Advertisement

அத்தியாயம் 7
இவாஞ்சலின்.
இது ஆரவ் அம்மாவின் பெயரா? என்னை இவா  என்று அழைத்தது இவளை நினைத்தா? ஏதும் தெரியாதது போல, பெண்ணை அறியாதவன் போல, அனைத்தும் முதன்முறை போல எத்தனை தேர்ந்த நடிப்பு? ஆனால்…  அடுத்த நாளே தயாராக பாதுகாப்புடன் வந்தானே? அப்போதே எனக்கு புரிந்திருக்க வேண்டாம்? அவ்வளவு கடைந்தெடுத்த முட்டாளாக அல்லவா இருந்திருக்கிறேன்?
முதலில் எத்தனை நல்லவன் போல வருவதும் போவதும் தெரியாமல் இருந்துகொண்டான்? அதன் பின்னர்தான் படிப்படியாக..
கையிலிருந்த பதிவேட்டில் ஆரவ் பிறந்த தேதி பார்த்தாள், இவளுடன் சண்டையிட்டு வெளியே சென்ற அடுத்த மாதத்தின் கடைசி வாரம் என்று காண்பித்தது.
வேண்டுமென்றே தேவையற்ற, ஒரு ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிது படுத்தி, சண்டையிட்டு தன்னைத் தவிர்த்திருக்கிறான். சரியாகச் சொல்வதானால்,  யூஸ் அன்ட் த்ரோ. ‘வொய்ப் இல்லாத நேரத்துக்கு என்னை யூஸ் பண்ணிட்டு, பையன் பொறந்த உடனே தூக்கிப் போட்டுட்டு போயிட்டான்’.
“அப்பாட்ட சொல்றேன்-ன்னு சொன்னபோது ‘த்ரீ மந்த்ஸ் போகட்டும்..’ ன்னு ஏன் சொன்னான்னு இப்போ புரியுது, அப்போவே எப்படியும் கழட்டி விடணும்னு பிளான் பண்ணி…. ச்சே, betrayer, womanizer ‘
அப்போ என்னைப் பாக்கறதுக்கு முன்னாடியே அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? அப்படின்னா சசி அப்பா அவரோட வீட்ட லேடிஸ் இல்லாத வீடுன்னாரே? ச்சே யார் வீட்ல யார் இருந்தா என்ன இல்லாட்டா என்ன?
“ஆனா ஒரு சின்ன குற்ற உணர்ச்சி கூட இல்லாம, எப்படி என்கூட பேசறான்?”
“இவளுக்கு என்ன உரிமை இருக்கு கேக்கறதுக்குன்னு தைரியம்”
“லிவிங் டுகெதர் பார்ட்னர்-ன்னு வெளிய சொல்ல முடியுமா? முடியாதில்ல அந்த திமிர்”
கண்களில் கண்ணீர் அருவியாய் பிரவகித்தது. பெரிதாக சண்டையிட்டு பிரிந்தார்கள்தான், ஆனால் இப்போது ஆரவ் வடிவில் சசி செய்த துரோகம் + தன்  பேதைமை நிதர்சனமாக தெரிய, இத்தனை ஏமாளியாக இருந்திருக்கிறோமோ என்ற கழிவிரக்கம் சேர்ந்து நறுமுகையை நிலை குலைய வைத்தது.
“மேம்”, வாசலில் இருந்து வாட்ச் மேன் குரல் கொடுத்தார்.
“கார் ஏதாச்சும் ரிப்பேரா? வீட்டுக்கு வேணா போன் பண்ணி அய்யாக்கு சொல்லிடலாங்களா?”, கேட்கும் இந்த வாட்ச் மேன் அப்பாவின் ஊர்க்காரர், சொத்து சுகங்களை மகன்களுக்கு பிரித்து கொடுத்து, பிள்ளைகள் இருவராலும் அலைக்கழிக்கப்பட்ட இவரை, இங்கே கூட்டி வந்து வேலை போட்டு கொடுத்திருந்தார். வயதாகியும் இன்னமும் செயலாக இருப்பவர்.
“இல்ல தாத்தா, இப்போ கிளம்பறேன்”, ஒருமுறை கையில் இருந்த பதிவேட்டை பார்த்தாள். அதன் இடத்தில் வைத்து விட்டு கண்களை துடைத்துக் கொண்டாள். காரை எடுத்துக் கொண்டு பள்ளியில் இருந்து கிளம்ப, மனம் ரிவர்ஸ் கியர் போட்டது.
‘இவா’
அலுவலக ஆரவாரமில்லாத ஒருநாளில் சாவகாசமாக தேநீர் அருந்தும்போது சசி சேகரன் (இருவரும் நட்பு கோட்டுக்கு மேலே காதல் எல்லைக்குள் அடியெடுத்து வைக்க இருந்த காலம்) நறுமுகை என்றால் என்ன அர்த்தம் என்று கேட்க..
“ம்ம். இனிய வாசமுள்ள அரும்பு, அப்டின்னு அப்பா சொல்லுவார்”.
“அப்போ வல்லி வல்லி ன்னு சொல்றியே அது என்ன?
மெல்ல புன்னகைத்து, “அது நகைமுகைவல்லி, என்னோட வீட்டு பேர்”
“அப்டின்னா?”,
“எப்பவும் சிரிச்சிட்டே இருக்கிற அம்மனின் பேர், எங்க குலதெய்வம் குன்றத்தூர் கந்தாலீஸ்வரர் கோவில், அங்க அந்த அம்மனுக்கு நகைமுகைவல்லின்னு பேர், எங்க அம்மாக்கு எனக்கு முன்னாடி நாலு பேபி மிஸ் கேரேஜ் ஆயிடுச்சா, அதனால அடுத்த குழந்தை நல்ல படியா பொறந்தா கந்தாலீஸ்வரர் இல்லன்னா நகைமுகைவல்லின்னு உங்க பேரையே வைக்கறேன்னு வேண்டிக்கிட்டாங்களாம், அதனால நான் நகைமுகைவல்லி,  அப்பறம் சர்டிபிகேட்-காக நறுமுகை ன்னு பேர். ஆனா வீட்ல எல்லாரும் கூப்பிடறது, வல்லி தான்”
தேனீர் கோப்பையை டேபிளில் வைத்து bean bag-ல் தளர உடலைச் சாய்த்து, சிரித்துக் கொண்டே, “interesting..”, என்றவன் சட்டென “ஹா ஹா, அப்டீனா உன் பேர் இளிச்சவாயா?”,
“வா..ட்? ஓஹ். நோ நோ”, திகைத்து வேகமாக மறுத்தாள்தான் ஆனால் சிரிப்பும்   வந்தது.
“நகைமுகை சிரிச்ச மூஞ்சி அதாவது இளிச்சவாய்…”
“சசி, நோ அது சாமி பேர்.. அப்டிலாம் சொல்ல கூடாது”
சிரிப்பை நிறுத்தி அவளை ரசனையோடு பார்த்த சசி, “ஆனா சரியாத்தான் உங்கப்பா உனக்கு பேர் வச்சிருக்கார்”, ஆழ மூச்சிழுத்து, “நறுமுகை.. irresistible aroma, இனிய வாசனை…., இவா”, என்றான் குரல் பேதமுற.
நறுமுகைக்கு மனதுள் பட்டாம்பூச்சி சிறகடித்தது. பாரதிராஜா படம் போல “லா லா லா “, பாடி வெள்ளை தேவதைகள் உலாவினர். ரத்தம் முகத்துக்கு பாய, தன் வெட்கம் அவனுக்கு தெரிவதை தடுக்க முகம் திருப்பி தொலைக்காட்சியை பார்த்தாள்.
அர்த்தமுள்ள அமைதியாக சில நொடிகள்.
அதைக் கலைத்தது சசியின் திடீர் சிரிப்பு, “நகைமுகை… இளிச்சவாய் .. ஹ ஹ நீ இனிமே இளிச்சவாய்தா…ன்”
“சசீ… நோ ஓ ஓ …”, கையிலிருந்த திண்டை தூக்கி அவன் மீது வீசினாள்.
அதை அழகாக கேட்ச் செய்து, “ஓஹ். எஸ்.., இனிமே நறு கறு சுறுன்னெல்லாம் கூப்பிடமாட்டேன், இவா..தான் “
“நீ அப்டி கூப்டா அடி படுவ” கார்பொரேட் கலாச்சாரத்தில் நீ வா போ மிக சகஜம், கூடுதலாக இவர்கள் நட்பு, மேலதிகாரி மரியாதையை இன்னும் தளர்த்தி இருந்தது.
அவள் பேசியதை காதிலே வாங்காமல், “நேம் சூப்பரா இருக்கில்ல? நீ என்ன சொல்ற?”, அவனுக்கவனே பாராட்டியபடி, கேட்டு..
“உதைப்பேன்னு சொல்றேன்..”, இன்னொரு திண்டு பறந்தது.
இவளது மறுப்பை கேட்காதது போலவே, அடுத்த திண்டையும் பிடித்தது இரண்டு திண்டுகளையும் அதனதன் இடத்தில் வைத்து, சிரிப்பை வாய்க்குள் அதக்கி, “டின்னர் க்கு வெஜ் புலாவ் பண்ணலாமா ? இவ்வ்வா…”, வம்பிழுத்தான்.
நறுமுகை நறநறத்து, “போடாங். கொய்யால..”, பழிப்பு காட்டி நன்றாக திட்டிவிட்டு அவளது அறைக்கு சென்றது நறுமுகைக்கு நினைவில் வந்தது. கடைசியில் தன் மனைவியின் பெயரைப்போய்? சீ சீ.. இன்னும் என்னவெல்லாம் மனைவியை (மனைவியாய்) நினைத்து …? நறுமுகையின் முகம் அருவறுத்துப் போனது.
அவளது வீட்டின் அருகே வந்து விட்டாள், அங்கிருந்த பிரதான சாலையில் சிக்னலுக்காக காரை நிறுத்தி, பச்சை ஒளிர்ந்ததும் நகர்ந்தாள். ‘சரியாத்தான் சொல்லியிருக்கான் இளிச்சவாய்-ன்னு. ‘இனிய வாசனையை தான் அப்படி சுருக்கி கூப்பிடறேன்’னு அவன் சொன்னதெல்லாம் பொய், அவன் வொய்ப் நேம் எனக்கு வச்சி கூப்ட்டிருக்கான், சீட், ப்ளாகர்ட்’.
நறுமுகை வீடு வந்து சேர்ந்ததும், இவளது கார் வருவதை பார்த்த காவலாளி கேட் திறக்க, காரை ஷெட்டில் வைத்து விட்டு நறுமுகை வீட்டின் உள்ளே செல்ல எத்தனிக்க, வலப்புற தோட்டத்தில் ஆரூ, விபுவோடு சசி ஷட்டில் விளையாடிக் கொண்டிருந்தது தெரிந்தது.
அதை பார்த்த நறுமுகைக்கு முதலில் ‘பக்’ என்றிருந்தது. கூடவே இவளை ஒரு பொருட்டாக எண்ணாமல், துளியளவு பாதிக்கப்படாமல் இவள் வீட்டிலேயே இவள் மகனுடன் விளையாடிக் கொண்டிருந்த சசியின் கழுத்தை நெறிக்கும் ஆவேசம் வந்தது.
“மாம்…”, என்று விது இவளை பார்த்ததும் கையசைத்து சத்தம் போட…, “கேம் ஆடும்போது அங்க இங்க பாக்க கூடாது”, என்றான் சசி, சர்வீஸ் போட்டுக் கொண்டே.
‘இந்த ராஸ்கல் இங்க என்ன பண்றான்?’, மனதுக்குள் சசியை தாளித்தாள்.
வீட்டுக்குள் சென்று ரங்கப்பாவை தேடினாள். அவர் அம்மாவின் அறையில், செய்தித்தாளில் வந்திருந்த குறுக்கெழுத்துப் போட்டியை (இருவருமாக) நிரப்பிக் கொண்டு இருந்தார். அது அவரது தினசரி வழக்கம்.
“ப்பா…? “
“அடடே, வந்துட்டியா? வா வா, இதுக்கு பதில் சொல்லு பாக்கலாம், இவரது கதையின் முடிவில் திருப்பம் இருக்கும், அவ்வப்போது ஒரு புதிய துவக்கமும். இந்த  எழுத்தாளர், யார்?, தெரியுமாம்மா?”
” ப்பா…”, பல் கடித்தாள்.
“கல்கி, திஜா, லாசரா, ஹென்றி…ஜெஃப்ரி, ஜெயகாந்தன்,.. அவ்ளோ ஏன் ஜிட்டு க்ருஷ்ணமூர்த்தி வரைக்கும் எல்லாரையும் யோசிச்சு பாத்துட்டேன், இதுல ஓ ஹென்றி தான் முடிவுல துவக்கம் வைப்பார், திருப்பம்..? தெரிலையே? வல்லி உனக்கு ஏதாவது ஐடியா வருதா பாரு.. “
இவர்கள் இப்போதைக்கு நம் பேச்சை செவிமடுக்க மாட்டார்கள் என்பதை புரிந்து, நறுமுகை ஒருமுறை அந்த குறுக்கெழுத்துப் புதிரைப் பார்வையிட்டு, அவர்கள் கேள்விக்கு பதில் சொன்னாள், “சுஜாதா”.
தலையில் தட்டிக்கொண்டு, “ஓஓஓ ..  யா அவரை மறந்துட்டேனே? மதி உனக்கும் ஞாபகம் வரல பாரு”, ரங்கப்பா.
“அட ஆமாங்க, சுஜாதா, நடு எழுத்து ஜா, க்ளூ சரியா வருது பாருங்க”, இது அம்மா.
வல்லியின் வருகை நினைவு வந்தவராக.., கிச்சனுக்கு மணியெழுப்பி, “மரகதம், வல்லிக்கு காஃபியும் ஸ்னாக்ஸ்ம் எடுத்திட்டு வாங்க”, என்ற ரங்கப்பாவைப் பார்த்து..
“ப்ப்பா”, என்று அழுத்தி கூப்பிட்டாள்.
“சொல்லுமா”
“யாரு வந்திருக்கா?”
“அட நீ பாக்கலையா? அது நம்ம ஆரூ அப்பா சசிம்மா, விதுதான் போன் பண்ணி விளையாடலாம்னு கூப்பிட்டான், காலைல நல்லா தூங்கிட்டான் பாரு, அதான் போரடிச்சதுன்னு அவனை கூப்பிட்டிருக்கான். ஆரவ் உடனே அவங்கப்பா வை கூட்டிட்டு வந்துட்டான்”
“ஆரூ விளையாடறான் சரி, அவங்கப்பா? பையனை விட்டுட்டு போ வேண்டியதுதானே?”
“நல்லா ஷட்டில் ஆடறார்மா…”
“ப்பா…. “
“இரு இரு , டென்ஷானாகாத, காஃபி வந்துடுச்சு பாரு, முதல்ல அதை குடி.  நான்தான் பசங்களோட விளையாடிட்டு இருந்தேன், என்னால அவங்க வேகத்தை சமாளிக்க முடில, அந்த தம்பி அர்ஜெண்டா போன் வந்ததால, அங்க வராண்டால உக்காந்து லேப்பி-ல வேலை பாத்துட்டு இருந்தார். முடிச்ச உடனே கிளம்பறேன்னுதான் சொன்னார், நான் திணறினதை பாத்து பசங்க அவரை ஆட சொன்னாங்க”, ரங்கப்பாவின் வர்னனை தொடர்ந்தது. இதென்ன எப்போதும் இல்லாமற் இத்தனை ஜோஷ்-ஆ இருக்கார்? வந்தவன் ஏதேனும் சொல்லி.., சே சே அவனுக்கே ஒன்றும் தெரியாது. ஆனாலும்.. திருச்சி ஏர்போர்ட்டில் இருந்தே அவன் பார்வை சரியில்லை.
“நானும் அவங்களோட ஷட்டில் ஆட போறேன்”, என்று சொல்லி அறையைக் கடந்து செல்லும் அப்பாவை ‘ங்கே’ என்று பார்த்தாள், நறுமுகை.
மரகதம் கொண்டுவந்த நெய் பிஸ்கட் + காஃபியின் மணம் அறையை நிறைத்தது. “முகமெல்லாம் சோர்ந்து தெரியற, காஃபிய குடி வல்லி”, என்று அம்மா மீண்டும் ஒருமுறை சொல்ல, கோப்பையை எடுத்துக் குடித்தாள்.
நறுமுகைக்கு நிஜமாகவே தலைவலி இருந்தது, நான்கு நாட்களாக தொடர்ந்து அலைச்சல், சிறுவர்களோடு இணையாக விளையாட்டு என்று போனது மட்டுமல்லாமல், எதிர்பாராமல் சசியின் சந்திப்பு, பற்றாக்குறைக்கு இன்று பள்ளியில் கிடைத்த தகவல், பழைய கடந்துபோன கசந்த நினைவுகள் என மனது சோர்வாக இருந்தது. அம்மாவைப் பார்த்து கோப்பையை காண்பித்து, “நீங்க?”
“அதெல்லாம் நாலு மணிக்கே ஆச்சு, இன்னும் கொஞ்ச நேரத்துல என் டின்னர் நேரமே வந்துடும்”
“ஆரவ் எப்போ வந்தான்?”
“மதியமே வந்துட்டாங்க வல்லி, அந்தப் பையனோட அப்பா  ரொம்ப நல்லா காமெடியா பேசறார்”
‘ஹ்ம். பேசுவதா? அது மட்டுமா செய்வான்? வீழ்வதே தெரியாமல் மொத்தமாக அவன் பக்கம் விழத்தட்டுவான், அதன் பின் குத்தீட்டி எரிவான்’, “ம்ம், ம்மா கசகசன்னு இருக்கு, டிரஸ் மாத்திட்டு வர்றேன்”,
அவளது அறைக்கு சென்று புடவையில் இருந்து இலகு உடைக்கு மாறினாள்.
“ஹே.. ஆரூப்பா மிஸ் பண்ணிடீங்க.. நாங்கதான் ஜெயிச்சோம், வாங்க வாங்க தூக்குங்க பெட் வச்சீங்கல்ல?”.. விது சப்தம் வீடெங்கும் நிறைந்தது. ஜன்னல் திரையை விலக்கி தோட்டத்தை பார்த்தாள். விதுவை ஒரு பக்க தோளிலும், ஆரவ் இன்னொரு தோளில் ஏறிக்கொள்ள, இருவரையும் பேலன்ஸ் செய்து மெல்ல நடந்தான் சசிசேகரன். ஓ.. இதுதான் பந்தயம் போலும். திரையை நன்றாக மூடினாள்.
“ஓகே, நீங்க விளையாடுங்க, எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு, ஆரவ் போன் எங்க?”,
“டவல் பக்கத்தில இருக்கு டாட்”
சருகுகள் ஓசை, “யா, ஸ்விங்-ல ஆடறதா இருந்தா கேர்ஃபுல்லா இருங்க”,
இவன் எப்போது போவான்? சசி விதுவோடு நெருங்கி பழகுவது என்னவோ நறுமுகைக்கு சரியாகப் படவில்லை. ஏதோ ஒரு பிரச்சனை துவங்கப்போவதாக தோன்றியது.
அப்போது அவளது அலைபேசி அழைக்க எடுத்துப் பார்த்தாள். அன்நோன் நம்பரில் இருந்து வந்திருந்தது, “ஹலோ”
“ஹாய், நான் சசி”, என்ற குரல் அலைபேசியில் கேட்டது.
சில நொடிகள் என்ன பேசுவது என்று நறுமுகைக்கு தெரியவில்லை,”…”
“இவா”
சுறுசுறுவென கோபம் எழ, “இன்னொரு தடவ இவான்னு கூப்பிட்ட.. பல்லை பேர்த்து கைல குடுத்துடுவேன்,”
“ஹக்.  “, சசியின்  திடுக்கிடல் போனில் தெரிந்தது, குரலில் தீவிரத்தன்மை வந்திருந்தது, “நான் உன்கிட்ட தனியா பேசணும். எனக்கு நிறைய லீவ் இல்ல, சோ நாளைக்கே..”
“நீ கூப்டா உடனே வரணுமோ?”
“வரணும், வந்தாகணும்”
“இல்லன்னா?… முடியாதுனா என்னடா பண்ணுவ?”, எந்நேரமும் வெடித்து விடக்கூடிய விளிம்பு நிலையில் நறுமுகை இருந்தாள்.
“இவா.. mind your language”, வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.
“ஆஹா, நீ பெரிய உத்தம புத்திரன், உன் லட்சணத்துக்கு கோவம் வேற வருதோ?”, நறுமுகைக்கு கோபம்.. கோபம்.. கண்மண் தெரியாத கோபம். அவனது இவா அழைப்பு கூட உரைக்கவில்லை.
“இவா.. லிசன், நாளைக்கு ஆரவ்-வை ஸ்கூல்-ல விட்டுட்டு வாசல்ல வெயிட் பண்றேன், நீ வர்ற..”
“மாட்டேன்”, இடை வெட்டினாள்.
“இல்லன்னா, உங்கப்பாகிட்ட நான்தான் விதுவோட அப்பான்னு சொல்லுவேன்”, சசி தீர்மானமாக, நிதானமாக, வெகு அழுத்தமாக சொன்னான்.
ஹாக்! இவனுக்கு தெரியும்! அதுதான் அந்த பார்வை மாற்றம், “…”, பேச்சிழந்து நின்றாள்.
“இவா?”
அவனது கடின அழைப்பில், திகைப்பில் இருந்து வெளியே வந்து, “என்ன வேணும் உனக்கு?”, நடுங்கிய குரலில் கோபம் குறைந்து மெலிதான பயம் எட்டிப் பார்த்தது.
“ஹ்ம்ம்.. சொல்யூஷன்”, என்று யோசனையோடு சொன்னவன், “நாளைக்கு பாக்கலாம்… கீங்,” வைத்துவிட்டான்.
சிறிது நேரம் போனை வெறித்து பார்த்துவிட்டு, கட்டிலில் உட்கார்ந்து இரு கைகளையும் தலைக்கு அணைவாக கொடுத்து அமர்ந்துகொண்டாள். பயப்பந்து வயிற்றை பிசைந்தது. வாழ்க்கையில் முதன் முறையாக அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் விழித்தபோது, அப்பாவின் நம்பிக்கையை பொய்த்துப்போக வைத்தபோது அப்போது ஆரம்பித்த உணர்வு இது.
அப்பா.. என் அன்பான கனிவான அப்பா, தட்டிக் கொடுத்து வளர்த்த, செய் உன்னால் முடியும் என்று எல்லாவற்றிலும் கூடவே நின்ற ரங்கப்பா அன்றுதான் முற்று முதலாக திட்டினார்.

Advertisement