத்தி குடித்து, குளிக்க சென்றாள். மீண்டும் வாந்தி செய்தாள், இம்முறை லேசான ஐயம்.
‘இது.. வேறயோ? ஒருவேளை….?’  வாய் கொப்பளித்தாள். ‘ஆனா சேஃப்டியாத்தானே …?’  கிட்சன் சென்று எலுமிச்சை பிழிந்து ‘எதோ ஒரு தடவ இல்ல ரெண்டு..?’,சிறிது உப்பு, இரண்டு ஸ்பூன் சர்க்கரையை தண்ணீரோடு கலந்து ‘சான்ஸ் கம்மிதான்’ குடித்தாள். ‘ஆனா நிச்சயமா இல்லைன்னு சொல்ல முடியாதே?’, நறுமுகையின் மண்டைக்குள் உட்கார்ந்து சிவமணி  ட்ரம்ஸ் வாசித்தார். இதயத்தை பயம் கவ்வியது. நறுமுகையின் அன்றைய காலை நேரத்தில் சில நிமிடங்கள்             ..              ஃப்ரீஸாகியது.
தலையை உலுக்கிக் கொண்டு, ‘ஷ்… இப்போ எதை பத்தியும் யோசிக்காத, அதுக்கு நேரமில்லை, சாயங்காலம் பாத்துக்கலாம்’,
மாற்றுத் துணி எடுத்துக்கொண்டு, ‘அப்பாகிட்ட என்ன சொல்றது?’,
ஷவர் நீரின் சூடு சரியாக இருக்கிறதா பார்த்து, ‘இந்த வாமிட்டிங் சென்சேஷன் இல்லாமல் இருந்தால் ஓரளவு சமாளிக்கலாம்”,
ஷாம்பூ போட்டு தலையை அலசி, ‘குழந்தையா இருந்தா என்ன பண்றது?’
கண்டிஷனர் போட்டு,  ‘சசிகிட்ட சொல்லனுமா? என்னை நம்புவானா? இல்லை ஏதாவது பிராங்க் பண்றதா நினைப்பானா?’ குளித்து வெளியே வந்தாள்.
கருப்பு சட்டை டைப் குர்தி, டார்க் டேன் ஸ்லிம் ஃபிட் பேண்ட், mixed கலர் ஸ்டோல் அணிந்து, ‘அபார்ஷன் பண்ணனுமா?’, அறையிலிருந்து வெளிவந்தாள். கிச்சன் சென்று என்ன சாப்பிட, ‘யாரை கேக்கறது?’, என்று யோசிப்பதில் சில நொடிகளை கடத்தி, ‘ஷைலஜாட்ட கேக்கலாமா? இதை எப்படி எடுத்துப்பா? கேவலமா பாப்பாளோ?”தோசை சுட சோம்பல் பட்டு, பிரெட் பாக்கெட் திறந்து, அதில் இரண்டை டோஸ்டரில் போட்டாள். ‘அம்மாக்கு முதல் குழந்தைய அபார்ஷன் பண்ணினதால, அதுக்கப்பறம் மூணு குழந்தை நிக்காம போய்,  அதுக்கப்பறமாத்தான் நான் பொறந்தேன்னு சொல்லியிருக்காங்களே? அப்பறமா அவங்க ஹெல்த் ஸ்பாயில் ஆனதும் இதனாலதான்னு சொல்லி இருக்காங்களே..’.
பிரிட்ஜ் திறந்து, தக்காளி, லெட்யூஸ், குடை மிளகாய், மல்லி, புதினா சாண்டவிச்-க்கு ஏற்றாற்போல் நறுக்கி, வெளியே கூடையில் இருந்த வெங்காயத்தையும் ஸ்லைசாக நறுக்கினாள். டோஸ்ட்டான பிரெட்களின் ஒருபக்கம் சீஸ், மறுபக்கம் மயோநிஸ் இரண்டுக்கும் இடையில் காய்கறிகளை வைத்து, பிடிவாதமாக வயிற்றுக்குள் அனுப்பி.. நறுமுகை தயார். மூளை சந்தைக்கடையாய் கூக்குரல் போட்டுக்கொண்டே இருந்தது.
கூலர்ஸ் அணிந்து, ஹீல்ஸ் இல்லாத காலனியோடு (தலைசுற்றினால் பேலன்ஸ் போதாமல் விழுவேன்) வெளியே வந்தாள், இன்னும் ஐந்து நிமிடத்தில் அலுவலக பேருந்து வந்து விடும், வாசலுக்கு விரைந்தாள்.
பஸ் வந்தது, நட்புகள் கையசைத்து வரவேற்று, உட்கார இடம் தந்தனர். ஆபிஸ் சென்று அன்றைய அலுவலில் மூழ்கினாலும், மனம் இதிலேயே உழன்று கொண்டிருந்தது. , மதியம் ஷைலஜாவை தேட, அவள் வரவில்லை என்று தெரிந்தது, போன் செய்து ஏன் வரவில்லை என்று நறுமுகை கேக்க, “உனக்கே தெரியும், எங்களுக்கு மேரேஜ் ஆகி மூணு வருஷம் ஆச்சு, இஸ்ஸுஸ் இல்ல, சோ doc. கிட்ட அட்வைஸ் கேட்டு ரெண்டு பேரும் டேப்லட்ஸ் எடுத்துட்டு இருக்கோம். இன்னிக்கு என்னோட மன்த்லி cycle சரியா இருக்கறதால..”, முடிக்க முடியாமல் ஷைலஜா திணற, “ஓகே, ஆல் தி பெஸ்ட்”, என்று அலைபேசியை துண்டித்தாள்.
மதிய உணவாக வெறும் மாதுளை சாறு எடுத்துக் கொண்டு, மாலை ஆபிஸ் பஸ் வேண்டாம் என்று கூறி, டாக்சி அமர்த்திக் கொண்டு அவள் சென்ற இடம் மருந்தகம்.
ஒரு pregnancy test kit வாங்கி, வீடு விரைந்தாள். kit இரண்டு கோடு காண்பித்து அவள் மணி வயிற்றில் விது இருப்பதை உறுதி செய்தது. எதுவும் செய்யத் தோன்றாமல், கண்ணை மூடி படுக்கையில் சரிந்தாள்.
மனதில் பயம், அதை தூக்கி சாப்பிடும் அளவு உடல் சோர்வு வந்து ஆட்கொள்ள, அப்படியே உறங்கிப்போனாள். கனவில் “நீ வேற யார் கூடயாவது ரிலேஷன்ஷிப்-ல இருக்கியா?”, சசி கேட்டான்.
ACயின் 24 டிகிரியிலும் சடசடவென வியர்க்க விழித்தெழுந்தாள், செல்போன் அடித்தது. மெத்தையின் ஓரமாக கிடந்த கைப்பையை துழாவி போன் எடுத்து, “ஹலோ அப்பா”,
“என்னடா பண்ற?”
“சும்மாதான் இருக்கேன்பா, கொஞ்சம் டையர்டா இருந்தது தூங்கிட்டேன்,  சொல்லுங்கப்பா”
“நானும் சும்மாதான் இருக்கேன் வல்லி, உங்கம்மா சித்தி வீட்டுக்கு போயிருக்கா, அவங்க மாமியார் வருஷ திதி கொடுக்கற நாளாம், தில்லை (நாயகி) வந்து உங்கம்மாவை கையோட கூட்டிட்டு போயிட்டா, மணி ஏழரைதான் ஆகுது, டிவி போர் அடிச்சது, அதான் உனக்கு போன் போட்டேன்”, சோம்பலாக கொட்டாவி விட்டு பேசினார்.
“ப்பா, ஒரு நிமிஷம் லைனை ஹோல்டு பண்ணி வைங்க”, போனில் ஈஸ்மைட்ரிப் (ease my trip) வெப்சைட் போய், திருச்சிக்கு இன்று இரவு விமானம் இருக்கிறதா என்று பார்த்தாள், இருந்தது, “பா, நைட் வீட்டுக்கு வர்றேன், அம்மா காலைல வந்துடுவாங்கல்ல?”
“ஆமாடா, வந்துடுவா. சொல்லு என்ன திடீர்னு..? வீகென்ட் கூட இல்ல? அதுவும் இந்த நேரத்துல..?”
“அது.. வந்து.. ஒரு முக்கியமான விஷயம்பா”, சற்று தயங்கி தயங்கி சீரியஸாக நறுமுகை சொல்ல…
“ஓஹ். வாவ்.., ஒரு வழியா முடிவு பண்ணிட்டியா? யார் அந்த அன்லக்கி பெல்லோ? அவனுக்கு இப்போவே என் ஆழ்ந்த அனுதாபங்கள்”, ரங்கப்பா சிரித்தார்.
‘யாரையாவது மனதில் நினைத்திருந்தால் தயங்காமல் சொல்லிவிடு, நல்லவனாக இருக்கும் பட்சத்தில் ஜாதி, மத பொருளாதார வேற்றுமை பாராமல் சம்மதம் சொல்கிறேன்’, என்று மகளிடம் எப்போதோ சொல்லியிருந்தார், அப்படியான ஒரு விஷயத்தை மகள் சொல்லப் போகிறாள் என்று யூகித்து, அவரது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
நறுமுகையோ முதலில் அம்மாவிடம் சொல்லி…? அம்மா தாங்குவார்களா? எதுவாக இருந்தாலும் சொல்லத்தான் வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
இவளைப் பொறுத்தவரை அம்மாவை  விட அப்பா க்ளோஸ். கிட்டத்தட்ட ‘அபியும் நானும்’ அப்பா பிரகாஷ் ராஜ் அவர். ஆனால், ரங்கப்பா நறுமுகையின் செயல்கள் எதற்கும் தடை சொன்னதில்லை. அவளது படிப்பாகட்டும், காம்பஸ் நேர்முகத் தேர்வில் கிடைத்த வேலை, சென்னையில் இவள் வசிக்க வாங்கிய தனி வீடு எதிலும் தலை நுழைத்து ஆதிக்கம் செலுத்தியதில்லை.
அவளது வீட்டில் வாடகை கொடுத்து தங்கி இருந்தவர்களைப் பற்றி முதலில் கேள்வி கேட்டு தெளிவுபடுத்தி கொண்டவர், பின் அதிலிருந்த வசதியை எண்ணி, முக்கியமாக பெண் தனியாக இல்லை, சக தோழியரோடுதான் இருக்கிறாள் என்ற எண்ணத்துடன் அது குறித்து கவலைப் படுவதை விட்டு விட்டார். தவிர, வாரத்தில் இரண்டு நாட்கள்தான் மகள் வீட்டிற்கு வந்துவிடுகிறாள் என்பதால் நறுமுகையின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை.
மகள் மீதான நம்பிக்கை ஒரு காரணம் என்றால் மனைவி மீது அவரது அளப்பரிய காதல் இன்னுமொரு காரணம். மதிநாயகியின் இதயம் பலவீனமானது என்று அறிந்த நாளில் இருந்தே முடிந்தவரை, அவரை தன் பார்வை வட்டத்தில் நேரடி கண்காணிப்பிலேயே வைத்திருந்தார்.
தந்தையைப் பற்றி நினைத்த நறுமுகைக்கு, தனது இந்த நிலைக்கு  அவரிடமிருந்து எந்த மாதிரி எதிர்வினை வரும் என்பதை யூகிக்க பயமாக இருந்தது. மற்றவர்களின் பார்வைக்கு தான் என்னவாக தெரிவோம்? என்ற எண்ணம் எப்போதுமில்லாமல் மேலோங்கியது. திருச்சி செல்ல விமான நிலையத்திற்கு கிளம்பி விட்டாள். விமானத்தில் ஏறி இருக்கையில் அமர்ந்து சீட் பெல்ட் போட்டுக் கொண்டு, கண்மூடி தலையை சாய்த்து சசி தனது வாழ்க்கையில் நுழைந்த அந்த நாட்களை அசைபோட்டாள்.
ஒரு வருடம் முன்பு…
தனது குழுவிற்கு பயிற்சி கொடுக்கும் மேலதிகாரியாக, பெங்களூருவில் இருந்து வந்த சசி சேகரன்.. ‘வாரம் இரண்டு நாட்கள் அதுவும் பகலில் மட்டும், தான் ஓய்வெடுக்க அலுவலகம் அருகிலேயே அறை யாரிடமாவது இருந்தால் ஷேர்  செய்து கொள்கிறேன்  என்று staff மீட்டிங்-ல் கேட்ட போது, இவர்கள் குழுவில் நறுமுகையின் வசிப்பிடம் அலுவலகத்திற்கு பத்து நிமிட பயண தூரத்தில் இருப்பதை, இவளுடன் தங்கி இருந்த ஷைலஜா அவனுக்கு தெரிவிக்க, “நான் தங்கறதுல உங்களுக்கு எதாவது ப்ராபளம் இருக்கா? யூ மைண்ட்?”, என்று புருவம் உயர்த்தி சசி கேட்டபோது, ‘ஆமாம் எனக்கு பிரச்சனைதான், ஏனெனில் நீ ஆண் நான் பெண்’ என்று சட்டென சொல்ல நறுமுகைக்கு வரவில்லை. “no, not at all”, என்று சொல்லி அவன் தங்க சம்மதம் தெரிவித்தாள்.
இதற்கு முன்பும் அவள் வீட்டில் இரண்டு பேர் தங்கி இருந்தார்கள், ஆனால் அவர்கள் இருவரும் பெண்கள், சென்ற மாதத்தில் இருந்து ஷைலஜா இவளது ஹௌஸ் மேட். சைலஜாவின் கணவன் அவர்களது பழைய வீட்டை இடித்து புதிதாக கட்ட ஆரம்பித்து இருப்பதால், அலுவலகம் சென்று வர வசதியாக நறுமுகையின் வீட்டில் தங்கி இருக்கிறாள். வீட்டின் கட்டுமானத்தை மேற்பார்வையிட, அருகிலேயே வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்திருந்தாலும் அவனது கணவன் சூரஜ், வார இறுதியில் இங்கு வந்து விடுவான்.
அண்ணன் (அம்மாவின் சகோ தில்லைநாயகியின் மகன்) பிரதீப், பாஸ்போர்ட் விசா நடைமுறைகளுக்காக அவ்வப்போது வந்து போய்க்கொண்டு இருந்தான். அவனது பயணம் இன்னும் பத்து நாட்களில் என்னும் அளவுக்கு வந்திருந்தது. நவனீத்தும் (மாமன் மகன்) கனடாவில் ஆராய்ச்சி படிப்பிற்கான ஸ்டுடென்ட் விசா அப்ளை செய்திருந்தான். சோ, அவனும் வர போக இருப்பான். அவனுக்கும் விசா முடிவாகி இருந்தது. அவர்கள் இருவருக்கும் நறுமுகையின் வீட்டில் இதுவரை தங்கி வந்தவர்களுடன் ஓரளவுக்கு அறிமுகமானவர்களே. ஆனால் இப்போது? உடன் தங்குவதாக கூறும் சசி முற்றிலும் புதியவன். அவர்களுக்கு மட்டுமல்ல, நறுமுகைக்குமே, அனால் தன்னுடன் சைலஜா இருப்பதால் ஒப்புக்கொண்டாள்.
சசி சொன்னது போல நறுமுகையின் வீட்டிற்கு முதல் இரண்டு மாதங்களுக்கு, வார வேலை நாட்களில்.. அதிலும் முக்கால் வாசி புதன் வியாழன் வருவான், அலுவலகம் வந்து அவனது வேலைகளை முடித்து இரண்டு மணி நேரத்தில் வீடு சென்று விடுவான். நறுமுகை அலுவகம் முடித்து செல்லும்போது, அவன் பெரும்பாலும் வெளியே சென்று இருப்பான் அல்லது அவனது அறை அடைத்துக் கிடக்கும். அதிக பட்சமாக வாரத்தில் ஒரு இரவு தங்குவான். மூவருக்கும் தனித்தனி சாவிகள் உண்டு என்பதால், ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டிய அவசியம் கூட இல்லை.
அலுவலகம் கணிசமான தொகையை வாடகை என்று சசிக்கு தர, அதை அப்படியே நறுமுகையின் கணக்கிற்கு மாற்றிவிடுவான். சைலஜாவும் வாடகை என்று ஒரு சிறு தொகையை தந்தாலும், (நறுமுகை & சைலஜா) இருவருமாக வீட்டுச் செலவுகளை & வேலைகளை பகிர்ந்து செய்வார்கள். தவிரவும் வீட்டை சுத்தம் செய்ய அந்த குடியிருப்பு அசோசியேஷன் சார்பாக ஆள் அமர்த்தி இருந்தது.
நறுமுகைக்கும் வீட்டுத் தவணையை முன்கூட்டியே செலுத்த இந்த உபரி வருமானம் வசதியாக இருந்தது. அனேகமாக நறுமுகையின் அனைத்து சனி ஞாயிறும்  திருச்சியில் இருக்கும். வாரம் தவறாமல் சென்று விடுவாள்.
சசி வெளியூர் சென்றால், ‘ஊருக்கு போகிறேன்’ என்ற ஸ்டிக்கி நோட் இவர்கள் கண்ணில் படும்படி (mostly fridge-ல்) ஒட்டி வைத்து சென்றிருப்பான். அதுபோல, சென்னை வருவதாக இருந்தால், ஒரு மெசேஜ் பரிமாற்றம், அவ்வளவே. வீட்டிலிருந்த படுக்கையறைகள் விஸ்தாரமாக இருந்ததோடு அனைத்தும் அட்டாச்ட் பாத்ரூம் வசதி கொண்டது. தவிர அனைத்திற்கும் பிரைவேட் டெரஸ் இருக்கும்படியான தனி வீடு என்பதால், அங்கு பிரைவசி இருக்கும்.
சசி சென்னை வந்து நறுமுகையின் வீட்டில் தங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் சென்றிருந்த நிலையில், நறுமுகையின் இன்னொரு ஹௌஸ் மேட் சைலஜாவின் வீடு கட்டி முடிக்கப்பட்டுவிட, கிரஹப்பிரவேசம் செய்து தனது புது வீட்டுக்கு குடியேறினாள் அவள்.
சசிசேகரனின் தொல்லை செய்யாத குணம் நறுமுகைக்கு பழகி இருந்ததாலும், அலுவலகத்திலும் அவனது நடவடிக்கை ‘தி கம்ப்ளீட் மேன்’ என்பதாக இருந்ததாலும், வீட்டிற்கு வாரத்திற்கு ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ தங்கி செல்பவனை, தீடீரென வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. அவனுக்கும் சைலஜா இல்லையென்பது நிறைய நாட்கள் தெரியாமலிருந்து.
ஒருமுறை இரவில் உணவிற்காக ஸ்விக்கியை அணுகியிருந்த சசி, அதை வாங்குவதற்காக வெளியே வர.., நறுமுகை தனியாக இருந்ததை பார்த்து, “சாப்பிட்டாயா? சைலஜா எங்கே?”, என்று எதேச்சையாக கேட்ட போதுதான் சைலஜா இல்லாத விபரமே அவனுக்கு தெரியவந்தது. “இல்ல, fruits இருக்கு, போதும்” என்று பழங்களை சாப்பிடப்போவதாக நறுமுகை சொல்ல, தனியாக செய்து சாப்பிட சோம்பல் படுகிறாள் என்பதை புரிந்து கொண்டு, சசி அவளுக்கு ஸ்விகியில் ஆர்டர் செய்தான்.(அவளின்  மறுப்பை பொருட்படுத்தாமல்)
பார்சல் வந்தபிறகு இரவு உணவை இருவரும் தனித்தனியாகவே எடுத்துக் கொண்டாலும், அதன் பின் இருவரில் யார் ஆர்டர் செய்தாலும் இருவருக்குமான ஆர்டர் செய்வது என்று பழகியது. நாளடைவில், வீட்டிற்கு வாரத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ வரும் சசியின் குறிப்பு ‘டின்னர் வாங்கி வைத்திருக்கிறேன் சாப்பிடவும்’, அல்லது ‘டின்னர் வாங்கி வைத்துவிடு’ என்ற அளவிற்கு  முன்னேறியது.
அடுத்தடுத்த மாதத்தில் தொடர்ந்து சென்னை பிரான்ச்-ல் சசி தேவைப்பட.. நறுமுகை சசிசேகரன் இருவரும் பார்த்து பேசுவது அதிகரித்தது. கூடவே அலுவலகத்திலும் இருவரும் ஒரே ப்ராஜெக்ட்-ல் இருக்க, நறுமுகையின் மேலதிகாரியாக சசி இருக்க.. பழக்கம் அதிகரித்தது. பின் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிலும் சேர்ந்து சமைப்பது (எத்தனை நாள்தான் ஓட்டல் சாப்பாடே சாப்பிடுவது?),  சேர்ந்து ஆபிஸ் செல்வது வழமையாக.. இருவரின் நட்பும் பலப்பட்டது.
நட்புதான், முதலில் நட்பாகத்தான் ஆரம்பித்தது. சசி அருகே இருந்தால் கலகலப்பிற்கு பஞ்சமிருக்காது, எந்த விஷயத்தையும் அவனிடம் பேசலாம், எதைப் பற்றியும் அவனால் சரளமாக பேசமுடியும், திருவாசகமும் தெரியும், காஷ்மீரின் சரித்திரத்தையும் தெரிந்து வைத்திருப்பான். ஜஸ்டின் ட்ரூடோ குறித்தும் பேசுவான், நித்யானந்தாவையும் ட்ரோல் செய்வான்.
‘ஹ்ம், மண்டைக்காரன்.. ஒருவேளை அதில்தான் வீழ்ந்தேனோ? , மூன்று வருடமாக இதே அலுவலகத்தின் தலைமையகத்தில் பணி புரிகிறான், நான் சேர்ந்து பதினோரு  மாதங்கள், ஓரிரு முறை முக்கிய விழா நாட்களில் இவனைப் பார்த்ததுண்டு. சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் சமர்த்தன். இவனது மென்பொருளை யாராலும் புரிந்து கொள்ளும் படி எளிமையாக வடிவமைப்பான். இவனது சேவை அலுவலகத்தின் அனைத்து ப்ரான்ச்சிலும் அவ்வப்போது தேவைப்படும், சோ, ஆன்-சைட்டில் உலகம் முழுவதும் சுற்றுபவன்’.
இவனை இங்கே தக்க வைக்க அலுவலகம் என்னவும் செய்ய தயாராக இருந்தது, சென்னையில் வேலை அதிகம் என்றானதும் அவனுக்கு கெஸ்ட் ஹௌஸ் கூட ஏற்பாடு செய்வதாக மேனேஜ்மேண்ட் கூறியது. ஆனால், சசிதான் இப்போது இருக்கும் ஏற்பாடே வசதியாக இருக்கிறது என்று விட்டான்.
இவர்களின் நட்பு காதலானது நறுமுகையின் பிறந்தநாளின் போது. அதற்கு முன்பே சில பல நாட்களுக்கு முன்பே,  தேடல் + ஈர்ப்பு இருப்பது பரஸ்பரம் இருவருக்கும் தெரிந்தது. அவர்கள் வேலை பார்க்கும் அலுவலகத்திலும் லிவிங் டுகெதர் கலாச்சாரம், ரூம் ஷேரிங் என்பது பழகிய இயல்பான ஒன்று என்பதால் இது பெரிய விவாதப் பொருளாகவில்லை. ஆனால் அலுவலகம் மட்டுமே சமூகமில்லையே.
நறுமுகையை பொறுத்தவரை, சசி தன்னிடம் முறையாக ப்ரபோஸ் செய்தால்  அப்பாவிடம் சசியைப் பற்றி சொல்ல நினைத்திருந்தாள்தான், ஆனால் மூன்று மாதங்களில் அவர்களுடைய ப்ராஜெக்ட் முடியப்போவதால், அதை முடித்த பிறகு பெரியவர்களிடம் தெரிவித்து விடலாம் என்று சசிசேகரன் அபிப்ராயம் கூற, அதை நறுமுகையும் ஆமோதித்தாள் & இருமுறை திருச்சி சென்று வந்தபோது வீட்டில் இவனைப்பற்றி சொல்லாமல் அவன் சொன்னதைக் கடைபிடிக்கவும் செய்தாள்.
இப்படியான அபிப்ராயங்களை பரிமாறிக்கொண்ட அவர்கள் வரம்பு மீறக்கூடாது என்ற கருத்தையும் சேர்த்திருக்கலாம். அப்படி கோட்பாட்டினை வரையறுத்திருந்தாலும் அதைக் கடைபிடிக்க அவர்கள் கோடு போட்டு வாழும் முந்தைய தலைமுறை ஆட்களா என்ன?
இருபத்தியோராம் நூற்றாண்டை சேர்ந்த சசிசேகரன் நறுமுகையை  காதலிப்பதாக சொன்ன அன்றே.. ஒரு சின்ன புறங்கை முத்தத்தில் ஆரம்பித்த தேடல்.. நெருப்பாய் பற்றிக்கொள்ள இருவரும் எல்லை மீறினர்.
காரணம்.., தெரியாததை அறிந்த கொள்வதில் இருந்த ஆர்வமா? பருவ கிளர்ச்சியா? இதை தவறென கருதாத, மேலைநாட்டு நாகரீக தாக்கமா? எதையும் ஒருமுறை முயற்சித்துப் பார்க்க நினைக்கும் துடிக்கும் இளமை தந்த தைரியமா?
ஆனால், அந்த ஒருமுறை என்பது எப்போதும் ஒருமுறையோடு நிற்பதில்லை. அது ஜீவ சக்கரம், உயிர்களின் பல்பெருக்கம் நிற்காமல் இருக்க இறைவன் வகுத்த ஆதார விதி. 
எல்லா விதிக்கும் விளைவுகள் உண்டு. 

Advertisement